படித்தவரும் படிக்காதவரும்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2026
பார்வையிட்டோர்: 67 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

இன்னிக்கு முழுக்க முழுக்க வேலைக்கு மேல் வேலை . பேர் தான் ஒர்க் ப்ரம் ஹோம் ஆனா ரெஸ்ட் ரூம் கூட போக விட மாட்டேங்கறாங்க… நான் எனக்குள் அலுத்துக் கொண்டு இருந்த போது கைபேசி ஒலித்தது.

என்னுடைய தோழி… ரம்யா… வீடியோ அழைப்பில் வந்தாள்…

“என்னடி சுதா… மழைக்கப்புறம் நெட் கிடைக்க ஆரம்பிச்ச உடனே பிசி ஆயிட்டியா… நாள் முழுக்க பேசி பேசியும் ஒன்னோட பேஸ் பளிச்சுன்னு இருக்கு…”

“ஏண்டி நான் ஓன்னு இருக்கேன்… பளிச்சுன்னு இருக்கேனா… நீ காரணம் இல்லாம லைன்ல வர மாட்டியே… வெறுப்பு ஏத்தாம என்னன்னு சொல்லு…”

“அப்பா… கோபத்தைப் பாரு… நீ என்ன சொன்னே ஒங்க தாத்தா சுந்தரம் படுத்த படுக்கையா இருக்கார் பாட்டி பார்த்துக்றாங்க ஆள் போட்டும் பார்த்துக்கறோம் ன்னு தானே சொன்னே…”

“ஆமாம் அதுக்கு என்ன நீயும் தான் தாத்தாவை எங்க வீட்ல பார்த்துட்டு போனே…”

“அதெல்லாம் சரி சென்னையில காந்தி நகர்ல பொது ஜனங்களுக்கு ஹெல்ப் பண்ற வாலன்டிர்ஸ் கூட சேர்ந்து ஒங்க சுந்தரம் தாத்தா பம்பரமா வேலை செய்யற வீடியோ பரவிக்கிட்டு இருக்கு… எனக்கு வந்துச்சு… எப்படி படுத்த படுக்கையா இருக்கிறவரு… தமிழ் நியுஸ் சேனல் கூட ஊருக்கு உதவ பம்பரமாய் சுற்றும் சீனியர் சிட்டிசன் ன்னு அந்த வீடியோ போட்டு நியுஸ் போடறாங்க”

“எப்படி எனக்கு ஒண்ணும் புரியலையே… நீ அந்த வீடியோவை ஷேர் பண்ணு… எங்க பாட்டி கிட்ட காட்றேன்…”

“சரி அனுப்பி வைக்கறேன். பை பை…”

நான் குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டு, படிகளில் இறங்கி கீழே போனேன். ஒற்றை சோபாவில் அமர்ந்து இருந்த என்னுடைய பாட்டி எழுந்து போய் எனக்காக டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்து விட்டு அமர்ந்தாள். நான் அவள் அருகே உள்ள இன்னொரு ஒற்றை சோபாவில் உட்கார்ந்தேன். நான் டீயை பருகி விட்டு, பாட்டியாரிடம் அந்த வீடியோவை காட்டினேன்…

பாட்டியார் பேசினாள் –

“இவுரு ஒங்க தாத்தா இல்ல… ஆனா ஒனக்கு தாத்தா தான்…”

“என்ன பாட்டி ஏஜிங் காரணமா உளர்றியா?”

“உளறல படுத்த படுக்கையா இருக்கிற ஒங்க தாத்தா ஜனங்களுக்கு மழை நேரத்துல எப்படி ஹெல்ப் பண்ணுவாருன்னு தானே ஒன் மனசுல ஓடுது…”

“இந்த வீடியோல நீ பார்க்கிறவரு ஒங்க தாத்தா சுந்தரத்தோட ட்வின் ப்ரதர் சோம சுந்தரம் …. ஒங்க தாத்தாவுக்கு படிப்பு வந்துச்சு… நிறைய படிச்சு மத்திய அரசாங்க உத்யோகத்துல மேல மேல போய் ரிடையர் ஆனாரு… ஆனா , இந்த தாத்தாவுக்கு படிப்பு ஏறலையாம்… எல்லாரும் அண்ணனோட கம்பேர் பண்ணி பேசி நோகடிக்கறாங்கன்னு சின்ன வயசுல வீட்டை விட்டு ஓடிட்டாராம்… எங்கேயோ மலேசியாவுல இருக்கான்னு யாரோ சொன்னாங்ன்னு நான் இந்த வீட்டுக்கு வந்த நாளிலேந்து ஒங்க தாத்தா சொல்லிகிட்டு இருப்பாரு… இப்ப மெட்ராசுக்கு வந்துட்டாரு போல… இந்த வீடியோவை முதல்ல ஒங்க தாத்தா கிட்ட காட்டு… தாயின் கருவறையில் கூடவே இருந்த உடன்பிறப்பை பார்த்தா அவுரு எழுந்து நடக்க ஆரம்பிச்சுடுவாரு…”

நான் தாத்தாவின் அறைக்குப் போனேன். தாத்தா ன்னு கூப்பிட்டேன்.

கண் விழித்த தாத்தாவிடம் சின்ன தாத்தா இருக்கும் வீடியோவை காட்டினேன்.

தாத்தாவின் முகம் பிரகாசமாகி மலர்ந்தது.

– ட்வின்ஸ் கதைகள், இரண்டாம் பகுதி.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *