ஒரு நொடிகளில் மாற்றம்




அமுதவள்ளியின் இருமல் சத்தம் விடாமல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. நடுநிசி இரவின் அமைதியான பொழுதில் நீண்ட நேரமாக ஒலித்துக் கொண்டிருந்த அமுதவள்ளியின் இருமல் பக்கத்து வீட்டாரின் தூக்கத்தையும் கலைக்கும் அளவிற்கு உரமாகக் கேட்டது.

அப்படியிருக்கும் போது பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த மகனுக்கும், மருமகளுக்கும் கேட்காமலா போகும்? காதருகில் கேட்பது போலிருந்தது. மிகவும் இடைஞ்சலாகவும்,எரிச்சலாகவும் இருந்தது அவர்களுக்கு.
“உங்கம்மாட இருமல் சத்தம் தாங்கமுடியல்ல. சே கொஞ்சமாவது தூங்க முடியுதா?”
“சரி சரி இன்னைக்கு மட்டும்தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. நாளையில் இருந்து அவங்க ஆசிரமத்தில் தானே இருக்கப்போற..
உனக்கு இனி எந்தத் தொல்லையும் இல்ல. “இது அமுதவள்ளியின் ஒரே மகன் அன்பனின் குரல்.
இவர்களின் பேச்சுக்கள் அமுதவள்ளியின் செவிகளுக்கு தெளிவாகவே கேட்டது.
இருந்தாலும் அவள் கவலையடையவில்லை.அவள் வாழ்க்கையில் கவலைகள் பழக்கப்பட்டவை! இந்த இரவு மட்டும்தான் அவள் இங்கு இருக்கப் போகும் கடைசித் தருணம். பிறகு தனது மிஞ்சியுள்ள வாழ்நாட்களை எங்கோ உள்ள ஆசிரமத்தில் அறிமுகமே இல்லாத ,அவளைப் போன்று கைவிடப்பட்ட புதிய உறவுகளோடு கழிக்க வேண்டியதுதான். தனக்கு மட்டுமா இந்நிலை..? உலகில் உள்ள தன்னைப்போல் எத்தனை அப்பா, அம்மாக்கள் இந்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். காலத்தின் கோலமே இது! மாற்றவா முடியும்?
இருந்தாலும் என்ன செய்ய? அவர்களுக்கான நமது கடமைகள் முடிந்து விட்டது என்று நினைத்து நம்மை ஓரங்கட்டி விடுகிறார்கள். ஆனால்,
இனித்தான் பெற்றவர்களுக்கு தான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கு என்பதையே மறந்து விடுகின்றார்கள் பிள்ளைகள்.இதுதான் இன்றைய உலகநடப்பு!
அமுதவள்ளி மனம் உடைந்து போயிருந்தாலும் , மறுநாள் விடியலுக்காய் கடிகாரத்தின் முட்கள் வேகமாக நகராதா ?என்று அடிக்கடி சுவரில் உள்ள கடிகாரத்தையே நோட்டமிட்டவண்ணமிருந்தாள். இரவின் மங்கலான விளக்கொளியில் நேரம் தெளிவாக தெரியவில்லை.என்றாலும் நேரத்தைப் பார்த்தவண்ணமே இருந்தாள்.
அவளின் உறவு வட்டம் மிகவும் சுருங்கியதாகவே இருந்தது எனலாம். அவள் பெற்றோருக்கு அவள் மாத்திரம் ஒற்றை வாரிசு. அவள் வாழ்க்கைப்பட்ட கணவனும் ஒற்றை வாரிசு, இவர்களுக்கு பிறந்த மகனும் ஒற்றை வாரிசு ,மகனுக்கு வாய்ந்த மனைவியும் ஒரே வாரிசு அவர்களுக்குப் பிறந்ததும் ஒரே மகள். இப்படித்தான் உறவுவட்டம் குறுகியதாக இருந்தது.
அவளுக்கு உறவுகள் நிறைய இருக்க வேண்டும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றாசை கூடுதலாகவே இருந்தது. என்ன செய்ய மகன், மருமகள்.. பேத்தி இவர்கள்தான் இவளது உலகம் என்று வாழவேண்டிய வாழ்க்கையாக அமைந்து விட்டது.இனி அப்படியுமிருக்காது. புதிய இடம், புதிய முகங்கள், புதிய வாழ்க்கை வட்டம் எல்லாமே புதிது புதிதாகத்தான் இருக்கும்.ஆனால் தனது சிறிய குடும்பத்தை இழந்து யாரோ! ஒரு அநாதையாய் எங்கோ! ஒரு இடத்தில் நாதியற்று வாழும் நிலை எந்தத் தாய்க்கும் வரவே கூடாது. என்று நினைத்துவருத்தப்பட்டாள். அவளால் இப்படியாக நினைத்து வருந்தத்தான் முடியும். இவளைப்போல் எத்தனை பெற்றோர்கள் இருப்பார்கள் இந்நிலையில்! எத்தனை கல்நெஞ்சம் கொண்ட பிள்ளைகள் இருப்பார்கள் இவ்வுலகில்!! முதியோர் இல்லங்கள் பெருகி வரக் காரணமே இப்படியான தன்னலம் பிடித்த பிள்ளைகள் தான்.
அமுதவள்ளியின் வயிற்றில் மகன் இருக்கும் போதே அவளது அன்புக் கணவன் விபத்தொன்றில் சிக்கி இறந்து போனார்.கைம்பெண்ணாக இருந்த அவளுக்கு உதவிக்கரங்கள் நீட்ட சொந்தங்கள் யாரும் இருக்கவில்லை. தனியாளாகத்தான் போராடினாள். நல்ல வேளை கணவனுக்கு என்று சொந்தமாக சிறிய வீடிருந்ததால் இருப்பிடத்திற்கு கஷ்டப்படவில்லை.
பலவகையான உணவுப் பொட்டலங்கள் கட்டி கடைகளுக்கு கொடுத்து தனது ஜீவியத்தை நகர்த்தினாள். தான் எவ்வளவு கஸ்டப் பட்டாலும் மகனை எந்தக் குறையும் விளங்காமல் ராஜாபோல் வளர்த்தாள்.மகன் அன்பானவனாக சிறந்த மனிதனாக வளரவேண்டும் என நினைத்தே அன்பன் என்று பெயர் வைத்திருந்தாள். அதற்கேற்ப எல்லாருடனும் அன்பாகவே நடந்து கொண்டான். தன்னைப் பெற்றவள் மீது அளவு கடந்த அன்பைக் காட்டினார்.
தன்னை கஷ்டப்பட்டு வளர்த்து நல்லநிலைக்கு உயர்த்தி விட்ட தன் தாயை நன்றாகவே கவனித்துக் கொண்டார். பெரிய நிறுவனம் ஒன்றில் சுபைசராக வேலையும் கிடைத்தது. மகனுக்கு அழகானதாக வாழ்க்கை ஒன்றை அமைத்துக் கொடுத்தாள் அமுதவள்ளி . மருமகள் சௌந்தர்யா அழகானவள் மட்டுமல்லாது அன்பானவளாகவும் ஆரம்பத்தில் இருந்தாள். மாமியாரை தன் தாயைப் போல் கவனித்துக் கொண்டாள். அவளும் நன்றாக படித்திருந்ததால் ஒரு ஆபீஸில் வேலை பார்த்தாள். ஆபீஸ் நேரங்களை தவிர்த்து வீட்டிலிருந்த நேரங்களில் தன் மாமியாருக்கு உதவியாக இருந்தாள். ஒரு வருட காலத்தில் பெண் குழந்தை ஒன்றுக்கு தாயானாள். சில மாத காலம் ஆபீசுக்கு லீவு போட்டு பிள்ளையை கவனித்துக் கொண்டாள். அதன் பின்னர் மீண்டும் வேலைக்குச் செல்லலானாள்.
பேத்தியும் பாட்டியின் வளர்ப்பிலேயே வளரத் தொடங்கினாள். காலப்போக்கில் பாடசாலை செல்லும் பருவமும் வந்தது. அவளது பேத்தியும் தனது தாய், தகப்பனைவிட அதிக நேரத்தை பாட்டியுடன் செலவழித்தாள். பாட்டி மேல் அவள் அளவு கடந்த அன்பு வைத்திருந்தாள். தனது மகனின் குடும்பத்திற்கு மிகவும் ஒத்தாசையாக இருந்தாள் அமுதவள்ளி . மகனும் மருமகளும் பேத்தியும் அவளை மிகவும் மதித்து மரியாதையுடன் நடத்தினார்கள் . தனக்கு ஒரே ஒரு பேத்தி என்பது அமுதவல்லிக்கு மிகவும் கவலையாக தான் இருந்தது. இருந்தாலும் என்ன செய்ய? மருமகளின் முதல் பிரசவமே மிகவும் சங்கடங்களை கொடுத்தது அவளுக்கு. மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் தான் குழந்தையை பெற்றெடுத்தாள். அவளது கர்ப்பப்பை மிகவும் வீக்காக இருப்பதாகவும் மேற்கொண்டு குழந்தைகளை சுமப்பது அவளது உயிருக்கு ஆபத்தாக வந்து முடியலாம் என்றும் டாக்டர் முதல் பிரசவத்திலேயே கூறியிருந்தார். இதனால் தான் அவர்கள் வேறு பிள்ளைகள் பற்றி சிந்திக்காமலே இருந்து விட்டார்கள். தனது ஒரே பேத்திக்கு ஆனந்தி என்று பெயர் சூட்டினதும் அமுதவள்ளிதான். ஆனந்தி எப்போதும் தனது அன்பான பேச்சாலும்,பணிவான குணத்தாலும் வீட்டில் உள்ளவர்களை கலகலப்பாய் ஆனந்தமாய் வைத்திருந்தாள். ஆனந்தி வீட்டில் இருந்தாலே பெயருக்கு ஏற்ற மாதிரி ஆனந்தம் தாண்டவமாடும்.
ஆனந்தி வளர்ந்து பெரியவலானாள். படிப்பில் கெட்டிக்காரியாக விளங்கினாள். பாடசாலை கல்வியை முடித்து சட்டக் கல்லூரி மாணவியாக தெரிவாகி காலேஜுக்கு படிக்கச் சென்றாள். காலேஜ் தூரப் பகுதியில் இருந்ததால் ஹாஸ்டலில் தங்கி இருந்து படித்தாள். பெற்றோரையும் தனது பாட்டியையும் பிரிந்து இருப்பது அவளுக்கும், அவளைப் பிரிந்து இருப்பது பெற்றோருக்கும் பார்ட்டிக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது.அவள் இறுதியாண்டு மாணவியாக சட்டக்கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்தாள். அவள் அதிலிருந்து வெளியாக ஓரிரு மாதங்களே இருந்தன. லீவுகள் கிடைக்கும் போது வந்து போய்க் கொண்டிருந்தாள். அப்பொழுதெல்லாம் பாட்டியை அவளே கவனித்துக் கொண்டாள். தனது தாய்க்கும் வீட்டு வேலைகளில் உதவினாள். இப்பொழுதெல்லாம் அமுதவள்ளியால் தனது மருமகளுக்கு வீட்டு வேலைகளில் உதவ முடியாதிருந்தது. காரணம் வயோதிபத்தோடு அவளால் போராட முடியாது இருந்தது. அவள் மிகவும் நோய்வாய்ப்பட்டாள். இடுப்பு வலி, முழங்கால் மூட்டு வலி,சீனி வியாதி என்று அவளை பல நோய்கள் சூழ்ந்து கொண்டன. நாள் முழுதும் கட்டிலிலேயே இருக்கும் சூழ்நிலையாகிவிட்டது. மருமகள் சௌந்தர்யாவிற்கு வேலைப்பளு அதிகமாகிவிட்டன. அவளும் நீண்ட நாள் பார்த்த தனது தொழிலை கைவிட்டாள். நாள் முழுக்க வீட்டிலேயே தனியாகவே கஷ்டப்பட்டாள். தனது மாமியாரை சிறு குழந்தை போல் அத்தனை வேலைகளையும் செய்து கொடுத்து பார்த்துக் கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது அவளுக்கு. ஆரம்பத்தில் கரிசனையோடு செய்தவள், நாட்கள் செல்ல செல்ல அவளின் போக்கும் மாறத் தொடங்கியது . அவளின் பேச்சிலும் சரி வேலைகளிலும் சரி சலிப்பு இருந்தது. மனிதனின் வாழ்க்கை எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்குமா? மனிதனின் மானத்தைக் காக்கும் ஆடைகள் கூட எப்போதும் நிறம் மாறாமல் இருக்குமா? பழையதாகும் போது ஆடைகள் கூட நிறமும் மாறும் அதன் அழகும் போய்விடும். மனிதனும் அப்படித்தான் அவனது உணர்வுகள் எப்போதும் ஒரே மாதிரி இருக்கப் போவதில்லை. சூழலுக்கு ஏற்ப இசைவாக்கத்தால் தன்னை மாற்றிக் கொள்கின்றான். ‘தனது மருமகளும் அது போல்தான் மாறி இருக்கிறாள்’ என்று நினைத்துக் கொண்டாள் அமுதவள்ளி. ஒருநாள் சௌந்தர்யா தனது கணவனிடம்” என்னால முடியாதுங்க..உங்க அம்மாவ பார்த்துக் கொள்ள .. எத்தனை நாளைக்குத்தான் நானும் இப்படி கஷ்டப்படுவது? என்னொருத்தியால எல்லா வேலைகளையும் எப்படி பார்ப்பது? பேசாம முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டுட்டு வாங்க..”என்றாள். ” என்ன செய்றதுமா? இவ்வளவு காலமும் என் அம்மா உனக்கு உதவியாக தானே இருந்த? இப்ப அவங்களால முடியல. அதனால நாம தானே பார்த்துக் கொள்ளணும்.”என்றான் அமுதவள்ளியின் மகன். இப்படியே இவர்களது பேச்சுக்கள் தினமும் சண்டையாக மாறியது. வீடே அமைதியிழந்து காணப்பட்டன. அமுதவள்ளி மிகவும் வருத்தப்பட்டாள். அமுதவள்ளிக்கும் எல்லா நோய்களுடன் இருமலும் நீண்ட நாளாக தொற்றிக் கொண்டது . மருமகள் சௌந்தர்யா எரிச்சல் அடைந்தாள். தனது மாமியாரை வெறுப்பாக பார்க்கத் தொடங்கினாள். நீண்ட நாள் வாக்குவாதங்களுக்கு பின்னர் மகனும் மருமகளும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அமுதவள்ளியை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது என்று! ஆனாலும் இம்முடிவில் அன்பனுக்கு அவ்வளவாக விருப்பம் இருக்கவில்லை தான். தனக்கும் நேரமில்லை. தனது மனைவி வெறுப்போடு பார்ப்பதையும் விரும்பவில்லை. அதனால் தான் முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விடுவதாக முடிவு எடுத்தான்.
நாளை விடிந்தால் ஆசிரமத்தில் விடுவதாக தீர்மானம் எடுத்தார்கள். அமுதவள்ளி கவலைகளைப் பொருட்படுத்தவில்லையானாலும்…அவளையறியாமலே கண்ணீர் துளிகள் அறுவியாய் ஊற்றெடுத்தது. மனசு ரொம்ப வலித்தது. பேத்தியை நினைத்து வேதனைப்பட்டாள். பேத்திவந்து தான் இல்லாதது தெரிந்தால். வீட்டையே ரெண்டாக்கி விடுவாள். என்ன நடக்குமோ! தெரியாது. பேத்தியை அவர்கள் எப்படி சமாளிக்க போறாங்களோ!
பேத்தியை இனிக் காணவே கிடைக்காது.
என்று நினைக்கும் போதே உயிர் போவது போலிருந்தது. இருந்தாலும் போயாக வேண்டும். தினமும் வீட்டில் நடக்கும் சண்டைக்கு தான் காரணமாக இருக்கக் கூடாது. மனதை ஒரு நிலைக்கு கொண்டு வந்தாள். அதனாலையே மறுநாள் விடியலுக்காய் தூங்காமல் காத்திருந்தாள். அவளின் இருமல் சற்று நேரத்திற்கெல்லாம் நின்று போக, தூக்கம் அவள் கண்களை எட்டிப் பார்த்தன.
விடிந்தது கூட தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அமுதவள்ளி.
“செளந்தர்யா நான் அவசரமாக வெளில போய்ட்டு வாரன். சில நேரம் வரப் பத்துமணியாகும். நீயும் ரெடியாகி அம்மாவையும் அவங்களுக்கு தேவையான பொருட்களையும் ரெடி ல வை சரியா?” என்று கூறிவிட்டு வெளியில் கிளம்பினான் அன்பன்.
எல்லா வேலைகளையும் அவசரமாக முடித்தாள் செளந்தர்யா. “இந்த மாமியார் கெழவி இன்னும் தூங்குது.போகனும் என்ற நெனப்பே இல்ல போல..”என்று முணங்கிக் கொண்டே மாமியாரின் அறையை எட்டிப் பார்த்தாள். “இங்க பாருங்க அத்தை! உங்க மகன் வெளியே போயிருக்காரு. பத்துமணிக்கெல்லாம் வந்துடுவாரு சீக்கிரம் குளிச்சி ரெடியாங்க. மேசையில் பிட்டு,கறியெல்லாம் வச்சிருக்கேன் சாப்பிடுங்க.. “என்று கூறிவிட்டு கணவன் வரும் வரை டீவியில் சீரியல் பார்க்கத் தயாரானாள்.
மனசு ஒரு நிலையில் இல்லாமல் இருந்தாலும், இங்கிருந்து அவசரமாக போயிடனும் என்ற எண்ணம் அமுதவள்ளியை துரிதப்படுத்த தனது வேலைகளை முடித்தாள். மருமகளின் பிட்டும், மீனானமும், அவியலும் மிகவும் சுவையாக இருந்தாலும்…சாப்பாடு அவ்வளவாக வாயில் இறங்கவில்லை.
தனது உடுதுணிப் பையோடு வெளியே உள்ள ஊஞ்சலில் உட்கார்ந்தாள். தனது புதியஇருப்பிடத்திற்கு செல்வதற்காக மகனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். தான் நீண்ட காலங்களாக வசித்து வந்த வீட்டை விட்டு பிரிகிறோம் என்ற கவலையும் அவளை ஆட்கொண்டது. அமுதவள்ளி சிந்தனையில் மூழ்கினாள்.
“பாட்டி… “என்று கூப்பிட்டவாரே இரு கரங்கள் தன்னை அன்போடு இருக்கி அணைத்ததை உணர்ந்து திடுக்கிட்டு நின்றாள் அமுதவள்ளி.” என்ன பாட்டி உங்களுக்கு அப்படி யோசனை? நான் வந்தது கூட கவனிக்கலையா?” என்று கூறினின்ற பேத்தியை பார்த்து இன்ப அதிர்ச்சியானாள். பாட்டியின் கண்களில் வழிந்த கண்ணீரைப் பார்த்ததும் பதறிப் போனால் ஆனந்தி.” பாட்டி என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் அழுவுறீங்க?”பாட்டி பதில் கூறாமல் அமைதியாக இருந்தாள். பாட்டியின் பக்கத்தில் துணிப்பை இருந்தது. ஆனந்தி ஓரளவுக்கு புரிந்து கொண்டாள் நடந்தது என்ன என்பதை!.. ஆனந்தி இருக்கும்போதும் இதற்கு முன்னரும் அம்மா அப்பாவிடம் இதைப் பற்றி பேசி இருப்பது அவளுக்கும் தெரியும். அம்மா ஏதோ !சும்மா சொல்கிறாள் என்று தான் அவளும் நினைத்தாள். இப்படி நடக்கும் என்று அவள் நினைக்கவே இல்லை. வேகமாக உள்ளே சென்றாள். அவளது அம்மா சௌந்தர்யா எவ்வித கவலையும் இன்றி சீரியல் பார்த்துக்கொண்டிருந்தாள். சீரியலில் மருமகளை மாமியார் படுத்தும் கொடுமைகளை பார்த்து கண்ணீர் சிந்திய வண்ணம் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.” அம்மா உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி செய்றீங்க? படிச்சவங்க தானே நீங்க? பாட்டிய எங்கயும் அனுப்பக் கூடாது. பாட்டி இங்கதான் இருக்கனும். பாட்டிதான் நமக்கு எல்லாமே! ஒரு வீட்டிற்கு மூத்தவங்க இருப்பதே பெரும் பாக்கியம். அவங்கள விரட்டி விட்டு நாம வாழ நினைப்பது சரியா? அவங்க இல்லாமலா..இன்னைக்கு நாம நல்லா இருக்கோம்? நாம நல்லா இருக்க அவங்கதான் காரணமே. அவங்க நம்மல ஏற்றிவிட்ட ஏணி. அவங்கல கண்கலங்க வைப்பது சரியா? நான் சின்ன வயசுல நீங்க வேலைக்கு போனபோது என்ன கண்ணாகப் பார்த்துக் கொண்டது யாரு? வீட்டு வேலைகளில் கஷ்டப்பட்டது யாரு? ஏன்…! உங்களுக்கு சுகமில்லாத போதெல்லாம் உங்களைப் பார்த்துக் கொண்டது யாரு? எல்லாம் மறந்தாச்சா?
பாட்டிக்கு இப்ப கொஞ்ச காலமாகத்தான் உடம்புக்கு முடியாமல் போச்சு ஆனால் உங்களால அவங்கல பாக்க.. முடியல.. “பேச்சை சிறிது நிறுத்திவிட்டு பெற்றவளை நோக்கினாள்.
மகளின் பேச்சால் கண்கள் கலங்கியிருந்தது. அவள் மீண்டும் தொடர்ந்தாள். “இப்ப நீங்க சிந்திய கண்ணீர்தான் உண்மை. இது தான் வேண்டும். நாம் எப்போதும் நமது குடும்பத்திற்காக தான் கவலைப்பட வேண்டும். அவர்களுக்காகத் தான் கண்ணீர் சிந்த வேண்டும். நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சிந்து நீங்களே கண்ணீர் சீரியல் பார்த்துக்கொண்டு அது உண்மை அல்ல. அவர்கள் பணத்துக்காக நடிக்கின்றார்கள் அது அவர்களுடைய தொழில். நாம் பொழுதுபோக்குக்காக தான் அவற்றைப் பார்க்கின்றோம். அதைப் பார்த்தெல்லாம் இலகும் நமது மனசு உண்மையானவைகளுக்காக ஏன்! இலகுவதில்லை? அம்மா பாட்டி இனி இங்கதான் இருக்க வேண்டும். பாட்டி இங்கே இல்லாவிட்டால் நானும் இங்கே இருக்க மாட்டேன். நானும் அவங்க கூடவே போயிடுவேன். என் பாட்டியை போலவே அங்கேயும் நிறைய பாட்டிகளும் ,தாத்தாக்களும் இருக்கும். என் பாட்டியோடு சேர்த்து அவங்களையும் நான் நன்றாக பார்த்துக் கொள்வேன். உங்களை வயதான காலத்தில் பார்த்துக் கொள்ள உங்களுக்கு உங்கள் மகளான நான் இருக்க மாட்டேன். அப்போது உங்களை யார் பார்த்துக் கொள்வது? அப்பாவுக்கும் வயதாகி விட்டது. அவங்களையும் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களால் முடியுமா? உறவுகள் இருக்கும் போது அதன் அருமை விழுங்குவதில்லை. அதனால்உறவுகளை எப்போதும் நம்மோடு தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ப்ளீஸ்மா உங்க முடிவு மாத்துங்க.” அழுதேவிட்டாள் ஆனந்தி. சௌந்தர்யாவுக்கு இப்போது எல்லாம் புரிந்தது. தன் தவறை நினைத்து வருந்தினாள். வெட்கப்பட்டாள். தனது மகள் தனது கண்களை திறந்து விட்டால் என்று நினைத்து பெருமிதப்பட்டாள். ” அத்தை என்ன மன்னிச்சிடுங்க… பெரிய தவறு செய்து விட்டேன் நான். இனி உங்களை எங்கேயும் விட மாட்டேன். என் தாய் இருந்தா நான் பார்த்திருக்க மாட்டேனா? என் தாய் போல நான் உங்களை பார்த்துக் கொள்வேன்.” அம்மாவின் மாற்றத்தை கண்டு தனது தாயை கட்டி அணைத்து முத்தமிட்டால் ஆனந்தி.
“அம்மா நம்ம காலேஜ்ல ப்ரொபசர் ஒருவர் இறந்துவிட்டார். அதனால் மூன்று நாட்களுக்கு லீவு கொடுத்து இருக்கு. அதுதான் நான் திடீரென்று வரவேண்டியதாயிற்று. நல்ல வேலை இங்கு வந்தேன். பாட்டி போறதையும் தடுத்தாச்சு. இப்பதான் மனசுக்கு நிம்மதி.” என்று கூறி முடிக்கும் போதே அவளது அப்பாவும் அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தார். நடந்தது எல்லாவற்றையும் அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தனதுமகளை நினைத்து பெருமிதம் அடைந்ததோடு, தன்னை படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார். அவர்களின் வீட்டில் பழையபடி மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.
(யாவும் கற்பனை)