படைப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 3, 2025
பார்வையிட்டோர்: 345 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் ஒரு தேர்ந்த கலைஞன். நயமான கற்பனை; நுட்பமான கை வண்ணம். கற்கள் அவனுடைய கலையின் சீர்மையினாற் சிலைகளென உயிர் பெறும். 

கல்லினை உளி செதுக்கிக் ‘கலிர் கலிர்’ என்னும் நாதத்தினைப் பிழி யும். அஃது ஓய்ந்த நேரத்தில், தன் படைப்பில் மெய்மறந்து நிற்பான்; வித்துவச் செருக்கில் அவன் தன்னையே மறப்பான். 

இன்னொருவன் மறை ஓதி வேதியன். நான் மறையுங் கற்றுத் தேர்ந்தவன். சற்றுச் சோம்பேறி. கோயிலுக்குச் சென்று பூஜையைக் கிரமமாகச் செய்து, எல்லாவற்றையும் ஆண்டவனின் தலையிலே சுமத்தி விட்டு, சயனச் சுகம் அநுபவிப்பதிற் பிரீதி.

கலைஞனின் தொழிலை வேதியன் விரும்பவில்லை. 

வேதியனின் நம்பிக்கையைக் கலைஞன் இகழ்ந்தான். 


கலைஞன் பல நாள்களாக அரும் பாடுபட்டு, சலவைக் கல்லில் அழகிய ரதிச் சிலையொன்றினைப் படைத்தான். மதியின் தண்மையையும், இசையின் அமைதியையும் அதிற் குழைத்தான். கமல வதனம்; கயல் விழி; செவ்விள நீர்க் கொங்கைகள்; மூங்கில் தோல்கள்; மின்னல் இடை; இத்தனை மனோ ரதிய உருவங்களையும் அச்சிலையிலே தேக்கினான்.

அச்சிலையைப் பார்த்துப் பார்த்துப் பசியை மறந்தான். செருக்கு உச்சந் தலை வரை ஏறிற்று! தன்னுடைய கற்பனை வளம் நான்முகனிடங்கூடக் கிடையாது என்கிற பெருமிதம். 

வேதியனைத் தன் அறைக்கு இழுத்து வந்தான். 

“இந்தச் சிலையைப் பார்த்தாயா? ஆண்டவனுக்குப் போட்டி போட்டு நான் சிருஷ்டித் தொழில் செய்கின்றேன். இதனைப் படைக்குஞ் சக்தி நீ சேவிக்கும் இறைவனுக்கும் ஏற்படாது.” 

“இஃது ஒரு துகள்; ஒரு நகல்! இறைவன் கடல்…” 

“புரியாதன பேசிப் பாமரனை ஏமாற்றி வயிறு வளர்க்கும் பிராமணியே! நீங்கள் பிரதிஷ்டை செய்து வணங்குந் தெய்வங்கள் என் போன்ற கலைஞனின் படைப்புக்களே! கடவுளர்களையே படைக்கும் பிரமாக்கள் நாம்.” 

“இறைவனை உன் உளிக்குள்ளே சிறைப்பிடிக்கும் அகம்பாவமா? உன் கலைஞானம் முழுவதும், இறைபணியில் ஈடுபட்டிருக்கும் என் மதியூகத்தின் முன் தோற்றுப்போகும்”. 

“கலைதான் தெய்வம்.” 

“நம்பிக்கைதான் தெய்வம்.”

“இல்லை. கலைதான் தெய்வம்.” 

“அஃது உன் எண்ணம்.” 

“பரீட்சித்து விடுவோம்.” 

“உன் விருப்பம்…” 

“பந்தயம்?.. நான் வென்றால், கடவுள் கலைஞனின் கற்பனையே என்கிற நிரீஸ்வர வாதத்தை நீ நிலை நாட்டுவாய்!” 

“நான் வென்றால், உன் கலை இறைவனின் திருப்பணிக்கு அர்ப்பணிக்கப்படும்.” 

 “சம்மதம்” 


சாலையோரத்து அரசமரத்தின் கீழ் நிழல் சுகித்துக் கொண்டிருந்த வேதியன் அயர்ந்துவிட்டான். 

விசித்திரமான கனவுகள் மூட்ட மிட்டன. 

விழித்தபொழுது கனவின் எழுச்சியில் அங்கும் இங்கும் பார்த்தான். சற்றுத் தூரத்தில், காளியின் உருவ அமைப்பினைக் கொண்ட கல்லொன்றைக் கண்டான். அகமும் முகமும் மலர்ந்தது. 

அதனை எடுத்துச் சென்று அயற் கிராமத்தின் குளக்கரையில் பிரதிஷ்டை செய்யத் தொடங்கினான். 

அவனுடைய செயலில் ஆச்சரியங்கொண்டு, ஒரு கூட்டம் கூடியது. 

“என்ன விசேடம்?” என்று அவர்களுள் ஒரு முதியவர் கேட்டார். 

“நான் அடுத்த கிராமத்தில் ஆலயப்பணி செய்துகொண்டிருந்த புரோகிதன். தேவி பிரசன்னமானாள்..” பேசும்பொழுது பயபக்தியுடன் கண்களை மூடினான். அவன் முகத்தில் நம்பிக்கையின் சுடர். அவனுடைய சொற்கள் ஒவ்வொன்றும் பாமர மக்களுடைய உள்ளங்களை அளைந்தது. 

“மகனே! அடுத்த கிராமத்திலுள்ள மக்கள் அஞ்ஞானத்திலே துன்புறுகின்றார்கள். அவர்களுக்கு விமோசன காலம் நெருங்கிவிட்டது. உன்னையே என் கருவியாகத் தேர்ந் தெடுத்துள்ளேன்… ‘நீ சாலையோரத் தில் காணும் ஒரு கல்லில் எனது கல்லில் உருவத்தைப் பார்ப்பாய். அதனை உன்னுடன் எடுத்துச் சென்று குளக்கரையிலுள்ள பன்னிச்சை மரத்தின் மருங்கில், பிரதிஷ்டை செய்து மூன்று வேளைகளும் ஒழுங்காகப் பூஜைசெய்!’ எனப் பணித்து மறைந்தாள்… நான் தேவியின் ஊழியன். அம்பாளின் கட்டளையை நிறைவேற்றுகின்றேன்.” பக்தியைப் பிழிந்தெடுக்கும் குரலில் விழிகளைத் திறக்காமலே பேசினான் 


கிராமத்தில் புத்துயிர் பிறந்தது. செல்வப் பெருக்கு மக்களைக் குளிர்வித்தது. ஆராதனை மணி மக்களுடைய மனங்களில் நிறைவினை ஊட்டியது. தேவியின் அருளிலே பின்ன மற்ற பத்தி மக்களுக்குத் தோன்றியது. 

மழையும், வெயிலுந் தேவியைத் துன்புறுத்தாத வண்ணம் ஒரு பெரிய கோயிலைக் கட்டத் தொடங்கினார்கள். பல தேசத்துச் சிற்பிகள் ஒன்றுகூடி,  இரவு பகலாக, பெரிய கோபுரங்களுடன் கூடிய அற்புத ஆலயம் ஒன்றினை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

வேதியன், கலைஞனை இந்தக் கிராமத்திற்கு அழைத்து வந்தான். 

கலைஞன் ஆலயத்தின் பிரமாண்டத்தையும், சிற்ப வேலைப்பாடுகளையுங் கண்டு திகைத்துப் போனான். அவற்றினை நிருமாணிக்கும் சிற்பிகளைக் காணவேண்டும் என்னும் ஆசை மேலெழுந்தது. 


சிற்பிகள் தங்கியிருந்த அறைப் பக்கஞ் சென்றார்கள். 

ஒரு கிழச் சிற்பி பேசுவது இவர்களுடைய காதுகளிலே தெளிவாக விழுந்தது. 

“நேற்று நான் அடுத்த கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு ரதிச் சிலையைக் கண்டேன். தேர்ந்த கை நுணுக்கத்தின் படைப்பு. ஆனால், அதில் அருளில்லை… நம்பிக்கையில் வேரூன்றாத அதீதக் கற்பனை அதன் குறைபாடு. இருபது வருடங்களுக் கிடையில் மார்பக பாரத்தைத் தாங்க மாட்டாது அச்சிலை இடுப்புடன் உடைந்து போகலாம்.” 

கலைஞனுக்கு அங்கு நிற்கப் பிடிக்கவில்லை… 

கர்வ் பங்கம்! 


இருவரும் மூலஸ்தானத்திற்குச் சென்றார்கள். 

தீபாலங்காரத்தின் மத்தியில் ஒரு ‘கல்.’ 

“இஃது அரசமரத்தடியிற் கிடந்த கருங்கல். சிலை செய்ய உதவாத கல்லென்று இதனை ஒரு தடவை நான் ஒதுக்கிவிட்டதாக ஞாபகம்.” – இரகசியமாகப் புரோகிதனின் செவிகளில் மட்டும் விழும் வண்ணஞ் சொன்னான். 

“இது கல்லல்ல. நம்பிக்கையுடன் பார்! தேவி பிரசன்னமாகியிருக்கிறாள்.” 


பிரமாண்டமான கருங்கல்லில் கலைஞன் காளி சிலை ஒன்றினைச் செதுக்கிக் கொண்டிருக்கின்றான். ‘கலீர்! கலீர்!’ என்னும் நாதம் கோயிற் பிரகாரம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது.. 

– மரபு (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: தைப் பொங்கல் 1964, அரசு வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *