என் உயிரே… மயூரி..!
கதையாசிரியர்: ஜூனியர் தேஜ்
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: April 28, 2026
பார்வையிட்டோர்: 7,115
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம் – 7

மயூரி, இந்த அரசுக் கல்லூரியில், ஆங்கில விரிவுரையாளர் பதவிக்கு வந்ததே ஒரு விபத்துத்தான்.
மயூரியின் அப்பா… பல்கலைக்கழத் துணை வேந்தரின் நேர்முக உதவியாளர்; ‘யு ஜி ஸி போர்ட்’, ‘ செனட் ’ உறுப்பினர்.
எப்போதெல்லாம், வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம், எந்தெந்த விதத்திலெல்லாம் தன்னை முன்னிருத்த முடியும் என்பதைத் திட்டமிட்டு, செல்வாக்கையும் திறமைமையையும் முன்னிருத்தி, உன்னதமான ஒரு சமூகச் சேவகராகத் தன்னை முன்னிருத்திக் கொள்ளும் சந்தர்ப்பவாதிதான் மயூரியின் அப்பா.
அந்தக் குறிப்பிட்ட சூழலில் அப்படிக் காட்டிக் கொள்வது மட்டுமல்லாமல், அந்தச் சூழலைப் பதிவு செய்து, சுய விளம்பரங்களை, சமூக ஊடகங்களில் ஓங்கி ஒலிக்கச் செய்ய நிறையப் பணமும் , நேரமும் செலவழிப்பவர் அவர் .
மயூரியின் அம்மா. அரசினர் மேல் நிலைப் பள்ளியொன்றில் முதுகலை ஆசிரியை ; மனித சமுதாயத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய அறிவியல் என்று சொல்லக்கூடிய சமூகவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவள்.
அவள் கற்பிக்கும் சோஷியாலஜி பாடத்தில். சந்தேகமே வராத அளவிற்கு மாணவர்களை வைத்திருக்கும் அறிவு ஜீவி ;
பாடத்துக்குள் இறங்கி, ஆழ்ந்து, உட்புகுந்து, நடத்தினால்தானே, கேட்பவருக்குச் சந்தேகம் வரப்போகிறது ;
ஒருவேளை, மாணவர்களுக்குப் பலவற்றைச் சொல்லி அவர்களைக் குழப்பவேண்டாமே என்ற நல்ல எண்ணமாகக் கூட இருக்கலாம் .
இவர்களின் ஒரே மகள் மயூரி .
அவளை அரசுக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் அமர்த்தி, அழகு பார்த்தார்கள் பெற்றவர்கள்.
“பல்கலைக் கழகத்தின் செனட்-மெம்ப’ராக இருந்ததால், எந்தக் கல்லூரியில், எந்தப் பாடத்திற்கு எப்போது வாய்ப்பு, என்பதை விரல் நுனியில் வைத்திருந்தார் மயூரியின் அப்பா.
பதவியின் செல்வாக்கைப் பயன் படுத்திக்கொண்டு, காலம் நேரம் கூடி வருமாறு அமைத்துக் கொண்டார்; சரியாகத் திட்டமிட்டுக் காய்களை நகர்த்தினார்;
கல்லூரியில் ஆங்கிலத் துறையில் விரிவுரையாளர் பதவியில் மயூரியைச் சுலபமாக நுழைத்து விட்டார்.
அப்பாவின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யவே இந்த வேலையை மயூரி ஏற்றாள்.
தன் ஆசைகளும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் முற்றிலும் மறுக்கப்பட்டிருந்த போதிலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அதன் போக்கில் விட்டு வாழ்ந்து கொண்டிருந்தாள் மயூரி.
அப்படிப் பட்டவளுக்குச் சுய சிந்தனைகளையும், சுய மரியாதைகளையும், துணிச்சலையும் கொடுத்தது இந்த கருப்ப – கிருஹம்’ என்ற சங்குவின் சிறுகதை.
சங்கமேஸ்வரன் கல்லெறிந்து விட்டான்.
வட்ட வட்டமாகக் குளத்தில் சலன அலைகள் எகிறிப் பரவத் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு அலையும் மேலும் மேலும் பல அலைகளை உற்பத்தி செய்து அலைய விட்டன. அலைகளின் போக்கில் பயணப்படத் தொடங்கிவிட்டாள் மயூரி. உண்மையில் இப்போது மயூரி சலனப்பட்டு விட்டாள்.
சலனம் !
வாழ்வின் அடிநாதமே சலனம் தானே !
ஜடத்-தன்மையில் கூடச் சலனம் உண்டென, எத்தனை அழகாய்க் கதை சொல்லி நிரூபித்தான் வால்மீகி ;
ஒரு சலனம் கொடுத்தது ஜடத்தன்மையை ;
மறு சலனம் கொடுத்தது அந்த ஜடத்தன்மைக்கு உயிர்ப்பு ;
இந்த அகலிகையின் கதை, வாழ்வின் யதார்த்தத்தை அல்லவா தெளிவாய்ப் படம் பிடித்துக் காட்டுகிறது.
மயூரியின் சலனம் எத்தகையது ? ;
“விடியல் வருகுது பெண்ணே, நான் வருகிறேன்…!” என்று சொல்லி ஆற்றங்கரைக்குப் புறப்படச் செய்ய, கௌதமன் வேடத்தில் வந்து கோழிக் கூவலால், சலனப் படுத்திய இந்திரனின் காமச்- சலனமா ? ;
பொழுது விடியவில்லை போல இருக்கிறதே ? ; நதியில் சலனமில்லையே ? ; – என்று யோசித்த கௌதமனின் சந்தேகச் சலனமா.. ? ;
ஏதோ தவறு நடக்கிறது ; நதிக் கரையிலிருந்து கௌதமர் அவசரமாய் பர்ணசாலைக்குத் திரும்பிய ஊகச் சலனமா ? ;
நிலையறிந்து அகலிகையைக் கல்லாய்ச் சமைத்த கௌதமனின் கோபச்-சலனமா ? ;
விசுவாமித்திரரின், நிழலாய்த் தொடர்ந்து, நடந்த ஸ்ரீராமன், பாதத்தைப் பதித்து, ஜடப்பாரையாய்க் கிடந்தவளை அதிரூப அழகு சுந்தரி அகலிகையாய் உருமாற்றிய விமோசனச் – சலனமா ? ;
ஊழ்வினை உருத்து வந்து ஊட்ட, மாய மான் மேல் மோகம் கொண்டு, தன் தலையில் தானே மண் போட்டுக்கொண்ட சீதாப் பிராட்டியின் மோகச் – சலனமா ? ;
ஏதோ ஒரு சலனமாய் இருந்துவிட்டுப் போகட்டும். மொத்தத்தில் மயூரி சலனப்பட்டுவிட்டாள்.
அவள் நோக்கிக் கொண்டிருந்த பார்வை-நூலில் கவனம் செல்லவில்லை.
கவனம் முற்றிலும் மாறிவிட்டது. கொண்டு வந்த சாப்பாட்டைக் கூடச் சாப்பிடத் தோன்றவில்லை. பசி மரத்துப் போய் விட்டது.
மதியச் சாப்பாட்டிற்குப் போன ‘பி-எச்-டி’ க்களும், ‘எம் – ஃபில்’ களும் ஒவ்வொருவராய் துறை அறைக்குத் திரும்பினார்கள்.
டாக்டர் மார்த்தாண்டம், ஆங்கிலத் துறை எச் ஓ டி; துறைத் தலைவர்.
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா மேதைமைகளையும் கரைத்துக் குடித்த சர்வக்ஞன் போல, ஜம்பம் துலங்க, கோட்டும் சூட்டுமாய் படாடோபமாக துறை அறையின் உள்ளே நுழைந்தார். அவர் முகத்தில், ‘நான் மெத்தப் படித்தவன், எனக்கு நிகர் எவரும் உண்டோ?’ என்று பறை சாற்றும், பவித்ர அகங்காரம் நிரந்தரமாகப் படிந்திருக்கும். அவரைப் பார்க்கும் போதெல்லாம் தனக்குள் சிரித்துக் கொள்வாள் மயூரி.
தனக்கான, பெரிய மேஜையின் முன்னால் போடப் பட்டிருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்தார் துறைத் தலைவர் மார்த்தாண்டம்.
உண்ட களைப்பு இருக்குமல்லவா! சுழல் நாற்காலியின் பக்கவாட்டு லிவரை இயக்கி, முதுகால் முட்டி, சாய்மானப் பகுதியை சற்றேப் பின்னால் சாய்த்தார். எதிரில் கிடந்த ஸ்டூலில் கால்களைத் தூக்கிப் போட்டுக் கொண்டு, கண்களை சற்றே மூடி, குட்டித் தூக்கம் போட்டார்.
ஏனோ, அந்த பி எச் டி ஐ சங்கமேஸ்வரனோடு ஒப்பிடத் தோன்றியது மயூரிக்கு.
சிந்திப்பவர்களுக்கும், சிந்திப்பதாகக் காட்டிக் கொள்பவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெள்ளத் தெளிவாக இப்போது உணர முடிந்தது மயூரியால்.
இப்படி எதையெதையோ நினைத்தபடி, பரபரப்பாகச் சென்று, சங்கமேஸ்வரனின் வரவை எதிர் நோக்கியும், அவனை எப்படியெல்லாம் கலாய்க்க வேண்டும் என்றெல்லாம் எண்ணியபடி வீட்டின் வாயிற் கதவை விறியத் திறந்தாள் மயூரி.
வெளியே.. பேரதிர்ச்சிக் காத்திருந்தது.
காரணம். காலிங் பெல் அடித்துவிட்டுக் காத்திருந்தவர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உயர் அதிகாரி டாக்டர் நவீனன்.
“சார்..! வாங்க…! வெல்கம்…! சாரி ஃபார் த டிலே..!” – சமாளித்தாள்.
“நோ ப்ராப்ளம். உங்க வகுப்பு மாணவி, நவிஷ்னி இஷ்யூ சம்பந்தமா வந்தேன். அவளுக்கு கவுன்சிலிங் ஏற்பாடு பண்ணியிருக்கேன்.”
“ஓ! வெரி நைஸ்..”
“இனிஷியல் ஸ்டேஜ்தான். முழுமையான ‘ரிலாப்ஸ்’ க்கு வாய்ப்பிருக்கு ங்கறாரு.” சைக்காலஜிஸ்ட் வரதராஜன்.
“ஓ…! கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்…” – என்று தன் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினாள் மயூரி.
மேலும், “ரொம்ப ரிஸ்க் எடுத்துச் செஞ்சிருக்கீங்க சார் நீங்க. உங்களைப் போல ‘சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிடி’ எல்லாருக்கும் இருந்தா …” – என்று சொல்லிக் கொண்டே போனவளை மேலே பேச விடவில்லை நவீனன்.
மேடம், உங்களுக்கு நவிஷ்னி கேஸ்ல என்னவெல்லாம் நடந்திருக்குன்னு தெரிய வேண்டியது அவசியம்னு நான் நினைச்சேன், அதனாலத்தான் அதை உங்க கிட்டேச் சொல்ல வந்தேன். ஹிப்னாடிக் முறைல நவிஷ்னியை ஆழ்நிலைக்குக் கொண்டுபோயி, அவகிட்டேயிருந்து விஷயத்தை வாங்கறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிருச்சு.
“ரீசன் என்னவாம் சார்…?”
“யு ஜி படிக்கும்போது அசோக்னு ஒரு சீனியர் ஸ்டூடண்ட்டோட பழக்கமாம். அவன் ரொம்ப சோஷியல் டைப் போல, ரொம்ப பொசசிவான நவிஷ்னிக்கு அசோக் மேலே சந்தேகம் வந்திருக்கு.
“அடடே, அப்பறம்…?”
“அப்பறமென்ன, வழக்கமா இந்தமாதிரி மனநிலைல பெரும்பாலானவங்களுக்கு வர்ற Delutional disorderன்னு சொல்ற அதீத சந்தேக நோய் நவிஷ்னிக்கும் வந்துருச்சு.”
“அச்சச்சோ…!”
“பேரண்ட்ஸ், அவளோட பிகேவியர் எல்லாத்தையும் அலட்சியப் படுத்திட்டாங்க. மனநல வைத்தியர் கிட்டேயோ, ஆலோசகர் கிட்டேயோ போகத் தவறிட்டாங்க ;
டிப்ரஷன், அளவுக்கு அதிகமாகி பேலன்ஸ் தவறியிருக்கா ;
அதற்குப் பிறகுதான் ராமுகிட்டே இருந்த திறமைல இம்ப்ரஸ் ஆகி அல்லும் பகனும் அவன் நினைவோடயே .. ; அதெல்லாம்தான் உங்களுக்கும் தெரியுமே…” ;
கடைசியா “ இவளோட மனநோய்க்குக் மூலக் காரணமான ராமுவை வெச்சித்தான் இவளை இயல்பு நிலைக்குக் கொண்டு வரணும்னு முடிவு பண்ணினோம் நானும் வரதராஜனும். இந்த கவுன்சிலிங்குக் ப்ராஸஸ் வெற்றிகரமா முடிய உங்க பூரண ஒத்துழைப்பை கேட்டுத்தான் இப்போ நான் இங்கே வந்தேன். கோவாப்ரேட் பண்ணுவீங்கன்னு நம்புறேன்…” என்று முடித்தார் நவீனன்.
“சார் நான் இந்த வருஷம்தானே காலேஜ்ல ஜாயின் பண்ணியிருக்கேன். ஓல்ட் ஸ்டூடண்ட் ராமுவை எனக்குத் தெரியாதே சார்… ஹெல்ப்-லெஸ்ஸா இருக்கேனே..!” என்றாள் மயூரி.
“அந்தச் சிரமமெல்லாம் உங்களுக்கு வைக்கலை. அந்த ராமுவோட ‘வேர்-எபவுட்ஸ்’ எல்லாம் சேகரிச்சிட்டேன். போன வருஷம் ராமுவோட டிசி, மார்க் ஷீட் இதுங்களோட, டிகிரி சீரியல் நம்பர் வெச்சி யுஜிசி மூலமா அவன் எந்தக் காலேஜ்ல எம் ஏ சேர்ந்து படிச்சான்னு ட்ரேஸ் அவுட் பண்ணிட்டோம்.”
“ஓ .. ஸ்மார்ட்டா யோசிக்கறீங்க சார்… !”
“நேர்ல போயி கப்னு ஆளைப் பிடிச்சி விசாரிச்சி பைசல் பண்ணிடணும்னு தோணுது.”
“அதுக்கு நான் எந்த வகைல உதவ முடியும் சார்..?”
“நவிஷ்னியோட ‘எம் ஏ க்ளாஸ் இன்சார்ஜ்’ – ங்கற முறைல நீங்க ஸ்பாட்டுக்கு வந்தா ரொம்ப ஹெல்ப்பா இருக்கும்.”
அத்தியாயம் – 8
மரியாதை நிமித்தம், நவீனனை எச் ஓ டி யிடம் அறிமுகப் படுத்தினாள் மயூரி.
“ஓ…! அப்படியா…! ஷாக்கிங் நியூஸ்…!” – என்று பதற்றமாக நடித்தார். எச் ஓ டி.
“மயூரி மேடம், சார்க்கு கோ – ஆபரேட் பண்ணுங்க…!” என்று துறைத் தலைவராக மயூரியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அதாவது அவரின் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு ஏதோ அவசர வேலை இருப்பவர்போல அந்த இடத்தை விட்டு அவசரமாய்ச் சென்றுவிட்டார் எச் ஓ டி.
மேஜைக்கு இரு புறமும் எதிரெதிராக அமர்ந்தார்கள் நவீனனும், மயூரியும்.
நீண்ட நேரம் சங்குவைப் பற்றியும், அவர் எழுத்துக்களின் வீச்சுக்களைப் பற்றியும் சிலாகித்துக் பேசி சந்தோஷித்தார்கள் இருவரும்.
முத்தாய்ப்பாக, “சங்கு ஒரு எழுத்துச் சித்தர் என்றான் நவீனன். இவரெல்லாம் வெளி நாட்டில் இருந்திருந்தால் அவரின் மதிப்பும் மரியாதையுமே தனி..” என்று சிலாகித்தான்.
அதற்குப்பின், போதை மருந்து கம்ப்ளைண்ட் பற்றி பேச்சு தொடங்கினான் நவீனன்.
“ரொம்ப இர்ரெகுலர் சார் அவ..” – என்று சொன்னாள் மயூரி.
டிபார்ட்மெண்ட் அறையில் அமர்ந்து இந்த விஷயங்களைப் பேசுவதை விட, கேண்டீன், லைப்ரரி இப்படி ஏதாவது ஓரிடத்தில் அமர்ந்து பேசுவது சிறப்பாக இருக்கும்..’ எனத் தோன்றியது மயூரிக்கு.
“டீ இங்கே வரவழைக்கவா, கேண்டீன் போலாமா சார்…!” – இயல்பாகக் கேட்டாள் மயூரி.
நவீனனின் புன்னகை, “தாராளமாக் கேண்டீனுக்குப் போலாமே?” – என்று அறிவித்தது.
கல்லூரிக் கேண்டீனில் சென்று அமர்ந்தார்கள் இருவரும்.
“இந்த டீ குடிக்கறது கூட அடிக்ஷன்’ தான். என்றுத் தொடங்கித் தொடர்ந்தான் நவீனன்.
டீ, காபி சிகரட்னு பழக்கமாகிப் போன இதுங்களை டெக்னிகலா, Stimulants (ஊக்கிகள், தூண்டிகள்) னு சொல்றோம்;
‘மூளைக்கும், உடல் உறுப்புகளுக்கம் இடையே தூண்டுகோலாய்ச் செயல்படுற இதுங்களெல்லாம் ‘லெஸ் ஹாம்’ ; ‘ஹாம் லெஸ்’ இல்லை என்று வார்த்தை விளையாட்டை விளையாடிவிட்டு புன்முறுவலித்தான்.
மயூரியும் அதை ரசித்து முறுவலித்தாள்.
“ஒரு காப்பியோ, டீயோ உறிஞ்சினா தேவலாம் போல இருக்கு;
ராத்திரி பூரா படிக்கறவனுக்கு அப்பப்போ டீ போட்டுக் கொடுப்பேன் ;
ஒரு தம்’மடிச்சிட்டு வரேன் இரு மச்சி ;
இப்படியெல்லாம் பேசறது சமுதாயத்துல ரெகுலர் ஆயிருச்சு.
சினிமா, சீரியல் எல்லாத்துலயும், ரொம்ப ‘ஃப்ரீக்வண்ட்’டா இப்படி வசனம் பேசறதுக் கூட தவிர்க்க முடியாமப் போயிடுச்சு…”
“நீங்க சொல்றது சரிதான். இதெல்லாம் நம்மோட வாழ்கையோட ஒன்றித்தான் போயிடுச்சு.” – என்று ஒத்துப் பாடினாள் மயூரி.
காபி, டீ, பெப்ஸி, சிகரெட்னு யூஸ் பண்றதுல, காஃபின், நிக்கோடின், ஆம்ஃபிதமின், கொக்கைன் இப்படி, ஏதோ ஒண்ணு மூளை நரம்புகளைத் தூண்டி விடுது. ஊக்கம் தர்ற இதுபோல போதைகளை ஊக்கிகள் அல்லது தூண்டிகள் னு சொல்லி ஏத்துக்க ஆரம்பிச்சிட்டோம்;
“எக்ஸாட்லி…!” – என்றாள் மயூரி.
“இப்போப் பாருங்க, ‘ட்ரக் அடிக்ட்’டை எப்படிச் சமாளிக்கணும்னு ஐடியா செய்ய வந்திருக்கற நாம, ‘டீ’ங்கற ஒரு ‘ஸ்டிமுலண்ட்’டை செலுத்திக்க இங்கே வந்திருக்கோம், ஹ ஹ ஹ ஹ…” என்று முரண்தொடையாகப் சொல்லிச் சிரித்தான் நவீனன்.
நவீனனின் அறிவு பூர்வமான பேச்சைக் கவனத்துடனும், ஆர்வத்துடனும் கேட்டு மனதில் வாங்கிக்கொண்டு, அவ்வப்போது, எதிர்வினையும் ஆற்றிக் கொண்டிருந்தாள் மயூரி.
“டீ, காபி இதெல்லாம் ‘அப்ரூவ்டு போதை”,
அதே சமயம் கேனிபஸ், மரிஜுவானா போன்றவை தடை செய்யப்பட்ட போதை.
“என்ன கொடுமை சரவணன் சார் இது?”
என்ற பிரபல சினிமா டயலாக்கைச் சொல்லி, ‘என்னங்க ஞாயம் இது?’ என்று கேட்டபோது, சீரியஸ் மேட்டர்களையும் இப்படி, சிம்பிளாக, ஜன ரஞ்சகமாகப் பேசுகிறாரே..! என்று நவீனன் மீது பிரமிப்பே வந்தது மயூரிக்கு.
தொடர்ந்து நிறைய நிறையப் பேசினார் நவீனன்.
பேசிய ஒவ்வொன்றிலும் உண்மைப் பளிச்சிட்டது.
அறிவு பூர்வமான அவன் பேச்சு, அவள் சிந்தனைக்கு விருந்தானது.
நவீனனின் வருகையும், இருப்பும், பேச்சும் மிகவும் பிடித்துப் போயிற்று மயூரிக்கு.
நவீனனிடம் இருந்த அந்தத் தெளிவு சங்குவின் கருத்துக்களைப் படித்ததால் பட்டை தீட்டப் பட்டதாகத் தெரிந்தது அவளுக்கு.
டீயை கொண்டு வந்து வைத்து விட்டுப் போனான், சர்வர்.
நவீனன் டீ டம்ளரின் பக்கவாட்டில் விரல் நுனியால் தொட்டு விட்டுப் பேச்சை ஆரம்பித்தார்.
“டீ ரொம்பச் சூடா இருக்கு, கொஞ்ச நேரம் ஆகட்டும் அப்பறம் குடிக்கலாம்…” என்று நவீனன் சங்கேதமாய்ச் சொன்னது மிகவும் பிடித்தது மயூரிக்கு.
Depressants என்கிற பெயரில், மூளைத் திறன் குறைப்புக்கான மருந்தாக, போதைப் பொருட்களை எந்த வகையில் மருத்துவத் துறையில் உபயோகப் படுத்துகிறார்கள் என்பதை விளக்கினார்.
Hallucinogens என்கிற, பிரமைகளை தோற்றுவிக்கப் பயன் படுத்தும் போதை மருந்துகள் பற்றிச் சொன்னார்.
Cannabis (கஞ்சா), என்ற சட்டத்திற்குப் புறம்பானதாக கருதப்படுவதும், ஒரு தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிற வெறி மயக்கப் பொருள் பற்றியும் அதன் தன்மை பற்றியும் உதாரணங்களோடு விளக்கினார்.
Narcotic Analgesics என்ற வஸ்துவை வலி நிவாரணிகளாகப் பயன்படுத்தும் வகைகள் பற்றி விவரமாகச் சொன்னார்.
இப்படியாகப் பெரிய லெக்சரே கொடுத்தார் நவீனன்.
நடு நடுவே டீ டம்ளரை இரண்டு விரல்களால் தொட்டு, அதன் சூட்டைச் சோதித்தார். அவ்வப்போது ஒவ்வொரு மிடராய் தேநீரைப் பருகிக் கொண்டேப் தொடர்ந்து பேசினார் நவீனன்.
அது மட்டுமில்லை.
போதைப் பழக்கத்தால் வரும் குறுகிய கால பாதிப்புகள் என்னென்ன? நீண்டகால பாதிப்புகள் என்னென்ன?,
வித்ட்ராயல் ஸிம்டம்ஸ் எப்படியெல்லாம் தாக்கும்..? – என்று பல்வகை பாதிப்புகள் பற்றியெல்லாம் மிகத் தெளிவாகக் பட்டியலிட்டார் நவீனன்.
நிறைய விஷயங்கள் அவளுக்குப் புதிதாகவும் புதிராகவும் இருந்தது. நவீனனின் வருகையை மிகவும் சுவாரசியமாக உணர்ந்தாள் மயூரி.
‘உலகம் ரொம்பப் பெருசு மயூ. குண்டுச் சட்டிக்குள்ள குதிரை ஓட்டப்படாது,’ என்று அடிக்கடி சொல்லும் சங்குவின் நினைவும் இப்போது வந்தது மயூரிக்கு.
ஏதோ ஒரு சக்தி தன்னுள் சென்று தன்னை உயர உயர அழைத்துச் செல்வதாக உணர்ந்தாள்.
ஆறு மாதத்திற்கு முன்பு இருந்த மயூரிக்கும், இன்று இருக்கும் மயூரிக்கும் இடையே உள்ள மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் அவளுக்கேத் தெளிவாகத் தெரிந்தது
அத்தியாயம் – 9
கல்லூரியில் பணியேற்ற, முதல் நாள் அனுபவம் மயூரியின் மனதில் விரிந்தது.
விஜய தசமி நாளில் பள்ளியில் சேர்ப்பதற்கு வருவதைப் போல, விரிவுரையாளர் பணியில் சேர்க்க மயூரியை அவர் அப்பா கல்லூரிக்கு அழைத்து வந்தார்.
அப்பாவின் செல்வாக்கை மனதில் வைத்து, மயூரி, சமர்ப்பிக்க வேண்டிய, அவளது சான்றிதழ்களை கையில் வாங்கி, ஒப்புக்குக் கூடப் பார்க்கவில்லை கல்லூரி நிர்வாகம்.
“இருக்கட்டும்…! இருக்கட்டும்…! உள்ளே வைங்க…! என்று அபயஹஸ்தமும், வரதஹஸ்தமுமாக நின்றார் கல்லூரி முதல்வர்.
முதல்வரின் அறையில் இருந்த குளிர்பதனப் பெட்டியிலிருந்து அலுவலக உதவியாளர், எடுத்துக் கொடுத்த குளிர்ந்த பானத்தை தன் கையால் வாங்கி இருவருக்கும் வைத்தார். அப்போதுதான் உள்ளே வந்தார் தலைமை எழுத்தர்.
“நோ… தாங்க்ஸ் என்றாள் மயூரி…”
பாதிப் பருகிவிட்டு மீதியோடு, மேஜை மீது வைத்தார் அப்பா.
இண்டர்காமில் தொடர்பு கொண்டு டாக்டர் மார்த்தாண்டத்தை அறைக்கு வரச்சொன்னார் முதல்வர்.
புதிதாக வேலைக்குச் சேரும் நபரை, டிபார்ட்மெண்ட்டிற்கு அழைத்து வந்து, அறிமுகப்படுத்தும் நடைமுறையை இந்த முதல்வர் மாற்றியது பிடிக்கவில்லைதான் மார்த்தாண்டத்திற்கு.
வருத்தம்தான், என்றாலும், மயூரியின் தந்தைக்கு இருக்கும் அபரிமிதமான செல்வாக்கில், அந்த ‘இஷ்யூ’ புதைந்து போனது.
‘இதே மார்த்தாண்டத்தின் இடத்தில் சங்கமேஸ்வரன் இருந்திருந்தால்..? – மயூரியின் மனதில் காட்சிப் படிமங்கள் தோன்றின.
பிரின்ஸிபால் இன்டர்காமில் அழைத்து வரச்சொன்ன உடனே…, “நியூ எண்ட்ரியா ? டிபார்ட்மெண்ல என் சீட்’க்கு அனுப்புங்க என்றிருப்பார் ;
செனட் உறுப்பினர், அது இது என ப்ரின்ஸிபால் அளந்திருந்தால்? ;
“அது யாரா இருந்தாத்தான் என்ன? ; கேண்டிடேட் இங்கே ஒர்க் பண்ணப் போறவங்கதானே? ” – என்று திடமாய் மறுத்திருப்பார் என்றேத் தோன்றியது.
ஏனோ சற்று முன்தான் அறிமுகமான அந்தச் சங்குவைப் பற்றி பிரமிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.
இன்னாருடைய மகள் என்று சங்கமேஸ்வரனுக்கு மட்டும் தெரியாதா என்ன? ;
இந்தப் பெண் தன்னைப் பற்றி தந்தையிடம் போய் ஏடா கூடமாய்ச் சொன்னால், தன் வேலைக்கே உலை வைத்தாலும் வைத்துவிடுவார், என்ற பயம் இல்லாமல், மனதில் பட்டதைப் படாரென்று சொல்லிப் போன சங்கமேஸ்வரனை நினைக்க நினைக்கப் பிரமிப்பாகவே இருந்தது மயூரிக்கு.
யாருடன் ஒப்பிட்டாலும் சங்கமேஸ்வரன் மிக மிக உயரத்திலேயே இருந்தார். அது அவர் ஆற்றலால் பெற்ற உயரம்.
வேலைக்குச் சேர்ந்த முதல் நாளில், சீனியர் ப்ரொபசர் குஞ்சிதபாதம் நடந்து கொண்ட முறையை, இப்போது நினைத்தாலும் கூசியது.
பி.ஏ., முதலாம் ஆண்டு, எம்.ஏ முதலாம் ஆண்டு வகுப்புகள் மயூரிக்குத் தரப்போவதாகவும், ‘பொயட்ரி’ எடுக்க வேண்டும் என்றும் துறைத் தலைவர் சொன்னார்.
எனவே, அந்த இரண்டு வகுப்புகளுக்கான பாடத் திட்டங்களை தெரிந்து கொண்டாள்..
டென்னிஸன் எழுதிய ‘யுலிஸிஸ்’ என்கிற கவிதையை நடத்துவதற்குத் தன்னை தயார் செய்து கொண்டிந்தாள் மயூரி.
To Strive ; To Seek ; To Find… Not to Yield…’
என்ற ‘களர் நிலம்’ என்ற டென்னிசனின் கவிதையின் முடிவை உள்ளார்ந்து ஓங்கி ஒலிக்க முடியுமா தன்னால்…? – தன்னிரக்கம் தலைகாட்டியது அவளுக்கு.
Canotative meaning சொல்லத் தனக்குத் தகுதியில்லா விட்டாலும், ரெஃரன்ஸ் எடுத்து, Denotative meaning சொல்வோம் என்று முடிவு செய்து கொண்டாள்.
“ஐம் குச்சிதபாதம் ஏ.பி..” – முதுகுக்குப் பின்னால் நெருக்கமாகக் குரல் வர, கழுத்தை மட்டும் திருப்பிப் பார்த்தாள்.
“………………” – சீனியர் என்பதால் எழுந்து நின்றாள்.
“நோ… நோ.. உட்காருங்க. இப்பத்தான், அப்பாவைப் பார்த்துப் பேசிட்டு வரேன்… ஹி … ஹி..!”
“அப்படியா சார்… !” – என்றாள் இயந்திரத் தனமாக.
பெரிய மனிதர்களைக் காக்காய்ப் பிடிப்பதற்காக, அவர்கள் வீட்டுக் குழந்தைகள், வளர்ப்புப் பிராணிகள் இவற்றைக் கொஞ்சும் கேவலம் ;
அந்த வீட்டுக் குழந்தைகள் மூக்குக் கண்ணாடியைப் பற்றி இழுத்தாலோ, சட்டைப் பைக்குள் கை விட்டு பேனாவை எடுத்தாலோ, ஹி..ஹி… என்று இளித்தபடி, சகித்துக் கொள்ளும் கையாலாகாத்தனம் ;
பதவி உயர்வு வரும்போது, சிக்கலில்லாமல் அதைப் பெற்று, பணப்பலனை அதிகரித்துக் கொள்ள அவர் உதவி தேவைப்படுமே என்கிற சுயநலம் ;
டாக்டரேட் முடித்த ஒரு ப்ரொபசரிடம் இப்படிப்பட்ட ‘ச்சீப்’ அப்ரோச்’ கண்டு அருவருத்தாள்,
ப்ரொஃபசர் குஞ்சிதபாதத்தை விடக் கிட்டத்தட்ட இருபது வயது குறைந்தவள் மயூரி.
பெற்ற மகளிடம் பேசுவது போல, உரிமையாகவோ ;
‘ஜூனியர்-மோஸ்ட்’டிடம் பேசுவது போல விகுவாகவோ ;
மாணவியிடம் பேசுவது போல கண்டிப்பாகவோப் பேச வேண்டியவர் ;
இப்படிப் பல்லிளித்தபடி வழிந்து பேசுவது சகிக்கவில்லை. சாணிப் புழுவைப் போலவும், நசுங்கிய மரவட்டையைப் பார்ப்பது போலவும் அருவருப்பாக இருந்தது மயூரிக்கு.
தன் தந்தையின் தயவு வேண்டியே இப்படி நடந்து கொள்கிறார் என்பது, அவர் அணுகு முறையில் வெளிப்படையாகவேத் தெரிந்தது.
அந்த நேரத்தில்; “ஏய் குஞ்சிதபாதம், இப்படியே காலேஜ்க்கு வெளீல போ ; பொட்டிக் கடைல, ஒரு ஹேர் பேண்ட், பாக்கெட்டும், ஒரு பொட்டுப் பாக்கெட்டும் வாக்கிட்டு வா…!” – என்று சொல்லியிருந்தால் கூட வாங்கி வந்திருப்பார் அவர்.’ என்றுத் தோன்றியது, அவரது குழைந்த தோற்றத்தைப் பார்த்த மயூரிக்கு.
குஞ்சிதபாதம் தொடர்ந்து குழைந்தார் – “அப்பாக்கிட்டே, சமயம் வரும்போது என்னைப் பத்தி நீங்க சொல்லணும் ;
“………………..” – என்ன சொல்லணும்… ? என்று கேட்டது மயூரியின் சுருங்கிய பார்வை.
“அரியர் ரெண்டு மூணு மாசமா இழுத்துண்டிருக்கு; அப்பா மனசு வெச்சா சீக்கரம் முடியும் ஹி.. ஹி…” மீண்டும் இளிப்பு.
‘ச்சே…! என்ன மனிதர் இவர். ;
‘மொத மொதல்ல, கல்லூரில வேலைக்குச் சேர்ந்து, வகுப்புக்குப் போகத் தயாரா இருக்கேன் நான். ;
ஒரு சீனியரா, லட்சணமா, சிலபஸ் என்னென்ன , எப்படியெல்லாம் ஸ்டூடன்ஸ்ஸ ஹாண்ட்டில் பண்ணணும்… இப்படியெல்லாம் சொல்லி, வழ நடத்த வேண்டிய இடத்தில் உள்ளவர். ;
வாழ்த்தி வகுப்புக்கு அனுப்ப வேண்டிய அஸிஸ்டெண்ட் ப்ரொபசர்; இப்படிக் காசுக்காக, தன் சுயமரியாதையையே விட்டுக் குடுக்கறாரே..’ என்று ஆற்றாமை வந்தது மயூரிக்கு.
தன் சுயலாபத்தையும், தன் பற்றாக்குறையையும், குடும்ப சூழ்நிலையையும், கஷ்டகாலத்தையும் இன்று தான் வேலைக்குச் சேர்ந்த என்கிட்டேச் சொல்லிப் புலம்பறாரே ; என்ன மனுசன் இவர்..?;
கல்லூரியில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் யு.ஜி.சி அப்படி என்னக் குறை வைத்துவிட்டது …? ;
ஏன் இந்தப் போதாமை இவர்களுக்கு ?;
ஏன் இப்படி தரித்திர மூதேவியாக முகம் சுழிக்கிறார்கள். பஞ்சப் பாட்டுப் பாடுகிறார்கள் ?.
ஏன் எப்போதும் இப்படிக் காசு காசு என்று ஆலாய்ப் பறக்கிறார்கள் ?;
மெத்தப் படித்த, சீனியர் பேராசிரியரான இவர், ஏன் இப்படிச் சுய மரியாதையை இழந்து பணத்துக்காகப் பறக்கவேண்டும் ? ;
அரியர்தான் இருக்கட்டுமே, இன்று இல்லையேல் நாளை வந்து விடப் போகிறது. அந்தப் பொறுமைக் கூட இல்லாமல் இப்படி சுய மரியாதையை விட்டு, கரன்சிகளை எண்ண, எப்படி மனம் வருகிறது?
இப்படிப்பட்டச் சிலப் பறக்காவட்டிகளால்தான், ஒட்டுமொத்தக் கல்லூரி ஆசிரியர்களின் பெயரும் சந்திக்கு வருகிறது…! – என்று முடிவுக்கு வந்தாள் மயூரி.
அன்றாடங்காய்ச்சிகள் கூட, மானத்தோடும், சுய மரியாதையோடும், வாழும் இந்த உலகத்தில்… இது போன்ற எச் ஓ டி ஐயும், ப்ரொபசரையும், ப்ரின்சிபாலையும் பார்க்கப் பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது மயூரிக்கு.
– தொடரும்…
– என் உயிரே… மயூரி…! ( நாவல்), 19-03-2025, தேவியின் கண்மணி.
![]() |
இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
சங்கர்லால் வந்துவிட்டார்!
தமிழ்வாணன்
June 14, 2026
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
June 14, 2026
உறுப்புகளைத் தேடி…
காரை ஆடலரசன்
June 14, 2026
