அலைபேசியும் அழுக்கு வேஷ்டி தாத்தாவும்
கதையாசிரியர்: முனைவர் வெங்கடேஷ் கணபதி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 16, 2026
பார்வையிட்டோர்: 12

வெகு நாட்களாக பனஷங்கரி கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று திட்டம் போட்டு போட்டு அது ஒத்திக்கொண்டே போக, ரகு அன்று கட்டாயம் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தான்.
அன்று குட் ஃப்ரைடே என்பதால் ரகுவிற்கு விடுமுறை வேறு. ரகு பெங்களூரில் கேயார் புறம் அருகில் ஒரு டெக் பார்க்கில் மென்துறை பொறியாளராக வேலை பார்த்துக்கொண்டு இருந்தான். ரகுவிற்கு சொந்த ஊர் மீனாட்சி அம்மன் வாசம் புரியும் மதுரை மாநகரம். மதுரை மாநகரம் வரலாற்றுப்புகழ் நிறைந்த ஒரு நகரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ரகுவின் தந்தை எலக்ட்ரிசிட்டி போர்டில் வேலை பார்த்து ஓய்வு பெறும் வேளை நெருங்கிக்கொண்டிருந்தது. தாயார் தமிழ் ஆசிரியர். ரகுவின் ஒரே தங்கை வேலூரில் பொறியியல் கல்லூரி மாணவி .
ரகு தமிழ் நாட்டில் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்து விட்டு சிக்மா சாப்ட்வேர் லிமிடெட் என்ற கம்பெனியில் வேலை பார்த்து வந்தான்.
கப்பன் பார்க் மெட்ரோவிற்குள் நுழைந்த ரகு மெட்ரோ கார்டை ஸ்வைப் செய்ய நுழைவுக் கதவுகள் திறந்தன. மின்தூக்கியில் நுழைந்து ப்லாட்பார்மிற்குள் ரகு நுழைந்த போது மணி ஒன்பது ஆகி விட்டிருந்தது. ஏப்ரல் மாதத்திலேயே பெங்களூரில் வெய்யில் சுட்டெரித்தது.
மைசூர் ரோடு நிலையத்தில் இறங்கி ரகு வெளியே வந்தான். அவனது அதிர்ஷ்டம் இரண்டு நிமிடத்திற்குள் பேருந்து வந்து விட்டது. அன்று கல்லூரி விடுமுறை என்றதால் பேருந்து காலியாகவே இருந்தது. ஆனால் ஹோசக்ரேஹள்ளி வந்ததும் திமு திமுவென்று கூட்டம் உள்ளே நுழைய ரகுவின் பக்கத்துச் சீட்டில் ஒரு முதியவர் வந்து அமர்ந்தார்.
ஏன்டா இவர் இங்கே வந்து உட்கார்ந்தார் என்று ரகுவிற்கு எரிச்சல் மண்டியது. அந்த முதியவரின் வேஷ்டி அழுக்காக இருந்தது. மேலே அவர் அணிந்திருந்த ஒரு ஜப்பா துவைத்து நாள் ஆகி விட்டது போல இருந்தது. நரைத்த தலை முடி மற்றும் தாடி. ரகுவிற்கு குமட்டிக்கொண்டு வந்தது. போயும் போயும் காலை வேளையில் இவர் தான் வந்து உட்கார வேண்டுமா? இவர் குளித்தே நிறைய நாள் ஆகி இருக்கும் போலிருக்கே என்று நினைத்துக்கொண்டான் ரகு.
கோவிலுக்கு அம்மனைத் தரிசனம் பண்ணப்போகையில் இந்த மாதிரி ஒரு அனுபவமா. பேருந்து விரைவாக நகர்ந்து கொண்டிருக்க ரகு டிக்கெட்டிற்காக க்யூ ஆர் கோடை ஸ்கேன் பண்ணி பேருந்துக்கட்டணத்தை ச் செலுத்தினான். அந்த முதியவர் சுருக்குப்பையில் இருந்து காசுகளையும் நோட்டுகளையும் நோண்டிக்கொண்டு இருந்தார். டுக் டுக் சத்தம் ஒலிக்க ரகு பாக்கெட்டிற்குள் இருந்து அலைபேசியை எடுத்தான்.
அவன் அலுவலுக நண்பர்கள் குரூப்பில் ஏதோ ஒரு காணொளியை அனுப்பி இருந்தார்கள். பேருந்தில் கூட்டம் அலைமோத ரகு அலைபேசியை பாண்ட் பாக்கெட்டிற்குள் வைத்து விட்டான். பனஷங்கரி பேருந்து நிலையத்திற்குள் பேருந்து நுழைய மக்கள் இறங்கத் துவங்கினார்கள். இந்த வயதானவர் பக்கத்தில் உட்காருவதற்கு பதில் பேசாமல் இறங்கி விடுவோம் என்று ரகு முண்டியடித்துக்கொண்டு இறங்கி விட்டான்.
அன்று வெள்ளிக்கிழமை ஆனதால் கோவிலில் கூட்டம் சற்று அதிகமாவே இருந்தது. பள்ளி கல்லூரி விடுமுறை வேறு. ரகு விரைவாக நடக்க முயற்சிக்கையில் தம்பி தம்பி என்று குரல் கேட்டது. சட்டென்று ரகு திரும்பியபோது அந்த முதியவர் அவன் பின்னால் வருவது தெரிந்தது.
இவர் எதற்கு நம்மை அழைக்கிறார். பணம் போதவில்லை என்று நச்சரிப்பாரோ என்று எண்ணிய ரகு இன்னும் வேகமாக நடக்க முயற்சிக்க அதற்குள் அந்த முதியவர் மூச்சு வாங்க அவன் முன்னே நின்று விட்டார்.
‘தம்பி நீங்க உங்க போனை சீட்டிலேயே வைத்து விட்டீங்க. இந்தாங்க. அதைக்கொடுக்கத்தான் ஓடி வரேன்’ என்று நிறுத்தினார். அப்பொழுது தான் ரகுவிற்கு போன் தன் பாக்கெட்டில் இல்லை என்பது புரிந்தது.
போனை வாங்கிக்கொண்டே ‘ரொம்ப நன்றி தாத்தா’ என்று ரகு கூறிய போது அவன் முகத்தில் அசடு வழிந்தது. ஆனால் உள்ளத்தில் குற்ற உணர்ச்சியே மேலோங்கி இருந்தது.
அந்த முதியவர் மெல்ல நடந்து பக்கத்துத் தெருவுக்குள் நுழைந்து விட்டார். கோவில் வாசலில் தேங்காயும் சூடனும் மண் விளக்கும் எண்ணைய் பாட்டிலும் மலர் மாலைகளும் பரபரப்பாக விற்பனை ஆகிக் கொண்டிருந்தன. ரகுவின் மனம் மட்டும் கூனிக்குறுகிப்போய் இருந்தது.
தொடர்புள்ள சிறுகதைகள்
கமலாவின் தோழிகள்!
ரகுராமன் சீனிவாசன்
August 13, 2026
துன்னல்
நாஞ்சில்நாடன்
August 13, 2026
அலையில் ஆடும் காகிதம்
உரு.வளவன்
August 13, 2026