தலைமையாசிரியரைக் காணவில்லை!
கதையாசிரியர்: ரா.நீலமேகம்
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: July 5, 2026
பார்வையிட்டோர்: 127

நெல்லித்தோட்டம் அன்று காலை முதல் பரபரத்தது. ஊர் மக்கள் ஒருவருக்கொருவர் பல்வேறு கதைகளைப் பேசி வந்தனர். எல்லோரும் ஒரு நிலையில் இல்லாமல் ஒருவிதமான தவிப்புடன் இருந்தனர்.
நெல்லித்தோட்டம் மூன்றாம் நிலை நகரம் எனலாம். அவ்வூரில் உள்ள சுப்பிரமணிய சிவா உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜகணபதி முதல் நாள் காலையிலிருந்து காணவில்லை என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. ராஜகணபதி நெல்லித்தோட்டம் மக்களின் அன்பு,மரியாதையை மட்டுமல்லாமல், அந்த பள்ளியின் மாணவர்களின் அன்பையும், பாசத்தையும் சம்பாதித்தவர்.
ராஜகணபதி பள்ளியை நடத்தி வந்த முறை, அவரின் நேரம் தவறாமை, மாணவர்களுக்கு எளிமையான முறையில் கற்பித்தல், சந்தேகங்கள் தீரும் வரை புரிய வைத்தல் இவைகளில் நற்பெயர் வாங்கியவர். மிகவும் கண்டிப்பானவர். தவறுகள் செய்யும் மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து ‘ இவன் இப்படி தப்பு செஞ்சிருக்கான். நான் இவனுக்கு இந்த தண்டனையை கொடுக்க முடிவு செஞ்சிருக்கேன். நீங்க என் நிலைமையில் இருந்தா என்ன செய்வீங்க, சொல்லுங்க ‘ என்று கேட்டு எந்த விதமான பிரச்னைகளும் இல்லாதவாறு மாணவர்களை திருத்தி விடுவார். அவரின் இந்த வெளிப்படைத்தன்மை, சமயோசித யுக்தி எல்லோரையும் கவர்ந்தது.
அதேபோல் ராஜகணபதி ஆசிரியர்களிடமும் கறாராக இருப்பார். அவர்கள் கற்பித்தலில் குறைபாடுகள்,மாணவர்களிடம் பாரபட்சம் காட்டுதல் அல்லது பாடங்களை முடிப்பதில் காலம் தாழ்த்துதல் இவைகளை உடனுக்குடன் கண்டித்து விடுவார்.
ராஜகணபதி தலைமை ஏற்று இந்த ஆறு வருடங்களில் பள்ளியின் வளர்ச்சி வேகமாகவும், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் மிக உயர்ந்த நிலையிலும் இருக்கிறது.ராஜகணபதியின் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளால், நெல்லிக் தோட்டம் சுப்பிரமணிய சிவா உயர்நிலப்பள்ளி மாநிலத்தின் முதல் இருபத்தைந்து இடங்களில் வரும் நிலைக்கு உயர்ந்துள்ளது.
பள்ளி தாளாளர் முத்துச்செல்வன் சோகத்தில் உட்கார்ந்திருந்தார். காலையிலேயே காவல் துறையிடம் புகார் அளித்து விட்டு வந்து விட்டார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அதாவது காலை எட்டரை மணி முதல் காவல்
துறை ஆய்வாளர்கள் இருவர் வந்து விசாரணையை ஆசிரியர்களிடம் இருந்து ஆரம்பித்தனர்.
அனைத்து ஆசிரியர்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கருத்துதான் கூறினார்கள். அதாவது அவர் நல்ல மனிதர், நன்றாகப் பழகுபவர், அதே நேரத்தில் பணிகள் முடிப்பதில் குறைகள் இருந்தால் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் பாராமல் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார் என்று கூறினார்கள்.உடற்பயிற்சி ஆசிரியர் செல்வரத்தினம் மட்டும் ராஜகணபதி பேரில் திருப்தியாக இல்லை. அவரின் பிடிவாதம் எரிச்சல் ஏற்படுத்தியதாக கோபத்துடன் சொன்னார்.
தாளாளர் முத்துச்செல்வனும் ராஜகணபதி பற்றி நல்லவிதமாகவே சொன்னார். ” என்னிடம் சொல்லாமல் எங்கேயும் போக மாட்டார். அதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கு. கவலையாகவும் இருக்கு” என்றார் அவர்.
காவல் துறை ஆய்வாளர்கள் பின்னர் ராஜகணபதி வீட்டைப் பார்க்க முடிவு செய்து அவர் வீட்டிற்கு சென்றனர். ராஜகணபதி திருமணம் செய்து கொள்ளவில்லை. தனியாகத்தான் இருந்து வந்தார்.ஆய்வாளர்களுக்கு வீட்டினுள் ஏதும் சந்தேகத்திற்கிடமான அளவில் ஒன்றும் கிடைக்கவில்லை.
காவல் துறை ஆய்வாளர்கள் ராஜகணபதியின் கைபேசியை தொடர்பு கொண்டு தோல்வி அடைந்ததே மிச்சமானது. ‘ இவைகள் எல்லாவற்றையும் விட்டு எங்கே போயிருப்பார்’ என்ற குழப்பத்தில் ஆய்வாளர்கள் இருக்கும் நேரத்தில், இருவர் அவர்கள் அருகே ஓடி வந்தனர்.
“சார், நான் காத்தமுத்து. இவன் கலியமூர்த்தி. நாங்க ரெண்டு பேரும் பெரிய தோட்டம் பக்கத்தில இருக்கிற தாழங்குட்டை தண்ணியை எங்க வயல் பக்கம் பாச்சணும்னு முடிவு செஞ்சு அங்க உள்ள சின்ன வாய்க்கால் அடைப்பை வெட்டி திறக்க வேலை செய்ய ஆரம்பிச்சோம் அய்யா. அப்போ அந்த குட்டைக்கு கிழக்கு பக்கமா பெரிய தோட்டம் எல்லை கிட்ட இருக்கிற தாழம்புதர்ல ஒரு ஆள் மிதந்து கிடக்கிறதை பாத்துட்டு வேர்க்க விறுவிறுக்க ஓடி வரோம் அய்யா உங்க கிட்ட சொல்லணும்னு. நல்ல வேளையா இன்னிக்கு நீங்க வேற ஏதோ கேஸுக்கு வந்திருக்கீங்க. இல்லாட்டி போனா நாங்க போலீஸ் ஸ்டேஷன்ல போய் புகார் தர போயிருப்போம்.” என்று மூச்சு இரைக்க பேசினான் காத்தமுத்து.
காவல் ஆய்வாளர் அன்புராஜ், அவர் உதவியாளர் வீரபாண்டி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு அன்புராஜ் காத்தமுத்துவை கேட்டார்.
“வேற யாரு கிட்டயும் சொல்லலையே இதை? நீங்க கிட்டே போய் எதையும் எடுத்துக் கொண்டீர்களா?”
“இல்லை அய்யா, நாங்க அதை பார்த்தவுடன் நேரா இங்கதான் வரோம். ஏன்னா நீங்க இந்த பள்ளிக்கூடம் வாத்தியார் விஷயமா காலைல இங்க வர்றதை பாத்தோம். அந்த பக்கமா அது விழுந்து கிடந்ததால அது பக்கமா நாங்க போகல. ” என்றான் காத்தமுத்து.
“சரி, வாங்க போகலாம் ” என்று கூறி தாளாளரிடம் பின்னர் வருவதாகச் சொல்லி அன்புராஜ், வீரபாண்டி இருவரும் தாழங்குட்டை பக்கம் சென்றனர்.
தாழங்குட்டை அவ்வூரின் ஒரு சிறிய ஆனால் ஆழமான குளம். பெரிய குளம் தவிர இந்த தாழங்குட்டையில் சேமித்து வைக்கும் நீரையும் அங்குள்ள சிறு விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.குட்டையின் மேற்குப் பகுதியில் சிறிய வாய்க்கால் உண்டு. வேண்டும் போது அதை திறந்து கொண்டு வேலை முடித்த பின்னர் அதன் முகப்பு பகுதியை அடைத்து வைப்பார்கள். குட்டையின் கிழக்கு பகுதியில் உள்ள தாழம்புதருக்கு பெரிய தோட்டம் உள் நுழைந்து செல்லவேண்டும். அவ்வூரில் உள்ள ஒரு செல்வந்தர் தனபாலனுக்கு சொந்தமானது பெரிய தோட்டம்.
அன்புராஜ், வீரபாண்டி இருவரும் தனபாலன் திறந்து விட்ட அவருடைய பெரிய தோட்டம் வழியாக சென்று தாழங்குட்டையின் கிழக்கு பகுதி கரையில் உள்ள தாழம்புதர் அருகே சென்றனர். அதன் அருகில் மண்டிக்கிடந்த கோரைகளை மற்றவர்களின் உதவியுடன் கவனமாக அகற்றி, அங்கு குப்புற நிலையில் மிதந்து கிடந்த உடலை, அன்புராஜ், வீரபாண்டி இருவரும் கைகளில் உறை அணிந்து கரையில் மெதுவாக இழுத்து புரட்டிப் போட்டனர்.
அவர்கள் இருவர் மட்டும் அல்ல, அங்கு கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். காரணம் அது ராஜகணபதியின் சடலம்.
“அய்யோ, ரொம்ப நல்ல மனுஷன். பள்ளி கூடத்துக்கு, மாணவர்களுக்கு எத்தனை நல்லது செஞ்ச மனுஷனுக்கு இப்படி ஒரு முடிவு வரணுமா? தெய்வத்துக்கு கருணையே இல்லையா?” என்றவாறெல்லாம் பேசியவாறு மக்கள் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தனர். ” சார், சார், உங்களைப் போல கணக்கு, இங்கிலீஷ் இதையெல்லாம் ஈஸியா எங்களுக்கு புரியற மாதிரி சொல்லி கொடுக்க யார் சார் எங்களுக்கு கிடைப்பாங்க? உங்களுக்கு ஏன் சார் இப்படி நடந்தது? எங்களால் தாங்கிக்கொள்ள முடியல சார் ” என்று மாணவ, மாணவிகள் கதறினார்கள்.
அதே நேரத்தில் அன்புராஜ் நெல்லித்தோட்டம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு குற்றப் புலனாய்வுப் பிரிவு குழுவினரை உடனே வரச்சொன்னார். அங்கே நின்று கொண்டிருந்த மக்களை சற்று தொலைவில் ஒதுங்க ஆணையிட்டார். தனபாலனிடம் பெரிய கயிற்றுக்கு ஏற்பாடு செய்து, அதனை வைத்து ,அந்த இடம் சுற்றி ஒரு எல்லை அமைத்தார்.
அரைமணி நேரத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு குழுவும் அவர்களுடன் இன்னும் இரண்டு காவல் ஆய்வாளர்களும் வந்து சேர்ந்தனர்.
குற்றப்பிரிவு உயர்நிலை ஆய்வாளர் இந்திரநீல் வண்டியிலிருந்து இறங்கி வெகுவேகமாக அன்புராஜ் அருகில் வந்து தகவல்கள் கேட்டறிந்து கொண்டார். பிறகு அங்கிருந்த ராஜகணபதியின் சடலத்தை உற்று கவனித்தார். ” இது ஏதோ வெறிபிடித்த நபர் செய்த கொலையே” என்றார். பிறகு தடயவியல் ஆய்வாளர் ரகோத்தமனை அழைத்து ” நீங்கள் உங்க வேலையை தொடங்குங்க. இம்மீடியட் அனாலிசிஸ் படி என்ன காரணங்கள் நீங்க கணிக்கறீங்க அதை சொல்லுங்க ரகோ.எப்ப இது நடந்திருக்கலாம்னு நினைக்கிறீங்க அதையும் சொல்லுங்க” என்றார்.
ரகோத்தமன் அவருடைய உதவியாளர் திரவியா இருவரும் ராஜகணபதியின் உடலை பரிசோதிக்க ஆரம்பித்தனர்.இருபது நிமிடங்கள் நேரம் எடுத்துக் கொண்ட பின்னர் உதவியாளர் திரவியாவுடன் ஆலோசனைகள் செய்தபின் ரகோத்தமன் கூறினார்.
“இந்திரநீல், இவருடைய தலையில் முக்கியமாகப்பின் பகுதியில் ஒரு பெரிய உருட்டுக்கட்டை, அழுத்தமான கம்பு முனை, ஒரு பகுதியில் உலோகம் பதித்த கட்டை அல்லது பலமான கழி, உலோகக்கம்பி, இது போன்ற ஆயுதம் கொண்டு பல முறை அதே இடத்தில் தாக்கப்பட்டு உள்ளது.
அடித்து கீழே குப்புற விழுந்ததில் மூக்கு உடைபட்டு இருக்கு.
திரும்பி தடுக்க முயன்ற போது மீண்டும் அடிபட்டு கைவிரல்களில் முறிவு.
வாய்ப்பக்கம் அந்த ஆயுதத்தால அடிச்சதால உதடு கிழிந்து, முகவாய் வீங்கி உள்ளது. பற்கள் உடைந்திருக்கின்றன. முதலில் பின்புறம் தாக்குதலும் பிறகு முற்பகுதியிலும், பிறகு அதே பின்புற இடத்தில் பலமுறை தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார் இவர்.
சற்றேறக்குறைய இருபத்தி நான்கு மணிநேரம் முன் இவர் மரணித்திருக்கிறார் என்று கணிக்கலாம். முந்தாநாள் இரவு ஒன்பது முதல்
பத்து மணிக்கான இடைவெளியில் இவர் உயிர் போய் இருக்கிறது என்று ஊகிக்கப்படுகிறது.
இவரைத் தாக்கியது வேறு இடம். பிறகு இழுத்து வந்து இங்கு தள்ளப் பட்டிருக்கிறார். ஆடைகளில் உள்ள மண், சேறு இதைச் சொல்கிறது. தண்ணீரில் நனைந்ததால் சில இடங்களில் மட்டுமே கை ரேகைகள் தென்படுகிறது. அதை பரிசோதித்து சொல்ல முடியும்.
அல்லது கால்,கைகளைக் கட்டி பின்னர் தூக்கி வந்து இங்கே தள்ளி விட்டு பிறகு கயிறை அறுத்துச் சென்றிருக்கும் வாய்ப்பு உள்ளது.ஏனெனில் கயிறு போன்ற அடையாளங்கள் கால், கைகளில் இருக்கின்றன “
இவ்வாறு அவர் கூறியவுடன், உடலின் முழு பரிசோதனைக்காக சோதனைக் கூடத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கச் சொல்லி வீரபாண்டியிடம் இந்திரநீல் கூறினார்.
பிறகு அன்புராஜிடம் முழு விவரங்களையும் கேட்டறிந்தபின், ” நீங்க என்ன ஊகிக்கறீங்க அன்பு?” என்றார்.
“சார், எனக்கு அந்த உடற்பயிற்சி ஆசிரியர் செல்வரத்தினம் மேல் சந்தேகம் இருக்கு. இதுக்கு முன்னாடி இங்கே பல வருஷம் ஃபெயிலாகி ப்ளஸ் டூவில் படிச்சிட்டு இருந்த மாணவன் இரணியன் பத்து நாளைக்கு முன்னாடி ராஜகணபதி கிட்ட சண்டை பிடிச்சு கொலை பண்ற அளவுக்கு மிரட்டிட்டு போனான்னு கேள்விப்பட்டேன். அவனை கூட்டி வர இந்த ஊர் ஆட்கள் போயிருக்காங்க சார்”. என்றார் அன்புராஜ்.
பின்னர் இந்திரநீல் அன்புராஜ், வீரபாண்டி இருவருடனும் ராஜகணபதி வீட்டிற்கு சென்றனர். அவரின் உதவியாளர் வத்சலா வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சோதனை செய்தாள். இந்திரநீல் ராஜகணபதி உபயோகித்து வந்த மேஜை, அலமாரிகள், புத்தகங்கள் இவைகளை ஆராய்ந்தார். அவருக்கு கடந்த வருட டயரி ஒன்று கிடைத்தது. அதில் சில பக்கங்களில் சில குறிப்புகள் எழுதி இருந்ததை படித்து விட்டு அதை எடுத்து வத்சலாவிடம் கொடுத்தார். இதனிடையே வத்சலா சில கசங்கிய பேப்பர்களை எடுத்து வந்து இந்திரநீலிடம் காண்பித்து அதையும் பத்திரப்படுத்தி வைத்தாள்.
“ராஜகணபதியின் செல் ஃபோன் கிடைச்சுதா?” என்று கேட்டார் அன்புராஜை கேட்டார் இந்திரநீல்.
” அந்த குட்டைத்தண்ணீல விழுந்துடுச்சுன்னு நம்பறோம். வீரபாண்டி அதைத்தேட ஆட்களை ஏற்பாடு செஞ்சிருக்கார் சார். ” என்றார் அன்புராஜ்.
“சரி, வாங்க, நாம தாளாளர் வீட்டுக்கு போவோம். அங்கேயே எல்லா டீச்சர்களையும் வரச்சொல்லிடுங்க. இரணியனையும் அங்கேயே வரட்டும் ” என்று கூறி விட்டு வெளியே வந்தார்.
தாளாளர் வீட்டுக்கு செல்லும் வழியில் ராஜகணபதி வீட்டில் தான் பார்த்ததையும், அவருடைய ஒரு பெட்டியிலிருந்து எடுத்த வங்கி புத்தகத்தையும் காண்பித்து அவள் கருத்தை விவரித்தாள்.
தாளாளர் வீட்டை அடைந்தவுடன் இந்திரநீல் அங்கே வந்திருந்த இரணியனை முதலில் உள்ளே அழைத்தார். வத்சலாவும் அவருடன் அறைக்குள் சென்றாள். இவர்கள் விசாரணை செய்ய வசதியாக முத்துச்செல்வன் ஒரு அறையை ஏற்பாடு செய்திருந்தார்.
இரணியன் நல்ல வாட்டசாட்டமாக ஆறடி உயரத்தில் இருந்தான். சு.சி.உயர்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவன். ஒன்பதாம் வகுப்பிலிருந்து அவனை தேர்ச்சி பெறச் செய்வதே ஆசிரியர்களுக்கு கடினமான வேலையாக இருந்தது. எல்லா வகுப்புகளிலும் ஓரிரு வருடங்கள் அதிகமாக உட்கார வைத்து ஒரு வழியாக பனிரெண்டாம் வகுப்பு வந்து சேர்ந்தான். இத்தனைக்கும் அவன் பெரிய செல்வந்தனும் இல்லை. பனிரெண்டாம் வகுப்பிற்கு வரும் முன்னரே பலமுறை ராஜகணபதியிடம் தண்டனை பெற்றவன். வகுப்பில் படிக்கும் பெண்களைச் சீண்டி வம்பு செய்வதற்கும், தேர்வுகளை சரியாக எழுதாதற்கும், தேர்வு நாளில் பள்ளி வராமல் இருப்பதற்காகவும் கடுமையான வார்த்தைகளால் ராஜகணபதி திட்டியுள்ளார்.
பள்ளியை விட்டுச் சென்றவன் ஒரு நாள் வெளிப்புறத்தெருவில் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்டபோது, அவ்வழியே சென்ற ராஜகணபதி அவனைக் கண்டித்தது மட்டுமல்லாமல் காவல் துறையை தொடர்பு கொண்டு புகார் கொடுத்து விட்டார். காவல்துறை அவனைக் கைது செய்து ஒரு மாதம் வரை சிறையில் இருக்கும் நிலைக்கு தள்ளினர். அவன் தாய் வந்து உறுதி தந்ததாலும், ராஜகணபதி புகாரை திரும்பப் பெற்றதாலும் அவனை வெளியே விட்டனர்.
இரண்டு வாரங்கள் முன்பு, சிறையிலிருந்து வந்ததும் நேராக ராஜகணபதி வீட்டிற்கு வந்து அவரை கண்டபடி தரக் குறைவாகப் பேசி, அவன் விஷயங்களில் தலையிட்டால் உயிர் போய்விடும் என்று சொல்லி மிரட்டினான். அவனுடன் இன்னும் இரண்டு முரடர்கள் இருந்தனர். இதனை ஊர் மக்கள் பார்த்தனர்.
அவனை உட்கார வைத்து இந்திரநீல் ” ஏம்பா இரணியா, அவசரப்பட்டு கோபத்தில ராஜகணபதியை கொலை செஞ்சுட்டியேப்பா, என்ன காரணம்?” நேரடியாக இவ்வாறு கேட்டவுடன், வெலவெலத்துப் போய்விட்டான் இரணியன்.
“சார், ராஜகணபதி சார் செத்துட்டாரா? என்ன சார் சொல்றீங்க? எனக்கு எதுவுமே தெரியாது சார்! நான் பத்து நாள் முன்னாடி வந்து அவர்கிட்ட சண்டை போட்டு மிரட்டின மாதிரி பேசினது உண்மைதான் சார்! ஆனால் அவரை கொலை செய்யணும் அப்படில்லாம் கனவுல கூட நினைக்கல சார். அவர் என்னை கண்டிச்சாரு திட்டினாரு, எல்லாம் கரெக்ட் சார். என் நல்லதுக்குதான் சொன்னாரு. அவரோட சண்டை போட்டுட்டு நான் ஊருக்கு போய்ட்டேன் சார். இன்னிக்கு காலைலதான் வந்தேன் சார்.” என்றான் இரணியன்.
“எந்த ஊருக்கு, எதுக்காக போனே நீ” என்று இந்திரநீல் கேட்டார்.
“புளியங்குன்றூர் போனேன் சார். எனக்குத் தெரிஞ்ச நண்பர்கள் அங்கே செங்கல் சூளை நடத்தி பிஸினஸ் பண்றாங்க. அதுல நானும் சேர்ந்து கொஞ்சம் காசு சம்பாதிக்கலாம்னு முடிவு செஞ்சு இருந்த பணத்தை எடுத்துட்டு போய்ட்டு அங்கயே இருந்து வேலை பாத்துட்டு இன்னிக்கு காலைல வந்தேன் சார். மத்தபடி ராஜா சார் வீட்டுப் பக்கம் போகல சார். எனக்கும் அவருக்கும் சரிப்படாம போய்டுச்சு, ஆனால் அவரு நல்லவருதான் சார்”. என்றான் இரணியன்.
“சரி, வெளியே உட்காரு, நான் கூப்பிடும்போது உள்ள வா”. என்று அவனை வெளியே அனுப்பிவிட்டு “அன்புராஜ், புளியங்குன்றூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் பண்ணி இவன் சொல்றதை கொஞ்சம் கன்ஃபர்ம் பண்றீங்களா?” என்று இந்திரநீல் சொன்னார்.
அதன் பின்னர் ஒவ்வொரு ஆசிரியரையும் விசாரணை செய்தார். கடைசியாக வந்த உடற்பயிற்சி ஆசிரியர் செல்வரத்தினத்திடம் இந்திரநீல் கேட்டார்.” சார், உங்களுக்கும் ராஜகணபதி சாருக்கும் ஆகாது, எப்பவும் ஏதாவது ஆர்க்யூமெண்ட், சச்சரவுகள் இருந்ததுன்னும், அவருக்கு சரியான ஒத்துழைப்பு நீங்க தராமல் இருந்தீங்கன்னும், எல்லோரும் கமெண்ட் பண்றாங்க. அதைப்பத்தி நீங்க என்ன சொல்றீங்க?”
“சார், நான் அவரோட நிறைய முறை வாக்குவாதம் செஞ்சிருக்கேன். மறுக்கலை. ஆனால் அதெல்லாம் பசங்களோட உடற்பயிற்சி தொடர்பாதான். பல நேரங்களில் மத்த ஆசிரியர்கள் சிலபஸ் முடிக்கறதுக்காக, என்னோட உடற்பயிற்சி கிளாஸ் நேரத்தை விட்டுக் கொடுக்க சொல்வார். அதை
காம்பன்ஸேட் செய்யறதுக்கு ஏதாவது லீவு நாளை செலக்ட் பண்ணி கொடுப்பார். சில நேரங்கள்ல லேட் ஈவினிங் வச்சுக்க சொல்வார். இது சம்பந்தமாக அடிக்கடி அவரோட நான் சண்டை போடுவேன். உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களை மாத்தணும்னு சொல்லி வற்புறுத்திட்டே இருப்பேன். பட்ஜெட் இல்லை, பணம் இல்லைன்னு கடந்த ரெண்டு வருஷமா சொல்லி வந்ததால், பெருசா சண்டை போட்டுட்டேன் ஒரு நாள். உதவியா வர்ற பணத்தை நீங்களும் சேர்ந்து அமுக்க பாக்கறீங்களான்னு கேட்டதும் அவரு என்னை அடிக்க வந்துட்டாரு கோபத்துல. எங்கிட்ட வச்சுக்காதே. அப்புறம் உனக்கு நான் யாருங்கறதை காட்டிடுவேன்னு சொல்லிட்டு நான் வேகமா போய்ட்டேன் சார். இவ்வளவுதான் சார் எனக்கும் அவருக்கும் இடையில. வேற அவரை கொலை பண்ற அளவுக்கு நான் மோசமானவனும் இல்லை. அவரும் நல்லவர்தான் சார். ரொம்ப ஸ்ட்ரிக்ட் பட் நல்லவரு தான். அது என்னவோ எனக்கும் அவருக்கும் சரிப்படாம போயிடுச்சு”. என்று சொன்னார் செல்வரத்தினம்.
” ஓகே, நேத்து, முந்தைய நாள் எல்லாம் நீங்க எங்கே இருந்தீங்கன்னு சொல்றீங்களா, ஏன்னா ரெண்டு நாளா நீங்க ஸ்கூலுக்கு வரலைன்னு சொன்னாங்க ” என்று இந்திரநீல் கேட்டார்.
” என் வைஃப்க்கு உடல்நலம் சரியில்லைன்னு பக்கத்தில இருக்கிற மேலங்குடி ஆயுர்வேத டாக்டரிடம் சிகிச்சைக்காக அழைச்சிட்டு போனேன். ரெண்டு நாளும் காலைல போய்ட்டு ராத்திரிதான் வந்தோம். டாக்டர் அட்வைஸ்படி அங்கேயே இருந்து ஒரு நாளைக்கு ரெண்டு டோஸ் எடுத்தப்புறம் மறுபடியும் டாக்டர் செக் அப் செஞ்சுட்டு திரும்ப வந்தோம். இதுதான் அந்த கிளினிக். நீங்க வேணும்னா விசாரிக்கலாம்.” என்று கூறி, அந்த மருத்துவரின் முகவரி அட்டையை காட்டினார் செல்வரத்தினம்.
அதை வாங்கிப் பார்த்து இந்திரநீல் வீரபாண்டியிடம் கொடுத்து “இவங்களுக்கு ஃபோன் செஞ்சு செல்வரத்தினம் அவரு வைஃப் ட்ரீட்மெண்ட்க்காக வந்திருந்தாங்களான்னு கன்ஃபர்ம் பண்ணி சொல்லுங்க வீரபாண்டி” என்று கூறி விட்டு ” நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க செல்வரத்தினம், நான் கூப்பிடுறேன்” என்றார். ” சரி சார்” என்று சொல்லி செல்வரத்தினம் வெளிப்பக்கம் சென்று அமர்ந்தார்.
இதற்குள் அன்புராஜ் வந்து ‘ இரணியன் புளியங்குன்றூருக்கு சென்றது உண்மை’ என்று சொன்னார்.
இந்திரநீல் இரணியனை உள்ளே அழைத்து ” இரணியன், இப்ப நீ போகலாம். நாங்க கூப்பிடறப்போ வந்தா போதும். ஆனால் வெளியூர் எங்கேயும் போகக்கூடாது” என்று கட்டளை இட்டார்.
“நிச்சயமா சார் . இங்கேயாதான் இருப்பேன் ” என்று சொல்லி விட்டு அவன் புறப்பட்டான்.
“வத்சலா,அடுத்ததா நாம் விசாரணை செய்ய வேண்டியது, தாளாளரை. முத்துச்செல்வன் இப்போ எங்கே இருக்கார் ” என்று கேட்டார் இந்திரநீல்.
“சார், அவருக்கு வேறு ஒரு வீடு தோட்டத்தில இருக்காம்.அங்கே போயிருக்கார் சார், இங்கே ஒரே சலசலப்பா இருக்குங்கறதால. அமைதியா அங்கே போய் இருக்கேன்னு டீச்சர்கள்ட்டே சொல்லிட்டு போனார்.” என்றாள் வத்சலா.
இதனிடையே வீரபாண்டி இந்திரநீலிடம் செல்வரத்தினம் சிகிச்சைக்காக மேலங்குடியில் ரெண்டு நாட்களும் சென்றது சரியான தகவல் என்று கூறினார். இந்திரநீல் செல்வரத்தினத்திடம் இரணியனிடம் சொன்னதையே சொல்லி அவரை அனுப்பி வைத்தார்.
பின்னர் எல்லோரும் முத்துச்செல்வன் தோட்டத்து வீட்டிற்கு கிளம்பிச்சென்றனர்.
முத்துச்செல்வனின் தோட்டம் தனபாலன் தோட்டத்தை அடுத்து உட்புறமாக அமைந்திருந்தது. அவரின் தாத்தா கட்டிய அந்த காலத்து பெரிய அழகான பங்களாவும் அதற்குள்ளே இருந்தது. ஒரு சில மாற்றங்களை தற்கால நடைமுறைக்கேற்ப செய்து மிகவும் நல்ல முறையில் பராமரித்து வந்திருந்தார் முத்துச்செல்வன். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் தாளாளர் தன் மனைவியுடன் இந்த பங்களாவுக்கு வந்துவிடுவார். அவருக்கு வாரிசு இல்லாத நிலையில் தன்னுடைய தூரத்து உறவினரின் பையனை அவன் பிறந்த பதினைந்து நாட்களில் தத்து எடுத்து, மனோகர் என்று பெயர் சூட்டி, அவனைவளர்த்து, நல்ல முறையில் படிக்க வைத்து தற்போது அயல்நாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தின் மேலதிகாரியாக பணி புரிகிறான். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மனோகர் நெல்லித்தோட்டம் வந்து போவான்.
இந்திரநீல் மற்றும் அவருடன் இருந்த மற்றவர்களும் முத்துச்செல்வன் பங்களாவுக்கு சென்றபோது வாயிலில் வந்து அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார் முத்துச்செல்வன்.
எல்லோருக்கும் சிற்றுண்டி, பழச்சாறு, இளநீர் இவைகளை கொடுத்து உபசரித்தார் அவர். பின்னர் இந்திரநீல் ” நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்” என்றார்.
வத்சலாவும் மற்றவர்களும் “நீங்கள் சாருடன் பேசிட்டு இருக்கற நேரத்தில நாங்க இந்த பங்களா, தோட்டத்தை சுத்தி பாக்கலாமா ” என்று முத்துச்செல்வனை பார்த்து கேட்டாள்.
அவர் உடனே “ஓ யெஸ், தாராளமா, இருங்க என் வீட்டு சமையல் பணியாளரை உங்களோடு அனுப்பறேன். அவங்க எல்லா இடத்தையும் காண்பிப்பாங்க” என்று கூறி ” ராணி, இங்கே வாங்கப்பா” என்று கூப்பிட்டு அங்கு வந்த பெண்மணியிடம்” இவங்களுக்கு நம்ப பங்களாவை சுத்தி காமிங்க” என்றார்.
ராணி இவர்கள் எல்லோரையும் உள்ளே அழைத்துச் சென்றாள். அறைகளில் இருந்த அந்தக் கால மர வேலைப்பாடுகளையும், கட்டுமான முறைகளையும் ரசித்தபடி பார்த்து வந்தாள். அன்புராஜ், வீரபாண்டி இருவரும் அங்குள்ள ஒவ்வொரு பொருளையும் உற்று பார்த்தவாறு இருந்தனர். ஒரு அறையில் ஒரு மூலையில் வைத்திருந்த மூங்கில் கூடைகளுக்கு பின்னால் இருந்த ஒரு பொருள் அவர்கள் எல்லோருக்கும் கண்ணில் பட்டது.
‘இது ஒரு நல்ல மூங்கில் தடி போல இருக்கு, ஆனால் மேல் பக்கம் ஒரு மாதிரியா இருக்கு, நல்லா பளபளன்னு எண்ணெய் தடவி வாட்டி, முத்தின மூங்கில் கழியில் செஞ்சது மாதிரி இருக்கு. ஆனால் இங்கே ஏதோ ஒரு மூலையில் ஒதுக்கியோ இல்லை அலட்சியமாவோ வச்சிருக்காங்களே, ஏன்னு புரியலை’ என்று தனியாக தன் மனதில் சிந்தித்தவாறு, மற்ற இடங்களை எல்லாம் பார்த்து ரசித்தவாறும் அவ்வப்போது ராணியிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே சென்றாள் வத்சலா.
“இந்த ரூம்லதான் அம்மா, நம்ப சாரும் மத்த ஸ்கூல் சார் எல்லாம் வந்தா சந்திச்சு பேசுவாங்க.அடிக்கடி அந்த ராஜகணபதி சார்தான் வருவாங்க அம்மா.” என்றாள்.
“ரூமை சுத்தம் செய்யலை போலிருக்கே, தூசியா இருக்கற மாதிரி இருக்கு ஆனால் ஒரு பக்கம் சுத்தமா இருக்கே அந்த மேஜை, நாற்காலி, பீரோகிட்ட? ஏன் அப்படி ” என்று கேட்டாள் வத்சலா.
“எனக்கு தெரியாது அம்மா. இந்த ரூம், அய்யாவோட ஆஃபீஸ் ரூம், பெட்ரூம் இதையெல்லாம் மாடசாமி அண்ணன்தான் சுத்தம் செய்வாரு. சமையலறை,
டைனிங் ஹால் நான் பாத்துப்பேன். மத்த இடங்களை தங்கராசு அண்ணன் செய்வாரு.” ராணி சொன்னாள்.
“மாடசாமி, தங்கராசு இவங்களை நான் பாக்கணுமே, எங்கே இருக்காங்க அவங்க?”என்று கேட்டாள்.
“மாடசாமி அண்ணன் ஊருக்கு போயிருக்காரு.தங்கராசு அண்ணன் பின்னாடி தோட்டத்திலதான் இருப்பாரு.அதையும் அவருதான் பாத்துக்கறாரு. வாங்க நான் அழைச்சிட்டு போறேன் ” என்று சொல்லி ராணி பின்வாசலை நோக்கி நடந்தாள்.
“ஓகே” என்று சொல்லி நகர்ந்த வத்சலா கண்ணில் பட்ட ஒரு பொருள் வித்தியாசமான முறையில் இருந்தது. கையுறை மாட்டி அதை எடுத்து வீரபாண்டி கையில் வைத்திருந்த நெகிழிக்குள் போட்டுவிட்டு ” இதை ஃபாரென்ஸிக் டாக்டரை பரிசோதிக்க அனுப்புங்க” என்றாள்.
தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே நின்று கொண்டிருந்த தங்கராசு ராணியுடன் இன்னும் சிலரும் வருவதைப்பார்த்து அவர்கள் அருகே வந்து கேட்டான்.” யாரு புள்ள இவங்க? என்ன வேணும்? ஏதாவது இளநீர் பறிச்சு தரணுமா?”
“அண்ணே, இவங்க எல்லாம் போலீசு, அந்த அக்கா ஆஃபீஸரு, உங்களையும், மாடசாமி அண்ணனையும் பாக்கணும்னாங்க, அந்தண்ணந்தான் ஊருக்கு போயிட்டாரே, அதனாலே உங்க கிட்ட அழைச்சிட்டு வந்தேன் ” என்ற ராணி தொடர்ந்து ” அம்மா, எனக்கு கொஞ்சம் சமையலறை வேலை இருக்கு. இந்த அண்ணன் உங்களுக்கு உதவியா இருப்பாரு. நீங்க இன்னும் மத்த இடத்தை சுத்தி பார்க்க.” என்று கூறிவிட்டு தங்கராசு பக்கம் திரும்பி” அண்ணே, எனக்கு வேலை இருக்கு” என்று சொல்லி முடிக்கும் முன்பே தங்கராசு” நீ போ புள்ளே, உன் வேலையைப் பாரு.நான் இவங்களுக்கு எல்லாம் சுத்தி காட்டுறேன்.” என்றான்.
“இந்த இடத்திலேர்ந்து அந்த குளத்து மூலை வரைக்கும் நம்ப தோட்டந்தான். வாங்க நடந்துகிட்டே பேசலாம். இது பாருங்க, இந்த மாதிரி மாதுளை காஷ்மீர் பக்கத்தில்தான் இருக்கு. இந்த ஆரஞ்சு மரத்தில காய் பாத்தா பச்சையாவே இருக்கும். ஆனால் டேஸ்ட் அவ்வளவு இனிப்பு. இது செவ்வாழை. ” என்று உற்சாகத்துடன் தங்கராசு விளக்கம் சொல்லிக்கொண்டே நடந்தான். மூவரும் அவனைப் பின் தொடர்ந்தாலும் எல்லா இடத்தையும் நோட்டமிட்டவாறே நடந்தனர்.
சிறிது தொலைவில் தோட்டத்தின் சுவர் மூலையில், தீயில் ஏதோ சிலவற்றை எரித்தது போல் தெரிந்தது. அருகில் சென்று பார்த்த வத்சலா, தங்கராசுவைப் பார்த்து கேட்டாள். ” தங்கராசு, இங்க என்னத்த போட்டு கொளுத்திருக்காங்க? நீங்களா இப்படி செஞ்சீங்க?”
” இல்லீங்க அம்மணி. மாடசாமி முந்தாநாள் காலைலன்னு நெனைக்கிறேன், மாடசாமி கொளுத்திட்டிருந்தான்.என்னன்னு கேட்டதுக்கு ஏதோ அய்யா ‘ இதெல்லாம் வேண்டாத குப்பை பேப்பர், தோட்டதத்தில போட்டு எரிச்சுடு’ ன்னு சொல்லி கொடுத்தாருன்னான்.” என்றான் தங்கராசு.
வத்சலா ஒரு சிறு மரக்குச்சியை எடுத்து அரைகுறையாக எரிந்திருந்த சிலவற்றை எடுத்து நோட்டமிட்டாள். தங்கராசுவை அங்கிருந்து அப்புறப்படுத்த எண்ணி ” தங்கராசு, எனக்கும், உள்ளே ரெண்டு அதிகாரிங்களுக்கும் இளநீர் பறிச்சு தரமுடியுமா” என்று கேட்க, ” இதோ, இப்ப பறிச்சு கொண்டாறேங்க, நீங்க தோட்டத்தை பாத்துட்டு இருக்க. அஞ்சு நிமிஷத்துல வர்றேன்” என்று சொல்லி தங்கராசு எதிர் சுவர் அருகே இருக்கும் தென்னை மரங்களை நோக்கி வேகமாக நடந்தான்.
இதனிடையே முத்துச்செல்வனிடம் பேசிவிட்டு இந்திரநீல் வத்சலாவை நோக்கி வேகமாக வந்தார். வத்சலா சேகரித்து வைத்திருந்த பொருள்கள் பற்றி அவரிடம் சொல்லிவிட்டு அவள் கையில் அரைகுறையாக எரிந்திருந்த பேப்பர், ஒரு அட்டை இவைகளை காண்பித்தாள்.
இந்திரநீல் இதை நோட்டமிட்டு விட்டு தனியாக ஒரு நெகிழிப்பையில் போட்டு பத்திரப்படுத்தச் சொன்னார். “முத்துச்செல்வன் ஏதோ ஃபோன் பேசிவிட்டு வருகிறேன் என்று சொன்னார். நாம் இன்னும் அந்த கடைசிவரை போய் பார்க்கலாம்” என்றார். இதற்குள் இளநீர் கொண்டு வந்திருந்த தங்கராசுவிடம் மாடசாமி எந்த ஊருக்கு போயிருக்கிறான் என்று கேட்டார்.
தங்கராசு “குன்றிமணிக்காட்டூர் ங்கிற ஊருக்கு போயிருக்கான் ஐயா. இங்கேருந்து சுமாரா எம்பது, தொண்ணூறு கிலோமீட்டர் இருக்கும்னு நினைக்கிறேன் ஐயா” என்றான்.
அதைக் காதில் வாங்கிக் கொண்ட இந்திரநீல் தோட்டத்தின் கடைப்பகுதிச்சுவர், அதையொட்டிய இரும்பு கதவு அருகே சென்று பார்வையிட்டார். வத்சலாவும் அவரைத் தொடர்ந்து சென்று ஏதேனும் கீழே தென்படுகிறதா என்று தேடினாள்.அப்போது இந்திரநீல் அந்த கதவின் ஓரத்தில் ஒரு பொருளையும், வேறொன்றையும் பார்த்து விட்டு அவளிடம் காண்பித்தார். வத்சலா உடனே கைபேசி மூலம் ரகோத்தமனை அங்கு வரும்படி அழைத்தாள்.
ரகோத்தமன் வந்து சேர்ந்தவுடன் அவரிடம் வத்சலா சேகரித்து வைத்திருந்த பொருள்களை கொடுத்து விட்டு, இரும்பு கதவின் மீது படிந்திருந்த சிறிய கிழிசல் துணியையும், இரத்தக்கறை போல் இருந்ததையும் காண்பித்தாள். ரகோத்தமன் அவைகளையும் நெகிழியில் இட்டார். பிறகு மூவரும் கதவைத்திறந்து பின்புற குறுகலான பாதை எங்கே செல்கிறது என்று நோக்கினர். ஒரு பத்தடி தூரம் சென்ற வரப்பு போன்ற பாதை சற்று திரும்பி பக்கத்து தனபாலன் தோட்டத்தின் பின்புறம் உள்ள தாழங்குட்டை வரை சென்றது. வழி நெடுக கரடுமுரடான கற்களும், முட்செடிகளும் இருந்தன. வத்சலா, இந்திரநீல் இருவரின் பார்வைகளும் ஒரு முட்புதரின் அடியில் பதிந்தன. மிகவும் கவனமாக வத்சலா அதை எடுத்தாள். அது காதறுந்த ரப்பர் செருப்பு சிறிது இரத்தக்கறையுடன் இருந்தது. ரகோத்தமன் அதையும் நெகிழியில் இட்டார். பிறகு மூவரும் குட்டை வரை சென்று திரும்பி வந்தனர்.
தோட்டத்தின் உள்ளே வந்த போது முத்துச்செல்வன் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார். ” என்ன சார், காம்பவுண்ட் தாண்டி கடைசி வரைக்கும் போயிட்டு வர்ற மாதிரி இருக்கே சார்? தோட்டம் எப்படி இருக்கு ? இளநீர் சாப்டீங்களா? ” என்று கேட்டார்.
இந்திரநீல் ” அருமையான தோட்டம் சார். உங்க வேலைக்காரங்க நல்லவிதமா மெயின்டெய்ன் பண்றாங்க. அவங்களை பாராட்டணும். தங்கராசு சொன்னாரு இன்னொரு பணியாளர் ஊருக்கு போய் இருக்கறதா” என்றார்.
வத்சலா அவரிடம் “சார், ராஜகணபதியின் இறப்பு கொலை என்று சந்தேகப்படுவதால் எல்லோருடைய மரபணு சோதனைகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் எல்லோரையும் நீங்கள் எங்களுடன் ஒத்துழைக்கச் சொன்னால் உதவியாக இருக்கும் சார். முதலில் உங்களிடம் இருந்து தொடங்குகிறோம் சார்”. என்றாள்.
“நோ ப்ராப்ளம். வாங்க, வாசல் பக்க அறைக்கு போகலாம். அங்கே எல்லோரையும் வரச்சொல்லிடறேன். நீங்க உங்க வேலையை முடியுங்க. ” என்று கூறி முன்னே நடந்தார்.
அடுத்த ஒண்ணரை மணி நேரத்தில் தாளாளர்,ஆசிரியர்கள், பணியாட்கள் என்று அனைவரின் மரபணு சோதனைக்கு வேண்டியதை ரகோத்தமன் குழு சேகரித்தனர்.
பிறகு இந்திரநீல் முத்துச்செல்வனுக்கு நன்றி கூறிவிட்டு” நாங்க கிளம்பறோம் சார். உங்களை விரைவில் கான்டாக்ட் செய்றோம் ” என்றார்.
“சார், அந்த நல்ல மனுஷனை அழிச்ச அந்த பாதகனை சீக்கிரம் கண்டுபிடிங்க சார்! அப்போதான் எனக்கு மன நிம்மதி. இனிமேல் எங்க ஸ்கூலை இவ்வளவு நேர்த்தியா கையாள, யாருமே எங்கிட்ட இல்லை சார்! எனக்கு பெரிய கவலை ஆகிடுச்சு இப்போ. ” என்று சொல்லி குலுங்கி அழுதார்.
இந்திரநீல், வத்சலா இருவரும் அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு, ‘ விரைவில் கண்டு பிடிக்கிறோம்’ என்று உறுதியளித்து அங்கிருந்து நகர்ந்தனர்.
காரில் போகும்போது வத்சலாவிடம் ” இந்த குன்றுமேட்டூர் எங்க இருக்குன்னு பாரு.நாம நாளைக்கு அங்கே போறோம்” என்று இந்திரநீல் சொன்னார்.வத்சலா ‘சரி’ என்று கூறி சில நிமிடங்களில் ” சார், நம் ஆஃபீஸிலிருந்து கரெக்டா ஐம்பத்தி ரெண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கு. காலைல எத்தனை மணிக்கு கிளம்பணும் சார்?” என்றாள். ” ஏழு மணிக்கு” என்று இந்திரநீல் கூறினார்.
அடுத்த மூன்று வாரங்கள் இது தொடர்பான எந்த செய்தியும் வராமல் நெல்லித்தோட்டம் மக்களும், முத்துச்செல்வனும் பொறுமை இழந்த நிலையில் இருந்தனர்.
சரியாக இருபத்தி மூன்றாவது நாள் ஒரு காவல்துறை வண்டி எட்டு காவல் அதிகாரிகளுடன் வந்தது.அதைத் தொடர்ந்து பின்னால் வந்த காரில் இருந்து இந்திரநீல், வத்சலா இன்னும் இரண்டு பேரும் இறங்கினர்.
நெல்லித்தோட்டம் மக்களும் கூடியதால் பரபரப்பு சூழ்நிலை உருவாகியது. காவலர்கள் அவர்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் உள்ளே சென்ற இந்திரநீல் முத்துச்செல்வனுடன் வெளியே வந்தார்.
அவரைப் பார்த்து உரத்த குரலில் பல கேள்விகளைக் கேட்ட நெல்லித்தோட்ட மக்களைப் பார்த்து கையை உயர்த்தி அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு ஒரு காகிதத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார்.
“ராஜகணபதி சாரின் மேல் அன்பு கொண்ட மக்களுக்கு வணக்கம். நாங்கள் மூன்று வாரங்கள் நேரம் எடுத்துக் கொண்டு இந்த தலைமையாசிரியர் இறந்த காரணத்தையும், அவரின் அந்த திடீர் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்களையும் கண்டு பிடித்து வந்திருக்கிறோம். நீங்கள் அனைவரும் எங்கள் மேல் வைத்த நம்பிக்கையை நாங்கள் மனமாரப் பாராட்டுகிறோம்.
ராஜகணபதி தன்னுடைய பள்ளியின் முன்னேற்றத்தை மேலும் மேலும் மெருகேற்ற எண்ணி பல புதிய முறைகளை கற்பித்தல், கற்றல் துறைகளில்
கொண்டு வர முயற்சி செய்து கொண்டே இருந்திருக்கிறார். அரசாங்க உதவிகள் இம்மாதிரி பள்ளிகளுக்கு கிடைப்பது போல் இப்பள்ளி க்ளவுட் கிடைத்தது. பள்ளியின் வளர்ச்சி, தேர்வு சதவீதம் இவைகள் மிக உயர்ந்த நிலையில் இருந்ததாலும், இங்கிருந்து மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் அறிவார்ந்த நிலையில் இருந்தமையாலும் அரசு இப்பள்ளிக்கு கூடுதல் நிதிகளை தங்கு தடையின்றி அளித்தது. இந்நிலையில் ராஜகணபதி திட்டத்தின் பேரில் கட்டி வந்த ஆய்வகக்கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள் இவைகள் முழுமை பெறாமல் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இருக்கின்றன. அவர் தாளாளரிடமும், பள்ளியின் செயற்குழு உறுப்பினர்கள், செயலாளர் அனைவரிடமும் முறையிட்டு வந்துள்ளார். அவர்கள் அரசிடம் இருந்து நிதி வர தாமதமாகி விட்டது. எனவே அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டதாகத் தெரிகிறது. ஆனால் பக்கத்து ஊர்களில் புதிதாக வந்திருக்கும் பள்ளிகளில் இப்பள்ளியை விட நல்ல ஆய்வகங்கள், நூலகம், உடற்பயிற்சி மையங்கள் இருக்கிறது என்ற செய்தி பரவி மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை இவ்வருடம் குறைய ஆரம்பித்தது. இது ராஜகணபதி அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அவர் தலைமையிடம் கூட தெரிவிக்காமல் நேரடியாக செப்பனூரில் உள்ள மாவட்டக் கல்வித்துறை இயக்குனரிடம் சென்று கேட்கும்போது தெரியவந்தது, அவர்கள் நிதியுதவியில் ஏதும் நிறுத்தி வைக்காமல் இப்பள்ளிக்கு ஏழு மாதங்கள் முன்னரே தந்த விவரத்தைக் கூறினர். ராஜகணபதி சார் திரும்ப வந்து இதை தாளாளர் முத்துச்செல்வன் அவர்களிடம் கேட்க, அவரின் பதில் ராஜகணபதிக்கு திருப்தி அளிக்காததால், செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எழுத்து மூலம் தெரிவித்தார். ஆனால் அதற்குப் பிறகு மூன்று மாதங்கள் ஆகியும் ஏதும் நடக்காததால் மீண்டும் மீண்டும் கைபேசி வழியாக தினமும் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் இவைகளை அனுப்பி வந்திருக்கிறார்” என்று கூறி நிறுத்தி முத்துச்செல்வனை பார்த்தார். கையை உயர்த்தி ஏதோ சொல்ல முற்பட்ட அவரை சைகை காட்டி அமர்த்திய இந்திரநீல் மேலும் தொடர்ந்தார். இம்முறை பேச ஆரம்பித்தார்.
“கிராம மக்களே, ராஜகணபதி சார் பள்ளிக்கூடத்துல நல்லது நடக்கணும்கிறதுக்காக தலைமைக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து நச்சரிச்சு நிறைய தடவை வாக்குவாதத்தில போய் முடிஞ்சிருக்கு. இது உச்சத்தை எட்டி முத்துச்செல்வனும், இன்னும் ரெண்டு செயல்குழு மெம்பர்களும் ‘இன்னிக்கு ஃபைனல் பண்ணிடலாம், நம்ப தோட்டத்து வீட்டுக்கு வாங்க ‘ ன்னு இவரை வரச்சொல்லி இருக்காங்க. அங்கே டின்னர் எல்லாம் முடிஞ்சு ஆகவேண்டிய தைப் பேசாம ‘ஏதோ கொஞ்சம் செலவு செஞ்சு வேலையை முடிச்சிடுங்க, உங்களுக்கு எவ்வளவு வேணுங்கறதை
சொல்லுங்க அதை வாங்கிட்டு ஒண்ணு கன்டின்யூ பண்ணுங்க இஷ்டமில்லேன்னா ரிசைன் பண்ணிடுங்கன்னு மிரட்டிருக்காங்க. ‘ ‘நீங்க இப்படி ஏதாவது செஞ்சா என்ன செய்யறதுன்னுதான் உங்கள் வண்டவாளங்களை லெட்டர்ஸ் எழுதி கலெக்டருக்கு அட்ரஸ் பண்ணி வீட்ல வச்சிருக்கேன். ஒண்ணு ஒழுங்கா நீங்க அரசாங்க பணத்தை முறையா செலவழிங்க இல்லைன்னா தண்டனை என்னவோ அதை அனுபவிங்க’ ன்னு ராஜகணபதி உறுதியா சொல்லிட்டதால் மூவரும் சேர்ந்து முத்துச்செல்வனோட பித்தளைப்பிடி போட்டிருந்த கனமான தடியினால் தாக்க ஆரம்பிச்சு அவர் தடுத்து கை விரல் முறிஞ்சு அவரை கத்தவிடாம முகத்தை நோக்கி தாக்கி அவரை நிலைகுலையச் செஞ்சு கீழே விழ வச்சுட்டாங்க. திரும்ப திரும்ப தாக்கியதால கம்பு பிடி உடைஞ்சு அதோட தூள்கள் அவர் மண்டை கழுத்து பகுதிகள்ல இருந்ததை பாக்க முடிஞ்சது. இதுக்கப்புறமா அவரு இறந்துட்டாருன்னு தெரிஞ்ச பின்னாடி மாடசாமி உதவியோடு அவரை இழுத்து போய் பக்கத்து வீட்டு தோட்டத்து பின்பக்கம் இருக்கற தாழங்குட்டைல போட்டு வந்துட்டாங்க.
ஒரு பத்து நாள் முன்னாடி எங்களுக்கு அவரோட மொபைல் கிடைப்பதை யாருக்கும் நாங்க ரிவீல் பண்ணல. அதை முழுசா செக் செய்தப்போ எல்லா டீடெய்லும் கிடைச்சது. என்ன முத்துச்செல்வன் சரிங்களா? உண்மையை ஒத்துக்கறீங்களா?” இந்திரநீல் கேட்டார். ” மொபைல் செய்திகளை வச்சு என்னை கொலை குற்றவாளின்னு எப்படி சார் நீங்க முடிவு செய்ய முடியும்.” என்று முத்துச்செல்வன் எதிர்க் கேள்வி கேட்டார்.
உடனே இந்திரநீல் வத்சலாவை கை காட்டினார்.
வத்சலா ” சார், உங்க கைத்தடி மரத்தூள் ராஜகணபதி பதிஞ்சிருக்கற மேட்சிங், உங்க விரல் நகம் பாதி உடைஞ்சு அவர் கழுத்து பகுதிசதையில், அவரோட எரிஞ்ச பர்ஸ், அவர் உங்களுக்கு எழுதின முக்கால் வாசி எரிஞ்ச லெட்டர், அரசு உங்களுக்கு அனுப்பிய நிதிக்கு ஆதாரமா கொடுத்த பேப்பர் பகுதி, ராஜகணபதி திருப்பி தாக்கியதால் ரெண்டு செயற்குழு உறுப்பினர்கள் கதிரேசன், உலகநாதன் இவர்களின் ரத்த மாதிரி அவர் சட்டையில் படிந்த நிலை, அவருடைய வீட்டில் அவர் கசக்கிப்போட்டிருந்த கலெக்டருக்கு எழுதிய லெட்டர் காப்பி இது அத்தனையும் சாட்சிகள் சார்.. அந்த ரெண்டு உறுப்பினர்களை ஆல்ரெடி அரெஸ்ட் செஞ்சிருக்கோம் இன்னிக்கு விடிகாலைல. ” என்று விவரித்தாள்.
“இதைவிட இன்னொரு முக்கியமான சாட்சி இருக்கு மிஸ்டர் முத்துச்செல்வன்” என்று கூறிய இந்திரநீல், சிறிது தூரத்தில் ஒரு வண்டியின் அருகே நின்றிருந்த வீரபாண்டி, அன்புராஜ் இவர்களை நோக்கி கையசைத்தார்.
அவர்கள் வண்டியிலிருந்தவரிடம்” கீழே இறங்குப்பா” என்றனர். முகத்தை பாதி மூடியபடி இறங்கினான் மாடசாமி. ” அய்யா, நான் எல்லா குத்தத்தையும் ஒத்துக்கிட்டேன். வேற வழியில்லய்யா. அந்த மனுஷனை நீங்க அடிச்சது தப்புய்யா” என்றான்.
“இவன் ஊருக்கு போய் இவன் எங்கே தலைமறைவாக இருக்காங்கறதை கண்டுபிடிக்க கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. அவன் அப்ரூவர் ஆயிட்டான். அப்போ நாம கிளம்பலாமா, முத்துச்செல்வன்?” என்றார் இந்திரநீல்.
“சார், ராஜகணபதி ரொம்ப நல்ல மனுஷன் சார். என்னோட பேராசையால் நான் கொஞ்சம் கொஞ்சமாக அரசு மானியம் பணத்தை அவருக்கு தெரியாமல் என் வசதிகளுக்கு, இந்த தோட்டவீடு வாங்க இப்படி யூஸ் செஞ்சு வந்தேன். நீங்க கைது செஞ்ச செயற்குழு மெம்பர்கள் எப்படியோ இதை தெரிஞ்சுட்டு என்னை மிரட்டி அவங்களுக்கும் பங்கு கேட்டாங்க. அதனால போன ரெண்டு வருஷங்களா அதிகமா பணத்தை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால ஸ்கூல் வேலைகள் பாதிப்புக்கு உள்ளாகி வர்ற நிலையில் எனக்கும் ராஜகணபதிக்கும் வாக்குவாதம் வந்தது. என் வீட்டுக்கு வந்து நாங்க ஆத்திரத்தில ஆர்க்யூ பண்ணும்போது திடீர்னு உலகநாதன் அவரை என் கைத்தடியால அடிசுட்டாரு. எனக்கு அதிர்ச்சி ஆயிடுச்சு. நானும் அப்ப கோபத்தில எதையும் யோசிக்காமல் அவர் கழுத்தை அழுத்தி தள்ளிட்டேன். கதிரேசனும், உலகநாதனும் திரும்பத் திரும்ப அவரை முன் பக்கத்தில், பின் மண்டைல அடிச்சு நிலைகுலைய செய்துட்டானுக.உலகநாதன் அவன் கைத்தடியை உடைச்சு குளத்துக்குள் போட்டுட்டான். என் கைத்தடி தலைப்பகுதி உடைஞ்சதை மாடசாமி கிட்ட கொடுத்து எரிச்சுட சொன்னேன். அப்போ திடீர்னு தங்கராசு அவனைத் தேடி வந்ததால அதை அவசரத்தில் ஒரு மூலையில் மறைச்சு வச்சிருக்கான் போல் இருக்கு. அதுதான் உங்க கையில் கிடைச்சது. இதை எல்லாத்தையும் சுத்தம் செய்ய மாடசாமியை எங்களுக்கு உதவிடச் சொன்னோம்.”
இப்படி அழுகைக்குரலுடன் பேசி முடித்த முத்துச்செல்வன் ஊர் மக்களை நோக்கி கை கூப்பி “என்னை மன்னிச்சிடுங்க மக்களே! எனக்கு வேற ஏதும் சொல்லத் தோணலை.” என்றார். நெல்லித்தோட்ட மக்களும், சுப்பிரமணிய சிவா பள்ளி ஆசிரியர்களும் அங்கே கூடியிருந்த மாணவர்களும் உரத்த குரலில் முத்துச்செல்வனை திட்டியவாறு கைகளை உயர்த்தி சத்தம் போட்டனர். காவல்துறை ஆய்வாளர்கள் அவர்களை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்.
முத்துச்செல்வன் கைதாகி வண்டியில் ஏறியவுடன் இந்திரநீல் நெல்லித்தோட்ட மக்களுக்கு வணக்கம் செலுத்திவிட்டு கிளம்பி காவல்நிலையம் நோக்கி வண்டி விரைந்தது. அதன் பின்னால் மற்ற கார்களும் சென்றன.
![]() |
பெயர்: நீலமேகம். வயது 71. பூர்வீகம்: திருவாரூர் மாவட்டம், கீழமணலி என்ற கிராமம். தந்தை: ராமஸ்வாமி அய்யங்கார். கிராமத்து கணக்கராக இருந்தவர். தாயார்: ஜானகி படிப்பு: பி.எஸ்சி (இயற்பியல்), திருச்சி தேசியக் கல்லூரி. வேலை தேடி மும்பைக்கு சென்று இருபத்தைந்து ஆண்டுகள் பல தனியார் கப்பல் துறை அலுவலகங்களில் பணிசெய்து கோயம்புத்தூர் இடமாற்றம். உலகின் முதல் பெரிய கப்பல் பணியகமான, 'மெர்ஸ்க் லைன்' (Maersk Line) கோவை அலுவலகத்தில் பொது மேலாளராக…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
சங்கர்லால் வந்துவிட்டார்!
தமிழ்வாணன்
July 5, 2026
சங்கர்லால் வந்துவிட்டார்!
தமிழ்வாணன்
July 2, 2026
சங்கர்லால் வந்துவிட்டார்!
தமிழ்வாணன்
June 29, 2026
