குறுங்கதை : நூறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 5, 2026
பார்வையிட்டோர்: 112 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1986ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 – 10 | 11 – 20 | 21 – 30

11. வழிகாட்டி

இறைவன் உலகைப் படைத்தான். 

உயிர்கள் – 

ஊர்ந்தன….. உலவின பறந்தன… பாய்ந்தன… மனிதர்கள் – 

எத்தனை… எத்தனை… வகையினர்… 

குருடன்.. முடவன்… செவிடன்… ஊமை… ஏழை.. பணக்காரன்… அழகன்… குரூபி… நோயாளி..சுகதேகி … 

இதனால்- 

பூவுலகில் ஒரே பூசல்…… போட்டி…… பொறாமை. இரத்தக்களரி…… 

இறைவன் உதட்டில் குமிண் சிரிப்பு. 

இறைவிக்கு எரிச்சல். விழியில் சிவப்புப் பூத்தது. 

‘இறைவா… இதுவென்ன விளையாட்டு? இதில் மகிழ்ச்சி வேறா….? 

ஏனிந்தப் பிரிவினைகள் ஏற்றத்தாழ்வுகள்…. முரண் பாடுகள்……?’

‘தேவி…… உன் கருணை விழிகளுக்கு என் தத்துவங்கள் புலப்படா. இவ்வேற்றுமைகள் உயிர்களின் தகுதிகள். உலகமென்னும் உலைக்களத்தின் அக்கினித் துண்டங்கள்.. அவற்றின் வடிவங்கள் என் தத்துவங்களே!’- இறைவன் புரியாத தத்துவத்தில் புதிர்ச் சிக்கல் விடுத்தான். 

தேவிக்கு ஆத்திரம். 

பூவுலகத்தில் இருந்து மீண்டும் பேரிரைச்சல் எழுந்தது. 

எட்டிப் பார்த்தார்கள். 

பூவுலகில்- 

கடவுளரைப் பலராக்கி, மனிதர் மோதவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

இறைவன் மௌனியானான். 

12. தற்கொலைப்படை

கடற் பறவைகள் தாழப்பறந்து மீன் வேட்டையாடின.

பச்சை இரத்த வாடை வீச, புழுவுடன் தூண்டில் நீரிடையே துடித்தன. 

‘வேண்டாம்… வேண்டாம்… எங்களை வாழவிடுங்கள்’ 

மீன்கள் அலறின. 

‘உங்களை வாழவிட்டால்… எங்கள் வாழ்வு..?’ கடற் பறவைகள் எக்காளமிட்டுச் சிரித்தன. 

மீன்கள் ஒன்று திரண்டன. ‘இவர்களுக்கு இரையாகி அழிந்து போவதைவிட எதிர்த்து நின்று இவர்களில் சிலரை யாவது கொன்றழித்துவிட்டுச் சாவது மேல்… ‘ 

புரட்சிக்குரல் எழுந்தது எப்படி…? நீரின் மேல் துள்ளி விழுந்த வெள்ளி மீனொன்று கடற்பறவைக்கு ஆசை காட்டிய வாறு தூண்டிலை நெருங்கியது. ‘விர்’ ரென்று கடற்பறவை யும் நீரைக் கிழித்துக்கொண்டு நெருங்கியது. 

‘கடக்’ தூண்டில் சுண்டியிழுக்கப்பட்டது. 

தூண்டில் முள்ளில், மீனுடன் கடற்பறவையும் துடித்தது. 

13. முதலடி

வைகை பெருக்கெடுத்தது. 

தொழிலாளர் வர்க்கம் ஒன்று திரண்டது. 

இயற்கைக்கும், மனிதனுக்கும் மாபெரும் போராட்டம்.

‘அழிக்க வந்த வெள்ளத்தையே, ஆக்கத்திற்குப் பயன் படுத்துவோம்!’ 

உழைப்பு… உழைப்பு.. உழைப்பின் வெற்றிஉயர எழுந்தது.

நிஷ்டையில் ஆழ்ந்திருந்த பரமனின் செவிகளில் உழைப்பின் கீதம் விழுந்து, என்றுமில்லாக் குறுகுறுப்பை ஊட்டிற்று. 

மண்வெட்டியுடன் மண்ணில் இறங்கினான்.

உழைப்பு…. உணவு. ஓய்வு…… 

ஆ! என்ன சுகம்… தபசினைவிட மோனமான நிம்மதி…

உழைப்பின் பின் கிட்டிய உணவு தேவாமிர்தத்தை மிஞ்சியது. அதன் பின் ஏற்பட்ட ஓய்வோ…… 

நிறைவான உழைப்பில் எழும் முழுமையான அமைதி தான் ஓய்வா ?…… 

அவன் ஆனந்தம் அளவு கடந்தது. 

புதுத் தத்துவம் கிட்டிய மகிழ்ச்சியில் ஆடினான்… பாடினான்……. கைலையை மறந்து விளையாடினான். 

தொழிலாளியின் ஆனந்தம் பாண்டியன் கண்ணை மறைத்தது. 

கைப்பிரம்பு சுழன்றது. 

உலகின் தொழிலியக்கம் ஒரு கணம் தம்பித்தது. ஒவ் வொரு தொழிலாளியும் தமக்கு விழுந்த அடியாக, குரல் கொடுத்தனர். 

பாண்டியன் கைப்பிரம்பு நழுவியது. தொழிலாள ஒற்றுமை பின் பலத்திற்கு பாண்டியன் தலைகுனிந்தான். 

14. போட்டி

‘அதோ!… சந்திரோதயம்’ – என்றது பூமி. 

‘பூமியோதயம், அற்புதமே’ – என வியந்தது மதி. 

புவிக்குப் பொறுக்க முடியவில்லை. 

‘என்னால் அழகும், ஒளியும், மதிப்பும் பெறும் நீ எனக் குச் சமமாக கேலி பேசி ஏளனமா செய்கிறாய்?…’ – சீற்றம் சொற்களாயின. 

‘ஆஹஹ்ஹா! என்னால் அல்லவா நீ பெருமையடைகிறாய்? அதை விட்டு விட்டு இறுமாப்பு வேறா? – மதி எதிர்த்தாக் கலில் கொதித்தெழுந்தது. 

இரண்டும் ஒன்றையொன்று நெருங்கி வழி மறித்து நின் றன. மோதிக் கொண்டன. 

கிரகணங்கள் மாறி மாறித் தோன்றலாயின. 

‘கறுப்புச் சூரியன்’ சிரித்துக் கொண்டேயிருந்தான். 

15. பொறுக்கி

அவன் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்திருந்தான்.

தெருவோரமாகக் கிடந்த மணிக்கற்களை எடுத்து, விட் டெறிந்து கொண்டிருந்தான். 

அவன் கரங்கள்…….. வேலை…… உழைப்பு எனத் துடித்தன. 

வயிறும் பசியால் அழுதது. 

‘இதிலிருந்து கொண்டு வீணுக ஏன் கற்களை எறிகின்றாய்? ஆற்றங் கரைகளில் போய் சிறு மணிக்கற்களைப் பொறுக்கி வா! பணம் தருகிறேன்’ – என்றது ஒரு குரல். 

‘ஏன்?’

‘கேள்வி கேட்காதே! சொன்னதைச் செய் …….. கூலியைப் பெற்றுச் செல்!’ 

பதில் கடுமையாக வந்தது. 

2 

அவன் சோற்றிற்காகக் காத்திருந்தான். 

மனைவி அரிசியைக் களைந்து கொண்டிருந்தாள். 

‘ஏம்…….இன்னுமா சோறு காச்சவில்லை. பசியால் பிராணன் போகுது!’ 

3

அவன் ஆவலோடு சோற்றை வாயிலிட்டான். 

‘நறுக்’- வாயில் கல் கடிபட்டது. 

அடுத்தவாய் — 

‘நறுக்!’ 

அவன் வாயில் கடிபட்ட கல்லை எடுத்துப் பார்த்தான். ஆச்சரியத்தால் அதிர்ந்து கூவினான்- 

‘கண்டுகொண்டேன். இவை நான் பொறுக்கிய கற்களல்லவா?’ 

16. பயன்

அது ஒரு பொங்கு முகம். 

நதியும், கடலும் சங்கமிக்கும், புகார் படுக்கை. 

நதியின் நீரினால் அதன் பின்னணி நிலங்கள் பச்சைப் பயிர்க் கதிர்களால் எழிற்கோலம் தீட்டின. 

கடல் துன்பச் சூழலில் சிந்தை நொந்தது. 

‘நதியால் மக்களுக்கு வாழ்வுண்டென்றால்… பரந்த நீர்ப் பரப்பையுடைய என்னால் யாருக்கும் பயனில்லையா…இது வென்ன சோதனை ‘ 

மனிதன் இரங்கினான். 

பாத்தி கட்டி, வரம்புயர்த்தி, கடல் நீரைப் பாய்ச்சினான். 

சூரியன் அக்கினி விதைகளைச் சிந்தி விதைத்தான். வெண்மணிப் பூக்கள் உப்புப் பளிங்குகள் 

முத்தம் சிந்தின. 

உணவுக்கு உயிராயின. 

17. அடிக்கல்

தொழிலாளர்கள் காலையிலிருந்து, அந்த உச்சிப் பொழுதுவரை காத்திருந்தார்கள். 

அவர்கள் வெட்டிய அத்திவரரத்தின் ஈர மண் கூட உலர்ந்து, சொரிந்து விழுந்து கொண்டிருந்தது. 

சீமெந்துக் கலவை ஈரம்வற்றி, உலர்ந்து கொண்டிருந்தது.

அவர்கள் தங்கள் சாந்தகப்பை, மட்டத்தடி, நீர்மட்டம், மண்வெட்டி என்பனவற்றுடன் நீண்ட  ே நரமாகக் காத்திருந்தனர். 

வேலை தொடங்கவில்லை. 

தந்தையுடன், வேலைக்குத் துணையாக வந்திருந்த சிறுவன் கேட்டான்: 

‘அப்பா, ஏன் இன்னும் வேலையை நீங்கள் தொடங்கவில்லை’

‘மகனே, அடிக்கல் நாட்டுபவர் இன்னும் வரவில்லை’ 

‘அடிக்கல் மிகப் பெரிதா அப்பா? உங்களால் அதை நாட்ட முடியாதா?’

‘அப்படியல்ல மகனே. அடிக்கல் பெரிதல்ல; அதனை நாட்டுபவர் பெரிய மனுஷன்’ 

‘உங்களைவிட அவர் பெரிய உழைப்பாளியா? இந்தக் கட்டி டம் கட்டும்வரை உழைப்பாரா? அப்படியான உழைப்பாளி ஏன் இன்னும் வந்து சேரவில்லை’ 

‘இல்லையடா மகனே. அவர் உழைப்பாளியல்ல. பதவிக் காரன். அவரால் இந்த அடிக்கல்லை தூக்கவும் முடியாது. தூக்கவும் மாட்டார். அது அவருக்குக் கௌரவக் குறைவு நாங்கள் தூக்கிக் கொடுக்க அவர் அதனை ஆசீர்வதிப்பதுபோல் தொட்டுக் கொண்டு நிற்க புகைப்படங்கள் பிடிப்பார்கள். வெயிலிலும் மழையிலும் நாங்கள்தான் உழைத்துக் கொடுக்க வேண்டும்’

‘அப்படியானால் அவருக்கு எதற்காக இதில் பங்குகொடுக்க வேண்டும். அடிக்கல்லில் அவர் பெயரைப் பொறிக்க வேண்டும்?’ 

‘பாவம்… வருங்கால சமுதாயம் அவர்மீது குற்றம் சாட் டாமல், அவரும் உழைப்பில் பங்கு கொண்டார் என நாம் வழங்கும் ‘பிச்சைக்காரத்தனமான சான்றிதழ்’ அதுமட்டுமல்ல, மகனே! இந்தக் கட்டிடம் கட்டி முடிந்ததும் திறப்புவிழாவுக் கென இன்னொரு பதவிக்காரன் பட்டு நாடா ஒன்றை வெட்டு வான். அவன் செய்த மாபெரும் உழைப்புக்காக அவன் பெயரும் பொறிக்கப்படும்’ 

‘இதெல்லாம் ஏன் இப்படி?’ 

‘நம் தலைவிதி என்றுதான் இவ்வளவு நாளிருந்தோம்’ இப்போது நாம் விழித்துக் கொண்டோம்’ அவன் முடிக்க வில்லை’. 

மாபெரும், நீண்ட கப்பல் போன்ற கார் ஒன்று, ஒருவனை மட்டும் சுமந்தவாறு, அலுங்காமல் குலுங்காமல் சப்தம் எதுவு மின்றி வந்து நின்றது. 

18. காக்கைகள்

அவர் விசித்திர மனநோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டவர். ஆனால் வெளியே இருக்கிறார். பணக்காரர். அவர் மனநோய் ஒரு மனோபாவம் எனக் கொண்டு பிறரால் பாராட்டப் பட்டுக் கொண்டிருந்தார். 

வேறொன்றுமில்லை. 

எப்பொழுதும் தன்னைச் சுற்றி நாலுபேர் நிற்கவேண்டும். கொடை என்ற பேரில் பணத்தை வாரியிறைத்தார். நான்கு பேரென்ன? நாலாயிரம் பேர் சூழ்ந்து கொண்டனர். அவர் பூரித்தே போனார்? 

வள்ளல் என்ற பெயர் பெரிதாகப் படர்ந்தது. 

செல்வம் கரையக் கரைய, கூட்டமும் குறையலாயிற்று

பைத்தியக்காரன்… விசரன் என்ற பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது. 

இந்த அவமானங்களைவிட, தன்னைச் சூழ்ந்திருந்தவர்கள் இல்லையே என்ற கவலை அவரை வாட்டியது. திடீரென ஒரு சிந்தனை பிறந்தது. 

சோற்றை வாரியிறைத்தார். 

‘கா… கா… கா…’ காகக் கூட்டம் அவரைச் சூழ்ந்தது. 

அவருக்கு மீண்டும் மகிழ்ச்சி. 

காகக் கூட்டங்கள் பறந்து சென்றன. 

இப்போது அவர் தலை, தோள்… முதுகு. முகம் எங்கும் காகங்களின் எச்சங்கள். 

முதன்முதலாக சிந்திக்கத் தொடங்கினார்..

19. ராஜதர்மம்

நாட்டில் ஊழல்கள் மலிந்தன. 

ஆட்சியாளர்கள் மக்களைக் கொள்ளையடித்தனர். வதைத் தனர். உயிர்ப்பலி கொண்டனர். 

மக்களின் அபயக்குரல் உலகளாவி எழுந்தது. 

அயல்நாடுகள் மக்களுக்காக அனுதாபம் காட்டின. 

‘மக்களைக் கொல்லாதே!’

‘இது உள்நாட்டு விவகாரம். இதில் பிற நாடுகள் தலை யிடுவது உலக அரசியலுக்கு முரண்’ 

அந்த நாடுகள் வாயை மூடிக்கொண்டன. 

உயிர் போகும் வேளையில் போராடாது மடிவதை விட, போராடி மடிவதே மேல் என மக்கள் எண்ணினர். 

ஆயுதங்களைக் கையில் எடுத்தனர். 

அச்சமடைந்த ஆட்சியினர் வெளிநாடுகட்கு அவசரத் தந்தி அனுப்பினர். 

‘புரட்சி வெடித்து விட்டது. ஆயுதங்களை அனுப்பி எங்கள் ஆட்சியைக் காப்பாற்றுங்கள்.’ 

20. காலமாற்றம்

‘காலங்கள் தோறும் சொற்களின் கருத்துக்கள் மாறிக்கொண்டே வருகின்றன. உதாரணமாக நாற்றம் என்ற சொல் பண்டைய நாட்களில் நறுமணம் என்ற பொருளில் வழங்கி வந்தது. ஆனால் இன்று அது ‘கெட்ட வாசனை’ யைக் குறிக்கிறது… இதற்கு இன்னொரு உதாரணம் சொல்’ என்றார் ஆசிரியர். 

‘அரசியல்!’ என்றான் மாணவன். 

‘எப்படி?’ 

‘இன்று அரசியல் என்றால் ஊழல், லஞ்சம், மோசடி, நாணயமின்மை, பக்கச் சார்பு என்று தானே பொருள் நினைவுக்கு வருகிறது… 

ஆசிரியர் மாணவனைக் குருவாகப் பாவனை செய்து வணங்கினார். 

– குறுங்கதை : நூறு, முதற் பதிப்பு: டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்.

Sembiyan_Selvan இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (சனவரி 1, 1943 - மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழக புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம், தின்னவேலியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்து இவரையும் இவரது தமையன் கணேசபிள்ளையையும் வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *