தாக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 15, 2026
பார்வையிட்டோர்: 103 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

கார்த்திகா!

எவ்வளவு அழகான பெயர்?பெயர் மட்டுமா அழகு?

திராட்சை விழியால் பார்ப்பவர்களை வீழ்த்தும் அவளது கண் ஒரு அழகு!

செவ்விதழுக்குள் கோர்வை முத்துகளாய் இருக்கும் அவளது பற்கள் ஒரு அழகு!

அவளது வளைந்த கிளிமூக்கின் ஓரத்தில் எப்போதும் ஜொலித்தபடி இருக்கும் அந்த கடுகளவே கொண்ட அந்த மூக்குத்தி ஒரு அழகு!…

அவளது கருங்கூந்தல் ஒரு அழகு!அத்தோடு அந்த கூந்தலோடு இணைந்திருக்கும் அந்த மல்லிகையின் வாசமானது அவளது அழகு மிகுந்த கூந்தலை மேலும் அழகுப்படுத்தும்…இப்படி அவளை வருணித்துக்கொண்டே செல்லலாம்…அப்படியோர் அழகையே உருவமாக கொண்டவள் அவள்!….

இவ்வளவு அழகுக்கொண்டவளிடம் நான் என்னைக் கொடுத்தது தவறொன்றுமில்லை தானே?

அது தவறில்லை தான்!ஆனால் அவள் மீதுக்கொண்டிருந்த காதலை அவளிடம் கூறாமல் இருப்பதுதான் தவறு!

அது எனக்கே தெரிகிறது!ஆனால் என்ன செய்ய?எனது காதலை சொல்ல அவளது அருகில் வரை செல்கிறேன்,பிறகு பயத்துடன் திரும்பிவிடுகிறேன்!

இப்படியிருந்தால் எப்படி நான் அவளிடம் சொல்ல முடியும்?

ஆனால் அவளை நெருங்கி திரும்பும்போதெல்லாம் என்னை புரியாத புதிராக பார்ப்பாள்!

அந்த பார்வையில் பல அர்த்தங்களும்…கேள்விகளும் நிறைந்திருக்கும்!

அந்த விழியில் ஒரு மிரட்சி தெரியும்!ஒரு மான்குட்டி வேடனிடம் சிக்கியிருந்தால் அதன் பார்வை எப்படியிருக்கும்?அதுபோல்!…

இந்த பத்தாம் வகுப்பு முடிவதற்குள்ளாக எப்படியாவது அவளிடம் காதலை சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன்…ஆனால் சொல்ல நெருங்கினேனே தவிர சொல்லவில்லை…நான் சொல்கிற வரை நாட்கள் காத்திருக்குமா என்ன?விரைவாக அரசுப்பொதுத்தேர்வானது நெருங்கியது…

ஏற்கெனவே காதலை சொல்ல பயந்துக்கொண்டிருந்த எனக்கு அரசு பொதுத்தேர்வானது கூடுதல் பயத்தை தந்தது.

முதலில் படிப்பின் மீது கவனம் செலுத்துவோம் என்று சொல்லி,அதன் மீது எனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தேன்!

அப்போதும் எனது முழு கவனத்தையும் படிப்பின் மீது செலுத்தினேன் என்று சொல்ல முடியாது!பாதி கவனம் படிப்பின் மீதும்,மீதி கவனம் அவளது மீதும் செலுத்தினேன்!…செலுத்தினேன் என்று சொல்வதைவிட அவளது மீதுதான் கவனமும் தானாக சென்றது…

எப்படியோ நல்லபடியாக பொதுத்தேர்வும் முடிந்து,ரிசல்ட்டும் வெளியானது!

ஐநூறுக்கு முந்நூற்றி நாற்பத்தி மூன்று மதிப்பெண் எடுத்து எப்படியோ எல்லா பாடத்திலும் பாஸாகியிருந்தேன்,அவளோ நானூற்றி ஐம்பது மதிப்பெண் எடுத்திருந்தாள்.

நான் எடுத்த மதிப்பெண்ணிற்கு கண்டிப்பாக ஆர்ட்ஸ் குரூப்தான் கிடைக்கும்,அவளே இந்த குரூப்பை எடுக்க நினைத்தாலும் டீச்சர்ஸெல்லாம் சேர்ந்து அவளது மண்டையை கழுவி பயாலஜி குரூப்பை எடுக்க வைத்துவிடுவார்கள்…அது தெரிந்த விஷயம்தான்

ஒரே வகுப்பு படிக்கும்போதே அவளிடம் காதலை சொல்ல முடியவில்லை!இதில் வேறு வகுப்பு போனால் சுத்தம்தான்!

இனி என்னால் அவளிடம் காதலை சொல்லவே முடியாது என்று எனக்கு நன்றாக புரிந்துப்போனது.

அவள் எந்த குரூப் தேர்ந்தெடுப்பாள்? என்று சிந்தித்துக்கொண்டிருந்த எனக்கு அவளது உயிர்த்தோழி வர்ஷா மூலமாக வந்த செய்தியானது என் இதயத்தை உடைக்கச் செய்தது!

அவள் இனி மேற்கொண்டு படிக்கப்போவதில்லை என்றும் பத்தாம் வகுப்பே போதும் என்று சொல்லி அவளது பெற்றோர்கள் அவர்களது சொந்தக்காரப் பையன் ஒருவனுக்கு அடுத்த மாதம் கட்டிக்கொடுக்கப்போவதாகவும்,என்று அவள் சொன்ன செய்தியைக் கேட்டால் உடைந்துவிட மாட்டேனா?

எனக்கு என்ன செய்வதென்றே ஒன்றும் புரியவில்லை?ஏதோ ஒன்றை பறிக்கொடுத்ததுப்போல் உணர்ந்தேன்!உண்மையில் பறிக்கொடுத்துவிட்டேன்…அவளை… இன்னொருவனுடன்…

என் காதல் அவ்வளவுதானா?அவ்வளவுதான்!இனி அவள் எனக்கு கிடைக்க மாட்டாளா?கிடைக்க மாட்டாள்!

ஐயோ!அப்போது எனது காதல்??

காதல் மனதிற்கு எவ்வளவு சுகத்தை தருகிறதோ?அதே காதல் சேராது என்று தெரிந்ததும் அந்த சுகம் தந்த சுவடின் வழியாகவே வலியையும் தருகிறது என்பதை அந்த பதின் வயதிலேயே அறிந்துக்கொண்டேன்!

இது கனவா?நிஜமா?என்று உணருகின்ற நேரத்திலேயே அவளது திருமண நாள் வந்து நின்றது.

நானோ வீட்டில் தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்தேன்…எப்படி தூக்கம் வரும்?நான் விரும்பிய பெண் ஒருத்திக்கு பொழுது விடிந்ததும் கல்யாணம்!அப்படியிருக்க எனக்கு எப்படி தூக்கம் வரும்?

அழகாக எனது காதலை அவளிடம் சொல்லியிருந்துருக்கலாமோ?சொல்லியிருந்தால் மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது?…இப்படியே நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்,திடீரென்று என்ன நினைத்தேனென்று தெரியவில்லை?

புலர்ந்தும் புலராத அவ்வேளையில் சைக்கிளை எடுத்தேன்…நேராக அவளது வீட்டை நோக்கி சைக்கிளை அழுத்தினேன்…

வாசலில் அவளது உறவினர்கள் எல்லோரும் இருந்தனர்,ஆனால் அவர்களது முகத்தில் சந்தோஷம் இடம்பெறுவதற்கு பதிலாக சோகமும் கண்ணீரும்தான் இடம்பிடித்திருந்தது.

உள்ளே நோக்கினேன்…என் அழகுப் பதுமை…கிடத்தப்பட்டிருந்தது சுற்றியும் உறவினர்கள் சூழ்ந்து நின்றுக்கொண்டிருக்க,அவளது அப்பா இடிந்துப்போய் உட்கார்ந்திருந்தார் அருகில் அவளது அம்மா,அவரது சட்டையை பிடித்தபடி கதறிக்கொண்டிருந்தார்.

“வேணாம்!வேணாம்னு என் தங்கம் சொன்னுச்சே…அவளை வலுக்கட்டாயமா அடிச்சு,உதைச்சு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வெச்சீயே…இப்போ மகராசி தனக்குத்தானே முடிவை தேடிக்கிட்டு போய் சேந்துட்டா…இப்போ சந்தோஷமாயா?இப்போ சந்தோஷமா?”

என்று அவரது சட்டையை பிடித்து உலுக்கி கேக்க,அவரோ சிலைப்போலே தனது மகளின் முகத்தை பார்த்தபடி நின்றுக்கொண்டிருந்தார்.

என்னால் நம்ப முடியவில்லை!..ஐயோ!ஐயோ!என் அழகு உயிரோட இல்லையா?இந்த பூமியை விட்டுப்போய்ட்டாளா?

அதற்குள்ளாற அந்த அம்மாவின் கதறலைக் கேட்டு கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது.

கூட்டம் கூடியதும் அந்த இடத்திலிருந்து அகன்றேன்…இல்லை!இல்லை!ஓடினேன்…

எனது சைக்கிளை வேகமாக அழுத்தியபடி “இது உண்மையாக இருக்கக்கூடாது!”
“இது உண்மையாக இருக்கக்கூடாது” என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு ஊரைவிட்டு தள்ளி வந்துக்கொண்டிருந்தேன்…

அந்த கதறல் சத்தத்தையெல்லாம்விட்டு தள்ளி வந்துக்கொண்டேயிருந்தேன்…தள்ளி வந்துக்கொண்டேயிருந்தேன்…அந்த கதறல் ஒலி கேட்காத தூரம் வரை வந்துக்கொண்டிருந்தேன்…

அவ்வளவு தூரம் வரை வந்தும் அந்த கதறல் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது…

அந்த கதறல் அவள் இறந்துவிட்டாள் என்கிற நிதர்சனத்தை உணர்த்தியது!ஆனால் அவள் இறந்ததை நெஞ்சம் ஏற்க மறுத்தது…

மறுபடியும் இது உண்மையல்ல இது உண்மையல்ல என்று சொல்லியபடி சைக்கிளை அழுத்தினேன்…அந்த கதறல் கேட்காத திசையை நோக்கி….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *