துறவியும் செல்வனும்
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 10
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் உண்மைத் துறவி ஒருநாள் ஓர் ஊர் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அவருடைய பெயர் தெய்வ நாயகம். ஓர் இடத்தில் ஒரு பெரிய வீடு இருந்தது. அவ் வீட்டைப் பார்த்த அளவிலேயே துறவியார் அவ் வீட்டுக்காரன் பெருஞ் செல்வனாக இருக்கவேண்டும் என்று எண்ணினார். செல்வத்திற்குத் தக்கவாறு குண நலம் அமைந்திருக்கிறதா, பார்த்துவிட்டுப் போவோம் என்று முடிவு செய்து அவ் வீட்டிற்குச் சென்றார். வீட்டுக்காரன் வெளியில் தான் உட்கார்ந்திருந்தான். அவனுடைய பெயர் மருதநாயகம். தெய்வநாயகம் மருதநாயகத்தைக் கண்டார். “அப்பா ! நெடுந்தொலை வழி நடந்து வருகிறேன். சிறிது உணவளிப்பாயா ?” என்று கேட்டார்.
மருதநாயகம் தனக்குள்ள இயற்கைப்படி உரை யாடத் தொடங்கினான். அடிகாள்! தங்கட்கு வணக் கம் புரிகிறேன். சமையல்காரன் ஊருக்குப் போயிருக் கிறான். சாப்பாட்டிற்கு இங்குச் சரிப்படாது,” என்றான். துறவியார் விடவில்லை. ‘போனாற் போகட்டும்; சாப்பாட்டுச் செலவுக்குக் காசு கொடுப்பாயானால் உணவுக் கடையில் சாப்பிட்டுவிட்டுப் போகிறேன்,” என்றார். மருதநாயகம், அடிகாள்! அப்படியே செய்யலாம். காசு கொடுப்பதற்குக் கணக்கபிள்ளை ஊரிலில்லை. அவனும் ஊருக்குப் போய்விட்டான்,’ என்று கூறினான்.
தெய்வநாயகத் துறவியார் நகைத்து, “அன்பனே! உன்னுடைய குணநலத்தைப் பார்ப்பதற்காகவே கேட்டேன். நீ எனக்கு ஒன்றுங் கொடுக்க வேண்டாம். நான் பசியா வரம் பெற்றவன். செல் வத்தைப் பெற்றால் நல்வழியிலே செலவு செய்தல் வேண்டும். செல்வமானது ஆற்றுநீர்ப் பெருக்கால் உண்டாக்கப்படுகிற மேடு பள்ளங்களைப்போல் மாறி மாறி உண்டாகி மறையக்கூடியது. அறம் புரிவா யானால் அஃது உனக்கு மறுமைத் துணையாகும். ஆகவே, ஐயமேற்போர்க்குச் சோறு போடு. தண்ணீர் கொடு; நல்லறத்தைச் செய்தால் உள்ளத்தில் மெய் யறிவுத் தன்மை உண்டாகும்” என்று பலவாறு அறிவுரை கூறிவிட்டுச் சென்றார்.
“ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்-சோறிடும்
தண்ணீரும் வாருந் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.”
(உரை.) மாநிலத்தீர்- பெரிய நிலவுலகில் உள்ளவர்களே!’, ஆறு இடும் மேடு மடுவும் போல் -ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப்படுகிற மேட்டையும் பள்ளத்தையும் போல, செல்வம் ஏறிடும் மாறிடும்-செல்வம் வளர்வதுந் தேய்வதுமாக இருக்கும், ஆகையால், சோறு இடும் – இரப்பவர்க்கு உணவு அளியுங்கள், தண்ணீரும் வாரும் – குடிப்பதற்கு நல்ல தண்ணீருங் கொடுங்கள், தருமமே சார்பு ஆக-இத் தருமமே துணையாக, உள்நீர்மை உயர்ந்து வீறும் – உள்ளத்திலே தூய தன்மை சிறந்து விளங்கும்.
(கருத்து) செல்வம் அழியுந் தன்மையுடையது; செல்வம் பெற்றவர்கள் அறத்தைச் செய்தல் வேண்டும்.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026