சின்னச்சாமியைத் தேடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 2, 2026
பார்வையிட்டோர்: 153 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

புதுச்சேரியிலிருந்து வந்த அந்தப் பேருந்து என்னோடு வேறு சிலரையும் அந்த நிறுத்தத்தில் உதறிவிட்டுச்சென்றபோது நல்ல வெயில். முன்பு அங்கிருந்த நாவல் மரங்களும் ஆலமரங்களும் கொள்ளை போயிருந்தன . கிழக்கு கடற்கரைச் சாலையைப் பெரிதுபடுத்துகிறேன் என்று சொல்லி அவற்றை அகற்றியிருக்க வேண்டும். அவற்றின் தழும்புகள் கூட இல்லை. அனற்காற்றில் வழிந்த வியர்வை முகத்தில் உப்பு வாடையைத் தர அழுந்தத் துடைத்துக் கொண்டேன்.

முப்பது வருடங்கள் பிரான்சில் வாழ்க்கையை ஓட்டிய பிறகு திடீரென்று இங்கே ஏன்? எதற்காக? என்ற கேள்வி நூற்சிக்கலுக்குள் சிக்கி விடுபடமுடியாமல்; என் குடும்பத்தாரை ஆச்சரியப் படுத்திவிட்டு இன்றைக்கு இங்கே.

அசுர வேகத்தில் எல்லாமே நடந்தேறின. டிராவல்ஸ் ஏஜென்ஸியைச் சென்று பார்த்து, சென்னைக்கு அடுத்த விமானம் என்றைக்கு எனக்கேட்டு டிக்கெட் எடுத்து, பிராங்க்பர்ட் சந்து அங்கிருந்து சென்னை, அன்றைய இரவே புதுவைக்குத் திரும்பி, பயண வலிகளில் இருந்து மீளாமல் இதோ இன்றைக்கு இங்கே.

அப்போதெல்லாம் தென்னாற்காடு மாவட்டம், திண்டிவனம் தாலுக்கா, கழுப்பெரும்பாக்கம் அஞ்சல் என முகவரி எழுதப்பட, தபால்காரரால் ஒரு வாரம் கழித்துச் அடையாளம் காட்டப்படுகின்ற ஊர்.

தென்னார்க்காடு மாவட்டத்திற்கே உரிய அனைத்து லட்சணங்களும் கொண்ட கிராமம். வெற்றிலை போட்டு காவியேறிய பற்களைப்போல பூமி. முடிச்சு முடிச்சாகப் பனந்தோப்புகள். மழைக்காலங்களில் வயிறு முட்ட நீரையுண்டு பிறகு பேதி கண்டவன் போல இரண்டொரு மாதங்களில் எல்லாவற்றையும் இழந்து வயிறு ஒட்டிய சவலைப்பிள்ளையாய் நிற்கின்ற ஏரி. அவற்றில் மெள்ள மெள்ள ஆக்ரமித்திருந்த கருவேலமரங்கள் என வறட்சியை அப்போதே சிவப்பு கம்பளமிட்டு வரவேற்றுக்கொண்டிருந்த ஊர்.

இரண்டு பெரிய வீதிகள், பிறகு அவற்றில் தொற்ற்றிக்கொண்டு இரண்டு சிறிய் தெருக்கள் என்று மொத்தம் நான்கே வீதிகள். இரு புறமும் சரியான இடைவெளியில் அடர்த்தியாகப் பூவரசு மரங்கள். மேலவீதியின் முடிவில் குஞ்சம்போல பிள்ளையார் கோவில், தொடர்ந்து கிழக்கே நடந்தால் பொம்மைக் குதிரையில் ஆரோகணித்து வேட்டைக்குத் தயார் நிலையில் இளமை குலையாத ஆணகனாக பாவாடைராயன், அவரை முன்னிருத்தி அங்காளம்மன் கோவில். வடக்கே காலாறப் புதழிமனலில் கொஞ்ச தூரம் நடந்தால் சிறியதாக மாரியம்மன் கோவில் குளம் : தலித் மக்களைத் தவிர்த்து ஆடுமாடுகளும் பிறமனிதர்களும் சமத்துவம் பாராட்டுமிடம்.

எங்கள் வீடு அப்போது மேலத் தெருவில் இருந்தது. கீழண்டைத் தெருவில்தான் அவனிருந்தான். அவன் என்றால் என்பால்ய நண்பன் சின்னச்சாமி. பொத்தானற்ற கால் சராயை ஒரு முடிச்சுப் போட்டு இடுப்பில் நிறுத்தி, எச்சரிக்கையாக அதன் மேல் கறுப்பு அரைநாண் கயிற்றை இருத்திக்கொண்டு அனேக விஷயங்களில் என்னை பிரம்மிக்க வைத்திருக்கிறான்.

கபிலை இறைப்பது, மடைகட்டுவது, கலப்பை மேழியை லாவகமாகப் பிடித்து முதல் சால் ஒட்டுவது, பரிசலில் சிக்கியிருக்கும் கெளுத்தி மீனை கையிலே முள்ளை வாங்கிக் கொள்ளாமல் வெளியே எடுப்பது என எல்லாவற்றிலும் ஒரு பெரிய மனுஷத்தனம் இருக்கும். எனது வற்புறுத்தலுக்காக அவற்றையெல்லாம் ஒருவித அச்சத்தோடு எனக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறான். அந்த வித்தைகளுக்கு அவ்வப்போது அம்மாகொடுக்கும் சீடை, முறுக்குகள் காணிக்கையாக்கப்படுவதுண்டு.

பள்ளி நாட்கள் தவிர மற்ற நாட்களிலெல்லாம் சேர்ந்தே இருப்போம். அவன் அதிகமாக எங்கள் வீட்டிற்கு வந்த தாக ஞாபகமில்லை. நான் அவனைத் தேடிச் சென்றிருக்கிறேன்.

“காலங்காத்தால கிளம்பிட்டியா?” என அம்மா கூச்சலிடுவதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், அவன் வீட்டிற்குச் சென்று ஒருவித உரிமையோடு அவன் தோளிற்கைபோட்டு வெளியே கிளம்பி, தென்னை மரங்களின் கீழே கிடக்கும் குறும்பிகளை எடுத்து தேய்த்து, ஈர்க்குச்சியைச் செருகி பம்பரம்விட்டு ; நல்ல கூழாங்கற்களாகப் பொறுக்கிக் குண்டுவிளையாடிவிட்டு, குளத்திற்குச் சென்று உச்சிவரை ஆட்டம் போட்டுவிட்டு சிவப்பேறிய கண்களும் ஒழுகும் மூக்குமாக வீட்டிற்கு வந்தால் அம்மா வாய் நிறைய வசவுகளுடன் காத்திருப்பார்.

அதற்குப் பிறகு சில நாட்களுக்குச் சின்னச்சாமி வீட்டுப் பக்கம் நான் தலை வைக்க முடியாது. ஆனால் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அதற்குப் பிறகு மறுபடியும் எங்கள் ஆட்டம் தொடரும்.

இந்தச் சந்தோஷத்தைக் குலைப்பது போன்று அது நடந்தது. திடீரென்று ஒருநாள் சின்னச்சாமியின் சித்தப்பா ஆறுமுகம் ஊர்ச்சந்தியில் கொடியேற்றினார். நானும் சின்னச்சாமியும் ஒன்றாக நின்று வேடிக்கைப் பார்த்தோம். எல்லோருக்கும் மிட்டாய் கொடுத்துக் கொண்டே வந்தா அவனது சித்தப்பா என்னைத் தவிர்த்துவிட்டு அவனுக்கு மட்டும் கொடுத்தார். அவன் என்னிடம் கொடுக்க, அவனது சித்தப்பா அவனுடைய முதுகில் ஒன்று வைத்து தறதறவென்று இழுத்துப் போனார். அங்கிருந்த கூட்டம் முழுதும் ஒருவித வன்மத்தோடு என்னைப் பார்த்தது. சின்னச்சாமியின் சித்தப்பா மீது எனக்குக் கோபம் வந்தது. நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். அதற்கு மறுநாள் கீழைத் தெரு இளைஞர்கள் சிலர் எங்கள் வீட்டின் எதிரே நின்று பீடி குடித்துக் கொண்டிருந்தார்கள். இதற்கு முன் இப்படி எதுவும் செய்ததாக நினைவில்லை.

மறுநாள் காலை அம்மா தடுத்தும் கேளாமல் சின்னச்சாமி வீட்டிற்குக் கிளம்பிவிட்டேன். அவன் என்னைப் பார்த்ததும் ஒளிந்துகொண்டான். சிறிது நேரத்தில் அவனது சித்தப்பா ஆறுமுகம் வந்தார். என்னைப் பார்த்ததும்:

“டேய்! உனக்கு இங்க என்ன வேலை?” என்று சத்தம் போட சின்னசாமிக்கும் கேட்டிருக்க வேண்டும். அதுதான் அவனை நான் கடைசியாக நான் பார்த்தது.

அடுத்த சில நாட்களில், கிராமத்தில் எங்கள் குடும்பம் அந்நியப்படுத்தப்பட்டது. கோவில், குளம் எங்கே கண்டாலும் மேலத்தெருவிலிருந்த எங்களது ஐந்தாறு குடும்பங்களை மற்றவர்களுக்கு குறிப்பாக கீழைத்தெருவினருக்குப் பிடிக்காமல் போய் விட்டது.

அம்மா தான் ஒருநாள் சொன்னாள்: “நம்ம எல்லோரும் எதிரியா நினைக்கிறாங்க!”

“ஏன்?”

“சொன்னா ஒனக்குப் புரியாது.”

“……… “

“நாம வேற ஜாதி”

“வேற ஜாதின்னா?”

“உனக்கு அதெல்லாம் வேண்டாம். நாம இந்த ஊரைவிட்டே போகப் போறம்”

அன்று இரவெல்லாம் அம்மா அழுதாள். அப்பா இரவு சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தார். இரவு வெகு நேரம் கழித்து வந்த சேதராபட்டு கவுண்டரிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு மறுநாட்காலை புதுச்சேரி வந்துவிட்டோம். அதற்குப் பிறகு எல்லாமே வேகவேகமாக நடந்தேறியது. பள்ளி, கல்லூரி எனப்படிப்பைத் தொடர்ந்து பிரான்சு நாட்டில் குடியேறி ஐரோப்பியத்தில் கரைந்து, இன்றைக்கு உடல் தளர்ந்து, முடி நரைத்து வந்திருக்கும் என்னை இந்த மண்ணிற்கு அடையாளம் தெரியுமா? சின்னச்சாமியும் என்னைப் போலவே முடிநரைத்து, முகம் கோடிட்டுத் தடுமாறுவானோ?

பேருந்து என் நினைவைக் கலைத்து நிறுத்தத்தில் நின்றது. மற்றவர்களோடு கலந்து என்னையும் திணித்துக் கொண்டு ஒரு வழியாகப் புறப்பட, இதர பயணிகளிடமிருந்து நான் வித்தியாசப் பட்டிருக்க வேண்டும். பயணிகளில் பெரும்பாலோர் என்னையே பார்த்தார்கள். வழியெங்கும் பேருந்து ஓட்டம் கிளப்பிய புழுதிக்காற்றைச் சுவாசித்து, எனது கிராமம் வந்த போது நான் மட்டும் இறங்கினேன்.

கிராமத்திற்குச் செல்லப் புதிதாக ஒரு சாலையை அமைத்திருந்தார்கள். அதைத் தவிர்த்துவிட்டு, ஏரிக்கரையின் பனை மரங்களுக்கிடையில் புகுந்து நடக்க ஆரம்பித்தேன். நிறையக் கருவேலமரங்களும் புலிநகைகொன்றைகளும் வழியெங்கும் ஆக்ரமித்திருந்தன. நவம்பர் மாதம் என்பதால் நிறைமாதக் கர்ப்பிணியாக ஏரி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது.

நிறைய ஏக்கங்கள் நிறைய கனவுகள். சின்னச்சாமியை ஆச்சரியப்படுத்த அனேக விடயங்கள் கைவசம். அவன் தரப்பிலும் நான் கேட்டு வியக்கவென்று விடயங்கள் இருக்கக்கூடும். இன்னும் சிறிது தூரம் நடந்தால் ஊர் வந்துவிடும் என்பதன் அறிகுறியாக கிழக்கு வெளி மதகு தெரிந்தது. ஆண்டுகள் பலவாக க் காத்திருந்த வாடைக்காற்று கிழக்குவெளி வயல்வெளி புற்களின் மணத்தோடு என்னை உரசியபடி தொடரும் சுகத்தை அனுபவித்தபடி நடக்கிறேன். புற்களின் மணம் சட்டென்று குறைந்து, மனிதர்கள் கால்நடைகளுக்குரிய மெலிதான மணத்துடன் கிராமம் முகம் காட்டுகிறது. வீதியின் அமர்ந்திருந்த தேனீர்க்கடையில் இரண்டொரு மனிதர்களின் நடமாட்டம். வாசலில் நின்று கடையில் நின்றிருந்த இளைஞரை அழைத்தேன்.

“தம்பீ!”

இளைஞரை, அவருடைய முதுகின் பின்புறத்திலிருந்து வந்த எனது குரல் வியப்பில் ஆழ்த்தியிருக்க வேண்டும், திரும்பியவர் பேச்சின்றி சில கணங்கள் என்னைப் பார்த்தபடி நிற்கிறார். பனையோலை வேயப்பட்ட தட்டியை ஒதுக்கிக் கொண்டு, என்னைப் போன்ற வயதுடைய முதியவர் ஒருவர் வெளிப்பட்டார்.

“யாரு?……வெளியூரா?”

வலது கையைத் தூக்கி வலது கண்ணின் புருவத்திற்கு மேல் குடைபோல நிறுத்தி பார்வையைத் தாழ்த்தி என்னைப் பார்த்தார்.

“அடட… நம்ம முனிசீப்பு பிள்ளை இல்லை? என்னைத் தெரியுதுங்களா? நான் தான் போலீஸ் அண்ணாமலை.”

எனது அடையாளத்தை இன்னும் இந்தக் கிராமம் இழந்து விடவில்லை என்பது குறித்து எனக்குச் சந்தோஷம்.

“வாங்க …உள்ள வாங்க! என்ன அப்படியே திகைச்சுப் போயிட்டீங்க?”

உள்ளே நுழைந்ததும், அங்கு தமிழ் தினசரியொன்றை கையிற் பிடித்திருந்தவருடன் உரத்துப் பேசிக் கொண்டிருந்த ஒருவர், திடீரென்று குரலைத் தாழ்த்தி இரண்டொரு வார்த்தைகளுக்குப் பின்னர் அமைதியானார். மெலிதான இருள் படர்ந்திருந்த து. அண்ணாமலை காட்டிய பெஞ்சில் அமர்ந்தேன். செய்தித் தாளைப் பிடித்திருந்தவர் எழுந்து கொள்ள அண்னாமலையும் அருகில் உட்கார்ந்தார்.

“ஊரெல்லாம் எப்படியிருக்கு? பழைய மனிதர்களெல்லாம் இருக்காங்களா?”.

“ஊருக்கு என்ன! ஏதோ நீங்க புண்ணியம் பண்ணவங்க புறப்பட்டுப் போயிட்டீங்க. நாங்கதான் வருஷம் தவறாம வெட்டு குத்துண்ணு இருக்கோம்.”

“என்னப் பிரச்சினை சின்னச்சாமி எப்படி இருக்கான?” ஆவலை அடக்க முடியாமற் கேட்டேன்.

“உங்க க் கூட்டாளியைத் தேடறீங்களா? அங்கே கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்காரே, அவரை அடையாளம் தெரியுதா?”

அப்போதுதான் கவனித்தேன், ஒருவர் மெலிதான் இருளில் சுவரோரம் போட்டிருந்த கட்டிலில் நெடுநாட்களாக சவரம் செய்யாமல், தாடியும் மீசையுமாக ஆக்ரமித்திருந்த முகத்துடன், பழுப்பேறிய வேட்டியை சுருங்கிய வயிற்றின் மேல் முடிச்சாகப்போட்டு, அதுபோன்று இன்னொரு வேட்டியோ துண்டோ வென புரிந்து கொள்ள முடியாத வொன்றால் உடலை மூடமுயன்று முடியாமற்போக புட த்தைக் கால்கள் தாங்குவது போல மடக்கியிருந்தார். ஒரு கை தலைக்குக் கீழும் ஒரு கை விலா எலும்பிலுமாக கிடந்தன.

“சின்னச்சாமி எழுந்திரு! யார் வந்திருப்பது பாரு!” – தமிழ் தினசரியைக் கையில் வைத்திருந்தவர்.

“என்னது சின்னச்சாமியா?” – கட்டிலை நெருங்கினேன்.

“யாரு?” – சின்னச்சாமி

“சின்னச்சாமி என்னைத் தெரியுதா? முனிசீப்போட பிள்ளை சண்முகம் வந்திருக்கேன்.”

“அப்படியா! பார்த்து கணகாலம் ஆவுது. பார்வை வேற முன்ன மாதிரி இல்லை. நீங்க சைகோன்ல இருப்பதாச் சொன்னாங்க. எத்தனைப் பசங்க, எல்லோரும் சௌவுக்கியமா ? ஏதோ ஊரை மறக்காம வந்தீங்களே, அந்த மட்டும் சந்தோஷம்.”

தொடர்ந்து பேசிக்கொண்டு போன சின்னச்சாமியை இடைமறித்தேன்.

“நான் நல்லாதான் இருக்கேன். நீ ஏன் இப்படி? பிள்ளைங்க?”

“இருக்காங்க, ஒருத்தனுக்கு நாலு பேரா. இருந்தென்ன பிரயோசனம். பொழப்புத் தேடி பட்டணம் போயிட்டானுவ.”

“நாலு பேருமா?”

“இதென்ன கேள்வி. நீங்க போகலியா? யாரோ என்னமோ பிரச்சினை பண்ணாண்ணு உங்க ஜாதிக்காரங்க எல்லோரும் ஊரை விட்டுப் போனீங்க. அத்துடன் முடிஞ்சுதா? இருக்கற ஜாதிக்காரன் அவனுங்களுக்குள்ள அடிச்சுக்க வேணாமா? அதுல சில பேரு புறப்பட்டுப் போனாங்க, அப்புறம் பிழைக்கிறதுக்குன்னு சிலபேரு… இப்படி ஒவ்வொருத்தரா ஏதோவொரு காரணத்திற்குப் அப்பப்ப போயிட்டுத்தான் இருக்காங்க. முடியாதவங்க இருக்கோம்”.

“நீயும் பட்டணம் போயி , பிள்ளைகளொட இருக்க வேண்டியது தானே? இங்கே ஒண்டியா ஏன் இருக்கணும்?”

“போய்ட்டா எனக்குப் பிரச்சினைத் தீர்ந்திடுமா? உங்கப்பா தொடங்கி என் பிள்ளைகள் வரை ஏன் இன்றைக்குக் கூட இப்படி யாரோ ஒருத்தர் ஊரை விட்டு போயிட்டுத் தான் இருக்காங்க. தேர் இழுக்கறது, குளத்துத் தண்ணி, ஏரிப்பாய்ச்சல், எங்கச்சாதிகாரப் பொண்ணு கிட்ட அந்தச் சாதிகார பையனுக்கு என்ன பேச்சுன்னு இப்படி ஏதாவதொரு ரூபத்துல பிரச்சினை வரத்தான் செய்யுது. நான் பிள்ளைங்க இருக்காங்க போயிட்டா, அண்ணாமலைக்கு யார் இருக்காங்க. அட அண்ணாமலையை விடு, இந்த ஊரு மூச்சு விட நாலு பேரு இருந்து தானே ஆகனும்”.

சின்னச்சாமிக்கு மூச்சிறைத்தது. சின்னச்சாமிக்கும் சேர்ந்து ஸ்ட்ராங்கா நாலு டீ போடப்பா என்று டீமாஸ்ட்டர் இளைஞரிடம் சொன்னேன்.

– நிலா,மே-ஜூன் 2000.

Krishna_Nagarathinam நாகரத்தினம் கிருஷ்ணா ஒரு புதுச்சேரி மற்றும் தமிழக எழுத்தாளர். புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வருகிறார். இவர் எழுதிய "நீலக்கடல்" மற்றும் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி இரண்டு நாவல்களும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 மற்றும் 2012 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கின்றன. மாத்தாஹரி நாவல் கு. சின்னப்பாரதி அறக்கட்டளை விருதையும், சைகோன்-புதுச்சேரி நாவல், சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *