என் இனிய ஜெசினா…
“எத்தனை நாளுக்குத்தான் இப்படி உனக்குள்ளேயே வச்சுக்கிட்டு கஷ்டபடுவே? பேசாம நேரா போய் சொல்லிடுடா”
அக்கறையுடன் சொன்னான் என் அறைத்தோழன்.
எனக்கு மட்டும் என்ன சொல்லக்கூடாது என்கிற எண்ணமா?
பயம்தான். பயம் மட்டும்தான் காரணம்.
காலேஜே திரும்பி பார்க்குற அழகி அவள். சென்னையில் மிகப்பெரிய
பணக்கார குடும்பத்தில் பிறந்தவள்.
அவளிடம் போய் எப்படி சொல்வது?
யாராவது பார்த்துவிட்டால் அவ்வளவுதான். காலேஜ் முழுசும் தெரிஞ்சு
அசிங்கமாயிடுமே…
“எனக்கு பயமா இருக்குடா” என்றேன் தோழனிடம்.
“போடா உனக்கெல்லாம் எதுக்குடா மீசை? ஒரு பொண்ணுகிட்ட பேசறதுக்கு இவ்ளோ பயமா?”
“சரி, இன்னைக்கு என்ன ஆனாலும் அவகிட்ட பேசத்தான் போறேன்,வந்து பாரு” சொல்லிவிட்டு வேகமாக கல்லூரி நோக்கி நடந்தேன்.
வேப்பமரத்தடியில் தோழிகளுடன் அமர்ந்திருந்தாள் ஜெசினா.
“ஜெசினா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…” உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது.
“சொல்லுங்க”
“நீ நினைக்கிற மாதிரி பிரதீப் நல்லவனில்லை,அவனுக்கு நிறைய பொண்ணுங்களோட பழக்கம் இருக்கு,படிப்புல மட்டும் உன் கவனத்த செலுத்து. பிரதீப் மாதிரி பொறுக்கிய நம்பி ஏமாந்துபோகாத”
“அத சொல்றதுக்கு நீங்க யாரு?” வெடித்தாள் ஜெசினா.
“உன்னை மாதிரியே ஒரு அழகான தங்கச்சிக்கு அண்ணன்!” வாயடைத்து நின்றாள் ஜெசினா.விறுவிறுவென்று நடந்துகொண்டிருந்தேன் நான்.
– Tuesday, January 29, 2008
![]() |
நிலாரசிகன் ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் ஆனந்த விகடன், வார்த்தை, உயிர்மை, கல்கி, புன்னகை, அகநாழிகை, நவீன விருட்சம், உயிர் எழுத்து, கல்குதிரை, கொம்பு போன்ற அச்சிதழ்களிலும், கீற்று, கூடல்திணை, அதிகாலை, உயிரோசை, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன.…மேலும் படிக்க... |