என்னவளே நீயிருக்க! – ஒரு பக்க கதை





வறண்டு போன நிலமாக வாடி நின்றன அவள் விழிகள்; பனித்துளி காய்ந்த பயிராக பார்வைக்கு இருந்தது அவள் மேனி; எப்போதோ வீசிய தென்றலால் வதங்கி இருந்தது அவள் மூக்கு; அவனை அழைத்தே சோர்ந்து போனது அவள் நாக்கு; கண்கள் அசையாமல் களத்து மேட்டு பாதையவே பார்த்துக் கொண்டிருந்தன.
பறந்து செல்லும் பச்சைக் கிளிகள் “என்னாயிற்று இவளுக்கு?’ ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு சென்றன. அவளது நெஞ்சில் உதயனின் நினைப்பே நிழலாடிக் கொண்டிருந்தது.
“மேகலை! என்னோட கவிதை பிரசுரமாயிருக்கு” மகிழ்ச்சித் துளிகள் மனசை நனைக்க வேர்வைத் துளிகள் தேகத்தை நனைத்திட இதழ் ஒன்றைக் காட்டி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினான். இது போன்ற பல கவிதைகள் பல இதழ்களில் அடிக்கடி பிரசரமாகிக் கொண்டே இருந்தன.
உதயா! தோல்விய நாம் தாம் தோற்கடிக்கனும்; தோல்வி நம்மை தோற்கடிக்கக்கூடாது. நீங்க பெரிய ஆளாகனும். சமூகத்துல நடக்குற அறியாமையையும் அநீதியையும் உங்க கவிதைகள் பிரதிபலிக்கனும். கைகள் நான்கும் பிசைந்து கொள்ள கன்னங்கள் இரண்டும் உராய உதயனின் காதருகே கிசுகிசுத்தாள்.
“என்னவளாக நீயிருக்க எல்லாம் வெற்றி தான்” என்று கூறி சினிமாவுக்குப் பாட்டெழுத வாய்ப்பு தேடி சென்னைக்குச் சென்றவனுக்காகத் தான் வழிமேல் விழிகள் வைத்து தினமும் காத்துக்கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரியும்; உதயனுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று!
பலநாள் ஆகிறதே! கவலை கண்களை மறைக்க கைகளை கன்னத்தில் வைத்தாள். அவள் காதருகே ஒரு மெல்லிய கீதம் கேட்க முல்லைக் கொடியவள் மெதுவாக பின்னால் திரும்பினாள். உதயனின் உதடுகள் புன்முறுவல் காட்டின.
“என்னாச்சு!” அவளது விழிகள் மெதுவாக வினாக்களை தொடுத்தன். அவளது விழிகளுக்கு விழிகளாலே விடையளித்தான். “வெற்றி” என்று மேலும் விழிகள் அவளுக்கு விடையளித்தது. “செம்பட்டை விழுந்த முடியும்; ஒற்றைப் பருமுறைத்த கன்னமும், செம்மண் கரை படிந்த வேட்டியும் செருப்பில்லாத கால்களும் மஞ்சள் பை தாங்கிய கையும் கண்டு பலரும் என்னை வெறுத்தனர். ஆனால் ஒருவர் மட்டும் புறத்தோற்றத்தைப் பார்க்காமல் அகத்தோற்றத்தைப் பார்க்க ஆசைப்பட்டு எனது நயமிக்க கவிதைகளை கேட்டு மகிழ்ந்தார். வாய்ப்பும் தந்தார். அந்த ஒரு கீதம் தான் நீ சற்று முன் கேட்டது. அதைக் கேட்ட பலரும் பல வாய்ப்பு கொடுத்தனர். வாய்ப்புகளையும் பாராட்டுகளையும் பெற்றுக்கொண்டு வர சற்று காலதாமதம்” என்றது.
“எங்கிருந்து எழுதப் போகின்றீர்கள்; அவள் உதடு திறப்பதற்குள் “நம் கிராமத்திலிருந்து தான்”. இவனது உதடுகள் விடையளித்தன. அவளது கைகள் அவனை இறுக அணைக்க சந்தோசம் அவளை மாற்றியது. “பறந்து சென்ற பச்சைக்கிளிகள்” காரணம் இதுவோ என்று வாழ்த்து கூறி விடைபெற்றன.
– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.
![]() |
என் இயற்பெயர் தீ.திருப்பதி. சோலச்சி என்பது யார்......? இதற்கான விளக்கத்தை எனது "முதல் பரிசு " சிறுகதை நூலில் என்னுரையில் பதிவு செய்துள்ளேன். நான் புதுக்கோட்டை மாவட்டம் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி , நச்சாந்துபட்டியில் பத்தாம் வகுப்பு (1997-1998) படிக்கும்போது எனக்கு அறிவியல் ஆசிரியராக இருந்தவர் தான் திருமதி. எஸ்.சோலச்சி அவர்கள். என் குடும்பம் சோற்றுக்கும் துணிக்கும் தங்குவதற்கும் வழியில்லாமல் ஊர் நடுவிலே இருந்த புளியமரத்தடியில் வாடி வதங்கிய…மேலும் படிக்க... |