காலத்தை காப்பாற்றியவர்கள்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: December 9, 2024
பார்வையிட்டோர்: 4,596
கால இயந்திரத்தை ஒழுங்குபடுத்தும் பணிக்குழுவின் உறுப்பினர்கள் ஒரு பெரிய மேசையைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அவர்களின் முகங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான கவலை படிந்திருந்தது. டாக்டர் மர்பி கால இயந்திரத்தை கண்டு பிடித்து ஆறு மாதங்கள் கடந்து விட்டன. அதன் விளைவுகள் அவர்கள் எதிர்பார்த்ததை விடவும் மிக பயங்கரமாக இருந்தன.
பணிக்குழுவின் தலைவர் தாமஸ் முதலில் பேசினார். “மர்பியின் இயந்திரத்தை வைத்துக் கொண்டு யார் வேண்டுமானாலும் சுலபமாக கடந்த காலத்தை மாற்றி விடலாம் என்று ஆகி விட்டது. கடந்த காலத்திற்கு சென்று ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை அழித்து புது நிகழ்வுகளை உருவாக்குவதன் மூலம் மக்கள் மனித வரலாற்றில் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகின்றனர். சீராக நேர் கோட்டில் சென்று கொண்டிருந்த காலவரிசை இப்போது துண்டாடப்பட்டு நாலா திசைகளிலும் அலைக்கழிக்கப் படுகிறது. இதையெல்லாம் சீர் படுத்தும் பொறுப்பில் இருக்கும் நம் குழுவின் மேல் விழும் பிரஷர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.”
குழுவின் தொழில்நுட்ப ஆலோசகரான ஜென்கின்ஸ் தொடர்ந்தார். “கடந்த ஆறு மாதங்களில் நம்பவே முடியாத பல விஷயங்கள் நடந்துள்ளன. இறந்த குடும்ப உறுப்பினர்கள் திடீரென்று மீண்டும் தோன்றுகிறார்கள். கால்பந்து விளையாட்டு முடிவுகள் மாற்றி எழுதப்படுகின்றன. மக்கள் கடந்த காலத்திற்கு சென்று பங்குச் சந்தையில் விளையாடுவது உலக பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கிறது. தேர்தல் முடிவுகள் மாறி, வரலாற்றுப் புத்தகங்களில் இருந்து ஜனாதிபதிகளின் பெயர்கள் அழிந்து போகின்றன.”
ஒரு நிமிட மௌனத்திற்குப் பிறகு தாமஸ் பெருமூச்சு விட்டார். “கால இயந்திரங்களின் பயன்பாட்டை நாம் உடனடியாக கட்டுப் படுத்த வேண்டும். வணிக நோக்கங்களுக்காகவும், கேளிக்கைக்காகவும், சுய நலத்திற்காகவும் இயந்திரம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க முடியுமா?”
குழுவின் புலனாய்வாளரான ஏஜென்ட் ராபர்ட்ஸ் உதட்டைப் பிதுக்கினார். “நூற்றுக்கணக்கான மாடல்கள் ஏற்கனவே விற்கப்பட்டு, செயல்பாட்டில் இருக்கின்றன. அவற்றைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் சாத்தியமற்றது. மேலும், நம்முடைய காலவரிசைக்கு ஏற்கனவே பெரும் சேதம் ஏற்பட்டு விட்டது. அந்த சேதங்களையெல்லாம் நீக்கி ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்த காலவரிசையை எப்படி மீட்டெடுப்பது?”
நீண்ட மௌனத்திற்கு பிறகு ஜென்கின்ஸ், “இதற்கெல்லாம் ஒரே ஒரு தீர்வு இருக்கிறது, ஆனால்-” என்று ஆரம்பித்தார்.
“என்ன ஆனால்?” என்று உடனே கேட்டார் தாமஸ்.
“அந்தத் தீர்வு சட்டப்படி சரியா என்று தெரியவில்லை.”
“சரியா தவறா என்பதைப் பிறகு தீர்மானிப்போம். முதலில் தீர்வு என்ன என்று சொல்லுங்கள்.”
உலகின் முதல் கால இயந்திரத்திலிருந்த கடைசி குறைபாட்டை டாக்டர் மர்பி சரி செய்து கொண்டிருந்த போது கதவு மணி அடித்தது.
“லான்கேர் விற்பனையாளராக இருக்க வேண்டும்,” என்று முணுமுணுத்துக் கொண்டே டாக்டர் மர்பி கதவைத் திறந்தார்.
ஏஜென்ட் ராபர்ட்ஸ் தனது .44 மேக்னம் கைத்துப்பாக்கியை உயர்த்தி, அதன் விசையை உறுதியாக அழுத்தினார்.