பக்த குசேலா
கதையாசிரியர்: புதுமைப்பித்தன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: June 6, 2026
பார்வையிட்டோர்: 27
(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புதுமைப்பித்தன் சின்னச் சின்ன நாடகங்கள் சில எழுதி இருக்கிறார். கேலியும் குத்தலும் நிறைந்த அவை வாழ்க்கையின் யதார்த்த நிலைமைகளை உணர்ச்சியோடு சித்திரிக்கும் புதுமைப் படைப்பு களாகவும் அமைந்துள்ளன.
அப்படி அவர் முதலில் எழுதியது ‘பக்த குசேலா – கலியுக மாடல்’ என்பதாகும். பழைய குசேலர் கதைக்கு ஒரு பகிடி (Parody) போல எழுதப்பட்டது. குழந்தைகள் அதிகம் உள்ள குடும்பத்தில் வறுமை மிகுந்த சூழ்நிலையில்-சாப்பாட்டு நேரம் எவ்வளவு போட்டி நிறைந்ததாகவும் பரிதாபத்துக்கு உரியதாகவும் இருக்கும் என்பதைக் காட்டும் காட்சி உருக்கமானது.
மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இல்லாமையைச் சமாளிக்க ஒவ்வொரு நாளும் எப்படி எப்படியோ கடன்கள் வாங்கி, அவற்றைத் திருப்பித்தர இயலாத நிலையில் சாக்குப் போக்குகள் கூறிச் சமாளித்து, எவ்வளவோ பாடுகள் பட்டு, சாமார்த்தியங்களைக் கையாண்டு காலம் கழிக்க நேரிடுகிறது என்பதை விவரிக்கிறது.
– இந்திய இலக்கியச் சிற்பிகள் – புதுமைப்பித்தன், ஆசிரியர்: வல்லிக்கண்ணன், முதல் பதிப்பு: 1987, சாகித்திய அக்காதெமி, புது தில்லி.
வறுமை முதலாளித்துவத்தின் விலக்கமுடியாத நியதி; வியாதியும் கூட. அதனுடன் ஒரு சித்த ஸ்வாதீன மற்ற நிலைக்கு ஒப்பான பிரமையும் கூடிக் கொண்டால்…!
‘கரியுக மாடல் குசேலர்’ சனாதன தர்மம் என்ற பழைய நங்கைக்கும், இரும்பு நாகரிகம் என்ற புது அரக்கனுக்கும் ஏற்பட்ட பலவந்த சம்பந்தத்தில் ஜனித்த குழந்தை.
மனித சமூகத்தின் அபார, அற்புதக் கற்பனையான தெய்வம் என்ற பிரமை தனக்கு ஆக்கவும், வளர்க்கவும், அழிக்கவும் சக்தி இருக்கிறது என்று வேண்டுமானால் பெருமையடித்துக் கொள்ளலாம். ஆனால், இந்தக் ‘குசேல வியாதி’யைப் போக்கும் சஞ்சீவி மனிதன் வசம் தான் உண்டு.
என் நாடகத்தில் வருகிறவர்கள்
குசேலர்: கரியுக மாடல்: தென்கலை வைஷ்ணவர்; பட்டண வாசி. பவழக்காரத் தெருவில் கிருஷ்ணன் கோயில் பக்கத்தில் ஒரு சந்தில், இவரை விட்டுப் பிரியாத குடும்பம், கிருஷ்ண விக்ரகம், (இது ஒரு பண்ருட்டி பொம்மை. அபிஷேகம் செய்துசெய்து மூக்கு கன்னத்தின் மட்டத்திற்கு வந்துவிட்டது) பூஜைப் பெட்டி, தம்புரு சப்ளாக் கட்டை, முதலிய சம்பிரமங்களுடன் ஒரு வீட்டில் ஒட்டுக் குடித்தனம் செய்கிறார். மெலிந்த தேகி; இடுப்பைச் சுற்றிலும் முதுகு வரை யிலும் வண்ணான் சொறி. இவருடைய அன்புக்குக் கிருஷ்ண பக்தியும், சிரங்கு உபாதையும் போட்டியிடுகின்றன.
சுசீலை: ரொம்பப் பொறுமைசாலி. ஆனால், பழைய பதிப்பைப் போல தீர்க்க தரிசனம் வாய்ந்தவள் அல்லள். தன் இருபத்தேழு குழந்தைகளுக்கும், முதலில் தன் உறவினர் பெயர்களை இட ஆரம்பித்து, உறவினர் லிஸ்டு திடீரென்று முடிந்து விட்டதால், அப்போதைக்கப்போது முதல் முதலாகக் கவனம்வரும் பெயரை உபயோகித்து அழைக்கிறாள்.
குழந்தைகள் : குசேலர் குழந்தைகள் பெயர்களை யெல்லாம் இலகுவில் லிஸ்டு எடுக்க முடியாது. ஒரு ஸெட் ‘பிளேட் டானிக்-சர்மா ஆலை’களில் வேலை பார்க்கிறது. மற்றொரு ஸெட் புது மோஸ்தர் ‘கபே’க் கள் என்ற ‘பிராமணாள் ஹோட்டல்’களில் வேலை பார்க்கிறது. மீதி குசேலருடன் பட்டினி இருக்கின்றன.
ஆலையில் வேலைபார்க்கும் ஸெட்டில் இருவர் “கிட்டுவும், பார்த்தசாரதியும்.” பார்த்தசாரதி சென்னைத் தொழிலாளர் சங்கம், தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம், சென்னைத் தொழிலாளர் அபேத வாதச் சங்கம் எல்லாவற்றிலும் அங்கத்தினன். கிட்டுவும் அண்ணனைப் போல். ஆனால், அப்பா மேல் கொஞ்சம் கோபம் ஜாஸ்தி.
கோதை : குசேலரின் மகள், கலியாண வயதைத் தாண்டிக் கொண்டிருப்பவள். குசேலர் குடும்பப் பொறுப்புத் தங்கள் மேல் விழுந்து விடுமோ என்ற பயத்தில், வரன்களும், பெண் தேடுவோரும் அந்தத் தெரு வழியாகக் கூடப் பெண் பார்க்கப் போவதில்லை.
ஒட்டுப் பொறுக்கி : குசேலரின் நாலு வயதான மற்றொரு பெண் குழந்தை.
வீட்டுக்காரச் செட்டியார் : வீட்டு உத்திரம், ஜன்னல், குசேலக்குடும்பம் எல்லாம் ஒன் றாகக் கருதும் “அபேத வாதி.’ இவருக்கு கிருஷ்ணபக்தி தலைவலி போக்கும் மருந்து என்பது அனுபவ நம்பிக்கை.
இருமல் யந்திரம்: குசேலர் வசிக்கும் வீட்டில் முன் கட்டில் குடியிருக்கும் சர்க்கார் உத்தியோகஸ்தரின் தாயார். தொழில் காசநோயால் இருமுதல், கிருஷ்ண பக்தி.
ஸ்ரீமதி சுப்பராமய்யர் : மேற்படி சர்க்கார் உத்தியோகஸ் தரின் மனைவி. தன் குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டுவது எப்படி என்ற விஷயத்தில் ‘அதாரிட்டி’ (நிபுணி)
ஸ்ரீகிருஷ்ணசாமி சர்மா: குசேலருக்குக் கிருஷ்ணபக்திக்கு ஆதிகாரணமான, தற்போது மாம்பலத்தில் வசித்து வரும் – பணக்கார ஜந்து. இவருக்கு மூக்குக் கொஞ்சம் தட்டை. இவர்தான் ‘பிளெட் டானிக்-சர்மா நூற்கும் ஆலை (லிமிடெட்)களின் டைரக்டர் போர்டுத் தலைவர். ஆலைகளில் சரிபாதி பங்கு இவருடையது. கருத்தடையில் அபார நம்பிக்கையுடையவர்.
அந்தக் காலத்தில் – அதாவது கிட்டிப்புள் விளையாடி, மாந்தோப்பில் மாங்காய் திருடும் பருவத்தில் – குசேலருடன் ஒன்றாக ஒரு சமஸ்கிருத பாடசாலையில் படித்தார். அப்பொழுது ஒரு நாள் வாத்தியார் இந்த நஞ்சன் குஞ்சான்களிடம் தெய்வத்தின் தன்மையைப் பற்றி ஒரு கேள்வி போட்டார். அப்பொழுது கிட்டு, தன் பாட்டனார் தன்னை விடியற்காலையில் எழுப்பி வைத்து, குட்டிக் குட்டி மண்டையில் ஏற்றி வைத்திருந்த “எல்லாம் நானே” என்ற பகவத்கீதை ஸ்லோகத்தை அப்படியே கக்கிவிட்டான். வாத்தியாருக்குத் தெரியும் அவன் குட்டு, ஆனாலும் அதைப் பிரமாதப் படுத்தவில்லை. ஆனால் அது ஒரு பிரகிருதியின் மனத்தில் புகுந்து குடியேறி, இந்தக் கஷ்ட காலத்தில் அருமையாய்ச் சம்பாதித்த ‘காப்பிஸ்டு’ வேலைக்கு உலை வைத்துவிட்டது.
ராமமூர்த்தி: சர்மாவின் செல்லப் பிள்ளை. அவனுடைய ஸினிமாக் காமிரா கதையைக் கொஞ்சம் நீடிக்கிறது.
குஞ்சம்: குசேலரின் கிருஷ்ண பக்திக்குக் கொஞ்சம் உதவி செய்யும் சர்மாவின் நாலு வயதுப் பேத்தி.
டைரக்டர் நண்பர் விசுவநாதய்யர்: பிளேட்டானிக்- சர்மா ஆலை டைரக்டர் போர்டு அங்கத்தினர். சர்மா சொல் லுவதையெல்லாம் புரியாமல் கேட்டுக் கொண்டிருக்கும் பொறுமைசாலி.
ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் கிராமபோன்: குசேலரின் பக்திப் பரவசத்தின் போது சமயா சமயங்களில் பின் பாட்டுப் பாடும்
காரியதரிசி சுந்தரம், மாதவன், சமையல்காரன் முதலிய பாத்திரங்களுக்கும் இதில் இடமுண்டு.
முன்வாசல்
நிர்மானுஷ்யமான பாழ்வெளியில் ஓர் உயர்ந்த புராதன மான கோயில் சிகரக் கலசங்களில் சில தகர்ந்து விட்டன. மதில்களில் சில பாகங்கள் இடிந்து கிடக்கின்றன.
முன் வாசலில் நின்று பார்த்தால், மூலவர் பக்கத்தில் உள்ள சிறு தீபாளி தவிர வேறு ஒன்றும் தெரிய வில்லை. அவ்வளவு இருட்டு.
கோயில் கோபுரத்திலிருந்து ஒரு பெரிய நரி வேௗவால் நீண்ட தோல் சிறகை விரித்துப் பறந்து செல்லுகிறது.
எங்கோ ஓர் ஆந்தையின் அலறல்.
கோயில் உட்பிரகாரத்தில் தடதட வென்ற பேரிகை குழப்பம், மேள வாத்தியம், இங்கிலீஷ் பாண்டு, சங்க நாதம் – எல்லாம் ஒன்றோடொன்று குழம்பி ஒலிக்கின்றன.
தீப்பந்தங்களையும், காஸ் லைட்டுகளையும் தூக்கிய மெலிந்த தேகிகளும், வாத்தியக்காரர்களும் கோயிலின் உட்பிரகாரத்தில் ஒரு திசையிலிருந்து வெளிப்படுகின்றனர்.
நாதஸ்வரக்காரன் கேதாரகௌளை ராகத்தை எடுத்து ஆலாபனை செய்கிறான். அதே சமயத்தில் பாண்டு வாத்தியம் “ரூல் பிரிட்டானியா” என்ற மெட்டை வெளுத்து வாங்குகிறது.
அதற்கப்புறம் பருத்த சரீரிகள் பலர் மெல்லிய பட் டாடை உடுத்துப் பின் தொடருகின்றனர்.
அவர்களுக்குப்பின் ஒரு பிரமாண்டமான வெண்கலச் சிலையை வெகு சிரமத்துடன் தள்ளாடித் தூக்கிக் கொண்டு பல மெலிந்த தேகிகள் தொடர்கின்றனர். மேலேயிருக்கும் பாரம் அழுத்த, கால்களோ இடுப்போ ஒடிந்து விடாதபடி காப்பாற்றிக் கொள்வதிலும், மேலேயிருக்கும் சுமையிலு மாக அவர்கள் கவனம் பிரிந்து ஊசலாடுகிறது.
இந்த வெளிச்சமும், ஒலியும் மூலவர் திசையிலிருந்து வரும் ஒளியை மறைத்து விடுகின்றன…
ஊர்வலம் சன்னதிக்கு நேர் எதிரில் நிற்கிறது.
மறுபடி பேரிகை, டங்கா ஒலி…
(காட்சி கரைந்து குசேலர் கிருகத்தில் கலந்து தெளிவடைகிறது.)
சுருள் – 1
காலை 10மணி. குசேலர் வீட்டில் கிழக்குச் சுவருக் கருகில் ஒரு கள்ளிப் பெட்டியின் மேல் கிருஷ்ண விக்ரகம். அதற்கு முன் இருந்து குசேலர் பூஜை செய்து கொண்டிருக் கிறார். இவர் முன்பு ஒரு சிறு தட்டில் கொஞ்சம் பாசிப் பயறு, எறும்புக்கும் பசிதீராத அளவில் ஒரு சிறு வெல்லத் துண்டு, வீட்டுக்காரச் செட்டியார் தரும் மான்யமான கற்பூரம் இருக்கிறது. குசேலர் பக்திப் பரவசத்தில் கண்கள் உள்ளே சொருக, அரைக்கண் போட்ட வண்ணம் பிரபந்தப் பாடல்களைப் பாடிக் கொண்டு இருக்கிறார். சற்று தூரத்தில் இருமல் யந்திரம் தீபாராதனை சமயத்தை எதிர் நோக்கி உட்கார்ந்திருக்கிறாள்.
குசேலர்
‘உய்ய உலகுபடைத் துண்ட மணிவயிறா?
ஊழிதோறூழிபல ஆலினிலையதன்மேல்
பையவியோகு துயில் கொண்ட பரம்பரனே!
பங்கய நீள் நயனத் தஞ்சன மேனியனே!
செய்யவள் நின்னகலம் சேமமெனக் கருதி
செல்வு பொலிமகரக் காதுதிகழ்ந்திலக
ஐய! எனக் கொருகாலாடுக செங்கீரை
ஆயர்கள் போர் ஏறே! ஆடுக ஆடுகவே
பாலொடு நெய்தயிர் ஒண் சாந்தொடுசண்பகமும்
பங்கயம் நல்லகருப்பூரமும் நாறிவர
கோல நறும்பவளச் செந்துவர்வா யினிடைக்
கோமளவெள்ளி முளை போல்சில பல்லிலக
நீலநிறத்தழகார் ஐம்படையின் நடுவே
நின்கனிவாயமுதம் இற்று முறிந்துவிழ
ஏலுமறைப்பொருளே! ஆடுக செங்கீரை
ஏழுலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே.’
(உட்புறம் – அதாவது சமையல் கட்டிலிருந்து – சுசீலையின் குரல் – ‘ஆடாதே, ஆடாதேன்னு எத்தனை தரம் சொல்றது! பொட்டெக் கழுதே!’ அதைத் தொடர்ந்து பொத்துப் பொத்தென்று அடி விழும் சப்தம் கேட்கிறது.)
சிறு குழந்தை ஒன்று அடிபட்டுக்கொண்டே, “அம்மா பசிக்கிறதே! பசிக்கிறதே!” என்று கத்திக் கொண்டே பூஜைக் கூடத்திற்கு ஓடி வருகிறது.
“தொலைஞ்சு போ” என்ற சுசீலையின் குரல். அதே சமயம் மற்றொரு சிறு கைக்குழந்தையின் வீரிடல்.
சுசீலை: “நீயும் ஆரம்பிச்சுட்டாயா?”
தெருப் பக்கத்திலிருந்து தேசீய பஜனையின் சங்கீதம் எப்படியோ சுற்றிச் சுற்றி வந்து காதில் விழுகிறது.
“தனி ஒருவனுக்கு உணவிலை எனில்
ஜகத்தினை யழித்திடுவோம்!”
குசேலர் விக்ரகத்தின் முன்பு விழுந்து நமஸ்கரித்து விட்டு, கற்பூரத்தைக் கொளுத்தி தீபாராதனை செய்கிறார். பின்னர் பாசிப்பயறு நிவேதனத்தை – தண்ணீரில் ஊற வைத்ததுதான் – கிழவியிடம் கொஞ்சம் விநியோகிக்க வருகிறார். அப்பொழுது அடிபட்டு வெளியே வந்த குழந்தை தட்டிப் பிடிக்க எல்லாம் சிந்திவிடுகிறது. குசேலர் பரிதாபத்துடன் குழந்தையைப் பார்த்துச் சிரிக்கிறார். குழந்தை பயந்து மூலையில் சென்று ஒண்டி நிற்கிறது.
வெட்டு – 2
குசேலர் வெளியில் உஞ்சவிருத்திக்குச் செல்லத் தலை யில் ஒரு பழைய பட்டு ஒன்றை-சுசீலை கலியாணத்தின் போது வாங்கியது- எடுத்துக் கட்டிக்கொண்டு, கையில் தம்புரு, சப்ளாக்கட்டை, தோளில் நாடாவில் கட்டித் தொங்கும் நன்றாக விளக்கிய செப்புச் செம்பு சகிதம் வெளியே புறப்படுகிறார். உள்ளிருந்து சுசீலை, ”சித்தே சுருக்கா வாருங்கோ; கொழந்தைகள் துடிக்கிறது” என்று குரலெடுக்கிறாள். இதெல்லாம் காதில் கேட்காத பாவனை யில் பாடிக் கொண்டே வெளியில் புறப்பட்டு விடுகிறார் குசேலர். அவருடன் கிழவியும் வெளி முற்றத்திற்குப் போகிறாள்.
அவர் சென்ற பின்பு…
மூலையில் ஒண்டிக் கொண்டிருந்த குழந்தை தரையில் சிதறிக் கிடந்த பாசிப்பயறுகளைச் சிறு விரலால் எடுத்தெடுத்து விழுங்குகிறது.
சுருள் – 2
சுப்பராமய்யர் வீட்டு முற்றம். அய்யர் ஆபீஸுக்குப் போய்விட்டார். மனைவி இடையில் குழந்தையையும், கையில் வெள்ளிக் கிண்ணத்தில் நெய்விட்ட பருப்புஞ் சாதமும் எடுத்துக்கொண்டு, வேடிக்கை காட்டி, அதற்கு உணவு கொடுக்க வருகிறாள். இவள் ஒரு உருண்டையை எடுத்து அதன் வாயண்டையில் சென்றதுதான் தாமதம், குழந்தை தலையை அப்படியும் இப்படியும் ஆட்டி, முகமெல்லாம் சாதமாக்கிக் கொள்ளுகிறது. ‘காக்க ஒஷ்!’ என்கிறாள். ‘குருவி பார்’ என்கிறாள். குழந்தை ஒரே பிடிவாதமாகத் தலையை ஆட்டுகிறது.
ஸ்ரீமதி சுப்பராமய்யருக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றுகிறது. வெளியே தெருப்புழுதியில் அளைந்து விளையாடிக் கொண்டிருக்கும் குசேலக் குழந்தைகளைக் கூப்பிடுகிறாள். எல்லாம் ஏகமயமாக ரகளையிட்டுக் கொண்டு கைப்புழுதியைத் துடையில் தட்டிக்கொண்டு ஓடி வருகின்றன.
ஸ்ரீமதி சுப்பராமய்யர், “அந்தப் பாப்பாக்குக் குடுத்துட றேன் பார்! நீசமத்தோல்லியோ! ஆக் காட்டு!” என்று சொல்லிக்கொண்டு பருப்பிட்டுப் பிசைந்த சாத உருண்டையை ஒரு குசேலக் குழந்தையின் வாயண்டையில் கொடுக்கும் பாவனையில் கொண்டு நீட்டுகிறாள். மற்றக் குசேலக் குழந்தைகளும் “அம்மாமி நேக்கு! நேக்கு!” என்று வாயைப் பிளக்கின்றன. இதைக்கண்ட இடுப்புக் குழந்தை கொடுக்கக் கூடாதென்ற பாவனையிலோ என்னவோ, தலையைப் பிய்த்துக் கொண்டு கத்துகிறது. உடனே அவள், குசேலக் குழந்தை பக்கம் கொண்டு போன கையை மாற்றித் தன் குழந்தை வாயில் சோற்றைத் திணித்து விடுகிறாள். அவள் குழந்தை சோற்றை விழுங்கியபின் மறுபடியும் அடம் செய்கிறது.குசேலர் குழந்தைகளிடம் கொடுப்பதுபோல் கொண்டு போய் ஏமாற்றுகிறாள். ஏமாந்த குழந்தை தவிர மற்றயாவும் இதை ஒரு புது விளையாட்டாகக் கருதிச் சிரித்துக் கூக்குரலிட்டு ரஸிக்கின்றன. சாதம் தங்கள் வாய்ப்பக்கம் வரும்பொழுது “அம்மாமி நேக்கு, அம்மாமி நேக்கு!’ என்ற குதிப்பும் கூக்குரலும்.மறுபடியும் ஏமாறிய குழந்தை தவிர மற்றவரின் ரஸிப்பு. இப்படியாக, சுப்பராமய்யர் குழந்தையின் வயிற்றில் ஒரு கிண்ணம் சோறு திணிக்கப்படுகிறது.
கடைசி உருண்டைதான் பாக்கி. மறுபடியும் ஏமாற்று வேலையை ஸ்ரீமதி சுப்பராமய்யர் கடைசி முறையாகப் பிரயோகிக்க முயன்று குசேலக் குழந்தை ஒன்றிடம் கையை நீட்டுகிறாள். அது முன்பே ஒருதாம் ஏமாறிய குழந்தை, தாவிக் குதித்துக்கையை பிடித்துக் கொண்டு சோற்று உருண்டையை வாயினால் பிடுங்க முயற்சிக்கிறது. அப்பொழுது அதன் பற்கள் ஸ்ரீமதி அய்யரின் விரல்களில் நறுக்கென்று பட்டுவிடுகின்றன.
ஸ்ரீமதி சுப்பராமய்யர், அப்படியே “அடியே அம்மா! சனியனே!” என்று கூவிக்கொண்டு குழந்தையின் மண்டையில் குட்டி விட்டு, “கோந்தைகளா நாளைக்கு வரப்போ இந்தச் சுந்துவைக் கூட்டிண்டு வராதேங்கோ!”, என்று சொல்லிவிட்டு, அடுக்களைப் பக்கம் சென்று விடுகிறாள்.
அப்பொழுது..
பாசிப்பயறு சிந்திக் கிடந்ததையெல்லாம் பொறுக்கித் தின்றுவிட்ட ஒட்டுப் பொறுக்கி, மெதுவாக அப்பக்கத்தில் வந்து கீழே சிதறிய பருக்கைகளை விரல்களால் தேய்த்துத் தேய்த்து நக்குகிறது.
அச்சமயம் கோதை வெளியிலிருந்து உள்ளே வருகிறாள்.
கோதை: எப்பொழுதும் ஒட்டுப்பொறுக்கி ஒட்டுப் பொறுக்கி வீட்டையே தொடச்சாச்சே? என்ன ஜென்மமடி!
ஒரு அறை கொடுத்துக் குழந்தையைத் தூக்கி இடுப்பில் எடுத்து வைத்துக் கொண்டு உள்ளே செல்லுகிறாள்.
இடுப்பிலிருக்கும் அக்குழந்தை முதுகைத் துடைத்துக் கொண்டே, சிதறிய சோற்றுப் பருக்கைகள் கிடக்கும் திசையையே வெறித்துப் பார்க்கிறது…
(அதே சமயத்தில்)
சுருள் – 3
கச்சாலீசுவரர் அக்ரகாரத்தில் ஒரு தெரு.
தெருவில் ஒரு சொறி பிடித்த நாய் ஓடி வருகிறது. கோடியில், எங்கோ குசேலரின் பாட்டுக் குரல்…
அக்ரககாரத்தின் அந்தக் கோடியில் அவரது குரல் கேட் கிறது. கண்ணன் புகழ் பாடிக் கொண்டு வருகிறார்.
(காட்சி நெருங்குகிறது)
சப்ளாக்கட்டை தம்புரு சகிதமாகக் குசேலர் வெளிப் படுகிறார்… வெறிச்சென்று கண்ணைக் குத்தும் வெய்யில். நெற்றியிலும் உடலிலும் உள்ள துவாதச நாமத்தின் ஸ்ரீசூர்ணம் ரத்தப் பிரவாகம் போல வியர்த்து வழிகிறது. அண்ணாந்த வண்ணம் உரத்த குரலில் பிரபந்தத்தின் பகுதி கள் சிலவற்றைப் பாடிக்கொண்டு வருகிறார்.
உஞ்சவிருத்தியில் அனுபவ ஞானம் பெற்ற குசேலர் ஒவ்வொரு வீட்டு முன்பும் நின்று நின்று பாடிக் கொண்டு காத்துக் காத்து, கிடைத்தால் அமுதுபடி பெற்றுக்கொண்டு நகர்கிறார்.
குசேலர்: (அண்ணாந்து, உச்சி சூரிய கிரணங்கள் கண் களில் உறுத்த மெய்மறந்து)
“ஊனில் வாழுயிரே! நல்லைபோ உன்னைப்பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளேகலந்
தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே
எனதாவியுள் கலந்தபெரு நல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்தொழிந்தேன், இனிமீள்வ
தென்பதுண்டோ?
எனதாவியும் நீ பொழிலேழு முண்ட எந்தாய்!
எனதாவியார்? யானார்? தந்த நீ கொண்டாக்
கினையே!
முன் நல் யாழ்பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே!
பன்னலார் பயிலும் பரனே! பவித்திரனே!
கன்னலே! அமுதே! கார்முகிலே! என்கண்ணா!
நின்னலால் இல்லேன் காண் என்னை நீ
குறிக்கொள்ளே.”
அச்சமயம் அவர் தலைக்குமேல் செத்த எலியைக் கவ்விய ஒரு கழுகு வட்டமிடுகிறது.
குசேலருக்குத் தெய்வ வெறி மீறுகிறது. கண்களில் உறுத்தும் சூரிய கிரணங்களின் ஊடு ஏதோ தெரிவது போல் நீள் சிறகை விரிக்கிறது. கருடாழ்வான் மேல் சூரியவட்டத்தின் நடுவே மகாவிஷ்ணுவின் தோற்றம் அவருக்குப் புலப்படுகிறது.
கழுகு மெதுவாக இறங்கி, ஒரு மேல் மாடத்தின் மேல் கீழ்ப் புறமாக மறைந்து விடுகிறது. குசேலர் கண்களுக்குத் தெய்வம் மெதுவாகப் பூமியில் இறங்கி மனித வேடம் புனைந்து தன்னைப் பரிசோதிக்க வருவதாக(?) ஒரு பிரமை…
மெதுவாகக் கண்களைத் திறக்கிறார். கண்களில் வெறி; முகத்தில் வியர்வை ஆறு; கை கால்களில் சிறிது நடுக்கம்.
அச்சமயம் ஒரு பார்ப்பனப் பெண் ஒரு சிறு கிண்ணத் தில் அரிசி கொணர்ந்து செம்பில் போட அது நிறைந்து விடுகிறது.
அத்துடன் அக்ரகாரத் தெரு முடிவடைந்து விட்டதால் தொழில் முடிந்து விட்டதென்று வேகமாகப் பவழக்காரத் தெருவை நோக்கி நடக்கிறார்.
வழியில்…
கிருஷ்ணன் கோயில் பக்கம் ஒரு குஷ்டரோகி உட்கார்ந்து கொண்டு, “அய்யா சாமி, தரும தொரை களே!’ என்று நெஞ்சுலர ஓலமிடுகிறான்.
தெய்வ சோதனை என்று நினைக்கிறார் குசேலர். செப்புச் செம்பில் இருக்கும் அரிசி யாவும் அவனது துருப் பிடித்த தகரப் போகணியிலும், கந்தல் துணியிலும் போய் விழுகிறது.
கிருஷ்ண நாமத்தை பஜித்துக்கொண்டு கோயில் முன்பு போய்ச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துவிட்டு, வீட்டுக்குச் செல்கிறார்.
சுருள் – 4
வீட்டில்…
வெளி முற்றத்தில் நின்ற ஒரு குசேலக் குழந்தை- “அப்பா வந்துட்டா!” என்று கோஷித்துக்கொண்டு உள்ளே ஓடுகிறது.
சுப்பராமய்யர் முற்றத்தில் குழாயடியில் தண்ணீரைத் திறந்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்த இரட்டைக் குழந்தைகள், அந்தச் செய்தியை எடுத்து இன்னும் உரத்த குரலில் கூவிக்கொண்டு அடுக்களை நோக்கி ஓடுகின்றன,
பூஜைக் கூடத்தில், மூன்று வயதான ஒட்டுப் பொறுக்கிக்’ குழந்தை தலையைத் தூக்கி அப்பாவைப் பார்த்து விட்டு மூலையில் சென்று நின்றுகொள்ளுகிறது
குசேலர் ‘அடியே!’ என்று மனைவியைக் கூப்பிட்ட வண்ணம் தமது வேஷத்தைக் கலைத்துவிட்டு, ”கிருஷ்ண கிருஷ்ண!” என்று கொண்டே, முற்றத்தில் இருக்கும் சிறு ஜலதாரையின் பக்கத்தில் இருந்த பழைய கொப்பரையில் இருந்த ஜலத்தில் குளிக்கிறார்.
தகப்பனாரின் முதுகுப்புறமே தன் திசையில் இருக்கிற தென்று அறிந்த ஒட்டுப்பொறுக்கி, தன் மூலையை விட்டு வெளிவந்து செம்பில் மெதுவாகக் கையை வீட்டுப் பார்த்து விட்டு, தகப்பனாரை வெறிக்கப் பார்க்கிறது. பீறகு தலையைக் குப்புறச் சாய்த்து செம்புக்குள் பார்த்துக் கையை விட்டுத் துழாவுகிறது. அதன் பதற்றத்தில் செம்பு கவிழ்ந்து கடபுட வென்ற சப்தத்துடன் ஜலதாரையை நோக்கி உருள்கிறது.
அந்தச் சப்தத்தில் குழந்தை அப்படியே ஸ்தம்பித்து வெறித்த விழிகளுடன் உட்கார்ந்துவிடுகிறது.
அந்தச் சப்தத்தைக் கேட்ட சுசீலை அடுப்பங் கரையி லிருந்து வெளியே வருகிறாள்.
செம்பையும் குழந்தையையும் பார்த்துவிட்டு, “அடி கோதை! நெனச்சாப்பிலேதான் ஆச்சு. நல்லகாலம் நீ பேட்டு வந்தே. கஞ்சியை எடுத்துக் கொழந்தைகளுக்காவது வாரு” என்று அங்கிருந்தபடியே உத்தரவிடுகிறாள்.
‘கஞ்சி’ என்ற வசிய மந்திரம் ஒலித்ததுதான் தாமதம். எங்கிருந்தோ ஒரு பட்டாளம் குழந்தைகள் குதி போட்டுக் கொண்டு ஓடி வருகின்றன.
எல்லாக் குழந்தைகளும் வட்டச்சப்பணம் போட்டுக் கொண்டும், துடையைத் தட்டிக்கொண்டும் அடுக்களையை நோக்கிய வண்ணம் உட்கார்ந்திருக்கின்றன.
உள்ளே கஞ்சி ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்தில் ஊற்றப்படும் சப்தம் கேட்கிறது.
ஒட்டுப் பொறுக்கிக் குழந்தையின் வாயிலிருந்து ஜலம் சொட்டுகிறது.
ஆறு வயது குசேலக் குழந்தை: அம்மா, நானும் பள்ளிக் கூடம் போகப் போறேனே! அடுத்தாத்து அம்பிகூடப் போவேன்!
சுசீலை: அடி அம்மா! என்ன சமத்துடீ! – போகலாண்டா! மோட்டாருங்கீட்டாருமா இருக்கே! சித்த நாளாகட்டும்!
மேற்படி பையன்: பள்ளிக்கூடத்திலே சாதம் குடுக்கராளாம் அம்மா! இவ்வளவு (கையை விரித்துக் கொண்டு) குடுக்கரா – நான் பார்த்தேன் – நான் அந்த அம்பியோடே போவேன்.
எல்லாக் குழந்தைகளும் ஏகமேனியாக: “நானும் நானும்!” என்று கூக்குரலிடுகின்றன.
ஒட்டுப் பொறுக்கிக் குழந்தை: கடைசியாக, “அம்மா நானு…” என்று நீட்டுகிறது.
கஞ்சி ஆற்றும் சப்தம்.
குசேலர் மறுபடியும் துவாதச நாமங்களுடன், பூஜை செய்யப் பஞ்சபாத்திரத்துடன், கிருஷ்ண விக்ரகத்தின் முன் சென்று நிற்கிறார்; உட்காருகிறார்.
கோதை கஞ்சிப் பாத்திரத்துடன் வெளியே வருகிறாள்.
குழந்தைகள் மண்டிபோட்டுக் கொண்டும், ஒன்றை யொன்று தள்ளி எழுந்திருக்க முயற்சித்துக் கொண்டும் ரகளையடிக்கின்றன.
கோதை ஒரு தம்ளரில் கஞ்சியை ஊற்றி ஒட்டுப் பொறுக்கிக் குழந்தைக்குக் கொடுக்கக் குனிகிறாள்.
அச்சமயம்…
வெளியிலிருந்து யாரோ தடதடவென்று உள்ளே நுழையும் சப்தம்…
கோதை தலையை நிமிர்த்திப் பார்க்கிறாள்.
பூஜை முற்றத்திலிருந்து குசேலரின் பாட்டுக் குரல் வருகிறது.
அதே சமயத்தில் குசேலரின் மூத்த பிள்ளைகளில்- அதாவது ஆலைகளில் வேலை பார்க்கும் ஸெட்டில்- ஒருவனான கிட்டு, மண்டை, கை, கால் இவற்றில் கட்டு களுடன். பிரவேசிக்கிறான். சோர்ந்து தள்ளாடி, தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொள்கிறான்.
சுசீலை: இதென்னடாது? – வேஷம்! – கோரணி!
கிட்டு பேச முடியாமல் தவிக்கிறான். கிட்டச் சென்று ஒருவன் தலையைத் தடவிப் பார்க்கிறான். கை தீண்டின வலியால் முகத்தைச் சுளித்துக் கொண்டு, அவன் விரலைத் தள்ள முயற்சிக்கிறான் கிட்டு.
கோதை: (நிமிர்ந்து நின்றவளாய்க் கையில் கஞ்சி தம்ளருடன்…) ஏண்டா கிட்டு! என்னதான் சொல்லேன்! என்ன நடந்ததுடா, எப்பப் பார்த்தாலும் ஊர்க்காரனோடே மல்லுக்கு நின்னா?
கிட்டு: மல்லுக்கும் நிக்கலே, ஒண்ணுமில்லே. மில்லுலே வேலை நிறுத்தம் சேஞ்சா! – அப்புறம் போலீஸுக்கார வந்தா – ஏக கலாட்டாவாகக் கெடந்தது – போலீஸார் எல்லாரையும் தடியாலே வெரட்டி வெரட்டி அடிச்சா! நாங்க ஓடி வந்துட்டம். அண்ணாவைப் போலீஸார் புடிச்சுண்டு போயிட்டா.
சுசீலை வயிற்றிலடித்துக்கொண்டு அழ ஆரம்பிக் கிறாள்… குழந்தைகளும் கத்துகின்றன.
கோதை: நான் அப்பவே சொன்னேனே ஆலையுமாச்சு கீலையுமாச்சுன்னு – குலமா, ஜாதி ஆசாரமா…
கிட்டு: போதும்! உபதேசம் போதும்மா! முளைச்சு மூணலெ குத்தரத்துக்குள்ளே…அப்பா! இட்பத்தான் உமக்கு பூஜை! பூஜை! பூஜைன்னுதான் வீடு வாழரதே!…
சுசீலை: சீ! என்ன வார்த்தையடா! தெய்வத்தை நோகப் பண்ணாதே! எல்லாம் கலி…
கிட்டு. கலியுமாச்சு! கத்தரிக் காயுமாச்சு! கோதே, கையிலே என்ன வச்சுண்டிருக்கே! சாப்பிட்டு எவ்வளவு நேரமாச்சுத் தெரியுமா? அந்த அம்பிப் பயலே பார்க்கலாமின்னு ஹோட்டலுக்குப் போனா போலீஸ்காரப்பயல்கள்…
கோதை அவன் கையில் ஆறிக் குளிர்ந்து போன கஞ்சியைக் கொடுக்கிறாள்.
கிட்டு : இதென்ன குருணைக் கஞ்சியா – ஆறிப்போச்சே!…
மெதுவாக ஒட்டுப்பொறுக்கிக் குழந்தை பக்கத்தில் வந்து அவனையே பார்த்துக்கொண்டு நிற்கிறது. கிட்டு “என்னடீயம்மா பெரிய மனுஷியாட்டம் கையைப் பின்னாலே கட்டிண்டு? இந்தா” என்று அதன் கையில் கொடுக்கிறான்.
அதை அப்படியே வாங்கி வாயை எடுக்காமல் ‘மடக் மடக்’ என்ற சத்தத்தினிடையே, அதனுள் புர் புர் என்று மூச்சுவிட்டுக் கொண்டு தம்ளரைக் கீழே வையாமல் குடிக்கிறது.
இவை கண்டு பொறுக்காத மற்ற குழந்தைகள் அதன் மீது சாடித் தம்ளரைப் பிடுங்க முயற்சிக்கின்றன. இதற்கும் மற்றவைகளுக்கும் போராட்டம். கோதை வந்து ஒவ்வொன்றின் முதுகிலும் பொத்துப் பொத்தொன்று சாத்துகிறாள். எல்லாம் சேர்ந்துகொண்டு பிரலாபிக்கின்ற நகரத்தின் இரைச்சல்-
சுசீலை: (பெருமூச்சுடன்) அவரைப் பூஜெலெயிருந்து எழுப்புடியம்மா!
பூஜை முற்றத்திலிருந்து மணிச் சப்தமும் கற்பூர வாசனையும் வருகிறது.
எல்லோரும் அத்திசை திரும்புகின்றனர். குசேலர் கை களில் சிறு தட்டில் உள்ள கற்பூர தீபத்தைக் கிருஷ்ண பொம்மையின் முன்பு உயர்த்துகிறார். அசைந்தாடும் தீப வொளியில் பொம்மைத் தெய்வம் பார்ப்பதற்குப் பரிதாபமாக இருக்கிறது.
அதே சமயத்தில்.
மாம்பலத்தில் ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்மா பங்களாவில் ஆபீஸ் அறை.
ஸ்ரீ சர்மா காரியதரிசி தயாரித்திருக்கும் வேலை நிறுத்த அறிக்கையின் இரண்டு மூன்று நகல்களில் கையெழுத்திடுகிறார்.
சர்மா: சரிதானா! பயல்களுக்கு இருந்தாற் போலிருந்து என்ன கொழுப்பு!
காரியதரிசி : இந்தக் கலாட்டாவுக்குக் காரணமே ரியலே! அன்னிக்கி முதல்நாள் வரை ரொம்பக் கொயட்டாத் தான் இருந்தான்கள். போலீசார் ‘மெஷின்மான்’ பார்த்தசாரதி அய்யங்காரைப் பிடிச்சு வச்சிருக்கிறார்கள். அவன் எப்பவுமே கொஞ்சம் துடி. அவனிடமிருந்து வெளியானாத்தான் உண்டு. அன்னிக்குக்கூ ரொம்பப் பதவிசாத்தான் வேலை செய்து கொண்டிருந்தான்கள். திடீரென்று…
சர்மா : ஆமாம் வோய்! இந்தப் பயல்களுக்கு எப்பொ வெறி பிடிக்கும்னு யார் கண்டா? சவத்தெத்தள்ளு. தூதுகோஷ்டி, அது இதுன்னு இங்கே வந்து தொல்லெ குடுக்காமேப் பாத்துக்கும்…அவ்வளவுதான்… இன்னிக்குச் சாயங்காலமா போர்டு மீட்டிங்கு… இந்தப் பயல்கள் என்ன வேணும் என்று கேட்கிறான்களாம்…?
காரியதரிசி : அதுதான் ஒத்தருக்கும் தெரியலே… ஒரு வேளை போட்டிக் கம்பெனி ஏதும் கிண்டி விட்டிருக்கலாமோன்னு…
(பக்கத்திலிருந்த டெலிபோன் மணி அடிக்கிறது.காரிய தரிசி அதைக் கையில் எடுத்து ) ஹல்லோ! ஹல்லோ! யாரது… பார்க்கணுமா …அப்படியா! இங்கேதான் இருக்கார்கள் – இதோ… (சர்மாவிடம் டெலி போனைக் கொடுத்து) ஸ்ரீமதி சாங்கர் பிரசங்கமாம்! நீங்கள் தலைமை வகிக்கணும் என்று சீப் மெடிக்கல் ஆபீஸர் கேட்கிறார்.
சர்மா: அப்படியா (டெலிபோனை எடுத்து கொண்டு) என்ன சப்ஜெக்ட்? – தொழிலாளரும் கருத்தடையும். ரோட்டரி கிளப்பிலா? எப்பொழுது?..சரி-(டெலி போனை வைத்து விட்டு) லைப்ரரியிலே போய்க் கொஞ்சம் நோட்ஸ் தயார் பண்ணு. புள்ளி விபரமும் வேணும். நாளைக்குச் சாயங்காலம் எங்கேஜ்மென்ட் என்று ஞாபகத்தில் வைத்துக் கொள்…
(மறுபடியும் டெலிபோன் மணி…எடுத்துக் கொண்டு)
ஹல்லோ – யாரது? போலீஸ் கமிஷனர் ஆபீஸா?
நான் தான் சாமா? என்னைப் பார்க்க வேண்டுமென் கிறானா? எதற்கு?- வெறும் உருட்டலாக இருக்கும்- ரெண்டு உதை கொடுங்கள் – அவனைப் பார்க்கமுடியாது- எதற்குப் பார்க்க வேண்டும்? ராஸ்கல் என்னைப் பயமுறுத் தறானா? – திட்டமாக முடியாது – (டெலிபோனைக் கீழே வைக்கிறார்.) தடி ராஸ்கல்கள்! வசமாக அகப்பட்டுக் கொண்டு என்னிடமே குண்டு வைக்கிறான்… (எழுந்து கை களைப் பின் புறத்தில் கட்டிய வண்ணம் உலாவுகிறார். ஜன்னலண்டை சென்று நின்று தூரத்தில் ஆலைச் சிமிணி களில் இருந்து வரும் புகை மண்டலங்களைக் கவனித்த வண்ணம் யோசனையில் ஆழ்கிறார்.)
சுருள் – 5
மாலை ஆறு மணி சமயம். குசேலர் வீட்டு முன் வாசல். தெருக்கோடியில் நிற்கும் மின்சார விளக்கு தன் திறமையை எல்லாம் வைத்துக்கொண்டு குசேலர் வீட்டு வாசலில் வெளிச்சம் போடப் பார்க்கிறது. எங்கோ ஒருவன் ‘மலாய் வாலா” என்று கத்திக்கொண்டு போகிறான். கிருஷ்ணன் கோயில் வாத்திய கோஷம் பவழக்காரத் தெரு வில் தலை தெறிக்க ஓடும் மோட்டார் ஹார்ன், கதம்பக் காரன், வெற்றிலைக்காரன் குரல்கள் தம்மில் மாறுபட்டுக் குழம்புகின்றன. வானத்தில் அங்கொன்றும் இங்கொன்று மாக, திடீர் திடீரென்று மன உலகத்தில் சுடர்விடும் உண்மைகள் போல வெளிவரும் நட்சத்திரங்கள்.
வெளியில் உள்ள ஒட்டுத் திண்ணையில் குசேலர், கிட்டு, வீட்டுக்காரச் செட்டியார்; வீட்டின் தலைவாசற் படியில் ‘இருமல் யந்திரம்; அவள் பக்கத்தில் ‘பிரசவ யந்திரம்’ (குசேலர் மனைவி), அவள் மடியில் ஒட்டுப் பொறுக்கி, பக்கத்தில் கோதை – யாவரும் உட்கார்ந்திருக்கின்றனர்.
ஒட்டுப்பொறுக்கி தன் தாயாரின் முகத்தைத் தன் விசாலமான கண்களால் பார்த்து, “நானும் பள்ளிக்கூடம் போவேன்’ என்று ஜபித்துக் கொண்டிருக்கிறது.
வெளித் தெருவில் அரை டஜன் குசேலக் குழந்தைகள் புழுதியைக் கிளப்பி ரகளையடித்துக் கொண்டிருக்கின்றன.
கிட்டு: அதெல்லாம் இல்லை. நான் சொல்றதைக் கேளுங் கள். நீங்கள் அங்கே போனாத்தான் காரியம் நடக்கும். சர்மாதான் உங்களோடே படிச்சவராச்சே! ஆபத்துக்கு ஒதவமாட்டாரா? அண்ணா மேலே தப்பே இல்லை.
வீட்டுக்காரச் செட்டியார்: ஆமாஞ் சாமி! சின்ன அய்யரு சொல்றதுதான் சரின்னு என் புத்திக்குப் படுது; கிருஷ் ணன் ஒங்க கையிலே சாமி – நீங்க நெனச்சா அன்னிக்குப் பாத்திங்கள்ளே, தலை நோவுதுன்னு வந்தா, ஒங்க தொளசித் தண்ணி சாமி, ஆசுபத்திரி மருந்தெத் தோக்க அடிச்சிப்பிடிச்சு.நீங்க மஹான் – தாமரை எலெலெ தண்ணி மாதிரி இருக்கிஹ – உலகத் தையும் நீங்க கொஞ்சம் கடக்கண்ணாலே பார்த்துக்கணுமில்லா.
குசேலர் தலையைக் குனிந்த வண்ணம் கையில் இருந்த துளசிமணி மாலையை உருட்டிய வண்ணம் “கிருஷ்ண! கிருஷ்ண” என்று சொல்லிக்கொண்டு உள்ளே ஏறிட்டுப் பார்க்கிறார்.
செட்டியார்: சுவாமி!
கிட்டு: அப்பா! மத்தவாள்ளாம் எப்படியானான்னு தெரியலே அவஸ்யம் நீங்க போயிட்டுத்தான் வரணும்..
சுசீலை: கொழந்தே எப்படியானான்னு தெரியலே. காலேலெ சித்த சுருக்கப் பூஜையை முடிச்சுட்டு, வெயிலோடெ சிரமத்தைப் பாராமே போயிட்டு வந்துட்டாப் போரது…அவா ரொம்ப நல்ல மனுஷ் யான்னு சொல்லியிருக்காளே – பின்னே என்ன? குசேலர்: வினையைத் தடுக்கரவன் உள்ளே இருக்கான்… கிருஷ்ணனும் ரொம்ப நல்ல மனுஷ்யன்தான். பாத்து எத்தனெ வருஷங்களாச்சு!…நான் போய் என்ன நடக்கப் போகிறது!
கிட்டு: உங்கள் புள்ளென்னு நெனக்காமெப் போனாலும் தெய்வத்துக்குப் பொதுவா. ஒரு சகோதர ஐந்து கஷ்டப் படரதே. நம்மாலே முடிஞ்ச உதவியெ செய் வோம் என்றாவது நினையுங்கள். அண்ணாவெ அரஸ்ட் பண்ணினது தெரியும், மத்தவாள் கதி தெரியலெ, அவாளும் ஒருவேளை…
சுப்பராமய்யர் தாயார்: (இருமிக்கொண்டு) ஏண்டா அப்பா குசேலா! அம்பி சொல்றபடிதான் செஞ்சு பாரேன். எல்லாம் ஒண்ணும் வராது. கிருஷ்ணன் இருக்கான்.
கிட்டு: (தன்னைக் குறிப்பிட்டதாகப் பாவித்து) நான்தான் இருக்கிறேனே. மண்டையிலும் காலிலும் கட்டுப் போட்டுண்டு.
செட்டியார்: நான் சொல்றாப்லே கொஞ்சம் கேளுங்க சாமி! அந்தக் காலத்தில் பரமாத்மாவே ஒரு யானைக்கு ஓடி வரலியா? சுவாமி, உங்க பக்திக்குப் பங்கம் வராது.
குசேலர்: செட்டியாரே! தெய்வத்தின் இஷ்டத்தெ மாற்ற முடியுமா? – நான் அவனைத்தான் நம்பறேன் – அவனைப் போல ஆக முடியுமா – உங்கள் ஆசையும் அதன் வழியில் செல்கிறது. இந்தக் கோலத்திலே போகணும்னா, லோக சம்பிரதாயத்தைக் கூட நிறைவேற்ற எனக்குச் சக்தி ஏது!
சுசீலை: உங்களைத்தானே! அப்பப் போட்டுண்ட சட்டை யெல்லாம் அப்படியே இருக்கே! என்னமோ நெனச்சுக் கட்டி வச்சேன்… நல்லகாலத்துக் காச்சு!…
செட்டியார்: முதலாளி அய்யிரெ பாக்கணும்னா ரெண்டு எலுமிச்சம் பழமாவது வேணாமா? (எழுந்து அவசர அவசரமாகச் சந்தின் மூலையிலிருந்த வெற்றிலை பாக்குக் கடைக்கு ஓடுகிறார்…)
கிசேலர்: கிருஷ்ண! கிருஷ்ண! என்ன பாசம்!…… (வானத்தை அண்ணாந்து பார்க்கிறார்; பிறகு செட்டியார் சென்ற திசையையே நோக்குகிறார்…)
ஒட்டுப்பொறுக்கி: (மெதுவான குரலில்) அம்மா நானும் பள்ளிக்கூடம் போறனே?
குசேலர்: (சடக்கென்று எழுந்துகொண்டு) நேரமாகி விட்டதாடா?- இத்தனை காலம் மறந்திருந்தேனே பாபி/- இதோ வந்து விட்டேனடா… (என்று கூவிக் கொண்டே எல்லோரையும் தள்ளிக்கொண்டு உள்ளே ஓடுகிறார்.)
சுசீலை: (பெருமூச்சு விட்டுக்கொண்டு) வௌக்கே ஏத்தினியாடிம்மா, கோதே!
கோதை: மத்தியானமே சொன்னேனே, அம்மாமி குடுத்த எண்ணெய் ஆயிடுத்துன்னு…
இருமல் யந்திரம்: அப்பவே சொல்லப்படாதா? எம் பின்னோடவா! எண்ணெய் வேண்டாம்.. வௌக்கே எடுத்துண்டு போ! (அவள் இருமிக்கொண்டு உள்ளே செல்லுகிறாள். கோதை உடன் தொடர்கிறாள்.)
கிட்டு பல்லை நெறநெற வென்று கடித்துக்கொண்டு உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு, வெளியே பார்க்கிறான்.
எதிரிலே எலுமிச்சம் பழங்களுடன் வந்த செட்டியார் பிரவேசம்.
“பெரிய சாமி எங்கே?”
கிட்டு : பெரியசாமியா! அதுக்கும் பெரிய சாமியெத் தேடிப் போயிருக்கு!
செட்டியார்: (கோபத்துடன்) என்னன்னாலும் அய்யிரே, வயசுப் புள்ளே ஏடாகோடமா பேசாதே. பூஜைக்கி கலுப்பூரங்கூடக் கொணர்ந்திருக்கேன். இந்த ஒலகத் துலே கண்கண்ட தெய்வம் அவரு…
கிட்டு: செட்டியாரே, நீங்கள்ளாம் ஒரு ரகம்.ஒரு ஜாதி – உங்களுக்கு. இங்கே பாரும்… (சந்தில் இறங்கிக் கடைப்பக்கம் நடக்கிறான்.)
சுசீலை: கிட்டு! கிட்டு! எங்கடா போரே?
செட்டியார்: அதுபசலெ-கஸ்டத்லே தெசெ தெரியாதே தத்தளிக்குது…
கிட்டு: தொண்டையைக் கிழிக்காதெ. பூஜெ கரடி எல்லாம் முடிஞ்சி தொலஞ்சதும் வரேன்.
செட்டியாரும், ஒட்டுப்பொறுக்கியை இடுப்பில் வைத்துக் கொண்டேசுசீலையும் உள்ளே செல்லுகின்றனர்.
சுருள் – 6
பூஜை இடத்தின் பக்கத்தில் ஒரு அரிக்கன் லைட்டு. ருஷ்ண விக்ரகத்தின் முன் ஈர உடையில் குசேலர். அவர் நெற்றியில் அப்பொழுதுதான் இடப்பட்ட நாமத்தின் ஸ்ரீ சூர்ணம் இரத்தக் கரைபோல் பிரகாசிக்கிறது. பின்புறம் சுவரருகில் கோதையும் சுப்பராமய்யர் தாயாரும் கைகூப்பிய வண்ணம் நிற்கின்றனர்.
செட்டியாரும் சுசீலையும் பிரவேசம். ஒட்டுப் பொறுக்கி தாயின் இடுப்பைவிட்டு இறங்கி, பழைய மூலை யில் போய் ஒண்டி நிற்கிறது. சுவர்க்கோணம் அதனைக் கொள்ளாததால் அதன் தோள்பட்டைகள் முன்புறம் மடங்கி, கைகள் வயிற்றுன்மேல் தொங்குகின்றன.
குசேலர்: (பக்தி வெறி மீறித் தன்னை மறந்த லயத்தில் நாயகி பாவத்தில் பாடுகிறார்.)
விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்!
தெண்ணீர்பாய் வேங்கடத்(து) என்திருமாலும் போந்
தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்
வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும் இது தமக்(கு) ஓர் பெருமையே?
மின்னாகத் தெழுகின்ற மேகங்காள்! வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்பற்கு
என்னாகத் திளங்கொங்கை விரும்பித் தாம் நாள்
தோறும்
பொன்னாகம் புல்குதற்(கு) என் புரிவுடைமை செப்பு
மினே.
(எங்கோ கிராமபோன் பிளேட் சுழல ஆரம்பிக்கும் கிர்ரென்ற சப்தம் கேட்கிறது.)
சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்துச்
செங்கண்மால் சேவடிக்கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
(இடையே கிராமபோன் பிளேட், ‘வாங்க வாங்கடி லவண்டிகளா!’ என்ற பாட்டைப் பிரலாபிக்க ஆரம்பிக் கிறது.)
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்(து) ஒருநாள்
தங்குமேல் என்னாவி தங்குமென் (று) உரையீரே
கிராமபோன் ரிக்கார்டில் கீரல் விழுந்திருக்கிறது போலிருக்கிறது வாங்கடி, வாங்கடி என்று திருப்பித் திருப் பிச் சொல்லிக் கொண்டிருக்கிறது……
சுருள் – 7
மாம்பலத்தில் ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்மா பங்களாவின் வெளிக் கேட்டு. அதன் பக்கத்தில் ஒரு சிறிய சுழல் கேட்டு.
இரண்டின் பக்கத்திலும் இரண்டு போர்டுகள் தொங்குகின்றன.
ஒன்று: வேலை காலி கிடையாது.
மற்றொன்று: நமது மில் தொழிலாளிகள், சொந்தக் காரர்கள் தவிர, இதரர்கள் யாவரும் உதவி கோரினால் என்னை நேரில் காணலாம்.
காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 6 மணி முதல் 7 மணி வரை. ஸ்ரீ கிருஷ்ண சாமி சர்மா. பிளேட் டானிக் சர்மா மில் டைரக்டர் போர்ட் பிரஸிடெண்ட்
(காட்சிகரைந்து கலக்கிறது)
ஸ்ரீகிருஷ்ணசாமி சர்மா. தமது மாம்பல பங்களாவில் ஆபீஸ் அறையில் உட்கார்ந்திருக்கிறார். பக்கத்தில் ஆலை யின் போர்டு டைரக்டர்களுள் ஒருவரான அவர் நண்பர் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்.
சர்மா மேஜைமீது இரண்டு கைகளை வைத்து, விரல் களில் ‘பேப்பர் கட்டரைச்’ சுழற்றியபடி பக்கத்திலிருக்கும் நண்பரிடம் ரொம்பத் தீவிரமாகப் பேசிக்கொண்டு இரு கிறார். டைரக்டர் விசுவனாதய்யர் தமது தலை மயிரைக் கோதிக்கொண்டே தலையை அசைத்துக் கொண்டு இருக் கிறார். இருவரும் அப்பொழுது தான் காபி சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அதற்குச் சற்று நேரத் திற்கு முன்பு தான் குளித்ததால் அவருக்குத் தலைமயிர் காயவில்லை.
ஒரு மலையாளி சோக்ரா வெள்ளித் தாம்பாளத்தி லிருந்த துளிர் வெற்றிலையைக் கிழித்து நாஸுக்காக மடித்துக் கொண்டிருக்கிறான்.
காரியதரிசி, பக்கத்துமேஜையில் ஹாவ்லக் எல்லிஸ், சாங்கர், பிராய்டு இவர்கள் கருத்தடை, தொழிலாளர் பிரச்னை பற்றி எழுதியுள்ள புத்தகங்களை வரிசையாக அடுக்கி, அதில் குறிப்பிட்ட பகுதிகளை வாசிக்க கடிதத் துண்டுகளைப் பக்கங்களுக்கிடையில் குறிப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்.
உயரே ஒரு பெரிய மின்சார விசிறி மெதுவாகச் சுழலுகிறது.
கிருஷ்ணசாமி சர்மா : அதெல்லாம் ஒன்றுமில்லை!
நமக்கு என்ன வேணுமென்று நமக்கே தெரியாது உள்ள கஷ்டம் என்னன்னா இத்தனை காலமா ஒரே ‘ரட்’லே (Rut-பழைய தேய்ந்த பாதை )போய்ப் போய் நம்ம திறமையே நாசமாய்ப் போச்சு.நமக்கு ‘அட்ஜஸ் டிங் கபாஸிடி’ போயிட்டது. சனாதன தர்மம் இன்னா அழுகவே அழுகாத கத்திரிக்காய் இன்னு நினைக்க ஆரம்பிச்சதிலே தான் இந்த வினை பிடிச்சது!- ஒன்று மில்லே – அந்தக் காலத்திலேதான் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ இல்லாமல், புடிச்சு வச்ச பொம்மை மாதிரியா இருந்து வந்தான்கள், இப்பொ எதெடுத்தாலும் பயம்… சின்ன மாறுதல் என்றால் போதும். அதெச் செய்யறத்துக் குப் பதிலா ‘கல்ச்சர்’டா இங்கறது, மதம் இங்கறது, ஏன் பேசமாட்டான் அபேதவாதத்தைப் பற்றி – ஒரு சின்ன விஷயம்…
டைரக்டர் நண்பர்: என்ன சொல்லுகிறீர்கள்? காலம்பர நிலைமை எப்படி என்று கேட்றீர்களா? ஒன்றும் தெரியாமே வேதாந்தம் பேசினா எப்ப விடியும்?
சர்மா: உம்மைப்போல நாலு பயந்தாங்குள்ளி டைரக்டர் இருந்தா ஏன் ‘ஸ்டிரைக்’ பண்ணமாட்டான்-பயல்கள் எல்லாம்- அரஸ்ட் ஆனவன்கள் தவிர எல்லாரும்- ரோல்காலுக்கு வந்தானாம். நிலைமையும் காமா (calm) இருந்ததாம், ஒர்க் ஆரம்பிக்கட்டுமான்னான்- நான் தைரியமா உத்தரவு போட்டேன்-நேத்து ஏற் பட்ட லாஸுக்கு ஓவர்டயம் போடச் சொன்னேன்! விஷயம் அதிலே இன்னதின்னும் புரியலே. இது தொழிலாளி வேலைமானமில்லை. வேறே என்னமோ நடந்திருக்கிறது.
காரியதரிசி இன்னிக்குச் சாயங்காலம் பிரசங்கத்துக்கு நோட்ஸ், ரெபரன்ஸ்கள் எல்லாம் அதோ அங்கே வச்சிருக்கிறேன்…நேத்து சாங்கர் பிரசங்கத்துக்கு எதிர்ப் பிரசாரம் நடந்திருக்கு- பிரசங்கத்திலே முக்கியமான பகுதிகளை மார்க் பண்ணியிருக்கிறேன்.
சர்மா: (கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு புருவத்தை உயர்த்தி பத்திரிகையை எட்டிப் பார்க் கிறார்) நேத்திக்கு சாயங்காலமே நோட் பண்ணேன். சனாதன தர்மம் போய்விடும் – சாவித்திரி தமயந்திவகை யராவில் ஜனித்த ஸ்திரீ ரத்தினங்கள்!- எதற்கெடுத் தாலும் ‘போய்விடும், போய்விடும்!’ அது அவ்வளவு பலவீனமானதாக இருந்தால் ஏன் குத்துயிரும் குலை யுயிருமாகக் கிடக்க வேண்டும்? அவ்வளவு நோஞ்சான் என்றால் போகட்டுமே-புதுசா ஒண்ணு நம்ம மோட்டார் மாதிரி ‘வார்ப்பு இரும்பிலே’ செய்கிறது… (உரத்துச் சிரிக்கிறார்) நல்லதுக்கோ கெட்டதுக்கோ ஒரு புது தினுசான பழக்கம் வந்து கொண்டிருக்கிறது. வந்து விட்டது. நீ வேண்டாம் என்றால் போய் விடுமா? நம்ம தேசத்துக்கு ‘இன்டஸ்ட்ரியலிஸேஷன் வேண்டாம் என்று யாரையும் சொல்லச் சொல்லு பார்க்கலாம்! சாவித்திரியும் தமயந்தியும் நாம் பண்ண கற்பனைதானே? புதுசா ஒண்ணெப் பண்ணி வைக்கி றது. நான் சொல்றது என்னன்னா ‘அட்ஜஸ்ட்மென்ட் வேணும்! கருத்தடையிலே என்ன பிரமாதமான பாபமோ தெரியலே…மூச்சு விடரப்போ மூவாயிரம் கிருமி சாகிறது. முட்டாள் தனத்தாலே மூணு லட்சம் ‘அபார்ஷன்’ வரது… அந்தக் காலத்திலே சமணன்கள் உயிர்க்கொலை கூடாதுன்னு உறியிலே உட்கார்ந்து கொண்டிருந்தான்கள்… இப்பொ அந்த ரகம் இருந்தா கீழ்ப்பாக்கத்திலேகூட இடம் போதாது… நானென்ன மதம் வேண்டாம், கட்டுப்பாடு வேண்டாம் என்கி றேனா? மதம் அவசியம்: முக்கியம். இந்தச் சமூகத்திற்கு அது ரொம்ப அவசியம். ஞாபகம் வரது. மிந்தி என் கிளாஸ்மேட் ஒருத்தன், நல்ல ஆஸ்திகன்; வாலிபன். காப்பிஸ்ட் வேலை பார்த்துக் கொண்டு இருந்தான். நார்மல் மனுஷ்யன்னா அவன்தான். அவன்னா நமக்கு அத்யந்த பிரீதி. மாடல் ஹிந்துன்னா அவன்தான். அவனைப்போல் இருக்கவேண்டும். ஸ்டிரிக்னைன் (பாஷாணம்) இருக்கு, ஸ்மால்டோஸ் கொடுத்தா வியாதியைக் குணப்படுத்தறது. டோஸ் ஜாஸ்தியாச் சுன்னா…(நிமிர்ந்து பார்க்கிறார்.)
(அறையின் ஒரு வாசல் வழியாகக் குசேலர் பிர வேசிக்கிறார். மேலே ஒரு துண்டு, இடையில் காவி யேறிய பஞ்சகச்சமிட்டுக் கட்டிய வேஷ்டி, நெற்றியில் பட்டை நாமம். பிரவேசித்துத் தட்டுக் கெட்டாட் போல் இருவரையும் மாறிமாறிப் பார்த்து விழிக்கிறார். கைவிரல்களில் இரண்டு எலுமிச்சம் பழங்கள் திண்டாடுகின் றன. முகமெல்லாம் வேர்க்கிறது.)
சர்மா: (திடீரென்று அடையாளம் கண்டுகொண்டு) – என்னடா குசேலனா! இதென்ன வேஷம்? வா இப்படி! – சுந்தரம், அந்த நாற்காலியே எடுத்துப் போடு- (காரியதரிசி சுந்தரம் நாற்காலியை எடுத்துப் போடு கிறார். சர்மா உச்ச ஸ்தாயியில் பேசுகிறார்.) என்ன விசேஷம்? ரொம்ப நாளாச்சே! இட்போ என்ன ரிட்டயர் ஆயிட்டயா? உட்காரு-என்ன பேந்தப் பேந்த முழிக்கறே? டேய் மாதவன் ஒரு கூல்டிரிங்க் கொண்டாரச் சொல்லு – (குசேலர் எலுமிச்சம் பழங்களை நீட்டுகிறார்) – சுந்தரம், அதை ‘லோஷன்’லே போட்டு இங்கே வாங்கு-உட்காரு- என்ன விசேஷம்?
குசேலர்: வெறுமனே தங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று தான் வந்தேன்.
சர்மா: என்ன ‘தாங்கள்’ ‘நீங்கள்’ வக்கணையெல்லாம்! ஏன் உடம்பை இப்படி வச்சிருக்கே? இடுப்பிலே யெல்லாம் சொறி! ஆஸ்பத்திரிக்குப் போகப்படாது?…
குசேலர்: நான் அப்பவே கிருஷ்ணன் பணியிலே இறங்கி விட்டேன் – வேலை ஒத்துக்கொள்ளலே…
சர்மா: அட கர்மமே! உன்னை நார்மல் மனுஷ்யன் என் றல்லவா இப்போதான் சொல்லிக் கொண்டிருந்தேன்! அப்புறம்…?
குசேலர்: உஞ்சவிருத்தியில் இறங்கினேன்!
சர்மா: அப்படி என்ன விரக்தி ஏற்பட்டது! அப்போ ஒன் குழந்தை மனைவியெல்லாம்…ஏதும்?…
குசேலர்: எல்லோரும் சௌக்கியமாகத்தான் இருக்கிறார்கள்!
சர்மா: பொறுப்பு எத்தனை?
குசேலர்: இருபத்தியேழு குழந்தைகள்!
சர்மா: (திடுக்கிட்டு நாற்காலியில் சாய்ந்து கொண்டு) சுந்தரம்! ‘ஸ்மெல்லிங் சால்டே’ எடு! அட தெய்வமே! – அப்புறம்?
குசேலர்: (விசேஷ அர்த்தம் கொடாமல் யதார்த்தமாக) நாலு மாசமாக குளிக்கலெ
சர்மா: நீர் உஞ்சவிருத்தி எடுக்கின்றீராக்கும் – வயசான பிள்ளைகள் இருக்குமே…அவர்களால்…
குசேலர்: கொஞ்சப் பேர் உங்க ஆலையில்தான் இருக் கிறார்கள் – சிலர் ஹோட்டலில் வேலை பார்க்கிறார்கள் – அவா வரும்படி அவா செலவுக்கே போறல்லே.
சர்மா: நம்ம மில்லிலா? யாரது?…
குசேலர்: அதற்காகத்தான் நான் வந்தேன்…நேத்து என்னமோ வேலை நிறுத்தம் நடந்துதாமே! மூத்த பையனை போலீஸார் புடிச்சுண்டாளாம்- வீட்டிலே சொன்னாத் தேவலைன்னா – அதான் உங்களிடம் தங்களை…
சர்மா: அப்படியா சமாசாரம் – நேத்து மெஷின்மான் என்னைப் பார்க்கணும்னான்! பார்த்தசாரத்தானே உங்க புள்ளை பேர்…… அட பாவமே! சுந்தரம், நீ நேரா இந்த லெட்டரைக் கொண்டுபோய் கமிஷனரிடம் கொடு… அவனைக் கார்லே என் பொறுப்பிலே கொண்டா சீக்கிரம்…
சுருக்கமாக ஒரு கடிதம் வரைந்து காரியதரிசி வசம் கொடுத்தனுப்புகிறார். பிறகு டெலி போனை எடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் அனுப்புகிறார்…)
டைரக்டர் நண்பர்: (குசேலரைப் பார்த்து) எங்கே தாமசம்?
குசேலர்: டவுன் பவழக்காரத் தெருவிலே, கிருஷ்ணன் கோயிலுக்கு எதிராக நான்கைந்து வீடுகளுக்கப்புறம் வலது பக்கத்தில் ஒரு சந்து போகிறதல்லவா-
டைரக்டர் நண்பர் : எனக்குத் தெரியாது; அதிலேயா? சர்மா : அங்கே குடியிருந்தா வாடகை யார் குடுக்குறா? குசேலர்: என்னமோ கிருஷ்ண பரமாத்மா அருள் தான்! செட்டியார்……
சர்மா: (குத்தலாக) தங்களுக்கு இந்த அதீதமான நிலை எப்பொழுது ஏற்பட்டது?
குசேலர்: (விகற்பம் நினையாமல்) உங்கள் புண்ணியந்தான், எனக்குக் கண் திறந்தது…
சர்மா: என்ன? நானா?…
குசேலர்: அப்பொழுது நாம் சமஸ்கிருத பாடசாலையில் படிக்கும்பொழுது, நீங்கள் வாத்தியார் கேள்விக்குப் பதில் சொல்லவில்லையா?… அது என் மனத்தில் வேரூன்றிப் பழுத்து…
சர்மா : பழுக்கறதெல்லாம் இருக்கட்டும் – நான் என்ன சொன்னேன்? எனக்கு ஞாபகமில்லையே……
குசேலர்: ‘எல்லாம் நானே’ என்று தொடங்கும் பகவத் கீதை சுலோகம் சொல்லவில்லையா, அன்னிக்கு வாத்தியார் கேள்வி கேட்டபொழுது? தாங்கள் தான் என் தெய்வம் கண்ணன்; எனக்குக் கண் திறந்துவிட்ட ஞானாசிரியன்….
(குருபக்திப் பரவசமாக சர்மாவைப் பார்க்கிறார்.)
சர்மா : அந்தக் காலத்திலே வாத்தியார் அடிக்குப் பயந்து உளறினதை யெல்லாம் உருப்படியா நினைக்கலாமா? அதெல்லாம் இருக்கட்டும். தெய்வ பக்தி வேண்டாம் என்று சொல்லலே…நான் என்ன கோயிலுக்குப் போக வில்லையா? அதெல்லாம் ஒரு எல்லையிலே வைத்துக் கொள்ளணும். இந்த ‘அட்ஜஸ்ட்மென்ட்’ இல்லாட்டா கீழ்ப்பாக்கந்தான்-
குசேலர்: எனக்குத் தாங்கள் சொல்றது புரியலையே.
டைரக்டர் நண்பர்: எதற்காகப் புரியணும்?
சர்மா: (உரத்த குரலில்) குசேலரே! ஏதோ அந்தக் காலத்தில் தெரியாமல் தப்புப் பண்ணிவிட்டேன். மன்னித்துக் கொள்ளும்.
(எதற்காக எதை மன்னிக்க வேண்டும் என்பதை யறியாமல் குசேலர் விழிக்கிறார்.)
நான் அன்று செய்த கெடுதலை நிவர்த்தித்து ஈடு பண்ண ஒரு வழி பார்க்கிறேன். உமக்கு எத்தனை குழந்தைகள் என்று சொன்னீர்? இருபத்தியேழா? சரி. இன்னிக்குச் சாயங்காலம் ஒரு கூட்டம் நடக்கப் போறது. அதிலே நான் தலைமை வகித்து பேசப் போறேன். அங்கே நீர் குடும்ப சகிதம் வரணும். சங்கோஜமா இருந்தா, உங்களை போட்டோப் படம் எடுத்துடறென். அது ரொம்ப அவசியம்; முடியுமா?
குசேலர்: சங்கோஜம் ஒண்ணுமில்லே, பூஜை கெட்டுப் போகும். (பயம் மிகுதியான குரலில் பேசுகிறார்.)
டைரக்டர் விசுவநாதய்யர் : என்னாப்பா பெரி ‘ஸ்டன்ட்’ பண்ரே! பெண் பிள்ளைகளே இழுத்துக் கொண்டு போகாதே வெள்ளைக்காரக் கூட்டத்துக் குள்ளே- ரொம்பக் கேவலம்- அந்தப் பசங்களும் ஒத்துக்கணுமே.
சர்மா: குசேலன் குடும்பந்தான் கருத்தடைக்கு (Llving argument) பிரத்யட்சப் பிரமாணமான ஒரு பதில் ஆச்சே! எதுக்கும் அந்தப் பசங்களைக் கேக்கறது நல்லதுதான். (டெலிபோனை எடுத்துக் கொண்டு ரோட்டரி கிளப்பைக் கூப்பிடுகிறார்.)
சர்மா.: ஆமாம்! சர்மா ! ஒரு நிமிஷம்; இருபத்தேழு குழந்தைகளைப் பெற்ற தம்பதிகள் இருக்கிறார்கள்- குடும்பம் வறுமையிலே அழிகிறது. கூட்டத்துக்குக் கொண்டு வரட்டுமா? அப்படியா? படம் கொண்டு வந் தால் போதுமா?- சரி- அப்புறம்.. தென்னிந்தியாவில் சுற்றுப் பிரயாணம் செய்யவா? நானாச்சு— (போனைக் கீழே வைத்து விட்டு) குசேலரே! வெள்ளைக்காரன் கூட்டத்திற்குப் படம் மட்டும் போதுமாம்! ஆனால்
தென்னிந்தியாவிலே ஒருத்தர் பிரசங்கம் செய்யச் சுற்றுப்பிரயாணம் செய்கிறார்- அந்த அம்மையார் பேர் சாங்கர், வெள்ளைக்காரி. உங்கள் குடும்பமும் கூடவந்தால் தேவலை என்கிறார் – என்ன சொல்கிறீர்! உமக்கு க்ஷேத்திர தரிசனமும் செய்து வைக்கச் சொல்லுகிறேன் – ஆசார அனுஷ்டானங்கன் கெடாமல் பார்த்துக் கொள்ளுகிறேன் – கூடப் போக வேண்டியதுதான் – கடைசியிலே வேணும் என்றால் ஏதாவது கொஞ்சம் பண உதவியும் நான் செய்கிறேன் -என்ன-சொல்லுகிறீர்?
குசேலர்: என் கண்ணன்!
சர்மா : உமது கண்ணன் எல்லா இடத்திலும் இருக்கி கிறார் என்று நான் அப்பொழுதுதான் என்னமோ சொல்லி நான் வைத்தேன் என்கிறீரே-உம் விலாசத் தைச் சொல்லும்- பசங்கள் எங்கேயிருக்கிறார்கள்? மாதவா, லாரியை எடுத்துக்கொண்டு போய் எல்லோ ரையும் அய்யர் கூப்பிட்டு வரச் சொன்னார் என்று அழைத்து வா!
(குசேலர் பதில் பேசவில்லை! மௌனம் சம்மதம் என்று நிச்சயிக்கப்படுகிறது.)
குசேலரே, தெய்வத்திலே அபார நம்பிக்கை இருக்கிறது நல்லதுதான்! தெய்வம் கொடுக்கிறது உம் கைக்காவது எட்டவேண்டாமா? பட்டணத்துக்கு வந்து குடியிருக்கிறீரே?
(அச்சமயம் ஒரு பரிசாரகன் ஐஸில் குளிர வைத்த மோர் கொண்டு வருகிறான்- சர்மா அதைக் குசேலரிடம் கொடுக்கும்படி சமிக்ஞை செய்கிறார்.)
சர்மா: என்ன வாங்கிக்கொள்ளாமல் முழிக்கிறீர் – அவனும்….
குசேலர்: (அசடு வழியும் முகத்துடன்) பூஜை பண்ணின பின்பு நைவேதனந்தான்…
சர்மா: கிருஷ்ணா! அதெ அப்படியே அந்த மேஜைலே வச்சுட்டு – நம்ம ஆத்துலே கிருஷ்ண விக்ரகம் இருக்கோ (யோசிக்கிறார்)- அன்னிக்கு குஞ்சத்துக்கு ஒரு செல்லூலாயிட் பொம்மை வாங்கி வந்தேனே, அதை எடுத்துக் கொண்டுவா.
(பரிசாரகன் போகிறான். சற்று நேரத்திற்குள் உள்ளே ஏக ரகளை ; ஒரு குழந்தை – அதுதான் சர்மாவின்பேத்தி குஞ்சம்-வீரிட்டுக் கத்துகிறது. முன்னே பரிசாரகன் செல்லூலாயிட் கிருஷ்ண பொம்மையுடன் வருகிறான் – பின் பக்கம் அவனைக்கிள்ளி அழுது வீரிட்டுக் கொண்டு குழந்தை தொடர்கிறது-)
சர்மா: (குழந்தையை எட்டி எடுத்துக்கொண்டு) அசடாட் டமா! நம்ம பொம்மையை யார் என்ன செய்யப்போரா? இதோ பார்! அந்த மாமா வச்சு வெளெயாடறதே –
பொம்மை கிழக்குத் திசை பார்த்து வைக்கப் படுகிறது. குசேலர், சர்மா என்ன செய்துவிடு வாரோ என்ற பயத்தால் மானஸீகமாகப் பூஜை செய்கிறார்—
சர்மா: உரக்கப் பாடும் – குழந்தையாவது கொஞ்சம்!…
(குசேலர் குரலெடுக்கிறார்-மேஜையிலிருந்த மோர் தம்ளரை அதன் முன் வைக்க எடுக்கிறார். அவர் இதுவரை அனுபவித்தறியாத எதிர்பாராத அளவு குளிர்ச்சியாக இருப்பது கண்டு தம்ளரைக் கீழே நழுவ விடுகிறார்-)
சர்மா : அட கஷ்ட காலமே!
(குழந்தை சர்மா கையிலிருந்து நழுவிப் பொம் மையை எடுத்துக் கொண்டு ஓடிவிடுகிறது-)
அட்டா-அடியே…
சுருள் – 8
(வெளியே மோட்டார் வந்து நிற்கிற சப்தம். உள்ளே சுந்தரமும் மெஷின்மான் பார்த்தசாரதி அய்யங்காரும் வருகிறார்கள்.)
சர்மா: அப்பா வந்து சேர்ந்தீர்களா? உங்கப்பா உனக்கு மின்னையே இங்கே வத்திருக்கிறாரடா! இதெ நெனச் சுத்தான் நேற்று டெலிபோன் பண்ணச்சொன்னையா?
பார்த்தசாரதி: (தகப்பனார் இருப்பதைக் கண்டு திடுக் கிட்டு விழித்து) இங்கே ஏன் வந்தே? இவாளே எப்படித் தெரியும்?
சர்மா: இதென்னடா அசட்டுக் கேள்வி? இவரை எனக்குத் தெரியும் என்ற நினைப்பிலேதானே டெலிபோன் பண்ணச் சொன்னே!
பார்த்தசாரதி: அதெல்லாம் ஒண்ணுமில்லையே -ஆபீஸ் காரியமா-
சர்மா : ஆபீஸ் காரியமாகத்தான் – அதென்னடா பிரமாதம்! நீ அப்ரூவராக மாறு, லேசாகத் தப்ப வைக்கிறேன். அதென்னடா உங்களுக்கு நெனச்ச நெனச்சாப் பிலே பைத்தியம்! – நேத்தென்ன வேலை நிறுத்தம்?
பார்த்தசாரதி: எல்லாம் உங்க இஷ்டத்தின் பேரிலே தானே செஞ்சோம்! பின்னே ஏன் போலீஸ்காரரெ வீட்டு அடிக்கச் சொன்னீர்கள்!
சர்மா: உனக்கென்னடா பைத்தியமா?
பார்த்தசாரதி: முதல்லெ நாங்கள் உங்களுக்குக்குத்தான் அப்படி என்று நெனச்சோம்! சின்ன எஜமான் கையெழுத்துப் போட்டு நிஜந்தான் என்று எழுதிக் கொடுத்திருக்கிறாரே-
சர்மா: என்னடா சமாச்சாரம்? விஷயமே புரியலையே! முதல்லே இருந்து சொல்லு-
பார்த்தசாரதி: சின்ன எஜமான், வேலை நிறுத்தத்தே சினிமா எடுக்கணும் என்று நீங்கள் அபிப்பிராயப் பட்டதாயும், அந்த மாதிரி ‘இண்டர் வெல்’லுக்கு அரை மணி நேரத்துக்கு முந்தி ரகளை பண்ணிக் கொண்டு வரவேண்டும் என்றும் சொன்னார். முதல்லே நாங்கள் நம்பலே-அப்புறம் அவர் கையெழுத்துப் போட்டு நான் இருக்கிறேன் என்று சொன்னார்- என்னிடந்தான் அவர் எழுதிக் கொடுத்த சீட்டு இருக்கிறதே! ஆனாலும் போலீஸ்காரரை விட்டு இப்படியா அடிக்கச் சொல்லுவது? நாங்க முதல்லே வேஷம் என்று நெனச்சோம்; வினையாக முடிஞ்சுது…
சர்மா: அடே! மாதவா! ராமு இருக்கிறானா பார்! இருந்தா இப்படி வரச் சொல்லு!-எப்போப் பார்த் தாலும் ஒண்ணில்லாட்டா ஒண்ணு ரகளை பண்ணிண்டே இருக்கான்-இந்த ஒரு பயலை வச்சுப் பார்த்துக்க முடியலே- என்ன குசேலரே! உமக்கு எப்படி இந்த இருபத்தேழு குழந்தைகளையும்மானேஜ் பண்ண முடியறது?
குசேலர்: (அதீத நிலையில் கண்களை மூடியபடி) என் கண்ணன் இருக்கிறான்.
இருபத்தைந்து வயதுடைய ஒரு வாலிபன் உள்ளே வருகிறான்- பார்த்தசாரதி நிற் பதைக் கண்டு திடுக்கிட்டு நிற்கிறான்.)
சர்மா: (என்னடா மில்லிலே போய் ரகளை பண்ணி வச்சுட்டு வந்திருக்கே? உன் கையிலே சினிமாக் காமிரா வாங்கிக் கொடுத்தது பிசகாப் போச்சு. குஞ்சத்திற்கும் உனக்கும் கொஞ்சமேனும் வித்தியாசமில்லையே! வயதுதான் ஆகிறது…
டைரக்டர் நண்பர்: என்னவோ இவ்வளவோ லேசா பாவிக்கிறீரே? இவன் பண்ணி வச்சிருக்கற சிக்கலை லேசிலே அவிழ்க்க முடியாதே! காமிரா இருந்தா- பின்னெ என்னை ஏன் தஞ்சாவூரிலே இருந்து ராத்திரி யோடெ ராத்திரியா அலக்கழிச்சீர்? உம். உம்முடைய மகனோடே சீராடறதெப் பாக்கவா…
சர்மா: பொடுபொடுன்னு பொறிக்காதேயும். ஒரு ஒட்பு விசாரணை நடத்தி அப்படியே ஹஷப் பண்ணிட் டாப்போறது – ஓவர்டைம் போட்டமே அதெத் தள்ளி விட்டால் லேபர்ஸே திருப்தி செய்த மாதிரி ஆகிறது
டைரக்டர் நண்பர்: அதெல்லாம் கூடாது. ஓவர்டைம் ஒர்க் செய்துதான் ஆகணும்! இல்லாவிட்டால் டைரக்டர் போர்டு மீட்டிங் கூட்டி சந்தி சிரிக்க வைப்பேன்.
சர்மா: சரிதான் காணும்,ஓவர்டைம் சார்ஜ் நான் கொடுத் துட்டுப் போறேன்!-ராமு! படந்தான் எடுத்தாயே, அது என்ன ஆச்சு!
ராமு: (இலகுவில் தப்பித்துக் கொண்டதனால் உள்ளூர மகிழ்ச்சியுடன்) இல்லேப்பா! பிசாசும் பூதமும் மாதிரி அவ்வளவும் கறுப்புக் கறுப்பா இருக்கு..
சர்மா: பேஷ்! தமிழ் டாக்கிதான் போ!
(ராமு வெளியே போக முயலுகிறான். அதே சமயத்தில் வெளியில் ஒரு லாரி குசேலக் குடும் பத்தை இறக்குகிறது. மாதவனுடன் கோஷ்டி உள்ளே பிரவேசம்.)
சர்மா: ராமு! இதோ பார், இவாள் எல்லாம் வந்திருக் காளே, எல்லாரையும் வரிசையா உட்காத்தி வைச்சு, இந்தா இவரையும் சேர்த்துக்கோ, ஒரு குரூப் போட்டோ எடு. சாயங்காலம் பிரிண்டு ரெடியாகணும். சுசீலை இடுப்பிலிருக்கும் ஒட்டுப்பொறுக்கி: அம்மா, இது தானா பள்ளிக்கொடம்?
சுசீலை: (மெதுவாக) சித்தெ சும்மா வாயே வச்சுண்டு இருடீ அம்மா!
கோதை: (தாயாரைப் பார்த்துக்கொண்டு) படம் இடுத்தா ஆயூஸு கட்டையாப் போகும் என்று சொல்ராளே! சர்மா: என்னைப் போன இருபது வருஷங்களாகப் போட்டோ எடுத்துக் கொண்டுதான் வருகிறார்கள்! படம் எடுக்கிறதிலே உங்க கலி தீர்ந்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள்…
குசேலர் (சுசீலையைப் பார்த்து) அடியே விக்ரகத்தை எடுத்துண்டு வந்தியோ?
கோதை: செட்டியாரும் அந்தப் பாட்டியும் சேர்ந்து அதெ அங்கேவிட்டு எடுக்கப்படாதுன்னுட்டா…
இரட்டைக் குழந்தைகளில் ஒன்று: இல்லே அப்பா, அவா எல்லாம் வெளியே வந்தா. நான் மெதுவாகத் தூக் கினேன்! இது மட்டும் கையோடே வந்து விட்டது அப்பா – (கிருஷ்ண விக்ரகத்தின் தலையை அவரிடம் கொடுக்கிறது.)
குசேலர்: (பேய் வெறியுடன்) என்னடா செஞ்சே! (கைகளை அடிக்க ஓங்குகிறார்)
சர்மா: அடே, மாதவா! குஞ்சம் தூங்கி யிருப்பா. அந்த செல்லூலாயிட் கிருஷ்ண பொம்மையை இவரிடம் கொண்டுவந்து கொடு. ஓய் குசேலரே, இதற்கு அபி ஷேகம் பண்ணினா ஒன்றும் வராது! உமக்கு வேணும்னா நல்ல வெண்கலத்திலே ஒன்று செய்து தரேன். இதைக் கொஞ்ச நாளைக்கு வைத்துக் கொள்ளும்! ஓய் இன்னொரு யோசனை. நீர் ஏன் திருவனந்தபுரத்திற்கே போய்க் குடியேறி விட லாகாது? வேலை பார்க்கிற பிள்ளைகள் இங்கே இருந்து பிழைச்சுக்கட்டும் நீங்கள் எல்லாரும் பிரயாணம் போய்விட்டு வந்த பிறகுதான் – உமக்கு அங்கே வீடு ஒன்று சின்னதாய் வாங்கித் தரு கிறேன்- உம்ம காலத்தெ சௌக்கியமா அங்கேயே கழியுமே!
ஒட்டுப் பொறுக்கி: அம்மா நான் பள்ளிக்கொடம் போட்டுமா?
சர்மா: அடெடே! இதென்னது இவ்வளவு சின்ன வயசிலே!
கோதை: அதெல்லாம் ஒண்ணிமில்லே! நேத்திக்கு முதல் என்னமோ இப்படியே பாடிண்டு இருக்கு! தெய்வக் குத்தமோ என்னவோ! அதுக்கேத்தாப்பிலே…
கிட்டு: கொஞ்சம் சும்மாருடியம்மா – மகா கண்டுட்ட மாதிரிதான்!
சுசீலை: (மெதுவாக) அவாளுக்குப் பூஜெ வேளே ஆயிட்டதே!
சர்மா. மாதவா! இவாளெ எல்லாம் அழைச்சுண்டு போ. சுந்தரம், அந்த நோட்ஸே எங்கே வச்சே?
– பக்த குசேலா (கரியுக மாடல்), முதல் பதிப்பு: 1941, நவயுகப் பிரசுராலயம் லிமிடெட், மதராஸ்.
![]() |
புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
எஸ்.மதுரகவி
June 6, 2026
ஜின்னின் மணம்
நீல பத்மநாபன்
June 6, 2026
சட்டென்று மாறும் மனநிலை
முத்தமிழ்ப்பித்தன்
June 6, 2026
