திருந்திய அசோகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 1, 2026
பார்வையிட்டோர்: 105 
வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்

(2003ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் – 1

அசோகன் ஒரு பொல்லாத பையன். அவனை உங்களுக்குத் தெரியாது. போக்கிரி அசோகன் என்றால் எல்லாருக்கும் புரியும். அசோகன் போன்ற போக்கிரிகள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். அவனிடம் ஆணவமும் அஞ்சா நெஞ்சமும் அமைந்திருந்தன. யார் பேச்சையும் கேட்கமாட்டான். நினைத்தைச் செய்வான் குறும்புத்தனங்கள் புரிவதில் மன்னர் மன்னன். 

அசோகன் செய்யும் குறும்புத்தனங்களுக்கு அளவே இருக்காது. ஒற்றுமையென்ற வார்த்தைக்கு அவனிடம் அர்த்தம் கேட்டால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதுதான் என்பாள். அவன் யாருடனும் ஒற்றுமையாக இருக்க மாட்டான். விக்டரைத் தவிர அவனிடம் நெருங்கிப் பழகியவர்கள் வேறு யாருமில்லை. 

அசோகன் தன் அப்பாவைக் கண்டால் தான் அடங்கியொடுங்கி இருப்பான். அவரில்லாவிட்டதால் போதும் அம்மாவின் பேச்சைக் கூட சட்டை செய்ய மாட்டான். அவனுக்குக் கோபம் வந்து விட்டால் போதும், கையில் கிடைப்பதைக் கீழே அடித்து நொறுக்கி விடுவான். 

அசோகன் ஒழுங்காகப் பள்ளிக்கூடம் போகமாட்டான். வாரத்துக்கு ஒரு நாளாவது பள்ளிக்கூடத்துக்கு முழுக்கு போடாவிட்டால் அவனுக்குத் தூக்கம் வராது . ஆசிரியர் வீட்டுப் பாடங்கள் கொடுத்தால் அவைகளைச் செய்ய மாட்டான். கடைசி பெஞ்சில் தனியாக அமர்ந்து கனவு காண்பான். 

வாரத்தில் ஒரு நாள் பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் எவருடைய தோட்டத்திலாவது மாமரத்தில் மாங்காய் காய்த்திருக்கிறதாவென்று தேட ஆரம்பித்து விடுவான். யாருடைய தோட்டத்திலாவது குலை குலையாகத் தொங்கும் மாங்காய்களைக் கண்டுவிட்டால் போதும், அவனுடைய கண்கள் கீழேயுள்ள கல்லைத்தான் தேடும். 

மாங்காய்க்கு கல்லெறியக் கூடியவர்கள் அந்தக் கல்லெறியும் கலையில் அசோகனிடம் பிச்சை வாங்க வேண்டும். மாங்காய்க்கு குறிதப்பாமல் கல்லெறிவதில் அசோகன் நிபுணன்! அவன் வீசி அடிக்கும் கல் குறி தப்பாமல் மாங்காய் குலையை சிதற அடித்து விடும். கீழே சிதறி விழும் மாங்காய்களை அசோகனுடன் வந்திருக்கும் படை பட்டாளங்கள் சேகரித்து தங்கள் புத்தகப் பைகளை நிரப்பிக் கொள்வார்கள். அவற்றை எடுத்துச் சென்று ஆற்றோரத்திலுள்ள புளிய மரத்தடியில் அமர்ந்து அசோகனுடன் பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போடும் படைப்பட்டாளம் சுவைபார்க்கும். 

அசோகன் ஏழாம் வகுப்பில் படித்து வந்தான். அவனுடைய வீட்டிலிருந்து பள்ளிக் கூடத்திற்கு அரை மைல் தூரம் இருந்தது. அசோகனுக்கு கணக்கு பாடமென்றால் வேம்பாகக் கசந்தது. அத்துடன் சென்ற ஆண்டுப் பாடங்களைக் கவனமாகப் படிக்காததால் ஏழாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புக்குத் தேறவில்லை. ஆனால் அம்மாவிடம் கவனமாகப் சாக்குப் போக்கு சொல்லி, கணக்கு பாட ஆசிரியரின் மேல் பழியைத் தூக்கிப் போட்டுத் தப்பி விட்டான். 

“கழுதே…. புத்தியில்லே விளையாட்டுத்தனம் மட்டும் போகாது! படிப்பில் சுத்தமடையன்”. “உன் மண்டையிலே களிமண்ணுதான் இருக்கு…. என்று அசோகனின் அம்மா ஆத்திரம் தீரத் திட்டினாள். இவையொன்றையும் அசோகன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இது என்ன பிரமாதம்? இதைவிட மோசமான திட்டுக்களை கேட்டு அவன் காது புளித்துப் போயிற்று. ஏசியதுடன் விட்டார்களே முதுகு தப்பியது யார் செய்த புண்ணியமோ என்று பெருமைப்பட்டான் அசோகன். 

பள்ளிக்கூடத்தில் வகுப்பில் கூட அசோகன் ஒழுங்காக இருந்து படிக்க மாட்டான். பக்கத்திலேயே தூங்கிவழிந்து கொண்டிருக்கும் சோம்பேறி சோமுவைக் கிள்ளிவிட்டு ராமு தான் சோமுவைக் கிள்ளினான் எனக் கூறி ராமுவுக்கு ஆசிரியரிடம் அடிவாங்கிக் கொடுத்து விடுவான். மாணவர்கள் அசோகனைக் கண்டுவிட்டால் போதும் இன்று ஏதாவது நடக்கும். யாருக்காவது அடிவிழும் என்று பயந்து நடுநடுங்குவார்கள். 

அசோகன் மாணவர்கள் எல்லோரும் வருவதற்கு முன் வகுப்பறைக்குச் சென்று கரும்பலகையில் குரங்கின் உருவத்தைக் கோணல், மாணலாகக் கீறி, அதற்கு கண்ணாடியும் போட்டு அந்தப் படத்தின் கீழே நாலு கண்குரங்கு மாஸ்டர் என்று ரவீந்திரன் எழுத்துக்களைப் போல் எழுதி வைத்து விடுவான். வகுப்பு ஆசிரியர் அதைப்பார்த்து விட்டு ரவீந்திரன் கையில் பிரம்பு பூசை நடத்துவார். சில சமயங்களில் மேசை மேலிருக்கும் ஆசிரியருடைய கண்ணாடியைத் திருடி யாருடைய புத்தக பையிலாவது வைத்து விடுவான். மாணவர்களுக்கு குரங்கு மூஞ்சி குமார், நொண்டி காலு ராஜா என்று பெயர்களைச் சூட்டி நையாண்டி பண்ணுவான். அவர்கள் ஆசிரியரிடம் புகார் பண்ணினால் போதும் பள்ளிக்கூடம் முடிந்து அவர்கள் வெளியே வந்ததும் அவர்களின் முதுகை அசோகனின் கைகள் பதம் பார்க்கத் தயங்காது. 

வாரத்தில் ஒருநாள் பள்ளிக்கூடத்திற்கு மட்டம் போட்டுவிட்டு வண்ணாத்திப் பூச்சிகளைப் பிடிக்க போய் விடுவான். வண்ணாத்திப் பூச்சி என்றால் அசோகனுக்கு உயிர். அதைப்பிடித்து விளையாடுவது என்றால் சாப்பாடுகூடத் தேவையில்லை. அதைப்பிடித்து நூற்கயிற்றில் கட்டி விளையாடுவதில் தனி ஆனந்தம். 

வண்ணாத்திப் பூச்சிகளைப் பற்றி கதைகதையாக விக்டரிடம் கூறுவான். ஒருநாள் நூதனசாலையில் ரெட்எலன் என்ற வண்ணாத்திப் பூச்சி ஒன்று பல வர்ணங்களில் கண்ணைப் பறிக்கும் அழகுடன் இருப்பதாகக் கூறினான். ரெட்எலனை தான் பிடித்து பள்ளிக்கூடத்திற்கு கொண்டுவந்து ஆசிரியரிடம் காட்டப் போவதாக பெருமையடித்துக் கொள்வான். விக்டரும் ஜாடிக்கு ஏற்ற மூடிபோல தலையாட்டிக் கொள்வான். 

ஞாயிற்றுகிழமைகளில் அசோகனை வீட்டில் காண முடியாது . காலையில் எழுந்ததும் தன் நண்பனான விக்டரைக் கூட்டிக் கொண்டு வண்ணாத்திப் பூச்சிபிடிக்க போய் விடுவான். “வெளியே போகாதேயடா, வீட்டில் தங்கியிரு” என்று அம்மா சொன்னால் கேட்க மாட்டான். விக்டர் வீட்டில் கரம் விளையாடப் போகிறேன் என்று டூப்படித்து விட்டு போய்விடுவான். இவன் வரவை எதிர்பார்த்து விக்டர் காத்திருப்பான். 

காலையில் அப்பா வீட்டின் முன்கூடத்தில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக்கொண்டு இருந்தால், வீட்டின் பின்புறத்தோட்டத்து வழியாக நழுவி விடுவான். கழுதை வயிறு பசித்தால் வீடு வந்து சேருகிறது என்று அவன் அப்பாவின் முணுமுணுப்பு. 

ஐயோ! அசோக் பட்டினியோட எங்கு திரியிரானோ வந்து சாப்பிட்டுவிட்டுப் போனால் என்ன? என்று தாயுள்ளம் சாப்பிடாமல் பட்டினியுடன் ஏங்கிக் கொண்டிருக்கும். ஏசினாலும், பேசினாலும், அடித்தாலும் அன்பு மொழிப் பேசி அணைப்பது அன்னையின் கைகள் தானே. 

அசோகனும் விக்டரும் வண்ணாத்திப் பூச்சி பிடிக்க சிறுவர் பூங்கா விற்கு சென்று விடுவார்கள். இராமனுக்கு ஏற்ற அனுமான் போல, அசோகனுக்கு ஏற்ற துணை தான் விக்டர். 

சிறுவர் பூங்காவில் எண்ணங்களை கொள்ளைகொள்ளும் வண்ண வண்ணப் பூக்களிடையே வட்டமிட்டுக் கொண்டிருக்கும் வண்ணாத்திப் பூச்சிகளைப் பிடித்து அவற்றை வர்ண நூல் கயிற்றால் கட்டி விக்டரும் அசோகனும் பறக்க விடுவார்கள் . அசோகன் முன்பெல்லாம் புறாக்கள் தான் வளர்த்து வந்தான். புறாக்கள் தான் அவனுடைய இணைபிரியாத நண்பர்களாயிருந்தன. ஆனால் வெண்புறா அவனைவிட்டுப் பிரிந்த பிறகு புறா வளர்க்க அவன் விரும்பவில்லை. 

அத்தியாயம் – 2 

அசோகனுக்கு புறா என்றால் உயிர். அவன் பற்பல விதமான புறாக்களை வளர்த்து வந்தான். ஒரு நாள் வீட்டு பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் ஒரு சின்னஞ் சிறு வெண்புறாக்குஞ்சு ஒன்றைக் கண்டான். அதனை எடுத்து அன்புமிகக் கொண்டு பிரியமாக வளர்த்து வந்தான். 

அந்த வெண்புறாவுக்கு தேனும் பாசிப்பயறும் கலந்து உணவாகக் கொடுப்பான். அவனிடமிருந்த புறாக்களில் வெண்புறாதான் எட்டாத உயரம் வரை பறந்து செல்லும். பறந்து செல்லும் போது சர்க்கஸ்காரனைப் போல தலைகீழாகக் கரணம் போடும். அதைப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். 

அசோகனுக்கு போட்டியாக அவனது நண்பர்களும் புறா வளர்த்து வந்தார்கள். 

ஒருநாள் அசோகனுக்கும் அவனது நண்பர்களுக்கும் புறா வளர்ப்புக் காரணமாக வாய்ச்சண்டை ஏற்பட்டு கைச்சண்டையாக மாறிவிட்டது. அசோகன் அந்தச் சண்டைக்கு காரணமானவனை கன்னத்தில் அறைந்து விட்டான். 

அசோகனிடம் அறைப்பட்டவன் அகிலன். அவனும் அசோகனைப் போல அநேகம் புறாக்கள் வளர்த்து வந்தான். அசோகனின் புறாக்கள் மீது அவனுக்குப் பொறாமை. 

அகிலன் அசோகனை பழிவாங்க வேண்டும் என்று எண்ணமிட்டான். நண்பர்கள் மத்தியில் தலைகுனிய வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டினான். அவன் கைகளை முஷ்டி பிடித்து, விழிகளை உருட்டி பற்களைக் கடித்து கோபமாக முறைத்துப் பார்த்தான். 

“என்னடா முறைத்துப் பார்க்கிறாய் ” என்றான் கோபத்துடன் அசோகன். அவன் கையும் காலும் துடித்தன. அகிலனுக்கு புத்தி புகட்ட வேண்டுமென்று அசோக் அமைதியாயிருடா என்று அதட்டினான் விக்டர். அவன் கையும் காலும் நடனமாடின. சண்டை என்றால் பத்தடி தள்ளி நிற்பவன் விக்டர். சாப்பாடு என்றால் முதல் வரிசையில் நிற்பான். 

விக்டர் கூறியதைக் கேட்டு அசோகன் அமைதியானான். அகிலன் எண்ணத்திலே அருமையான திட்டம் தீட்டினான். அதன்மூலம் அசோகனை அவமானமடையச் செய்து தலைகுனிய வைக்க வேண்டும் என்று எண்ணினான் 

டேய் அசோகன் என் புறாவுடன் உனது புறாவைப் பறக்க விடேன் பார்ப்போம் என்று சவால் விட்டான். 

அசோகனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. பந்தயம் என்ன? பளீரென்று கேட்டான். 

“தோற்றவன் ஆயிரம் தோப்புக்கரணம் போட வேண்டும்” என்றான் சோம்பேறி சோமு. பரீட்சையில் பாசாக வேண்டும் என்று பிள்ளாயாருக்குத் தோப்புக்கரணம் போட்டு பழகிய பழக்கம். 

“உன் புறாவை என் புறா வென்று விட்டால், நீ என்னிடம் மன்னிப்புக் கேட்ட வேண்டும் என்றான்” அகிலன் பெருமிதத்துடன். 

அசோகன் “என் புறா உன் புறாவை வென்று விட்டதென்றால் ” இடைமறித்துக் கேட்டான் விக்டர். 

“நான் அவனிடம் மன்னிப்பு கேட்பேன்” என்றான் அகிலன். “நான் அதை ஏற்றுக் கொள்கிறேன்” என்றான் அசோகன். 

“எப்போது?” “எங்கே?” பந்தயம் வைப்பது என்று நண்பர்கள் ஆலோசித்தார்கள். திடீரென்று அபூர்வமான யோசனைகள் கூறி அனைவரையும் திகைப்பிலாழ்த்தினான் மக்கு மணி. “ஞாயிற்றுக் கிழமை சிறுவர் பூங்காவில் பந்தயம் வைக்கலாம் என்று யோசனை உதிர்த்தான் மணி . 

“சபாஷ்! உன் மூளையிலே களிமண்ணுதானிருக்கு” என்றான் சோமு. “போடா சோம்பேறியென்றான்”, மணி. 

மணியின் யோசனைப்படி ஞாயிற்றுக்கிழமை சிறுவர் பூங்காவில் பந்தயம் வைப்பதென்ற முடிவுடன் அசோகனும் விக்டரும் வீடு திரும்பினர். அசோகனை மன்னிப்பு கேட்க வைப்பேன் என்று எண்ணியவாறு வீட்டை நோக்கி நடையைக் கட்டினான் அகிலன். 

அசோகனும் விக்டரும் ஏதும் பேசாமல் வீட்டை நோக்கி நடந்தனர். “ஏண்டா! திடீரென்று ஊமையாகி விட்டாய்? என்று அசோகனிடம் கேட்டான் விக்டர். 

“இல்லேடா விக்டர்! பந்தயத்தைப் பற்றி யோசிச்சுகிட்டு வர்றேன ” என்று அசோகன் கூறினான். 

“நீ ஒன்றும் பயப்படாதேயடா! போட்டியில நம்ம ராஜாவைப் பறக்க விட்டு வெற்றிப் பெற்று விடலாம்”என்று ஆனந்தத்துடன் கூறினான். ராஜா என்று அவன் கூறியது வெண்புறாவைத்தான். 

“நம்ம ராஜா தோற்றுப் போய்விட்டா?” அசோகன் உள்ளுக்குள் இழுத்தான். 

“இதற்கா இப்படிப் பயந்து சாகிறாய்? தோல்விதான் வெற்றியின் முதல்படியென்று நெப்போலியன் சொல்லியிருகிறார்.” நீ ரொபர்ட் புரூஸ் கதை படித்ததில்லையா? “அவன் பலமுறை தோல்வியைடந்ததும் முயற்சியைக் கைவிடாமல் இறுதியாக வெற்றிபெறவில்லையா? என்று அசோகனைத் தேற்றினான் விக்டர் 

இருவரும் பேசிக் கொண்டே அசோகனின் வீட்டை நெருங்கி விட்டனர். அசோகன் விக்டரிடம் விடைபெற்று வீட்டையடைந்தான். அசோகன் புறாக்கூண்டின் அருகே சென்று வெண்புறாவையெடுத்து ராஜா! உன்னை நம்பித்தாண்டா இருக்கிறேன். கைவிட்டுவிடாதே!] என்று அசோகன் கனிவுடன் கூறுவதை ஆமோதிப்பது போல புறாவும் க்கும் க்கும் என்று இனிய குரெலழுப்பியது. 

அசோகன் மகிழ்ச்சியுடன் வெண்புறாவுக்கு முத்தமொன்று கொடுத்துவிட்டுக் கூண்டில் விட்டான். 

அன்றிரவு உணவு கசந்தது. தூக்கங் கூட வரவில்லை. கட்டிலில் புரண்டான். அவன் நினைவெல்லாம் போட்டியைப் பற்றியதாகவே இருந்தது. 

அத்தியாயம் – 3 

ஞாயிற்றுக்கிழமை கொக்கரக் கோ எங்கிருந்தோ குரல் கொடுத்த சேவல் விடிந்து விட்டதை அறிவித்தது. 

படுக்கையில் புரண்டு கொண்டிருந்த அசோகன் துள்ளி எழும்பினான். அம்மாவைக் காணவில்லை. அன்று அலுவலகம் இல்லையாதலால் அப்பா நித்திரா தேவியின் பிடியில் சிக்கியிருந்தார். இன்னும் அவர் எழும்ப ஒரு மணி நேரமாகும். ஓசைப்படாமல் அசோகன் வெளியே வந்தான். புறாக்கூட்டை நெருங்கினான். அசோகனைக் கண்ட வெண்புறா பறந்து வந்து தோளில் அமர்ந்தது. அசோகன் அதை எடுத்து தடவிக் கொடுத்தான். ராஜா! என் நம்பிக்கையை நாசமாக்கி விடாதேயடா என்று விழிகளிலே ஆர்வம் பொங்க வெண்புறாவைப் பார்த்தான். அசோகன் என்னை நம்பு என்பது போல அசோகனையே பார்த்துக் கொண்டிருந்தது வெண்புறா அசோகன் அதை அன்புடன் தடவிக் கொடுத்தான். 

“என்ன அசோக் ரெடியா? என்று கேட்டபடி விக்டர் வந்து சேர்ந்தான். 

“இதோ இன்னும் ஐந்து நிமிஷத்திலே ரெடியாகி விடுகிறேன்? நீ கொஞ்சம் புறாக்களைப் பார்த்துக் கொண்டிரு” என்று கூறி விட்டு புறா பந்தயத்திற்கு போக ஆயத்தமானான். விக்டர் நான் ரெடியாகி விட்டேன். புறப்படுவோமாடா? என்று விக்டரைப் பார்த்துக் கேட்டவன் ராஜா புறப்படுவோமா? என்று வெண்புறாவைப் பார்த்துக் கேட்டவாறு அதை எடுத்துத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். பிறகு விக்டர் வா போகலாம் என்றான் அசோகன். விக்டரும் வெண்புறாவை மகிழ்ச்சியுடன் பார்த்தவாறு அவனுடன் நடந்தான். 

அசோகனும் விக்டரும் பந்தயத்தைப் பற்றி நினைத்தபடியே மௌனமாக சிறுவர் பூங்காவை நோக்கி நடையைக் கட்டினார்கள். விக்டர் அசோகன் வெற்றியடைய வேண்டும் என்று எண்ணியபடியே நடந்தான். கர்த்தர் கைவிடமாட்டர் என்ற நம்பிக்கை அவனுக்கு தன் நண்பனான அசோகன் தோற்று விட்டால் தனக்கும் அவமானம் என்று எண்ணியது அவன் மனம். 

இருவரும் சிறுவர் பூங்காவை அடைந்து விட்டார்கள். இவர்களின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தது மாணவர் கூட்டம். மாணவர் கூட்டத்தின் நடுவே அகிலன் வெற்றி வீரனைப் போல் புறாவைக் கையில் கெட்டியாகப் பிடித்தவாறு நின்றிருந்தான். 

அசோகனைக் கண்டதும் சோம்பேறி சோமு “அசோக வந்துவிட்டான” என்று எல்லோருக்கும் கேட்கும்படி உரக்கக் கத்தினான். “அடேய் கழுதை மாதிரிக்காட்டுக்கூச்சல் போடாதே” என்று அதட்டினான் பயந்தாங்கொள்ளி பாபு. 

சரி தாண்டா நிறுத்து என்றான் இக்பால் பந்தயத்தை ஆரம்பிக்கலாமா? என்று அகிலன் நண்பர் சுகுமாரன் கேட்டான். விக்டரும் சரி என்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்தான். 

ஒன்பது மணிக்கு இன்னும் இரண்டு நிமிடங்கள் இருக்கின்றன என்றான் கைகடிகாரம் கட்டியிருந்த கண்ணன். 

ஆமாம் என்று தனது கடிகாரத்தைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டான் சுனில். 

அசோகன் வெண்புறாவைத் தடவிக் கொடுத்தான். அகிலன் பொறாமையுடன் கண்களை உருட்டி விழித்தவாறு பார்த்துக் கொண்டே தான் கொண்டு வந்திருந்த சாம்பல் நிறப்புறாவைத் தடவிக் கொடுத்தான். 

சரியாக ஒன்பது மணி என்று கத்தினான் கண்ணன் . “ரெடியா” என்று கூவினான் விக்டர். அசோகனும் அகிலனும் சரியென்று தலையசைத்து விட்டு புறாக்களை உயர்த்திக் காட்டினார்கள். 

வன், டு, த்ரி … என்று போட்டியை ஆரம்பித்து வைத்தான் முத்தழகு. அகிலனும் அசோகனும் கைகளை உயர்த்திச் சுழற்றிப் புறாக்களை காற்றில் எறிந்தனர். 

கண்மூடிக் கண்திறக்கும் நேரத்தில் அசோகனின் வெண்புறாவும் அகிலனின் சாம்பல் நிறப்புறாவும் எட்டாத உயரத்தில் பறந்தன. எல்லோரும் நீல வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். 

“அகிலனுக்குத்தான் வெற்றி என்றான் சுகுமாரன் ஏண்டா அவசரக்குடுக்கை கொஞ்சம் பொறுத்திருந்து பாரேன்!” என்றான் மணி. 

அங்கிருந்தவர்கள் அனைவரும் யாருக்கு வெற்றி என்ற கேள்விக் குறியுடன் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

“அடேய் பாபு! அதோ பாரடா அகிலனின் புறா என்றான் கண்ணன். ‘ஆமாடா அசோகனின் புறாவைக் காணவேயில்லையே?” என்று வாயை பிளந்தான் பாபு. 

முடிவு என்னவாகுமோ என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஒரு சிலர் அகிலனுக்கு வெற்றி என்றனர். ஒரு சிலர் அசோகனுக்கு வெற்றி என்றனர். ஆவலுடன் முடிவுடன் எதிர்பார்த்து இருந்தனர் அனைவரும். 

இறுதியில் வெற்றி யாருக்கு ? 

அசோகனுக்கா…?
அகிலனுக்கா…?

அத்தியாயம் – 4 

மாணவர்கள் ஒருவருக்கொருவர் வெற்றி அகிலனுக்கு, இல்லை அசோகனுக்கு என்று சவடால் அடித்துக் கொண்டிருந்தனர் . ஒரு கோஷ்டி அசோகனுக்கு வெற்றி என்றது. இன்னொரு கோஷ்டி அகிலனுக்கு வெற்றி என்றது. ஆனால் இரு கோஷ்டியும் வெற்றியை எதிர்பார்த்து இருந்தன. 

அகிலனின் புறாவை அசோகனின் புறா வென்றுவிட்டது. சிறிது நேரத்தில் அகிலனின் புறா திரும்பி விட்டது . அசோகனின் வெண்புறா கண்ணுக்கு எட்டாத தொலைவு வரை பறந்து சென்று வெற்றியுடன் திரும்பி வந்தது. 

“அசோகனுக்கு வெற்றி” என்று சோமு கத்தினான். அகிலனின் சிவந்த முகம் அவமானத்தால் மேலும் சிவந்து விட்டது. அகிலன் அசோகனிடம் மன்னிப்புக் கேட்டான். 

வெற்றிக்களிப்பில் விக்டரையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்பினான் அசோகன். அவனுடைய அன்புப் பிடியில் சிக்கியிருந்தது வெண்புறா. 

ஒருநாள் அசோகனின் அப்பா, அசோகன் பள்ளிக்கூடம் போகாமல் புறாக்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறானென்பதைக் கண்டு, அசோகன் வெகு விருப்பமாக வளர்த்து வந்த வெண்புறாவையும் இன்னும் இரண்டு அழகான ஜோடிப் புறாக்களையும் நண்பர் ஒருவருக்கு யாருமறியாது கொடுத்து விட்டார். 

அசோகன் வெண்புறாவைக் காணாது தவித்தான். மற்றும் இரு அழகான ஜோடிப் புறாக்களையும் காணவில்லை. அப்பாவிடம் கேட்டதற்கு அவர் ஏதும் தெரியாதென்று கூறி விட்டார். வெண்புறா இல்லாமல் மற்றப் புறாக்களைப் பார்க்க அசோகனுக்கு வெறுப்பாக இருந்தது. அன்பு நண்பனான விக்டருக்கு இரண்டு ஜோடிப் புறாக்களையும் மற்ற நண்பர்களுக்கும் புறாக்களை பகிர்ந்தளித்து விட்டான். 

புறாக்கள் எல்லாவற்றையும் கொடுத்த பிறகு அசோகன் சிலநாள் பித்துப்பிடித்தவன் போலிருந்தான். பள்ளிக்கூடம் போவதும், மற்ற நேரங்களில் பைத்தியக்காரனைப் போல் வீட்டில் அமர்ந்திருப்பதுமாகக் காலத்தைக் கழித்தான். ஒரு நாள் வீட்டின் முற்றத்திலுள்ள மாமரத்தின் கிளையில் அமர்ந்திருந்த பச்சைக் கிளியைப் பார்த்தான். பச்சைக் கிளிமேல் அவனுக்கு ஆசை பிறந்தது. 

இப்போதெல்லாம் அசோகனது உள்ளத்திலே பச்சைக் கிளி வளர்க்க வேண்டும் என்ற ற ஆசை உண்டாகியது. பச்சைக் கிளிகளைக் கண்டால் அவற்றை ஏக்கத்துடன் பார்ப்பான். அவற்றிற்கு எங்கே போவது, நீலவானிலே பறக்கும் பச்சைக்கிளிகளை வேடிக்கை பார்க்க வேண்டியதுதான் மிச்சம். 

விக்டர் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை அசோகனைத்தேடி வந்தான். அவனை மாதா கோயிலில் திருவிழாவுக்கு அழைத்தான். அசோகனுக்கு கத்தோலிக்க மக்களின் கொண்டாட்டங்களையும், அவர்களின் கோயிலையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகியது. 

அம்மாவிடம் அடம்பிடித்து ஐம்பது ரூபாய் வாங்கிப் பொக்கட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டான். 

விக்டருடன் அசோகனும் திருவிழா பார்க்கச் சென்றான். அங்கு கூட்டம் கூட்டமாக வரும் ஜனத்திரளையும் பலவித ராட்டினங்கள், அவற்றில் ஏறிக் கூச்சல் போடும் மக்களையும் காண வேடிக்கையாக இருந்தது. ஒரு பக்கத்தில் நிற்பவர்களிடம் தனது கிளிகளைக்காட்டி பேரம் பேசிக் கொண்டிருந்தான். இந்தக் கிளி பத்து ரூபாய் ! கழுத்தில் மாலையுள்ள கிளி இருபது ரூபாய் இப்படிக் கூவி விற்றுக் கொண்டிருந்தான். 

அவன் வைத்திருந்த பச்சைக்கிளிகளில் ஒன்று அழகாகப் பேசியது . அசோகன் அந்தப் பச்சைக் கிளியை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். விக்டரை அருகில் அழைத்து விக்டர்! அந்தக் கிளி எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு! என்றான். நான் அழகாக இல்லையா? அந்தக் கிளி அசோகனிடம் கேட்டது . அசோகன் வியப்பு மிகுந்தவனாய் அதனையே பார்த்துக் கொண்டிருந்தான். 

அத்தியாயம் – 5 

கிளிக்காரன் இருபது ரூபாய் தருவதானால், அந்தக் கிளியை கொடுப்பதாகச் சொன்னான். அம்மா திருவிழா பார்க்கக் கொடுத்த பணத்தில் இருபது ரூபாயை எடுத்துக் கிளிக்காரனிடம் கொடுத்து கிளியை வாங்கிக் கொடுத்தான். 

அசோகன் அன்புடன் அந்தக் கிளியை தடவிக் கொடுத்தான். அந்தப் பச்சைக்கிளிக்கு “ராஜாத்தி” என்ற அழகான பெயரையும் வைத்தான். அந்தப் பச்சைக்கிளியை கொண்டு போய் அம்மாவிடமும் அப்பாவிடமும் காட்டி மகிழ்ந்தான். 

அசோகனின் அப்பா ராஜாத்திக்கு ஏற்ற கூண்டு ஒன்று வாங்கி வந்தார். அசோகன் ராஜாத்தியைக் கூண்டில் விட்டான். 

அசோகன் பள்ளிக்கூடம் போகும்நேரம் தவிர மற்ற நேரங்களில் கிளிக்கூண்டின் பக்கத்திலேயே இருப்பான். அதற்கு நாள் தவறாமல் பாலும் பழமும் கொடுத்து வந்தான். மாலை நேரங்களில் விளையாடப் போகாமல் ராஜாத்தியுடன் கொஞ்சி விளையாடினான். அதற்கு அழகாகப் பேசக் கற்றுக் கொடுத்தான். 

நண்பர்களை அழைத்து வந்து பேசும் பசுங்கொடியான ராஜாத்தியைப் பெருமையுடன் காட்டுவான். “ராஜாத்தி நண்பர்களுக்கு வணக்கம் சொல்லு!” என்பான். ராஜாத்தி வணக்கம் என்று சொல்லும் நண்பர்களுக்கு மத்தியில் அசோகன் பல நாடுகளை வென்று வெற்றிக் கொடி நாட்டிய மாவீரன் அலெக்சாண்டரைப் போல் நின்றுகொண்டு, அவனைப் பற்றித் தம்பட்டம் அடிப்பான். 

பச்சைக்கிளியே வா, வா வா. பாலுஞ் சோறும் உண்ணவா கொச்சி மஞ்சள் பூச வா கொஞ்சி விளையாடவா என்று அசோகன் வகுப்பில் ஆசிரியர் சொல்லிக்கொடுத்த கவிமணியின் பாடலை அடிக்கடி பாடுவான். பச்சைப் பச்சைக்கிளியாம், பறக்கும் வண்ணக்கிளியாம் என்றும் அடிக்கடி பாடுவான். அப்பாவைக் கண்டால் புத்தகத்தை எடுத்துப் படிப்பது போல பாசாங்கு பண்ணியவாறு ராஜாத்தியைப் பார்த்துக் கொண்டிருப்பான். 

ஒருநாள் அசோகன் எங்கிருந்தோ ஓர் அழகிய பல நிறங்கொண்ட வண்ணாத்திப் பூச்சியைப் பிடித்து வந்தான். அதைச் சிகப்பு வர்ண நூல் கயிற்றில் கட்டி காற்றாடி போல பறக்க விட்டான். இந்த காட்சியைக் கண்டு ராஜாத்தி வேதனைப்பட்டது. ராஜாத்தி அந்த வண்ணாத்திப் பூச்சியை விட்டுவிடும்படி கூறியது. 

அசோகன் ராஜாத்தி கூறியதைச் சட்டை செய்யாது வண்ணாத்தி பூச்சியை பறக்க விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ராஜாத்தி இதைப் பார்த்துக் கண்ணீர் வடித்தது. 

வண்ணாத்திப் பூச்சி தன்னை விடுவித்துக் கொண்டு சுதந்திரமாகப் பறப்பதற்கு துடிதுடித்தது. இதைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான் அசோகன். 

அவன் சிரிப்பு அடங்குவதற்குள் நூல் கயிற்றிலிருந்து விடுவித்துக் கொண்டு வண்ணாத்திப் பூச்சி வான வீதியில் சுதந்திரமாகப் பறந்தது. அசோகன் நூல் கயிற்றை கோபத்துடன் கீழே எறிந்து விட்டு அதனை ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். 

ராஜாத்திக்கு ஒரே மகிழ்ச்சி கோட்டை விட்டு விட்டு நிற்கும் அசோகனைப் பார்த்து கீக்கீ… கீ கீ க்கி என்று கேலி பண்ணியது. அசோகனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது . வண்ணாத்திப் பூச்சி பறந்து விட்ட ஏமாற்றம் ஒரு புறம், ராஜாத்தி கேலி பண்ணியது மறுபுறம். அசோகன் கோபத்துடன் கிளிக் கூண்டைத் திறந்து ராஜாத்தியை எடுத்து அதன் தலையில் குட்டினான். 

உன்னைப் பட்டினியாகப் போட்டுக் கொள்கிறேன் பார்! என்றவாறு கூண்டிலே ராஜாத்திக்காக வைத்திருந்த பாலைக்கீழே கொட்டினான். அதற்கு உண்பதற்காக வைத்திருந்த வாழைப்பழங்களை எடுத்து எறிந்தான். ராஜாத்தியை கோபத்துடன் கூண்டில் போட்டு பூட்டினான். 

ராஜாத்தி அசோகனைப் பார்த்து நீயும் என்னைப் போலத் துன்பப்படுவாய் என் று கூறியது. ராஜாத்தி கூறியதை அசோகன் சட்டை செய்யவில்லை. அவனுக்கு கோபம் வந்துவிட்டால் போதும் தலைகால் தெரியாது. அன்புமிகக் கொண்டு வளர்த்த அந்தப் பச்சைக் கிளியை சட்டை செய்யவில்லை. 

இரண்டு நாட்களாக அசோகன் ராஜாத்திக்கு ஏதும் வைக்கவில்லை. அசோகனுக்குத் தெரியாமல் அவன் அம்மா அசோகன் இல்லாத நேரம் பார்த்துச் சிறிது பால் வைப்பாள் . “வாய் இல்லாத பிராணியை இப்படி போட்டு வதைக்கிறானே”. என்று று முணுமுணுத்தாள். அம்மா கிளிக்கு பால் வைப்பதை அசோகன் கண்டு விட்டான். என் உத்தரவு இல்லாமல் ராஜாத்திக்கு யாரும் பால் வைக்கக் கூடாது என்று கூச்சல் போட்டான். ராஜாத்திக்கு அம்மா கொடுத்த பாலை எடுத்து கீழே கொட்டிவிட்டான். அசோகன் இல்லாத சமயம் பார்த்து அவன் அம்மா ராஜாத்தியை கூண்டைத் திறந்து வெளியே விட்டுவிட்டாள். ராஜாத்தியும் விடுதலை கிடைத்து விட்டது என்று சுதந்திரமாகப் பறந்து சென்றது. 

அசோகன் வீடு திரும்பியவுடன் ராஜாத்தியைப் பார்த்தான். கூண்டு திறந்து கிடந்தது . ராஜாத்தியை காணவில்லை. அம்மாவிடம் நேரே சென்று ராஜாத்தி எங்கே என்று கேட்டான். அம்மா எனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டாள். 

அம்மா என் ராஜாத்தி பறந்து விட்டது என்று தேம்பினான் அசோகன். ஐயோ என் அன்பு ராஜாத்தி பறந்து விட்டதே! என்று அழுதான். 

வானவெளியில் வட்டமிட்டுப் பறக்கும் பச்சைக்கிளிகளை எல்லாம் ஏக்கத்துடன் பார்த்தான். அதில் ஒன்றாவது எனது ராஜாத்தியாய் இருந்து என்னிடம் வரக்கூடாதா? என ஏங்கினான். பள்ளிக்கூடத்திற்கு வேண்டா வெறுப்பாகவே சென்று வந்தான். 

அசோகனுக்கு ஒரே சோம்பலாக இருந்தது . கட்டிலில் படுத்திருந்தான். அவனுக்கு ராஜாத்தி கூறியது நினைவிற்கு வந்தது”. நீயும் ஒரு நாள் என்னைப் போல துன்பப்படுவாய் இதை நினைத்த போது அசோகனின் உடல் நடுங்கியது. அசோகன் ராஜாத்தியையே நினைத்துக் கொண்டான். ராஜாத்தி எங்கிருந்தோ பறந்து வந்து அசோகன் வீட்டு முற்றத்திலிருந்த மாமரத்தின் கிளையில் அமர்ந்தது. அசோகன் ராஜாத்தியை கண்டதும் மகிழ்ச்சியில் வெளியே வந்தான். அசோகனைக் கண்டதும் ராஜாத்தி விருட்டென்று பறந்தது. அசோகன் ராஜாத்தி என்று கூறியவாறு பின்னால் ஓடினான். 

அத்தியாயம் – 6 

அசோகன் ஓடி வருவதைக் கண்ட ராஜாத்தி வேகமாகப் பறந்தது. அசோகனும் விடாமல் வேகமாக ராஜாத்தியை பின்தொடர்ந்து ஓடினான். ராஜாத்தி பறந்து கொண்டேயிருந்தது. அசோகன் பள்ளிக்கூட ஓட்டப்பந்தயத்தில் காட்டிய திறமையெல்லாம் உபயோகித்து ராஜாத்தியை விடாமல் துரத்திக் கொண்டு ஓடினான். ராஜாத்தியும் அசோகனும் ஒரு காட்டையடைந்தனர். 

காட்டையைடந்ததும் ராஜாத்தியை காணவில்லை. மின்னல் வேகத்தில் பறந்து சென்று எங்கோ மறைந்து விட்டது. அசோகனின் கால்கள் வலி எடுக்க ஆரம்பித்தன. அங்கு பறந்து வளர்ந்திருந்த மரம் ஒன்றின் கீழ் உட்கார்ந்தான். 

சிறிது நேரத்திற்கு இளைப்பாறிய பிறகு காட்டிற்குள் சிறிது தூரம் நடந்தான். காடே அதிரும்படி சத்தம் கேட்டது. அசோகன் உடலெல்லாம் நடுங்கியது. திக்குத் தெரியாத காட்டில் தன்னந்தனியாக வந்து அகப்பட்டு கொண்டோமே என்று வருந்தினான். 

சிறிது தூரம் சென்றிருப்பான். அங்கே அவன் கண்ட காட்சி அவன் இரத்தத்தையே உறைய வைத்தது. கரும்புலி ஒன்றை மலைப்பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. புலி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பெரும் முயற்சி செய்தது . அந்தக் காட்சியைக் கண்டதும் அசோகனுக்கு அங்கிருந்து போனால் போதுமென்றாகி விட்டது . காலடி ஓசைபடாமல் மெதுவாக அங்கிருந்து நகர்ந்து விட்டான். இன்னொரு இடத்தில் குரங்குகள் கூடிக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தன. 

ஓரிடத்தில் இரண்டு சிட்டுக் குருவிகள் சந்தோசமாக விளையாடிக் கொண்டிருந்தன. இதைக் கண்டதும் அசோகன் உள்ளத்தில் உறுதி உண்டாயிற்று. கொடிய மிருகங்கள் வசிக்கும் இந்தக் கானகத்தில் சின்னஞ்சிறு சிட்டுக்கள்கூடச் சந்தோசமாக வாழவில்லையா? என்று எண்ணியவாறு துணிவேதுணை என்று கால்கள் போனபோக்கில் நடந்தான். 

மனம்போன போக்கில் நடந்து கொண்டிருந்த அசோகனுக்கு கால்வலியோடு பசியும் எடுக்க ஆரம்பித்தது. அங்கு அடர்ந்து வளர்ந்திருந்த ஆலமரத்தை அடுத்து அருவி ஒன்று சல சலவென்று சத்தமிட்டவாறு ஓடிக் கொண்டிருந்தது. அசோகன் அருகில் சென்று அருவியின் நீரை அள்ளிக் குடித்தான். அது இனிமையாக இளநீர் போலச் சுவையாக இருந்தது. 

அருவி நீரைக் குடித்த சிறிது நேரத்தில் அசோகனுக்கு மயக்கம் வருவது போலிருந்தது. சிறிது நேரத்தில் தன்னுடல் சிறிது மாறுதல் அடைந்து வருவதை உணர்ந்தான்.

அத்தியாயம் – 7 

அசோகன் பச்சைக் கிளியாக மாறிவிட்டான். அசோகனும் கிளியும், ஓர் அடர்ந்த மரத்தின் கிளை ஒன்றில் அமர்ந்தனர். மாமரத்தின் பக்கத்திலிருந்த வேம்பைத் தழுவி வந்த தென்றல் காற்று ஜிலுஜிலுவென வீசியது. அது அசோகனின் இதயத்திற்கு சற்று இதமாக இருந்தது. அசோகனுக்கு வீட்டு நினைவு ஏற்பட்டது. அப்பா, அம்மா என்னைக் காணாமல் என்ன பாடுபடுகிறார்களோ? நான் சாப்பிடாமல் அம்மா சாப்பிட மாட்டாளே. என்னைக் காணாது தங்கை கவிதா அழுவாளே, எனக்காக பலகாரங்கள் ஒழித்து வைத்திருப்பாளே, இப்படிப் பறந்து போனால் அம்மா அடையாளம் கண்டுகொள்வாளா? இப்படி கிளியாக இருந்து விட்டால் அம்மா அப்பாவை எப்படி காண்பது? அவர்களுடன் எப்படி சினிமா, கடற்கரை முதலியவற்றுக்கு போவது? பிரிய நண்பன் விக்டருடன் எப்படி கரம் விளையாடுவது, தங்கை கவிதாவுடன் எப்படி ஒளிந்து விளையாடுவது என்றெல்லாம் எண்ணும் போது அசோகனின் கண்களில் கண்ணீர் கசிந்தது. கழுத்தில் வண்ண மாலையுடைய இரண்டு கிளிகள் எங்கிருந்தோ பறந்து வந்தன. அவைகள் அசோகன் அமர்ந்திருந்த மரக்கிளையில் அமர்ந்தன. 

அசோகனின் நண்பனான கிளி, அசோகனை மற்ற கிளிகளுக்கு அறிமுகப்படுத்தியது. அசோகன் கிளியான கதையை கூறியது. “நீ மனிதப் பையனா? நல்ல பையன், எங்களோடு இருந்து விடு” என்று தேனொழுகக் கூறியது. இரண்டும் இரை தேட விடைபெற்றுப் பறந்தன. 

அசோகனுக்கு தனி மையில் அந்த காட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது. நண்பனான கிளியிடம் விடைபெற்றுப் பறந்தான் அசோகன். 

அசோகன் காட்டில் பல வகையான மிருகங்களைக் கண்டான். ஒரு தாய்க் குரங்கு தன் குட்டியை அணைத்தவாறு மரத்துக்குமரம் தாவிக் கொண்டிருந்தது . அதை வேடிக்கை பார்த்தவாறு அசோகன் பறந்தான். வானவீதியில் பறப்பது மகிழ்ச்சியாக இருந்தது. மிருகக்காட்சி சாலையில் காணாத மிருகங்களை எல்லாம் கண்டான். ஓரிடத்தில் பாம்பும் கீரியும் மூர்க்கமாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. இதை வேடிக்கை பார்க்க அசோகன் ஆவல் கொண்டு கிளைகள் அடர்ந்து இலை நிறைந்து, பச்சை கூடாரம் போல் காணப்பட்ட மரத்தின் கிளை ஒன்றில் அமர்ந்தான். அந்தக் கிளையில் வேடன் ஒருவன் பறவைகளைப் பிடிப்பதற்கு வலை விரித்து வைத்திருந்தான். அதையறியாத அசோகன் அந்த வலையில் சிக்கிக்கொண்டான். 

அசோகனுக்கு ராஜாத்தி கூறியது நினைவிற்கு வந்தது. நீயும் ஒருநாள் என்னைப்போல துன்பப்படுவாய் என்ற வார்த்தைகள் நினைவிற்கு வந்தன. ராஜாத்திக்கு இழைத்த துன்பத்தால் தான் இப்படி வதைபடுகின்றேன் என வருந்தினான். 

அசோகனைப் போன்று வேறு சில கிளிகளும், மைனாக்களும் வந்து வலையில் சிக்கின. மாலையில் வேடன் ஒருவன் கூண்டொன்றை இடுப்பில் கட்டித் தொங்க விட்டவாறு மரத்தில் ஏறினான். அசோகன் அவனை ஏமாற்றி தப்பி ஓட எண்ணினான். இறந்து விட்டதைப் போல கண்களை மூடியவாறு அசையாது கிடந்தான். அந்த மனிதன் வலையிலிருந்த எல்லாப் பறவைகளையும் கூண்டில் போட்டு அடைத்தான். அசோகனைப் பிடித்து கூண்டில் போட்டான். அவற்றை நகருக்கு கொண்டு வந்து மைனா மூன்று ரூபாய்! கிளி ஐந்து ரூபாய்! என்று கூவி விற்றான். சிறிது நேரத்தில் எல்லாம் விற்றுப் போயிற்று. அசோகனை மட்டும் யாரும் வாங்கவில்லை. அசோகன் மயங்கியது போல் கிடந்ததால் வேடனுக்கு சரியான கோபம். அசோகனைக் கெட்டியாகப் பிடித்தவாறு வெளியே எடுத்தான். மயங்கியது போல, இந்த நரிக்குறவனிடமா பாசாங்கு பண்ணுகிறாய்? உன் கழுத்தை முறித்து ரசம் வைப்பேன் என்று கூறியவாறு கழுத்தை முறிக்கப் போனான். 

ஆ! ஐயோ!… அம்மா கொல்லப் போகிறான் என்று கத்தியவாறு வேடன் கையிலிருந்த அசோகன் துள்ளினான். 

டமார் கட்டிலிருந்து கீழே விழுந்ததால் தலை சீமென்ட் தரையில் மோதியது. 

என்னடா. . . கனவு கண்டு புலம்புகிறாய் என்று அசோகனிடம் பரிவுடன் விசாரித்தாள் அம்மா. என்ன அண்ணா! என்று ஓடி வந்தாள் தங்கை கவிதா. 

அசோகன் கட்டிலில் அமர்ந்து அடிபட்ட இடத்தை தடவியவாறு இவ்வளவு நேரம் தான் கண்டது கனவு என்று எண்ணினான். கண்ட கனவை எண்ணிப்பார்த்தான். நான் இனிமேல் நல்லவனாக திருந்திய அசோகனாக, அன்புள்ளவனாக, ஒழுங்காக பாடசாலைக்கு செல்லும் மாணவனாக இருப்பேன் என்று உறுதியுடன் எழுந்து முகம், கைகால் கழுவிக் கொண்டான். விக்டரிடம் தன் உறுதியைக் கூறி இனிமேல் ஒழுங்காகப் படிப்பதாக சபதம் செய்து கொண்டான். 

அசோகன் இப்பொழுதெல்லாம் நல்லவன், பெற்றோர் சொல் கேட்பான். பிறர்பொருளை எடுக்க மாட்டான். படிப்பதையே தன் தலையாயக்கடன் என எண்ணிக் கொண்டான். வீட்டில் எல்லோருடனும் அன்பாய் இருக்கிறான். கவிதாவுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுக்கிறான். குறும்புத்தனங்கள் செய்வதை விட்டுவிட்டான். பிராணிகளுக்கு தொல்லை தரமாட்டான். நல்ல அறிவுள்ள புத்தகங்களை வாசிக்கிறான். புதினப் பத்திரிகைகளை படிக்கிறான். என்னை நல்லவனாக்கிய பச்சைப் பைங்கிளி ராஜாத்தி என்று நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துள்ளான். 

திருந்திய அசோகன் மற்ற மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறான்.

– திருந்திய அசோகன் (சிறுவர் நாவல்), முதற் பதிப்பு: 26-11-2003. மலையக வெளியீட்டகம், கண்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *