உறவுகள் ஆயிரம்
கதையாசிரியர்: ஐ.சாந்தன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 6, 2026
பார்வையிட்டோர்: 82
(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருமணியாகிறது. ஒன்றரைக்கு ரயில் மாஸ்கோவை விட்டுப் புறப்படப் போவதையும், அடுத்த வாரம் முழுவதும் அங்கே இருக்கப் போவதில்லை என்பதையும் ஸெர்கே இவானவீச்சுக்குச் சொல்லிவிட வேண்டும்.
ஸெர்கே, நேரிலோ, தொலைபேசி மூலமோ தினசரி தொடர்பு · கொள்கிறவர்தாம். ஆனால் இந்த லெனின்கிராத் பயணத்திற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட நாளிலிருந்து அவர் மாஸ்கோவில் இல்லை. நேற்று, அலுவலகத்திற்கு ஃபோன் செய்தபோது, இன்று இந்த நேரம் வந்துவிடுவார் என்று சொன்னார்கள்.
ரயிலில் இடம்பிடிக்க வேண்டிய கவலையெல்லாமில்லை இவர்களின் குழுவுக்கென்றே இரண்டு பெட்டிகள், புறப்படுவதற் கிடையில் ஃபோன் செய்து விடலாம்… போய்விட்டு வருவோம்…
தொலைபேசிகள், ஸ்ரேஷனுக்கு வெளியே மிக அருகில் தானிருப்பதாக இவன் விசாரித்த – ஒருவர் சொன்னார். என்றாலும், பாரமான இந்த சூட்கேஸைக் காவிக் கொண்டு திரிவது கஷ்டம். யாரிடம் விட்டு விட்டுப் போகலாம்..? கூட வருவதாயிருக்கிற எல்லோரும் எங்கே? ஒருவரும் கண்ணிற்படுவதாயில்லை… நான் தான் வேளைக்கே வந்து விட்டேனோ?
எந்த மேடை அருகிலும் ரயில்களில்லை. சனங்கள் மட்டும் தெல்லுத்தெல்லாக…
ஸ்ரேஷன் அசாதாரணமாக அமைதிக் கோலம் காட்டிக் கொண்டிருக்கிறது. வெளியே ஏரிக்கரை வெயிலைப் போல.
அந்தா, அந்திரயாஸ்!
ஆனால் அவர் அந்த யேமன் பெண்ணுக்காக ஏதோ ஒன்றைச் சுமந்து கொண்டு போவது போல் – இந்தப் பக்கந்தான் வருகிறார்கள். முன்னால் வந்தான்.
அந்திரயாஸ், மிருக வைத்தியர். சைப்பிரஸிலிருந்து வந்திருக்கிறார். பெட்டியை இப்போது இரண்டு பேருமாகப் பிடித்துக் கொள்கிறார்கள்.
ரமணனை அண்மித்ததும், ஆளுக்கொரு ‘ஹௌ ஆர் யூ…’புன் சிரிப்புடன் கடந்து போனார்கள். என்ன அவசரமோ…
பரவாயில்லை, அவர்கள் போகிற திசையிலிருந்து ராஜு வருகிறான். இவனிடம் கேட்கலாம். “காக்தியலா?” ராஜு அருகில் நெருங்கிக் கையை நீட்டினான்.
“… ஏன் இதிலேயே நிற்கிறாய்?” ருஷ்யனில்தான் எப்போதுமே இவன் பேசுகிறான்.
“நான் ஒருவருக்கு அவசரமாக டெலிபோன் பண்ண வேண்டும்…” சொல்லிவிட்டுக் கேட்டான்.
“…இந்தப் பெட்டியை ஒரு நிமிஷம் பார்த்துக் கொள்வாயா?”
“நோ… ஸாரி… நான் அவசரமாகப் போகிறேன்…”
ராஜி போய்க் கொண்டே சொன்னான்.
”… நீ அருணியிடம் அல்லது துளசியிடம் கேளேன்… பிறகு சந்திக்கிறேன்…”
தனக்கு நேரமில்லை என்றதோடு இவன் விட்டிருக்கலாம். ஏன் அருணியையும் துளசியையும் சொன்னான்? அவர்கள்தாம் உனக்கு நெருங்கியவர்கள், உ ன்னைக் கவனிக்க வேண்டியவர்கள் என்றா? இங்கு வந்துங்கூட இதே அடையாளங்கள் தானா? இல்லை, தொலைவில் வரவர அவை இன்னும் வலுப்பெறுமா?
2
லோறன்ஸுக்கு அசல் நீக்ரோ அங்க லட்சணம் – சிறு சுருளான முடி, தடித்த உதடுகள், பெரிய மூக்கு, நல்ல உயரம், ஆனால், நிறம் மட்டும் ஐரோப்பியன் மாதிரி!
முதல் தரம் முழும்பாதி பல்கலைக்கழகத்தின் முன் மண்டபத்தில் சந்தித்து அறிமுகஞ் செய்து கொண்டபோது, லோறன்ஸ், “இஸ் கூபி… என்றார்.
ரமணனுக்குப் புரியவில்லை.
இஸ் இந்திய், இஸ் சிரிலங்கு, இஸ் அஃப்ரிக்கிய்…
எல்லாம் சரி, இஸ் கூபி…
எங்கிருந்து? சில கணங்கள் பிடித்தன.
கியூபா!
அவனின் அந்தத் தாமதம் வியப்பை அளித்ததென்பதை அவரின் பழுப்பு விழிகள் ஒளிக்காமல் காட்டின.
லோறன்ஸ், ஹவானாவுக்கருகில் ஒரு பண்ணையின் விவசாய நிபுணர். அவரோடு வந்தவர்கள் வெறும் நாலுபேர். என்றாலும், அவர்களில், இவரையும் மிஸ். மாரியானாவையுந்தான் இதுவரை அறிமுகப்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது. மற்றவர்களைக் காண நேர்கிற போதுகள், வழமையான முகமன்களுடன் மட்டுமே முற்றுப் பெற நேர்ந்து விடுகின்றன…
மிஸ். மாரியானா மட்டும் அன்னம்மா ரிச்சரை நினைவுபடுத்துகிற மாதிரி இல்லாதிருந்தால், ரமணன் வலியப் போய்ப் பேசியிருப்பானா? எவ்வளவு ஒற்றுமை அந்த முகங்களில்! ஆப்ரிக்கச் சாயல்களும் ஐரோப்பிய சாயல்களும் கலக்கிறபோது, தெற்காசிய சாடை அநேகமாக வந்துவிடும் போலிருக்கிறது!
மகிழடிப் பள்ளியில் ரமணனுக்கு அணில், ஆடு, தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை பாடல் சொல்லித் தந்தவ அன்னம்மா ரீச்சர், கோபமே வராத குழந்தை மாதிரி, உருண்டை முகம், உருண்டைக் கண்கள், பொது நிறம், தன்னிடம் படித்த பிள்ளைகளிலெல்லாம் என்னவென்றில்லாத அன்பையும் பாசத்தையும் பொழிந்த வாஞ்சை… ரீச்சரின் அந்தக்கால தோற்றமே தான் இந்த மாரியானா!
மாரியானா இந்தப் பெட்டியில் வருவதாகத் தெரியவில்லை. ரமணன், முன் இருக்கைகளுக்கு மேலால் தெரிந்த தலைகளை நோட்டம் விட்டான். பின் வரிசைளையுந் திரும்பிப் பார்த்தான். இல்லை. அடுத்த பெட்டியிலாய்த்தான் இருக்கும்…
இவர்களின் பாட்டன்மாரோ, பாட்டன்மாரின் பாட்டன்மாரோ கியூபாவுக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பார்கள்…
‘கரும்புத் தோட்டத்திலே அவர் கால்களும் கைகளும்…’ அவர்களின் வேர்கள் எங்கெங்கிருந்திருக்கும்? அலெக்ஸ் ஹேலி போல ஆயிரம் ஹேலிகளானாலும் வேர்கள் எல்லாவற்றையும் தேடிப் பிடித்துவிட முடியுமா?
வேர்…
வேர்களென்பதே சுவையான விஷயந்தான்? அடிவேர், ஆணிவேர், பக்கவேர்… வேரின் வேர் எது? நியாண்டர்தால்? ஓடிக் கொண்டிக்கும் ஜன்னலூடாக அந்த வெளிறிய வானத்தில் தெரிகிற சூரியன்…?
எங்கள் நாட்டைப்போல கண்களைப் கூசப்பண்ணுவதாக இல்லை. இந்தச் சூரியன்…
தோற்பையைத் திறந்து, உள்ளிருந்த புத்தகத்தை எடுத்தான். ‘பாரதியார் கவிதைகள்’ அழகான பிளாஸ்ரிக் உறையுடன்.
லோறன்ஸ் தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பது அப்போதுதான் தெரிந்தது.
ரமணனுக்கு வெட்கமாக இருந்தது. பக்கத்திலிருக்கிற மனிதரைச் சட்டை பண்ணாமல், தன்பாட்டில் எதையோ யோசித்துக்கொண்டு… திரும்பி அவரைப் பார்த்து முறுவலித்தான்.
முதலில் அவர் ஏதோ டயரிபோல ஒன்றைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்ததில் அவரைக் குழப்ப வேண்டாமென் தானிருந்தது நினைவு வரவும் ஆறுதல் கொண்டான்.
லோறன்ஸ் மெல்லச் சிரித்தார். “வாசிக்கப் போகிறீர்களா?
லோறன்ஸில் ரமணனுக்கு விசேஷசமாகப் பிடித்தது இது – அவருக்கு ஆங்கிலமுங்கூடப் பரவாயில்லை. இவனுக்கு இடைக்கிடை ருஷ்ய மொழி முரண்டு பண்ணுகிற சிக்கலான வேளைகளில், வலு வசதியாக ஆங்கிலத்திற்குத் தாவிவிட முடிகிறது?
“உங்கள் தாய் மொழியா?”
லோறன்ஸ் பாரதியார் கவிதைகளைக் காட்டிக் கேட்டார்.
“யெஸ்…” நீட்டினான்.
லெனின்கிராத்தில் நண்பர் ஃபியோதரவ்வைச் சந்திக்கும். போது கொடுக்கவென்று கொண்டு வந்த பிரதி ஃபியோதரவ்வை இதுவரை சந்தித்ததில்லை. கடித மூலம் மட்டுமே தொடர்பென்பதால் பேனா நண்பர் என்று சொல்லிவிட முடியுமா? தமிழிலும் பாரதியிலும் எப்படி அவருக்கு அந்த ஆர்வம் வந்தது? நேரில் சந்திக்கும்போது கேட்க வேண்டும்…
ஒவ்வொரு ஒற்றையாகப் புரட்டிக் கொண்டிருக்கிறார். லோறன்ஸ், தடித்த, சிவந்த விரல்கள், பெரிய பெரிய நகங்கள் – சோகி போல.
“இதை வாசித்துக் காட்டுங்கள்…?” தலைப்பைக் காட்டினார்.
படித்தான்.
“ஓ! இதுதான் தமில்ஸ்கிய்…” – அந்த இரு சொற்களுடனேயே தமிழுடன் பரிச்சயங் கொண்டுவிட்ட குதூகலம்.
“நான் சொல்லிப் பார்க்கவா?”
“சொல்லுங்கள்?”
லோறன்ஸின் உதடுகள் வலுகஷ்டப்பட்டுப் பின், இயலாமையின் வெளிப்பாடான சிரிப்பில் நிலைத்தன.
தன் கையிலிருந்து டயறியை விரித்து, ஒரு வெளிர்நீலக் கடுதாசியையும், சட்டைப் பைக்குள்ளிருந்து பேனாவையும் எடுத்து நீட்டினார்.
”என் பெயரைத் தமிழில் எழுதுங்கள்..?”
எழுதிக் கொடுத்தான். பத்திரமாக மடித்து, மீண்டும் வைத்துக் கொண்டார்.
3
ருஷ்ய மொழியைவிட்டு, ஆங்கிலத்தில் பேசிவிடுகிற மாதிரி இடைக்கிடை நேர்ந்து விடுகிறது. பம்பாயிலிருந்து வந்திருக்கிற எம்.கே. முருங்கர் கண்களில்இது பட்டுவிட்டால் இலேசில் விட மாட்டார்.
“தவாரிஷ்! ஆங்கிலம் இங்கே எதற்கு?’
நியாயந்தான்.
இந்த மொழியை இந்த மண்ணில், இந்தக் காற்றில் இப்படியே இதன் உயிரோடும் மூச்சோடும் பரிச்சயம் பண்ணி, இதில் சுவறிக் கொள்வதற்காகத்தான் இந்தப் பயிற்சி நெறி, அதற்கென்று வந்து விட்டு, ஆங்கிலத்தில் பேசினால், அது முட்டாள்தனம் மட்டுமில்லை.
துளசியும் அருணி அக்காவும் மட்டும் ரமணனைப் பொறுத்தளவில் விதிவிலக்கு. துளசி, தமிழ்நாட்டுப் பெண். அவளுடன் தமிழ்தான். அக்கா, தென்னிலங்கை, அவளுடன் சிங்களம் அவ்வப்போது பகிடியாகப் பேசுகின்ற வேலைகளையோ, மற்றவர்களுடன் சேர்ந்து கதைக்க நேர்கிற சந்தர்ப்பங்களையோ தவிர்த்து.ப
இல்லை. துளசியைவிட இன்னொருவரோடும் அவனால் தமிழிற் பேச முடிகிறது…
பல்கலைக் கழக மண்டபத்தில், முதல்நாள் சந்தித்தபோது, நெடுங்காலம் பழகியது போல் தோன்றிய முகமும், அதிற் பளிச்சிட்ட புன்னகையும் பொட்டுமாய், கீதாதான் எல்லோரிலும் நெருக்க மானவளாக அவனுக்குத் தெரிந்தாள். தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் பெண் இவளாய்த்தானிருக்க வேண்டுமென்று பட்டது.
“இல்லை நான் கேரளத்திலிருந்து…” ஆங்கிலத்தில் பதில் வந்தது.
“நிங்கள்க்கு தமிழ் ஸம்ஸாரிக்கான் அறியுமோ?…”
“நிங்கள்க்கு மலையாளம் ஸம்ஸாரிக்கான் அறியுமோ?”
-வியப்பும் மகிழ்வும் வெளிப்படையாகவே தெரிந்தன. ”குறச்சொக்கே அறியாம்…” சட்டென்று ஆங்கிலத்திற்குத் தாவினான்.
“அவ்வளவுதான்! இதற்கு மேல் நான் பேசினால் உங்களுக்குக் கோபம் வரும்…”
அவள் சிரித்தாள்.
அவர்களுக்குப் பறைவதற்கு எப்போதுமே நிறைய விஷயங்களிருந்தன என்பது பிறகு தெரிய வந்தது.
ரயில் நிலையத்தில் யாரிடம் பெட்டியை ஒப்படைத்துவிட்டுப் ஃபோன் பண்ணப் போகலாமென்று தவித்துக் கொண்டிருந்தபோது, கீதாவே அவனைத் தேடி வந்தாள்.
4
லோறன்ஸ், இருக்கையில் சாய்ந்தபடியே தூங்கிவிட்டார். ரயில், ஆட்டங்கள் குலுக்கல்களின்றி ஓடிக் கொண்டிருக்கிறது. பின்னணியாய் அந்த இரைச்சல்.
அநேகமாக எல்லோருமே இப்போது அமைதியாய் இருக்கிறார்கள். பழைய பாணி மரவீடுகளும், அவற்றின் சித்திர வேலைப்பாடுகளும், தொலைக்காட்சி அன்ரனாக்களும் உருளைக் கிழங்குத் தோட்டங்களும், லின்டன், பிர்ச் மரங்களுமாய் மாறி மாறி, சதுரம் சதுரமாகத் தாண்டிக் கொண்டிருக்கின்றன.
தூரத்தில் தெரிகிற தெருக்களும், அவற்றில் இருந்திருந்து விட்டுப் போகிற வாகனங்களும், ஒரு கிராமத்திற்குரிய சூழலே இந்த இடத்தில்.
இந்தப் பயணம், ஏறத்தாழ கொழும்பு-யாழ்ப்பாணம் பயணத்தையே நினைவுபடுத்துவதாயிருந்தது. இதுவும் தெற்கு- வடக்காகத்தான், வடதுருவத்திற்கண்மையிலுள்ள பெரிய நகரம் லெனின்கிராத் என்று சொல்கிறார்கள். போகுந்திசை ஒத்திருந்தாலும், பயணத்தில் எவ்வளவு வேறுபாடு! சத்தம், சந்தடி, புழுதி, புகை, நெரிச்சல், வெக்கை – எதுவுமில்லாத பயணம்.
லோறன்ஸும் ரமணனுமிருக்கிற வரிசையில் அடுத்த பக்கத்தில் அருணி அக்காவும், ஸஷ்வத்தியும் இருக்கிறார்கள். ஸஷ்வத்தி, மேற்கு வங்கம், அப்படியே, ஒரு யாழ்ப்பாணத்துப் பெண்மணிதான் தோற்றம், உடை எல்லாம்.
முன்வரிசையில் – இவர்களுக்குப் பிடரியைக் காட்டியபடி மொஹம்மட் டுனிஷியாவிலிருந்து வந்திருக்கிற மூன்றுபேரில் ஒருவன். பக்கத்தில் துளசி, அடுத்த வரிசை தொடக்கத்தில் அஞ்ஜனா, அருகில் கீதா, எதையோ படித்துக் கொண்டிருக்கிறாள் போலிருக்கிறது.
பின்னால் திரும்பிப் பார்க்கிறபோது, வாஷ்கு சிரிக்கிறான். லுவாண்டாக்காரன், ஆப்பிரிக்கனாயிருந்தாலும், நிறமென்னவோ, எங்கள் சராசரி நிறந்தான். நல்ல உயரம் – கொக்கைத்தடி மாதிரி. வயது, எப்படியும் இருபத்தைந்துக்குள் தானிருக்கும். இவனைப் பார்க்கும்போது, ஒன்றுவிட்ட அக்காவின் மகன் – இப்போது ஜெர்மனியில் தஞ்சம் புகுந்திருக்கிற பரசு மாதிரியே இருக்கிறது.
ஏனிப்படி யாரைப் பார்த்தாலும், ஊரிலிருக்கிறவர்களைப் போலவோ, உறவுக்காரர்களைப் போலவோ படுகிறது? உண்மை யிலேயே அப்படிதானா அல்லது இவ்வளவு தூரம் வந்ததிலேற்பட்ட மனநெகிழ்வினாலா?
இல்லை, மனிதரெல்லாம் ஒரே சாயல்தான், ஒரே மாதிரிதான்… இந்த உலகந்தான் எவ்வளவு சிறியது!
முன்வீட்டு ரவியை நினைவு படுத்துகிற ஈராக் பையன் எங்கே? அங்கிருந்தும் ஐந்தாறு பேர் வந்திருக்கிறார்கள்…
வாஷ்குவுக்கு அடுத்தாற் போல, இந்திசார், யேமன்காரி, இந்தப் பெண்ணைக்கூடப் பேசாமல் கொண்டு போய் இலங்கையில் விட்டுவிடலாம். வித்தியாசமே தெரியாது. அச்சிம்பொங், கானாவின் அந்நிய மொழிகள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர். ருஷ்யனில் மட்டுமின்றி, பிரெஞ்சிலும் ஆர்வம் இருக்கிறது. சாதாரண உடற்கட்டு ஆகிய அளவு சரியான கறுப்பு. இங்கு வந்து லுமும்பா சூழலிலும், மிக்ளுவறா மக்ளயாவிலும் இத்தனை வகை ஆப்பிரிக்கர்களைப் பார்த்த போதுதான், கறுப்பில் கூட இத்தனை விதங்கள் இருக்கும் என்பது தெரிந்தது – லேசாக வறுத்த கோப்பிக் கொட்டைப் பழுப்பிலிருந்து, சொக்ளேற் வர்ணமுடாக, நாவல் பழநிறம் வரை!
அச்சிம்பொங்கை அடுத்து, அந்த ரஸாக் – ஈராக்தான். நல்ல சிவலை அவர்களெல்லோரையும் போலவே, இவனுக்கும் புருவங்களும் மீசையும் கறுப்பாய் அடர்த்தியாய்… கண்கள்கூட, நல்ல கறுப்பு. துளசிக்கு இவனைக் கண்டால் ஏனோ அலர்ஜியாயிருக்கிறது. ஏனென்று தெரியவில்லை. ஆனால் ஏதோ இருக்க வேண்டும்.
ரயில் பெட்டிக்குள் உட்கார்ந்திருக்கிற படத்தைக்கூட, சற்றுமுன் ரஸாக்தான் எடுத்தான். வண்டி புறப்பட்ட கையோடு, அது எப்படி வருமோ….
இந்த ரஸாக்கும் அவனுடைய கமராவுந்தான். ரமணனை கீதாவோடு தமிழிலே பேசும்படி செய்கிற பெருமைக்குரியவர்கள்.
5
ரமணனும் ஒரு கமெரா கொண்டு வந்திருந்தான். அது அவனுடையதல்ல. கொழும்பில் மிஸ்டர் நடராஜா தந்துவிட்டது. அவனிடமிருந்தது ஒரு சாதாரண பெட்டிக் கமெரா. அந்தக் காலத்தில் ஐயா வாங்கியது. ரமணனுக்கு போட்டோ எடுக்கிற ஆர்வம் அவ்வளவு கிடையாது. ஐயாவுக்கு இருந்தது. அவருடைய கமெராவைப் பத்திரபப்டுத்தி வைக்கிற புத்தி மட்டும், இவனுக்கு.
ஆனால், அது இந்த ருஷ்யப் பயணத்திற்குப் போதுமா? போகும்போது கொழும்பில் ஒன்று வாங்கிக் கொள்ளலா மென்றிருந்தான். விஷயத்தை அறிந்தபோது, நடராஜா தன்னுடைய தையே தூக்கிக் கொடுத்து, “கொண்டு போய் விட்டு, வரும்போது தா…” என்றார்.
அது அருமையான கமெரா. யெஷிக்கா. தன்னுடைய தம்பியார், ஜப்பானிலிருந்து கொண்டு வந்தததாகச் சொன்னார். தனியாக ஃப்ளாஷ்கன் இருந்தது. வேண்டுமானால் பொருத்திக் கொள்ளலாம்.
கீதா கொண்டு வந்திருந்ததும் இதே மேக், இதே மொடல். ஆனால், ‘ஃப்ளாஷ்’ இல்லை. “தேவையான போது கேளுங்கள்…’ என்றான், ரமணன். அவர்கள் பார்த்த பல இடங்களில் பகலிற் கூட ‘ஃப்ளாஷ்’ தேவைப்பட்டது.
வந்திருந்தவர்களிடம் அரைவாசிப் பேரிடம் கமெரா இருக்க வில்லை. அவர்களெல்லொருடனும் சேர்ந்து சேர்ந்து படம் பிடிக்கிறதே சந்தோசமாயிருந்தது. இதனாலையே பலரின் சொந்த நாட்டு முகவரிகள் அவர்கள் வசம் சேர்ந்தன.
“திரும்பிப் போனதும் மறக்காமல் எனக்குக் கொப்பி அனுப்புங்கள்… எல்லோரும் சொன்னார்கள்.
‘ஃப்ளாஷ்’ தேவையானபோது, ‘கன்னை’ இவர்கள் மாற்றுகிற விஷயம் ரஸாக் கண்களிற்பட்டிருக்கிறது.
“எனக்குத் தருவாயா?” ரமணனைக் கேட்டான்.
ரஸாக்குடைய கெமெரா வேறு மேக். ஆனால் இந்த ‘கன்’ அதிற் பொருந்தும் என்று அவன் சொன்னான்.
“சந்தோஷமாக…” உண்மையில், ரமணன் சந்தோஷமாகத்தான் கொடுக்க ஆரம்பித்தான்.
ஆனால், ரஸாக் அடிக்கடி கேட்டதில் இந்த சந்தோஷம் இல்லாமலாகிவிடப் பார்த்தது… வேறொன்றுமில்லை, ஃபிளாஷ் ‘கன்னிலிருந்து இரண்டு ‘ஸெல்’களைவிட மேலதிகமாக ஒரு சோடிதான் கைவசமிருந்தது. தானும் கீதாவும் பாவிப்பதுடன், இவனும் இந்த வேகத்தில் எடுத்துத் தள்ளுவதானால் அந்த ஸெல்கள் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்கும்? அந்த ஸைஸ் இங்கு கிடைக்கவும் கிடைக்காது…
கீதாவுடன் ஆலோசிக்க வேண்டியிருந்தது. என்ன செய்யலாம்?
கூடுமானவரை ரஸாக் கண்களிற் படாமல் பாவிப்பது, அதுபற்றி அவன் முன்னால் ஏதாவது பேச நேர்ந்தால் ருஷ்யனிலோ ஆங்கிலத்திலோ பேசாதிருப்பது.
“நான் தமிழ்ல சொல்லுறன்… நீங்கள் மலையாளத்தில் சொல்லுங்கோ. சரிதானே…? நான் சொல்லுறது விளங்குதா?”
“மனசிலாகி…” என்றாள் கீதா.
6
நடராசர், தனது சந்தோஷத்தைக் காட்டுவது போலவே கமெராவைக் கொடுத்துவிட்டார்.
கொழும்பில் பத்து வருடங்கள், வேலை பார்த்த போதும், கடைசி மூன்றாண்டுகளில் தான், சோவியத் கலாசார நிலையத்தின் மாலை வகுப்புகளில் இந்த ருஷ்ய மொழி படிக்கிற விஷயத்தில் அவன் ஈடுபட்டான். படிப்பு முடிந்த கையோடு மாற்றலாகி யாழ்ப்பாணம் வந்த சில மாதங்களில் பின்புதான் இந்தப் பயணம் பற்றிய சேதி வந்தது. சிறப்புப் பயிற்சிக்காக ஒன்றரை மாதம் அரிதான வாய்ப்புதான் ஆனால்?
அரசு ஊழியர்கள் வெளிநாட்டுக்குப் போவதற்கான விடுமுறை, அந்தந்தத் திணைக்களத்தை நிர்வகிக்கும் அமைச்சால் அங்கீகரிக்கப்பட வேண்டும். தன்னுடைய விண்ணப்பம், பயிற்சிக்கான அழைப்பு, அனுமதிக் கடிதம், அது இது என்று தேவையான எல்லாவற்றையும் ரமணன் நேரகாலத்திற்கே கொழும்பிற்கு அனுப்பிவிட்டுக் காத்திருந்தான். பதில் வருவதாய்த் தெரியவில்லை. காலம் கிட்டிக் கொண்டு வருகிறது… தந்தி, ட்ரங்க் கோல்… கிணற்றில் போட்ட கல்லாய் எல்லாம்…
கடைசியில், தலைமை அலுவலகத்திலிருந்து இவன் சார்பில் இதைக் கவனித்துக் கொண்டிருந்த தனபால் போனில் சொன்னான்.
“மச்சான், விஷயம் கொஞ்சம் சிக்கல்போல இருக்கு… நீ ஒருக்கால் வந்தாலென்ன?”
அன்று மாலை பஸ்ஸிலேயே இடங்கிடைத்து அடுத்த நாள் தனபாலைச் சந்தித்தபோது, “மினிஸ்ட்ரியிலை இழுத்தடிக்கி றாங்கள்… என்னத்துக்கொண்டு தெரியேல்லை…. வா, நாங்கள் நடராசனோடு கதைச்சுப் பாப்பம்…” கூட்டிக்கொண்டு போனான்.
அமைச்சில், ஆகக்கூடிய உயர்நிலை அதிகாரியாக இருந்த தமிழர் மிஸ்டர் நடராஜாதான். ரமணனின் விஷயம் அவருக்குத் தெரிந்திருந்தது.
“ஏன் இப்பிடிச் செய்யிறாங்கள் எண்டு தெரியேல்லை… உள்ள திறமைகளை ஊக்குவிக்கிறதுக்குப் பதிலாக, மட்டந்தட்டவெல்லோ பார்க்கிறார்கள்… “
“அதிலை என்ன ஸேர் ஆச்சரியம்?” தனபால் மரியாதையாகவே குறுக்கிட்டான்.
”திறமை, தெற்கிலையோ அல்லது வடக்கிலையோ இருக்குது எண்டதைப் பொறுத்தது, அது…”
“சரிதான்…” நடராசர், ரமணன் பக்கந் திரும்பி,
“… நீர் அங்கை எப்ப நிக்கவேணும்? ரஷ்யாவிலை…?” என்றார்.
“எட்டாந் திகதி… ஏழாந்தெகதி வியாழக்கிழமை…”
“இண்டைக்கு நாலாந் திகதி… புக்கிங்?”
“அதிலை பிரச்சனை வராது. லீவு சரியெண்டா, எல்லாஞ் சரி…”
“சரி, இப்ப கையோட ஓர் றிமைண்டர் எழுதித்தாரும்… நானே கொண்டு போய்க் கதைச்சுப் பாக்கிறன்…”
முக்கால் மணித்தியாலத்திற்குப் பிறகு நடராஜா திரும்பி வந்தார். முகம் காய்ந்து போயிருந்தது.
“ஐ ஆம் ஸொரி, தம்பி… அவங்கள் இதை வலு ஸிரியஸா எடுக்கிறாங்கள்… இந்தப் பிரச்சனையான நேரத்திலை ஒரு தமிழன் ஏன் ரஷ்யாவுக்குப் போகவேணும்? எண்டு கேக்கிறாங்கள்… இதைப் பற்றி விசாரிக்க வேணுமாம்…”
“விசாரிக்கவோ…? என்னத்தை?”
“என்னென்னவோ! விசாரிக்கப் போறாங்கள் எண்டுதான் நினைக்கிறேன்…” நடராசர் சோர்ந்த குரலிற் சொன்னார்.
“… நீ பயப்பிடாதை ஆமி வராது, பொலிஸ்தான் வரும்…”
“என்னய்யா…?” தனபால் கேட்டான்.
“அவங்களுக்கென்ன, பைத்தியமோ? இதிலையென்னவாம் அப்படி?” நடராசரின் மீதிருந்த மரியாதைக்காகத் தன் கோபத்தை அவன் கட்டுப்படுத்த முயல்வது தெரிந்தது.
“இந்த நேரத்திலை ஒரு தமிழன் ஏன் அங்கை போகவேணும் எண்டு திருப்பிப் திருப்பிக் கேக்கிறாங்கள், என்ன ஐமிச்சமோ தெரியேல்லை. நீ கொழும்பிலேயே இருந்திருந்தாலாவது பிரச்சனை இந்தளவுக்கு வந்திராது…”
திரும்பி வரும் போது தனபால் சொன்னான்: “மச்சான், எனக்கென்னவோ, எங்கட நடராசர் ஐயா அப்ஸெர் ஆகிப் போனார் எண்டு படுகுது… நீ, பயப்பிடாதை…”
“சீ… என்ன பயம்?”
தனபால், மாலையில் பஸ்நிலையம் வந்து வழியனுப்பியும் வைத்தான். முதல் நாளிரவு சரியான தூக்கமில்லாமலிருந்தும், அத்தோடு பகலெல்லாம் அலைச்சலாக இருந்தாலும்கூட, இரவு நித்திரையே வரவில்லை. கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போன கவலையும் ஊமைக்கோபமுமாய் அலைக்கழித்தன… எவ்வளவு கீழ்த்தரமாக இந்த வாய்ப்பு அவனிடமிருந்து பறிக்கப்படுகிறது…
போதாக்குறைக்கு “என்ன பயம்?” என்று சொல்லிவிட்டு வந்திருந்தாலும், மனமென்னவோ, ‘பிச்சை வேண்டாம், நாளைப் பிடித்தால் போதும்’ என்றும் நினைக்கத்தான் செய்தது.
7
காலையில் யாழ்ப்பாணம் வந்ததுமே வீட்டுக்குப் போய்விட்டு, அலுவலகம் வரத்தான் நேரம் சரியாக இருந்தது. அதுவும் பஸ்வழியில் தாமதமேதுமில்லாமல் வந்ததால்.
யாருடனாவது கதைக்க வேண்டும், என்ன செய்யலாமென ஆலோசிக்க வேண்டும். அசதி, களைப்பு எல்லாம் பிறகுதான். கண்டவுடனேயே ‘என்னாச்சு?’ என்றார்கள், எல்லோரும்.
கோபத்துடன் சொன்னான்.
என்ன செய்யலாமென்று ஒருவருக்குந் தெரியாமலிருந்தது. இப்படியும் நடக்குமா?
பத்தரை மணிக்கு, தேநீர் வேளையின்போது சம்பந்தர் தனியாகக் கூப்பிட்டார்.
ஒரு ஆளின் பெயரைச் சொன்னான். ஒரு ஆளின்
“அவர் செக்ரிட்டரிதான் அண்ணை. ஆனா, இந்த மினிஸ்ட்ரிக்கில்லையே…”
“அதுக்கென்ன..? அவர் நினைச்சால் செய்யலாம்…” சம்பந்தர் உறுதியாகச் சொன்னார்.
“சரி, அவரை எப்பிடிக் கேக்கிறது?”
“அதுக்கு ஆளிருக்கு… வா, நான் வாறன்…”
உடனேயே ‘ஷோட்லீவ்’ போட்டுவிட்டுப் புறப்பட்டார்கள்.
நினைக்க நினைக்க எரிச்சலாய் வந்தது. நியாயமாய் ஒருவனுக்கு கிடைக்க வேண்டியதை அவன் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை – எதற்காக இப்படிக் குழப்பிக் கொட்ட நினைக்கிறார்கள்? அதை – அந்த வாய்ப்பை – பெற்றுக் கொள்வதற்காக அவன் ஓடியாடி அவர் இவரைப் பார்க்கவில்லை. பல்லிளிக்கவில்லை. ஆனால் கிடைத்தது பறிபோகாமலிருக்க அப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. யாரை உதைப்பது. யாரில் காட்டுவது கோபத்தை?
தான் சம்பந்தத்தைப் பிடிக்க, சம்பந்தர் பெரிய தம்பிவரைப் பிடிக்க, பெரிய தம்பியர் ஒரு செக்ரிட்டரி மற்ற செக்ரிட்டரியைப் பிடிக்க…சீ!
சின்ன வயதில் படித்த கதைகள், பாட்டுகளில் வருவது மாதிரி, ஒரு சங்கிலியா…
‘பூனை கொடுத்து முனிவரை மருட்டி, முனிவரை மருட்டி மந்திரத்தைக் கற்று, மந்திரத்தைச் சொல்லிப் பூதத்தைக் கொன்று, அதனைக் கொன்று அரசனைக் காப்பாற்றி, அவனைக் காப்பாற்றி அவன் மகளைக் கல்யாணம் பண்ணி… வெறுப்பாயிருந்தது, என்றாலும் வேறு வழியில்லை.
“மயிரைக் கட்டி மலையை இழுக்கிற… வந்தா, மலை… போனா மயிர்…” என்றார் சம்பந்தர்.
ஆனால், நம்பவே முடியவில்லை. மலையேதான் வந்தது! ஒரு வாரமாகவில்லை, வீட்டு விலாசத்திற்குத் தந்தி வந்தது – லீவு அனுமதித்திருப்பதாக! பெரிய தம்பியார், பெரிய ஆள்தான்!
மீண்டும் கொழும்பிற்கு வந்தது, புறப்படுவதற்கு முதல்நாள் மாலை, நடராசரிடம் பயணஞ் சொல்லிக் கொள்வதற்காக பம்பலப்பிட்டியிலிருந்து அவர் வீட்டுக்குப் போன வேளையில்தான், கமெரா பற்றிய கதையும் வந்தது. தூக்கிக் கொண்டு வந்து கொடுத்தார். தன்னுடைய மகிழ்ச்சியை வேறுவிதமாக வெளிப்படுத்த அவரால் முடியவில்லை போலும்…
என்ன வாங்கலாம்?
8
உணவு வண்டி விசாலமாக இருந்தது. இரண்டு வரிசைகளில் மேசைகள். ஒவ்வொரு மேசைக்கும் நாலு கதிரைகள்.
ஸேர்விங் கவுண்டரில் போய்ப் பார்த்தான். எதெது சைவம்? பார்த்தவுடனேயே சொல்லக் கூடியதாக எதுவுமில்லை – சீவி வைக்கப்பட்டிருந்த செக்கரிக் காய்களைத் தவிர – பிறகு பார்த்ததில் உருளைக்கிழங்குப் பொரியலும் இருந்தது. ஒன்றுக்கு இரண்டு தட்டுகளாக எடுத்துக் கொண்டான்.
‘கம்போத் இருக்கிறதா?’ என்று கேட்டு ஒரு தம்ளர் வாங்கினான். அவனுக்கு மிகவும் பிடித்த திராட்சை ஊறல் அது. பிறகு வேண்டுமானாலும் இன்னொன்று வாங்கிக் கொள்ளலாம். இப்போது எதற்கு, எல்லாவற்றிலும் இரண்டிரண்டு…?
தட்டைத்தள்ளிக் கொண்டு வந்தான். அபாகஸில் மாயம் பண்ணி, அந்தப் பெண் கணக்குச் சொன்னாள்.
“எண்பத்தியெழு கோபெக்..”
ஒரு ரூபிளைக் கொடுத்து, மீதிச் சில்லறை வாங்கிக் காற்சட்டைப் பையில் போட்டுக்கொண்டு, மேசையடிக்கு வந்தான். ஓடுகிற ரயிலில், கையிலிருக்கிற கம்பொத் தளும்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது.
கதிரையில் உட்காரப் போனபோது, எதிர்ப்பக்கமிருந்து கீதா வருவது தெரிந்தது. கிளாஸைப் பிடித்தபடி எழுந்தான்.
“உட்காருங்கள், வருகிறேன்…”
“தாங்க்ஸ்… நானே வாங்கிவிடுகிறேன்…” அவள் போனாள்.
அநேகமாக எல்லா மேசைகளுமே காலியாகக் கிடந்தன. வெள்ளை விரிப்பில் ஏதோ மெல்லிய கறைகள், ரயிலின் இலேசான இரைச்சல்…
கீதா வந்து முன்னால் உட்கார்ந்தாள்.
“எங்கே போயிருந்தீர்கள்? வரும்போது தேடினேன்…”
“அஞ்ஜனா, கபூரிடம் போகலாமென்றாள். அவர் அடுத்த பெட்டியில் வருகிறார்…”
“அவர்கள் எங்கே, இப்போது?”
“ஏதோ கதை… நானும் குழப்ப விருப்பமில்லை…”
“நெருங்கிய நண்பர்கள்தான், இல்லையா…?”
“அப்படித்தான்… என்ன இருந்தாலும் ஒரே ஊரவர்கள்…”
”ஒரே ஊரைச் சேர்ந்தவர்களுடன் கொண்டாடிக் கொள்ள நாங்களிங்கே வரவில்லை…”
“அப்படிப் பார்த்தால், நாங்களுங்கூட ஒரே ஊரவர்கள்தான்…”
“இவ்வளவு தூரத்தில் வந்து பார்க்கிறபோது, யாழ்ப்பாணம், திருவனந்தபுரம் எல்லாம் ஒன்றுதான்…”
“இவ்வளவு தூரம் வராமல் பார்த்தாலுங்கூட ஒன்றுதான்…”
“எங்களை மலபார்க்காரர்கள் என்றுதான் சிலபேர் சொல்லுகிறார்கள்…”
“உண்மையாக…?”
வெளியே, வெள்ளைப் பட்டைகளுடன் பிர்ச் மரங்கள் ஓடிக்கொண்டிருந்தன…
“சிப்ஸ் மெய்யாகவே நன்றாயிருக்கிறது…”
“எங்கள் வீட்டில் சாப்பிடுகிற மாதிரியே…”
வீடு, வீட்டிலிருந்து ஊர், மொழி, இலக்கியம்… இது தொடங்கினால் முடிவதில்லை – இடையில் எழுந்து போய் இரண்டு கம்பொத் வாங்கி வந்தான், ஆளுக்கொன்றாக.
‘தகழி ஷிவஷங்கர பிள்ளை’ என்று சொல்கிற அவள் முன்னால், ‘தகளி சிவசங்கரன் பிள்ளை’ என்று தான் உச்சரித்தது அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அடுத்த தடவை, அவளைப் போலவே உச்சரிக்க முயன்றான்…
பேச்சு எங்கே முடிந்ததென்று தெரியாமல் வெகுநேரம் பேசாமலே இருந்தார்கள். வெளியே ஒரு அழகிய கிராமம் அமைதியாக ஓடிக்கொண்டிக்கிறது.
9
லெனின் கிராமத்துக்கு வந்த போது, பத்தேகால். சூரியன் மறைந்து கொண்டிருந்தது. நல்ல வெளிச்சம் – மஞ்சளாய்.
ஸ்ரேஷனில் இறங்கியதுமே, முருங்கர் உணர்ச்சிவசப்பட்டார்.
“இதுதான்…! எப்படியோ ஒரு தரம் வந்தேவிட்டேன்…” – கண்கள் பளபளத்தன.
“அறுபத்தேழு வருஷத்துக்கு முந்தி, புரட்சியின் போது இந்த இடம் எப்படி இருந்திருக்கும்… அப்போது நான் பிறந்தேயிருக்க மாட்டேன்…”
காத்திருந்த பஸ்களில் ஏறி, ஹோட்டலுக்குப் போனார்கள்.
‘சலியத்ஸ்காயர்’ பிரம்மாண்டமாயிருந்தது. எத்தனை நட்சத்திரமாயிருக்கும்? முன் மண்டபமே ஒரு மாளிகை மாதிரி, கலைப் பொருட்களையும் ஞாபகச் சின்னங்களையும் விற்கிற கடைகள், அறை ஒதுக்கீடு விபரம் வரும்வரை அவைகளுடன்.
மெஹம்மட் தேடி வந்தான். Beach Ranade
“இங்கேயா நிற்கிறாய்?” – ருஷ்யனில் ‘நீ’, ‘நீங்கள்’ வித்தியாசம் இருந்தும், இந்த மெஹம்மட்டிலும் பார்க்க நான் ஐந்தாவது வயது மூத்தவனாயிருந்தும், அவன் தன்னை ‘நீ’ என்றழைக்கிற நெருக்கம் ரமணனனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
‘ஏன் தேடினாய்? என்ன சங்கதி…?”
“இங்கே வா…” எப்போதும் சிரிப்பு மிளிர்கிற அந்த நீலக்கண்களில் ஏதோவொன்று – குறும்போ, கள்ளமோ, வெட்கமோ, எது? – தெரிய, அவன் விஷயத்தைப் போட்டு உடைத்தான்.
“ஒவ்வொரு அறையிலும், இரண்டு பேர்! புரிகிறதா?”
“நீயும் நானும் ஒரு அறையிலிருப்போமா?”
“சந்தோஷமாக..! ஆனால், ஏன்?”
“அதே மாதிரி, அருணியையும் துளசியையும் ஒரு அறையிலேயே இருக்கச் சொல்லலாம்…”
ரமணனுக்குப் புரியவில்லை. மெஹம்மட் கண்களைச் சிமிட்டிச் சிரித்தான்.
‘எட, பாவி… அருணி எனக்கு அக்கா மாதிரி! போதாக்குறைக்கு துளசிதான் என்ன நினைப்பாள்? எனக்கு அடிவாங்கித் தரப் போகிறாயா? உனக்கெப்படி இந்த எண்ணம் வந்தது?
தமிழோ, ஆங்கிலமோ – அல்லது சிங்களமோ என்றால்கூட, இரண்டாவது யோசனையின்றித் திட்டித் தள்ளியிருக்கலாம்…. ருஷ்யனில் அந்த அளவு இப்போதைக்குச் சாத்தியமில்லை…
இந்த மெளனம், மெஹம்மட்டிற்குச் சம்மதமாகப் பட்டிருக்க வேண்டும்.
“அவர்கள் அறைகளைக் கொடுக்க முதல், நான் போய் இவான் பாவ்லோலிச்சிடம் சொல்லி விடுகிறேன்… ஸ்பஸிபா, ஒச்சின் ஸ்பஸிபா…” கத்திக்கொண்டே போனான்.
ரமணன், விறைத்துப் போய் நின்றான். இந்த முட்டாள், அந்தப் பெண்களிடமும் போய் உளறி வைப்பானா… அக்காவின் முகத்தில் எப்படி விழிப்பது? துளசியின் முகத்தில் எப்படி விழிப்பது?.. போய், ஒரு ஸோஃபாவில் குந்தினான்.
இந்த மெஹம்மட்டிற்கு துளசியைப் பற்றி இப்படி ஒரு எண்ணம் எப்படி வந்தது? அவள் இவனுடன் நெருங்கித் திரிவதாலா? எல்லாப் பெண்களுந்தான் மெஹம்மட்டைச் சுற்றுகிறார்கள்… அதோ ரோசா நிறம். சிவப்பு உதடுகள், சுருள் சுருளான கறுப்பு முடி. ஒமர் ஷெரிஃபை நினைவுப்படுத்துகிற முகவெட்டு.
-எனக்கேன் அவனில் பொறாமை வரவில்லை? அருகிலிருப்பவரைப் பார்த்துத்தான் பொறாமைப்படலாம், ஆக உயரத்திலிருப்பவனைப் பார்த்துப் படுவதில் அர்த்தமில்லை என்றா? இல்லை, என்னோடு அவன் இப்படிப் புழங்குவதாலா? துளசிக்கு நான் வேண்டியவன் என்றால் இவனுக்கு என் மீது இந்தப் பிரியம் ஏற்பட்டிருக்கலாம். எப்படியிருந்தாலும் மெஹம்மட்டின் நட்பு சந்தோஷமாய்த்தானி ருக்கிறது? வஞ்சகமில்லாத, கலகலப்பான பயல்… துடியாட்டம் நிறைந்தவன்… இயல்பாய் இருக்கிறான் பச்சைத் தண்ணி மாதிரி…
அன்றைக்கு வஸிலி ஷுக்க்ஷினின் ‘பேச்சி லாவச்கி’ சினிமா பார்த்துவிட்டு வருகையில் தான் இந்தத் துளசி – மெஹம்மட் நட்பு முதலிற் கண்ணிற் பட்டது.
என்னதானிருந்தாலும் மெஹம்மட்டைப் பாராட்டத்தான் வேண்டும். எல்லாப் பெண்களும் அவனையே சுற்றினாலும் அவன் துளசியைத்தான் எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கிறான்! இருவருக்குள்ளும் உண்மையிலேயே ஸீரியஸ்ஸாக ஏதாவது இருக்குமா?
மெஹம்மட்… போன வேகத்திலேயே திரும்பி வந்தான். “ஒச்சின் கஷால்.. ஏற்கனவே அறைகளெல்லாம் ஒதுக்கி விட்டார்கள்… அவன் உற்சாகமிழக்கவில்லை….
“பரவாயில்லை, பிறகு பார்க்கலாம்…”
10
ரமணனின் அறைச் சகா, மிஸ்டர் கபூர் என்று பாவ்லோவிச் சொன்னார். ரமணனுக்கு கபூரைப் பிடிக்கும். அமைதியான மனிதர். அழகான ஆள், நடு வயது தில்லிக்காரர் – அஞ்ஜனாவைப் போல.
இந்தக் ‘கபூர்’ என்கிற பெயர், சின்ன வயதிலேயே ரமணனுக்குப் பரிச்சயமானதுதான். ராஜ்கபூர், பிருத்விராஜ்கபூர்… ஆனால், அப்போது ஒரு குழப்பமாயிருந்தது – அது முஸ்லீம் பெயரென்று எண்ணம், பிறகு – வளர, வளர Kapoor வேறு, Gafoor வேறு என்று தெரியவந்தது…
மிஸ்டர் கபூர் எப்போதும் ஆங்கில பாணி உடையில் பளிச்சென்றிருந்தார்…. ரஷ்யாவில் ‘சூட்’ ஒன்றும் அவ்வளவு கறாரான விஷயமாகத் தெரியவில்லை. அப்படி ஒரு நெகிழ்வு, எளிமை, என்றாலும் கபூர் அதற்காக விட்டுவிடவில்லை.
பால்லோவிச்சிடம், அறை எண் அறிந்து கொண்டு, பெட்டியும் தானுமாய் ரணனன் ‘லிஃப்ட்’ ஏறி, ஏழாந்தளத்திற்குப் போய், திஷுர்ணிக்கு வணக்கம் சொல்லி, திறப்பை வாங்கிக் கையெழுத்து போட்டுவிட்டு, அறை எண்ணைக் கண்டுபிடித்து… இப்போது தான் களைப்பு தெரிந்ததும்.
வந்து ஒரு நிமிடமில்லை. கதவு தட்டிக் கேட்டது.
“உள்ளே வாருங்கள்… உரத்துச் சொன்னான்.
மிஸ்டர் கபூர்தான்.
“ஹலோ, மை ஃபிரண்ட்…” குரல், உற்சாகமாய் ஒலித்தது. ஆள் அவ்வளவு முசுடு இல்லை தான் நினைத்திருப்பது போல – ரமணன் எழுந்து கை நீட்டினான்.
“தாங்க் யூ… எப்படி இன்று பயணம்? கையைக் குலுக்கினார்.
“ஃபைன்…. நன்றாக அனுபவித்தேன்…” மாஸ்கோவிலிருந்து இங்கு வந்து சேர்கிற வரைக்கும் இந்த மனிதர் எப்படி என் கண்ணில் படாது போனார்?
கபூர் மற்ற கட்டிலில் போய் உட்கார்ந்தார்.
மாஸ்கோவில் இவர்களிருந்த ‘புஷ்கின் இன்ஸ்ரிரியூட்’ அறைகளைப்போல அதே அமைப்பு. வாசல் கதவைத் திறந்ததும் ஒரு பக்கம் குளியலறை அதனோடு போகிற நாவடி அகல நடை, குளியலறையின் நீளம் முடிந்ததும் மெய்யான அறையாய் விரியும். இதனால், அறை ஒரு ‘L’ வடிவம் கொண்டிருக்கிற மாதிரி, ஒரு பக்கத்தில் – இருந்து பார்த்தால் வாசல் தெரிகிறது.
நீங்கிய திரைகளும், வானம் சாம்பல் பூத்திருந்தது. இருளில்லாத மைம்மல், பொழுது படுகிற போது – அல்லது விடிகிற போது – இருக்கிற மாதிரி மெல்லொளி இது எது? நேரத்தைப் பார்த்தான். இரண்டுமேதான்! பன்னிரண்டு மணிக்கு ஐந்து நிமிஷம்.
வெந்நீரில் குளிப்பை முடித்து, உடை மாற்றிக் கொண்டு சிற்றுண்டிச் சாலைக்குப் போகலாமா? இப்போது அது திறந்திருக்குமா – இல்லை, இந்தத் தளத்திலேயே கண்காணிப்பாள ரிடம் வாங்கக் கூடிய ‘லைச்சா’யுடன் சமாளிப்போமா என்று யோசித்தபடி கட்டிலிற் சாய்ந்தான். அசதியாயிருந்தது. கபூர் வெளியே போய்விட்டான்.
விளக்கைப் போட மனம் வரவில்லை. அந்த மாய ஒளியில் – மைம்மலிற் புதைத்து இப்படியே படுத்திருக்க வேண்டும் போலிருந்தது. வெந்நீர்க் குளியல் தந்த தகதகப்பையும் மீறி உடம்பைத் தழுவும் குளிர் சோப்பின் லேசான மணம். உடலின் அசதிக்கு இதமாயிருக்கிற படுக்கை, இந்த அமைதி, இந்த வெளிச்சம்… இது எந்த உலகம்…? மூழ்கிக் கொண்டே போனான்.
கதவை மெல்லத் தட்டிய சத்தம்.
தட்டிய விதமே, தட்டியதற்காக மன்னிப்புக் கோருவது போலிருந்தது யாராயிருக்கும்?
எழுந்தான். சாரத்தைக் கட்டியவாறே செருப்பை மாட்டியபடி கதவடிக்குப் போனான். தளத்தில் விரித்திருந்த கம்பளம் என்னவென்று தெரியாத ஒரு மங்கல் நிறத்தில் – ரப்பர்ச் செருப்பில் கீழும் புஸ்புஸ் என்று புதைந்தது.
பிறகு, தட்டும் ஒலியே இல்லை. வேறெங்கோ தட்டியதைக் கேட்டு எழுந்து விட்டேனோ?
-திறக்காமலே கதவருகில் தயங்கினான்…
மீண்டும் கேட்டது, திறந்தான், கீதாவும் அஞ்ஜனாவும்.
“குட் ஈவினிங்..” என்றார்கள்.
“குட் மோனிங்…”
ஒருகணத் திகைப்பிற்குப் பிறகு, அந்த நிசப்தத்தைக் குலைக்கிற மெல்லலையாய்ப் பெண்கள் சிரிப்பொலி, பயண அலுப்புத் தெரியாத புத்துணர்வுடன், சேலையும் ஸ்வெட்டருமாய் இருவரும்.
“உள்ள வாருங்கள்…” ஸ்விச்சைப் போட்டபடி சொன்னான். “மெய்யாகவே பன்னிரண்டரைதான் இப்போது…”
-கீதா, தன் மணிக்கட்டை அஞ்ஜனா பக்கந் திருப்பிக் காட்டினாள்.
“உட்காருங்கள்…”
“எங்கே உங்கள் ரூம்மேற் மிஸ்டர் கபூர்?”
உட்கார்ந்தபடி அஞ்ஜனா கேட்டாள்.
“எப்படி இந்த விபரமெல்லாம் உங்களுக்கு இவ்வளவு விரைவில் வந்து சேர்கிறது?’
பகடியாய்க் கேட்டாலும், ‘இவர்கள் அவரைத்தான் தேடி வந்திருக்கிறார்கள்’
“எங்களிருவரின் நண்பர்களும்” என்று திருத்தினாள் அஞ்ஜனா.
கீதா அவளை முறைக்கிறாளா?.
மெஹம்மட்டின் நினைவு ஏன் இப்போ வருகிறது?
“எப்படி இருக்கிறது அறை?” கீதா சமாளிக்கவே முயல்கிறாள் போலும்…
“அச்சா…!” என்றான்.
இருவரும் சிரித்தார்கள். அந்தச் சிரிப்போடு இந்த இறுக்கம் தளர்ந்த மாதிரி.
11
என்னதான் வெண்ணிரவுகளின் காலம் என்றாலும், குளிர் குளிர்தான். பெண்கள் புத்திசாலித்தனமாய் தடித்த ஜீன்ஸிலிருந் தார்கள் – இந்தக் குளிருக்குச் சேலையாவது! ரமணன், கைப்பையில் தயாராயிருந்த ஜெர்க்கினை மாட்டிக்கொண்டான். கபூர் பரவாயில்லை – வழமையான உடையில்.
அருணையையுந் துளசியையும் விட்டுவிட்டுப் புறப்பட்டது
ரமணனுக்கு என்னவோ மாதிரியிருந்தது. கீதாவுக்கும் துளசிக்கும் ஏனிந்த எதிர்மறை உறவு? பெரிதாக மனஸ்தாபம் என்று சொல்வதற் கில்லை. ஆனால் ஆளை ஆள் தவிர்த்துக் கொள்வது மற்றவர்களுக்கு வடிவாகவே தெரிந்தது. ஏன்? துளசியின் தோழி என்கிற காரணத்திற்காக அருணி அக்காவின் மேலும் இந்த நிழல் லேசாக விழுந்த மாதிரி, இந்தப் பெண்களும் அவர்களின் போக்குகளும்…
பாலம் பார்க்கும் போது அவர்களிருவரையும் சேர்த்துக் கொள்வோமா என்று ரமணன் கேட்டதற்கு.
“நீங்கள் விரும்பினால் கூட்டி வாங்களேன்…” என்றாள் கீதா. அவளுக்குப் பிடிக்கவில்லை என்பதை இதைவிட நாசூக்காக எப்படிச் சொல்வது?
“கீதா-அஞ்ஜனாவுடன் போவோமா?” என்று இதேபோல அவன் துளசியைக் கேட்டிருந்தாலும், ஏறத்தாழ இப்படியான ஒரு பதில்தான் கிடைத்திருக்கும். அவனுடைய முகத்தை முறிக்கக் கூடாதென்று மழுப்பினாலுங்கூட. சேர்ந்து போவதை துளசி ஒரே விதத்தில் தவிர்த்துத் தானிருப்பாள் என்றும் ரமணனுக்குப்பட்டது.
அது சரிதான். இந்த இடத்திற்குப் போகவிருப்பது பற்றி துளசியிடம் சொல்லியிருந்த போதும், பிறகு இரண்டு தடவை அதை நினைவுபடுத்தியபோதும், இன்று அவள் சொன்னாள்.
“நாங்க வரமுடியாது. ரமணா…”
“ஏன்?”
“உங்க சிலோன் கேர்ல்ஸ் யாரோ இங்கே இருக்காங்களாமே, அவங்களப் பாக்கணும்னு அக்கா சொல்லியிருக்காங்க… இன்னிக்கு ஈவ்னிங் போறோம்…”
அருணி ஏன் இதைத் தனக்குச் சொல்லவில்லை? பாலம் பார்க்கப் போகிற சங்கதியை தான் சொல்லவில்லை என்றா? துளசிக்குச் சொன்னாலே அருணிக்கும் சொன்ன மாதிரித்தான் என்ற நினைவில் அவன் விட்டுவிட்டான்.
இல்லை. அக்கா அப்படியெல்லாம் நினைக்கிறவ இல்லை. இன்று கூப்பிட்டு இருந்தாலும் துளசியையும் சேர்த்துக் கொண்டு வந்திருப்பாதான். ஆனால் தான் தான் கூப்பிடவில்லை- ஏன்? கீதாவுடன் தனியே போய்வருகிற சந்தர்ப்பத்தைக் குழப்பிவிடக் கூடாதென்றா?
“ஏன் பேசாமல் வருகிறீர்கள்?” கீதா கேட்டாள்.
“…. உங்கள் ஃப்ரெண்ட்ஸ் வரவில்லையென்றா?”
“டோண்ட் பி ஸில்லி!”
காலின் முன் மங்கலாய்ச் சிறு சதுரமாய்த் தெரிந்த எதையோ ஷூ நுனியால் உதைத்தபடி சொன்னான். அது கொஞ்சதூரம் டுர்ர்ரென்று சறுக்கிப் போய், நடை பாதை விளிம்போடு நின்றது.
குனிந்து எடுத்தான். பக்கத்துக் கட்டடத்திலிருந்து வந்த வெளிச்சத்தில் திரும்பிப் பார்த்தான். ஸ்பிச்சி, தீப்பெட்டி வலு பெரிதாக இருந்தது. ருஷ்யாவுக்கு வந்த பின் இப்போதுதான் முதல் தடவையாக ஒரு தீப்பெட்டியைப் பரிச்சயங் கொள்ள நேர்ந்திருக்கிறது.
எங்கள் நாட்டு தீப்பெட்டிகளிலும் இது மூன்று பங்கு தடிப்பு. கூறியபடியே பெட்டியை கீதாவின் முன்னால் சிலுக்கிக் காட்டினாள்.
“தூர எறியுங்கள்… தெருவில் கிடந்தது…”
“நிரம்பக் குச்சிகள்…” என்றபடி முன்னால் தெரிந்த குப்பைப் பெட்டியில் அதை வீசினான்.
“டூ யூ ஸ்மோக்?” கேட்டாள்.
“நோ. போனவாரம் மெஹம்மட் ஒரு ‘மேல் பிராண்ட்’ பெட்டி தந்தான்… இன்னமும் உடைக்காமல் வைத்திருக்கிறேன்…”
“எதுக்கு?”
“திரும்புகிற போது, ஊரில் யாருக்காவது கொடுக்கலாம்…”
12
கபூரும் அஞ்ஜனாவும் இவர்களிலிருந்து பத்தடி முன்னால் போய்க்கொண்டு இருக்கிறார்கள். வாகனங்கள் குறைவாயிருந்தாலும் தெருவில் நிறைய நடமாட்டம். கட்டடங்கள் வெளிறித் தெரிந்தன. காற்றில் குளிர் மிதந்தது.
பின்னால் யாரோ ஆண்களும் பெண்களுமாய் பலத்துப் பேசிச் சிரித்தபடி வரும் சப்தம். திரும்பினார்கள்.
“எங்களவர்கள்தான்… என்றான், ரமணன்.
“யார்?”
“கப்ரியெல்லாவும் ஆப்பிரிக்கப் பையன்களும்… “
“என் இப்படி நடந்து கொள்கிறார்கள்?” கீதா எரிச்சலுடன் சொன்னாள்.
அந்த வெனிசுவேலாப் பெண்ணைப் பார்க்கிறபோதுகளில் அவனுக்கு வினோதமாக இருக்கிறது. ஆண்கள் மாதிரித் தோற்றம். அவ்வளவு உயரம். இறுக்க இறுக்க ஜீன்ஸ், தலை ஒரே வெள்ளையாய் ஒட்ட வெட்டியிருக்கும். வயதுகூடச் சொல்ல முடியாது – இருபத்தைந்திலிருந்து ஐம்பது வரை எதுவும் மதிக்கலாம்.
கப்ரியெல்லா, கீச்சிட்ட குரலில் உரக்கக் கத்தினாள்.
“என்னை நீங்கள் தொடுவதனால் என்னுடன் வர வேண்டாம்…” கறுத்த பையன்கள் மூன்று பேரும் அட்டகாசமாய்ச் சிரித்தார்கள். தங்கள் பாஷையில் எதையோ சொல்லி.
ஏதோ அவசரத்தில் போகிறவர்கள் போலிருந்தது.
இவர்களைத் தாண்டும் போது கண்டு கொண்டார்கள்.
“அல்லோ! தவாரிஷி!”
“அல்லோ…”
“பாலம் பார்க்கப் போகிறீர்களா? நாங்களுந்தான்…” நால்வருமே நன்றாக ‘வொத்கா’வைச் சுவைத்திருக்கிறார்கள்.
“யெஸ்…” என்ற ரமணனின் கையைப் பற்றி இழுத்தாள் கீதா.
“தஸ்வி தான்ய…” அவர்களைப் பார்த்து அவசரமாகச் சொன்னாள்.
“போகட்டும்” அவன் காதோடு மெல்லக் குரல் வந்தது.
அவர்கள் தாண்டிப் போனார்கள். கபூர் – அஞ்ஜனாவுடன் இதே கதை.
அந்த நால்வரும் என்ன கூத்தாடினாலும் அவர்கள் புண்ணியத்தில் கீதாவின் கோபம் கரைந்துவிட்ட மாதிரியிருந்தது.
“நீங்கள் ‘வொத்கா’வைச் சுவைத்ததில்லையா…”
“ஏனில்லை…?”
“ம்…? எங்கே?’
“வித்தாலி வீட்டிற்குப் போயிருந்தபோது… அவர்களைப் பொறுத்தளவில் இது குடி வகையே அல்ல…”
“எப்படியிந்தது?”
“எனக்கென்னவோ, மிதக்கிறது போலிருந்தது. அவ்வளவுதான்… அதுதான் போதையா, அதுதான் சந்தோஷமா – தெரியவில்லை…”
“தெரிந்து கொள்ள முயலாமலே இருந்து விடுவது நல்லது…”
“அது சரி, அதுதான் முதலும் கடைசியும்…”
இந்தப் பேச்சு அவளை மேலும் திருப்திப்படுத்தியிருக்க வேண்டும். பக்கத்தில் நடந்து வந்தவள் தோளும் தோளும் உரசுகிற அளவுக்கு நெருங்கினாள். அஞ்ஜனாவைக் கூப்பிட்டு,
“ஏன் இவ்வளவு அவசரம்? மெதுவாகப் போவோமே..?” என்றாள்.
கனவு போலிருந்தது – இந்த வெளிச்சம், இந்தக் குளிர், இவற்றில் குளிக்கிற நகரம், இதில் உலவுகிற மக்கள்…
எல்லாவற்றுக்கும் மேலாக, பக்கத்தில் இதோ…!
சிந்து நதிக்குப் பதில் நேவா ஓடுகிறது. நிலவும் வெண்ணிரவும் ஒரே மாதிரியா?
13
“‘தஸ்தயேவ்ஸ்கியின் ‘வெண்ணிரவுகள்’ படித்திருப்பீர்கள் தானே?” கீதா கேட்டாள்.
“பின்னே?”
“அதைப் படித்தபோது, இந்த வெண்ணிரவுகளில் ஒரு நாளைக்கு உலவ முடியுமென்று நினைத்திருப்பீர்களா?”
நிச்சயமாக இல்லை… அதுவும் இப்படி நினைத்தேயிருக்க முடியாத ஒரு துணையோடு…
“ம்ம்?”
நேவாவின் கிளையான மொய்காவின் மேலிருந்த சிறிய பாலமொன்றைத் தாண்டி கொண்டிருந்தார்கள்… இரும்பில் தான் எத்தனை வேலைப்பாடு வாசல்களிலும் வார்ப்புச் சிலைகள்…
இது கனவில்லை, இதுதான் தேவலோகம்! ராசரத்தினம்
முன்பொரு முறை அப்படித்தான் சொல்லியிருந்தார்.
“இந்தப் புராண இதிகாசங்களில் வாற தேவர்கள் யார் தெரியுமா? ஐரோப்பியர்கள் – குறிப்பாக ரஷ்யர்கள்…”
“அதெப்படி?”
“…இமயமலைக்கு – மேல, அப்பாலிருந்து வந்தவர்கள், வெள்ளை நிறம்… எங்களுக்கு ஒரு வருடம் அவர்களுக்கு ஒரு நாள் என்பதுகூடச் சரிதான்… அங்கே, கோடை – பகல் – ஆறுமாதம், பனி- இரவு – ஆறுமாதம்… இல்லையா?”
இதன்படி பார்த்தால் அவன் இப்போது தேவலோகத்திலிருக்கிறான்..!
அப்படியில்லாமல் பார்த்தாலும் அங்கேயிருப்பதாகத்தான் படுகிறது.
ராசரத்தினத்தின் வியாக்கியானத்தைச் சொன்னதும், கீதா சிரிசிரியென்று சிரித்தாள்.
“என்றாலும் விளக்கம் நன்றாகத் தானிருக்கிறது…”
“என்ன செய்கிறார், உங்கள் நண்பர்?”
“‘அவர் ஒரு ஓவியர்.”
“அதுதானே…”
நேவா நதிக்கரை வந்தபோது, பாலம் முழுமையாகவே இருந்தது.நிறையச் சனங்கள் நின்றார்கள். நன்றாகப் பார்க்கக்கூடிய -நெருக்கடி குறைந்த – இடமாக ஒதுங்கிக் கொண்டபோது யாரோ அவர்களை நோக்கி வருவது தெரிந்தது.
“நீங்களுமா?” என்றபடி முருங்கர். கூடவே மிஸ்டர் பாண்டே. கீதாவை கண்டதும், பாண்டே வாயிலிருந்து சிகரெட்டை எடுத்துக் கொண்டார். கபூரும் அஞ்ஜனாவும் சற்றுத் தள்ளி நின்றதில், இவர்கள் அவர்களைக் கவனித்ததாகத் தெரியவில்லை.
“இன்னும் ஒருமணி இருக்கிறது. பாலந்திறக்க.” என்றார் பாண்டே
“தினசரி இப்படித்தானே…?”
“லெனின்கிராத்திலிருந்து லண்டனுக்குப் போகிற ஸ்ரீமர்கள் கீழால் போவதற்கு இந்தப் பாலத்தின் உயரம் போதாது. அவை வருகிற வேளைகளில் இரண்டாகப் பிளந்து உயர்ந்து வழிவிடுகிற மாதிரி அமைத்திருக்கிறார்கள்… பிறகு மூடிக் கொண்டு சேர்ந்து விடும். ஸ்ரீமர் தினசரி போகிறது என்றுதான் நினைக்கிறேன்.”
பாண்டேயும் முருங்கரும் விடை பெற்றுக்கொண்டு போன பிறகும் முக்கால் மணி நேரமிருந்தது. கொஞ்சங் கொஞ்சமாய் மங்கிக் கொண்டு வந்த பொழுது… இருளைச் சந்திக்காமலே இது மீண்டும் வெளிக்க-ஆரம்பிக்கும்.
“சரியான குளிர்தான்…” கீதா மஃப்ளரைக் கட்டிக்கொண்டு, கைகளை மார்பின் மேல் மடித்தபடி நடுங்கினாள். குழந்தை மாதிரி – தூக்கிக் கொள்ளலாம் போல இருந்தது.
ஜெர்க்கினை நன்றாக இழுத்துக் கொண்டவன், அவள் தோள்களை வலக்கையால் வளைத்து நெருக்கினான்.
மௌனித்து நின்றார்கள். மூச்சொலிகள் மட்டும் மெல்லக் கேட்டன…
14
லெனின்கிராத்திலிருந்து திரும்பி ஒரு வாரம் – இன்னும் பத்து நாட்களில் பயிற்சி நெறி முடிவடைந்து விடும். ஆக மிஞ்சினால் இரண்டு வாரங்களில் கிளம்ப வேண்டியிருக்கும்….
வீட்டுக்குத் திரும்புகிற மகிழ்ச்சியா, இல்லை, இந்த நாட்டையும் இந்த உறவுகளையும் விட்டுப்பிரிகிற கவலையா, எது மேலோங்கி நின்றதென்று தெரியாமலிருந்தது…
சொந்த நாட்டில் மட்டும் பிரச்சனைகள் இல்லாமல் இருந்திருந்தால், இங்கு எவ்வளவு காலம் நிற்க முடிந்தாலும், மகிழ்ச்சியாய்த்தானிருக்கும். அந்தக் குழப்பங்களுக்கிடையில் எல்லோரையும் விட்டு விட்டு, தான் மட்டும் தனியாய்த் தப்பி வந்துவிட்டது போல் குற்ற உணர்வில் மனம் அந்தரிக்கிறது…
மாலையில் வகுப்புகள் முடிந்த கையோடு யாரையோ சந்திக்க வென்று நட்புறவுக் கழகத்திற்குப் போயிருந்த அருணி அக்கா, திரும்பியதும் திரும்பாததுமாக தேடி வந்தா. அக்கா, ஸ்வெட்டரும், தலையில் ஸ்காஃபுமாய் – கிட்டத்தட்ட ஒரு ‘மத்ரயோஷ்கா’ பொம்மை மாதிரி. போதாக்குறைக்குக் கையில் ஒரு பெரிய குடை. தோளில் தோள் பை.
அக்கா வந்தபோது, அவன் ஆறுதலாகக் கட்டிலிற் சாய்ந்தபடி எழுதிக் கொண்டிருந்தான். அறை விளக்கு பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்தது. வெளியேயும் சூரிய ஒளி மறையவில்லை. பறவை – கோழி?
தூவி அமைத்த மென்மையான மெத்தை, வெள்ளை விரிப்புடன் பளிச்சிட்டுக் கிடந்தது. கால்களை நீட்டி, சுவரில் சாய்ந்தவாறே – மடியில் தலையணையை மேசையாக்கி அதன் மேல் டயரியை வைத்து எழுதிக் கொண்டிருந்தான்.
போனவாரம். இதே நாளில், இதே நேரம் ரயிலிலிருந்தார்கள். போகும்போது இருந்ததிலும் பார்க்க கலகலப்பு அதிகரித்திருந்தது. போவதற்கு முன் மாஸ்கோவில் மூன்று வாரங்கள் சேர்ந்து பழகியவர்கள் தான் என்றாலும், அந்த நாட்கள் கொடுக்காத நெருக்கத்தை, லெனின் கிராத்தின் இந்தப் பத்து நாட்களும் எல்லோருக்கும் கொடுத்து விட்டன என்றே தோன்றியது. ரயில், வந்ததே தெரியாமல் வந்து சேர்ந்தது. என்ன கும்மாளம்…
ஒவ்வொருவரும் அவரவர் மொழியில் பாடினார்கள். தன்னுடைய முறைவரும் போலிருந்த போதெல்லாம், ரொய்லற்றுக்கும், புஃபேக்குமாய் ரமணன் உச்சிக் கொண்டிருந்தான். கீதா பாடினாள்:
“முத்து கொண்டெண்ட முறம் நிறஞ்ஞூ
பவளங் கொண்டென்டெ பற நிறஞ்ஞூ
நிறநிற நிஞ்ஞிட்டும் நிறயாததொரு பாத்ரம்
மனசு மாத்ரம் – என்டெ மனசு மாத்ரம்…”
ஒருமுறை கேட்டதுதான். அது பாடமாகிவிட்டது. திரும்ப திரும்ப வாயில் வந்தது. அடுத்த திங்கட் கிழமை காலையில் வகுப்புகளுக்குப் போனபோது வழியில் பாடிக் காட்டினான்.
“அச்சா…” – வியப்பும் மகிழ்வுமாய் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். இந்த ‘அச்சா’ வந்தபோது இருந்ததாய்த் தெரியவில்லை.
அஞ்ஜனாவிடமிருந்து தொற்றிக் கொண்டதாயிருக்கலாம்…
இந்தப் பாட்டை பிறகு மறந்து போய்விட்டாலுமென்கிற பயத்துடன் – டயறியில் குறித்துக் கொண்டிருந்த போதுதான், அருணி அக்கா கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தா. லெனின்கிராத் விஷயமெல்லாம் அக்காவை ஒன்றும் பாதித்ததாகத் தெரியவில்லை.
“இப்பதானா வாறீங்கள்? சரியான அலைச்சல் போல…?”
“இல்லை…” என்றபடி, அக்கா குடையையும் தோள் பையையும் ரீபோயின் மேல் வைத்தவாறு ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டா.
15
“உமக்குத் தெரியுமா, சேதி…?”
அக்காவின் குரலில் லேசான பரபரப்பு இருந்தது.
“என்ன..” அதிற்பாதி அவனையும் பற்றிக் கொண்ட மாதிரிக் கேட்டான்.
“மொஸ்கோவிலிருந்து போய் இறங்குகிற தமிழர்களை யெல்லாம் கட்டு நாயக்க ஏர்போர்ட்டில் அரெஸ்ட் பண்ணுகிறார்களாம்…”
“என்னது? ‘விசர்க்கதை…”
“உமக்குத் தெரியாது… இப்பதான் ஹேமந்தவைச் சந்தித்தேன்…”
“ஹேமூந்த சொன்ன கதையா இது?” கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
“அவருக்கு எப்படித் தெரியுமாம்?”
“கொழும்பில் யாருடனோ ஃபோனில் பேசியபோது அவர்கள் சொன்னார்களாம்….”
சரிதான், ஹேமந்த தன்னையோ பாலாவையோ மிரட்டு வதற்காக இந்தக் கதையைக் கட்டிவிட்டிருப்பது சாத்தியம்…. இந்த நாட்டின் நண்பனென்று இப்படியுமொரு மனிதன் ஒரு இடதுசாரி என்று சொல்லிக் கொள்கிறவன் வகுப்புவாதியாகவும் இருப்பது எப்படி இயலும்? – இதை எல்லாம் அருணி அக்காவிடம் கேட்டுவிட முடியாது. என்னதானிருந்தாலும் ஒரே ஆட்கள். போதாக் குறைக்கு, ஹேமந்த மேல் அக்காவுக்கு அதீத மதிப்பிருக்கிறது. அவரும் தன்னைப்போல – இந்த பேதங்களைக் கடந்த ஒருவர் என்றுதான் அக்கா நினைத்துக் கொண்டிருக்கிறா. இதை, பாலாவுடன்தான் இரவு பேச வேண்டும்.
பாலா புஸ்கினுக்கு வந்து ஒரு வருடம். ஆரம்பத்தில் அரிச்சுவடியுடன் தொடங்குகிற பாடநெறி அது. முடிகிற கட்டம். ஹேமந்தவும் அப்படி வந்தவர்தான்.
மற்ற எல்லாக் கேள்விகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு கேள்வியைத்தான் ரமணன் கேட்டான்:
“அவ்வளவு தொகையாகத் தமிழர்கள் ருஷ்யாவிலிருந்து இலங்கைக்குத் திரும்புகிறார்களாமா?”
“அதுதானே… அப்படித்தான் வைத்துக் கொண்டாலும் எதுக்காக அவர்களை எல்லாம் பிடிக்கவேணும்? பைத்தியக்காரக் கதைதான் இது… “
கதவைத் தட்டிக் கேட்டது.
போய்த் திறந்தான். பச்சைப் பட்டுச் சேலையும் அதே நிறத்தில் பொட்டுமாய், கீதா புத்துணர்வு பரிமளிக்க நின்று கொண்டிருந்தாள்.
“தூக்கமா?” விழிகள் விரியப் பார்த்தவள், உள்ளே வந்தாள்.
“யாரோ வந்திருக்கிறார்கள் போல?”
“பரவாயில்லை,; அருணி அக்காதான்… வாருங்கள்…” கீதாவின் முகத்தில் ஏதோ பளிச்சிட்டு மறைந்த மாதிரி…
“பரவாயில்லை, நீங்கள் பிஸிபோல… குழப்பி விட்டேனோ? பிறகு பார்க்கலாம்…” என்று திரும்பினாள்.
அவன் தடுமாறினான். இதென்ன? ஏனிப்படி?
வெளியே வந்து பார்த்தபோது, சற்றுத் தள்ளி, வலப்புறமிருந்து ‘லிஃப்ட்’ அறைக்குள் அவள் மறைவது தெரிந்தது.
கதவைச் சாத்திவிட்டு வந்தான்.
“யாரது?”
“கீதா…
“ஏன் உள்ளே வரவில்லை?”
“ஏதோ புத்தகமிருக்கா என்று கேட்கத்தான்…”
தான் சொன்ன சேதிதான் அவனைக் குழப்பியிருக்க வேண்டும் என்று பட்டது அக்காவுக்கு.
“நீ பயப்படாதே, ரமணா… இரண்டு பேரும் ஒன்றாகத்தானே திரும்புவோம். கொழும்பு போய்ச் சேர்கிறவரை நான் உன்னோடு இருப்பேனில்லையா? பிறகென்ன?”
16
இரவு, தூக்கமில்லாமலே போனது. ஜன்னல் வழியே கசிந்த ஒளி, அறையிலிருந்து எல்லாவற்றையும் நிழலுருக்களாய்க் காட்டிக் கொண்டிருந்தது. போர்வையால் இழுத்து மூடியபடி விழித்துக் கிடந்தான். இந்த கீதா!
அப்போது, கொஞ்சம் பொறுத்து, அவளுடைய அறையிலேயே போய்ப் பேசிப் பார்க்கலாமென்றிருந்தது. இவனிருந்த தளத்திற்கு இரண்டு தளங்கள் மேலே, கட்டடத்தின் வடக்குச் சிறகில் அவளுடைய அறை, முந்நாள் பத்து மணிக்கு அங்கிருந்துதான் நெருப்புருண்டையாய், சூரியன் மறைவதை இருவரும் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தார்கள்….
அவளுடைய அறைக்குப் போகிற எண்ணத்தை உடனே கைவிட நேர்ந்தது. இந்த நேரம், எப்படியும் அஞ்ஜனா வந்திருப்பாள், காலையில் பார்த்துக் கொள்ளலாம்…
ஆனால், இப்போது யோசிக்கிற போது, போகாமலிருந்தது கூட அவள் கோபத்தை மேலும் கூட்டியிருக்கும் என்றுதான் படுகிறது… அந்த முட்டாள்த்தனத்திற்கும் சேர்த்து காலையில் விளக்கம் சொல்லவோ, மன்னிப்பு கேட்கவோ வேண்டும்…
லெனின்கிராத்திலிருந்து திரும்பியதிலிருந்து அவளுடன் பேசிப் பொழுதைப் போக்காமல் ஒரு நாளாவது கழிந்ததில்லை. இன்றுகூட, டயறியை எழுதிவிட்டு அவளிடம் போகலாமென்றுதானிருந்தான்… அதற்குள்?
இவளால் தான் லெனின்கிராத் வந்தபிறகு கால்யாவைக் கூடத் தேடிப் போகவில்லை… கால்யாவின் பெயர் வேறு ஏதோ. வியட்நாம் பெண். இங்குள்ளவர்களுக்குக் கஷ்டமாயிருக்கிறதென்று தன் சொந்தப் பெயரை விட்டு இதை வைத்துக் கொண்டதாகச் சொன்னாள்.
இந்தக் கட்டடத்திற்கு முன்னாலிருக்கிற பஸ் தரிப்பில்தான்,
ஒரு சனிக்கிழமை மத்தியானம் அவளைச் சந்திக்க நேர்ந்தது – வந்த புதிதில், பஸ் வந்து, இருவரும் ஏறி, லுமும்பா போவதற்கிடையில் ஏற்பட்ட பழக்கத்தில், அங்கே இறங்க வேண்டியவன் இறங்காமல் அவளுடன் நேரே போனான். இந்த ஊரில் ஒரு விஷேசம் ரிக்கற்றை நீட்டிக்கத் தேவையில்லை – எங்கே ஏறி எங்கே இறங்கினாலும், பஸ் கட்டணம் ஐந்து கோபெக்தான்.
யூகோ-ஸாப்பத்னயா சுரங்க ரயில் நிலையத்து எஸ்கலேட்டர் படியில் பக்கம் பக்கமாய் நின்று இருவரும் கீழே வழுக்கிக் கொண்டிருந்தபோது ரயில் வந்துவிடப் போகிற அவதியில் – தன் அறை எண்ணையும், தன் எண்ணையும் அவசரமாய் அவள் சொல்லிப் போனாள்.
“நாளை பார்த்திருக்கிறேன்….”
தங்களுடைய விடுதிதான் என்ற எண்ணத்தில் எந்த இடம் என்று இவன் கேட்கவுமில்லை.
அடுத்த நாள் மாலை தேடிப் போனபோது, அந்தத் தளத்திலில்லை. அக்கட்டத்தின் எந்தத் தளத்திலுமே அப்படி ருஷ்யப் பெயர் கொண்ட வியட்நாமிய மங்கை ஒருத்தி இருப்பதாக எவருமே சொல்லவில்லை. அவனுக்கு வியப்பும் கோபமும் வந்தன. ஆனால், பொய் சொல்லி அவனை அலைக்கழித்து வேடிக்கை பார்க்க விலாசம் சொன்ன வளாகவும் அவளை நினைக்க முடியவில்லை…
அதற்கடுத்த நாளும் அயலிலிருந்த விடுதியெல்லாம் தேடினான் இல்லை. சரி, போவதற்கிடையில் ஒரு நாளைக்கு சந்திக்காமலா போகிறேன்…
பிறகு, லெனின்கிராத்தில்தான், கஸான்ஸ்கிய் போர் முன்றிலில், ஐஸ்கிரீமும் கையுமாய் எல்லோரும் பேசிக் கொண்டிருந்த மந்தாரமான ஒரு பகற்போரில் – எந்தவித சம்பந்தா சம்பந்தமில்லாமல் – அது பளிச்சிட்டது!
கால்யா, தான் படித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னது, ‘எம்கெயு’வில் அரசுப் பல்கலைக் கழகம். ஏன் அது எனக்கு உறைக்கவில்லை… அந்த விடுதிதான். நிச்சயம்…. மாஸ்கோ திரும்பியதும் போய்ப் பார்த்துவிட வேண்டும் – முடிவெடுத்தான்.
ஆனால், அதற்குப்பிறகு தேவையோ, மனமோ இல்லாமல்…
17
கால்யா மட்டுமா…?
அந்த ரோஹிணி…. இவர்கள் குழுவில் வந்தவள்தான். எம்.எஸ்.ஸி.கெமிஸ்ட்ரி. மதாளித்து வளர்ந்த உயரி, வயதென்னவோ குறைவாய்த்தானிருக்கும். பெத்ரோத்வாரெட்ஸுக்குப் போயிருந்த போது… கீதாவின் கண்களில் எப்படி அது படாது போயிற்று?
இந்தக் குழந்தை இப்படியா என்ற வியப்பும், கீதா கவனித்து விட்டால் என்ற பயமும் தவிர்த்து… தான் செய்தது சரியே என்கிற உணர்வில் – அன்றிரவு ஆறக்கிடந்து யோசித்த போது – அடைந்த திருப்தி…
பிறகு, அடுத்த நாள், ரோஹிணியின் அறையில் அவளையும் – எட்வேட்டோ, றோபேட்டோ என்கிற ஒரு ஆப்பிரிக்கப் பையனையும் அவளின் ரூம்மேற் எக்கச்சக்கமாகக் காண நேர்ந்ததாய் – அந்தக் கதை பெண்களிடையே பரவிப் பரவி…. அருணியும் துளசியும் அளந்து கொண்டிருந்தபோது அது அவன் காதில் விழுந்தது… அப்போது ஏற்பட்ட அந்தக் கழிவிரக்கம் – வலிய வந்ததை விட்டேனே என்று மறுகி… எதற்காக?
இவையெல்லாவற்றையும், அவளிடம் போய், உனக்காகத்தான் செய்தேன் என்று கூறத்தான் முடியுமா? – திருடனுக்குத் தேள் கொட்டிய மாதிரி.
இப்போது அதுவுமில்லை. இதுவுமில்லை.
இந்த உளைச்சல்களோடு ஹேமந்த சொன்ன விஷயம் பற்றிப் பேசலாமென்று, பாலாவைத் தேடி இரண்டு தடவைகள் போனான். இரண்டு தரமும் பாலா அறையிலில்லை. ஹேமந்த சொன்னது மட்டும் உண்மையாயிருந்தால்…? அதெப்படி உண்மையாக இருக்க முடியும்? அபத்தம்… என்றாலும் நாட்டில் நடக்கிற விஷயங்களைப் பார்க்கிறபோது இப்படி ஒன்று நடந்தால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை. முதலில் லீவுக்குப் பட்டபாடு…
பிறகு…லீவு கிடைத்தபிறகு – ரஷ்யாவிலிருந்து திரும்புகிறபோது, இந்தியாவிலும் ஒரு தடவை இறங்கிவிட்டு வந்துவிடலாமா என்ற எண்ணம் வந்தது. இத்தனை காலமாகியும் பக்கத்திலிருக்கிற இடத்திற்கு – அதுவும் எத்தனை தொடர்புள்ள இடத்திற்கு . போகாமலிருந்தது எவ்வளவு முட்டாள்தனம்.paa
அந்த ஏற்பாட்டில் இரண்டு சிரமங்களிலிருந்தன. ஒன்று, ‘எரோ ஃபுளத்’ சென்னைக்குப் போவதாய்த் தெரியவில்லை. மாஸ்கோவிலிருந்து தில்லிக்குப் போய் அங்கிருந்து தான் சென்னை போக வேண்டும். மற்றது; தில்லியிலிருந்து சென்னை, பிறகு சென்னையிலிருந்து கொழும்பு பயணச் செலவுகள்! நேரே வருவதானால் மாஸ்கோ – கொழும்பு பயணச்சீட்டு இலவசம்.
என்றாலும் செலவையும் சிரமத்தையும் பாராமல் வருகிற வழியில் தமிழ் நாட்டையும் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டு மென்று ஆசையாயிருந்தது.
நடராசர் சொன்னார்.
“தம்பி, நீர் ஒரு விவேகி எண்டு நினைச்சிருந்தன்…” கோபச் சூட்டில், ‘நீ’ என்கிற உரிமை போய், ‘நீர்’ ஆகிவிட்டிருந்தது.
“…சும்மா ரஷ்யாவுக்குப் போட்டு வாறனெண்டு சொல்லவே, விசாரணை அது இது என்கிறான்கள்… அதே கையோட இந்தியாவுக்குப் போய்ட்டுவர நினைச்சிரெண்டால், வந்து இறங்கின கையோட அரெஸ்ட்தான் பண்ணுவான். வேறு கதையிராது…”
அதோடு அந்தக் கதை சரி.
18
அருணி அக்கா எங்கே போனா? இன்னமுங் காணவில்லை…
ரமணனுக்குப் பதற்றமாக இருந்தது. எரிச்சலாயும். எட்டு மணிக்கு அவர்களை ‘ஷெர்மெத்தியேலோ’ விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல பஸ் வந்துவிடும். இப்போ ஏழரையாகி விட்டது! என்ன செய்யலாம்?
மூன்றாவது தடவையாக அருணியின் அறைக் கதவைப் போய்த் தட்டிப் பார்த்துவிட்டு வந்தாயிற்று. ஆளில்லை. கோபங் கோபமாக வந்தது. இந்த ஒன்றரை மாதமாகப் பார்க்காத அலுவல்களையா இன்று பார்ப்பது? அதுவும் இந்தக் கடைசி நிமிஷத்தில்?
இன்று ஞாயிற்றுக்கிழமை வேறு. கடை கண்ணியெல்லாம் பூட்டியிருக்கும். ‘ஷொப்பிங்’ கூட இயலாது. எங்கு போனா, அக்கா? மத்தியானம், யாரோ தெரிந்தவர்கள் வீட்டில் ‘லஞ்ச்’ என்று போவதாகச் சொன்னதுதான்… இரவு எட்டு மணி வரையுமா லஞ்ச் நடக்கும்?
தா இன்னொரு விதமாக யோசித்த போது, பயமாகவும், பாவமாகவும் இருந்தது. அக்காவுக்கு எதாவது ஆகியிருக்குமோ…?
தற்செயலாக இந்த ‘ஃப்ளைற்’றைத் தவறவிடால் என்ன ஆகும்? இனி, அடுத்த புதன் இரவுதான். அதற்கும் இடம் கிடைக்குமா? வேறெதும் பிரச்சனை? போதாக் குறைக்கு, நேற்று எல்லோரிடமும் போய் விடைபெற்றுக் கொண்டும் வந்தாயிற்று – ஸெர்கே, வித்தாலி எல்லோரிடமும்… அவர்கள் இன்று எயர்போர்ட்டில் காத்திருக்கவுங் கூடும்.
கையில் காசுகூட இல்லை. மூன்று ரூபிள் சொச்சம்தான் மீதி. இன்று புறப்படுகிற நம்பிக்கையில் அதற்கேற்றாற்போல எல்லாம் செலவழித்துமாயிற்று. ட்ரவலேர்ஸ் செக்காக இருந்த டொலர்களின் நினைவு கொஞ்சம் ஆறுதல் தந்தது….
அக்காவை விட்டுவிட்டுப் போனாலென்ன? அது சரியில்லை. அதோடு கட்டு நாயக்கவில் தனியே போய் இறங்க வேண்டியிருக்கும்… நான் பயப்படுகிறேனோ? ஹேமந்தவுக்கு வெற்றிதான்.
கதவைத் தட்டிக் கேட்டது போய்த் திறந்தாள். அக்காதான்.
இளைக்கக் களைக்க நின்று கொண்டிருந்தா. கூடவே, சுமித்ரா, இங்கே மருத்துவம் படித்துக் கொண்டிருப்பவள் – கொழும்பில் அக்கவுக்கு அறிமுகமான குடும்பத்தைச் சேர்ந்தவள். சுமித்ரா தான் பேசினாள்.
“கருணாகரல தராவற வென்டேப்பா, அய்யே…”
குரலில் வருத்தம் தொனித்தது.
“…. எனது பிழைதான் அக்காவைத் தாமதப்படுத்தியது…”
“இப்போ என்ன செய்யலாம்?”
“நாங்கள் வருகிற போது, பஸ் கீழே வந்து நின்று கொண்டிருந்தது….”
“பஸ் வந்துவிட்டதா?”
“போயும் விட்டது… சுமித்ரா ஆறுதலாகச் சொன்னாள். ரமணனுக்கு எரிச்சலாயிருந்தது. இவளிடத்தில் வேறெதோ வழி இருக்க வேண்டும்…
“நாங்களே எயர்போர்ட்டுக்கு வந்து விடுவதாகச் சொல்லி அனுப்பிவிட்டோம்…”
“எப்படிப் போவது?”
“நா ரக்ஸி….” அவள் இரண்டு கைகளையும் விரித்து நிலத்திற்குச் சமாந்தரமாகப் பிடித்துச் சிரித்தாள்.
“ரக்ஸியா! காசு…? எவ்வளவு ஆகும்…”
“பயப்பட வேண்டாம்… நான் பார்த்துக் கொள்கிறேன், கொஞ்சந்தான்…”
“தாங்க்ஸ்…”
“அதோடு இன்னுமொன்று – இந்த பஸ்ஸில் போனால் இரண்டு மூன்று மணித்தியாலம் ‘எயர்போர்ட்’டில் வீணாக, மினைக்கெட் வேண்டும். ரக்ஸி என்றால் சரியான நேரத்திற்கே போய்விடலாம்…”
“அப்படியென்றால் எத்தனை மணிக்கு? இப்போ, மணி எட்டு…”
“பத்துக்குப் புறப்பட்டாலும் போதும்…”
அப்பாடா! இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு இந்த வாழ்க்கை நீடிக்கப்பட்டிருக்கிறது…
என்ன செய்யலாம்? ஒன்றுமே இல்லை. ஆறுதலாகப் படுத்துக் கொள்ள வேண்டும்.
“சரி, பத்து மணிக்கு வந்து கூப்பிடுகிறேன்…”
சுமித்ரா போய்விட்டாள்.
காலணிகளைக் கழற்றிவிட்டுச் சாய்ந்தான். கட்டில் சில்லென்றிருந்தது. கொழும்பில் போய் இறங்கியதும் என்ன நடக்கும்? சே! அந்த ஹேமந்த சொன்னதெல்லாம் பொய்… பாலாவும் அடுத்த வாரம் திரும்ப வேண்டும். இப்போதே தன்னிடமிருந்த சில புத்தகங்களை யாருக்கோ கொடுத்து விட்டார். புதிய இசையமைப்பில் உருவான பாரதி பாடல் இசை நாடாப் பதிவுகளை அழித்தாயிற்று… யாரிடமோ சொல்லி அந்த ஒலிநாடாவை இந்தியாவிலிருந்து கஷ்டப்பட்டு எடுப்பித்ததாக பாலா சொல்லியிருந்தார். பாவம், பாலா?
‘அச்சமில்லை… அச்சமில்லை…’ காதுகளில் கேட்டது.
வேண்டாம், இப்போ படுக்க வேண்டாம். படுப்பது, எங்கும் படுக்கலாம். விமான இருக்கையைச் சரித்துவிட்டு, நாளையிரவு கொழும்பில் நாளையின்று வீட்டில், எங்குமே படுக்கலாந்தான்…
இப்போ, இந்த இரண்டு மணி நேரத்திற்கு, இந்த ருஷ்யக் காற்றைச் சுவாசித்துவிட வேண்டும் – முடிந்த மட்டும், இனி எப்போது வாய்க்குமோ வாய்க்காமலே போகுமோ…
ஜன்னலருகில் போய் நின்றான், மாலை அழகாக இருந்தது? அந்த, சாம்பல் பூத்த வானம்… உயர்ந்து நிற்கிற லின்டன் மரங்களுக்கடையில் ஒழுங்கு மாறாமல் தெரிகிற அடுக்கு மாடிக் கட்டிடங்கள்…
சற்றுத் தள்ளி முன்னால் தெரிகிற தெரு, 226 பஸ் ஒன்று வந்து நிறுத்தத்தில் நிற்கிறது. கால்யாவைச் சந்தித்த அதே நிறுத்தம்… அவளைப் பிறகு காணவேயில்லை. தேடிப் போகவுமில்லை.
பஸ், யாரோ சிலரை இறக்கிவிட்டுப் புறப்படுகிறது… எங்கள் ஆட்கள்தான்.
கீதா! முன்னால் கபூரும், அஞ்ஜனாவும்.
கடவுளே, போயும் போயும் இப்போதுதானா கீதா கண்களிற் படவேண்டும்…? தெருவிலிருந்து திரும்பி, ‘இன்ஸ்ரிரியூட்’டுக்கு வருகிற பாதையில் மூவரும் வந்து கொண்டிருக்கிறார்கள். கீதாவின் மஞ்சள் சேலை, பளிச்சென்றிருந்தது. தோளில் துணிப்பை.
அன்று – இரண்டு வாரங்களுக்கு முன்பு – எதற்கென்றில்லாமல் கோபித்துக் கொண்டு போனவதான். அதற்குப் பிறகு அந்த நட்பு பழங்கதையாய்…
அடுத்த நாள் பல்கலைக் கழகத்தில் சந்தித்து விசாரித்தபோது,
“நத்திங்… சும்மாதான் வந்தேன்” என்று பதில் வந்தது. அது வந்த விதமே அவனை ஊமையாக்கி விட்டது. வலு சாதாரணமாக எவ்வளவு கஷுவலாகச் சொல்லிவிட்டுப் போனாள்.
கோபித்திருந்தால், அல்லது கவலையைப்பொறாமையைக் காட்டிக் குத்தியிருந்தால், வேலை இலகுவாயிருந்திருக்கும்… ஆனால் இதற்கு?
அதே நிலைதான் பிறகும், காணுகிற போதுகளில், ‘தோப்ரே உத்ரோ…’. ‘ஸ்தராஸ்த்வுச்சியே…’ அல்லது அது மாதிரி ஒன்று, யாரோ சாதாரணமாகத் தெரிந்த ஒருவருடன் பழகுவது போல கோபிக்க இல்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு போகவில்லை. அப்படிப் போயிருந்தால்….
‘நீ விசேஷமானவன். உன் உறவு வித்தியாசமானது’ – என்று ஒப்புக்கொள்கிற மாதிரி ஆகிவிடும். அதை அவள் செய்யவில்லை.
‘நீ எனக்கு யாருமல்ல, சராசரி சகா, பத்தோடு பதினொன்று’ என்கிற இந்தத் தண்டனை! அதுவும் செய்யாத பிழைக்கு!
இரண்டு நாட்களில் அவனுக்கும் ரோஷம் வந்தது. காணுகிற இடங்களில் தானே முந்திக் கொண்டு, ‘காக் தியலா’ சொன்னான். ‘தஸ்விதான்ய!’ சொன்னான். சொல்லிவிட்டு, அதே – போலி உற்சாகப் புன்சிரிப்புடன் அவசரமாகத் தாண்டிப் போனான்…
இதுவும் ஒரு ரயில் சிநேகந்தான் – என்ற உண்மை உறைக்கிற போதுகளில் மனமெலாம் வலிக்கும்…
அருணி அக்கா அதற்குள் ரெடியா? அரை மணித்தியாலம் கூட ஆகவில்லை… வேறெதற்காவது வந்திருக்கலாம்.
கதவைத் திறந்தான்.
கீதா ஒன்றும் பேசாமல் அவனை இடித்துத் தள்ளுவது போல் தாண்டி, உள்ளே வந்தாள். இரண்டு அடி வைத்ததும் தயங்கிய மாதிரி இருந்தது.
“யாராவது உள்ளே..?”
கிண்டலா பண்ணுகிறாள்? நிமிர்ந்து அவளை ஊடுருவினான். இல்லை, அந்தக் கண்கள் அப்படிச் சொல்லவில்லை.
“நோ..” – திறந்தேயிருந்த கதவை இடது கையால் மூடினான். ஏதோ சொல்ல வாயெடுத்தான்.
“வேண்டாம்… நீங்கள் சொல்ல வேண்டாம்…” பேச முடியாமலிருந்தது.
“என் பிழைதான்…”
“பரவாயில்லை…” உள்ளே போனார்கள்.
கீதா நாற்காலியில் உட்கார்ந்து கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தாள்.
“இன்றைக்குத் திரும்புகிறீர்களாமே?” – மீண்டும் குரல் கம்மியது.
‘”ஏன் சொல்லவில்லை? எங்களுக்கு இன்னும் நாலு நாளிருக்கே?”
மற்ற கதிரையைப் பக்கத்தில் இழுத்துப் போட்டுவிட்டு இருந்தான். “எப்படித் தெரிந்தது, இன்று போகிறோமென்று?’
அதைக் கவனியாதவளாக அவள் சொன்னாள்.
“உங்களுக்கும் திரும்புவதற்கு நாட்களிருக்கிறதென்று நினைத்தேன்…”
“இன்றைக்கு சினிமாவுக்குப் புறப்படோம். வழியில், மிஸ்டர் கபூர்தான் சொன்னார். நீங்கள் இன்று திரும்பக் கூடுமென்று. உடனேயே திரும்பிவிட்டேன்… மிஸ்டர் கபூருக்கு நன்றி சொல்ல வேண்டும்.”
“அருணி அக்காவுக்கும்? அவ மட்டும் பிந்தியிராவிட்டால், நாங்கள் இதுவரையில் போயே இருப்போம்…”
“கடவுளே…!”
அவன் மெல்லச் சிரித்தான்.
“இப்போ எல்லாம் சரிதானே?!”
“ம்ம்….”
முன்னால் நேவா பறந்து விரிந்தது.
லிஃப்டிலிருந்து வெளியே வந்த போது, அஞ்ஜனாவும் கபூரும் காத்து நின்றார்கள்.
விடைபெற்றுக் கொள்வதென்பது எவ்வளவு கவலையான விஷயம்.
பெட்டிகளை இழுத்தபடி, முன் வாசலருகேயிருந்த அலுவலக அறையை நோக்கி நடந்தார்கள். வாசற் கதவு திறந்து, அலியும் ரஸாக்கும் வருவது தெரிந்தது.
“ஃப்ளாஷ் கன் கேட்கப் போகிறார். ஆள்… ரமணன், கவனம்…” அக்கா பகடியாகச் சொன்னாள்.
கீதா மெல்லச் சிரித்தாள்.
“என்ன இது…?” கேட்கக்கூடிய தூரத்தில் வந்ததும் ரஸாக் கேட்டான்.
“உங்கள் நாட்டுக்குப் பறக்கறீர்களா?” கையால் விமானம் போல் உயர்த்திக் காட்டினான்.
“யெஸ்!”
“ஏன் விரைவில்? எங்களுக்குத் தெரியாதே…” – ரஸாக்கின் கண்களில் கவலை தெரிந்தது. அந்தக் கறுத்தடர்ந்த புருவங்களில் கீழுள்ள கரிய கண்கள்.
அலியும் அவனும் அக்காவின் கைகளைக் குலுக்கினார்கள். ரமணனிடம் வந்ததும் ரஸாக் கட்டி அணைத்துக் கொண்டான்.
“எடே, ரஸாக்… இவ்வளவு மென்மையானவனா, நீ? நான் தான் முட்டாள். உனக்கு ஃப்ளாஷ்கன்னை ஒளித்தவன்…”
“இனி எங்கே சந்திப்போம்…?” கண்கள் சுருங்க – அது சிரிப்பா, கவலையா – ரஸாக் கேட்டான். பொல்லாத கேள்வி! எல்லோருமே ஒவ்வொரு போதில் ஏதோ ஒரு போதில் – கேட்டுக் கொள்கிற கேள்வி!
இதற்கு என்ன பதிலைச் சொல்வது? இவனும் நானும் சந்திப்பதற்கு இனி இலட்சத்தில் ஒரு பங்குகூட சந்தர்ப்பம் இல்லை. ரஸாக்கும் நானும் இனி பரஸ்பரம் இறந்தவர்கள்? இல்லை, கடிதத் தொடர்பு விரும்பினால் வைத்துக் கொள்ளலாம்.
இந்த நினைவு லேசான ஆறுதல் தந்தது…
“நீங்களுமா…” ரஸாக், கீதாவைக் கேட்டான்.
“இல்லை…”
“எங்கே துளசி? மெஹம்மட்..? வழியனுப்ப வரவில்லை?”
“அவர்கள் காலையிலேயே சொல்லிக்கொண்டு அர்காங் கில்ஸ்கொயே பார்க்கப் போய்விட்டார்கள்…”
அலுவலக அறையில் பார்க்க வேண்டிய வேலைகளை முடித்துக் கொண்டு விடைபெற்று வர, பத்து நிமிடங்கள்..
சுமித்ரா ரக்ஸியுடன் காத்து நிற்கிறாள்.
அக்காவும், சுமித்ராவும் ஏறியாயிற்று. ரமணன், கதவைத் திறந்தபடி கீதாவைப் பார்த்தான்.
என்ன செய்வது இந்த இடத்தில்?
உற்சாகமாகச் சிரிக்க முயன்றான்.
“என் முகவரி?”
“இட் இஸ் வித் மி..”
அவள் கையைப் பற்றிக் குலுக்கி விட்டு, சட்டென்று காருக்குள் ஏறிக் கொண்டான். கைப்பையிலிருந்து கீதா கைக்குட்டையை எடுப்பது தெரிந்தது. “கீதா நீ ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம். நானும் கூடப் போகிறேன் அல்லவா? எயர்போர்ட்டில்…
ரமணன் அக்காவின் கையைத் தட்டினான். அக்கா புரிந்து கொண்டிருக்க வேண்டும்…. வெளியே, கண்களை ஒற்றிக் கொண்டிருந்த கீதா அதைக் கவனித்திருக்க முடியாது….
லெனின் குன்றுகளை ரக்ஸி தாண்டியதும், அக்கா கேட்டா.
“ஏன் ரமணன், ஹேமந்த சொன்ன பிரச்சனைகளைப் பற்றி நீர் கீதாவுக்குச் சொல்லவேயில்லையா?”
“இல்லை…” என்றான் அவன்.
“அதைச் சொல்லி ஏன் அவளைக் குழப்ப வேண்டும்? பாவம்…”
“உமக்குப் பயமில்லையா?”
ரமணன் சிரித்தான்.
ஷெர்மெத்தியேவோ சாலையின் இருபுறமும் மரங்கள் விரைந்து ஓட ஆரம்பித்தன. இன்றும் இருட்டவில்லை என்றாலும், வானில் நிலவு வடிவாகத் தெரிந்தது.
– 1997, புதிய பார்வை.
– விளிம்பில் உலாவுதல் (இலங்கைக் கதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 2007, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வெத்தலை மடிச்சுக் கொடுக்க ஆசையா?
வளர்கவி
September 6, 2026
இதய ஓசைகள்
மா.வீ.தியாகராசன்
September 6, 2026
புயலில் சிக்கிய பூக்கள்..!
காரை ஆடலரசன்
September 6, 2026