சொந்த ஊர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 2, 2026
பார்வையிட்டோர்: 101 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஊருக்குப் போதல் என்பது மிகுந்த சந்தோஷமான அநுபவம் அவனுக்கு. அவன் பெயர் மூர்த்தி. அவனது ஊரின் பெயர், தேவை யில்லை. ஒரு ரெண்டும் கெட்டான் நகரம். அழகும், அழுக்கும் உள்ள ஏதோ ஓர் இந்திய கிராமம். வங்கக் கடற்கரை ஓரம் உள்ள ஊர். கடல் அலைகள் மிகுந்த அழகியவை. வாழ்க்கை, முயற்சி, விடுதலை போன்ற பெரிய விஷயங்களை நமக்கு ஞாபகப் படுத்தக் கூடியவை. கடற்கரை மணலில், மாலை உலாவுக்கு வந்த மக்கள் தங்களால் சாத்தியப்பட்ட அளவில் சீரழிவு செய்வார்கள். கடல் யாரையும் கோபிப்பதில்லை. 

பிரயாணத்தில் உள்ள மகிழ்ச்சி என்பது பிரயாண முஸ்தீபு களில் மட்டும் அடங்கிய ஒன்று… கல்யாண மகிழ்ச்சி என்பது போன்றது இது. ஊருக்குப் புறப்படுவது என்று தீர்மானமான அந்தக் காலத்தில் இரத்தம் வேகமாகப் பெருக்கெடுக்கும். இருதயம் வேகமாகத் துடிக்கும். ஊருக்குப் புறப்படுகையில் இல்லாமல் போவது இரண்டு. ஒன்று பணம். இரண்டு ஜட்டி பனியன்கள். யாரிடம் பணம் கேட்பது என்கிற யோசனையில் ஜட்டியையும் பனி யனையும் துவைத்துக் காயப் போட வேண்டும். துவைத்து முடிப்ப தற்குள், யாரைக் கேட்பது என்பது முடிவாகியிருக்கும். மூர்த்திக்கு சுக்லா என்கிற சினேகிதன் ஒருத்தன் இருந்தான். பசையுள்ளவன், படித்தவன் என்று எல்லோரும் அவனைச் சொல்வார்கள். மூர்த்திக் குப் பணச் சங்கடம் ஏற்படும் போதெல்லாம் சுக்லா உதவுவது வழக்கம். அன்றும் சுக்லாவிடம் சென்றான் மூர்த்தி. 

“திடீரென்று எதற்கு ஊருக்கு?” என்று சுக்லா கேட்டான். ஊரில் மூர்த்திக்கு ஒரு மனைவியும் இரு குழந்தைகளும் இருக் கிறார்கள் என்பதை சுக்லா அறிவான்தான். எனினும் ‘திடீரென்று எதற்கு குடி’ ‘திடீரென்று எதற்கு விபசாரம்’ ‘திடீரென்று எதற்கு டாய்லட் போகிறாய்’ என்பது போன்ற அசம்பாவிதக் கேள்விகளைக் கேட்பது போல, அக்கேள்வியை அவன் கேட்டான். அவன் பசையுள்ளவன். 

“மனைவிக்கு உடல் நலம் இல்லை” என்றான் மூர்த்தி. அது பொய். அறிந்து சொன்ன பொய். அதனால் மூர்த்தியின் மனம் சுடவில்லை. யாருக்கும் தீங்கு ஏற்படாத எல்லைக் கோட்டுக்குள் நின்று பொய் சொல்லலாம் என்கிறது தமிழ் வேதம். சுமார் மூன்று மணி நேர சம்பாஷணைக்குப் பிறகு, சுக்லா ஐநூறு ரூபாய் கொடுத்தான். மூர்த்தியின் உயரம் ஆறடி இரண்டு அங்குலம். மார்புச் சுற்றளவு முப்பத்தெட்டு அங்குலம். பணம் வாங்கும் போது உயரத்திலும் பருமனிலும் அவன் குன்றித்தான் போயிருந்தான். 

சுமதிக்கு ஒரு புடவையும், பெரியவனுக்கும் சின்னவனுக்கும் ‘டீ’ சர்ட்டுகளும் வாங்கினான் மூர்த்தி. ஜட்டி கிழிந்திருந்தது. எனினும் தனக்கு ஒன்றும் வாங்கிக் கொள்ளவில்லை அவன். தோன்றவில்லை என்பது தான் காரணம். மாலை மயங்கும் நேரத்தில் மூர்த்தி ஊர் போய்ச் சேர்ந்தான். பெரியவன் உடல் மிகவும் இளைத்துப் போய்விட்டதாக சுமதி கடிதம் எழுதியிருந்தது அப்போது அவன் நினைவுக்கு வரவே, பஸ் ஸ்டாண்டில் ஆப்பிள் களும் சாத்துக்கொடிப் பழமும் அவன் வாங்கினான். ஆப்பிள் ஒன்றின் விலை மூன்று ரூபாய். சாத்துக்கொடி இரண்டு ரூபாய். ஒவ்வொன்றிலும் ஆறு வாங்கினான் அவன். 

வீடு ஒவ்வொரு முறையும் அவன் வரும்போது மேலும் இருண்டுபோய் விடுவதாக ஏனோ மூர்த்திக்குத் தோன்றும். சுவர்க்காரைகள் மேலும் இற்று விழுந்திருக்கும். வீட்டுக்குள் குத்துக் குத்தாக இருண்டிருந்தது. சுமதி பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் சினிமாவுக்குப் போயிருந்தாள். 

பிள்ளைகள் இருவரும் வீட்டில் இல்லை. வேலைக்கு உதவுகிற பெண் காபி போட்டுக் கொடுத்தாள். பால் வாசனை தூக்கலான, காபி என்கிற வஸ்து காணாமல் போன ஒரு காபி. குடித்து விட்டு, குளித்து லுங்கி அணிந்துகொண்டு சுமதிக்காகவும், குழந்தைகளுக்கா கவும் காத்திருந்தான் அவன். 

முதலில் திரும்பியவன் பெரியவன்தான். அப்போது மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. 

அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டு கைகால் கழுவிக் கொண்டு, வேலைக்காரப் பெண் பரிமாற சாப்பிட்டான் பெரியவன். “அப்பா, சாப்பிடுங்களேன்” என்று அவன் சொல்லவில்லை. 

சாப்பிட்டு வந்ததும், மேஜைக்கு முன் அமர்ந்து பள்ளிப்பாடம் படிக்கத் தொடங்கினான். மூர்த்தி அவனுக்கான சட்டையை எடுத்து அவன் முன் வைத்தான். 

“எப்படியிருக்கு?” என்றான். 

பெரியவன் அச்சட்டையை புரட்டிப் பார்த்துவிட்டு, புஸ்தக அடுக்கின் மேல் வைத்தான். 

“எப்படியிருக்கு, நல்லாயிருக்கில்லையா?” 

“இது மாதிரி ஒன்று என்னிடம் இருக்கு. அம்மா வாங்கிக் கொடுத்துட்டாங்க.” 

மூர்த்தி வந்து கட்டிலில் சாய்ந்து கொண்டான். 

அடுத்த அரை மணியில் சின்னவன் வந்தான். பக்கத்து வீட்டில் டி.வி. பார்த்து விட்டுத் திரும்பினானாம். “நம் வீட்டிலும் அம்மா டி.வி. வாங்கப் போறாங்க” என்றான், சின்னவன். 

“அப்படியா?” என்றான் மூர்த்தி. 

பத்து மணிக்கு மேல் சுமதி வந்து சேர்ந்தாள். 

“அட… எப்போ வந்தீங்க, ஒரு தபால் போடக் கூடாதா? வர்றேன்னு. நான் வீட்டிலேயே இருந்திருப்பேனே…?” 

சுமதி முகம் கழுவி விட்டு வந்து, துணி மாற்றிக் கொண்டாள். “சாப்பிட்டாச்சா?” என்றாள் சுமதி. 

“இல்லை” என்றான் மூர்த்தி. 

“ரஸம் தான் இருக்கு. தொட்டுக்க, சரியா எதுவும் இல்லை. ஓட்டலில் வாங்கியாரச் சொல்லட்டுமா?” 

“ஓட்டலிலா? வருஷக் கணக்கா ஓட்டல்லே சாப்பிட்டு, ஓட்டலே வெறுத்துப் போச்சு.” 

“முட்டை வாங்கி ஆம்லட் பண்ணட்டுமா?” 

“எதுக்கு சிரமம்? வேணாம்.” 

“ஊகும். விருந்தாளி மாதிரி வந்திருக்கீங்க…”

முட்டை வாங்கி வந்து ஆம்லட் போட்டுத்தான் சோறு பரிமாறினாள் அவள். 

ஓர் அறையும், அறையை ஒட்டிய ஹாலும், குளியல் அறையும் கொண்டது அந்த வீடு. ஹாலில் சின்னவனும், வேலைக்காரப் பெண்ணும் படுத்திருக்கிறார்கள். அந்த அறையில் படுக்கையும், மேஜை நாற்காலியும் இருந்தன. விளக்கைப் போட்டுக்கொண்டு பெரியவன் படித்துக்கொண்டிருந்தான். 

“மணி பன்னிரண்டாகப் போகுது… போய்ப் படேன்டா.. நாளைக்குப் படிக்கலாம்” என்றாள் சுமதி பெரியவனைப் பார்த்து. 

“உஸ்… சும்மா இரு” என்றான் அவன். 

அடுத்த நான் ஞாயிற்றுக்கிழமைதான் என்று மூர்த்தி நினைத் தான். மூர்த்தியின் சிகரெட்டுகள் தீர்ந்து போயிருந்தன. வெளியே போய் சிகரெட் வாங்கி வந்தான். பெரியவன் கட்டிலில், அறைக் குள்ளேயே படுத்திருந்தான். 

“ஹாலில் ஃபேன் இல்லையாம். இங்கேதான் படுத்துக்கு வானாம்” என்றாள் சுமதி, அடங்கிய குரலில். ஏதோ தப்பு செய்த உணர்வு அவள் குரலில் இருந்தது. “பரவாயில்லை” என்றான் மூர்த்தி. 

பெரியவனுக்கு அருகில் மூர்த்தி படுத்துக் கொண்டான். சுமதி, பாயை விரித்துத் தரையில் படுத்தாள். 

மூர்த்தி வாங்கிவந்த புடவை சுமதிக்குச் சந்தோஷம் அளித்த தாகத் தெரியவில்லை. “இது போன்ற மஞ்சள் வர்ணப் புடவைகள் என்னிடம் ஆறு இருக்கின்றன” என்றவள், “அது என்ன, எப்போது புடவை வாங்கினாலும் மஞ்சளும், மஞ்சளை விட்டால் நீலமுமா கவே வாங்குகிறீர்கள்” என்று சலித்துக் கொண்டாள். 

கட்டிலில் பகல் முழுக்கப் படுத்தும், புகைத்தும் பொழுதைப் போக்கினான் மூர்த்தி. 

சுமதி, வழக்கத்தைவிட கூடுதலாக அவன் பொருட்டு சமையல் கட்டில் வேலை செய்ய வேண்டியிருந்தது. அன்று மதியம் மீன் குழம்பும், மீன் வறுவலும், சுறாமீன் புட்டும், நண்டுக் கறியும், கீரையும், அவள் செய்திருந்தாள். 

“எதுக்கு இத்தனை?” 

“சும்மா சாப்பிடுங்கள். வராதவர் வந்திருக்கிறீர்கள்” என்றாள் அவள். 

மூர்த்தியின் இருப்பு அனைவரையும் சங்கடப் படுத்தியது தெரிந்தது. பெரியவன் படிக்கவும், படுக்கவும் சங்கடப்பட்டது தெரிந்தது. சின்னவனுக்கு, அவன் சௌகரியம் போல வெளியே சென்று வர, அப்பா இடைஞ்சலாக இருக்கிறார் என்பது போலப் பட்டது. சுமதிக்குத் தான் காரணமாக, அடுப்படியில் மிக நீண்ட நேரம் இருக்க வேண்டியிருப்பதாக அவனுக்குப்பட்டது. அவனுக்கே கூட, ஒரு விடுதியில், அதிகம் நெருக்கம் இல்லாத ஒரு நண்பனின் வீட்டில், இருப்பதாகத் தோன்ற ஆரம்பித்தது. வழக்கத்துக்கு மாறாக, அதிக சிகரெட்டுகளை இந்தச் சமயத்தில் அவன் புகைத்தான். 

திங்கள் அன்று மூர்த்தி ஊர் திரும்பி விட்டான். 

அறையைத் திறந்த போது, குப்பென்று ஒரு புழுங்கல் வாடை, அறையிலிருந்து வெளிவந்தது. சட்டை பேண்ட்டைக் கலைத்து விட்டு லுங்கியை அணிந்துகொண்டு படுக்கையில் படுத்தான். இரண்டு மூன்று தபால்கள் அவனுக்கு வந்திருந்தன. யார் என்பதிலோ, என்ன எழுதியிருப்பார்கள் என்பதிலோ அவனுக்கு ஈடுபாடு எழவில்லை. 

உறக்கம் அவனைத் தன்பால் இழுத்தது. இரண்டு இரவுகளும், இரண்டு பகல்களும் உறங்காமலேயே கழித்திருந்த அவன் உறங்கத் தொடங்கினான். 

– 1986

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

பிரபஞ்சன் பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *