உயிர் உனதானதே!
கதையாசிரியர்: லாவண்யா ஸ்ரீராம்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 29, 2026
பார்வையிட்டோர்: 93
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம் – 4

தங்கையை இரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் கணவன் வீட்டில் கொண்டு விடச் சென்றான் கிருபாகரன். மகள் புகுந்த வீட்டுக்குத் திரும்பி வீட்டுக்குச் செல்கிறாள் என்றால் நிச்சயம் வசந்தி குறைந்தது சில பைகளை நிரப்பிவிடுவாள். தோட்டத்தில் விளைந்த காய்கனிகள், வீட்டில் செய்த பலகாரம் என்று நிறைய இருக்கும். தங்கையை உள்ளே அனுப்பிவிட்டு, பைகளை கிருபாகரன் எடுத்து வர, “என்ன கீர்த்தி! பைகளில் ஒன்றையேனும் நீ தூக்கிவரக் கூடாதா? எல்லாம் உன் அண்ணன் தான் எடுத்து வரவேண்டுமா?” என்றார் கீர்த்தியின் மாமனார்.
“அண்ணன் தான் விடவில்லை!” என்றாள் கீர்த்தி.
“விடு விடு செய்யட்டும்! எல்லாம் உனக்கு அண்ணி என்று வரும் வரை தான்! நன்றாக அனுபவித்துக் கொள்! பிறகு உனக்காக ஒரு துரும்பைக் கூட அசைக்க மாட்டான்!” என்றாள் உள்ளிருந்து வந்த மாமியார்.
“என்ன அத்தை, இப்படிச் சொல்கிறீர்கள்? என் தங்கைக்கு எப்போதும் இதே போல் செய்வேன்.”
“அதையும் பார்க்கத்தானே போகிறேன்!”
உடனே கிளம்ப வேண்டும் என்று கிருபாகரன் சொன்னதை ஏற்காமல், மதிய உணவை முடித்துக்கொண்டு தான் கிளம்ப வேண்டும் என்று பெண்கள் இருவரும் சமைக்கச் சென்றுவிட்டார்கள். கதிர் பணிக்குச் சென்றிருந்தான். கிருபாகரனும் கீர்த்தியின் மாமனாரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க, “நேற்று கதிரும் சொன்னான். இந்த முறை விளைச்சல் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று! சிக்கல்கள் எல்லாம் கொஞ்சம் தீரும். அப்படித்தானே!”
“ஆம் மாமா! நேற்று கதிர் மாமா ஒரு யோசனை கூடச் சொன்னார். புது வீடு ஒன்று கட்டுவது பற்றி.”
“அவன் சொல்வதும் சரிதானே!”
“ஆனால் அம்மா அப்பா இதை எப்படி ஏற்பார்கள் என்று தெரியவில்லை! அவர்களுக்கு அந்தப் பழைய வீட்டின் மேல் இருக்கும் பற்று அதிகம்.”
“ஆம் கிருபா! நாங்கள் எல்லாம் கொஞ்சம் பழைய ஆட்கள். சில பற்றுகளை விட முடிவதில்லை. அதுவும் வீடு என்று வரும்போது இன்னும் பிணைப்பு அதிகமாகவே இருக்கும். மெல்லப் பேசிப்பார்! அவர்கள் விருப்பம் பற்றியும் யோசிக்க வேண்டும்.”
கிருபாவுக்குச் சிரிப்பு வந்தது. சந்தியாவின் மாமனார் பேச்சு எப்போதும் இப்படித்தான். ஒரு தரப்புக்குப் பரிந்து பேசுவது மறுதரப்பினரை காயப்படுத்தும் என்று எண்ணி எப்போதும் இரு தரப்பும் சரி என்று பேசுவார். அவர்கள் யாரும் எதிரில் இல்லை என்றாலும் சரி!
“அதெல்லாம் இருக்கட்டும்! அதைவிட முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது.”
“அது என்ன மாமா!”
“உன் கல்யாணம் தான்.”
“அதற்கு என்ன அவசரம் மாமா!”
“இப்போது செய்யாமல் எப்போது செய்வது! கதிருக்கு உன் வயதில்தான் திருமணம் நடந்தது. அதுவே தாமதம் என்று தான் நான் சொல்வேன். நீ இனியும் தாமதிக்கக் கூடாது. அப்பா உடல் நிலை பற்றியும் யோசித்து முடிவெடு!”
“முதலில் இந்தச் சிக்கல்கள் எல்லாம் சரியாகட்டும். பிறகு பார்க்கலாம் மாமா! அப்பாவுக்குச் சரியாகப் பரிசோதனை எல்லாம் செய்து கொண்டு தான் இருக்கிறோம்! அவர் நன்றாக இருக்கிறார்.”
“பிரச்சனை தீர்ந்தால் தான் கல்யாணம் என்றால் யாரும் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று சொல்வார்கள். யாருக்குத் தான் சிக்கல்கள் இல்லை? பிரச்சனை இல்லாத ஒருவரைக் காட்டு!”
“அப்படி இல்லை மாமா! இப்போது கல்யாணம் என்றெல்லாம் யோசிக்க முடியாது! முன்பே பெண் வீட்டில் வேண்டாம் என்றது, அம்மாவுக்குப் பெரிய கவலை. இன்னொருமுறை அப்படியானால் அம்மாவுக்கு மிகவும் வேதனை கூடிவிடும்.”
“சென்ற முறை நான்தான் பெண் வீட்டாரை அறிமுகம் செய்து வைத்தேன். ஆனால் அவர்கள் இப்படிச் செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.”
சந்தியாவின் மாமனார் அறிமுகப்படுத்திய பெண் வீட்டில், குடும்பம் பற்றி சொன்னதும் சம்மதித்தவர்கள், பிறகு நேரில் வந்து பார்த்த போது ‘திருமணம் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்கள். அதைத்தான் குறிப்பிட்டார்.
‘இனி அப்படி எதுவும் நடக்காது’ என்று பெரியவர் வெகுவாக கிருபாகரனை மூளைச் சலவை செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார். அதற்குள் கீர்த்தி உணவு தயார் என்று அழைத்தாள். உண்ணும்போதும் அதே பேச்சைத் தொடர்ந்தார் பெரியவர்.
திரும்பி வரும் வழியில் கிருபாகரன் யோசித்தான். இப்போது அவன் இருக்கும் நிலைமை பற்றிச் சொன்னால் எந்தப் பெண் திருமணத்திற்குச் சம்மதிப்பாள். பெரியவர் சொன்னது போல் ஒன்றுக்கும் வழி இல்லாமல் இல்லைதான். ஆனால் இப்போது அவர்கள் குடும்பத்திற்கு ஊரில் ஒரு பிரத்தியேகப் பெயர் இருக்கிறது: வாழ்ந்து கெட்ட குடும்பம்.
தாத்தா தலைமுறையில் ஊரில் அவருக்குப் பெரிய செல்வாக்கு. ஊர் திருவிழா முதல் பொது விஷயம் எதுவாக இருந்தாலும் தாத்தாவிடம் கலந்து ஆலோசிக்காமல் எதுவும் செய்ய மாட்டார்கள். அதிகப்படி ஆகும் செலவுகளை எல்லாம் ஏற்கும் மனிதரை மதிக்காமல் எப்படி இருப்பார்கள். பிறகு தந்தை இதுபோல் விஷயங்களில் முன் நின்று செய்யவில்லை என்றாலும், அவருக்கும் நல்ல மரியாதை. ஆனால் பொருளாதார நிலைமை மோசமானதால் எல்லோரும் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தார்கள். இவரால் இனி செலவுகள் செய்ய முடியாது என்று ஒதுங்கியதா? இல்லை அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற பரிவா? கிருபாகரனுக்கு அதில் இன்னும் உறுதி இல்லை.
ஒரு வீடு போனதால் எல்லாம் போய்விடவில்லை. வீட்டைச் சுற்றி இருந்த விலை நிலம், பொன் விளையும் பூமி என்று கருதப்பட்டது.
அது மொத்தமும் இப்போது பிணையில் இருக்கிறது. அதை மீட்கக் கையிலிருந்த தொகையை நிறைய இழந்தாயிற்று. சரியாக ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தப் பிரச்சனை தொடங்கியது.
தொழில் நன்றாக சென்று கொண்டிருக்கிறது என்று நினைத்த நேரத்தில், அரசாங்க விதி மீறல்கள் நடந்திருப்பதாக அதிகாரிகள் வந்து மனைகள் விற்பனையை நிறுத்தினர். ஏற்கனவே விற்ற மனைகளையும் கையகப்படுத்தினர். அதை வாங்கிய வாடிக்கையாளர்கள் தங்கவேலு, துறை இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தார்கள். சிறை செல்வதில் இருந்து தப்பிக்க தங்கவேலு அவர் சொத்துக்களை அடமானம் வைத்து வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திரும்பக் கொடுத்தார். ஆனால் அடுத்தடுத்து வந்த சிக்கல்கள் வீட்டையும் நிலத்தையும் மீட்க முடியாமல் செய்தது.
அடுத்த இருவருடம் மழையும் சரியாக இல்லை. குடும்பத்தின் வருமானமும் வெகுவாகக் குறைந்தது. விவசாயத்தில் வரும் வருமானம் அப்படியே சேமிப்புக்கு சென்ற காலம் மாறி, வட்டிக்கும், அசலைச் சேர்ப்பதற்கும் கரைந்தது.
நிலைமை எங்கே இன்னும் மோசமாகிவிடுமோ என்ற பயத்தில் செலவுகளை வெகுவாகக் குறைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். சிறந்த கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த கிருபாகரன், இடையில் படிப்பை நிறுத்தினான். பொருளாதார சிக்கல்கள் தந்தையை நிலைகுலையச் செய்திருந்தது. வெளிஊரில் படித்துக்கொண்டிருந்த கிருபாகரனுக்குத் தந்தையுடன் இருப்பது முக்கியமாகப் பட்டது. அப்போதைக்கு படிப்புக்கு முழுக்குப் போட்டான். அதன் பின் தொடர முடியாமல் போனது. வீட்டில் பெண்ணை நல்லபடியே திருமணம் செய்து அனுப்பிவிட வேண்டும் என்று அப்போதும் மீதம் இருந்ததை எல்லாம் வைத்து விமர்சையாகவே திருமணம் செய்து வைத்தார்கள்.
சில நாட்களாகக் கொஞ்சம் நிலைமையில் முன்னேற்றம். ஆனால் அதற்காகத் திருமணம்பற்றி யோசிக்கும் அளவுக்கு நிலைமை சரியாகிவிடவில்லை. கீர்த்தியின் மாமனார் சொன்னது போல் திருமணத்தைப் பற்றி யோசித்தாலும் எந்தப் பெண் இவனைத்
திருமணம் செய்யச் சம்மதிப்பாள்? கிருபாகரனுக்குக் குறை என்று சொல்ல முடியாது. பட்டப்படிப்பு இல்லை, நிலையான வருமானம் என்று இல்லை. விவசாயம் செய்யும் ஒருவன் என்றால் இந்த காலத்துப் பெண்கள் எத்தனை பேர் மணக்க சம்மதிப்பார்கள்? அவனுக்குக் கிடைத்திருந்த முன் அனுபவங்கள் அப்படி.
அவர்கள் நிலையை யோசித்தபடி, வீடு வரவும் வீட்டில் பெற்றோர்கள் அதையே பேசினார்கள். மகன் குடும்பத்தைப் பற்றி அதிகம் யோசித்து, அவன் திருமணம்பற்றி யோசிக்கவில்லை என்று கலங்கிக்கொண்டிருந்தார்கள்.
அவன் வீட்டில் நுழைந்ததும், “அத்தை மாமா என்ன சொன்னார்கள்?” என்றாள் வசந்தி.
“ஒன்றும் சொல்லவில்லையே!”
“திருமணம்பற்றிப் பேசவில்லையா?”
வியப்பாக, “உங்களுக்கு எப்படித் தெரியும்? அதற்குள் உங்களுக்கும் சொல்லிவிட்டார்களா?”
“உன் அம்மா சொல்லித்தான், மாமா உன்னிடம் பேசினார்” என்று தந்தை சொன்னதும் அன்னையைப் பார்த்தான்.
ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கிறது என்பது கிருபாகரனுக்குப் புரிந்தது.
திருமணம்பற்றிப் பேசினால் பெற்றோர்களை எளிதாக வேறு திசையில் திருப்பிவிடுவது கிருபாகரனுக்குச் சுலபமான ஒன்று.
“பிறகு, நாங்கள் சொன்னால் நீ தான் பிடிகொடுத்தே பேசுவதில்லையே! அதனால் தான் மாமாவிடம் சொன்னோம்.”
“அம்மா! உங்களுக்கு எத்தனை முறை சொல்வது? இன்னும் ஒரு இரண்டு வருடம் ஆகட்டும்” என்றான் மகன்.
“இரண்டு வருடம் என்றால் உனக்கு முப்பதைத் தாண்டிவிடும். அதுவரை என்னால் பொறுத்திருக்க முடியாது. நம் வீட்டுக்குச் சீக்கிரம் மருமகள் வர வேண்டும்.”
“அவன் தான் இப்போது வேண்டாமென்கிறானே. திருமணம் செய்து கொள்ளப்போவது அவன். அவன் விருப்பத்திற்கு விடு” என்ற கணவனைப் பார்த்துவிட்டு, “நீங்கள் பேசாதீர்கள். வீட்டில் ஒரு மாறுதல் வேண்டும் என்றால் மருமகள் வர வேண்டும்.”
கணவன் உடல்நிலையை மனதில் வைத்துத்தான் வசந்தி அவசரப்படுத்துகிறாள் என்று வெளிப்படையாக அங்கே சொல்ல முடியவில்லை.
“மருமகள் வந்தால் உனக்கு என்ன மாறிவிடும்?” என்றார் தங்கவேலு.
“நீங்கள் இருவரும் தோட்டம், வேலை, சந்தை என்று சென்றுவிடுகிறீர்கள். கீர்த்தி திருமணம் முடிந்து வேறு வீட்டுக்குப் போய்விட்டாள். நாள் முழுவதும் தனியே இருக்கிறேன். தனியே இருக்கும்போது கண்டதை எண்ணி கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன்.”
“தினமும் உங்களுக்குத் துணையாகத் தோட்டத்தில் வேலை செய்பவர்களில் யாரையாவது அனுப்புகிறேன்.” என்றான் கிருபாகரன்.
“நல்ல கதைதான். வெளி ஆட்களிடம் பேச ஒரு அளவு இருக்கிறது. உன்னிடம் பேசுவது போல் அவர்களிடம் பேச முடியுமா? மனதில் இருப்பதை எல்லாம் கொட்ட முடியுமா?” என்று வசந்தி சொல்ல,
“நீ உன் பிள்ளைக்கு வாழ்க்கைத் துணை தேடவில்லை. உனக்குப் பேச்சுத் துணை தேடுகிறாய்!” என்றார் தங்கவேலு.
“இரண்டும் தான்!” என்று வசந்தி முடிக்கும் முன், “அப்படி எல்லாம் ஆசைகளை வளர்த்துக்கொள்ளாதீர்கள் அம்மா! இந்தக் காலத்தில் பேசுவதற்கும், பேசுவதைக் கேட்பதற்கும் கூடச் சங்கடப்படும் ஆட்கள் இருக்கிறார்கள்.”
“நம் வீட்டுக்கு வருபவள் அப்படி எல்லாம் இருக்க மாட்டாள்.” என்ற வசந்தி மேலும் பேசினாள்.
“பெண்ணின் தந்தை பக்கத்து ஊரில் பிறந்தவர்தான். பெங்களூரில் வேலை என்று பல வருடங்களுக்கு முன் இங்கிருந்து சென்றுவிட்டார். இப்போது குடும்பம் எல்லாம் அங்கேதான். இரண்டு மகள், ஒரு மகன். மூத்த மகளைத்தான் கிருபாவுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.”
“யார் சொன்னார்கள்?” என்றார் தங்கவேலு. மகனை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று மட்டும்தான் அவர் எண்ணி இருந்தார். ஆனால் மனைவி ஒரு படி மேலே சென்று ஒரு பெண்ணை பார்த்து வைத்திருக்கிறாள் என்பது அவருக்கே புதிய செய்தி.
“முத்து அண்ணன்!”
“அவனுக்கு வேறு வேலை இல்லை! தெரிந்தவர்கள் வீட்டில் திருமண வயதில் யாரேனும் இருந்தால் போதும்! வரன் தேடத் தொடங்கிவிடுவான்.”
“நீங்கள் அண்ணனை ஒன்றும் சொல்லாதீர்கள். அவர் ஏற்பாட்டால் தான் கீர்த்திக்கு நல்ல இடத்தில் திருமணம் முடிந்தது. அதனால்தான் அவரிடம் பேசினேன். பெரிய இடம் என்று பார்த்தால்தானே, நம்மை நிராகரிப்பார்கள். குடும்பம் மட்டும் நல்ல மாதிரி இருந்தால் போதும் என்று சொன்னேன்!
மனைவி முகத்தை ஆராய்ந்தார் தங்கவேலு. மகனுக்கு அவர்களின் தகுதி அதாவது முன்பிருந்த தகுதிக்குக் குறைவான இடத்தில் பெண் தேடவேண்டிய நிலை என்ற வருத்தம் வசந்திக்கு இருக்கும். மனைவி சங்கடப்படும் முன் பேச்சைத் திசை மாற்ற எண்ணினார்.
“பெங்களூரு என்கிறாய்! பெண் நகர்ப்புறத்தில் வளர்ந்திருக்கிறாள். நம் ஊரெல்லாம் அவளுக்கு ஒத்து வருமா?”
“எனக்கும் சரியாகத் தெரியவில்லை.”
“பெரிய நகரத்திலிருந்தவளுக்கு, இங்கே என்ன சௌகரியம் இருக்கும்?”
“எனக்கும் கொஞ்சம் குழப்பம் தான். ஆனால் குடும்பம் ரொம்ப நல்ல மாதிரி. பெண் கேட்டுப் பார்க்கிறேன் என்று முத்து அண்ணன் சொன்னார்.”
“வேறு என்ன சொன்னார்?”
“குடும்பத்தில் மூன்று பிள்ளைகளாம். மூவரையும் படிக்க வைத்திருக்கிறார்கள். அதனால் படிப்பிற்கே அதிக செலவுகள் செய்ததால், திருமணத்திற்கு அதிகம் செய்ய முடியாதாம். நம் விருப்பம் எப்படி? என்று கேட்டார். நமக்கு வசதியெல்லாம் வேண்டாம். நாம் பார்க்காததா! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”
கிருபாகரன் அதுவரை திருமண பேச்சை நிராகரிக்க முக்கியமான காரணம், அவர்களின் நிலை என்பதை விட, வசந்தியின் எதிர்பார்ப்பு. பெரிய வசதி நிறைந்த குடும்பத்தில்தான் பெண் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாள். அதற்காக அவளுக்குப் பணத்தின் மேல் பிரியம் அதிகம் என்று சொல்லிவிட முடியாது. முன்பு தன் மகனை நிராகரித்துச் சென்றவர்களைவிட வசதியான இடமாகப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்து, நிராகரித்தவர்கள் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்கிற எண்ணம்.
கிருபாகரனுக்கு வசந்தியின் எண்ணப் போக்கு சரி என்று படவில்லை. என்றாலும் அன்னையிடம் அதுபற்றி அவன் பேசவில்லை. ஏதோ பிள்ளை தாயிடம் குறை தேடுகிறான் என்று நினைத்துவிடக்கூடாதே!
சீமான் வீட்டு மகளாகப் பிறந்து வளர்ந்து, அதைவிடப் பெரிய பெயர் பெற்ற குடும்பத்தில் மருமகளாக வாழ்ந்த வசந்தி வேறுவிதமாக யோசித்தால் தான் ஆச்சரியம்.
இப்போது வசந்தி கணவனையும் மகனையும் ஆச்சரியப்பட வைத்துவிட்டாள். சாதாரண குடும்பத்திலிருந்து வரும் பெண்ணானாலும் பரவாயில்லை என்று அவள் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தாலும், அவள் இந்த முடிவை எடுக்கக் காரணமாக இருந்த இரு ஆண்களின் இயலாமை இருவரையும் தாக்கியது.
“எல்லாம் சரி தான்! ஆனால் நீ அதிகம் ஆசையை வளர்த்துக்கொள்ளாதே! இப்போது தான் பெண் வீட்டில் கேட்கப் போகிறார்கள். என்ன பதில் வேண்டுமானாலும் வரலாம்.”
“இந்த முறை எல்லாம் நல்லதாக நடக்கும்!” என்றாள் நம்பிக்கையுடன்.
“சரி பார்ப்போம்.”
வசந்தி நம்பிக்கையுடன் இருக்க, கிருபாகரனுக்குக் கொஞ்சம் கலக்கம்.
பெங்களூரில் வளர்ந்த பெண் என்றால் இங்கே எப்படி இருப்பாள்?
வெறும் ஓட்டு வீடு. நகர்ப்புறத்தில் இருக்கும் ஐநூறு சதுர அடிக்கும் குறைவாக இருக்கும் வீடுகளை ஒப்பிட்டால், இந்த வீட்டைக் குறை சொல்ல முடியாதுதான். வாசல், இருபுறமும் திண்ணைகள், முற்றம், கூடம், பெரிய பெரிய அறைகள் என்று சில ஆயிரம் சதுரடியில் வீடு. ஆனால் நகர்ப்புற வீடுகளைப்போல் வழுவழு தரை, அறையை ஒட்டிய குளியல் அறை என்றெல்லாம் இந்த வீட்டில் இல்லை. நாகரீக அமைப்புகள் எதுவும் இல்லையே! அதுவும் பெண் நிறையப் படித்திருப்பதாக வேறு சொல்கிறார்கள். முன்பு நடந்த நிராகரிப்புக்கான காரணம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. பட்டப் படிப்பு இல்லாதவன். நிலையான வருமானம் இல்லாதவன்.
கிருபாகரன் அன்றைக்கு இன்னொரு ஏமாற்றத்தைச் சந்திக்கும் நிலை வரக்கூடாது என்று வெகுவாக ஆசைப்பட்டான். ஆனால் அவன் கையில் என்ன இருக்கிறது?
அத்தியாயம் – 5
திவ்யாவுக்கு சங்கடமாகக்கூட இருந்தது. அன்னையை வேதனைப்பட வைத்துவிட்டோமோ என்று. ஆனால் திவ்யாவின் மனவேதனையை யாரிடம் சொல்ல முடியும்? யாரும் அவளைக் கொடுமைப் படுத்தவில்லைதான். தாத்தா பாட்டி அவளைத் தலையில் வைத்துத்தான் கொண்டாடினார்கள்.
அவளுக்கு நினைவு தெரிந்ததிலிருந்தே, அவள் தாத்தா வீட்டில் அவள் வைத்ததுதான் சட்டம். வீட்டில் என்ன சமைப்பது, தோட்டத்தில் என்ன செடி வைப்பது, அன்று பள்ளிக்கு அவளுக்குத் தலையில் சூடும் பூ எது? ஏன், தாத்தா பாட்டி உடுத்தும் உடை கூட அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால் உடனே மாற்றிவிட வேண்டும். இந்தச் சிக்கலில் அவள் மாமா மகேந்திரன் கூடச் சில முறை மாட்டிக்கொள்வதுண்டு. அவ்வப்போது உமாவும் பிள்ளைகளைத் தன் அன்னையின் வீட்டில் விடுவாள். மீண்டும் சில நாட்களில் காவ்யா, சங்கர் இருவரை மட்டுமே அழைத்துச் செல்வாள்.
விடுமுறையில் பாட்டி தாத்தா வீட்டுக்கு வரும் காவ்யாவிடமும், சங்கரிடமும் திவ்யா தன் அதிகாரத்தைத் காண்பிப்பாள். ஆனால் அவர்கள் இருவரும் ஒரே வாக்கியத்தில் திவ்யாவைச் சோர்வடையச் செய்துவிடுவார்கள்.
“நீ இப்படி எல்லாம் அதிகம் தொல்லை செய்வதால்தான் அம்மா அப்பாவுக்கு உன்னைப் பிடிக்கவில்லை. அதனால்தான் உன்னை இங்கே விட்டுவிட்டார்கள். எப்போதும் உன்னை அவர்களுடன் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்” என்பாள் காவ்யா.
அது உண்மையோ! என்று கூடத் தோன்றும் திவ்யாவுக்கு. அவளின் சுட்டித்தனம் எல்லாம் மெல்ல காணாமல் போகும். இதுதான் தங்கையை அடக்கும் வழி என்று காவ்யா புரிந்துகொண்டாள். துணைக்கு சங்கரையும் சேர்த்துக்கொள்வாள். உடன் பிறந்து
இருவரும் ஒரே மாதிரி சொல்லச் சொல்ல திவ்யாவும் அதுதான் உண்மையோ என்று நம்பத் தொடங்கினாள்.
திவ்யா பாட்டி தாத்தாவிடம் கேட்பாள். அவர்கள் “அப்படி எல்லாம் இல்லை! எங்களுக்கு உன்னை மிகவும் பிடித்ததால் எங்களுடன் வைத்துக்கொண்டோம்!” என்பார்கள்.
“உங்களுக்குப் பிடிக்கும்! ஆனால் அம்மா அப்பாவுக்கு என்னைப் பிடிக்கவில்லை தானே!” என்பாள்.
“அப்படி எல்லாம் இல்லை! அம்மா அப்பா இரண்டு பேரும் வேலைக்குச் செல்வதால், உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்வோம் என்று எங்களிடம் விட்டுவிட்டார்கள்.”
“காவ்யா அக்காவையும், சங்கரையும் ஏன் இங்கே அனுப்பவில்லை?”
“வயசாகி விட்ட எங்களால் மூன்று பேரையும் பார்த்துக்கொள்ள முடியாதே!”
“இம்முறை நானும் அம்மாவுடன் அவர்கள் வீட்டுக்குப் போகட்டுமா?”
உண்மையில் பாட்டிக்கு அப்போது உறுதியாகச் சொல்ல முடியவில்லை. உமா சில வருடங்களில் மகளை அழைத்துக் கொள்வாள் என்றுதான் நினைத்திருந்தார். ஆனால் அப்படி ஒரு எண்ணம் அவர்களிடம் இருப்பதாகவே தெரியவில்லை.
பேத்தியின் பேச்சு பாட்டிக்கும் கவலை தந்தது. ‘என்னைப் பிடிக்கவில்லையா?’ என்று திவ்யா கேட்டதும், அவளுக்குள் பெரும் வருத்தம் இருப்பதை உணர்ந்துகொண்டார் அவர்.
என்னதான் சமாதானம் சொன்னாலும், திவ்யாவுக்கு மனதில் ஒரு வருத்தம் இருந்துகொண்டே இருந்தது. மீண்டும் மீண்டும் திவ்யா அதே பேச்சை எடுக்க, அவள் ஏக்கம் எல்லோருக்கும் புரிந்தது. ஆனால் அவளை அவர்களுடன் அழைத்துச் செல்ல முடியாத நிலைமை உமா கணபதி இருவருக்கும். உமா அப்போது தான் ஒரு
வேலையில் சேர்ந்திருந்தாள். பெங்களூரில் இரு பிள்ளைகளை நல்ல பள்ளியில் படிக்கவைக்கவே, உமா வேலைக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது. மூன்று பேரின் படிப்பு என்றால் சமாளிப்பது மிகவும் கடினம் என்று எண்ணினார்கள்.
முதலில் பள்ளி செல்லும் வயது வரும் வரை திவ்யா பாட்டி தாத்தாவுடன் இருக்கட்டும் என்று தான் எண்ணினார்கள். ஆனால் இப்போது எண்ணம் மாறிவிட்டது. காவ்யாவுக்கும் சங்கருக்கும் ஒத்துப்போகும் அளவுக்குத் திவ்யாவிடம் பிள்ளைகள் இருவருக்கும் ஒத்துப்போகவில்லை. மூவரும் ஒன்றாக இருந்தால், எப்போதும் திவ்யா மேல் ஏதாவது குறை, புகார் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். சிலமுறை கட்டி உருள்வது கூட நடக்கும். அதனாலேயே திவ்யாவை அவர்களுடன் வைத்துக்கொள்ளும் எண்ணத்தைக் கைவிட்டார்கள். திவ்யாவும் அதை விரைவிலேயே அறிந்துகொண்டாள். பிள்ளைகள் எல்லோரும் வெளியே விளையாடுகிறார்கள் என்று உமாவும் அவள் அன்னையும் சமையல் அறையில் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“உமா! திவ்யாவை இம்முறை உன்னுடன் அழைத்துச் செல்லப்போகிறாயா?”
வழக்கம்போல், அக்காவும் சங்கரும் அவளைச் சேர்த்துக்கொள்ளவில்லை என்று வீட்டருகில் ஓடிவந்தவள், அவளைப் பற்றிப் பாட்டி பேசுகிறார்கள் என்று வேகமாகச் சமையல் அறைக்கு ஓடினாள். அவள் அங்கே செல்லும் முன் அன்னையின் பேச்சு அவளை அப்படியே நிறுத்தியது.
“அவள் இங்கேயே இருக்கட்டும். என்னுடன் வேண்டாம்!” இது அன்னையின் குரல்.
“அவளுக்கு விவரம் எல்லாம் தெரிய ஆரம்பித்துவிட்டது. ‘நான் மட்டும் ஏன் இங்கே இருக்கிறேன்?’ என்று அடிக்கடி கேட்கிறாள்.”
“உங்களுக்கு அவள் ஏதும் சிரமம் தருகிறாளா?”
“அதெல்லாம் ஒன்றும் இல்லை. அவள் இங்கே இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் குழந்தை மனம் வாடுகிறது.”
“புரிகிறது அம்மா! பெங்களூரில் பள்ளிகள் எல்லாம் அதிக செலவு. இருவரைப் படிக்க வைக்கவே கொஞ்சம் சிரமாக இருக்கிறது. திவ்யாவும் அங்கே வந்தால் மூன்று பேரையும் ஒரே பள்ளியில் சேர்க்க வேண்டும். ஒருவரை நல்ல பள்ளியிலும் இன்னொருவரைக் கொஞ்சம் சுமாரான பள்ளியிலும் சேர்க்க முடியாது. அப்படி செய்தால் அதுவே அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு வரக் காரணம் ஆகிவிடாதா!”
“அப்படியானால் மூன்று பேரையும் ஃபீஸ் குறைவாக இருக்கும் பள்ளியில் சேர்ப்பது தானே! இப்போதே திவ்யாவுக்கு அவள் உடன் பிறந்தவர்களுடன் ஒட்டுதல் இல்லை. அவர்களும் இவளை ஒதுக்குகிறார்கள். இது நல்லதல்ல. மூவரும் ஒரே இடத்தில் இருந்தால்தான் சரிவரும்.”
“நீங்களே சொல்கிறீர்கள்! அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று. திவ்யாவுக்கு நீங்கள் அதிகம் செல்லம் கொடுத்துவிட்டீர்கள். காவ்யாவிடமோ, ஷங்கரிடமோ கொஞ்ச நேரம் கூட சண்டை இல்லாமல் இருப்பதில்லை. இப்போது நான் வேலையிலிருந்து தாமதமாக வந்தாலும், காவ்யாவும் சங்கரும் ஒன்றாக அமைதியாக விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதுவே திவ்யா இருந்தால் மூன்று பேரும் அடித்துச் சண்டை போடுகிறார்கள். என்னால் எப்படி நிம்மதியாக வேலைக்குப் போக முடியும்?” என்றாள் உமா.
“இப்போது கூட அவர்கள் இருவருக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை நீ திவ்யாவுக்குத் தரவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.”
“நான் அவரிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்.”
அவர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்று திவ்யாவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் இம்முறையும் உமா திவ்யாவை அழைத்துச் செல்லவில்லை. அதன் பின் சில வருடம் கோடை விடுமுறை முடியும் தருணத்தில் திவ்யா ஒரு சின்ன
ஆசை கொள்வாள், இந்த வருடம் பெற்றோர் அழைத்துச் செல்வார்கள் என்று.
திருச்சியில் தாத்தாதான் அவளைப் பள்ளியில் சேர்த்தார். ஒருமுறை கூட உமாவோ கணபதியோ வந்ததில்லை. திவ்யாவுக்கு அவள் பெற்றோருடன் இருக்க வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. அதுவே மனதிலிருந்து கொண்டு இருக்க, அவள் சுட்டித்தனம் மெல்லக் குறைய, அதை முதலில் தாத்தா கண்டுகொண்டார். பேத்தியின் மனவருத்தத்தைப் போக்க அவள் கேட்கும் பலதும் செய்வர். மாமா கூட அப்படித்தான்.
ஆனால் நகர்ப்புறத்தில் வளரும் காவ்யா, சங்கர் முன் அவள் சாமர்த்தியம் குறைந்தவளாகத்தான் தெரிந்தாள். காவ்யா, சங்கர் போல் தான் இல்லை என்ற தாழ்வுமனப்பான்மை திவ்யாவைப் பற்றிக்கொள்ள, திவ்யாவுக்கு கிடைக்கும் சௌகரியங்கள் மற்ற இருவருக்கும் அவள்மேல் பொறாமையை அதிகரித்தது. மாமாவுக்கு திருமணம் முடிந்து அத்தை என்று ஒருவர் வந்த பிறகு சிறுவயதிலிருந்த திவ்யா முற்றிலும் மாறியிருந்தாள்.
திவ்யாவின் மாறுதல் அவள் உடன் பிறந்தோருக்கு அவளிடம் இணக்கத்தை ஏற்படுத்திவிடவில்லை. ஒருகட்டத்திற்கு மேல் திவ்யாவும் விலகியே நிற்கத் தொடங்கினாள். இனி தாத்தா பாட்டிதான் எல்லாம் என்று நினைக்கத் தொடங்கினாள். இரவில் பல நாள், ‘பெற்றோருக்கு அவள் ஏன் முக்கியமில்லாதவளானாள்?’ என்று யோசிப்பாள். உடன்பிறந்தோருடன் அவள் நல்லபடியே நடந்து கொள்ளவில்லை என்று அன்னை சொல்லியிருந்தாலும், காவ்யா கூட அவளிடம் எப்போதும் சண்டை பிடித்துக் கொண்டுதான் இருக்கிறாள். காவ்யாவுக்கும் இருவரின் சண்டையில் சரிபாதி பங்கு இருக்கிறதுதான். ஆனால் அவள் எப்போதும் அம்மாவுடன் இருக்கிறாள். யாரும் அறியாமல் பல நாள் கண்ணீர் வடித்தாள். எல்லாம் இரவில் மட்டும்தான். தாத்தா பாட்டி முன் உற்சாகத்துடன் தான் சுற்றித் திரிவாள். தினமும் பார்ப்பவர்களுக்கு அவள் முகத்தில் இருக்கும் வேறுபாடுகள் தெரியாமல் போகுமா?
திவ்யா எந்த விதத்திலும் சோர்ந்துவிடக் கூடாது என்று தாத்தா எந்நேரமும் அவளுக்குப் பல விஷயங்கள் சொல்லித்தருவார். எல்லாம் அவர் அனுபவத்தின் பாடங்கள். எதில் மகிழ்ச்சி, எதில் நிம்மதி, எதில் திருப்தி என்று கொஞ்சம் அவள் வயதுக்கு அதிகப்படியான வேதாந்தங்களும், சித்தாந்தங்களும்தான். ஆனால் ஒருவர் எந்நேரமும் அவளுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று வரும்போது அதைத் திவ்யா எப்படி மறுப்பாள். அதே போல் தாத்தா பேச்சு அப்படி ஒன்றும் சலிப்பு தட்டும் அளவுக்கு இருக்காது.
மனிதர்களிடம் எப்படிப் பழக வேண்டும், ஒருவரை எப்படி அறிந்துகொள்ள வேண்டும் என்று தொடங்கி எதிர்கால திட்டம், சேமிப்பு, அவர் எப்படி அவர் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார் என்று நிறையச் சொல்வார். வீட்டின் வரவு, செலவு பற்றியெல்லாம் அவளுக்குக் கற்றுத் தந்தார். ஒன்றை கற்றுத் தர நினைத்து அவர் செய்தது அவளுக்கு இன்னொன்றைத் தெளிவுபடுத்தியது.
“திவ்யா” தந்தையின் குரல் முன் அறையில் கேட்டது.
மெல்ல முன்னறைக்கு வந்தாள். “என்னம்மா! அறைக்குள்ளேயே இருக்கிறாய் போல! உன்னுடன் சாப்பிடலாம் என்று தான் மதியம் ஒருமணி நேரம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு வந்தேன்!” என்றார்.
அன்னையின் வேலையாக இருக்க வேண்டும். தந்தைக்கு அழைத்துச் சொல்லியிருக்க வேண்டும். காலையில் சென்ற காவ்யாவும், சங்கரும் இன்னும் வரவில்லை.
மதிய உணவை முடித்துக்கொண்டு கிளம்பும் முன் திவ்யா பேசினாள். “உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்.”
“என்னம்மா?”
“என்னை ஏன் சென்னைக்குச் செல்ல வேண்டாம் என்றீர்கள்?”
“சென்னையில் நமக்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. உன்னை எப்படி அங்கே தனியே அனுப்புவது என்றுதான் வேண்டாம் என்று விட்டோம். இப்போது வேலைக்குப் போய் நீ என்ன
செய்யப்போகிறாய்? இத்தனை வருடம், தாத்தா வீட்டில் தானே இருந்தாய். கல்யாணம் என்று ஆனதும் உன் புகுந்த வீட்டுக்குச் சென்று விடுவாய். அதுவரை எங்களோடு சந்தோசமாக இரு.”
திவ்யாவுக்கு இரண்டு முக்கியமான விஷயங்கள் தோன்றியது. அவள் தாத்தா வீட்டில் இருக்கவில்லை. அவளைத் தாத்தா வீட்டில் விட்டுவிட்டார்கள். சந்தோசமாக இந்த வீட்டில் இருப்பது பற்றி அவளுக்குச் சந்தேகமே. தோன்றியதை உடனே கேட்டு விட வேண்டாம் என்று நினைத்தாள். “எல்லோரும் கிளம்பி விட்டால், நான் தனியே என்ன செய்யப் போகிறேன். இங்கே ஏதாவது ஒரு வேலை தேடிக்கொள்ளட்டுமா?” என்றாள்.
சற்று யோசித்தவர், “உனக்கு அதுதான் விருப்பம் என்றால் செய்! ஆனால் இங்கே உனக்கு எல்லாம் புதிது. எப்படி சமாளிப்பாய்! கன்னடம் கூடத் தெரியாது! சரி! மாலையில் இதுபற்றிப் பேசுவோம்!” என்றார்.
முதலில் தட்டிக் கழிக்கிறார் என்று தான் நினைத்தாள். ஆனால் மாலையில் வரும்போது தந்தை சொன்னது அவளுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. தெரிந்தவர்களிடம் கேட்டிருப்பதாகவும், ஒருவேளை அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால் வெளியே தேடலாம் என்றும் சொன்னார்.
அவள் இருப்பதையே பொருட்படுத்தாமல் மற்ற இருவர் வீட்டிலிருந்தார்கள். சங்கர் படிப்பு இன்னும் ஒரு வருடம் இருந்தது. காவ்யாவுக்கு இப்போது முதுகலை படிப்பு. படிப்பு, நண்பர்கள், கல்லூரி என்று வெளியே சென்று விடுவார்கள்.
ஒரே வீட்டில் இருக்கும்போது ஏதோ அறிமுகம் இல்லாதவர்கள்போல் இருவரும் விலகிச் செல்வது, திவ்யாவை அவர்களிடம் இருந்து விலகி இருக்கச் செய்தது. இங்கே வரும் போதே எப்படியாவது அவர்களிடம் இணக்கத்துடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் திவ்யா நினைக்கவில்லை. அது நடக்காது என்றும் தெரியும். காலை முதல் மாலைவரை தனிமை. அதன் பின் அறைக்குள் அடைந்து கிடப்பது. அதைத் தவிர திவ்யாவுக்கு எதுவும் செய்ய முடியவில்லை.
இதை எல்லாம் எத்தனை நாட்களுக்குச் சகித்துக்கொள்ள வேண்டுமோ? என்று திவ்யா சலிப்புடன் நாட்களை நகர்த்தினாள். காவ்யா, சங்கர் எப்படியோ, அன்னை தந்தைக்கு அவள் மேல் அக்கறை இருக்கிறது என்று நினைத்தாள். அவள் அந்த வீட்டில் இருப்பதை விரும்புகிறார்கள் என்று நம்பத் தொடங்கினாள். ஆனால் அவர்கள் அதை உடனேயே உடைக்கக் கூடும் என்று நினைக்கவில்லை திவ்யா.
அத்தியாயம் – 6
பெங்களூரில் வேலை, குடும்பம் என்று அமைத்துக்கொண்டாலும், சொந்த ஊரில் நடக்கும் விழாக்களுக்கு நன்கொடை தருவதும், முடிந்த அளவு விழாக்களில் குடும்பத்துடன் கலந்துகொள்வதும், குறைந்தது அவர் மட்டுமாவது செல்வது கணபதியின் வழக்கம். அப்படி சென்றபோது பிள்ளைகள் பற்றி பொதுவாக பேசியதுதான். ஆனால் அந்த பேச்சின் வழியே மகளுக்கு ஒரு வரன் வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. நகரம் சார்ந்து வாழத் தொடங்கிய நிலையில், மீண்டும் அவர் பிறந்த இடத்துடன் இணைத்துக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது அவருக்கு மகிழ்ச்சியே!
அதே சமயம், பெரும் தவிப்பைத் தந்தது. அவர் குடும்ப நிலையை பற்றி தெரியப்படுத்தினார். கணபதி வெளிப்படையாக பேசியதும், மாப்பிள்ளை வீட்டின் நிலையை பற்றியும் தெரியப்படுத்தினார்கள். அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லலாம் என்று எண்ணினார்கள்.
மனைவி உமாவிடம் பேசினார். “நம் ஊரில், தெரிந்தவர் ஒருவர் வீட்டில் காவ்யாவைக் கேட்கிறார்கள்?”
“அப்படியா! நல்ல விஷயம் தானே! நீங்கள் அதை ஏன் உற்சாகம் இல்லாமல் சொல்கிறீர்கள்.”
“காவ்யாவுக்கும் கல்யாண வயதும் வந்துவிட்டது. ஆனால் திருமணத்திற்கு என்று நாம் பெரிதாக எதையும் சேர்த்து வைக்கவில்லை. கொஞ்சம் பயமாகக்கூட இருக்கிறது.”
“பெண்ணுக்குத் திருமணம் என்றால் பயம் வரத்தான் செய்யும். நம் திருமணத்தின்போது எனக்குப் போட்ட நகைகள் எல்லாம் இருக்கின்றன. திருமணத்தை எளிமையாக நடத்தினால், எல்லாம் சுலபமாகச் சமாளிக்கலாம்.” என்று மனைவி தைரியமாகச் சொன்னாள்.
“செய்யலாம்தான். ஆனால் இருப்பதை எல்லாம் காவ்யாவுக்குக் கொடுத்துவிட்டால் பிறகு திவ்யாவுக்கு என்ன செய்வது? அதுமட்டுமில்லை, இந்தச் சங்கர் வேறு மேற்படிப்புக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்கிறான். அதற்கும் நிறையச் செலவாகும். இப்போது காவ்யாவின் திருமணம், இன்னும் ஒரு வருடத்தில் சங்கரின் வெளிநாட்டுப் பயணம், பிறகு திவ்யாவுக்குத் திருமணம். நினைக்கும்போது மலைப்பாக இருக்கிறது.”
“நடக்கும்போது எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். இன்னும் காவ்யாவுக்குப் படிப்பு முடிய ஒரு வருடம் இருக்கிறது. எல்லாம் ஒரே நேரத்தில் என்றால் மலைப்பாகத்தான் இருக்கும். ஆனால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. முதலில் மாப்பிள்ளை வீட்டைப் பற்றி விசாரிக்க வேண்டும். நல்ல இடமாக இருந்தால், இப்போது நிச்சயம் செய்துவிடலாம். படிப்பு முடிந்ததும் திருமணம் வைத்துக்கொள்ளலாம்.”
“அவர்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்! அவர்கள் ஊர் கூட நம் கிராமத்திற்குப் பக்கத்தில்தான். நல்ல வசதியானவர்கள்தான். ஆனால் சில வருடங்களாகக் கொஞ்சம் நிலைமை சரியில்லை. ஆனாலும் நல்ல குடும்பம்.”
“சரியில்லையா என்றால்?”
“ஏதோ கடன் பிரச்சினையில் பெரும் சொத்து போய்விட்டது. ஆனாலும் வறுமை என்று சொல்ல முடியாது. ஓரளவு வசதியாகத்தான் இருக்கிறார்கள்.”
“இப்போது எல்லோரும் எங்கே இருக்கிறார்கள்?”
“அதே ஊரில்தான்.”
“மாப்பிள்ளை பையன் என்ன செய்கிறான்?”
“அவனும், அவரும் அங்கேதான் இருக்கிறார். இருக்கும் நிலபுலங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இன்னும் சில தொழில்களையும் செய்கிறார் என்று தகவல்.”
“கிராமத்திலா? அவர் நகரத்தில் வேலை செய்வார் என்று நினைத்தேன்!”
“மாப்பிள்ளை படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டாராம். பட்டம் எதுவும் வாங்கவில்லை. அதுதான் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது! காவ்யா இதற்குச் சம்மதிப்பாளா?”
இருவரின் பட்டப்படிப்பும், உத்தியோகமும் நகரத்தில் அப்படி ஒன்றும் இலகுவான வாழ்க்கையை அவர்களுக்கு ஏற்படுத்திவிடவில்லை என்பதை உணர்ந்திருந்த கணபதிக்கு இந்த சம்மந்தம் பிடித்திருந்தது. ஆனால் உமா தயங்கினாள். இந்தக் காலத்தில் ஒரு பட்டம் கூட வாங்காமல் எப்படி? அதுவும் மகள் இப்படி ஒரு வரனுக்கு சம்மதம் சொல்வாளா?
பெற்றவளின் சந்தேகத்தை உறுதிப்படுத்திவிட்டாள் காவ்யா.
“என்ன அப்பா! எனக்கு இன்னும் படிப்பு கூட முடியவில்லை. அப்படியே முடிந்தாலும் அந்தக் கிராமத்தில் எல்லாம் எப்படி அப்பா இருப்பது? சென்ற முறை உறவில் ஒருவருக்குக் கல்யாணம் என்று கூட்டிப்போனீர்கள். ஏதோ வில்லேஜ் ஸ்டோரிக்கு சினிமா செட் போட்டது போல் இருந்தது. அங்கே இருக்கும் வீடுகளில் அட்டாச் பாத்ரூம் கூட இல்லை. அங்கே எப்படி அப்பா இருப்பது? நான் இரண்டு டிகிரி வாங்கப்போகிறேன். மாப்பிள்ளை படிக்கவே இல்லை என்கிறீர்கள். எனக்கு இதெல்லாம் ஒத்துவராது. விருப்பமில்லை என்று சொல்லிவிடுங்கள்.” என்று எழுந்து சென்று விட்டாள்.
கதவை அடைத்துக் கொண்டு உள்ளே இருந்தபோதும் திவ்யாவுக்கு அவர்கள் பேசியது காதில் விழத்தான் செய்தது. இதில் அவளுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அப்படித் தான் அப்போது நினைத்தாள்.
மறுத்துவிடலாம் என்று கணபதியும் நினைத்தார். ஆனால் அவர் மனதை மாற்றியது அவர் நண்பர் ஒருவர் தான்.
“மாப்பிள்ளை வீட்டில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்றால் பெரிய விஷயம். நீ உன் மகளைச் சம்மதிக்க வை” என்றார்.
“பெங்களூரில் வளர்ந்தவள். அது சிறிய கிராமம். அவளுக்கு அது சரி வராது என்கிறாள்.”
“எல்லாம் சரிதான். ஆனால் யோசித்துப் பார்! இன்னும் இருவரை நீ கரை சேர்க்க வேண்டும்.”
“பிடிக்கவில்லை என்பவளை எப்படி வற்புறுத்துவது? குடும்பம் ரொம்ப நல்ல மாதிரி தான். திருமணம் கூட மிக எளிமையாகச் செய்தால் போதும் என்றார்கள். காவ்யா சம்மதித்தால் எனக்குப் பெரிய ஆறுதலாக இருக்கும். நல்ல இடம் அமைய வேண்டும் என்று தானே பெற்றவன் எதிர்பார்ப்பான். அப்படியொரு இடத்தை வேண்டாம் என்று சொல்லவே தயக்கமாக இருக்கிறது. கிடைத்த ஒரு நல்ல வரனைத் தூக்கி எறிவது முட்டாள்தனம். இதுபற்றி எப்படிப் பேசினாலும் எழுந்து சென்று விடுகிறாள். ‘இல்லை, கட்டாயத் திருமணம் செய்து வைக்கப் போகிறீர்களா?’ என்று கோபப்படுகிறாள். மாப்பிள்ளையின் படிப்பு கூடக் காவ்யாவுக்கு திருப்தி இல்லை.”
“படிப்பு இல்லை என்றால் என்ன? படித்தவன் எல்லாம் நல்லவனாகவா இருக்கிறான்? நாமும் தான் பட்டம் பெற்றோம். இங்கே நகரத்தில் நாமும் தான் முப்பது வருடங்களாக சம்பாதிக்கிறோம். இருக்கும் ஒரு வீட்டைத் தவிர என்ன சேர்த்து வைத்திருக்கிறோம். பிள்ளைகள் படிப்புக்கே எல்லாம் செலவு செய்துவிட்டோம். நம் நிலையைப் பற்றி சொல்லி புரியவை!”
“காவ்யாவிடம் இனி பேச முடியாது” என்று பெருமூச்சு விட்டார் கணபதி.
“எல்லாம் காலத்தின் மாற்றம். நம் காலத்தில் பெரியவர்கள் காட்டிய பெண்ணை மணந்துகொண்டோம். தெரியாத ஒருவரைப் பார்க்காமல் கூட மணந்துகொண்டார்கள். இப்போது, பிள்ளைகள் பெற்றவர்களைப் பற்றி யோசிப்பதே இல்லை. சுயநலம் நிறைந்த தலைமுறை.” என்று தத்துவம் பேசினார் நண்பர்.
“அவர்கள் அழைப்பதற்குள் நானே அழைத்து ‘வேண்டாம்’ என்று சொல்லவும் சங்கடமாக இருக்கிறது. அவர்கள் அழைக்கட்டும் என்று அப்படியே விடவும் மனம் இல்லை. சுற்றி இருக்கும் ஊர்களில் எல்லாம் அவ்வளவு நல்ல பெயருள்ள குடும்பம். காவ்யாவுக்குத் தான் கொடுத்துவைக்கவில்லை.” என்று கணபதி முடிக்கும் முன், “எனக்கொரு யோசனை! பேசாமல் உன் இளைய மகளுக்குப் பேசிவிடு. அதிக வயது வித்தியாசம் இல்லை தானே! அவளும் படிப்பை முடித்துவிட்டாள் தானே.” என்றார் நண்பர்.
“மூத்தவள் இருக்க இளைய மகளுக்கு எப்படிச் செய்வது? அதெப்படி ஒத்து வரும்.”
“இந்தக் காலத்தில் இதெல்லாம் ஒரு விஷயமா? என் அக்கா வீட்டில் கூட இப்படித்தான் நடந்தது. பெரியவளுக்கு ஜாதகம் சரியாக அமையவில்லை. அதற்குள் இளையவளுக்கு நல்ல இடத்திலிருந்து வந்தது என்று கல்யாணம் முடித்துவிட்டார்கள். இதற்கும் அக்கா தங்கைக்கு மூன்று வயது வித்தியாசம். உன் வீட்டில் அப்படியும் இல்லை. இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம். அக்கா இன்னும் படிக்கிறாள். தங்கைக்கு மேலே படிக்கும் எண்ணம் இல்லை என்ற காரணம் கூடச் சாதகமாக இருக்கிறது.” என்றார்.
“இதனாலேயே காவ்யாவுக்குப் பின்னாளில் பிரச்சனை வந்தால்? பெண்ணுக்கு ஏதோ குறை. அதனால் தான் தங்கைக்கு முன்பே நடந்துவிட்டது என்று எண்ணிவிட்டால்?” என்று கணபதிக்குச் சந்தேகம் எழுந்தது.
“கணபதி, நீ பயப்படும் அளவுக்கு இதில் எதுவும் இல்லை. சிறிய கிராமத்தில் இருக்கிறோம் என்றால் கூட நீ சொல்வது போல் பேச்சு வரலாம். இங்கே நகரத்தில் யார் நம்மைப் பற்றிப் பேசப்போகிறார்கள். காவ்யாவை நேரில் பார்த்த யாரேனும் அப்படிப் பேசுவார்களா? அது மட்டும் இல்லை. திவ்யா இங்கே வளரவில்லை. அதனால் அவளை நிறையப் பேருக்குத் தெரியாது. உன் மனைவியின் வீட்டில் அதிகம் இருந்ததால் அவர்களின் ஏற்பாடு என்று கூடச் சொல்லிவிடலாம். நீ அதிகம் யோசிக்காதே. எதற்கும் உன் மனைவியிடம் இதுபற்றிப் பேசிப்பார்!” என்றார்.
கணபதி உமாவிடம் பேசியபோது, உமாவுக்கு அதிக ஆட்சேபனை இல்லை. “நீங்கள் சொல்வதும் சரிதான்! திவ்யா, காவ்யா போல் இல்லை. எங்குச் சென்றாலும் அந்த இடத்திற்குத் தகுந்தாற்போல் நடந்துகொள்வாள். நல்ல பொறுமை. அம்மாவின் வளர்ப்பு. தேடினாலும் குறை கண்டுபிடிக்கமுடியாதுதான்.”
“உன் அம்மாவைப் பாராட்டுவதாக நினைத்து உன்னைக் குறைத்துக்கொள்கிறாய்.” என்றார் கணபதி.
“உண்மை அதுதானே! சிறு வயதில் திவ்யாவைப் பார்க்கும்போது இவள் எப்படியொரு பிடிவாதக்காரியாக வளர்வாள் என்று பயந்தேன். இப்போது காவ்யாவை விட அவள் எவ்வளவு பக்குவமாக நடந்துகொள்கிறாள்.”
“இப்போது திவ்யாவுக்குப் பிடிவாதம் இல்லை என்றா நினைக்கிறாய்! இங்கே வந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது. இன்றுவரை நம்மிடமே அந்நியமாகத் தான் நடந்துகொள்கிறாள்.”
“தப்பு திவ்யா மேல் இல்லை. நம் மேல் தானே! அவளை மட்டும் தூரமாக வைத்து விட்டோம். அவள் எதிர்பார்த்தபோது நாம் அவளை அழைத்துக் கொள்ளவில்லை. இம்முறை கூட இங்கே வருவாளோ இல்லையோ என்று பயந்தேன். ஒருவேளை அம்மா இன்னும் உயிரோடு இருந்தால் அவள் இங்கே வந்திருக்க மாட்டாள்.” என்றாள் உமா.
“நம் நிலைமை அப்படி! என்ன செய்வது? இதுவரை நம் மேல் இருந்த வருத்தம் எல்லாம், இந்த திருமணம் நடந்தால் மாறிவிடும்
இல்லையா? நமக்கு அவள் மேல் பாசம் இருக்கிறது என்று புரிந்து கொள்வாள் இல்லையா?”
திருமணம் பற்றி பேசியதும் மகளுக்கு அவர்கள் மேல் இருந்த வருத்தம் எல்லாம் மறந்து விடும் என்று நம்பியவர்கள், அவர்கள் மேல் இருக்கும் வெறுப்பை அதிகரித்துக் கொள்ளப் போகிறார்கள் என்று அறிந்திருக்கவில்லை.
– தொடரும்…
தொடர்புள்ள சிறுகதைகள்
பாரத்தை சுமப்பது சுகமா! பாரமாக இருப்பது சுகமா!
உரு.வளவன்
July 29, 2026
நீ என் மகனல்ல
என்.ஸ்ரீதரன்
July 29, 2026
நோன்பு
ஜே.எம்.சாலி
July 29, 2026