கண்ணப்பக் கண்டுகந்தார்
கதையாசிரியர்: ஆத்மஜோதி நா.முத்தையா
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: July 21, 2026
பார்வையிட்டோர்: 20
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்காளத்திக் கண்ணப்பர் திருநாடு வளம் பெருகிய பொத்தப்பிநாடு. அதன் தலைநகர் உடுப்பூர். அங்கு வாழ்வோர் வேடர்கள். இவ்வேடர்கள் அச்சமும் அருளும் அறியாதவர்கள். கள்ளும் வெந்த ஊனும் உண்பவர்கள். இவர்களுடைய தலைவன் பெயர் நாகன். மனைவி பெயர் தத்தை.
இவர்களுக்கு நீண்ட காலமாகக் குழந்தை இல்லை. இக்குறை தீர முருகனை வேண்டினர். முருகன் அருளால் ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. அதற்குத் திண்ணன் என்று பெயரிட்டனர். குழந்தை வளர்ந்து புலிக்குட்டிகளுடனும் சிங்கக் குட்டிகளுடனும் விளையாடியது. குழந்தைப் பருவம் நீங்கி வில் முதலான படைக்கலை பயிலும் பருவம் வந்தது. ஒரு நல்ல நாளில் முதியோர் வந்து திண்ணனாருக்கு விற்பயிற்சியை ஆரம்பித்து வைத்தனர்.
அவருக்குப் பதினாறாண்டுகள் நிரம்பின. நாகன் முதுமையினால் வேட்டைக்குத் தலைமை தாங்குவதைத் திண்ணனாருக்கு அளித்தான். நாகன் தேவராட்டியை அழைத்து வனதேவதை களுக்குப் பூசை நடத்துமாறு கூறினான். திண்ணனார் வேட்டைக் கோலம் பூண்டார். தந்தையை வணங்கி முதற் சுரிகையையும் உடைதோலையும் பெற்றுக்கொண்டார். வேட்டைக் கோலங்கொண்ட திண்ணனார் வில்லை வலம் வந்து வணங்கி இருதாள் மடித்துத் தொழுது கையில் எடுத்தார். வேடர்கள் வந்து கடல்போலச் சூழ்ந்தனர். வில்லேந்திய மேகம் போல வேடர் சூழ வேட்டைக்குப் புறப்பட்டார்.
வேடர்கள் மிருகங்களை வதைக்கத் தொடங்கினர். அப்போது யானைகளும் அஞ்சும்படி காட்டுப்பன்றி ஒன்று மேகம் போன்ற தோற்றமும் இடிபோன்ற உறுமலும் கனல் பிதிருங் கண்களுங் கொண்டு வலைகளை அறுத்துக் கொண்டு ஓடியது. வேடர்கள் அதைப் பின்பற்ற முடியாமல் திகைத்தனர். அதுகண்ட திண்ணனார் அம்பேந்திய வில்லுடன் பின்தொடர்ந்தார். அவரைப் பிரியாத நாணன், காடன் என்னும் வேடர்களும் பின்னோடினர். இவர்கள் விடும் அம்புகளையும் நாய்களையும் ஏமாற்றிவிட்டு அப்பன்றி காற்றெனக் கடிது ஓடியது. அது களைத்து ஒரு மலையடிவாரத்தில் நின்றது. திண்ணனார் சுரிகையை உருவிக் குத்திக் கொன்றார்.
நாணனும் காடனும் அவரைப் பார்த்து “நீண்ட தூரம் ஓடிவந்ததனாற் களைத்தோம். பசியும் வந்தது. இந்தப் பன்றியை நெருப்பிற் காய்ச்சித் தின்று தண்ணீர் குடித்துச் செல்வோம்” என்று கேட்டுக் கொண்டனர். அவரும் அதற்கு இணங்கினார்.
“தண்ணீர் எங்கே?”
“இதோ இந்தப் பெரிய தேக்கமரத்தைக் கடந்து சென்றால் அந்தக் குன்றுக்கருகில் பொன் முகலி என்னும் ஆறு ஓடுகிறது. நல்ல குளிர்ந்த தண்ணீர்.” இது நாணன் விடை.
திண்ணனார் மகிழ்ந்தார். “நல்லது இதை எடுத்துக் கொண்டு வாருங்கள். அங்கே செல்வோம்” என்றார்.
“பார்ப்போம் வா, நல்ல காட்சி! இந்த மலையிலே குடுமித்தேவர் இருப்பார். கும்பிடலாம்.”
“என்னவருமோ? இம்மலையைப் பார்த்துக்கொண்டு செல்லச் செல்ல என்மேலுள்ள பாரங் கழிகிறதே! ஆசைமேலும் மேலும் பொங்குகிறது. உள்ளத்திலும் வேறோர் ஆசைவிழுகின்றது! குடுமித் தேவர் எங்கே எங்கேயிருக்கிறார்? உம். போ! போ!!’
திண்ணனார் விரைந்து சென்றார். அவர்களும் பின்னே ஓடினர். பொன் முகலியை அடைந்தனர். அந்த ஆற்றின் அலைகளால் முத்தும், அகிற்கட்டையும், சந்தனக்கட்டையும் ஒதுக்கப் பெற்றிருக்கும் ஒரு பொழிலிலே பன்றியை வைத்து நின்றார்கள். “காடா நீ தீயை உண்டாக்கி இதனைக் காய்ச்சு! இம்மலையை நாங்களிருவரும் சென்று பார்த்து விட்டு வருகிறோம்” என்று திண்ணனார் நாணனுடன் சென்றார். நதியைக் கடந்து கரைகடந்த மகிழ்ச்சியுடன் மலைச்சாரலை அடைந்தனர்.
குடுமித் தேவரைக் காணுமுன்னே அவரது திருவருள் நோக்கம் பெற்றார். பிறப்பின் பழவினைத் தொடர்பை அகன்றார். எம்பெருமானைத் தழுவினார். முத்தமிட்டார். நீண்ட நேரம் பெருமூச்சு விட்டுநின்றார். சுவாமி இக்கொடிய மிருகங்கள் மத்தியிலே தனியாக இருக்கிறாரே என்று பச்சாதாபப்பட்டார். இந்தப் பச்சிலையும் பூவுங் கொண்டு நீரும் வார்த்து இப்படிச் செய்தவர் யாரோ? என்று வியந்தார்.
நாணன் சொன்னான் “நான் அறிவேன். உன்தந்தையோடு ஒருநாள் வேட்டையாடும்போது வந்திருக்கிறேன். ஒரு பார்ப்பனர் இவ்வாறு செய்வதைப் பார்த்தேன்.”
“இவர் தனியாயிருக்கிறாரே! இறைச்சியும் இவருக்குக் கொடுப்பவரில்லை. இவரைப் பிரியவும் முடியாது! இறைச்சியும் கொண்டு வரவேண்டும் என்செய்வேன்?”
இறைவரை விட்டுச் செல்வார்! திரும்புவார்! தழுவுவார்! அன்புடன் நோக்கிநிற்பார். தாங்கள் பசியுடன் இருப்பதைப் பொறுக்கவும் முடியவும் இல்லை என்று கூறி அரிதிற் பிரிந்தார். அவருக்கு எல்லாவாயிலும் அடைத்து விட்டன. இறையன்பு மாத்திரம் அவரைத் தன்வசப்படுத்திக் கொண்டது. பொன் முகலியைக் கடந்து பன்றியைவிட்டு வந்த மரநீழலை அடைந்தார். காடன் எதிரே வந்தான். தொழுதான்.
“தீக்கடைந்து வைத்தேன். பன்றியை உங்கள் அடையாளத்தின் படி பார்த்துக் கொள்ளலாம். நாம் திரும்பிச் செல்ல வேண்டாமா?
திண்ணனார் ஒன்றும் பேசவில்லை. அங்கு நடந்தவை யாவற்றையும் நாணன் கூறினான். திண்ணனார் அவர்கள் முகத்தைக் கூடப் பார்க்காமலே இறைச்சியைப் பதப்படுத்தினார். தாமே ருசிபார்த்து வேண்டாதவற்றைக் கழித்தார். இவரது தெய்வப் பைத்தியத்தைக் கண்ணுற்ற இருவரும் அவ்விடத்தை விட்டகன்றனர். இவர் தொன்னையிலே இறைச்சியை நிரப்பினார். வாயிலே நீரை நிரப்பிக் கொண்டார். ஒரு கையில் வில்லையும், மற்றொரு கையில் தொன்னையை எடுத்துக் கொண்டு ஓடிச் சென்று குடுமித் தேவரை அடைந்தார்.
அரனார் மேலிருக்கும் மலரைச் செருப்பணிந்த காலால் அகற்றினார். வாயிலிருந்த நீரை -அன்பை உமிழ்ந்தார். தம் திருமுடிமேல் வைத்த மலரை இறைவர் முடிமேல் வைத்தார். கையில் வைத்திருந்த தொன்னையை எதிரே வைத்தார். இவை நல்ல இறைச்சிகள் உண்ணுக” என்றார்.
மாலையும் ஆயிற்று. இரவு வந்தது. இரவிலே விலங்குகள் வருமென்றஞ்சிய திண்ணனார் கையிலே வில்லுந் தாங்கி கரியமலை எனக் காளத்தியப்பர் அருகிலே விலகாமல் நின்றார். இருள் புலர்ந்தது. பறவைகளின் ஒலி கேட்டது. உறங்காமலே காத்து நின்ற வீரர் “அரனார்க்கு அமுதாக்க இறைச்சியைக் கொண்டுவருவேன்” என முடிவு செய்து வேட்டையாடப் புறப்பட்டார்.
சிவகோசரியார் வழக்கம்போல பூசை செய்ய வந்தார். இறைச்சியும் எலும்பும் சிந்தியிருப்பதைக் கண்டு மனம் வெதும்பினார். அந்த இடத்தைத் துப்புரவு செய்து பூசை செய்தார். வேட்டையாடிய திண்ணனார் நல்ல இறைச்சிகளைத் தெரிவு செய்து தேனிற் தோய்த்துக் கொண்டு வந்து பெருமானுக்கு ஊட்டினார். இவ்வாறு ஐந்து நாட்கள் கழிந்தன. ஆறாவதுநாள் வைகறையில் வழிபட வந்த மறையவர் கண்ணீர் வாரக் கைகுவித்து நின்று “இவ்வாறு ஊனையும் என்பையுஞ் சிந்தி அசுத்தப்படுத்துவோரை யான் அறியேன். இதைத் தடுக்க வேண்டும்” என்று வேண்டினார். பெருமான் அன்றிரவு சிவகோசரியாரின் கனவிலே தோன்றி “நீ வழிபட்டுச் சென்ற பின் வந்து வழிபடும் வேடனை வேடன் என்று எண்ணாதே? அவனுடைய உருவம் நம்மிடம் வைத்த அன்பின் உருவம்! அவன் அறிவு நம்மை அறியும் அறிவு! அவனுடைய செயல் நமக்கினிய செயல். அவன் செயலை நாளைக்கு உனக்குக் காட்டுவோம். ஒளித்திருந்து காண்பாயாக!” என்று அருளினார்
அடுத்தநாள்க காலை திண்ணனார் இறைச்சியுடன் வந்தார். பெருமானின் வலக்கண்ணில் உதிரம் பெருகுவதைக் கண்டார். துடிதுடித்தார். மூலிகைச் சாறு தேடிவந்து பிழிந்தார். இரத்தம் நிற்கவில்லை. ஊனுக்கு ஊன் என்பதை உணர்ந்தார். தனது கண்ணை இடந்து அப்பினார். உதிரம் நின்றது. ஆனந்தக் கூத்து ஆடினார். சிறிது நேரத்தில் அடுத்த கண்ணிலிருந்தும் உதிரம் வழிந்தது. அடுத்த கண்ணையும் இடந்து அப்ப கண்ணிலே அம்பை ஊன்றினார். எம்பெருமான் இதற்கு மேலும் சோதிக்க விரும்பவில்லை. “நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப! என்று கூறி கையைப் பிடித்தார்.
இறைவர் இடக்கண்ணின் இரத்தமும் நின்றது. கண்ணப்பரின் வலக்கண்ணும் ஒளிபெற்றது! கண்ணப்பர் கையைப் பற்றிய காளத்தியப்பர் என் வலப்பக்கத்திலே எப்போதும் நிற்க” என்று அருளினார். இதனை அப்பர் சுவாமிகள்,
விண்ணப்ப விச்சாநார் களேத்த
விரிகதிரோன் எரிசுடரான் விண்ணுமாகிப்
பண்ணப்பன் பக்தர் மனத்து ளேயும்
பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி
கண்ணப்பன் கண்ணப்பக் கண்டுகந்தார்
கழிப்பாலை மேய கபா லப்பனார்
வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போதுநாமே
என்று அருளிச் செய்துள்ளார்.
– திருமுறைக் கதைகள், முதற்பதிப்பு: ஆவணி 1999, இந்து சமயப் பேரவை, கனடா.
தொடர்புள்ள சிறுகதைகள்
ஆமைக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
நரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
சிவராத்திரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026