காசு மேல காசு வந்து..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 29, 2026
பார்வையிட்டோர்: 87 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

வீடே அல்லோல கல்லோலப் பட்டுது. ‘சுவீப்’ விழுந்த மாதிரி, பதினெட்டு லட்சம் சுளையா வரப்போகுது. சொத்தைப் பல்லெண்டு பல்லு டாக்குத்தர் தோண்டி எடுத்த மூண்டு பல்லு நீங்கலா [நீக்கலா எண்டும் வச்சுக் கொள்ளலாம்.] மிச்சப் பல்லெல்லாம் தெரிய, கன நாளுக்குப் பிறகு தங்கச்சி அமலா வின்ர முகத்தில சிரிப்பு ‘டிஸ்கோ’ ஆடுது.

விஷயம் வேறொண்டுமில்லை. அறுவான், அழிஞ்சு போவான், கழிசடை, காவாலி, குரங்கன். குழுமாடு, தறுதலை, தடிமாடு, நட்டாமுட்டி, நாசமறுப்பான் பறப்பான், பாழ்படுவான், பரதேசி, மூதேசி எண்டின்ன பிற அகராதி காணாத பட்டப் பெயர்களை – ஊர்ப்பெரிசுகளின், பெண் புரசுகளின் வாயிலாகத் தனதாக் கிக் கொண்ட ‘சுழி’ எண்ட காரணப் பெயர் கொண்ட – தங்கச்சி அமலா வின்ர குலக் கொழுந்து, குடும்ப விலக்கு [லகர, ளகரப் பிழையில்லை விலக்குத்தான்!] சீமந்த புத்திரன் ஒரு பெரிய சாதனை செய்து போட்டான்.

இந்த இடத்தில எங்கிட ‘சுழி’யைப் பற்றிக் கொஞ்சம் பொழிப்பாச் சொல்லக் கிடக்கு. பின்னால பிறந்த இரண்டு தங்கச்சிமாரையும் குட்டி இருத்திக் கிடி கலங்க வைக்கவெண்டு முன்னாலையே முள் முருக்கங் கண்டு போல [தங்கச்சீட பாஷையில – கருவேப்பிலைக் கண்டு போல] பிறந்த தலைச்சன் பிசாசுதான் ‘சுழி’; வீட்டுக்கு ஒரே பொடி!

தேப்பனில்லாப் பெடியளைத் தாய்மார் செல்லம் குடுத்துச் சீரழிக்குமாப் போல களவு, பொய், குடி, சூது எண்டு ஆய கலையள் அறுபத்து நாலையும் சுழி கற்றுத் தேறிப் பக்குவமடையக் காரணமாயிருந்தவ எண்ட பெருமை தங்கச்சி அமலா வைத்தான் சாரும்.

செய்யாத அட்டா துட்டியெல்லாம் செய்து நாளுக்கொரு வம்பும் ஆளுக் கொரு வழக்குமா தாயைப் படாத பாடு படுத்தி, அவளைப் பாயும் படுக்கையுமாக் கிடத்தின பெருமை சுழியைச் சாரும்.

கடுக்கண்டாப் பிறகு உள்ள கள்ளுக் கொட்டில்களை எல்லாம் கலக்கியடிச்சு, வீட்டிலையும் பீங்கான் கோப்பையளைப் பறக்கடிச்சு அட்டகாசம் பண்ணி ஒரு ஆம்பிளை இல்லாத குறையைத் தீர்த்து வச்ச தீரன் ‘சுழி’. ‘நான் வெளிநாடு போறதுக்கு காணிய அடகு வச்சு இப்ப காசைக் கையில வை. அல்லாட்டில் நஞ்சுக் குளிசையைப் போட்டு இந்தா நான் சாகப் போறது மெய்.’’எண்டு விற்ற மின் குளிசையைக் காட்டி வெருட்டி, நாண்டு கொண்டு நிண்டு தாயைச் ‘சரண்டர்’ ஆக வச்ச சூரன் ‘சுழி’!

இப்பிடியே எமனைப் பச்சடி போடுற ஏசண்டுக்காரரிட்டையும் ஏமாறாமல் எயார்போர்ட்காரனுக்கும் ‘பெப்பே’ காட்டிப் போட்டு பொடி பிரான்சுக்குப் போய்ப் பறிஞ்சது ஆறு மாசத்துக்கு முந்தி நடந்த கதை. ஆறு மாசமா நசுக்கிடாமல் இருந்திட்டு இப்ப முள்ளங்கிப் பத்தையப் போல முழுசா பதினெட்டு லட்சமும் சொச்சமுமா ‘பொறுக்கி’ அனுப்பி வச்சிருக்கிறான் எண்டால் நம்பத்தான் ஏலுதில்லை .எந்தப் புத்தில எந்தப் பாம்போ? ஆற்ற ATM காட்ட வறுகிச் சுத்தினதோ?

அண்ணன் எண்டிருந்தாலும் எனக்கும் ஆயிரத்தெட்டு அல்லை தொல்லையள் .வீட்டுக்கு வீடு வாசல்படிதானே? என்ர வீட்டிலையும் ஒரு தேவாங்கு ரியூட்டரி வழிய போய் பெஞ்சுகளைச் சூடாக்கியண்டு என்ர சூட்டைக் கிளப் பிறதுக்கெண்டு வந்து பிறந்திருக்கு.

உள்ளூரில உழாத மாடு வெளியூரில போய் என்னத்தை வெட்டி முறிக்கப் போகுதாம்’ எண்டுதான் நானும் நினைச்சுக் கொண்டிருந்தன். ஆனால் இப்ப விஷயம் வேற மாதிரி ஆகியிருக்குது. போனவன் என்னத்தையோ வெட்டிப் புடுங்கீற்றான். “அவரும் இல்லாத வீட்டிலை தனிச்சுப் போன எங்களுக்கு உன்னை விட்டால் வேற ஆர் அண்ணை இருக்கினம்” எண்டு ‘சென்ரிமென்ர’ ‘ரச்’ பண்ணிற மாதிரிப் பேசிக் கண்ணைக் கசக்கிக் கொண்டு தங்கச்சி வந்து நிக்கேக்கை ‘பாசமலர்’ ரேஞ்சுக்குப் பாயாட்டிக்கும் கொஞ்சமெண்டாலும் ரத்தம் துடிச்சு சதை ஆடத்தானே செய்யும்.

பெடி வெளிநாடு போனாப் பிறகு கொழும்போட வந்திருந்து 8000/- ரூபா வாடகை குடுத்து ஒரு எலிப்பொந்தில கட்டுமட்டாச் சீவிக்கிற தங்கச்சிக்குப் பதினெட்டு லட்சம் வருகுதெண்டவுடன Stroke வராத குறை. [கேட்டிருந்தால் பெடி அதையும் தேடி அனுப்பி வச்சிருக்கும்!] ரா முழுக்கத் தானும் நித்திரை கொள்ளாமல், என்னையும் கொள்ள விடாமல் ஒரே அலட்டல் தான். வாற காசில காணியை அடவு மீட்கப் பத்து லட்சம் தேவையாம். மிச்சம் எட்டு லட்சத்தையும் என்ன செய்யிறதாம் எண்டது தான் அவவின்ர கவலை. [இங்க கோடிக் கணக்கில சுருட்டிறவங்களுக் கெல்லாம் இப்பிடிக் கவலை வாறதாத் தெரியேல்லை.]

இனி அடுத்தது Bank கில இருந்து காசை எடுத்து எப்பிடி வீட்டை கொண்டு வாறதெண்ட கவலை. பதினெட்டு லட்சமெண்டால் பருமட்டாப் பாத்தாலும் Briefcase ஸில அடக்கேலாது. எப்பிடியும் Suitcase ஒண்டுதான் தேவைப்படும். நல்லதாக் கிடந்த ஒண்டையும் நாசமறுப்பான் கிளப்பிக் கொண்டு போய்ற் றான். ஊரியான், கொம்படி, கிளாலி எண்டு போன கந்தாயத்தில இழுபட்டுக் கந் தறுந்து போய்ச் சீவன் போன பழங் கிடையன் ஒண்டு தான் தங்கச்சி வீட்டில மிச்சமாக் கிடக்கிற ஆதனம். இனிப் புதுசாத் தான் ஒண்டு வாங்க வேணும். ஆனால் அதுக்கொரு அஞ்சாயிரம் எண்டாலும் தேவை. காசைப் பாத்தால் வேலைக்காகாது. பதினெட்டு லட்சம் வரப் போகுதாம். இதில அஞ்சாயிரம் ஒரு காசே? மனிசி சீட்டுப் பிடிச்சுச் சேர்த்து வச்சிருந்ததில [சாரி சல்வாரோ தோடு தொங்கட்டானோ வாங்க எண்டு] அஞ்சாயிரத்தை இறாஞ்சிக் கொண்டு போய் புறக்கோட்டையில விசுக்கி எறிஞ்சு சூட்கேஸோட வெற்றிவீரனா வீட்டை வந்து சேந்தன்.

அடுத்த நாள் காலம்பற எழும்பி, ராகு காலம் கழிய விட்டு, ரோட்டில ஆமிக் காரன், போலீஸ்காரன் எண்டாரும் குறுக்க வாறானோ எண்டு சகுனம் பாத்து, பாதுகாப்புக்கெண்டு என்ர மூத்த சோத்து மாட்டையும் மனிசியின்ர ஒண்டு விட்ட வெருளிக் கட்டையையும் கூட்டியண்டு Bank க்கு வெளிக்கிட்டன். Bank வாசலில வெள்ளை வான் ஒண்டு வெறுமன நிண்டு கொண்டிருந்துது. நெஞ் சில ‘திக்’கெண்டிருந்தாலும் முகத்தில ஒண்டையும் நான் காட்டிக் கொள்ளே ல்லை. பாவம் தங்கச்சி. அவள் ஒரு அப்பிராணி. வெள்ளை வானையும் வெள் ளைச் சிரிப்போட பாத்து மினக்கெட்டுது. வாசலில நிண்ட செக்குறுட்டி சூட்கே சின்ர அளவைப்பாத்துக் கொஞ்சம் வெருண்ட மாதிரிக் கிடந்துது. கையில வச்சி ருந்த Metal detector தடியால அவன் சூட்கேசைச் சுத்தி ஆலாத்தி எடுத்தது தான் எடுத்தான். அது ‘கீக் கீக் கீக்’ கெண்டு குழறத் துவங்கீற்றுது.

கிட்ட நிண்டவை எல்லாரும் பயத்தோட எட்ட விலகிச்சினம். இதென்னடா நாசமறுப்பு. எனக்குத் தெரியாமல் எவனாவது குண்டைக் கிண்டைக் கொண் டாந்து உள்ளை வச்சிட்டானோ? எண்டு நினச்சு எனக்கு மண்டை கலங்கிப் போச்சுது. செக்கூரிட்டி சம்சயத்தோட எங்களைப் பாக்க, நான் சங்கடத்தோட பேய்முழி முழிக்க, ‘டிக்கு டிக்’கெண்டு நெஞ்சிடிக்குமாப் போல உள்ளையிருந்து ஏதோ சனியன் சத்தம் போடுது. செக்கூரிட்டி வேற Bag கைக் கெதீல திறக்கச் சொல்லி அந்தரப்படுத்திறான். நடுக்கக் கையோட நானும் ‘சிப்’பப் பிடிச்சிழுத்தால் அது வேற சிக்குப்பட்டு, எங்கிட பாதுகாப்பு அமைச்சரைப் போல சண்டித்தனம் பண்ணுது. கடைசீல ஒரு மாதிரி கந்தறுந்த சூட்கேஸ் ஆவெண்டு வாயைப் பிளந்துது. துறந்த கையோட ‘கிரீங்’ எண்டு மணியடிக்க எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போச்சுது.

இனிச் சொல்ல வேணுமோ? செக்கூரிட்டி முழியைப் பிரட்டியெண்டு துவக் கத் தூக்க, வந்தவ நிண்டவ எல்லாம் ஓடிப் பதுங்க, நான் முத்திரை குத்தப்பட்ட ‘ட்ரஸ்ரவாதி’யா முழிச்சாட்டத்தோட சூட்கேசுக்க பார்வையை ஓட்ட, உள்ளை பாத்தால் ஒரு Alarm மணிக்கூடு. அது மணியடிச்சு முடிஞ்சு பழையபடி முக்கத் துவங்க, மோசமா ஒண்டும் நடக்கேல்லை எண்டு விளங்கி ஆசுவாசப்பட்டு எல்லாரும் பழையபடி மூச்சு விட‘ரெடி’ யான பிறகுதான் எனக்கும் போன உசிர் திரும்பி வந்துது

மூளையைக் கொஞ்சம் கசக்கிப் பிசக்கி ஓட விட்டுப் பாக்க விஷயம் வெளிச் சுது. காலமை அஞ்சரை மணிக்கு எலார்ம் வைக்கச் சொல்லிக் குடுத்த மணிக் கூட்டைத் தலை கீழாப் பிடிச்சு பதினொரு மணிக்கு set பண்ணிப் பக்குவமா பெட்டீக்க கொண்டு போய்ப் பொதிஞ்சு வச்சிருக்கு என்ர மனிசி யின்ர ஒண்டுவிட்ட அலுகோசு. பின்ன ‘உறுலோசை’ ஏன் Bank க்கு கொண்டாந்தனி? எண்டு செக்கூரிட்டி என்னைப் போட்டு உருட்ட, தெரிஞ்ச சிங்களத்தில நான் முக்கித்தக்கி சப்பித் துப்ப, நல்ல வேளை அவனுக்கது விளங்காமல் போன புண்ணியத்தில ஒரு மாதிரி நான் தப்பினன்.[உறுலோசுக்கு ஒரு மணி நேர தனிக்காவல் தண்டனை கிடைச்சுது!].

இனிக் காசெடுத்த கூத்தைக் கழலுறன் [உது நல்ல தமிழ் பாருங்கோ] கேளுங்கோ. Fast Cash எண்டேதோ பணியாரத்தில தான் பெடி காசை அனுப்பி யிருந்தான். Fast Cash எண்டால் என்ன ஏதென்று ஒரு கோதாரியும் தெரியா தெனக்கு. வெளீல சொன்னால் வெக்கக் கேடெண்டு போட்டு எல்லாம் தெரிஞ்ச மாதிரித் தலையாட்டிப் போட்டன். நம்பரையும் Amount ஐயும் SMS பண்ணி விடுறன். Bank கில போய்க் கேட்டால் காசைத் தருவான்கள் எண்டு Short and Sweet ற்றா கதையை முடிச்சிட்டான் கசவாரப் பெடி. ஒரு மாதிரி மனேஜரைக் கண்டு பல்லைக் காட்டி தெரிஞ்ச இங்கலீசில இளக்கிவிட்டன். அவருக்கும் இங்கிலீஸ் அரைகுறைதான் எண்டதால ‘குறை விளங்காமல் பேரையும் நம்பரையும் மாத்திரம் எழுதிக் குடுங்கோ காணும்’, எண்டார். வசதியாய் போச்சுது.

கவுண்டரில் இருந்த கண்ணாடிக்காரத் தம்பி கண்ணாடிக்கால சூட்கேசையும் என்னையும் ஒரு மாத்ரிப் பாத்தேர். ‘பதினெட்டு லட்சத்தையும் வைக்க உது காணாதெண்டு நினைக்கிறேரோ? தலைகாணிக்கை பஞ்சடையிற மாதிரி எண்டா லும் அடைஞ்சு போட மாட்டனே’ எண்டு அனுபவப்பட்ட உள் மனம் கேள்வியும் கேட்டுப் பதிலையும் சொல்லிப் போட்டுது.

ஆயிரம் ரூபாத்தாள் பதினெட்டு நூறு ரூபாத் தாள் அஞ்சு, பத்து ரூபாத் தாள் மூண்டு எண்டு கிடுகிடெண்டு எண்ணி ஆள் மேசையில வச்சேர். மிச்சக் காசைக் கட்டுக்களாத் தரப் போறேர் ஆக்குமெண்டு நான் எட்டிப் பாத்து ஏமாந்து போனதுதான் மிச்சம். மொத்தமா அவ்வளவுதான்! ஒப்பம் வைக்கவெண்டு நீட்டின தூண்டிலை இருந்த தொகை – Rs. 18, 532.00 பஸ் கொண்டக்டர்மாரைப் போல 2 ரூவாவை அமுக்கீராமல் அந்த நாணயத்தையும் எடுத்து மேல வச்சிட்டேர். நாணயமான மனிசன்.

பெடி SMS ஸ்சில போட்டிருந்த தொகை 18,53200 எண்டது சரிதான். ஆனால் கழி சடை விட்ட பிழை, தேவையான இடத்தில குத்துப் போட மறந்ததுதான். [பெடியன் அப்ப முன்னால நிண்டிருந்தால் போட்டுக் காட்டியிருப்பன் குத்தை வடிவா] நான் விட்ட பிழை, உடன் பிறப்பின்ர ஊத்தைவாளியைப் பற்றி ஆதியோடந்தமா அறிஞ்சிருந்தும் ஆராய்ஞ்சு பாக்காமல் ‘அடிச்சான் பிறைஸ்’ எண்டு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அவளுக்குப் பின்னால இழுபட்டு வந்ததுதான்.

புண்ணிலை புளிப்பத்தினவேன்ர திருமுகம் எப்பிடி இருக்குமெண்டு தெரி யாதவை எட்டி ஒருக்கா என்னை வந்து பாருங்கோ விளங்கும்!

– இருக்கிறம் – 01.07.2010இல் பிரசுரமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *