கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 27, 2026
பார்வையிட்டோர்: 29 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்


(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கொழுந்து நிறுத்து வெகு நேரமாகிவிட்டது. இன்னும் காவேரியை மட்டும் காணவில்லை. 

சிலுப்பிக்கொண்டு நின்ற முன் மயிரில் சிட்டுச் சிட்டாய் ஒட்டிக் கிடந்த சாம்பலைத் தட்டியவண்ணம் வெளியே வந்தாள் கூனிப்பாட்டி. மூடியும் மூடாமலும் கிடந்த அவளுடைய விலாப்புறம் மேடும் பள்ளமுமாய் கூரைத்தகரம் போல் கோடு பாய்ந்து கிடந்தது. சிதறியடிக்கும் தன் குழி விழுந்த கண் பார்வையைச் சேர்த்துப்பிடித்து தன் பேத்தி தூரத்தே வருகின்றாளா? என்பதைப் பார்ப்பதற்காக ஒரு கையைத் தூக்கி தன் கண்ணுக்கு மேல் வைத்துப் பார்க் கிறாள் பாட்டி. கையை மேலே தூக்கியதால் விலா எலும்புகள் விரல்விட்டு எண்ணக் கூடிய விதத்தில் முட்டி நின்றன. 

“யே….தெய்வானே! எங்க காவேரியைக் கண்டியா?” 

“ஆமா!….ஒம் பேத்தியை காவல் பாக்கதானே தொரை எனக்குச் சம்பளம் கொடுக்குராரு….” 

ஒரே லயத்தில் கூடி வாழும் தெய்வானை தங்கள் கூட்டுறவு வன்மையைக் காட்டினாள். 

நம்மவரிடையே ஒற்றுமை இருந்தால் நாம் இன்று இந்த நிலையிலா இருப்போம்? 

அதோ….தலையில் விறகுக் கட்டும் தடக் தடக்கென்று முதுகிலடிக்கும் வெற்றுக் கூடையுமாக காவேரி வருகின்றாள். கறுத்த உருவம், கண்ணைக் குத்தும் பருவம். 

அலுத்துக் களைத்த உடல்தானென்றாலும் அழகாய்த் தான் இருந்தது. 

அந்த வயது இருக்கிறதே! அந்த வயதில் எந்தப் பெண்ணும் அழகாய்த்தான் இருப்பாள். 

வாலிபப் பெண்களிடம் மட்டும் இந்த வசீகரிக்கும் சக்தி இல்லாவிட்டால்….! 

பிரபஞ்சமே ஆட்டம் காணும் பெரிய பிரச்சனை அல்லவா அது. 

“வெறகு பொறக்கப் போனேன் அதுதான் நேரமாச்சு!” 

நேரமான தற்குக் காரணம் கூறி பாட்டியை ஏமாற்றி விட்ட எக்களிப்பு பேத்திக்கு. 

“சரிசரி, நீ ஒன்னும் அதுக்கெல்லாம் போக வேண்டிய தில்லே, நான் பாத்துக்கிறேன்.” 

தன்னுடைய இளமை முறுக்கை எவனிடமும் அவிழ்த்துக் காட்டி அவஸ்தையில் மாட்டிக் கொள்வாளோ என்ற பயம் பாட்டிக்கு. அவள் அன்று கொப்பளித்துத் துப்பிய இளமை தானே இன்று பேத்தி அனுபவிப்பது! 

எட்டாம் காம்பறா இருசன் இரண்டு மூன்று நாட்களாக அந்த லயத்துக்கு வருவதும், இருட்டும் வரை அங்கேயே சுற்றுவதும், “எப்படிப் பாட்டி நல்லா இருக்கியா?….” என்று விசாரிப்பதும் அவளுக்குச் சந்தேகமூட்டியது. இன்றோ? நாளையோ? நாளை மறுநாளோ என்றிருக்கும் ஒரு கூலிக்காரக் கிழவியைப் பார்க்கவா ஒரு மைனர்ப் பையன் நேரத்தை விரயமாக்கிக் கொண்டு வருவான்? 

ஹ்ம்ம் ம்.. 

பாட்டி பெருமூச்செறிந்தாள். 

“இந்தா காவேரி அந்த கருவாட்டு மண்டையை பொட்டில போட்டு மூடு; கவிச்சின்னா சனியன் நாய்க எங்கேன்னு நிக்கும்!” பாட்டி எதைக் குறிப்பிடுகிறாளோ தெரியவில்லை! 

அடுப்படியில் கிடந்த பலகைக் கட்டை யை தலைக்கு. அணைவாக வைத்துக் கொண்டு, மேல் சேலையை உருவி தரையில் விரித்து அதில் சுருட்டிக் கொண்டாள் பாட்டி. சாமான் சட்டிகளை எல்லாம் கழுவி வைத்து விட்டுத்தான் பேத்தி படுப்பாள். 

பாட்டியின் அருகே ஒரு கிழிந்த சாக்கில் நாலு குழந்தைகள் கையையும் காலையும் பரப்பிக் கொண்டு கிடந்தன. அந்த நாலும் அடுத்த வீட்டு பரமசிவத்தி னுடையது. பரமசிவமும் பாரியாரும், பரமசிவத்தின் தாயும் தங்கையும், ஆறு குழந்தைகளுமாகப் பத்து உருப்படிகளுக்கு அந்த நண்டு வளையில் முடங்கிக் கொள்ள முடியுமா? ஆகவேதான் நான்கு குழந்தைகள் அடுத்த வீட்டுப் பாட்டி யிடம் எப்போதும் வந்து படுத்துக் கொள்ளும். இங்கே பாட்டியும் பேத்தியும் தானே! 

பார்வதியின் கையைப் பிடித்து சரியாக நாலு வருடம் தான் எனினும் அவர்களுக்கு ஆறு குழந்தைகள். என்னமோ ஏதோவென்று நினைத்துவிடாதீர்கள். இரண்டு முறை “இரட்டை” பிறந்துவிட்டதால் தான். 

இறைவன் ஏழைகளுக்கு அள்ளிக் கொடுக்கும் ஆஸ்தி அது ஒன்றுதானே. பரமசிவம் – பார்வதி என்ற பெயர் பொருத்தத்தாலோ என்னவோ இந்த வகையில் அவர்களுக்குக் குறைவில்லை. இப்போதும் கூட அவள் ஓட, உட்கார முடியாத நிலையில் தான் இருக்கிறாள். 

“பாத்தி…. கதை சொல்லு….!” 

பரமசிவத்தின் நாலும் கிழவியைக் குடைந்தெடுத்தன. பேத்தியும் வந்து அவளுடைய பாயை விரித்து அதில் முடங்கிக் கொண்டாள். அவளுக்குத் தூக்கம் ‘லேசில்’ வருவதாக இல்லை. அந்தி நேர ஆட்டத்தின் இன்ப நிழல் அவள் அடித்தளத்தே அரங்கமிட்டு ஆட்டம் காட்டியது. 

“ஒரே ஒரு தோட்டத்திலே ஒரே ஒரு லயமாம்…….”

கிழவி கதை சொல்ல ஆரம்பித்தாள். 

”ஊம்ம்”- நாலும் ஒரே நேரத்தில் ஊம் போட்டன. 

“அந்த லயத்திலே, பெரியவங்கெல்லாம் வேலைக்கு போனதும் புள்ளைங்கெல்லாம் தானாப்புல ஆட்டம்  போடுமாம்….” 

“ஊம்” 

“ஒன்றுகூடப் பள்ளிக் கூடத்துக்குப் போறதேயில்லை…. யள்ளிக்கூடம் போன்னுட்டு பெத்தவங்க போயிட வேண் டியது. அதுகள் பாட்டுக்கு மாங்காய் அடிப்பதும் குருவிக்கூடு கலைப்பதுமாக ஆட்டம் போட்டுக் காலத்தைக் கடத்தின.” 

“அந்த லயத்துலே ஒரு பத்துப்பதினொரு வயசுப் போவாமல் வீட்டு வேலைகளை பொண்ணு எங்கியும் செஞ்சுக்கிட்டே இருக்கும். அடுத்த வீட்டுல ஒரு பய இருந் தான். அவனுக்கு ஒரு பதினொரு வயசு இருக்கும். ரெண்டு பேரும் சேந்துதான் வெளையாடுவாங்க….” 

“என்னா தூங்கிட்டீங்களா?” 

பாட்டியின் கேள்விக்கு இல்லையே என்ற பதில் பரம சிவத்தின் மூத்தவனிடமிருந்து மட்டுமே வந்தது. மற்ற மூன்றும் குறட்டை விட்டன. விழித்துக் கொண்டிருந்த மூத்தது ‘அப்புறம்’ என்கவே கதை தொடர்ந்தது. 

“அவங்க இரண்டு பேரும் சேர்ந்தே ஆடி ஓடித் திரிஞ்சதுனாலே ஒன்னுக்கிட்டே மற்றதுக்கு பயமோ கூச்சமோ கிடையாது. அந்தப் பொண்ணு வளர்ந்தப்புறமும் ரவிக்கைக்கு மேலேயும் ஒரு துணியைப் போட்டு மூடிக்கிற அளவு வளர்ந்தப்புறமும் அந்தப் பையன்கிட்ட கூச்ச மில்லாமல் பழகிச்சு” 

இவ்வளவு நேரமும் பாட்டியின் கதை காதில் விழுந்தும் மனதில் விழுகாமல் படுத்துக்கிடந்த காவேரி புரண்டு படுத் தாள். சிறுகச்சிறுக அவளுடைய மனம் கதையில் லயித்தது. அந்த மூத்ததும் தூங்கிவிட்டதைக் கண்ட கிழவி சுறுசுறுப் புடன் கதையைத் தொடர்ந்தாள். 

“நீ வளர்ந்த பொண்ணு! அந்த தடிப்பயகிட்டே என்ன பேச்சு….” 

கிழவியின் கதையில் தெரிந்த மாற்றம் காவேரியைத். தடுமாறச் செய்தது. தனக்கும் இருசனுக்குமுள்ள தொடர்பை அறிந்து கொண்டுதான் அப்படிக் கேட்கிறாளோ! என்று எண்ணி ஏதோ கூறத்தொடங்கியவளை தடுத்து நிறுத்தியது பாட்டியின் குரல். 

“…. அப்படீன்னு பெத்தவங்க கண்டிக்கத் தொவங்கவும் பெத்தவங்க கண்ணுக்குத் தெரியாம அவங்க இரண்டு பேரும் ஆட்டம் போடுவாங்க. ஆச்சு! பொண்ணுக்கும் பதினாலு வயது முடிஞ்சு போச்சு. குச்சுக்குள்ளையும் உக்காந்துட்டு வந்துருச்சி,ஆள் கூடன்னு அந்த வருசம் தொரை தோட் டத்தில பேரு பதியமாட்டேன்னுட்டாரு. வயசு வந்த பொண்ணாச்சேன்னு பெத்தவங்க ரொம்பக் கவலைப் பட்டாங்க. அதுக்குக் காவலா ஒருத்தர் வீட்டிலேயே இருக்க முடியுமா? பொண்ணாப் பொறந்தது இல்லே தன்னைக் காப்பாத்திக்கிடணும்.” 

பேத்தி தூங்கிவிட்டாளா என்பதையும் பாட்டி கவனித் தாள்.பேத்தியினுடையதுவும் வாலிப மனதல்லவா? கதையும் இப்போது அந்தப்படியில் தானே இருக்கிறது. 

ஆகவே அவள் பெருமூச்சு விடுவதும் புரண்டு படுப்பதுமாக இருந் தாள். பேத்தி தூங்கவில்லை என்பதை உணர்ந்த பாட்டி தொடர்ந்தாள். 

“ஒரு நாள் வெள்ளனவே வேலை எல்லாம் முடிச்சுட்டு அந்தப் பொண்ணு பக்கத்து வீட்டுக்குப் போச்சு. லயத்துலே ஒரு சுடுகுஞ்சிகூடக் கிடையாது பொண்ணு அங்கே போனதும் பய அதைப்புடிச்சி இழுத்து அணைச்சிக்கிட்டான். அந்தப் பொண்ணுக்கிட்ட அவனுக்குத்தான் கூச்சம் கிடை யாதே! கொஞ்ச நேரத்துல தாவணித்துணி மட்டும் தூர விளுந்து கெடந்திச்சி.” 

பேத்தியின் உடல் வளைந்தது. பாட்டியின் கண்குழி யில் கோர்த்து நின்ற கண்ணீர் கன்னத்தில் ஓடி கட்டையில் விழுந்தது. கண்ணைத் துடைத்துக் கொண்டே தொடர்ந்தாள். 

“அந்தப் பொண்ணுக்கு புத்தி இப்படியா போவணும், ஒவ்வொரு நாளும் அவங்க ரெண்டு பேருக்கும் இப்படியே இன்பமாய் பொழுது போய்கிட்டே இருந்திச்சி. அடுத்த வருசம் அந்தப்பொண்ணை தொரை பேரு பதிஞ்சிட்டாரு. அதுவும் வேலைக்குப் போகத் தொடங்கிடுச்சு. எப்பவோ குழையோ, மரமோ வெட்டினதுக்காவ அந்தப்பயலை பேரு பதிய மாட்டேன்னுட்டாரு. 

“ஆயாகாரி தன் கூடவேதான் அந்தப் பொண்ணை வேலைக்குக் கூட்டிப் போவா! கண்ணுல வைச்சி எமை யாலத்தான் மூடிக்காத்தா, என்ன செய்வது? கள்ளன் பெருசா காப்பான்; பெரிசாம்பாங்க. அந்தப் பொண்ணும் ஆயாவை ஏமாத்திட்டு காடோ மேடோ, மலையோ, கானோ எங்கேயாவது அந்தப் பயல் கூட இருக்காம இருக்கவே இருக்காது. நாளைக்கு வர்ரதை கொஞ்சமாவது யோசிச்சிருந்தான்ன.! வளர்த்த வளர்ப்பு அப்படி. 

“வளர்ந்த பையனை ஏன் வீட்டுல வைச்சிருக்கியக, எங்க கூட வந்து கடையில் நிக்கட்டுமேன்னு கடன் வாங்க வந்த ஒரு கடை முதலாளி பையனை இழுத்துக்கிட்டுப் போயிட்டாரு. பய போன பொறவு இந்தப் பொண்ணுக்கு ரெண்டு மூணு நாளா வெறிச்சோன்னு இருந்திச்சி; அப்புறம் ஒரு மாதிரியா சரியாப் போயிடிச்சி” 

ஒரு வாரமாகத் தன்னைச் சுற்றி வந்து தன்னையே சுற்றிக்கொண்ட இருசனும் ஒரு நாள் இப்படிப் போய் விடுவானோ என்ற பயம் அவளைப் பற்றிக்கொண்டது. 

ஆகாயத்திலேயே பறந்து கொண்டிருந்த அவளுடைய வாலிப எண்ணத்தில் பாட்டி ஏற்றிவிட்ட பாரம் அதைத் தடுமாறச் செய்தது. பேத்தியின் மனப் போராட்டத்தை அறியாத பாட்டி தொடர்ந்தாள். 

“அந்தப் பொண்ணு மூணு சம்பளம் வாங்கிறிச்சி, நாலாவது சம்பளத்துக்கு வேலை செய்யயிலே. ஒரு நாள் ஏதோ தலை சுத்தறாப்புல இருக்குன்னு வீட்டுலே நின் னுட்டா. மாங்கா திங்கனும்னு அவளுக்கு ஒரு அதிசய ஆசை ஏற்பட்டிச்சி. ஒரு பையனை விட்டு பங்களா மரத்துல ஒரு மாங்கா அடிச்சாரச் சொல்லி ரெண்டு உப்புக்கல்லையும் வைச்சி தட்டி ரெண்டு வாய் கஞ்சியைக் குடிச்சா. குடிச்ச கஞ்சி கொடல்ல விழுகிறதுக்குள்ளார ஓ….வ்….வுன்னு ஒமட்டி அவ்வளவையும் வாந்தி எடுத்துட்டா? அடி வயித்துல ஏதோ ஒரு சிலு சிலுப்புத் தோணினாலும் அது என்னாங்கிற விவேகம் தெரியாத வயதுதானே! பாவம் ஆயாளுக்குத் தெரியாம எத்தனை நாளைக்குத்தான் ஒளிக்க முடியும்? 

“ஆயாளுக்குத் தெரிஞ்சு அப்பனுக்குச் சொல்லி வீடு சுடுகாடா மாற, ஆச்சி போச்சின்னு ஆறு மாசம் ஆயிடுச்சி. ஆறு மாச வயித்துப் புள்ளையை ஆருக்காவது மறைக்க முடியுமா? அந்த ஆயாளும் பகலெல்லாம் மலையில செத்துச் செத்து வேலை செஞ்சுட்டு ரா முழுக்க தன்னாலே முடிஞ்ச மருந்தெல்லாம் செஞ்சி பார்த்துட்டா, ஒண்ணும் பலிக்கல. பொண்ணோட அப்பனுக்கு என்ன செய்யிறதின்னே தெரி யல்லே. சாப்பிடாம, தூங்காம, வீட்டையும் கவனிக்காம சுத்தி ‘எக்கேடோ கெட்டுப்போ’ன்னு மிசின் கணக்கா வந்தது. பெத்தவ மனது கேக்குமா? புருசனை ஏசிப்பேசி நம்ம புள்ளையில்லையா சாக்கடையிலே விழுந்துடிச்சேன்னு அதிலேயே அமுக்கி வச்சிறுவோமா? நாமதானே கழுவி குளிப்பாட்டி எடுக்கணும்: மூச்சியைச் சுழிச்சிட்டாப்போல போதுமான்னு சமாதானம் பண்ணி பத்தனை நாட்டுல ஒரு கிழவி இருக்காளாம். இதிலெல்லாம் கை தேந்தவளாம், அவளை இன்னைக்கே கூட்டியாங்கன்னு அனுப்பினா. இன்னைக்கே கூட்டியாங்கன்னு மனுசனும் தலைவிதியேன்னு போச்சி. 

“அந்தக் கிழவி இதிலெல்லாம் கை தேர்ந்தவள் தான். தாய்க்குத் தெரியாம புள்ளையை இழுத்து தரையில போட்டு ருவா! அவ ரேட்டுக் கேக்குற விதமே அலாதி. மூனு மாசம்னா முப்பது ரூபாயும், ஒரு முழுப் போத்தல் வெள்ளையும், ஆறு மாசம்னா அறுபது ரூபாயும் ரெண்டு வெள்ளையும். 

“உடும்பு போனா போவட்டும்ங்குற நெலையில இருந்த அவங்களும் காசைப்பாக்காம அவளை கூட்டிக்கினு வந்துட் டாங்க. கிழவி வந்த சங்கதி தெரிஞ்சவுடனே தோட்ட மெல்லாம் இது தான் கதை. மலையில, பெரட்டுக்களத்துல பீலிக்கரையில், எங்க பார்த்தாலும் காவேரி முழுகாம இருக் காளாம்ங்கிறது தான் குசுகுசுப்பு. நம்ம சனங்க வெறும் வாயையே மொட்டு மொட்டுன்னு மெல்லுவாங்க. இப்படி ஒரு வெசயம் கிடைச்சா சும்மா இருப்பாங்களா? அந்த மனுசன் தரையைப் பார்த்த தலையைத் தூக்குறதே இல்லே. தம் பொண்ணு தன்னை தலைகுனிய வச்சிட்டுதே என்ற வெசனம். 

பாட்டியின் பக்கத்தே கிடந்த பரமசிவத்தின் இளசு ‘வீல்’ என்று கத்தவே பாட்டி அதைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே கதையைத் தொடர்ந்தாள். 

“அந்த மருந்துக்காரக் கிழவி வந்த மூணாம் நாள் அந்த- வூட்டுக்கு ஒரு போலிசய்யா வந்தாரு. அந்தப் பொண்ணு பேரைச்சொல்லி வெசாரிச்சாரு. தாலி கட்டாமலே அந்தப் பொண்ணு தாயாகி விட்டதாகவும், பெத்தவங்க கருவை’ கலைச்சு வூட்டுலேயே குழி வெட்டிப் பொதைச்சுட்டதாகவும் பெட்டிஷன் வந்திருக்குன்னு அவரு சொன்னாரு. பெண் ணைப் பார்த்து டாக்டரய்யாவுக்கு எழுதிக் குடுத்துட்டு, அவரு பொயிட்டாரு. அக்கம்பக்கத்துக்கு மட்டும் தெரிஞ்சது இப்ப அரசாங்கத்துவரை தெரிஞ்சிட்டதேன்னு அந்த மனுஷன் கெடந்து அங்கலாய்ச்சுக்கிட்டது; அவமானம் தாங்காம ஒரு நாளு தூக்குப் போட்டுக்குனு தொங்கிட்டது. 

….கூலிக்காரன்னா அவனுக்கு மட்டும் மானம் மருவாதி இல்லையா? 

பாட்டி அழுதே விட்டாள். 

“இவ்வளவுக்கும் காரணம் யாரு…. நீயே சொல்லு?” கிழவி நேரிடையாகவே பேத்தியைச் கேட்டாள். 

பேத்தி பதில் கூறவில்லை. 

அவள் உள்ளம் கொதி நீராய்க் கொந்தளித்தது. 

பாட்டியின் கதையில் வந்த பெண் அல்ல அவளை” அலைக்கழித்தது. அவளே-ஒரு உருவாகி அவளையே அந்த- உரு அலைக்கழித்துக்கொண்டிருந்தது. அந்த இருசனுடன் தான் கூடிக் கும்மாளமிட்ட இத்தனை நாளில் என்றாவது தன்னை அவனுக்கு அர்ப்பணித்திருக்கின்றாளா என்பதை ஆராய்ந்தாள். தனக்கும் அந்த கதைப்பெண்ணுக்கு நேர்ந்த கதிதானே நேரும் என்று மயங்கினாள்! 

அன்றைக்கு!…. இல்லை அதற்கடுத்த நாள்… அன்றும் இல்லை! நேற்று அவனாகவே வலிய இழுத்தும் நாளைக்குப் பார்ப்போம் என்று ஓடி வந்து விட்டாள். 

இன்று…? 

அழுது ஓய்ந்த பாட்டியின் குரல் அவள் கற்பனையைத் துண்டித்தது. 

“அந்தப் பொண்ணு மட்டும் நாளைக்கு வாரதை எண்ணி சாக்கிரதையா இருந்திருந்தா இவ்வளவும் நடக் குமா? நாளைக்குத் தனக்குத் தானே கஷ்டம். ஆம்பளைக்கு என்னா? நானா? எப்போன்னுட்டு போயிருவான். இதை யெல்லாம் யோசிக்கக்கூடவா பொண்ணாப் பொறந்ததுக்கு புத்தியில்லாமப் போயிறும்.” 

பாட்டி தனக்கே சொல்லுவது போலிருந்தது, காவே ரிக்கு. கட்டையைப்போல படுத்த வண்ணம் கேட்டுக்கொண்டிருந்தாள். 

“லயத்துல விட்டுவச்சிருந்தா அந்த பொண்ணும் செத்துப் போயிடும்னு உடனே ஆசுப்பத்திரியிலே கொண்டு போய் நிப்பாட்டிக் கிட்டாரு டாக்டரய்யா. அந்தப் புள்ளே ஒன் னுமே சாப்பிடுறது இல்லே. எளைச்சு எலும்புந் தோலுமா யிட்ட அப்புறம் என்ன….? எள வயது, எளைச்சுபோன உடம்பு; தளைச்சன் புள்ளை எல்லாமாச் சேர்ந்து அவளைத் தின்னுறுச்சி. 

“சிசுவை இந்த ஒலகத்துல விட்டுட்டு அந்த மவராசி துளளித்திரியற அந்தப் பதினாறு வயசுல ஊத்தைப் பேரையும் சொமந்துக்குனு போய்ச் சேந்துட்டா….” 

“அதிலேருந்து உன்னை வளர்த்து எடுக்க நான் என்ன பாடு பட்டேன் தெரியுமா….?” 

காவேரி துள்ளித் துடித்துப் போனாள். 

“பாட்டி….” என்ற பேத்தியின் அலறலைப் பொருட் படுத்தாத கிழவி ‘ஒங்காயாவுக்கு நேர்ந்த கதி ஓனக்கும் நேரனுமா! நாளைக்கு நடப்பதை யோசிக்காம இன்னிக்கு மட்டும் இன்பமா இருந்திட்டாப் போதுமா?” என்று கேள்வி மாலை தொடுத்தாள். 

ஆடி மழையில் நனைந்த சூரியகாந்தியாய்த் துவண்டு கிடந்தாள் பேத்தி. 

கூடாது….! கூடாது கூடாது….!! காவேரியின் மனம் கடலாய்க் கொந்தளித்தது. 

பின் ஜன்னலில் விழுந்த டொக் டொக் என்ற சப்தம் வெண்கலப் பானையில் பளிங்கு விழுந்தது போல் கிணீர் கிணீர் என்று விழுந்தது காவேரியின் காதுகளில். 

நேற்று வரை ஒருவித அசம்பாவிதத்துக்கும் தன்னை ஆளாக்கிக் கொள்ளாத காவேரி இன்று….! 

பாட்டி தூங்கிய பிறகு அவனை வரும்படி அவள்தானே கூறினாள். ஏமாற்றி விடுவாயா? என்ற அவனுடைய கேள் விக்கு “இல்லவே இல்லை.” என்று அவள் தானே வாக்கும் கொடுத்திருந்தாள். அதோ அவனும் வந்து விட்டானே! இனி என்ன செய்வது? 

பாட்டி மட்டும் கதை சொல்லி மனதைக் குழப்பியிராவிட் டால்… குதூகலத்துடன் ஒளிந்து ஓடியிருப்பாளே? 

சன்னமாக வெளிவந்த பாட்டியின் “குறட்டை ஒலி” அதற்குள்ளாகத் தூங்கி விட்டாள் என்ற மன உறுத்தல்; உழைத்து சலித்த உடலல்லவா? என்ற சமாதான முயற்சி ஆகிய இத்தனை மனக்குழப்பங்களுக்கிடையே முன் கதவும் லேசாகத் திறந்து கொண்டது. 

புஸ்ஸென்று வெளிவந்த மூச்சை மெதுவாக இழுத்துப் பிடித்து விட்டாள். 

பேத்தியைத் தொடர்ந்து பாட்டியும் வெளியே வந்தது பேத்திக்குத் தெரியாது. கதை சொல்லத் தெரிந்த பாட்டிக்கு குறட்டை விடவாத் தெரியாது! 

“தான் இவ்வளவு நேரம் இறைத்ததெல்லாம் விழலுக்குத்தானா” என்ற ஏக்கம் கிழவிக்கு. 

அந்த இளைஞனும் பேத்தியும் பேசிக்கொள்வது பாட்டி யின் பழைய காலக் காதுகளுக்கு எட்டவில்லை. சந்தர்ப் பத்தை சமாளிக்கக்கூடிய அளவு நெருங்கி நிற்க வேண்டு மென்ற எண்ணத்துடன் நெருங்கிச் சென்றாள். அவர்கள் பேச்சு அவளுக்கு நன்றாகக் கேட்டது. “இந்தா காவேரி! இன்னிக்கும் நான் சும்மாப் போக ஏலாது.இத்தனை நாளா என்னை ஏமாத்தினது போதும்” அவனுடைய குரல் நடுங்கியது. 

“நான் ஒன்னை எப்ப ஏமாத்தினேன். இதோ பாரு! ஒனக்கு எம்மேலே அவ்வளவு ஆசைன்னா நாளைக்கு எங்கக் கிழவி கிட்ட வந்து நானு ஒம் பேத்தியைக் கட்டிக்கப் போறேன்னு சொல்லு மத்ததெல்லாம் அப்புறமாப் பாத்துக்கிடலாம். 

அதுக்கு இப்ப என்னா அவசரம்-? அதைச் சொல்லத் தானா இந்த சாமத்திலே என்னைய அழைச்சே….!” 

“ஆமா! அதுக்கு இப்ப அவசரமில்லேன்னா மத்ததுக்கும் இப்ப அவசரம் இல்லை” என்றவாறே காவேரி நடந்து விட்டாள். 

கிழவியின் மனம் மகிழ்ச்சியால் சிரித்தது. பேத்தியைத் தூக்கி உள்ளத்தில் ஓர் உயர்ந்த இடத்தில் வைத்துக் கொண்டு வீட்டுக்குள் விரைந்தாள். 

“நில்லு” எட்டி நடந்த காவேரியை இழுத்துப் பிடித்தது இருசனின் இரும்புக்கரம். 

 “நேரமாவுதில்லே” என்று இழைந்தபடி அவள் உடம்பில் கையை ஓட்டினான். இருட்டுத்தான் என்றாலும் கைக்குத் தெரியாதா?…. 

பளார்….! 

உழைத்து உறுதி வாய்ந்த கையல்லவா காவேரியின் கை. இருசனின் கன்னம் சிவந்தது. 

கதவைச் சாத்திக் கொண்ட காவேரி படுக்கையில் விழுந்து விம்மினாள். 

– கதைக் கனிகள், முதலாவது போட்டி, பரிசு பெற்ற மலையகச் சிறுகதைகள், தொகுப்பு: எஸ்.எம்.கார்மேகம், முதற் பதிப்பு: 1971, இளவழகன் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *