கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 22, 2026
பார்வையிட்டோர்: 352 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

சென்னை மாநகரத்தின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை . வாரத்தின் முதல் நாளான திங்கட் கிழமை . நண்பகல் வேளை . அந்த மருத்துவமனையின் முக்கிய மருத்துவர்களுள் ஒருவரான டாக்டர் ரத்தினம், ஐந்தாவது மாடியில் தமது அறையில் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார். ரத்தினம் நடுத்தர வயது . பருமனான தேகம். மழித்த முகம். சால்ட் அண்ட் பெப்பர் கேசம். அவரது வாசிப்பை நிறுத்தியது செவிலி விஜியின் குரல். ஒல்லியான தேகம் . நடுத்தர வயது . அழகான தோற்றம். அவளுடைய நீண்ட கூந்தல் கொண்டைக்குள் சிறைப்பட்டிருந்தது. மலர்ந்த முகம்.

“குட் மார்னிங் டாக்டர்”

“குட் மார்னிங் சிஸ்டர் விஜி . இவ்வளவு வெய்யில்லேயும் பேஸ் க்ளோவா இருக்கு…. ஹஸ்பண்டு இப்ப எல்லாம் நைட் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடறாரா?”

“இல்ல டாக்டர்… அவரு திருந்தவே இல்லை”

“சூரி படத்து காமெடில வர்றா மாதிரி எதிர் வீட்டு கதவை தட்டாம இருக்காரு இல்ல அது போதும்”

“அந்த மாதிரி சம்பவமும் நடந்துருக்கு…டாக்டர்”

“சரி விடுங்க.. சீக்கிரம் மாறிடுவாரு.. ஒங்க முகத்துல என்ன இவ்ளோ ஒளி.. அதை சொல்லுங்க..”

விஜி பைவ் ஸ்டார் சாக்லேட்டை ரத்தினத்திடம் கொடுத்தாள்.

ரத்தினம் அதனை வாங்கிக் கொள்கிறார்.

“எங்க முதல் பொண்ணுக்கு குழந்தை பிறந்திருக்கு ஆண் குழந்தை..“

“அட இது மகிழ்ச்சியான செய்தி அதான் ஒங்க பேஸ் பிரைட்டா இருக்கு. . ஒங்க பேரன் , அழகான இளமையான பாட்டியைப் பார்க்க போறான்.”

விஜி முகம் இத்தனை வயதிலும் வெட்கத்தால் சிவந்தது.

“அம்மாவும் குழந்தையும் நலம்தானே ? நார்மலா ? போய் பார்க்கப் போறீங்களா ? ஒங்க மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் வாழத்துக்களை சொல்லுங்க…”

“நார்மல் டெலிவரி தான் டாக்டர் .. ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க .. அவ டெல்லியில இருக்கா டாக்டர் நான் எங்கே போறது ? அவங்க குழந்தையை மெட்ராசுக்கு அழைச்சுகிட்டு வரும் போது பார்த்துக்க வேண்டியது தான்”

“போக முடியாட்டா என்ன எப்ப பார்த்தாலும் வீடியோ கால்ல பேசிக்கிட்டேதானே இருக்கப் போறீங்க”

“டாக்டர் அட்மின் ஸ்டாப் ராஜா ஒரு தகவலை சொல்ல சொன்னாரு… மேல ஆறாவது மாடியில நடக்கிற மீட்டிங் க்கு ஒங்கள இப்ப வர சொல்றாரு…”

டாக்டர் ரத்தினத்தின் முகம் மாறியது.

“அட்மின் ஸ்டாப் யாரும் என் கிட்ட இன்ட்டர்ஆக்ட் பண்ணதே இல்லையா என்ன ? அது என்ன ஒங்க கிட்ட சொல்லி கன்வே பண்றாங்க…”

“இல்ல டாக்டர்… ஒங்க கிட்ட பேச..“

“நான் என்ன சிங்கமா கரடியா என்னை பார்த்து பயப்படறதுக்கு … சரி போய் பார்க்கறேன். என்னதான் கதைக்கறாங்கன்னு”

ரத்தினம் அந்த அறையை விட்டு வெளியேறி, படிகளில் ஏறி கூட்ட அறைக்குள் நுழைந்தார்.

அந்த குளுகுளு அறையில் நாலைந்து நபர்கள் அந்த மருத்துவமனையின் நிர்வாகிகள் அமர்ந்து இருந்தனர். நடுநாயகமாக அந்த மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சுந்தரம் அமர்ந்து இருந்தார்.

வணக்கம் சீஃப் என்றபடியே ரத்தினம் ஓர் இருக்கையில் அமர்ந்தார். புன்னகை பூத்தார். நிதி இயக்குநர் பாபு தான் நம்மை இங்கு வரவழைத்திருக்கிறான் என்பதை அவனுடைய முகத்தைப் பார்த்து அறிந்து கொண்டார் ரத்தினம்.

“மேனேஜ்மென்ட் மீட்டிங் அஜெண்டால என் பேர் எப்படி வந்துச்சு சீஃப்?“

சுந்தரம் தயக்கத்துடன் ரத்தினம் அது வந்து… என்று திணறிக் கொண்டிருக்கையில், பாபு பேசினான் –

“டாக்டர் , பப்ளிக் கொண்டு வந்து அட்மிட் பண்ண ஆக்சிடன்ட் கேஸ் சுஜாதா ங்கிற அம்னிசியா பேஷன்ட்டை நீங்க ரெண்டு மாசமா டிஸ்சார்ஜ் பண்ணாம இருக்கீங்க… ஒங்க கணக்குன்னு சொல்லி இருக்கீங்களாம்… நாங்க இன்னும் பில் போடலை… எவ்வளவு நாள் இங்க வைச்சு ட்ரீட் பண்ணப் போறீங்க…?”

ரத்தினம் கோபத்தை அடக்கிக் கொண்டு சிரித்தார் –

“இதை மீட்டிங்ல கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன சீஃப்? நீங்க கேட்டா… நான் பதில் சொல்லப் போறேன்…”

சுந்தரம் அமைதியாக இருந்தார். பாபு தான் பேசினான்.

“அவங்க ஒங்க அப்பாவோட …. ன்னு பேசிக்கறாங்க… பழைய மூன்று முடிச்சு படத்துல வர்றா மாதிரி மகன் வயசு பொண்ணையே ஒங்க அப்பா…. இருந்தாரா?“

ரத்தினம் எழுந்து நின்றார்.

“சீஃப் … சமூகத்தில பெரிய ஆளா இருந்த காலமான எங்க அப்பாவோட பர்சனல் லைப் பத்தி இவன் இங்க பேச வேண்டிய அவசியம் என்ன ? ஆமாம் . சுஜாதா என்னோட வயசா இருந்தாலும் எனக்கு சின்னம்மா தான் அவங்க எங்க அப்பாவோட கடைசி காலத்துல அவரோட இருந்தாங்க பார்த்துகிட்டாங்க… அந்த சூழல் சந்தர்ப்பம் எல்லாம் எங்க குடும்ப விஷயம்…. அவங்க ஓரளவு குணமாகிற வரைக்கும் இந்த ஹாஸ்ப்பிட்டல்ல தான் இருப்பாங்க…. ஒங்க பிசினஸ் மைண்ட்ல என்ன ஓடுது … என்னோட ரிலேட்டிவ் ன்னா கன்செஷன் கொடுக்கணும்னு தானே… எல்லாருக்கும் போடற சார்ஜஸ் போடுங்க.. நான் கட்டிடறேன். போதுமா? சீஃப் , இன்னிக்கு எங்க அப்பாவை பத்தி காசிப் பேசறவங்க ஒங்களை பத்தியும் பேசுவாங்க… திஸ் இஸ் நாட் த வே சீஃப்…. ஐ ஆம் சாரி சீஃப்… ஐ வில் ஹேவ் டு லீவ் … தாங்க்ஸ்”

என்று யாருடைய முகத்தையும் பார்க்காமல் அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினார் டாக்டர் ரத்தினம்.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *