கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2026
பார்வையிட்டோர்: 82 
வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தரளிகை தனக்கு வந்த கடிதத்தை வாசித்துவிட்டு. பிரித்திருந்தபடியே அதைக் கையில் வைத்துக்கொண்டு சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தாள்.

மறுமுறை அவள் கண்கள் எந்த வரிகளைத் தேடினவோ அவை தட்டுப்பட்டன.

“உங்களுடைய அற்புத நடனத்தை இங்குள்ள வர்கள் மட்டும் கண்டால் போதுமா? உலகம் உய்யுமே, ஒரு தடவை க்ஷேத்திரக்ஞர் பதத்துக்கு நீங்கள் அபூர்வ மாய் அபிநயம் செய்து காட்டுவதைக் காண! அமெரிக்காவில் சிவதாண்டவத்தின் அழகிய உருவப் படங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. கண்கூடாக நானே பார்த்திருக்கிறேன். ஆனால், ‘காலைத் தூக்கி நின்றாடும் தெய்வத் திருக்கோலத்துக்கு விரிவான வியாக்கியானம் செய்யும் உங்கள் அரிய கலையை மட்டும் அங்குள்ள ரஸி கர்கள் அநுபவித்தார்களே யானால் எப்படி எப்படி எல்லாம் உங்களுக்குப் பாராட்டுதலை வழங்குவார்களோ அறியேன்! உங்கள் திவ்ய அநுபவத்தையும் கலைத் தேர்ச்சியை யும் உலகம் போற்ற இயலாதபடி நீங்களே ஏன் ஒரு திரையிட்டு அதனை மறைக்க வேண்டும்? மேலை நாடுகளில்தான் ஆர்வமும் அழகுணர்ச்சியும் இன்று மலிந்து கிடக்கின்றன. உங்கள் கலைக்கு அமெரிக்கா துரிதமாக வசப்படும்; இது நிச்சயம். வசப்பட்டால் பிறகு என்ன வெல்லாம் எதிர் பார்க்கலாம் தெரியுமா!……”

இக்கடிதத்தை எழுதித் தனக்கு அனுப்பிய நண்பனும், தன் நாட்டியக் கலைக்கே புத்துயிர் ஊட்டியவனு” மான வித்தியாசாகரன். ஆகாய விமானத்தில் தன்னை அழைத்துச் செல்வதைத் தரளிகை மனக் கண்ணில் ஒரு தடவை கண்டாள். இளமையும் கலையின்பமும் கூடிய இடத்தில் காதலையே, மூட உலகம் ஊகிக்கும். ஆனால் அவள்பால் வித்தியாசாகரனுக்கு இருக்கும் நட்பு, எவ்வளவு தூய்மையானது என்பதை அவள் இருதயம் அறியு மல்லவா?


அவள் தாய், தன் மகளுக்குச் சிறிய வயசிலேயே ஏற்பட்ட அதிருஷ்டத்தை நினைத்து, அடிக்கடி மனத்தினுள் கவலைப்படுவது உண்டு. சாமான்ய வாழ்க்கையை நடத்து வதற்கு ஏற்ற வகையில்தான் அவள் புருஷர் அவளுக்குச் சொற்பச் சௌகரியங்களை வைத்து விட்டு இறந்தார். அவருடைய ஒரே மகள் அபயாம்பாள், இப்பொழுது தரளிகை என்ற புதிய நாமகரணத்துடன் கலையுலகில் சிறகடித்துப் பறக்கும் யுவதி, அவர் இறந்தபோது எட்டு வயசு நிரம்பாதவள். அநாதையாய் விட்டுவிடாமல் அவர்கள் போஷணைக்கு வைத்திருந்த சிறிது தனம், அவர்களைக் காப்பாற்றியது. எல்லாவற்றையும்விட உண்மையில் திக்கற்றவர்களைக் காப்பாற்றுவதற்கு என்றே உருவெடுத் தவரைப்போல் இருந்த அவள் சகோதரர் சங்கர ஐயர் அச்சமயத்தில் தைரியத்தை ஊட்டியிராவிட்டால், தரளிகை யின் தாய், மனம் உடைந்தே போயிருப்பாள்.

அடிக்கடி, பட்டணத்தில் நடைபெறும் நடனக் கச்சேரிகளுக்குத் தானும் வருவேன் என்று அபயாம்பாள் பிடிவாதம் செய்வாள்; அதற்குக் காரணம் நாட்டியத்திற் கென்றே உள்ள தனி இயல்பு அபயாம்பாளிடம் இருப் பதே என்று அவள் தாய் எண்ணினாள். அவள் எண்ணம் வலியுறுவதற்குத் தக்கபடி நட்டுவனார் சோமசுந்தரம்பிள் ளையும், ‘குழந்தை விளையாட்டாகக் காட்டும் முத்திரை களையும் அங்க அசைவுகளையும் பார்க்கையிலேயே நன் றாகப் பரத நாட்டியம் பழக்கி வைக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்கள் குழந்தை நாட்டியமாடுவ தற்கு என்றே பிறந்திருக்கிறாள். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்: இரண்டே வருஷங்களில் அரங்கேற்றம் செய்து வைக்கலாம்’ என்றார்.

நல்ல முகூர்த்தத்தில் அபயம், நட்டுவனார் சோமுப் பிள்ளையிடம் நடனக் நடனக் கலையைக் கற்கத் தொடங்கினாள். அவர் குறிப்பிட்ட காலத்திற்குள் பிராபல்யமும் அடைங் தாள். ‘பேபி’யாய் இருந்தவள் ‘குமாரி’ ஆகிவிட்டாள். வயசு இப்பொழுது பத்தொன்பது. எல்லாப் பத்திரிகை களிலும் அவள் பெயரும் நாட்டியப் படங்களும் நிறைந் நிை திருந்தன. ‘போட்டோ’ பலிப்பதற்கான அழகிய சரீர வளமும் அவளுக்குப் பொருந்தி பொருந்தி யிருந்ததைக் காண எல்லோருக்கும் திருப்தி-ஏன்-மோகம் என்றே கூறலாம். அவள் தாய்க்கு இருந்த பெருமையோ கரை கடந்து, நின்றது.

இவ்வளவுக்கும் மத்தியில், மாமா சங்கர ஐயர் ஒரு வரே அபயாம்பாளின் அருமைக் கலைவளர்ச்சியைக் கண்டு, பிரமிப்பை அடையவில்லை. அவருக்கு நாட்டியத் தின் பெருமை விளங்காமல் இல்லை. அவருடைய கலை யுணர்ச்சி மேன்மையான துதான். ஆயினும் உயர்ந்த கலை யைக் கேவலப்படுத்தும், சிறு குழந்தைகளின் நடனங்களை அவரால் ஆமோதிக்க இயலவில்லை. எவ்வளவுதான் அப யம் கலையிலும், அக்காரணத்தினால் வாழ்க்கையிலும் முன் னேறிய போதிலும் இன்னும் அவளுடைய மனோதர்மத் தில் திருப்தி உண்டாகவில்லை. சிறந்த கலையை உயர்த்த வேண்டுமானால், அதன் சூட்சுமங்களை நன்கு அறிந்திருக்க வேண்டாமா? ஆம், அவருக்குப் பரத நாட்டியத்தின்பால் உண்மையான கௌரவம் இருந்தது; அதனால், கண்டவர் களும் கேட்டவர்களும் அதன் சிறப்பை அறிந்ததாக நினைக்கும் போலித்தன்மையைப் பொறுக்க அவரால் இயலவில்லை.

தரளிகை என்ற பெயரின் பொருத்தம் எப்படி இருப்பினும், அபயாம்பாளை அவர் ‘அவயம்’ என்றே அருமையாய் அழைப்பார். நடனமாடுகையில் மின்னலைப் போல ஒசிந்து ஒளிர்ந்து விளங்கும் அழகு அபயாம்பா ளிடம் பூரணமாய் வெளிப்படுவதாக, அவளுக்குப் புதிய நாமகரணமிட்டவர்கள் நினைத்தபோதிலும், அபயாம் பாள் என்ற பெயரின் அழகும் ஆழ்ந்த கருத்தும் அவர் உள்ளத்தில் நிலைத்திருந்தன. பயம் என்பதை அறவே விலக்கி அருள் புரியும் அம்பிகையின் திருநாமத்துக்கு வமையுண்டோ உலகில்! என்றே சங்கர ஐயர் தம் மனத் தினுள் எண்ணி, எழுச்சி பெறுவார். உலகம் வெளித் தோற்றத்துக்குத்தான் மதிப்பைத் தருகிறது; உள்ளே காணும் உண்மை அறிவுக்கு விலை இல்லையே என்றும் அவர் மனம் தனிமையில் தவித்தது. தரளிகையானால் என்ன, அபயாம்பாளானால் என்ன, தம் சகோதரியின் ஒரே மகள் அல்லவா குழந்தை? அவளுக்கு உண்மையின் உயர்வில் நோக்கம் விழவேண்டுமென்ற விருப்பம், அவர் என்று அவர்கள் குடும்பத்தில் தமது முழுக் கவனத்தையும் செலுத்தத் தொடங்கினாரோ அன்றிலிருந்தே ஏற்பட் டிருந்தது. அக்காரணத்தினால்தானோ என்னவோ, தம் சகோதரியிடம், அபயாம்பாளின் வாழ்க்கை, நாட்டியக் காரி வாழ்க்கை யாகிவிடக்கூடாதென்று அவர் அடிக்கடி விவாதம் செய்வார்.


தரளிகை இன்று கடிதத்தைப் புரட்டிப் புரட்டி வாசித்ததை அவள் தாய் கவனித்துவிட்டாள்.

“ஏது கடிதாசு?” என்று கேட்டாள் தாய்.

தரளிகையின் அதர நுனியில் ஒரு சிறு வளைவு தென்பட்டது. ஆனால் நகையாக மாறவில்லை அது. ‘தெரியவில்லையா உனக்கு இன்னும்?’ என்பதைப்போல் அவளுடைய கண்கள் கண்கள் பார்த்த பார்வை, தாயின் அறி வின்மையை ஏளனம் செய்தது.

“சாகரனா?” என்றாள் தாய்.

‘ஆம்’ என்பதைப்போல் தரளிகை தலையை அசைத்து விட்டுப் பின்னும் ஒரு தடவை அதில் கண்ட உணர்ச்சிப் பெருக்கில் தானும் நீந்தத் தொடங்கினாள். அவள் ஒரு பெரும் கற்பனை மயக்கத்தில் அமிழ்ந்திருந்தாள். மேல் நாட்டில், அதுவும் அமெரிக்காவில், ஒருவருக்குப் புகழ் கிட்டுமானால் அதன் மதிப்பு என்ன சாமானியமாகவா இருக்கும்? அதிலும் வித்தியாசாகரனைப்போன்ற – சிறந்த செல்வாக்குடன் கூடிய ஒருவன் – தன்னை அழைத்துக் கொண்டு சென்றால் எதைத்தான் அங்கு அடைய முடி யாது? அவள் கண்முன்னே பிரபல பத்திரிகை உலகத்தின் நிருபர்களும் படம் பிடிப்பவர்களும் ஒரு பெரிய சமுத் திரம் திரண்டு வருவதைப்போன்ற காட்சி அளித்தார்கள். எங்கும் தன் உருவம் பெரிதும் சிறிதுமாய் அழகழகான நடனக் கோலங்களில் எடுக்கப் பெற்று, கவர்ச்சியுடன், பார்ப்பவர்களின் கண்களைப் பறிப்பதாக எண்ணினாள்.

அவ்வளவுதானா? இன்னும் எத்தனையோ? எதிர்பார்க்க இயலா த வகைகளில், அவளது கலைக்குப் பிரசாரம் வலுத்து, அவள் கையெழுத்தை நேரே பெறுவதற்காக ‘டாலர்கள்’ மலையாய்க் குவியும் அபூர்வச் செய்தியைத் தன்னைப் பெற்ற இந்திய நாடு அறிந்து என்ன பெருமை யடையுமோ என்பதையும் ஒரு தடவை நினைத்துப் பார்த்தாள்.

“என்ன, யோசனை பலமாயிருக்கே!” என்றாள் தாய். அவளுடைய மனச்சஞ்சாரத்துக்கு ஒரு தடையைப் போடு வதுபோல்.

“அம்மா. யோசனை செய்வது இனி முடியாது. வித்தியாசாகரன் சொல்வதை நீ கேட்டாயானால், நீதான் முதலில் ஆகாய விமானம் ஏறத் தயாராவாய். அவர் புறப் படுவது நிச்சயம். சொந்த வர்த்தக விஷயமாய் வரும் ஜனவரி 26-ஆம் தேதி ‘வாஷிங்டனி’ல் அவர் இருக்க வேண்டுமாம். அவருடன் நான் இப்போது செல்லாவிடில் அங்கெல்லாம் பிறகு எப்பொழுது போக முடியும்?’ என்றாள் தரளிகை, தாயின் அங்கீகாரத்தை முழுவதும் எதிர்பார்த்தவளாய்.

“என்னவோ, அம்மா?” உன் மாமாதான் ஒப்புக் கொள்ளவேணும். எனக்குச் சாகரனுடைய நல்ல எண் ணத்தில் சந்தேகமே கிடையாது. அவன் கலைக்காக எதை வேண்டுமானாலும் செய்வான். அதுவும் உன்னு டைய நாட்டியத்தைப்பற்றி அவன் புகழ்ந்து பேசாத நாளே இல்லை” என்று கதவுப்பக்கம் திரும்பி, யாரையோ எதிர்பார்ப்பவளாகச் சொன்னாள். தரளிகைக்கா தாயின் கவலையை அறிய முடியாது? மாமாவைச் சரிப்படுத்தத் தனக்குச் சாமர்த்தியம் இருப்பதை அவள் தன் தாயிடம் விஸ்தாரமாகச் சொல்லவில்லை, ஒரே வார்த்தையில் தாயின் மனச் சஞ்சலத்தை ஒழித்தாள்.

“மாமாவையா சொல்கிறாய்? மாமாவுக்கு இதிலெல் லாம் அபிப்பிராயம் என்று தனியே ஒன்று உண்டென்று நினைக்காதே. எதையோ மாமா சொல்லத்தான் சொல்லு வார். அதற்காகக் கவலைப்பட்டால் அப்புறம் போக வேண்டியதுதான், மூட்டையைக் கட்டிக்கொண்டு, மயி லாப்பூர்ப் பழைய வீட்டுக்கே!” என்று குரலில் அலட்சியம் தொனிக்கக் கூறினாள்.

மயிலாப்பூரில் இருந்த பழைய வீட்டை விட்டுவிட்டு, மாம்பலத்தில் புதிய மாளிகையொன்றைத் தரளிகையின் தாய் வாங்கியது, சங்கர ஐயருக்கு ஒருகாலும் சம்மதமாக இருக்கவில்லை. வேலையாட்களையும் காரையும் புதிய சிநே கங்களையும் அவருடைய கர்நாடக சுபாவம் ஒப்பவில்லை என்றுதான் தரளிகையும் அவள் தாயும் கருதினார்கள். வாஸ்தவத்தில் சங்கர ஐயர் சுபாவமே தனிவிதம். அவர் தம் மனைவி மரித்த பின் மறுவிவாகம் செய்துகொள்ளாதவர். குழந்தைகள் தமக்கு இல்லையே என்று ஒருபோதும் வருந் தாதவர். சரியான காலத்தில் சந்தியாவந்தனம், பூஜை, புரஸ்காரம் முதலியவைகளைச் செய்வதில் அவருக்கு நம்பிக்கை ஒருகாலும் குறையவில்லை. கழுத்தில் நல்ல கௌரீசங்கரம் துலங்க, பெரிய ருத்திராட்ச மாலையைத் தரித்து, திருநீறு இட்டுக்கொண்டு தினசரி நியமங்களில் ஈடுபடுவார். அவயம்’ என்று அவர் தன்னை அழைப்ப தைக்கூடத் தரளிகை சில சில சமயங்களில் விரும்புவ தில்லை. முக்கியமாகப் புதிய மனிதர்கள் அவளைப் ‘பேட்டி’ காண வருகையில் மாமா தன்னைப் பழைய பெயரைச் சொல்லிக் கூப்பிடுவதை நிச்சயம் அவள் வெறுத்தாள். ஆனால், தன் தகப்பனார் இறந்தபிறகு தங்கள் குடும் பத்தை ரட்சிக்க எங்கிருந்தோ ஓடிவந்த மாமாவை அவள் நன்றியுடன் கருதாமல் இருந்தால் அது நியாய மாகாது என்ற எண்ணத்தை மட்டும் அவள் மறந்தவளே அல்ல. மாமாவின் கலையபிமானத்தில் வேண்டுமானால் அவளுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லாதிருக்கலாம் மற்றப்படி சங்கர ஐயருடைய சுபாவத்தில் காணப்பட்ட பொறுமையையும் ஒழுக்கத்தையும் அவள் அறிந்தவள் தான்.

ஒருவரை ஒருவர் அறிவது மட்டும் போதுமா? சமய சந்தர்ப்பங்களில் ஞாபகக் குறைவின்றி அவரவர் இருத யத்தில் எழும் அநாவசிய வேகங்களைக் குறைக்கப் பாடு படுவதன்றோ உண்மை வெற்றி? தரளிகை சிறுமியல்லவா? அவள் மனம் எவ்வளவோ நுட்பமான கலை அம்சங்களைக் கவனித்து, ஆராயும் சக்தி பெற்றதாயினும், சுபாவத்தில் வேரூன்றிய ஆத்திரத்தை மட்டும் விலக்க வகையற்று இருந்தது. பிற்பாடு, நிதானம் நிலவும் காலத்தில் அவள் மனம், தான் செய்ததைக் குறித்துச் சில வேளைகளில் வருத்தமடைவதும் உண்டென்றே கூறவேண்டும்.


“உங்கம்மா என்ன என்னவோ சொல்லுகிறாளே; புரியவில்லையே எனக்கு!” என்று தரளிகையினிடம் தனிமையில் ஆரம்பித்தார் சங்கர ஐயர்.

அவள் இதை எதிர்பார்த்துத்தான் இருந்தாள்; ஆனாலும் இதைக் கேட்டவுடன், ஒரு தடவை அவள் இருதயம் படபடத்தது. தன் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாகவேதான் தன் மாமா வரவரத் தயாராகிக் கொண்டு வருகிறார் என்ற எண்ணம் அவளிடம் பலம் பெற்றது.

“இதில் புரியாதது என்ன மாமா?” என்று அவள் சற்றுக் கோபம் கொண்ட குரலில் வினவினாள்.

சங்கர ஐயருக்கு அவளுடைய மனநிலை மனநிலை ஒருவாறு புலனாகியது. ஆயினும் வாழ்க்கை அநுபவம் படைத்தவரானபடியால் சட்டெனத் தமக்குத் தமக்குத் தோன்றியதை வார்த்தைகளில் கொட்டிவிடவில்லை. அதற்குப் பதிலாக ஒரு புன்னகையை வரவழைத்துக்கொண்டார். பொது வாகப் பேசலானார்.

“புரியாததா? சொல்லுகிறேன் கேள். அமெரிக்கா வில் உன் பரத நாட்டியக் கலையைக் காண்பிக்க நீ செல் வதில் புரியாத அம்சம் ஒன்றும் இல்லைதான். ஆனால் இந்த வித்தியாசாகரனுடன் தான் செல்லவேண்டுமோ? அதைச் சற்று எனக்கு விளக்கு, பார்க்கலாம்” என்று தமது முகத்தை நன்றாக அவள் பக்கம் திருப்பிக்கொண்டு, அவளை ஊன்றிப் பார்த்தவராய்ச் சொன்னார்.

“தெரியும், மாமா; உனக்கு எதனால் தப்பு அபிப்பிரா யம் ஏற்பட்டது என்பது எனக்குத் தெரியும். வித்தியா சாகரன் என்ன சிறு பையனா? அவனுக்கு மனைவி இருக் கிறாள் என்பது ஞாபகம் இருக்கட்டும். குழந்தைகள் வேறு, இருவர் இருக்கிறார்கள். போதாததற்கு அவனுக்கு எத்தனையோ ஜோலிகள். அவன் அமெரிக்காவுக்குச் செல்வதும் திரும்புவதும் வருஷத்துக்கு இரு முறையாவது இருக்கலாம். என்னைத் தன்னுடன் அழைத்துச் செல்வ தில் ஆர்வம் அவனிடம் உண்டாயிருப்பது என் பாக்கியம் அல்லவா? அவனுடன் போய் வந்தால் எத்தனையோ சௌகரியங்கள் ஏற்படும். அவனுக்கு அவ்விடத்தில் நிறையச் செல்வாக்கு உண்டு. உனக்குத் தெரியுமே! நான் எதற்குச் சொல்லவேண்டும்…… இதோ பார் மாமா; என்னைப்பற்றி நீ ஏன் இப்படி நினைக்கிறாய்? என்றைக் காவது நான் கண்ட புருஷனுடன் வேண்டிய அளவுக்கு மேல் பேசியதையோ அல்லது ஞாபக மறதியாக இருந் ததையோ நீ கண்டிருக்கிறாயா?’ அவள் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஏக்கமும் கோபமும் கலந்திருந்தன.

சங்கர ஐயர் கனைத்துக்கொண்டார். அவள் பேசிக் கொண்டிருக்கையில் குறுக்கிடவில்லை. அவள் பேசி முடித்ததுங்கூட உடனே தாமும் தம் பிரசங்கத்தை ஆரம் பிக்கவில்லை. ஏதோ யோசனை செய்பவர்போல் சற்றுச் சும்மா இருந்தார். பிறகு சாந்தமாய்த் தமது சகோதரி யின் மகளை ஒரு தடவை பார்த்தார். தரளிகைக்கா அவ ருடைய திடசித்தத்தில் சந்தேகம்? இல்லை. அதுவேகூட அவளுக்கு மிகுந்த கலவரத்தைத் தற்சமயம் உண்டாக் கியது.

“என்ன மாமா, ஒன்றுமே நீ பேசவில்லை?” என்று அவள்தான் அவரைத் தூண்டினான். இனி மௌனமாக இருப்பது, அவசியம் இல்லாத புகாருக்குத் தம்மை ஆளாகிவைக்கும் என்று சங்கர ஐயர் நினைத்தார் போலும். அவர் மெதுவாகச் சொல்ல ஆரம்பித்தார்.

“பேசாமல் இருப்பதற்கா, உன்னிடம் தனியாக வந் தேன்? ஆனால் என்ன பேசுவது இந்தச் சந்தர்ப்பத்தில் என்றுதான் திகைக்கிறேன். உனக்கு வயசு உனக்கு வயசு இன்னும் போதவில்லை. உலகம் எவ்விதமானது என்பதை உணர வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. அப்படி இருக்கை யில் நான் சொல்வது சரியாகத் தோன்றுமென்று எண்ண வும் முடியவில்லை. ஆனாலும் சொல்லாமல் இருந்தால், பிற்பாடு மாமாவின் உள்ளம் இதை ஒப்புக்கொண்டதா என்ற கேள்வி, உன்னிடம் உதித்தால் என்ன செய்வது? ஆகையால் சொல்லுகிறேன்.

“வித்தியாசாகரனுடைய நிஜமான கருத்து என்ன வென்று பரிசோதிக்க என்னால் முடியாது; பரிசோதிக்க வேண்டிய அவசியமும் இல்லை. நீ சொல்லும் காரணங்க நீ ளெல்லாம் உண்மைதான்; ஆனால் மனிதன் மனிதன் தானே அம்மா? உனக்குத்தான். போதுமான வயசு ஆகிவிட்டதா. விவேகம் ஏற்பட? இல்லையே! அது போகட் டும். என்னைப் போன்றவர்களுக்கு இப்படித்தான் எதி லும் சந்தேகம் ஏற்படலாம். ஆனால் பரதநாட்டியக் கலையை வளர்க்கவும் பரிமளிக்கச் செய்யவும் அமெரிக்கா வுக்குக் செல்லவேண்டுமா என்பதுதான் எனக்குத் தீராத பிரச்னை. அங்குள்ள பண்பாட்டிற்கும், நம் தேசத்துச் சம்ஸ்காரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையே! கேவலம் விநோதமாக நம் நாட்டியம் இருப்பதாக அவர் கள் கருதலாம்; அல்லது காலையும் கையையும் தூக்குவ தைப் பார்த்து, அவர்கள் இந்தியக் கலையிலும் புரியக் கூடிய அம்சம் உண்டு என மதிக்கலாம். இங்குள்ள கலைச் சிறப்பு முழுவதையும் அறிய வேண்டுமானால் அங்குள்ள ரஸிகர்களுக்கு நம்முடைய சம்பிரதாயமும் பண்பாடும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை அறிவாயா?

இங்குள்ள பரத நாட்டிய அபிமானிகளையே பார்; இவர்களில் எவ்வளவு பேர்களுக்குப் பரத நாட்டியத்தின் கலைநுணுக்களில் தோயும் நிஜமான ஆர்வம் இருக்கிறது? அப்படி இருக்குமானால் காலைத் தூக்கி ஆடும் தெய்வத்தை ரஸிகர்கள் உணர்வதற்கு, ஒரு காலை அளவுக்கு மேல் உயரத் தூக்கவேண்டுமா? யோசித்துப் பார். பரமசிவ னும் பார்வதியும் போட்டியிட்டு நர்த்தனம் செய்ததாக அல்லவா புராணக் கதை சொல்கிறது? அச்சமயம் சிவ பிரான் தமது இடது பாதத்தைத் தம் இடுப்புக்குமேல் தூக்கித் தாண்டவ நிருத்தியத்தைச் செய்யவும், பெண் ணானபடியால் தேவி, தலை குனிந்து தன் தோல்வியைப் புலப்படுத்தியதாகவும் அல்லவா கதை? கதையின் கருத்தை மேன்மைப்படுத்த அல்லவோ பரத நாட்டியத்தின் ஒரு கிளையான ‘லாஸ்யம்’ ஏற்பட்டிருக்கிறது. ஓர் அளவு வரையில்தான் பெண்கள் காலைத் தூக்கவேண்டும். சரியான மரபுப்படி வந்த முறையில் கற்றவள் எவளும் நடராஜ மூர்த்தங்களில் காணும் வண்ணம் காலைத் தூக்கி அபிநயம் பிடிக்கமாட்டாள். முதலில் இவ்விஷயத்தை அமெரிக்காவுக்குச் செல்லுமுன் நீ நன்றாய்ப் பரிசீலனை செய்து பார்க்கவேண்டும். நீ உன் காலை நன்றாய்த் தூக்கு, வதில்தான் சொல்லொணா அழகு இருப்பதாக, உன் நாட்டியத்தை மெச்சும் வித்தியாசாகரனுக்கும் எண்ணம். இதை விவாதிக்க நேரம் இப்பொழுது எனக்கு இல்லை. நீ பரத நாட்டியத்தை நன்றாகக் கற்று, இங்குள்ள உண்மை ரஸிகர்களிடம் பாராட்டைப் பெறுவதற்குச் சரியானபடி வழி செய்யவில்லை; அதற்குள் அமெரிக்காவிலுள்ள பிர முகர்களின் ஆசி பெறப்போகிறாய். நல்லது. நான் சொல் வதில் விபரீதமான கருத்துத் தோன்றலாம். ஏனெனில் கலைப் பயிற்சி மட்டும் போதாது; சுவர்நுபவம் ஒவ்வொரு கலைஞனுக்கும் அவசியம்; சுவாநுபவம் உண்டான பிறகு இதை நீயாகவே ஒரு காலத்தில் உணர்வாய். இந்தப் பரத நாட்டியக் கலை, தெய்வத்தினிடம் நேராக வரம் பெற்று அமைவதல்லவா? நடராஜப் பெருமான் ஆட்டி வைக்கும் உலகம் முழுவதும் அவர் எழுப்பும் அற்புத லயத்தில் கலந்து கிடக்கிறது. அவர் செய்யும் தாண்ட வத்தை ஒரு தரம் அகக்கண்ணால் கண்டால் எல்லாம் விளங்கும். பிறகு என்னைப் போன்றவர்களின் பேச்சுக்கு அவசியமே இல்லை……ஆனால்……சரி, அதிகம் பேசி விட்டேன்.

“சுகமாய்ப் போய் வா அம்மா! அமெரிக்காவும் ஐரோப்பாவும் பரத நாட்டியத்தை அறிவதானால் இந்தி யர்களின் வேதாந்த விசாரத்தையும் வழி வழியாக வந் துள்ள தத்துவ வேட்கையையும் இன்னுங்கூடச் சுலப மாக அறியலாமே!” சங்கர ஐயர் தம் பேச்சை முடித்தார். அவர் பிரசங்கம் செய்த மாதிரி முடிக்கவில்லை பேச்சை. அங்கங்கே நிறுத்தி, நிதானம் இழக்காமல்தான் அவர் பேசினார்.

சங்கர ஐயர் பேசியதைத் தரளிகை ஆராய்ந்தாளா இல்லையா தெரியவில்லை அவள் சொன்னது இதுதான் : “இருக்கட்டும் மாமா; பார்த்துவிடுகிறேனே எல்லா வற்றையும். அமெரிக்காவுக்கு இம்மாதம் வித்தியாசாகர னுடன் நான் செல்வதை நீ மறுக்கவில்லையே! இதுவே நான் வேண்டியது. மற்றவைகளுக்கு என்னிடம் உள்ள கலைதான் விடை தரவேண்டும்.”

இதைச் சொல்லி ஏதோ தீர்மானம் செய்துகொண்ட வளைப்போல் தரளிகை எழுந்து சென்றாள். சங்கர ஐயர், “ஸ்ரீராமா, என் அப்பனே!” என்று வாய்விட்டு ஒரு தடவை சொல்லியவராய், தம்முடைய அலுவல்களைக் கவனிக்க, அவ்விடம் விட்டு நகர்ந்தார்.

2

அன்று பெளர்ணமியான தால் இரவின் சோபை அற்புதமாக இருந்தது. மேகங்களே இல்லாத வானத்தை நிலவின் ஒளி கவர்ந்திருந்தது. சென்னையின் செல்வக் குழந்தையான மாம்பலத்தின் சிறு கரங்களும் கால்களும் அந்நிலவின் எழிலில் பன்மடங்கு பிரகாசித்தன. சிறிய சிறிய புதிய பங்களாக்களும், வட்டமும் நேருமான ரோட்டுகளும் மாம்பலத்தின் நவநாகரிக வளர்ச்சியைக் குறிக்கும் சின்னங் களல்லவா? பங்களாக்களில் இரண் டொன்று மிகப்பெரியவைகளாகவும் இருந்தன. அம்மாதிரி யான ஒன்றில் ‘தரளிகாதேவி’ என்ற விலாசம் ‘கேட் டு’க்குப் பக்கத்தில், சலவைக் கல்லில், தங்க எழுத்துக் களில் பொறிக்கப்பெற்றிருந்தது.

அம்மாளிகையின், மேல்மாடத்தில், திறந்த இடத் தில், தரளிகை, இன்னும் ஒரு வாரத்தில் வித்தியாசாகர னுடன், தான் ஆகாய விமானத்தில் பறந்து செல்வதைப் பற்றித் தனிமையில் யோசிக்கையில், வேதனையும் சிறிது அடைந்திருந்தாள்; சங்கர ஐயருடைய எச்சரிப்பு அதற்கு முக்கிய காரணம் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் அதிகமாய்த் தம் அபிப்பிராயத்தை அவர் வற்புறுத்திச் சொல்லாதபடியால் தரளிகையின் இருதயத்தில் மாமா வின்பால் உள்ள கௌரவம் அதிகமாகியதில் ஆச்சரியம் இல்லை.

இன்று வித்தியாசாகரன் அவளிடம் வந்து பேசிய பிற்பாடு ஏனோ அவ்வளவாக அவனுடைய புகழுரைகளைச் சுயநலமற்றவைகளாகக் கருத அவளால் இயல வில்லை?

“நாம் இருவரும் தனித்துச் சில நாட்கள் இருக்கப் போவதை நினைத்து நினைத்து, நான் பரவசம் அடைகி றேன்” என்று அவன் கூறியதே அவளைத் திடுக்கிடச் செய்தது. இருப்பினும் இயல்பாகத் தனக்குள்ள தைரி யத்தை இழக்காமல் அவள், “நாம் எதிர்பார்க்கும் அலு வல்களில் வெவ்வேறு பாதைகளில் செல்ல நேரிடலாம். என்னுடைய நடனத்துக்காகச் சதா உங்களால் காத்தி ருக்க முடியாது. க உங்களுடையதோ வர்த்தக சம்பந்த மான காரியம். அதை முக்கியமாகக் கவனிக்கவேண்டும் அல்லவா?” என்றாள். ஆயினும் அவள் மனம் சாந்தி யற்றுவிட்டது.

சமயம் எவ்விதம் இருப்பினும் மாமா சங்கர ஐயர் தம் திடநம்பிக்கைக்கு உரிய விவகாரங்களில் என்றைக் குமே தடங்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வார். பொழுது விடிந்தால் ஆருத்திரா தரிசனம். மயிலையில் ஸ்ரீ கபாலீசுவரருடைய திவ்ய தரிசனத்தை வழக்கம்போல் விடியும் நேரத்திலேயே காண அவர் தீர்மானித்திருந்தார். காலையில் மயிலாப்பூருக்குத் துரிதமாகச் செல்லக் கார் தேவை என்பதை அவர் உணர்ந்தவராய், மெத்தையில் தனித்து உட்கார்ந்திருந்த தரளிகையினிடம் சென்றார்.

மாமாவின் வரவைத் தரளிகை எதிர்பார்க்காததால் முதலில் சிறிது சந்தேகங்கொண்டாள். “என்ன மாமா? கீழிருந்தே என்னைக் கூப்பிடக்கூடாதா? நீ என் படி ஏறி வரவேண்டும்?” என்று அலுத்துக்கொண்டவளாய்ச் சொன்னாள்.

“பாதகம் இல்லை. ஏறி வந்ததால் ஒன்றும் குடி கெட்டுவிடவில்லை. ஒரு சமாசாரம் சொல்லி வைக்க வில்லை டிரைவரிடம். உனக்குப் புது டிரைவர் வீடு தெரி யுமோ?” என்றார்.

“தெரியாதே; அவசரமாய்ப் போக வேண்டுமா?” என்று தரளிகை கேட்டாள்.

“அவசரம் இப்பொழுது ஒன்றும் இல்லை. காலையில் ஐந்து மணிக்குள் டிரைவர் வரவேண்டும். நாளைக்குத் திருவாதிரை ஆயிற்றே! நடராஜமூர்த்தியை மயிலாப்பூரில் சந்நிதித் தெருவில் நின்று, கோபுர வாசலில் வரும்போதே தரிசிக்கவேண்டும். வண்டி வேண்டாமா, அவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து போவதற்கு? அதனாலேதான் கேட் டேன், சரி, போகிறது; முதல் பஸ் 4-30 மணிக்கு உண்டாம். அதில் போனால் போகிறது” என்றார். தம்மையே சமாதானப் படுத்திக்கொண்டு.

“பஸ் எதற்கு, மாமா…ஆனால் அவனை எங்கே இரவில் கண்டு பிடிக்கிறது ?… இதற்குத்தான் யோசித்தேன், அவனை வேலையில் வைத்துக்கொள்ள. தூரத்தில் இருப் பவனை வைத்துக்கொண்டால் இம்மாதிரி அவசரத்துக்கு ஆள் அகப்படவே மாட்டேள். ஆனால் அதனால் ஒன்றும் கவலை வேண்டாம். நான் ஓட்டுகிறேன் வண்டியை. உனக்கு ஏன் கவலை?” என்றாள் வேகத்துடன்.

சங்கர ஐயர் யோசித்தார்; “நீ எதற்கு அவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்கவேணும் அம்மா? இன்னும் ஒரு வாரங்கூட இல்லையே உன் பிரயாணத்துக்கு? வேண்டாம். நான் எதையாவது ஏற்பாடு செய்துகொள்ளுகிறேன். வரு கிறேன்” என்று அவ்விடம் விட்டு நகர எத்தனம் செய்தார்.

தரளிகையா சந்தர்ப்பத்தை விட்டுவிடுவாள்? “என்ன மாமா, நான் என்ன தூங்கு மூஞ்சியா? நானுந் தான் சுவாமி தரிசனம் செய்கிறேனே! ஒரு நாள் காலையில் சீக்கிரம் ஸ்நானம் செய்தால் போயிற்று. இதற்குக் கவலைப் படவேண்டாம். மயிலாப்பூரில் எவ்வளவோ காலம் இருந்தும் ஆருத்திரா தரிசனம் செய்யவில்லையே என்றே என் மனமும் குறைப்படுகிறது. இந்தக் குறையைப் போக்கிக்கொள்ளுகிறேனே. அமெரிக்காப் பிரயாணத்திற்குள்” என்று சற்று விளையாட்டும் தீர்மானமும் கலந்த குரலில் சொன்னாள்.

சங்கர ஐயர் பார்த்தார். தாம் அவளைத் தடுப்பதை விட, அவளாகவே காலையில் எழுந்திரரவிடில் அவள்மேல் குற்றம் தானாகவே ஏ ற்படுமல்லவா? அதைப்பற்றி அவள் தானே கவலைப்படவேண்டும் என்று நினைத்தவராய்க் சிரித்துவிட்டு, “சரி, படுத்துக்கொள்ளப் போகிறேன். நீயும் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமானால் படுக்கப் போவதுதான் உசிதம்” என்று சொன்னார். மெதுவாகக் கீழே இறங்கி, மாமா போவதைத் தரளிகை கவனித்தாள். ஏதோ ஒரு பாரத்தைத் தற்சமயம் மனத்தைவிட்டு நகர்த்தி வைத்தவளைப்போல் ஒரு பெருமூச்சு விட்டாள். கணப்பொழுதில் அவளும் அவ்விடம் விட்டுக் கீழே இறங்கிச் சென்றாள்.

காலையில் மணி 4-30 இருக்கலாம். சங்கர ஐயர் இறைவன் திருநாமங்களை வாயினால் சொல்லியவாறே தமது ஸ்நான நியமங்களை முடித்துக்கொண் டிருந்தார். அவருக்குத் தான் கொடுத்த வார்த்தை தவறலாகாதென்ற பிடிவாதத்தால் தரளிகையும் வழக்கத்துக்கு விரோத மாகப் படுக்கையை விட்டுச் சீக்கிரமே எழுந்து, ஸ்நானம் செய்து, தனது கூந்தலையும் ஆற்றிக்கொண்டு, நுனியில் ஒரு முடிச்சுப் போட்டுத் தயாராகக் காரைப் ‘போர்ட்டி கோ’வில் கொண்டுவந்து நிறுத்தியிருந்தாள்.

அவள் தாய்க்கு, தரளிகை மாமாவுடன் காரில் செல்வது தெரியாததால், மனத்தாங்கலுடன், “ஏண்டி யம்மா, நீயும் போகப்போறேன்னு என்கிட்டே சொல்லப் படாதோ? நான் மட்டும் சாமி தரிசனம் செய்யக் கொடுத்து வைக்கலையா? நீ செய்யறது நன்னாயிருக்கு!’ என்று புகார் செய்தாள்.

“என்ன அம்மா? மாமா என்றைக்கோ என்னை வண்டி கேட்டார். அதுக்கு நான் ஏற்பாடு செய்யவேண் டாமா, சொல்லு” என்று சாமர்த்தியமாகப் பதில் சொல்லிச் சிரித்தாள் தரளிகை.

அதனுடன் பேச்சு முடிந்தது. சங்கர ஐயர் சிவப் பழமாகக் காட்சி அளித்தபடி வண்டியின் பின்னே ஏ றி உட்கார்ந்தார். அவர் கழுத்தை ருத்திராக்ஷ மாலை அலங் கரித்தது. திருநீறு இட்டுக்கொண்டு, சிவநாம ஸ்ரணை செய்யும் அவருடன் செல்வதில் தரளிகைக்குத் கொஞ்சம் சங்கோசமாகத்தான் இருந்தது. தனக்கும் மாமாவுக்கும் அபிப்பிராயங்களில் எவ்வளவு வேற்றுமை என்பதை அவள் நினைக்காமல் இல்லை, அச்சமயத்திலும்.

மணி இன்னும் ஐந்து அடிக்கவில்லை. மார்கழி மாதத் தின் பனித்திரை லேசாக வானத்தையும் பூமியையும் ஒரு மெல்லிய துகிலைப்போல் மூடியிருந்தது. பூர்ண சந்திரன் மேற்கே சாய்ந்துகொண் டிருப்பினும் நிலவைப் பொழிந்து, பனிப்படலத்தையும் தெளிவாக்கிக்கொண் டிருந்தான். மயிலாப்பூர்ச் சந்நிதித்தெருவிள் கீழ்ப்பக்கம் தரளிகையின் கார் வந்து நின்றது. கோபுரம் அந்த நிலவில் நன்றாகத் தெரிந்தபோதிலும், பின்னேயுள்ள மதியின் பிரகாசத்தால் முன்னே இருள் மூடி, அதுவும் ஒரு விதத்தில் அக்காட்சிக்கு அழகு கொடுப்பதாக அமைந்திருந்தது. கோபுரம் உயரமாகக் கறுத்து நின்றிருக்கையில், அதன் பின், சற்று வலது பக்கமாக முழுமதியும் எட்டிப் பார்த் திருந்த காட்சி, மனத்தில் கிளர்ச்சியை உண்டாக்கியது. சங்கர ஐயர் வண்டியை விட்டு இறங்கி, தமது சென்னி யின்மேல் கரம் குவித்துக் கண் இமைகளை மூடிக் கோபுரத்தை முதலில் வழிபட்டார்.

தரளிகையின் மனமோ ஏதோ புதிய உணர்ச்சிகளில் சிக்குண்டு தத்தளித்தது. காலை வேளையின் சுகமான சிலிர்ப்பும், ஸ்நானம் செய்ததால் உடலிலும் உள்ளத் திலும் தூய்மை ஏற்பட்ட உணர்ச்சியும் அவளை என்றும் உணராத ஒருவிதப் புதிய அநுபவத்தில் திளைக்கவைத்தன. அதனுடன் கோபுரம் இருட்டிக்கொண்டு உயர்ந்து, கம்பீர மாக நிற்பதும், அதன் ஓரங்களின் வெள்ளிக் கோடிட்டுக் கொண்டு வானத்தில் திங்கள் துலங்குவதும் கண்டு, கண்களை அகல விரித்துப் பார்த்தாள். இரண்டொரு கறுத்த மேகங்கள் நீண்டு, கோபுரத்தின் பின் ஆகாயத்தில் காணப்பட்டதும், அந்த அற்புத காட்சியை இன்னுங் கூடக் கற்பனைக் கண்ணில், விவரிக்க வொண்ணாத சித்திர மாக்கியது. கோபுரமே பெரிய ஜடாபாரமாகவும், மேகங் களின் நீண்ட வரிசை, அதிலிருந்து கிளம்பிய மயிர்க் கால்கள் போலவும் அமைய, சந்திரன் சாய்ந்து ஒரு பக்கத் திலும் ஆருத்திரை நட்சத்திரங்களின் கூட்டம் ஒரு பக்க மும் தெரிந்த வைபவம் கற்பனைக் கண்ணுள்ளவர்களுக்குச் சிவபிரானே உருவெடுத்துச் சடையுடனும் மதியுடனும் நின்றதுபோல் தோன்றியிருக்கலாம். யாருக்குத் தோன் றியதோ இல்லையோ, தரளிகையின் அந்தரங்கத்தில் ஒரு புயல் கிளம்பி, அவளை மெய்ம்மறக்கச் செய்துகொண் டிருந்தது. அவள் தேகம் புல்லரித்தது. எதனால் கண்களில் நீர் மல்கியது என்பது அவளுக்கே புரியவில்லை. இருட்டுச் சூழ்ந்திருந்தபடியால் தன் கண்களில் நிரம்பிய நீரை அவள் உடனே அவசரப்பட்டுத் துடைத்துக்கொள்ளவில்லை.

அச்சமயம் கோபுரவாசலிலிருந்து தாரை தம்பட்டங் களும் மேளதாளங்களும் தீவட்டிகளும் சூழக் கபாலீசுவரர் நடனக் கோலத்தில் வெளியே எழுந்தருளி வந்துகொண் டிருந்தார். எதிரே நின்ற சிறு கூட்டம் கன்னங்களில் கரங்களால் போட்டுக்கொண்டும், சிரத்தின்மேல் அஞ்சலி குவித்துக்கொண்டும் கோபுர வாசலையே பார்வையிட்டுக் கொண்டிருந்தது. தூரத்தில் திருவாசி வளைந்து வெகு அழகாகத் தெரிந்தது. கீழே நடராஜப் பெருமானுடைய கழுத்துவரை வெண்மை வஸ்திரத்தினால் மறைக்கப்பட் டிருந்தது. கோபுர வாசலில் சுவாமி நின்றதும் கர்ப்பூர தீபஹாரத்தி எடுக்கப்பெற்றது. வாத்தியங்களின் சப் தங்கள் கலந்து மேலே எழும்பின. தீபஹாரத்தி முடியவும் வெண்மை வஸ்திரம் சுவாமியின் மேலிருந்து நீக்கப் பட்டது. சுவாமியும் ஸ்ரீபாதந் தாங்கிகளின் தோள்களின் மேல் வாத்தியங்களின் இசைக்குத் தகுந்தபடி நடன கதியில் வெளியே வந்துகொண் டிருந்தார்.

கிழக்கே, மண்டபத்தின் அருகில் நின்றிருந்த சங்கர ஐயர், “அவயம், நன்றாய்ப் பகவானைச் சேவித்துக்கொள். தூரதேசம் போகிறாய். நடராஜப் பெருமான் அருள் தான் உன் க்ஷேமத்துக்கு அவசியம்” என்றார். அவர், தம் அருகில் நின்றிருந்த தரளிகையைக் கவனிக்க வில்லை. சுவாமி ஊர்ந்து வந்துகொண்டே இருந்தார். ஜனக்கூட்டம் அவ்வளவு அதிகம் இல்லாததால், சுவாமியை அணுகிப் பார்க்க இயன்றது. இடது காலைத் தூக்கி, நடடராஜப் பெருமான் நின்றிருந்ததும், அவர் இடது கையின் வீச்சும், வலது கரம் அபயப்பிரதானம் செய்வதும், கழுத்திலுள்ள திருவாபரணங்கள் ஒரு பக்கமாக இடக்கையின் மேல் புரண்டு, தீவட்டி வெளிச்சத்தில் மின்னிக்கொண் டிருந் ததும், முகம் மட்டும் நிமிர்ந்திருந்ததும், வாயினில் குமிழ்ச் சிரிப்புத் தேங்கி நின்றதும் தரளிகையை வைத்த கண்ணை எடுக்காத வண்ணம் நிலைக்கச் செய்துவிட்டன. அவள் தன்னையும் அறியாமல் இரு கைகளையும் உயரத் தூக்கி. “எம்பெருமனே, உன்னை இக்கோலத்தில் இதுவரையில் நான் பாராததை மன்னிப்யாய்” என்று முணுமுணுத் துக்கொண்டாள்.

ஒரே ஒரு சந்தேகம் மட்டும் அவள் மனத்தில் தோன்றித் தோன்றி அவளைச் சஞ்சலப்படுத்தியது. வெள்ளை சாத்தித் திறப்பதன் கருத்து என்ன என்பதே அவளுக்குப் புலனாகவில்லை. மெல்ல, “மாமா!” என்றாள். சங்கர ஐயர் வாயினால் வாழ்த்துக்களைச் சொல்லியவாறே, “என்ன?” என்பதுபோல் அவளை ஏற இறங்கப் பார்த்தார்.

“ஜபம் செய்கிறாயா, மாமா? அப்புறம் ஆகட்டும்” என்றான் தரளிகை.

மாமாவின் கண்களில் பிரகாசம் தோன்றியது. அவர் மண்டபத்தை வலம் வரும் சுவாமியையும் வெளுத்திடும் கிழக்கு வானத்தையும் உற்றுப் பார்த்தவண்ணம் இருந் தார். என்ன தோன்றியதோ அவருக்கு? ”ஆகா, என் னப்பன் வெள்ளையை நீக்கிக் கிழக்கு வெளுக்கச் செய்து விட்டான். இனி இந்த இரவும் பகலும் கலக்கும் விடிகாலையில் செய்யும் தாண்டவம் நின்றுவிடும். போவோம் வா. அம்மா, நம் இல்லத்துக்கு. நல்ல தரிசனம் கிடைத்தது. உனக்குப் பிரசாதம் வாங்கிவருகிறேன்” என்று சொல் லிக்கொண்டே கிளம்பினார்.

தரளிகை அவரைத் தடுத்தாள். “மாமா, என்னையும் மறந்து தரிசனம் பெற்றேன். பொழுது விடிகிறதே. என்று தோன்றுகிறது. இனித் தாண்டவம் செய்யமாட்டாரோ பகவான்? ஏன்?” என்று உண்மையாகவே ஆவல் தோன்ற அவரைக் கேட்டாள்.

“உனக்கு இதன் ரகசியம் சட்டென விளங்காவிட்டால் தவறில்லை. கேள், சொல்லுகிறேன். சிவபெருமான் பெரிய இரவை அகற்றி, ஜடப் பொருள் மயமான உலகை உய்விக்கும் பொறுப்பு உடையவ ரல்லவா? அவர் நடமாடு வதும் உலகம் சைதன்யம் பெறுவதும் ஒன்றுதான். அவ னன்றி ஓரணும் அசையாது என்பதன் கருத்தும் அந்தத் திவ்ய நர்த்தனத்தில் அடங்கியிருக்கிறது. அவன் அசை வதே ஒரு நாட்டியமாயின் லயமும் எங்கிருந்தோ அதை அடைகிறது. அவனுடைய கூத்தின் உண்மைக்கு வம்புர உண்டா? இல்லை. இந்த லயமே மனித உள்ளத்தின் ஒழுக் கத்தின் சின்னமாம். இந்தத் தாள கதியே ருதுக்களின் வரிசையாக இயற்கையை உந்துகிறது. இந்த லய இன்பமே புல்லுக்குள்ளும் மலருக்குள்ளும் பாய்ந்து சென்று, காலத் துக்கேற்ற அழகையும் அழிவையும் புகுத்துகிறது. இந்தச் சலன ஓட்டத்தில் கட்டுப்பாடு ஒன்று இராவிட்டால், சூரி யனும் சந்திரனும் சரியான காலங்களில் பரிணமித்து, மாறிமாறித் தோன்றமாட்டார்கள். தெரிகிறதா, அவயம்? சக்தி சொரூபமாகத் திகழும் தேவிதான் சிவபிரானுடன் கலந்து, இப்பெரிய இன்பத்திற்கும் ஊற்றுக்கால் ஆகி றாள். தேவி அபயப்பிரதானம் செய்வதும், இவ்வித லயத் தில் கலந்தால் உலகின்கண் மாறி மாறி வரும் இன்ப துன்பங்களுக்கு இரையாகாது; இருக்கலாம் என்ற குறிப்பை உடையதே… நான் என்ன என்னவெல்லாமோ பிதற்று கிறேன் என்று கவலைப்படுகிறாயா? உனக்குப் புரியக் கூடிய பாஷையில் சொல்லுகிறேன், கேள்.

“நாட்டியமாடும் பாஷையிலேயே கூறுகிறேன். இந்த இடது பாதம் எதற்காக மேலேயும் வலது பாதம் குஞ்சித மாயும் அஞ்சிதமாயும் கீழேயும் பதிந்து காண்கின்றன தெரியுமா? ஒன்றை ஒன்று தொடர்ந்து செய்யும் அசைவு களும் அங்கஹாரங்களும் தத்துவத்தின் பல திறப்பட்ட நுட்பங்களை வெளியாக்குகின்றன. வாழ்க்கையின் இன்றி யமையாத வெளித்தோற்றங்களில் எழுச்சியும் அடக்கமும் கலந்து காணப்படுகின்றன. சில வேளைகளில் கட்டுக்கு அடங்காதபடி மனவெழுச்சியில் அகப்பட்டுத் தத்த ளிக்கையில் அதற்கும் ஒரு லயம் ஏற்படுவதை ஞாபகப் படுத்திக்கொள்ள வேண்டும், உனக்கு நாட்டியக்கலை தான் தெரிந்த தாயிற்றே! இசை இன்பத்தைச் செவிகளில் தேக்குவதைக் காட்டிலும் அங்கங்களின் அசைவு குழைவு களால் இசையின்பத்தைச் சொந்தமாக்கிக் கொள்வது இன்னும் பெரிய சுகமெனத் தெரியாதா? இசை வேறு, லயம் வேறு, அங்க அசைவு வேறு என்பதே கிடை யாது. நல்ல யோக சாதனமாக நாட்டியத்தில் தேர்ச்சி பெற்றதும் உனக்கே தெரியும், நம்முடைய பாரதநாட்டி யம் மற்றச் சாமானிய நாட்டியங்களைவிடத் தனிச் சிறப் புடையது என்னும் உண்மை. சிவனாருடைய நாட்டி யத்தை நந்திகேசுவரரும், அவரிடமிருந்து பரத முனிவரும் அறிந்ததாகச் சொல்லுவார்கள். முனிவர்கள் தேடும் தத்துவமல்லவா நாட்டிய அரங்கத்தில் காணும் தெய்வ மாகத் தெரிகிறது? வெளியாட்டம் அல்ல இது; அந்தரங் கத்தில் ஆடும் சபேசனை. நடேசனை நீயும் நானும், ஒவ் வொருவரும்,ஆனந்தத் தாண்டவத்தில் சதா பார்த்தும் பாராமல்தான் தடுமாறிச் செல்லுகிறோம் என்பதை அப் பொழுது அறிவாய். ஐயோ! அவனுடைய காலின் வீச் சுக்கு, அவன் இடுப்பும் தோளும் ஓர் எல்லையா? எங்கும் வியாபிக்கக்கூடிய பாதம் அவனுடையது. காதின் குழை விழுந்ததும் அதனைக் கால் விரல்களில் இடுக்கி, அக்காலைக் கொண்டே செவியாபரணத்தைச் சரியாக அமைத்துக் கொண்டு ஊர்த்துவ தாண்டவம் ஆடிய வள்ளலாயிற்றே! அவனோடு போட்டியிடச் சக்தி சொரூபிணியான தேவி யாலேயே இயலவில்லை! உன்னாலும் என்னாலுமா இயலும்! இனிக் காலை அவ்வளவு மேலே ஏற்றாதிருப்பதற்கே பாடு படுவாய். சூசகமாகவே காலைத் தூக்கிக் காண்பி. மற்ற வர்களைப்போல் அதிகமாகக் காலைத் தூக்குவது முற்றும் பிசகு. தெரிந்ததா?”

தரளிகை, சுவாமி, கோபுரவாசலைக் கடந்து உள்ளே செல்லுவதைத்தான் கண்ணிமை அசைக்காது பார்த் தாளோ அல்லது மாமாவின் வேதாந்த விளக்கத்தைக் கேட்டுத்தான் மௌனம் சாதித்தாளோ தெரியவில்லை.

மறுபடியும் சுவாமி, கோவில் உட்பிராகாரத்தை வலம் வந்து, கோபுர வாசலை அடைந்து, வெளியே வரும்வரை அங்கேயே நின்றிருக்கத் தரளிகைக்கு ஆசையாக இருந் தது. ஆனால் மாமா அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். “காலைக்கதிரவன் வரும் வேளை ஆகிவிட்டது. கோபுர வாசலில் நடராஜன் செய்யும் தாண்டவம், இவ்வளவு அழகுடன் இனி இருக்காது; மனவெழுச்சியும் முன்போல் இருக்காது. போகலாம் வா. உன்னுடைய பிரயாணம் அடுத்த இதே திங்கட்கிழமை அல்லவா? அமெரிக்கா சென்று, நாட்டியம் ஆடுகையில் காலைத் தூக்கும்பொழுது ஜாக்கிரதையாக இரு!” என்றார் சிறிது புன்னகையுடன்.

தரளிகை சொன்னதைக் கேட்டு அவருக்கு என்ன தோன்றியதோ தெரியாது. அவர் கோபுரவாசலை மறுமுறை சேவித்துவிட்டு, “எல்லாம் ஈசன் செயல்!” என்றார். தரளிகை சொன்னதை நாமும் கேட்போமே! அவள் அக் காலைவேளையில் வாய்விட்டுச் சொன்னது இதுதான்: “மாமா, நான் நாட்டியமாடித் தெரிந்துகொள்ளாததை யெல்லாம் இன்றுதான் கொஞ்சம் அறியலானேன். அமெ ரிக்காவும் ஐரோப்பாவும் மற்றும் எல்லா உலகங்களுமே சேர்ந்து வந்தபோதிலும், இந்நாட்டின் பண்பாட்டை உணர்த்தும் ஒவ்வொரு கலையின் சாராம்சத்தையும் அறியா மலேதான் அவர்கள் தெரிந்ததாகப் புகழ்வார்கள். இது நிச்சயம். அமெரிக்கப் பிரயாணத்தை இதோ நிறுத்தி விட்டேன். மாமா; காரணம் வேறொன்றும் இல்லை. இன்று காலை, கோபுரவாசலில் கண்ட காட்சி, உள்ளே ஓர் உலகத் தையே படம் பிடித்து, அதற்கோர் சட்டத்தையும் போட் டுக் காட்டிவிட்டது. பரதநாட்டியம் செய்கிறோம். ஆனால் பரத முனியை மறந்துவிட்டோமே! இனி இந்த அற்புத நாட்டியத்தின் உயர்வை, அற்பர்களினிடையே சமர்ப்பிப்ப தில்லை. இது நிச்சயம்!”

– இரட்டைக் கதைகள் (வெள்ளிவிழா வெளியீடு), முதற்பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *