மலேரியா
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/author.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/tags.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/category.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/date.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/eye.png)
(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சிதிலமடைந்த அந்த அறையின் மூலைகளில் இருளையும் வேதனையையும் கவித்தது இரவு. அறையினுள் காற்று அளந்து அனுப்பியதைப்போல மிகக் குறைவான அளவில்தான் நுழைந்தது. சூரிய வெளிச்சம் மிக அதிகமாக இருக்கும் பட்டப் பகலில் கூட இந்த அறைக்கு மட்டும் முழுமையான வெளிச்சம் வருவதே இல்லை. வெளியே, சத்தம் வந்துவிடப் போகிறதே என்று பயப்படுவது போல் மிக மெதுவாக நீரை ஊற்றிக் கொண்டிருந்தது ஒரு குழாய். அந்தக் குடியிருப்பிலுள்ள அத்தனை பேரின் தாகத்தையும் தணிக்க வேண்டிய ஒரே குழாய். ஒரு குழந்தை ரொட்டிக்காக பலமாக அழுதுகொண்டிருந்தது.
“வாயை மூடு, தேவடியாள் சிறுக்கி… இங்கே யாரும் இன்னும் சாப்பிடவில்லை”.
வேறு எதுவும் செய்யமுடியாத நிலையில் குழந்தையின் அம்மா அசிங்கமாகத் திட்டினாள்.
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2024/12/மலேரியா.jpg)
சிதிலமடைந்த அறையினுள் இருந்த பெண், மிச்ச மிருந்த சிறு வெளிச்சமும் மங்குவதைக் கவனித்தாள். மின்சாரமில்லாத வீடு. விளக்கில் இருந்த எண்ணை யும் அநேகமாகத் தீர்ந்துவிட்டது. தன் உடம்பில் ஒரு துளியேனும் சக்தியோசூடோ இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. முன்னொரு காலத்தில் சிலையைப் போல் அற்புதமாகவும் உறுதியாகவும் இருந்தவள் தான். இப்போது சதை வற்றிப்போன அவளுடைய இடுப்பை வாட்டும் குளிர் தாக்கியது. சோகத்தில் பின்னிக்கிடந்த அவளின் இதயம் மௌனமான பிரார்த்தனையுடன் அந்த உணர்ச்சியினால் துடித்தது.
பகல் மெதுவாக முடிவடைந்து கொண்டிருந்தது. தெருவில் நடப்பவர்களின் காலடிச்சத்தம் கேட்டது. நேரத்தைப் போக்குவதற்காக அவர்கள் மலிவான பொழுதுபோக்கைத் தேடிப்போனார்கள். சக்தியையும் பணத்தையும் உறிஞ்சும் மதுபானக் கடைகள், புழுத்துப் போன சதையை விற்கும் விபச்சார விடுதிகள். இந்தச் சூழலில் உள்ள மக்களுக்குக் கிடைக்கக் கூடிய பொழுது போக்குகள் எல்லாமே சந்தோஷத்தைக் கொடுக்குமோ இல்லையோ – காலப்போக்கில் நிச்சயமாக தளர்ச்சி, வியாதி, வேதனை, அனாதரவான நிலை, மரணம் இவற்றையெல்லாம் தரத் தவறுவதே இல்லை.
பறவைகள் சந்தோஷக் கூச்சலிடும் அந்த மாலை நேரத்தில், தான் செத்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். மரண தேவதை தன்னை மெதுவாக அணைத்து இரக்கமேயில்லாமல் மூச்சுத் திணற வைத்துக் கொண்டிருந்த அதே சமயத்தில், தாள முடியாத குளிர் தன் எலும்புகளை நாசம் செய்து, மண்டையில் ‘டமார் டமார்” என்று பைத்தியம் பிடிப்பது போல அடிப்பதையும் உணர்ந்தாள்.
முற்றிலும் கைவிடப்பட்ட நிலை. ஒரு ஆறுதல் வார்த்தையோ, ஒரு துளி அன்போ, ஒரு கிளாஸ் பாலோ கொண்டு தருவாரில்லை. குளிர் ஜுரத்துடன் அவளேதான் எழுந்து வெளியே போய் சோளரொட்டி வாங்கிவர வேண்டும். தொட்டுக்கொள்ள எதுவும் வாங்க வசதி இல்லாததால், வெறுமனேதான் அதை சாப்பிட வேண்டும். வெளியே போகும்போது, பிச்சையெடுத்து காசுகாசாகச் சேர்க்கும்போது, அவள் தாங்க முடியாத அவமானத்தை அனுபவிப்பாள்.
தான் எதனால் இப்படிக் கைவிடப்பட்டோம் என்பதைக்கூட அவளால் விளங்கிக் கொள்ள முடிய வில்லை. எப்போதும் அவள் தன்னைச் சேர்ந்த மனிதர்களுக்கு நல்லவளாகவே நடந்து வந்திருக் கிறாள். எப்போதும் கருணையோடும் தாராள மனத் தோடும் இருந்திருக்கிறாள். அக்கம்பக்கத்தில் இருப் பவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்து வந்திருக் கிறாள். தனக்கென்று ஒரு குழந்தை இல்லாததாலோ என்னவோ, குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டி யிருக்கிறாள். ஒரு வேளை ஒரேயடியாக இளைத்துப் போய் மஞ்சளாக இருப்பது காரணமாக இருக்கலாம்.
இருமலைக் கேட்டு காசநோய் இருப்பதாகக்கூட நினைக்கலாம். மலேரியாதான் தன்னைக் கொல்கிறது என்று அவளுக்குத் தெரியும். ஆனால் மற்றவர்களின் நினைப்பை எப்படி மாற்ற முடியும்? தனது கொடுந் துக்கங்களும், பயனில்லாத அலைச்சல்களும், இந்தத் தாறுமாறான தெருக்களின் மேல் பதிந்த தன் பாதங் களின் ரத்தக் கசிவுகளும் நின்று போகக்கூடிய அந்தக் கடைசிக் காலம்வரை அவள் துன்பப்பட்டுத்தான் ஆக வேண்டும்…
வினோதமான நிழல் உருவங்கள் கூரையின் மேல் ஆட ஆரம்பித்தன. தலை முன்னைக் காட்டிலும் கடுமையாக வலிக்க ஆரம்பித்தது. நினைவு மங்கி, மறக்கப் பட்ட கடந்த காலத்தில் சென்று நிலைத்தது. ஆனால் அந்தப் பழைய நினைவுகளே அவளுக்கு ஒரு ஆறுதலைக் கொடுத்து, வாழ்வின் மிக மகிழ்ச்சியான கணங்களின் மீது ஒளியையும் பாய்ச்சியது…
பைன் மரங்களின் புத்துயிர் மணத்தை நிரப்பிவைத் திருக்கும் கிராமத்தில் கழிந்த தன்னுடைய குழந்தைப் பருவத்து நாட்களை அவள் மறுபடியும் வாழ்ந்து கொண்டிருந்தாள். அந்தப் பாடும் பறவைகளின் வினோதமான பாடல்… குதியாட்டம் போடும் கன்றுக்குட்டிகளின் மனம்… சடசடவென்று ஓசை யிட்டு ஓடும் ஓடைகள்… பனியில் நனைந்த வயல் களின் பசுமை… ஆத்மார்த்தமான பிரார்த்தனைப் பாடல் கள் நிரம்பிய கிராம வாழ்க்கையின் தூய்மை.
தூய்மையும் பசுமையும் கிராமச் சூழலில் தன் திண்மை யான மார்புகள் வளர்வதையும், வாங்கஸ்ஸின் காவியத்தைப் போன்ற கிராமிய இளமையுடன் தன் உடல் காதல் உணர்வினால் துள்ளுவதையும் நினைத் துப் பார்த்தாள். அதன் பிறகு, தொலைதூரத்திலிருந்து கனவு காணும்போது மகிழ்ச்சியையும் வளமான எதிர்காலத்தையும் அள்ளி வழங்குவதாகத் தோன்றும் கடற்கரைப் பகுதிக்குப் போக வேண்டுமென்று ஏங்கினாள்.
கற்பனைகள் கபடமற்று அவளின் எண்ணத்தில் வண்ணமயமான தோற்றங்களை உண்டாக்கின. உள்ளுணர்வு அவளின் கருத்த உறுதியான சதையை எரியச் செய்தது. மிதவெப்பப் பிரதேசத்தின் தன்மைக்கு மாறான ஒரு நெருப்பு அது; உடை என்ற கட்டுப்பாட்டை மீறியும் பிரமிப்பூட்டிய சவாலை வெளிச்சத்தில் பார்த்துக் கொள்வதில் அவள் மகிழ்ச்சி கொள்ளத் தொடங்கினாள். வருடும் மெல்லிய காற்றில் கூரிய கூம்புகளைப் போன்ற அவளின் மார்புகள் மெல்லிய ஜாக்கெட்டை மீறி விடும்.
பிறகுதான் தன்னுள்ளிருந்த நெருப்பைப் பற்றவைத்த மனிதனை, புதிய உலகங்களை வெல்லும் கனவுடன் சாகஸங்களின் பக்கம் தன்னைத் திசைதிருப்பிய மனிதனை அவள் சந்தித்தாள். கடற்கரை நகருக்குச் செல்ல அழைத்த அவனது அழைப்பை சொர்க்கத்துக் கான அழைப்பாக உணர்ந்தாள். பலம், நல்ல உடல் அமைப்பு, ஆரோக்கியமான மனநிலை ஆகியவற்றுக் காக அவனை அவள் விருப்பினாள். அவளுக்குத் தேவையானவற்றை அவன் வழங்கினான். காதல், வடக்குக் கடற்கரை நகர வாழ்க்கை. “வாழை மரங்கள் பிரமாதமாக வளரும் இடம் அது. அதிக சம்பளம். விரைவில் கொஞ்சம் பணம் சேர்த்துவிடலாம். நீயும் உன்னால் முடிந்ததைச் செய்து உதவினால் கஷ்ட மில்லாமல் போகும்”. “வேறொருத்தி உன்னை மயக்கி, நீ என்னைத் துரத்தி விட்டால்?” “முடியாது கண்ணே. நான் உன்னை மட்டுமேகாதலிக்கிறேன். நாம் எப்போதுமே சேர்ந்துதான் இருப்போம். நாம் ரயிலிலும் காரிலும் ஏறிப்போகலாம். சினிமாவுக்கும் திருவிழாக்களுக்கும் போகலாம்…”
“ரயில் அழகாயிருக்குமா?”
“பெரிய கருப்புப் புழுக்களைப்போல தலையில் புகைவிட்டுக் கொண்டே போகும் பாரேன். ஏகப்பட்ட கூட்டத்தை ஏற்றிக்கொண்டு ஊர்விட்டு ஊர்போகும். ஒருத்தன் ஒவ்வொரு முறையும் ஊர் வந்ததும் அந்தந்த ஊரின் பெயரைச் சொல்லிக் கத்துவான். அற்புதமாக இருக்கும்! நீயும் பார்க்கலாம்..”
தன் மூதாதையர்களின் ஊரைவிட்டுச் சென்றுவிட வேண்டுமென்று அவள் ஏங்கினாள். காதலிக்கவும் வெளி உலகைப் பார்க்கவும் விரும்பினாள். தான் இருக்கும் ஊர் விடியல் இல்லாத இரவைப் போல சோம்பிக்கிடப்பதாக நினைத்தாள். கூரான கூழாங்கற் களும் பாறைகளும் படிந்த அந்தச் சின்னஞ்சிறு முகத்துவாரத்தில் சாய்ந்தபடியே தன் அழகுக்கு இந்த ஊரில் எந்த மதிப்பும் இல்லை என்று நினைத்துக் கொண்டாள். கிராமிய வாசனையைத்தன் உடம்பில் நிரப்பிய, இளம் பிராயத்தைக் கழித்த அந்த கிராமத்தை விட்டு, நகரத்துக்குச் சென்றுவிட வேண்டுமென்று தோன்றிவிட்டது அவளுக்கு.
துணையுடன் புறப்பட்டு விட்டாள். வழியில் பல மலைகள், பல ஆக்ரோஷமான ஆறுகள். சகிக்க முடியாத மந்தமான இந்த நாட்களில், சிறு பொறிகள் தெறித்தாற்போல அவ்வப்போது சில்வண்டுகள் பாடிய மெல்லிய ராகத்தைத் தவிர வேறு ஓசைகள் இல்லை. கடுமையான வெயில் சுட்டுப் பொசுக்கிய பள்ளத்தாக்குகளில் அவர்கள் நடந்தார்கள்.
அவள் காதலன்தான் எப்பேர்ப்பட்ட மனிதன்! பயண நாட்களின் இரவுகளில் நட்சத்திரங்களின் கீழ் உறங்கும் போது, அவளது எல்லா எதிர்பார்ப்புகளையும், கனவு களையும், ஆசைகளையும் அவன் பூர்த்தி செய்தான். வயல்களில் இரவு கவியத் தொடங்கிய போதும், இரவு களில் கருமை மண்டியபோதும், உதயத்தின் முதல் கீற்று தூரத்துக் கிழக்கு மேகத்தில் சிவப்பைத் தடவிய போதும் என எந்த நேரமும் உடலில் தீயாகப் பரவிய பரபரப்பும், தன் காதலனின் வெல்லமுடியாத வீரமும் தைரியமும் – எல்லாம் சேர்ந்து உடல் முழுவதும் எதிர் பார்ப்பும் கர்வமுமான அதிர்வுகளால் துடிப்பதை அவள் உணர்ந்தாள்.
கடைசியாக, லிமாவை அடைந்து வேலைக்கான தேடலைத் தொடங்கினார்கள். புத்திசாலித்தனமும் நகைச்சுவைப் பேச்சுமாக இருந்த தெமித்ரியோவுக்கு, ஃபோர்மேன்கள் நேரக் காப்பாளர்கள் முதலாளிகள் ஆகியோரின் நட்பைப்பெறுவது சுலபமாகவே இருந்தது.ஆனால் அவனது கெட்ட பழக்கங்களின் காரணமாக எப்போதும் தீயவழிகளுக்கு முக்கியத்து வம் கொடுப்பவனாகத்தான் அவன் இருந்தான். பழக் கம்பெனியின் வசமிருந்த எல்லா வாழைத் தோட்டங் களிலும் அவன் களையெடுப்பவனாக, மரம் வெட்டு பவனாக, பழம் சேகரிப்பவனாக, தலைமுதல் கால்வரை பச்சைப் போர்வை போர்த்தினாற்போன்ற தோற்றத்துடன் பூச்சி மருந்து தெளிப்பவனாக, இப்படி எத்தனையோ வேலைகளை செய்தான். வேலை நேரம் எப்போதுமே விடிந்தது முதல் பொழுது சாயும்வரை தான். உஷ்ணம் தாளாமல் வாழையிலை கள் சுருண்டு போகும் அளவிற்கு தகிக்கும் அனலில் தான் எப் போதும் அவன் வேலை செய்தான். வேலை முடிந்து இரவில் வீடு திரும்பும்போது கிழித்துப் போட்ட நாராக, பேசக்கூட தெம்பில்லாமல் போய், சுதந்திர மானகாட்டு மிருகத்தைப் போன்றிருந்த தன் உடம்பை களைப்பு அணு அணுவாகத் தின்று கொண்டிருப்பதை உணருவான்.
அடுத்தடுத்து வந்த மலேரியாவினால் கெட்டுப்போன உடல் நலத்தை, விஸ்கி குடித்து குணப்படுத்த முயன்றான். அதனால் ஒரு பயனும் இருக்கவில்லை. வியாதியும் தீரவில்லை. வேலைக்குப் போகாமலிருந் தாலோ, அது பட்டினிச் சாவுக்குத்தான் வழி.
அப்போது அவன் ஒரு சிறிய ஒப்பந்த அடிப்படையி லான வேலையைச் செய்து கொண்டிருந்தான். அவள் சாப்பாட்டுக் கடை வைத்திருந்தாள். ஒருநாள் இரவில் ஆண்கள் எல்லோரும் ஆற்றுக்கு அயைாக மணல் மூட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். உலுவா ஆறு ஆக்ரோஷமாகப் பெருகிக் கொண்டிருந்தது. வெள்ளம் அணைக்கு மேல் பெருகிவர, நிமிடத்திற்கு நிமிடம் தீவிரமடைந்த புயலால் பெருக்கெடுத்த வெள்ளம்,தெமித்ரோவை அடித்துக் கொண்டு போய்விட்டது.
அவள் தனிமையில் நோயாளியாக விடப்பட்டாள். அவளுக்கும் மலேரியாதான். தோட்டத்தைவிட்டு வெளியேறி தொண்டையை அடைக்கும் துக்கத்துடன் துறைமுகத்தை அடைந்தாள். வேலைதேடி அங்குமிங் கும் அலைந்துவிட்டு, கடைசியில் ஏதோ ஒரு இடத்தில் இன்று நினைத்தாலும் வெட்கத்தில் தலைகுனியச் செய்யும் அந்தக் கேடுகெட்ட வேலையைச் செய்யத் தொடங்கினாள். வெவ்வேறு வடிவமும் அளவுமுள்ள ஆயிரக் கணக்கான ஆண்கள் அவள் உடம்பில் விளையாடினார்கள்.
தீராத நோயுடனும், என்றென்றும் அகலாத கசப்பான மனதுடனும் அவள் அந்த விபச்சார விடுதியை விட்டு வெளியேறி ஒரு வழியாக பெத்ரோ சூலாவுக்கு வந்து சேர்ந்தாள். மலேரியா அவளை விடுவதாக இல்லை. நாளுக்கு நாள் நோயின் தீவிரம் அதிகரித்து வாட்ட, உலகத்தால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டாள் அவள். பொழுது சாய்ந்ததும், நிழல்கள் பயந்தவை போல சுழன்று சுழன்று மேற்கூரையில் ஏற்படுத்திய விசித்திரமான உருவங்களைப் பார்த்தபடி அந்த சிதிலமான கட்டிலில் படுத்தே கிடந்தாள்.
ஒரு காலத்தில் அன்பைப் பொழிந்த அவள் கண்கள் இப்போது வற்றிய கிணறுகளாக, வெறும் துயரத்தை மட்டுமே தேக்கி நிற்கின்றன. மெலிந்த கைகள் மென்மையான வருடலையும் பரவசமூட்டும் உஷ்ணத்தையும் இழந்து கிடந்தன. அபரிமிதமாக இருந்த முலைகள் இப்போது கிழிந்த ரவிக்கையின் கீழ் ருக்குமிடம் தெரியாமல் மறைந்து போயின. துன்பப்புயல் அவளை உருக்குலைத்து விட்டது.இனி மிச்சமிருப்பது சிலிர்க்கவைக்கும் சாவின் நிச்சயம் மட்டுமே.
வெளியே குழந்தைகள் அளவிடமுடியாத சந்தோஷத் துடன் விளையாடிக்கொண்டிருந்தன. தொன்மையும் புதுமையுமான ‘காதல்’ என்ற விஷயத்தை ஒரு இளம் ஜோடி பேசிக்கொண்டிருந்தது. சூழலின் அமைதியை கர்ணகடூரமான ஹாரன் ஒலியால் கிழித்தது ஒரு கார். தொலைவில் ரயிலின் ஓசை. வேறு வழியில்லாமல் வாழ்க்கையும்…
– 1998, காலம்-12, விக்டர் காஸரஸ் லாரா, தமிழில்: அமரந்த்தா.
விக்டர் காஸரஸ் லாரா (1915) ஹோண்டுராஸ் நாட்டைச் சேர்ந்தவர். பள்ளி ஆசிரியர், கல்லூரிப் பேராசிரியர், அஞ்சல் துறையின் தலைமை அதிகாரி போன்ற பொறுப்புகளில் இருந்து பின்னர் ஹோண்டுராஸின் தூதராக வெனிசூலா நாட்டில் பணியாற்றினார். அந்த நாட்டின் புகழ்பெற்ற சிறுகதையாசிரியர் விக்டர் லாரா.
–