இதய ஓசைகள்
கதையாசிரியர்: மா.வீ.தியாகராசன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 6, 2026
பார்வையிட்டோர்: 173
(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மனித வாழ்வியல் நாடகத்தில் அந்தியக்காலம் என்பது ஒரு பொல்லாத காலம்! எதற்குமே பயனில்லாத ஜடமாகப் பிறர் எண்ணுகின்ற அளவிற்கு உடலும் ஆகிவிடுகிறது. சொந்த இரத்த பந்தங்களே கூட எவ்வளவு அலட்சியம் செய்துவிடுகின்றன… சே… ஒட்டாவது! உறவாவது!
எல்லாம் வெளி வேடதாரிகள்! அத்தனையும் மாயை! மகள் சீதா என்ன… மருமகன் தேவநாராயணன் என்ன… அட! என் பேரன்! பேரன் என்று கொஞ்சுகிற அந்த வாண்டு கூடக் கூப்பிட்டால் சீண்டமாட்டேன்கிறதே என் பேச்சை! ‘ஒங்களுக்கு ரசனையுந் தெரியாது ஒரு எழவும் தெரியாது… பேசாம வாயை வச்சிக்கிட்டு இருங்க! நல்ல கலராப்பார்த்து எடுக்கப் படாதாம்மா’ன்னு.
புடவையைப் பற்றிச் சொன்ன என் அபிப்பிராயத்திற்குக் கிடைத்த பரிசுதான் இந்த வார்த்தைப் புண்கள்! லெட்சுமி ரொம்பக் கொடுத்து வச்சவ… போயிட்டா புண்ணியவதி! என்னைத் தனியா விட்டுட்டுச் சிவலோகம் போயி அப்படி என்ன பண்ணிட்டா? கூப்பிட்டா நானும் போயிருப்பேன்! நான் என்ன வயசாயிட்டுதேன்னு படுத்துக்கிட்டு இவுங்களை எல்லாம் பாலைக் கொண்டா தயிரைக் கொண்டான்னா அதிகாரம் பண்ணுறேன்? காலங்காத்தாலே எழுந்து போயி பாலுக்குப் பூத்திலே நின்னு… பால் வாங்கி வந்து வச்சிட்டு, மாப்பிள்ளையோட ஸ்கூட்டரைத் தொடச்சி பளபளன்னு வச்சிட்டு கொடியிலே கெடக்குற துணிகளை அழகா மடிச்சி வச்சிட்டுத்தானே குளிக்கிறேன்! குளிச்சிட்டுச் சும்மாவா இருக்கேன்? தோட்டத்துக்குப் போய்ப் பூக்களைப் பறிச்சாந்து பூஜை அறையிலே வெய்க்கிறேன்! உப்பு வேணும் கடுகு வேணும்ன்னாலும் ஓடுறேன், ஓடியாறேன்! ஆனந்த் குட்டிய ஸ்கூலுக்குத் தூக்கிக்கொண்டு போயிவிடுறேன்! எவன் பண்ணுவான்? என்னை யாரும் ‘தெண்டச்சோறு அது இதுன்னு’, பல்லுல நாக்கைப் போட்டுடப்படாதேனு நெனச்சி உழைக்கிறேன்! சீதாவப் பெண் பார்க்க வந்தப்போ மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்குன்னா… ஆனா… மாப்பிள்ளைக்கி வேலை இல்லாத குறை! அப்பக்கூட விடலியே நான்! என் போஸ்ட்டை அவருக்கு வாங்கிக் கொடுக்கறதா முடிவு பண்ணி ஒரு வருஷத்துக்கு முன்னாலேயே ‘வாலண்டியர் ரிடையர்மெண்ட்’ கொடுத்து அந்தப் போஸ்ட்லே அவரை உட்கார வைக்க நான் எடுத்த முயற்சி கொஞ்சமா? நஞ்சமா? என்னோட பென்ஷன் கிராஜுவீட்டி பணத்திலேதானே சீதா கல்யாணத்தை விமர்சையா நடத்தினேன். லெட்சுமிக்கு அது நான் கெடுத்த வாக்கில்லே! என் பங்குக்கு உள்ள பெனஷன் ரூபாயைக் கூட என் பேரன் பேர்ல சேர்க்கறேனே! இதுங்களுகு ஏன் என்னோட தியாக நெஞ்சு புரியலே? ஒரு புழுவைத் தூக்கி மேலே வச்சி மாப்ளே அப்படின்னாலும் ஒரு துள்ளுத் துள்ளும்னு சொல்லுவாங்களே அது எத்தனை உண்மை! என்ன கொழுப்பிருந்தா என்னைப் பார்த்து ‘காலையில “சம்பூர்ணராமாயணம் போட்டிருக்கான் தியேட்டர்லே! டிக்கட் வாங்கிட்டு வர்றேன்! உங்கப் பேரனைக் கூட்டிக்கிட்டுப் போங்க” அப்டீன்னுட்டு சொல்லிட்டுப் போறான்! அதுக்கு என்ன அர்த்தம்? கெழவன்னு தானே… எனக்கு ரொம்ப வயசாயிட்டுதுன்னு தானே… டெய்லி ஸ்கூலுக்குத் தூக்கி அலையறது போதாது… அதனாலே தியேட்டருக்கும் அவனைத் தூக்கிக்கிட்டு அலையிடான்னுதானே அர்த்தம்! இல்லே இல்லே… அது ஒரு நாளைக்கு இல்லேன்னாலும் மறுநாள் வெடிக்கத்தான் போகுது! அப்ப இந்த கோபால கிருஷ்ணன் யாருன்னு காட்டத்தான் போறேன்! தியேட்டர் என்ன கிட்டவா இருக்கு? மூணு பர்லாங்… எவன் கழுதை மாதிரி இவன் மகனைத் தூக்கி இடுப்பிலே வெச்சிக்கிட்டு அலையிறது? சே… கேவலமாப் போச்சு! இது நன்றி கெட்ட ஒலகம்! அட ஒரு மகளப் பெத்து…. அவ பண்ணுற அக்கிரமம் கொஞ்சமா? பாவிப்பய மக… நைட்ல கோஐமச் சப்பாத்தி கேப்பைக் கூழு… மற்ற எல்லாருக்கும் நெல்லூர் கிச்சடிச் சம்பா அரிசி சோறு! இந்த வெண்ணெய் சுண்ணாம்பு விவகாரமெல்லாம் லெட்சுமிக்குத் தெரியாது! அவ வெகுளி! தனக்குக்கூட இல்லாம பண்ணிக்கிட்டு எனக்குப்போடுற அந்தத் தயாள குணம்! அவ வயித்திலே உதிச்சதுக்கு இல்லாமே போச்சுதே! தொட்டாப் பொட்டாட்டும் ஒட்டும் லெட்சுமி கைக்காபி! அந்தக் காப்பிக்கும் ஒரு வாரமாக் கேடு வந்துட்டுது! வெத்து பாலு… நான் என்ன கொழந்தையா? பால் குடிக்கிறதுக்கு! வேண்டாம்பா.. இந்த ஒலகமே எனக்கு வேண்டாம்! அந்த எருமைக்காரன் என்னிக்கு கயத்தைப் போடுறானோ புரியலே! போட்டான்னா போயிச் சேர்ந்துடுவேன்! லெட்சுமி என்னை அங்கே சந்தோஷமா பார்த்துப்பா! அவ கால் தூசியாகுமா? இதுங்களாம்!
“அப்பா…!”
“என்னம்மா?”
“அவனை ரெண்டு வெச்சி ஸ்கூலுக்கு ரெடி பண்ணுங்க… இந்த வயசிலேயே அது எவ்வளவு வித்தை காட்டுது பாருங்க! இருமிக்கிட்டு அம்மா… கழுத்தைத் தொட்டுப்பாரு… எனக்குச் சொரம் அடிக்குது… அப்படீங்குது! இந்த வயசிலேயே திருட்டுப் புத்தி!”
“உன் மகன் தானேம்மா… அவனைப் போயி ஏன் திருடன் அது இதுன்னு பேசுறே? ‘நீங்க திருட்டுத்தனத்தை எங்கிட்டே காட்றீங்க! அவன் உங்ககிட்ட காட்றான்! தப்பென்ன? வெதை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா மொளைக்கும்?” என்று மனதிற்குள் எண்ணியவராய் மகளைப் பார்த்தார் கோபாலகிருஷ்ணன்.
”என்னப்பா! நான் பாட்டுக்குச் சொல்றேன்… நீங்கப் பாட்டுக்கு ஒண்ணுஞ் சொல்லாம பாக்கிறீங்க? சரிசரி அவனை ரெடி பண்ணுங்க ஸ்கூலுக்கு டைமாச்சு! என்றாள் சீதா.
விரைவில் பேரனைத் தயார் செய்து இடுப்பில் சுமந்தபடி கையில் புத்தக மூட்டை வாட்டர் பேக் இத்தியாதிகளைச் சுமந்து கொண்டு புறப்பட்டுப் போனார் கோபாலகிருஷ்ணன்.
மாலை பேரனை அதே மாதிரி சுமந்து வந்து வீடு சேர்த்தார். நெற்றி வியர்வையைத் துண்டால் துடைத்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்தார்.
“அம்மா காபி!”
‘ஆமாண்டா… ஒனக்குக் காபி! எனக்குப் பால்’ இப்படி எண்ணியபடியே முணுமுணுத்தார்.
‘அம்மா அப்படியே தாத்தாவுக்குப் பால்!’ என்றான் பேரன் ஆனந்த். நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் எனக்கு ஒங்க அம்மா பாலைத்தான் கொண்டு வருவா! ஏன் வீணா கத்தறே….?” கொஞ்சம் கடுகடுப்பாயச் சொன்னார்.
ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. தேவநாராயணன் வந்து இறங்கும்போதே! ஆனந்த் குட்டி எப்ப வந்தது? “இப்பதான்ப்பா! தாத்தா தான் தூக்கிட்டு வந்தாரு!”
“ஐ… ஸீ… நீயும் தாத்தாவும் சின்மாவுக்குப் போகப் போறீங்க… டிக்கெட் ரெடி!” என்றபடி பிரீப்கேஷுடன் வீட்டிற்குள் நுழைந்தான் தேவநாராயணன்.
“என்ன இன்னிக்குச் சீக்கிரமே வந்துட்டீங்க?” என்று கேட்டபடி வந்தாள் சீதா. “சீதா… இன்னிக்கு உங்க அப்பாவும் நம்ம ஆனந்த் குட்டியும் சின்மாவுக்குப் போறாங்க! படம் உங்க அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும்னு நெனச்சிதான் வாங்கி வந்தேன். இந்தா இதை மாமா கிட்டே கொடுத்து ஆனந்தையும் அவரோட அனுப்பிடு சீதா!”
“ஏங்க… பழைய படந்தான் கிடைச்சதா? உங்களுக்கு? புதுப்படம் எதுக்காவது ரிசர்வ் பண்ணியிருக்கலாமே?’
“சீதா… உங்க அப்பாவுக்கும் நம்ம பையனுக்கும் ஒரு நல்ல படத்தைப் பார்க்க ஒரு நல்ல சந்தர்ப்பம் வாச்சிருக்கும்மா? ஆபாசமில்லாத ஒரு பக்திப்படத்தை இப்பவெல்லாம் எங்கே பார்க்க முடியுது? என்.டி.ஆர். ஸ்ரீராமனாகவும் பத்மினி சீதாவாகவும் வர்ற கட்டமெல்லாம் சாட்சாத் இராமனும் சீதையும் வர்றா மாதிரியே ஒரு பிரமை தட்டும்! அப்படிஒரு காம்பினேஷன் ரெண்டு பேருக்கும்!” “போதும் உங்க ரசனை! போயி மூஞ்சி கால் கையெல்லாம் அலம்பீட்டுச் சுவாமி ரூம் விளக்கை ஏத்துங்க!” என்று கூறிவிட்டுத் தன் தந்தையிடம் சினிமா டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு வந்தாள் சீதா.
பெட்ரூம் விளக்கு மௌனப் புன்னகை செய்தபடி இருந்தது. பெட்டில் படுத்துக்கொண்டு சீதாவின் வருகையை எதிர்பார்த்தான் தேவநாராயணன். சீதாவும் வந்தாள். அலுப்போடு பெட்டில் சாய்ந்தாள்.
சீதா!
என்ன… என்ன இப்ப சீதாவுக்கு?
ஒண்ணுமில்லே… பேசாமே நானும் உங்க அப்பாவோடு சம்பூர்ண இராமாயணத்துக்கே போயிருக்கலாம்னு சொல்ல வந்தேன்! இதனைக் கேட்டு சீதா களுக் என்று சிரித்தாள்.
“சீதா! ஆபீஸிலே எக்கச்சக்கமான வேலை! ஹெட்கிளார்க் இன்னிக்குப் பார்த்து லீவு போட்டு வஞ்சம் தீர்த்துட்டான்!”
எஸ்… வெரி வெரி டயர்ட்!
போதும்! அப்ப நல்ல பிள்ளையாட்டம் தூங்க வேண்டியதுதானே…
இப்படியே பலவிதமாகப் பேசி கொண்டிருந்ததில் நேரம் போனதே அவர்களுக்குத் தெரியவில்லை. சந்தோஷக் களைப்பு. அவர்களுக்குக் கண்களை அசத்தியது. ஆனாலும் தேவ நாராயணனுக்குத் தூக்கம் வரவில்லை. சீதாவும் தூங்கவில்லை. அவர்கள் இருவர் மனத்திலும் பெரியவர் குழந்தை பற்றிய சிந்தனைதான். படம் முடிந்து தோளில் ஆனந்த்தைப் போட்டபடி சுமந்து வந்தார் கோபாலகிருஷ்ணன். உள்ளே சீதாவும் மாப்பிள்ளையான தேவநாராயணனும் ஏதோ பேசிக் கொண்டிருந்த பேச்சுக்கள் இலேசாகக் காதில் விழுந்தன. மெதுவாகப் பேரனைத் திண்ணையில் துண்டை விரித்துக் கிடத்தினார். குழந்தை அயர்ந்து தூங்கினான். காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்ட கேட்க ஆரம்பித்தார் கோபாலகிருஷ்ணன்.
என்னங்க… தூங்கிட்டீங்களா…?
இன்னும் மாமாவும் ஆனந்த்தும் வரலியே சீதா!
பெரிய படமா?
ஆமாம்… படம் விட நேரமாகும்!
பாவம்! நம்ம குழந்தையைத் தூக்கி வெச்சிக்கிட்டு எவ்வளவு தூரம் நடப்பாரு?
உண்மைதான் சீதா! நான் கூடத் தப்புப் பண்ணிட்டேன். ரெண்டு பேரையும் ஸ்கூட்டர்லேயே தியேட்டர்லே விட்டுட்டு வந்திருக்கலாம்!
ஆமாம்…! எல்லா ஐடியாவும் உங்களுக்குப் பின்னாலே தான் உதிக்கும்!
சீதா! உங்க அப்பாவை நான் சாதாரண மனுஷனா கருதினா அவரை ஸ்கூட்டர்லே வெச்சிக் கொண்டு போகலாம்! அவரு உனக்கு அப்பாதான்! பட் எனக்கு அவர் தெய்வம்!
நீங்க என்ன சொல்லுறீங்க?
உண்மையைப் பட்டவர்த்தனமா உடைச்சி சொல்றேன் சீதா! எந்த மாமனார் தன்னோட மாப்பிள்ளைக்காகத் தான் பார்த்த வேலையையே விட்டுக் கொடுப்பாங்க? உன்னைப் பெண்பார்க்க வந்தப்போ என்னை உனக்குப் பிடிச்சிருந்ததா நீ சொன்னியாம்! சந்தோஷம் என்கு மனசிலே ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு சங்கடம் எனக்குள்ளே இருக்கவே செய்தது. பட்டதாரியான நான் எந்த வேலையும் இல்லாமே இருந்தேன். அதனாலே உங்க அப்பாட்டே சொன்னேன்! எனக்கொரு வேலை கிடைச்சதும் உங்க பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்! அதுவரையிலும் கொஞ்சம் வெயிட் பண்ண முடியுமான்னு கேட்டேன்! அவரு வேலை பார்த்துக்கிட்டிருந்த கம்பெனி முகவரியைக் கொடுத்து ஒரு அப்ளிகேஷன் அனுப்பச் சொன்னாரு. உங்களுக்குப் ப்ராப்தமிருந்தா கிடைக்கும்னு சொன்னாரு. அதே நேரம் உங்களுக்காக நான் சிபாரிசு செய்ய முடியாதுன்னும் சொன்னாரு! நானம் அப்ளை பண்ணேன்! உடனே வேலையும் கிடைச்சது! பிறகுதான் அந்தக் கம்பெனி ஓனர் என்னிடம் சொன்னாரு! தம்பீ! இதை நான் உங்கிட்டச் சொல்லக் வடாதுன்னு உங்க மாமனார் சொன்னாரு! அதையும் மீறி நான் இதை உங்கிட்டே ஏன் சொல்ல நினைக்கிறேன்னா அவரோட உயர்வான எண்ணம், வெகுவான தியாகம், விட்டுக் கொடுக்கிற தன்மை இதையெல்லாம் நீங்க புரிஞ்சிக்கனும்னுதான். அவரோட வேலைக்கு வாலண்டியர் ரிடையர் மெண்ட் கொடுக்கறதுக்கு முன்னாலே எனக்கு ஒரு தங்கமான பையன் மாப்பிள்ளையா வரப்போறார்! அவருக்கு என் பெண்ணைக் கொடுக்கிறதா முடிவு பண்ணிட்டேன்! அதோட நான்தான் இந்த வேலையை விட்டுக் கொடுத்தேன்னு என் மாப்பிள்ளைக்குத் தெரிய வேண்டாம்ன்னு! கம்பெனி ஓனரிடம் சொன்னாராம். மாமனார் தயவாலே தான் இந்த வேலை நமக்குக் கிடைச்சிதுன்னா நான் மனவருத்தப்படுவேனுன்னு நெனச்சாராம்! சீதா… சொந்த மகனுக்கே கூட எந்த ஒண்ணையும் யோசனை செய்து செய்யிற இந்த மட்டமான ஒலகத்திலே யாரோ ஓர் அந்நியன் தனக்கு மாப்பிள்ளையா வரப்போறாருன்னு கூட நினைக்காமே சொந்த மகனுக்கு செய்யிற உபகாரமா எனக்குப் பதவீங்கிற ஓர் அந்தஸ்தையும் கொடுத்து உன்னையும் எனக்குக் கொடுத்திருக்காரே… உங்க அப்பா குணம் இனி யாருக்கு சீதா வரும்? அதனாலே தான் இப்பக் கூட உங்க அப்பாவைப் பார்த்தா ஒரு பயம், இனம் காண முடியாத ஒரு மரியாதை இதையெல்லாம் என் மனசு அவருக்குக் கொடுக்குது!
அப்பேர்பட்ட மஹாத்மாவ என் ஸ்கூட்டருக்குப் பின்னாலே வெச்சி ஸ்கூட்டரை ஓட்டக்கூட எனக்குத் தைரியம் வரலே சீதா! இப்பச் சொல்லு சீதா… உங்க அப்பாவை ஒரு உயர்ந்த இடத்திலே வெச்சிருக்கிறது தப்பா?
தப்பில்லீங்க! தனக்குள்ள எதையுமே வெச்சுகாமே தன்னோட மாதப் பென்ஷனையும் கூட அவரு நம்ம ஆனந்த் பேர்லே போடுறாராம்! அதைக்கூட அவரு சொல்லித் தெரிஞ்சிக்கலேங்க! ஆனந்த் பேர்ல உள்ள பாஸ் புக்கை நான் தற்செயலாகப் பார்த்துத்தான் புரிஞ்சுக்கிட்டேன்! இவர்கள் பேசிக் கொண்டிருந்த அந்த உயர்வான பேச்சில் உக்கித்துப் போய் மனம் ஸ்தம்பித்துச் சிலை போல் ஆகித் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.
சீதா! இந்த வயசிலேயும் அவர் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமே காலையிலே எழுந்து போய் பால் வாங்கிட்டு வர்றதும் துணிகளை மடித்து வைக்கிறதும் தோட்டத்திலே போயிப் பூப்பறிச்சிக் கொண்டு வர்றதையும் நினைக்கும் போது எனக்கே வருத்தமா இருக்குத் தெரியுமா? அதைவிட என் ஸ்கூட்டரைத் துடைக்கிறாரே… அது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு! தப்புத்தானே அது?
தப்பில்லிங்க அது… அவரு டெய்லி காலையிலே நடக்கணும்! லைட்டா பிரஷர் இருக்கு அவருக்கு. அதனாலே கோதுமை கேழ்வரகு இதுங்களைக் கொடுங்க… காபி வேண்டாம்… பால் மோர் இப்படி எதையாவது கொடுக்கனும்னாரு டாக்டர். அவருக்குப் பிரஷர் இருக்கிற விஷயம் தெரிஞ்சா அவரு ரொம்ப வருத்தப்படுவாரோன்னு அதையும் நாம சொல்லலே! காபீன்னா… எங்க அப்பா அவ்வளவு பிரியமா சாப்பிடுவாரு! டெய்லி அவருக்குப் பாலைக் கொடுக்கும்போது என் மனசு பதறுங்க! நாம நல்ல சாப்பாட்டைச் சாப்பிட்டுக்கிட்டு அவருக்குக் கோதுமையும் கூழையும் கொடுக்கும்போது ரொம்ப மனச உறுத்துங்க! அதை விட அவரு ஒருநாள் கூட ஏன் இதைப் போடுற அதைப் போடுறேன்னு கேட்காமலேயே சாப்பிடறது இன்னும் கஷ்டமா இருக்குங்க! அவளது கண்களில் வழிந்த நீர்த்துளி, அந்த மங்கிய விளக்கொளியில் அவர்கள் இருவரின் வெண்மையான வைர உள்ளம் போல் மின்னியது.
பைத்தியம்! இதுக்காகவா அழறது? உங்க அப்பாவுக்கு நாம நல்லதைத்தானே நினைச்சி அதைச் செய்யிறோம்! நீ குறையா நினைக்கிற எந்த ஒண்ணையும் அவரு சின்னதா கூடச் சிந்திக்க மாட்டாரு! ஏன்னா… அவரு ரொம்ப… ரொம்பப் பெரியவர் சீதா! அவரோட விசாலமான மனசுக்கு முன்னாலே நாம எல்லோருமே குழந்தைங்கதான்!
..திடீரெனத் திண்ணையில் படுத்துறங்கிய ஆனந்த் இருமினான். அந்த இருமல் சத்தம் கேட்டு தேவநாராயணனும் சீதாவும் வீட்டு வாசற்படி வெளி விளக்கைப் போட்டுக் கதவைத் திறந்து வந்தனர். அங்கே சிலைபோல் அமர்ந்திருந்த கோபாலகிருஷ்ணனின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்த வண்ணமிருந்தது.
உள்ளம் உணர்வோடு விழிக்கும்போது, கண்கள் அதன் கண்ணீர் பாஷையால் பேசுவது சகஜமான ஒன்றுதானே!
‘அப்பா!’
சற்றுத் திரும்பி சீதாவையும் மாப்பிள்ளையையும் பார்த்து விழிகளைத் தாழ்த்தினார்.
‘எப்ப வந்தீங்க…?’
‘இப்பதாம்மா… ஆனந்த் தூங்கிட்டான்!’
கதவைத் தட்ட வேண்டியது தானேப்பா?
தூங்கிட்டீங்களோன்னு நெனச்சேம்மா!
தூங்கலேப்பா! பேசிக்கிட்டுத்தான் இருந்தோம்!
‘நானும் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்…!’ இப்படி அவரது வாய் கூற நாணியது. இப்போது சீதாவையும் மாப்பிள்ளையையும் அவர் ஆழ்ந்து பார்த்தார். கண்ணீரை அவரால் அடக்க வலுவின்றிப் போனது.
அப்பா…! சீதா!
மாமா…! தேவநாராயணன்
ஏன்…? இருவரும்.
ஒண்ணுமில்லேம்மா! சம்பூர்ண இராமாயணம் பார்த்தேனே…. அது வீண்! ஏன்னா ராமனும் சீதையும் இலவனும் நம்ம வீட்டிலேயே இருக்கும்போது வெட்டியா இவ்வளவு தூரம் தியேட்டருக்குப் போனது வீண்தானே…! உள்ளம் உருகிப் பேசினார் கோபாலகிருஷ்ணன்.
நீங்க மட்டும் என்னப்பா! அந்த தசரதரும் ஜனகரும் எங்களுக்கு நீங்கதானே! நீங்க இருக்கிற இடந்தானே அப்பா எங்க மூணு பேருக்குமே அயோத்தி! என்றாள் சீதா.
அந்த வார்த்தைகளால் வெட்கப்பட்டுப்போய் அவர் மனம் குன்றியது. அவரே தனக்குள் அறிந்த விஷயமாயிற்றே அந்த இரவில் குழப்பத்துடன் இயங்கிய அவரின் இதய ஓசைகள் எப்போதும் இனி அமைதியாக ஓசை எழுப்பிக் கொண்டடே இருக்கும்.
(1982-ஆம் ஆண்டு)
– விண்ணில் ஒரு மணல் வீடு (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: பிப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.
| ஆசிரியரின் பிற நூல்கள் கதைத் தொகுதிகள் மரபுத்தொடர்க் கதைகள் (1990) ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு (1995) மனதில் உறுதி வேண்டும் (1995) தியாகப் பிறவி (1995) கட்டுரைத் தொகுதிகள் ஊன்றுகோல் (1989) கட்டுரை மலர்கள் (1990) என்னுரை - விண்ணில் ஒரு மணல் வீடு - பிப்ரவரி 2011 சிறுகதை எழுதுவது என்பது ஒரு கலை. அத்தகைய கலையை ஆர்வத்தோடு படைப்பவனும் படிப்பவனும் கலைஞன். இத்தகைய சிறுகதைகளை ஆர்வத்தோடு வாசகர்கள்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
வெத்தலை மடிச்சுக் கொடுக்க ஆசையா?
வளர்கவி
September 6, 2026
உறவுகள் ஆயிரம்
ஐ.சாந்தன்
September 6, 2026
புயலில் சிக்கிய பூக்கள்..!
காரை ஆடலரசன்
September 6, 2026