கமலாவின் தோழிகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 13, 2026
பார்வையிட்டோர்: 70 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

மூப்பத்தி மூன்று வயதிருக்கும்! மாநிறம்! வலது கன்னத்தில் திரண்டிருக்கும் “மரு ” எந்த புடவை கட்டியிருந்தாலும் திரும்பி பார்க்க வைக்கும் வசீகரம்!

இருபதுக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணிபுரியும் அந்த பொதுதுறை காப்பீட்டு நிறுவனத்தின் மைய அலுவலகத்தில், ஒரு அறிவிக்கப்படாத ஹீரோயினாக வலைய வந்தாள் கமலா!

சத்தமும் வெடி சிரிப்பும் இருக்கிற இடமெல்லாம் “கமலா” இருப்பாள்!

அவளை சுற்றி எப்போதும் பத்து பன்னிரண்டு அலுவலக தோழிகள்!

ஒருவர் முதுகை ஒருவர் தட்டாமல், சிரிப்பும் கும்மாளுமாக இல்லாமல் அவளது அலுவலக வாழ்க்கை ஒரு நாளும் போனதில்லை!

முதல் நாள் பார்த்த டி.வி.சீரியலில் தொடங்கி …புடவை அது இது என்று குடும்ப விஷயங்கள் நாள் முழுவதும் அலுவலகத்தில் ஒடும்..

இடையிடையே அபீஸ் வேலைகள்….

எனக்கும் கமலாவுக்குமான தொடர்பு ஒரு இன்ஸூரன்ஸ் ஏஜென்டுக்கும் அலுவலக ஊழியருக்குமான தொடர்பு அவ்வளவே!

இருப்பினும் எனது பாலிஸிகளை மட்டும் எந்த பிரச்சனையும் இல்லாமல், சீக்கிரம் முடித்து கொடுத்து விடுவாள்! கூடவே சில பல அலுவலக விஷயங்களை அவ்வப்போது என்னிடம் பகிர்ந்து கொள்வது அவள் வழக்கம்!

“கணேசன் சார்! இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்?” என்பாள்!

அடுத்த ஒரு மணி நேரத்தில் ,அவள் கேட்ட புத்தகத்தை வாங்கி கொடுத்து விடுவேன்! எத்தனை சொல்லியும் கேட்காமல் புத்தகத்துக்கு காசு கொடுத்து விடுவது அவள் வழக்கம்!

மற்ற ஊழியர்களை காட்டிலும் கமலா என்னிடம் அன்பும் மதிப்பும் காட்டியதற்கு இப்படி சில பல காரணங்கள் உண்டு!

வீடு அருகில் என்பதால், கமலா காலை பத்து மணிக்கே அலுவலகத்துக்கு வந்து விடுவது வழக்கம்! ஆனால், உடன் பணிபுரியும் தோழிகள் அப்படி இல்லை!

அன்று , கமலாவின் நெருங்கிய தோழி ரோகிணி வழக்கத்துக்கு மாறாக எந்த தகவலும் சொல்லாமல் ரெண்டு மணிநேரம் தாமதமாக அலுவலகம் வந்தாள்!

கேஷ் கவுண்டரை நிர்வகிக்கும் பொறுப்பு அவளுடையது!

வாரத்தின் முதல் நாள் என்பதால், கவுண்டரில் அன்று ஏகப்பட்ட கூட்டம் ! கூச்சல்!

ரோகிணி சர்வ சாவகாசமாக வந்து உட்கார்ந்து கம்யூட்டரை ஆன் செய்ய தொடங்கினாள்…

கண்ணாடி அறையிலிருந்து இதை பார்த்து கொண்டிருந்த மானேஜர் கிருஷ்ணன் நம்பி எழுந்து வந்து “திங்ககிழமை கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதாம்மா?” என்று மிகவும் பணிவாக கேட்டு விட்டு ரோகினியின் பதிலுக்கு காத்திராமல், தனது இருக்கையில் மீண்டும் போய் அமர்ந்து கொண்டார்!

கிருஷ்ணன் நம்பி , சீனியர் மானேஜர்.

ரொம்பவும் மென்மையும் அதிர்ந்து பேசாத ரகம்! தீவிர வாசகர்!எப்போதும் ஒரு நாவலோ,சிறுகதை தொகுப்போ அவரிடம் இருந்து கொண்டே இருக்கும்!

ரிடையர் ஆக இன்னும் ரெண்டு வருஷம்தான் இருக்கு !

மேனஜர் தன்னை கேள்வி கேட்டது ரோகிணிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை!

மதிய இடைவேளையில், பேச்சு முழுவதும் இது பற்றியதாக மட்டுமே இருந்தது!

கிருஷ்ணன் நம்பிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பது ரோகிணியின் திட்டம்!

“நீ தான் மேனஜரை எதிர்க்க சரியான ஆள் ” என்று சம்மந்த மே இல்லாமல் கமலாவை இதில் கோர்த்து விட்டாள் ரோகிணி!

கடைசியில், ஒட்டு மொத்த பெண் ஊழியர்களும் நாளை பன்னிரண்டு மணிக்கு, அலுவலகத்துக்குள் தாமதமாக நுழைவது என்று திட்டமிடப்பட்டது.

எல்லோரும் கருப்பு ஸாரியில் ஒரே மாதிரி வரலாம் என்ற ரேவதியின் கருத்து கமலாவிற்கு ஏனோ பிடிக்கவில்லை!

கடைசியில், எல்லோரும் உதா கலர் புடவை அணிந்து, ஆபிஸீக்கு அருகில் உள்ள மகிழம் மரத்திற்கு அடியில் கூடுவது என்று முடிவெடுக்கப்பட்டது!

மறுநாள் காலை பணிக்கு பெண் ஊழியர்கள் யாரும் வராததால், கிருஷ்ணன் நம்பிக்கு பதட்டம் தொற்றி கொண்டு விட்டது!

ரோகிணி கமலாவுடன் சேர்ந்து, திட்ட மிட்ட படி மிக தாமதமாக இருபது சக ஊழியர்களுடன் ஓரே சமயத்தில் உள்ளே நுழைந்தனர்!

மேனஜரின் அறையை கடந்து தான் எல்லோரும் உள்ளே சென்றாக வேண்டும்!

அறைக்குள் இருந்த கிருஷ்ணன் நம்பி இதை கவனிக்க தவறவில்லை!

“நேத்திக்கு என்னை கேள்வி கேட்டில்லேயே! இன்னிக்கி பார்! எல்லோரும் லேட்! உன்னால், என்ன செய்ய முடியும்?”

ரோகிணி மனசுக்குள் கொடுர சந்தோஷம்!

இதன் பிறகு, கிருஷ்ணன் நம்பி எல்லோரிடமும் அவ்வப்போது பேசும் ஒரு சில வார்த்தைகளையும் குறைத்து கொண்டார்!

இது நடந்து சில பல நாட்களுக்கு பிறகு கமலாவிடம் அன்று மேனேஜர் அவமதிக்கப்பட்டது குறித்து நான் கேட்டேன்!

ஸாரி! ரோகிணிக்காக நான் அப்படி செய்திருக்க கூடாது, மானேஜர் ரொம்ப நல்லவர் என்று வருத்தப்பட்டாள்!

நாட்கள் நகர்ந்தன!

அலுவலகம் உற்சாகம் இழந்திருந்தது!

கமலா மூன்று மாதமாக அலுவலகம் வரவில்லை! Sick Leave ல் இருப்பதாக பேசிக் கொண்டார்கள்!

கமலாவிற்கு அலுவலகத்தில் இத்தனை தோழிகள் இருந்தும், ஏன் ஒருவரும் அவள் வீடு தேடி போய் பார்த்து வரவில்லை!

திடிரென்று ஒருநாள் கமலா அலுவலகம் வந்தாள்! தீவிர உயிர் கொல்லி நோய் ஒன்றால், பாதிக்கப்பட்டு ஆளே உருக்குலைந்து, மெலிந்து போயிருந்தாள்!,முகம் முழுவதும் வலியின் வேதனை பரவியிருந்தது!

தோழிகள் யாரும் முன் போல் அவளிடம் பேசவில்லை! கைகுலுக்கவில்லை! , எட்ட இருந்து நலம் விசாரித்தார்கள்!

அவளுடன் பேசுவதை தவிர்த்தார்கள்!

இத்தனைக்கும் கமலாவிற்கு வந்திருக்கும் தீவிர நோய் ஒன்றும் தொற்று நோய் அல்ல!

“கமலா உனக்கு சீக்கிரம் பசிக்கும்..லன்ஜ் டைம் வரைக்கும் காத்திருக்க வேண்டாம்! முன்னாடியே போய் சாப்பிடு” – இது ரோகிணி!

அவளுடன் உணவருந்துவதை கூட தோழிகள் தவிர்த்தனர்!

நோயின் வேதனையை விட சக தோழிகளின் விலகல்கள் கமலாவை நிலை குலைய செய்திருந்தது!

கிருஷ்ணன் நம்பி கமலாவின் அலுவலக சூழலை கவனிக்க தவறவில்லை!

தனது சிறிய ஏ.ஸி. அறையில்,கமலாவிற்கு என்று ஒரு இருக்கை தயார் செய்தார்.

அவள் டேபிள் முன் ஜானகிராமனின் “மர பசு ” முதல் பாலகுமாரனின் “மெர்குரிபூக்கள்” வரை புத்தகங்களை பரப்பி வைத்தார்! கூடவே சில மாத வார இதழ்கள்! தண்ணீர் பாட்டில்!

நோயின் தீவிரம் கடைசி கட்டத்தில் இருப்பதால், கமலாவின் வாழ்நாள் இன்னும் சில நாட்கள்தான் என்று டாக்டர் சொன்னதாக அவளது சகோதரர் நேரில் வந்து கிருஷ்ணன் நம்பியிடம் மட்டும் தெரிவித்து விட்டு சென்றிருந்தார்!

கமலா விரும்பும் போது அலுலகம் வரலாம்! போகலாம்! வேலை எதுவும் செய்ய வேண்டாம்!

சக ஊழியர்கள் தொடர்பின்றி அந்த அறைக்குள்ளேயே அவள் நாட்கள், நேரங்கள் கழிந்தன!

கிருஷ்ணன் நம்பி ஒரு சகோதரனை போல முழு சுதந்திரம் கொடுத்து அக்கறையுடன் அவளை பார்த்து கொண்டார்!

ஏறத்தாழ, கமலா அலுவலகத்தில், எல்லா நட்பு வட்டாரத்திலிருந்தும் துண்டிக்கப்பட்டாள்!

அன்று, வாரத்தின் கடைசி நாள்!

கிருஷ்ணன் நம்பி கமலாவை அறையிலிருந்து கைதாங்களாக அழைத்து வந்து கொண்டிருந்தார்!

என்ன சார் ஆச்சு?

கமலாவிற்கு ரொம்ப முடியல! அதான் ஆட்டோவில ஏத்தி அனுப்பலாம்னு…

ஒவ்வொரு படியாக நிதானமாக மூவரும் கீழ் இறங்கினோம்!

Lift வசதியில்லாத மிக பழைய பில்டிங்! மூன்று தளங்கள்!

மூன்று பேருக்குமே மூச்சு இறைத்தது!

ஆட்டோவில், ஏறும் போது என்னை பார்த்து புன்னகைத்தாள்!

என்னை விட இருபது வயது இளையவள்!

“ஆபீசில் ரிடையர் ஆகும் போது, Farewell Party யில் ஒவ்வொருவர் பற்றியும் அவர்களே அறிந்திராத பல விஷயங்களை பற்றி ஏஜென்ட் சார்பாக அழகாக பேசுவீர்கள்!

என்னை பற்றியும் ஒரு நாள் நீங்கள் பேசுவீர்கள் ! அதை நான் கேட்ட வேண்டும் என்று ஆசை! ஆனா I am missing you கணேசன் சார்! “

கமலா என்னிடம் பேசிய கடைசி வார்த்தைகள் இவைகள் மட்டுமே !

“மேடம் நீங்க நிச்சயம் திரும்பி வருவீங்க!

இன்னும் ரொம்ப நாள் ஒர்க் பண்ணுவீங்க ! உங்க Farewell Party யில், நான் பேசுவேன்! நீங்க கேட்பீங்க!”

Sure என்றேன்!

பிசினஸ் இல்லாததால்,தொடர்ந்து ரெண்டு மூணு வாரம் நான் அலுவலகம் போகவில்லை!

பிறகு, ஒரு நாள் ஆபீஸ் போனபோது, கிருஷ்ணன் நம்பியின் அறைக்கு வெளியே கமலாவின் சிறியளவு போட்டோ வைக்கப்பட்டு, பூ வைத்து, விளக்கு எரிந்து கொண்டிருந்தது!

அடுத்த அடுத்த நாட்களில், கமலாவை சகலரும் மறந்து விட்டனர்!

இப்போது அறிவிக்கப்படாத ஹிரோயினாக தோழிகள் மத்தியில், ரோகிணி வலம் வர தொடங்கியிருந்தாள்!

அதே சிரிப்பு சத்தம் கொண்டாட்டம்…

கிருஷ்ணன் நம்பி மட்டும் தனது அறைக்குள் கமலாவிற்கு என்று ஒதுக்கிய சேர் , டேபிள்…அதன் மீது புத்தகங்கள், வார இதழ்கள், தண்ணீர் பாட்டில்…என்று எதையும் அகற்றாமல் அப்படியே விட்டு வைத்திருந்தார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *