எரித்தது குற்றமா?
கதையாசிரியர்: ஞானம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி தமிழ் முரசு (ம.பொ.சி)
கதைப்பதிவு: June 9, 2026
பார்வையிட்டோர்: 118
(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிலப்பதிகாரக் கதையில் குற்றமற்ற கோவலனைக் கொன்றமைக்காகப் பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர்விடுகின்றான். “மானம் படவரின் உயிர் வாழார் பாண்டியர்” என்ற செம்மொழியை மெய்ம்மொழி யாக்கியது அவனது வீரச் செயல்.
தனக்கு இன்னல் விளைத்த வேந்தன் இறந்துபட்ட பின்னரும்கூடக் கண்ணகிதேவியாரின் சீற்றம் தணிய வில்லை. பாண்டிமாதேவியின் வேண்டுகோளும் பலனளிக்க வில்லை.
நெடுஞ்செழியனின் கொடுஞ்செயலால் கண்ணகியின் உள்ளத்தே கனன்றெழுந்த தீயானது உடலெல்லாம் பரவி நின்றது. “அரசன்தானே அழிந்தான்! அதோடு விட்டேனா? அவனது மதுரையை இதோ நானே அழிக்கின்றேன்” என்று வஞ்சினங்கூறி மதுரை நகரைத் தீக்கிரையாக்கினாள். பகை மன்னரால் எல்லாம் அழிக்க முடியாத பாண்டி நாட்டின் தலைநகரைப் பத்தினிப் பெண் அழித்தாள்.
“தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதியார். ஆனால் இளங்கோவடிகள் கண்ட கண்ணகி, கோவலனாகிய ஒருவனைக் கொன்ற கொடுமைக்காக ஒரு நாட்டையே அழித்து முடிக்கிறாள்.
அரசன் ஒருவன் செய்த கொடுமைக்காக ஒரு நகரத்தையே நாசமாக்கி, அதில் வாழும் மக்களுக்குக் கேடு சூழ்வது நீதியோ எனக் கேட்கலாம். இதற்குக் கண்ணகி தேவியே பதிலளிக்கிறாள்.
மதுரையைத் தீக்கிரையாக்கத் திடங்கொண்டதும் கண்ணகி தன்னைப் பார்த்து நிற்கும் மதுரை மாந்தரை நோக்கி,
நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்
வானக் கடவுளரும் மாதவரும் கேட்டீமின்
யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த
கோனகர் சீறினேன், குற்ற மிலேன்.
“மதுரையம்பதியில் வாழும் பெண்களே, ஆண்களே, வானுலகத் தேவர்களே, சான்றோர்களே! கேளுங்கள். என் அன்புக்குரிய காதலரைக் கொல்லுவித்த பாண்டியன் நெடுஞ்செழியனின் ஆட்சிக்கு உட்பட்டது இம்மதுரை. ஆகவே, இந்நகர்மீது யான் சீற்றங் கொண்டேன். என்மீது குற்றமில்லை” என்று கூறுகின்றாள்.
‘கோன் நகர்’ என்பதிலுள்ள நுண்பொருள் அரசியல் அறிஞர்களின் ஆராய்ச்சிக்கு உரியதாகும்.
கண்ணகி மதுரையை எரித்ததற்குக் காரணம், நெடுஞ்செழியனின் ஆட்சிக்கு அவ்வூர் உ ட்பட்டிருந்ததே யாகும்.
நெடுஞ்செழியன் தனிமனிதன் அல்லன்; பாண்டி நாட்டின் மன்னன். மன்னனுக் குள்ள அதிகாரத்தைக் கொண்டே கோவலனைக் கொல்லுவித்தான். இந்த அநீதிக்குப் பின்னரும் அம்மன்னனது ஆட்சியே மதுரையில் நிலவி வந்தது.
அரசனானவன் எப்படித் தன் ஆட்சியை நீதி வழுவாமல் நடத்தக் கடமைப்பட்டவனோ அதே போன்று குடிகளும் தங்கள் அரசன் நீதிவழுவாமல் பார்த்துக்கொள்ளக் கடமைப்பட்டவர்கள்.
ஆனால், மதுரை மக்களோ தங்களுக்குரிய இந்த அரசியற் கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டனர். சோழ நாட்டுப் பிரஜையான கண்ணகி அல்லற்பட்டு ஆற்றாது மதுரை வீதி வழியே அழுது சென்றபோது,
‘களையாத துன்பம் இக்காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்தது இதுவென்கொல்’
என்று புலம்பி, இருந்த விடத்திலிருந்தே அவள்பால் அனுதாபம் காட்டினரேயன்றித் தங்கள் அரசனை அணுகித்திக்கற்ற அவளுக்கு இழைத்த தீமைக்குக் காரணம் கேட்டுக் கழுவாய் தேடினார்களில்லை.
அறம் பிழைத்த மன்னனுக்கு அஞ்சி வாழும் மதுரைக் குடிமக்களின் நிலை கண்ணகியின் மனத்தைப் புண்படுத்தியிருக்க வேண்டும்.
“என் கணவனைக் கூரிய வாளால் கொல்லுவித்த பாண்டியன் ஆட்சியில் பத்தினிப் பெண்டிருண்டா? சான்றோருண்டா? தெய்வமுண்டா?” என நிந்தித்துரைத்த அவளது வாய்மொழியே இதற்குச் சான்றாகும்.
இன்றைய அரசியல் உலகிலும் கண்ணகியின் கூற்றுக்கு ஆதாரமுண்டு. ஜெர்மனியில் விமானப் படையெடுப்பு நிகழ்த்து முன்னம் நேசநாட்டு அதிகாரிகள் என்ன சொன்னார்கள் தெரியுமா? “ஜெர்மன் மக்களே! எங்கள் பகை ஹிட்லரே யொழிய நீங்களல்ல. நாங்கள் அழிக்க விரும்புவதும் நாஸி ஆட்சியையே; ஜெர்மன் நாட்டையன்று. ஆகவே, ஜெர்மானியர்களாகிய நீங்கள் உங்களையும் உங்கள் நாட்டையும் எங்கள் விமானப் படையெடுப்பிலிருந்து காப்பாற்றிக்கொள்ள விரும்பினால் ஹிட்லரை விரட்டுங்கள். அவன் ஆட்சியைப் புதையுங்கள்” என்று விமானங்களிலிருந்து எறிந்த பிரசுரங்களிலும் ரேடியோவிலும் எச்சரித்தனர்.
இதன் நுட்ப மென்ன? பிற நாட்டவருக்குத் தீமை செய்யும் ஹிட்லர் ஆட்சியின்கீழ் அடங்கிவாழ ஜெர்மானியர் விரும்புவதாயின் ஜெர்மனியை அழிப்பது கடமை. அதனால் மக்களுக்கு ஏற்படும் தொல்லைகளுக்குத் தாங்கள் பொறுப்பாளிகளல்ல. ஏனெனில் அது ‘ ஹிட்லர் ஜெர்மனி’ என்பதே நேசநாட்டினர் வாதம்.
இதைத்தான், கண்ணகியும் கூறுகின்றாள்: “கோன் நகர் சீறினேன்; குற்ற மிலேன்” என்று.
– 1 பெப்ரவரி 1947, தமிழ் முரசு (ம.பொ.சி)
தொடர்புள்ள சிறுகதைகள்
பிறவி
ஸ்ரீசரவணன்
June 9, 2026
எண்களுடன் பயணித்தல்
திசேரா
June 9, 2026
எரிமலை
ஜெ.ஜெயகுமார்
June 9, 2026