அடங்காப்பிடாரிகளும் ஆசிரியர்களும்
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 6
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் உயர்நிலைப் பள்ளியின் வகுப்பு ஒன்றில் சில அடங்காப்பிடாரி மாணவர்கள் இருந்தனர். அந்த மாணவர்கள் தலைமையாசிரியருக்கோ உதவியாசிரியர் களுக்கோ சிறிதுங் கட்டுப்படுபவரல்லர். ஆசிரியர்கள் சொல்லுவதற்கு நேர்மாறாகவே எதையுஞ் செய்வர். சில ஆசிரியர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை அடக்க முயன்றனர் : முடியவில்லை. இவ் வாறாகப் புதிய ஆசிரியர் ஒருவர் அப் பள்ளிக்கு வந் தார். தாம் வேலைக்கு வந்த முதல்நாளே அடங்காப் பிடாரி மாணவர்களை நன்றாக உணர்ந்துகொண்டார். அந்த ஆசிரியர் துடுக்குக்கார அடக்குவதற்குச் சிறிதும் முயலவில்லை. அவர்கள் தம் மிடம் எவ்வாறு நடக்க வேண்டும் என்று ஆசிரியர் விரும்பினாரோ அவ்வாறு தாம் அந்த மாணவர்களிடத் தில் நடந்துகொண்டார். பிற ஆசிரியர்களைப்போல் அம் மாணவர்களிடம் கடிந்தும் அதிகாரத் தொனி யோடும் பேசவில்லை. இனிமையாகவும் பணிவாகவும் அன்புடனும் பேசிப் பழகினார். அம் மாணவர்களால் அவரிடம் துள்ள முடியவில்லை. “ஆசிரியரோ நயமாகவும் பணிவாகவும் இருக்கிறார்; நாம் எப்படித் துள்ளுகிறது,” என்று எண்ணிப் பணிந்துபோயினர். புதிய ஆசிரியர் வகுப்பு நடத்தும்போது வந்து பார்த்தார் தலைமையாசிரியர். அடங்காப்பிடாரி மாணவர்கள் பெட்டிப் பாம்புபோல் அடங்கிப் பாடங் கேட்டுக் கொண்டிருத்தலைக் கண்டு வியந்தார்.
“வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவுங் கோல்பஞ்சிற் பாயாது – நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.”
(உரை.) வேழத்தில் பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது – வலிய யானையின்மேல் பட்டு உருவுகிற அம்பானது மெல்லிய பஞ்சின் மேலே பாயாது, நெடு இருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை – நீண்ட இருப்புப் பாரைக்கு பிளவாத கருங்கற் பாறையானது, பசுமரத்தின் வேருக்கு நெக்குவிடும்- பச்சை மரத்தின் வேருக்குப் பிளந்து போகும். அவ்வாறே வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் – வன்சொற்கள் இன்சொற்களை வெல்லமாட்டாவாம். (இன்சொற்களே வெல்லும் என்க.)
(கருத்து.) இனிய மொழிகள் தாம் பலனளிக்குமேயன்றிக் கடுஞ் சொற்கள் யாதும் பயனளிக்கமாட்டா.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026