நாய் வால்
கதையாசிரியர்: நீர்வை பொன்னையன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 15, 2026
பார்வையிட்டோர்: 77
(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சந்தை கூடிவிட்டது.
வியாபாரம் விறுவிறுப்பாய் நடந்து கொண்டிருக்கிறது.
நான் சந்தைக்கு வர நேரம் போச்சு. அவசர அவசரமாய் தலையிலிருந்த சுமையை இறக்குகின்றேன்.
தாய் தன்குழந்தையை தடுக்குப்பாயில் பக்குவமாய் வளர்த்துவது போல் விரித்திருந்த சாக்கில் பயற்றங்காய்ப் பிடிகளை சீராக அடுக்கி வைக்கின்றேன்.
ஒன்றரை முழத்துக்குமேல் நீளமாய் பயற்றங்காய்கள்.
செயற்கை உரம் பாவிக்காமல் இயற்கைப்பசளையில் விளைந்த பயற்றங் காய்கள். குரங்குவால் இனம்.
தலையில் கட்டியிருந்த துவாய்த் துண் டைக் கழற்றி முகத்து வியர்வையைத் துடைக்கின்றேன்.
ஆனால் என்ரை மனம்தான் ஆறுதல் அடையவில்லை.
முதல்நாள் இரவு அப்புவுக்கும் எனக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம். என்ரை வேலை சம்பந்தமாகத்தான் சர்ச்சை.
நான் சரியான முறையில வேலை தேடாமல் பொறுப்பில்லாமல் திரியிறனெண்டு அவர் என்னை படு மோசமாய் திட்டினார்.
நானும் எனது நிலைப்பாட்டைத் தெளிவாய் சொன்னன். அவர் அதைச் சரியாய் புரிந்துகொள்ளேல்லை. பொறுக்கமுடியாத கட்டத்திலை வாய்தவறி கடுமையான வார்த்தைகளை விடவேண்டி வந்திட்டுது. நிலைமை கட்டுமீறிச்செல்வதை அவதானிச்ச ஆச்சி தலையிட்டு என்னைக் கண்டிச்சு எங்களை சமாதானப் படுத்தினா.
அப்புவை நான் கடுமையான வார்த்தைகளால் எதிர்த்துப்பேசினதை நினைச்சுப்பார்க்க என்ரை மனசு சரியாய் வருத்தப்படுகுது. இரவு முழுவதும் பெரும் மனவேதனையோட புரண்டு, புரண்டு படுத்தன். நித்திரை வந்தால்தானே?.
விடியப்புறமாய் என்னையறியாமல் கண்ணயர்ந்தன். கொஞ்ச நேரத்திலை திடுக்கிட்டு விடிஞ்சதும் விடியாததுமாய் நான் நாயோட்டத்திலை தோட்டத்துக்குப் போறன்.
நல்லா விடிஞ்சு போச்சு. அவசர அவசரமாய் பயற்றங்காய்களை ஆஞ்சு புடியளாய்க் கட்டிறன்.
நல்லாய் நேரம் போட்டுது. ஓட்டமும் நடையுமாய் தலையில் சுமையுடன். கந்தையை வந்தடைஞ்சன்.
சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாய் நடக்குது. எனக்கு முன்னால் விரித்திருந்த சாக்கில் பயிற்றங்காய்ப் பிடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக் கின்றன.
சப்பாத்துக்காலொன்று பயிற்றங்காய்ப் பிடியை ஒரு பக்கமாய்த் தள்ளுகிறது.
“இது என்ன விலை?”. அதிகாரத்தொனியில் ஒரு குரல்.
நான் துள்ளி எழுகின்றேன்.
அவன் கன்னத்தில் ஒரு அடி. அவனுடைய கழுத்துப்பட்டியைப் பிடித்து அவன் மூஞ்சியில் குத்த, அவனை வெறித்துப்பார்த்தபடியே கைஓங்குகின்றேன்.
இவன்?
நான்கு வருடங்களாய் என்னுடன் படித்த, எங்களுடன் ஒன்றாயிருந்த முப்பத்தைந்து இலங்கை மாணவர்களில் இவனும் ஒருவன்.
எங்கள் கல்லூரி விடுதியில் எண்பத்தைந்து மாணவர்கள். வங்காளி, பிகாரி, ஒடிசா, மலையாளி மற்றும் இலங்கை மாணவர்கள். இலங்கை மாணவர்களில் மூவர் மச்சம் மாமிசம் சாப்பிடுவதில்லை. மரக்கறி மட்டும்தான் சாப்பிடுவோம். விடுதி வாடன் அதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
நாங்கள் மூவரும் ஒன்றாய் ஒருபுறமாய் இருந்து சாப்பிடுவோம். எங்களுக்கு புறம்பான பீங்கான் கோப்பை கிளாஸ்.
செல்வா அல்லது ராசன் என்று கூப்பிட்டால் அவனுக்குப் பிடிக்காது.
“என்ரை பெற்றார் செல்வராசா என்றுதான் பெயர் வச்சவை. அரைகுறையாய் என்ர பெயர் சொல்லிக்கூப்பிடுவது எனக்குப்பிடிக்காது”. என்று அவன் சொல்லுவான்
ஆனந்தபாபு புவனேகபாபு செல்வராசா முதலியார் என்று நாங்கள் அவனைக்கூறி கேலி பண்ணுவோம். இதில் எமக்கிடையில் பெரும் பிரச்சனையுள்ளது. இப்பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் அவன் எங்களுக்கு இளையவனாக இருந்தாலும் “பெரியண்ணர்” என்று அழைப்பதற்காக ஒரு ஆலோசனையை நாங்கள் முன்வைத்தோம். மகிழ்ச்சியுடன் அவன் ஒப்புக்கொண்டான்.
பெரியண்ணர் எங்களுடன் சேர்வதில்லை. காரணம் நாங்கள் சாதாரண கீழ் மத்தியதர குடும்பங்களை சார்ந்தவர்கள். உயர் சாதிகளைச் சேர்ந்த மேட்டுக்குடி குடும்பங்களைச் சோர்ந்த பணக்கார மாணவர்களுடன்தான் அவன் நெருங்கிய நட்பு. ‘பேத்டே’ பாட்டிகள், பிக்னிக்குகள் ஆங்கிலப்படங் களுக்கு அவர்கள் ஒன்று சேர்ந்து செல்வார்கள். எப்பொழுதும் நாங்கள் இடம் என்றால் அவர்கள் வலம்தான். இருதரப்பினருக்குமிடையில் அடிக்கடி மோதல்கள்.
விடுதி வாடனுக்கு இலங்கையிலிருந்து சென்ற வசதி படைத்த குடும்பங்களைச்சேர்ந்த சில மாணவர்களால் எப்பொழுதும் தலையிடி. அவர்கனில் அநேகர் முதலாம் தவணை விடுமுறைக்குச்சென்று திரும்பி வருகின்றனர். செல்வராசாவும் ஊர்சென்று திரும்பி வருகின்றார்.
ஊருக்குச் செல்வதற்குமுன் செல்வராசா சண்முகத்துடன் நெருங்கிய உறவு வைத்திருந்தார். திரும்பி வந்த அவர் சண்முகத்தை ஓதுக்கி வைக்கின்றார். காரணம் சண்முகம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று யாரோ செல்வராசனுக்கு கூறிவிட்டனர்.
விடுதிக்குத் திரும்பிவந்த மறுநாள் செல்வசராசா சிற்றம்பலத்துடன் பறக்பூர் பசாருக்குச் சென்று புதிய சாப்பாட்டுத் தட்டுக்கள் இரண்டு, தண்ணீர் குடிக்கும் கிளாஸ்கள் இரண்டு வாங்கி வருகின்றார். தங்கள் இருவருக்கும் வேறாக சாப்பாட்டுத் தட்டுக்களையும் தண்ணீர்க் கிளாஸ்களையும் வைக்கும்படி சாப்பாடு பரிமாறும் சமையல்காரர் ஒருவரிடம் கூறிவைத்தனர். எல்லா சாப்பாட்டுத் தட்டுக்களிலும் உணவு பரிமாறிய பின்னர்தான் சாப்பாட்டு மண்டபக் கதவுகள் திறக்கப்பட்டு மணி அடிப்பார்கள். அதன் பின்னர்தான் நாம் உள்ளே சென்று உணவருந்துவோம்.
அன்று மணி அடித்ததும் நானும் நண்பன் ராசதுரையும் சென்று புதிய சாப்பாட்டுத் தட்டுக்களிலுள்ள சோற்றை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறம். உள்ளே செல்வராசாவும் நண்பனும் வந்தபொழுது மண்டபத்திலிருந்த அனைவரும் ‘கூ’ வைக்கின்றனர். அவமானத்துடன் திரும்பிச்சென்ற செல்வராசாவும் நண்பனும் விடுதி வாடனிடம் முறையிடுகின்றனர்.
இந்தியாவின் சாதிப் பாகுபாட்டிற்கு எதிரான சட்டம் சுதந்திரத்திற்குப் பின்னர் நடைமுறையில் உள்ளதால் தான் ஒன்றும் செய்யமுடியாது என்று விடுதி வாடன் கைவிரித்துவிட்டார்.
பல வருடங்களிற்கு முன்னர் பெரியண்ணரின் தகப்பன் பதுளையில் ஒரு சுருட்டுக்கடையைத் தொடங்கினார். இப்பொழுது அக்கடை லலிதா புடைவை மாளிகையாகவும், செல்வா பலசரக்குக் களஞ்சியமாகவும் மாறிவிட்டது. இப்பொழுது செல்வாவின் தந்தை பதுளையிலுள்ள பெரும் பிரபலமான நான்கு வர்த்தகர்களில் ஒருவர். எப்பிடி பெரும் செல்வாக்குடையவராகினார் என நாங்கள் செல்வராசாவைக் கேட்டோம்.
தோட்டக்காட்டாங்களின்ர தலையில மிளகாய் அரைத்துத்தான் தன் தகப்பனார் பெரும் புள்ளியாக மாறினார் என்று பெரியண்ணர் பெருமையாகக் கூறினார்.
உதாரணத்திற்கு ஒரு தொழிலாளி ஒரு துவாய்த்துண்டை வாங்கினால் மாதமுடிவில் கணக்குப் பார்க்கும் பொழுது இரண்டு துண்டுகள் என்று கொப்பியில் எழுதப்பட்டிருக்கும்.
“நான் ஒரு துவாய்த்துண்டுதானே வாங்கினனான் இப்ப இரண்டெண்டு எழுதிக்கிடக்கு” என்று அந்த தோட்டத்தொழிலாளி கேட்டால் எட மடையா துவாயொண்டு ரவல் ஒண்டடா” என்று அவர் அவனை மடக்கிவிடுவார்.
சம்பள நாளன்று அந்த தொழிலாளி வீட்டிற்குச் சென்றால் அவன் வீட்டிலில்லை காரணம் அவன் சம்பளத்தை எடுத்துக்கொண்டு தேயிலைக் காட்டினுள் மறைந்துவிடுவான்.
“பணத்தை வையடி அல்லது பாயை விரியடி” என்று கூறி தங்கள் உடற்பசியைத் தீர்ப்பார்கள் சில வியாபாரிகள் என்று பெருமையுடன் கூறுவான் செல்வராசா.
பரீட்சை நெருங்கியதும் நாங்கள் இரவிரவாகப் படிப்போம். அண்ணர் சாப்பாட்டிற்குப் பின்னர் பாலைக் காய்ச்சிக் குடித்துவிட்டு ‘லைற்றையும் ‘அணைக்காமல் நுளம்பு வலையைப் போட்டுவிட்டு நன்றாகத் துாங்குவார். ஒருநாள் அவர் நிம்மதியாகத் துாங்கிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு பட்டாசு வெடியைக் கொழுத்தி அவரின் அறைக்குள் போட்டோம். அது பயங்கரமாக வெடித்ததும் திடுக்குற்று எழுந்த அவர் அலறியபடியே வெளியே ஓடி வந்தார். அன்றிலிருந்து அவரும் எம்முடன் சேர்ந்து கூட்டுப்படிப்பிலீடுபட்டோம்.
“பெரியண்ணை உனக்கு என்ன நல்லாய்ப் பிடிக்கும்” என்று நாங்கள் அவரைக் கேட்டோம்.
“நல்லாய் சாப்பிடவேணும், நல்லாய் தூங்க வேணும், நல்லாய் கக்கூசுக்குப் போகவேணும். இதுதான் எனக்குப் பிடிக்கும்”. என்று கூறினார்.
“உனக்குப்பிடிக்காதது எது” என்று கேட்டோம்.
“எனக்கு எள்ளளவும் பிடிக்காதவை காதல், குழந்தைப்பிள்ளை, சங்கீதம்” என்று கூறினார்.
நாங்கள் அதிர்ந்து போனோம்.
நாடுதிரும்பி சிறிது காலத்தின் பின்னர் அவருக்கு கல்யாணம் நடந்தது. எங்களை திருமணத்திற்கு அழைத்திருந்தார். திருமணத்திற்கு அடுத்தநாள் நாங்கள் மூன்று நான்குபேர் சென்றிருந்தோம். கணவனும் மனைவியும் கல்யாண மணவறைக்கு முன் உட்கார்ந்து இருந்தனர்.
“அண்ணை உங்களுடைய கல்யாணம் எப்பிடி ஏற்பாடாச்சு?” என்று நான் அவரைக்கேட்டேன்.
“நாங்கள் இரண்டுபேரும் ஒரே பள்ளிகூடத்தில் படிப்பித்துக்கொண்டிருக்கிறம். அவ என்னை விரும்பினா, நானும் அவவை விரும்பினன். கல்யாணம் முடிஞ்சுது”. ஏன்று கூறினார்.
“பெரியண்ணை உனக்கு காதலும் குழந்தைப்பிள்ளையும் பிடிக்காதே. அப்பென்ன செய்யப்போறியள்?” நான் கிண்டலாய்க் கேட்டேன்.
“உனக்கெப்பொழுதும் கேலியும் கிண்டலும்தான்” என்று சிறு வெட்கத்துடன் கூறி மழுப்பினார்.
லட்சாதிபதி அண்ணன் ஐந்து லட்ச ரூபாவை சீதணமாகக் கொடுத்து ஒரு சங்கக்கடை மனேச்சருக்கு தன் ஒரேஒரு சகோதரியை கட்டி வைத்தார். அவருக்கு ஒரே தம்பி.
தம்பி ஒரு தமிழ் ஆசிரியர்.
தனது சகோதரியையும், தம்பியையும் ஏமாற்றி பதுளையிலுள்ள இரண்டு கடைகளையும் ஊரிலுள்ள வீடுவளவையும் தோட்ட நிலங்களையும்
தன் சொந்தப்பெயருக்கு எழுதி வைத்தார்.
பரீட்சை முடிந்து நாங்கள் எல்லோரும் நாடுதிரும்பி ஒருமாதத்தின் பின்னர். பரீட்சை முடிவுகள் வெளியாகின. சில நண்பர்கள் உடனடியாக பரீட்சைப் பெறுபேறுகளை தந்திகள் மூலம் எங்களுக்கு அனுப்பிவைத்தனர்.
எங்கள் தோழர் அனிஷ் றாய் சௌத்திரியும், இராமகிருஷ்ணனும் அவசரத் தந்தி மூலம் எனது பரீட்சைப் பெறுபேற்றை அனுப்பி வைத்தனர். தோழிகள் ரேணுகா மற்றும் இந்திரா ஆகியோரும் எனக்கு வாழ்த்துக்களை அனுப்பிவைத்தனர்.
மதிப்பிற்குரிய மெய்யியல் பேராசிரியர் நிமால் கோஷும், பொருளியல் பேராசிரியர் றாய் சௌத்திரியும் எனக்கு வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பி வைத்தனர்.
பரீட்சைப் பெறுபேறு வெளியாகி ஒருமாதமாகியும் பெரியண்ணருக்குப் பரீட்சைப் பெறுபேறு பற்றி ஒருவித தகவலும் கிடைக்கவில்லை.
தான் பரீட்சையில் தேறவில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டார். இறுதியில் அநேக நாட்களின் பின்னர் மெய்யியல் பேராசிரியர் அனுப்பியிருந்த தபாலட்டை மூலம் பெரியண்ணர் பரீட்சையில் தேறியுள்ளார் என்ற தகவல் அவருக்கத் தெரிய வந்தது.
பரீட்சைப் பெறுபேறு வெளியாகி பெரியண்ணர் ‘ஐந்து சிறீ’ ஆசிரியரானார். ஐயாயிரம் ரூபா லஞ்சம் இந்த ஆசிரியர் பதவியைப் பெற்றுத் தந்துள்ளது. மூன்று வருடங்களாகியும் எமக்கு வேலை கிடைக்கவில்லை. பெரியண்ணர் ஆசிரியர் தொழிலை மூண்று மாதங்களில் பெற்றுள்ளதுடன், அவருடைய பிரதேசத்திலுள்ள பிரபலமான சுண்டியெடுத்த வெள்ளாளர் குடும்பத்தைச் சேர்ந்த புறக்கராசியார் குமாரவேலுவின் ஏகபுத்திரி செல்வராணியையும் கைப்பிடித்தார். அத்துடன் அவருக்கு புதிய மோட்டார் வாகனத்தையும் பெண்ணின் தந்தை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
செல்வராசா ஆசிரியர் பாடசாலை நேரத்தில் தனது மனைவி சகிதம் காய்கறி வாங்குவதற்கு சந்தைக்கு வந்துள்ளார்.
“பயிற்றங்காய் என்ன விலை” என்று சப்பாத்துக் காலால் ஒருபிடியைத் தள்ளியபடியே ஒருவன் கேட்கின்றான்.
என்முன்னால் கோட்சூட்டுடன் நிற்கின்றவனுடைய கழுத்துப்பட்டியை ரை – இறுகப்பிடித்து செல்வராசனுடைய மூஞ்சியில் குத்துவதற்கு கையை ஓங்குகின்றேன்.
– பாஞ்சான் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 2016, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.
| நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நாடென்ன செய்தது நமக்கு?
வளர்கவி
September 15, 2026
அந்த இலக்கியவாதியும் நடுநிசி மனிதர்களும்
இளையவேணி கிருஷ்ணா
September 15, 2026
கொட்டு மேளம்
தி.ஜானகிராமன்
September 12, 2026