அருந்ததி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 8, 2026
பார்வையிட்டோர்: 93 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பரீட்சை மண்டபத்திற்கு வெளியே நின்றவர்களைக் கண் டதும், பரீட்சை எழுதப்போவதிலிருந்த நம்பிக்கை, உற் சாகம் யாவுமே சுப்பிரமணியத்தின் மனதிலிருந்து முற்றாகப் போய்விட்டன. மாணவ ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப் பதற்கான அந்த பரீட்சை’ நடைபெறவிருந்த அப்பள்ளிக் கூட மண்டபத்தினை நெருங்கி ஏராளமானவர்கள் நின்றார்கள். 

சுப்பிரமணியம் ஜி.சி.ஈ. பரீட்சையில் சித்தியெய்தியதன் பின் உத்தியோகத்திற்காக எழுதும் ஆறாவது பரீட்சை இது அவனுக்கு பிடரிப் பக்கமாக வேர்த்துக் கொட்டிற்று. கையாலேயே வேர்வையை வழித்தெறிந்தான். அணிந்திருக்கும் சேர்ட்டைக்கூட நேற்று இரவுதான் அவசர அவசரமாகத் தோய்த்துப் போட்டிருந்தான். கொலரில் அழுக்குக் கூட முற்றாக எடுபடவில்லை. வேட்டி, சேர்ட்டை விடக் கூடுதலான வெண்மையாக இருந்தது. வாரிவிடப் பட்ட தலை முன்னுச்சிப்பக்கமாக முற்றாகக் குழப்பியிருந் ததையும் சுப்பிரமணியம் கவனியாது அலட்சியமாக விட் டிருந்தான். சுப்பிரமணியம் தொலைவில் தன்னையே பார்த் துக்கொண்டு நின்ற த.பொ.கணேசனைக் கண்டான். சுப்பிரமணியனைப் போலவே உத்தியோக வேட்டையில் இறங்கி ஜி.சி.ஈ சித்தி எய்திய பின்பு நான்கு வருடங் களாகப் பரீட்சை எழுதிக் கொண்டிருந்தவன். படித்துக் கொண்டிருக்கையில் மிகத் துடிதுடிப்பான இயல்புகள் நிறைந்த கணேசன் தமிழ் மொழியில் மிகப்பற்றுதல் கொண்டு தன்னைத் தமிழடியான் பொன்னையா கணேசன் என அழைத்துக் கொள்ளும்படி மற்றவர்களிடம் வேண்டு தல் விடுத்தவன். எல்லாவற்றிலும் தமிழ் துலங்க வேண்டு மென்பதற்காக எல்லா மொழிகளையும் விரோதித்த அவன் சென்ற ஆண்டில் சிங்கள மொழியை ஜி.சி.ஈ. யில் சித்தி எய்திய போது யாவருமே திகைத்து விட்டாரகள். அவனு டைய தமிழடியான் பொன்னையா கணேசன் என்ற பெயர் சுருங்கி த. பொ. கணேசன் என்றுதான் இன்று வரையும் வழங்கி வருகின்றது. 

கணேசன், சுப்பிரமணியத்தின் தோளில் தட்டினான். 

“எப்படி மணியம்? பார்ப்பம். இதுவும் இல்லையெண் டால் இனி எங்கையாவது காணி எடுத்துக் கமஞ் செய்ய வேண்டியதுதான்.” 

சுப்பிரமணியம் விரக்தியோடு சிரித்தான். 

அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது கணேசன் அவனைத் தட்டி “மணியம் அதோ பார்” என்று பரபரத் தான். கணேசன் காட்டிய திக்கை மிகவும் புதினமாகச் சுப்பிரமணியம் பார்த்தான். 

பார்க்கத் தேடிக் கொண்டிருந்த முகம் திடீரென முன் னால் தோன்றினால் எப்படியிருக்கும்? கணேசன் காட்டிய திக்கிலே நின்ற அவளை, அருந்ததியைக் கண்டபோது அத் தகையதோர் உணர்ச்சிதான் சுப்பிரமணியத்திற்கும் தோன்றியது. 

சுப்பிரமணியம் முகம் மலர, கணேசனைப் பார்த்தான். 


அருந்ததியை எப்படி அவனால் மறக்க முடியும்? 

அருந்ததி ஆறாம் வகுப்பிலிருந்து “ஸ்கொலர்ஷிப்” பில் படித்தவள், ஜி.சி. ஈ. படித்து முடிந்து சுப்பிரமணியம் பாடசாலையை விட்டு விலகியதன் பின்பு அவன் அவளைக் காண விரும்பியிருந்தபோதும் காணவேயில்லை. 

அருந்ததியும், சுப்பிரமணியமும் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படித்தார்கள். சுப்பிரமணியம் பரம சாது.படிப் பில் நடுத்தரமான கெட்டிக்காரன். அருந்ததிதான் என்றைக் கும் வகுப்பில் முதலாவதாக வருவாள். 

கதைகளிலே வரும் கல்யாண குணங்கள் நிறைந்த நாயகி போல அவள் யாவராலும் நோக்கப்பட்டாள். எட்டாம் வகுப்பிலே தான் சுப்பிரமணியத்திற்கு மிகவும் அறிமுகமானாள் அவள். 

அவளோடு பழக வேண்டுமென்று சுப்பிரமணியத்திற்கு மிகவும் ஆசை. இளம் பருவத்திலேயே அவளின் கண்களில் தாய்மையின் கனிவு இருந்தது. நேரே பார்க்கும் அவளின் பெரிய கண்களின் ஒளி சாந்தமாய் எவரையும் வசீகரிக்கும். இக்காரணங்களால் அவளோடு பேசிப் பழக சுப்பிரமணியம் ஆசைப்பட்டான். அந்தச் சந்தர்ப்பமும் வந்தது. 

தாய் இறந்ததின் பின்பு, சுப்பிரமணியத்தின் தகப்பனார் இரண்டாந்தாரம் திருமணஞ் செய்து கொண்டார். சின்னம்மாவும் ஏற்கனவே திருமணமாகிச் கணவனை இழந்து சுப்பிர மணியத்தின் வயதிலேயே ஒரு மகளையும் கூட்டிக்கொண்டு தான் வந்தாள். அக்கிரமங்களே அவதாரமெடுத்தது போல அவள் சுப்பிரமணியனைக் கொடுமைப்படுத்தினாள். சிறு செடி இருட்டிலே வளரமுடியாது வதங்கினாற் போல அவனிருந் தான். எப்படியோ பள்ளிக்கூடத்திற்கு போக மட்டும் அவள் சுப்பிரமணியத்தை அனுமதித்தாள். 

அன்று வீட்டு அலுவல்கள் யாவையும் முடித்து விட்டு அவசர அவசரமாகப் பள்ளிக்கூடத்திற்கு சுப்பிரமணியம் புறப்பட்டுக் கொண்டிருக்கையில், சின்னம்மாவின் மகள், சுப்பிரமணியம் தங்கச்சி என்றழைப்பதையே விரும்பாத லதா, அவன் கையில் சாப்பாட்டுப் பார்சல் ஒன்றைக் கொடுத்துவிட்டுச் சிரிப்பை மறைத்துக் கொண்டு உள்ளே போனாள். காலையில் சாப்பிடாததால் மத்தியானம் எப் போது வரும் எனச் சுப்பிரமணியன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். மணியடித்தது. வகுப்பு அலமாரியுள் தான் எல்லாரும் சாப்பாட்டுப் பார்சல்களை வைப்பது வழக்கம்.சுப்பிரமணியம் மிகவும் அவசரமாய் சாப்பாட்டுப் பார்சலைப் பிரித்தான். 

இதென்ன வழக்கத்திற்கு மாறாக பெரிய அதிசயம்? பிட்டு, அல்லது கொழுக்கட்டைதான் அவனிற்கு கிடைக்கும் நித்திய சாப்பாடு. இன்றோ இடியப்பமும், உருளைக் கிழங்குக் கறியுமாய் என்ன ருசியான சாப்பாடு! சாப்பாடு மாறிப்போய் விட்டதோ என்று நினைத்தவன் கடுதாசியைப் பார்த்தான். காலையில் ஆங்கிலப்பேப்பரால் இதே போலத் தான் அவனும்கட்டிக் கொண்டுவந்தான். பிறகு எப்படியாம் மாறுவது? 

மத்தியான இடைவேளை முடிந்து வகுப்புத் தொடங் கியது. அருந்ததியை ஒருமுறை பார்க்கவேண்டும்போல இவனுக்குத் தோன்றியது. அவளிருந்த பக்கமாகப் பார்வையைத் திருப்பினான். பார்த்ததும் அவன் திடுக்கிட்டான். அவளும் அவனைத்தான் நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண் டிருந்தாள். அதை அவளின் பார்வை சொல்லிற்று. 

மாலையில் வீடுபோனதும் வாசலில் நின்று லதா சுப்பிர மணியனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள். சிரித்த சிரிப்பில் கண்களின் ஓரமாய்க் கண்ணீர்கூட அரும்பிற்று. “எப்படிக் காலையிலே கட்டித்தந்த ஒடியல் பிட்டு?’ 

சுப்பிரமணியனின் உணர்ச்சிகள் அவனை அப்படியே திக்குமுக்காடச்செய்து விட்டன. என்ன சொல்கிறாள் இவள்? பிறகுதான் எல்லாம் புரிந்தது. சாப்பாடு மாறித்தான் போய்விட்டது. அவனுடைய சாப்பாட்டை விரித்துச் சாப்பிட்டது யார்? ஐயோ, இனி இந்த அவமானத்தோடு அவன் எப்படிப் பள்ளிக்கூடம் போவான்? 

வயிற்றில் ஏதோ சுகமில்லையென்று மூன்று நாட்களாய் தன்னுடைய சொந்தக்கார வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துச் சாப்பிடும் அருந்ததியின் சாப்பாடாக அது இருக்குமோ? 

இரவு அவன் சாப்பிடவில்லை. இரவின் இருட்டிலே பாயிற் கிடந்து தாரைதாரையாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான். தாயை நினைத்து ஆறுதலடையும் அவனுக்கு இன்று புதிதாய் ஒரு ஆறுதலும் வந்தது- அருந்ததியைத்தான் அவன் நினைத்தான். மத்தியானம் அவள் பார்த்த பார்வைக்கு அர்த்தமிருப்பதாய் மனதிற்குப் பட்டது. 

காலையில் சீக்கிரம் பள்ளிக்கூடத்திற்குப் போய் விட்டான். அங்கே அருந்ததி மட்டுந்தான் நின்றாள். சுப்பிர மணியத்திற்கு என்னவோ போல இருந்தது. 

அருந்ததி அவனையே பார்த்தபடி கேட்டாள்: 

“உமக்கு அம்மா இல்லையா?’ 

அவனால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் அவளின் கேள்வியில் இருந்து, அந்த வாஞ்சையிலிருந்து நேற்று தன்னுடைய சாப்பாட்டை இவள்தான் சாப்பிட்டாள் என்பது சுப்பிரமணியத்துக்குப் புரிந்துவிட்டது. அவன் மனதில் நன்றியும் அன்பும் பொங்கிற்று. அவன் மனம் நினைத்தது. ‘அம்மாவை நினைக்கவேண்டிய நேரங்களில் எல்லாம் அருந்ததி இனி உன்னைத்தான் நினைப்பேன்’- நினைத்ததைச் சொல்ல அவன் தலை நிமிர்கையில், அருந்ததி யின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் உடைந்து விழுந்ததை அவன் கண்டான். 

அன்றிலிருந்து அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உறவாய் உயிராய் ஆனார்கள். 

அந்தப் பள்ளிக்கூடத்திலிருந்த ஆசிரியர்கள் முழுப் பேருமே அருந்ததியைத்தான் முன் உதாரணமாக எதற்கும் காட்டுவார்கள். ஒருநாள் அவளுடைய எதிர்காலம் பற்றிச் சுப்பிரமணியம் அவளிடம் கேட்டபோது அவள் எவ்வித முக வாட்டமுமின் றிச் சொன்னாள்: 

என்னுடைய வாழ்க்கை எப்படி அமையுமோ ஆருக்கு தெரியும்? ஏழைக் குடும்பத்திலை பிறந்தவை வாழ்க்கை இப்படித்தான் அமையுமென்று எப்படிச் சொல்ல முடியும்?” 

அவள் முகத்தில் சலனமின்றிச் சொன்னபோதும், சொன்ன சொற்களிலே மனதின் துயரம் தெரிந்தது. எனினும் அவளின் பயம் அர்த்தமற்றது எனவும் அவளின் திறமை அவளை மிகவும் பேருடனும், புகழுடனும் பிரகாசிக்க வைக்குமென்றும் சுப்பிரமணியம் நினைத்தான். 

ஜி.சி.ஈ. பரீட்சை எழுதி முடிந்த பின்பு அவளிடம் அவன் இறுதியாக விடை பெற்றுக் கொண்டான். தொடர்ந்து படிக்கஅவனுக்குவசதியில்லை. இனிப் படிப்பதா யின் வேறு இடம் பார்க்கும்படி சின்னம்மா சொல்லி விட்டாள். அவனுக்கு சிறு நிழல்கூடவேறு இடத்தில் இல்லை. எனவே படிப்பை முடிப்பதுதான் ஒரே வழி. அருந்ததி தொடர்ந்து படிக்கப்போவதாகச் சொன்னாள். 

அவளிடம் இறுதியாக விடைபெறும் நேரத்தை மிகவும் மனக்கலக்கத்தோடேயே சுப்பிரமணியம் எதிர்கொண்டான். அவளை இறுதியாகப் பார்க்கையில் அவன் பெருமூச்சு விட்டான். மனம் தளும்பித் தளும்பி அழுதது. கண்கள் நனைந்தன. வாயை இறுக மூடிக்கொண்டு மெளனமாக அவளைப் பார்த்துவிட்டு, முடியாமல் கீழே பார்த்தான். 

அவன் பிரியும்போது அவள் அவனிற்கு ஒரு பாரதியார் பாடல்கள்’ புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்தாள். அதற்குப்பிறகு அவளை அவன் காணவில்லை. ஆனால் அவளை அடிக்கடி நினைத்திருக்கின்றான். அருந்ததியை அவனால் எப்படி மறக்க முடியும்? 

காலையில் அவளோடு பேசவேண்டும் என்று நினைத்துக் காலடி எடுத்து வைக்கும்போது பரீட்சை மணி அடித்தது. ஆகவே மத்தியானம் அல்லது பின்னேரம் அவளோடு நிச்சயம் பேசலாம் என்று கணேசன் சொன்னான். கணேச னும் அவர்கள் இருவரோடும் படித்தவன். இருவரிலும் அவனுக்கு நல்ல விருப்பம். யாருமே குறை சொல்லமுடியாத ஜீவன்களாய் அவர்கள் இருந்தனர். பேரழகியான அருந்ததியை பலரும் விரும்பினர். ஜி.சி.ஈ. வகுப்பில் படித் துக்கொண்டிருக்கையில், பள்ளிக்கூடத்தின் மிகவும் புகழ் பெற்ற விளையாட்டு வீரன் மனோகரன் தன் காதலைத் தெரிவித்து அவளுக்கு ஒரு கடிதம் எழுதி அவளின் கையி லேயே தயக்கத்தோடு கொடுத்திருக்கின்றான். அவள் கடி தத்தை எவ்வித பரபரப்புமின்றி வாசித்துவிட்டுக் கண்களில் கருணை பொங்க அவனைப் பார்த்தாள். பிறகு கடிதத்தை மடித்து அவன் கையிலேயே கொடுத்து விட்டுச் சாந்தமாகச் சொன்னாள். 

“இண்டைக்கு நடந்ததை இண்டையோடை மறந்திடுங்க.” 

தீயின் வெம்மையைக் கூடத் தாங்கமுடியும். ஆனால் சாந்தத்தின் மன்னிப்பைச் சிலவேளைகளில் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவனாலும் அது முடியவில்லை. பள்ளிக்கூடம் மாறிப்போய்விட்டான். 

அருந்ததியை யாரால்தான் கோபிக்கமுடியும்? 

மத்தியானம் பரீட்சை எழுதிவிட்டு, அருந்ததியைப் பார்க்கும் ஆசையோடு வெளியே வந்தான் சுப்பிரமணியம். 

பின்னால் கணேசன் வந்து நின்றான். மண்டபத்தின் மறு வாசலால் அருந்ததி இன்னோர் பெண்ணோடு சாப்பிட அவ சரமாய்ப் போவதாய்ச் சொன்னான். இவனுக்குத் திடீரென கால் தடக்கினாற் போல் இருந்தது. சமாளித்துக் கொண்டான். 

கணேசன் சாப்பிட அழைத்தான். இருவரும் சாப்பிடப் போனார்கள். இடியப்பம்தான் சாப்பாடு. இடியப்பப் பின்னல் களாய் நினைவுகளும் ஆயின. எங்கெங்கோ பின்னே போயிற்று நினைவு. அருந்ததியின் இடியப்பத்திற்கு ருசியாக வும், நிகராகவும் என்றும் அவன் சாப்பிட்டதில்லை. அதற்குப் பிறகும் சாப்பிட்டதில்லை. அபரிமிதமான ஓர் ருசியை அன்று அனுபவித்ததுபோல் என்றுமே அவன் அனுபவித்து உணர்ந்த தில்லை. 

‘அருந்ததி யார்; நான் யார்? அவளுக்கும் எனக்கும் எந்த விதத்திலும் உறவோ தொடர்போ இல்லை. ஆயினும் அவளைப்போல உறவு எனக்கு யாரும் இல்லை. குயில் கூட ஒரே விதமாகத் தான் ‘கூ’ என்று கூவுகிறது. அதிலே இனிமை இல்லை என்பவர் யார்? யார் தான் இவ் ஓசை அலுத்ததென்பார்கள். அருந்ததியை நான் எத்தனை முறை நினைத்திருப்பேன்? அம்மாவை நினைக்க வேண்டிய நேரங் களில் எல்லாம் அருந்ததி இனி உன்னைத்தான் நினைப்பேன், நினைப்பேன் என்று முன்பொருதரம் சொல்லுவதற்கு வாய் உன்னிற்று.’ 

சாப்பிட்டுக் கொண்டிருந்த கணேசன் எதையோ நினைத்து விரக்தியோடு சிரித்தவன், இலையை மடித்து எடுத்து எறிந்துவிட்டு மீண்டும் கதிரையில் வந்திருந்தான். சட்டைப் பைக்குள் கையைவிட்டு மடித்திருந்த ஒரு அச்சிட்ட கடதாசியை எடுத்து “இதை ஒருமுறை பார்’ என்று சுப்பிரமணியத்தின் கையில் கொடுத்தான். 

அது ஒரு கேலிச்சித்திரம். 

சுப்பிரமணியம் அதைக் கவனமாகப் பார்த்தான். ஐந்து தனித்தனி மாணவர்களின் படம் கீறப்பட்டிருந்தது. முதல் மாணவன் ரவி, சிறந்த சரித்திர ஆராய்ச்சியாளன். பாலன் பூமிசாத்திரப் புலி. மூன்றாவது மாணவனான சாந்தன் சிறந்த ஓவியன். அதற்கடுத்து குழம்பிய தலையுடன் கீறப்பட்டிருந்த சூரியா கணித மேதை. ஐந்தாவதான சந்திரன் இனிய பாட்டுக்காரன். இது அந்தக் கேலிச் சித்திரத்தின் முதற் பகுதி. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது என்ற தலையங்கத் தின் கீழ் ஐந்து மாணவர்களின் படங்களின் கீழும் மேற் கூறிய அறிமுகக் குறிப்புக்கள் இருந்தன. அதன் கீழே ஐந்து வருடங்களின் பின்பு என்ற தலையங்கமிட்டு ரவி, சாந்தன், சூரியா,பாலன், சந்திரன் ஆகியோர் ஒரே மேசையில் இருந்து எதையோ எழுதிக் கொண்டிருப்பது போல வரையப்பட்டிருந்தது. மேசையின் மேலே ஒரு போர்ட்டில் “கிளார்க்குகள்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த அமைப்பிலே திறமை எப்படிப் பாழடிக்கப்பட்டு, திறமை சாலிகளின் வாழ்வும் நசுக்கப்பட்டிருக்கின்றது என்பதை மனதைக் குத்தும் வகையில் அந்த ஓவியன் வரைந்திருந்தான். 

படத்தின் கருத்தை மனம் கிரகித்த கணமே அருந்ததி தான் நினைவிற்கு வந்தாள். அவள் எதிர்காலத்தில் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளராக வருவாள்,சிறந்த சங்கீதக்காரி யாக வருவாள், உடற்பயிற்சித் துறையில் போதனாசிரியை யாக வருவாள், பல நாடுகளிற்கு ஸ்கொலர்ஷிப்பில் போவாள் என்றெல்லாம் அவளுடைய ஆசிரியர்கள் சொன் னார்கள்… அன்று அவள் சிரித்தபடி சொன்னவை தான் எவ்வளவு உண்மையானவை! “எப்படி என்ரை வாழ்க்கை அமையுமோ ஆருக்குத் தெரியும்! ஏழைக் குடும்பத்திலை பிறந்தவை வாழ்க்கை இப்படித்தான் அமையுமென்று எப்படிச் சொல்ல முடியும்?” 

3 

நான்கு வருடங்கள் கழித்து அவளைச் சந்திக்கப் போகையில் படபடப்போடுதான் மனமிருந்தது. அருந்ததி தன் தாயோடுதான் பரீட்சை எழுத வந்திருந்தாள். அவன் காணத் தவியாய்த் தவித்த அவளிற்குக் கிட்டப் போனதும் அவள் அவனை அடையாளம் கண்டு கொண்டவளாய் சிரித்துத் தலையசைத்தாள். அவன் அவளின் முகத்தைப் பார்த்தான்… அதே பின்னல், அதே கண்கள், சற்றே வாடிய முகம், அவள் சிரித்த சிரிப்பே, வலிந்து சிரித்த சிரிப்பாய் அவனுக்குப் பட்டது. 

அவன் அருந்ததியையே பார்த்தான். அவளின் பார்வை யிலே திகைப்பில்லை. வசீகரமான சாந்தமில்லை. பிரகாச மில்லை. நான்கு வருடங்களாய் அவன் தேடித் திரிந்த கருணை பொங்கும் சிரிப்புமில்லை. அவள் சிரித்தாள்: வெறும் காய்ந்த சிரிப்பு. 

எத்தனை நாள் தவம் செய்தவன் போல அருந்ததியை அவன் காத்திருக்கின்றான். அவன் அவளை நினைத்த நினைப் பிற்கு எண்ணிக்கையுண்டா? எண்ணிலடங்கா எண்ணங்கள் எண்ணி அவளிற்குக் கிட்டப்போன அவனால் அவளின் நிலையை நம்ப முடியவில்லை; நம்பவே முடியவில்லை. 

நிழலைத் தேடிப்போய் தீயில் கால் மிதித்தவன் போல அவன் நெஞ்சு கருகிற்று. ‘அருந்ததி, என் தாயை நினைக் கும் நேரங்களில் எல்லாம் இனி உன்னை நினைப்பேன்… நினைப்பேன் என்று கூற வேண்டுமென்று துடித்தவனையா இப்படி அலட்சியம் செய்கிறாய்?’ என்று அலறவேண்டும் போலிருந்தது அவனுக்கு. அவளே மௌனத்தைக் கலைத் தாள். 

“எப்பிடி சோதினை எழுதினீங்கள்” 

கேட்க வேண்டுமென்று நினைத்துக் கேட்ட கேள்வி போல அக்கேள்வி ஒலித்தது. அவன் அவள் முகத்தையே பார்த்தான். அருந்ததி எங்கோ பார்த்தபடி நின்றாள். “எப்பிடி சுகமாக இருக்கிறீங்களா?” என்று கேட்டான். அவள் இலையுதிர்ந்த மரம்போல பசுமையற்ற தன் தோற்றத்தைத் தானே பார்த்துவிட்டு விரக்தி பொங்கச் சிரித்தாள்: ‘இருக்கிறன்’. 

அவள் நிற்கும் இடமெல்லாம் களிப்பும், சிரிப்புமாய் துலங்கிய நாட்களின்று இறந்து போனவை ஆயின. எவ் வளவு வேகம் பொங்க அவளிடம் அவன் வந்தான். அவளின் அலட்சியமும், விரக்தியும் அவனை ஒரு அன்னியன் போல அவளிடமிருந்து தூரத் தள்ளின. அவன் மாபெரும் தோல்வி யில் விழுந்தவன் போல தளதளத்த குரலிற் சொன்னான்: “என்னவோ எதிர்பார்த்து வந்தன். சரி, எல்லாம் நினைக்கிற படியா நடக்குது?…” 

சுப்பிரமணியம் அவளைப் பார்க்காமலே விடை பெற்று இரண்டு அடிகள் நடந்தான். அவளைப் பார்க்க அப்போதும் மனம் தூண்டிற்று. எனினும் பார்க்காது போக அதே மனம் உந்தியது. மூன்றாம் அடி எடுத்து வைக்கவில்லை. “மணியம்” என்ற அவளுடைய குரல் நடுங்கிக் கொண்டு வந்து அவனை நிறுத்திற்று. 

அவன் அவளைத் திரும்பிப் பார்த்தான். கணத்திலே விழியெங்கும் தாரை தாரையாகக் கண்ணீர் வழிய அவள் நின்றாள். சாந்தம் பொங்க அவள் அவனைப் பார்த்தாள். 

4 

ஜி.சி.ஈ. பரீட்சை சித்தியெய்தி ஆறு வருடங்கள் கழிந்த பிறகு ஒரு மாதிரியாக பொலீஸ் பகுதியில் எழுது வினைஞனாக சுப்பிரமணியம் நியமனமானான். வாராதுபோல வந்த மாமணியாய் அந்த உத்தியோகம் வந்து வாய்த்தது. உத்தியோகத்திற்குப் போன முதல் நாளில் அவன் அருந் ததியை நினைத்துக் கொண்டான். முதல் மாதச் சம்பளத்தில் ஒரு சிறு தொகையை அவளிற்காக ஒதுக்கி வைத்து அவளைச் சந்திக்கும் போது அவளின் கையிலே அதைக் கொடுக்க வேண்டுமென்று அவன் எண்ணியிருந்தான். 

பொலீஸ் ஸ்ரேசனில் சுப்பிரமணியத்திற்கு ஓயாத வேலைகள். வேலைகளின் நடுவே கிடைக்கும் ஓய்வின் பெரும் பகுதியும் வீட்டு வேலைகளில் கழிந்து போய் விடும். இரண்டு வருடங்களின் முன்னே மாணவ ஆசிரியர் பரீட்சை எழுதப் போனபோது அருந்ததியை அவன் கண்டு பேசி மேலும் உறவை இறுக்கிப் பிணைத்தபோது அவளுடைய முகவரியைக் கேட்டான். புதிய முகவரிக்குத் தாங்கள் போகப் போவதா யும், போனவுடன் முகவரியை அறிவிப்பதாகவும் அவள் சொல்லியிருந்தாள். ஆனால் இன்றுவரையில் அவளிடமிருந்து எவ்விதமான கடிதமும் வரவில்லை. 

ஜன்னலுக்கு ஊடாக இருந்து வானில் பூக்களாய் சிதறிய நட்சத்திரங்களை சுப்பிரமணியம் பார்த்துக் கொண் டிருந்தான். எத்தனை நட்சத்திரங்கள்! அதற்குள்ளே தான் அருந்ததி நட்சத்திரமும். கற்புக்கு அடையாளமான லட்சியமான, பெருமையான அருந்ததி! அருந்ததியை எப்படித்தான் மறக்க முடியும்? 

சுப்பிரமணியம் பெருமூச்செறிந்தான். இன்னும் அவனுக்கு ஓவர்டைம் முடிய பதினைந்து நிமிஷங்கள் இருந் தன. எட்டு மணியடிக்க அவன் வீட்டிற்குப் போய்விடுவான். 

வெளியே ஏதோ சத்தங் கேட்டது. “ஜீப்” இரைச்சல் அடங்கிற்று. வழமைபோல யாராவது கைது செய்யப்பட்டிருக்கலாம். அசட்டையாக மீண்டும் கதிரையில் அமர்ந் தான் சுப்பிரமணியம். வெளியே இன்னமும் சத்தம் அடங்க வில்லை. சுப்பிரமணியம் வெளியே போனான். 

ஜீப் வெளிச்சத்தில் -மேலே அறைகுறையாகப் போடப் பட்ட சட்டையுடன் குலைந்து முன் வழியும் தலைமயிரோடு …யார் இவள்! 

வானத்து நட்சத்திரங்கள் எல்லாம் பெயர்ந்து பேரோசை யோடு அவன் நெஞ்சினை மோதி உதைத்தனவா? ஐயோ அருந்ததி! 

“நடவடி!” பொலீஸ்காரன் ஒருவன் அவளின் பிடரி யிலே ஓங்கி அடித்தான். அவள் கிறீச்சிட்டு நிமிர்ந்து நடக்க முடியாது முன்னே தடங்கி வீழ்ந்தாள். 

சுப்பிரமணியத்திற்கு அறிவு அற்றே போனதுபோல சிலையாக நின்றான். இருதயமே நின்றுவிடப்போவதுபோல படபடவென்று துடித்தது. யார் இவள் அருந்ததியா? அருந்ததியா இவள்? 

அவள் லாக்கப்பில் போடப்படும்வரை அவன் பார்த்த படி நின்றான். ஏதோ தவறு நடந்துவிட்டது என அவன் மனம் அடித்துக்கொண்டது. தன் தாயை நினைக்கும் போதெல்லாம் சேர்த்து நினைக்கும் அவளா இங்கே இப்படி இக்கோலத்தில் நின்று அடியும் உதையும் வாங்கி அவமானப் படுகின்றாள்? 

லாக்கப் அறையின் கம்பிகளைப் பிடித்தபடி அவன் உள்ளே பார்த்தான். அப்போதும் அருந்ததியாக இருக்கப் படாதே என்ற ஏக்கமும் பிரார்த்தனையும் அவனுக்குள். ஆனால் யாவும் பொய்த்து விட்டது. அவள் அருந்ததிதான். 

இருக்குமிடமெல்லாம் புன்னகையும் களிப்புமாய், அழ கின் பொலிவாய் விளங்கிய அவள். உலர்ந்த இதழ்களோடு வசீகரமிழந்த முகத்தோடு அழுக்குப் படிந்த உடலோடு இதோ நிற்கிறாள்! இவள் அருந்ததியேதான்! 

சுப்பிரமணியத்திற்கு நெஞ்சை அடைத்தது. “அருந்ததி” என்று வேதனை குமுற மெதுவாய் அழைத்தான். அவள் பேசவே இல்லை. 

“அருந்ததி, என்னைத் தெரியவில்லையா? நான் சுப்பிர மணியம்” – மௌனம். மௌனமே பதில். 

“அருந்ததி, உம்மைக் கெஞ்சுகிறன். இங்கை வாரும்” அவன் குரல் உடைந்து கரகரத்தது. அருந்ததி ஒரு போதும் தவறு செய்தே இருக்க மாட்டாள். ஆறு வருஷங் களின் முன்பு எல்லாவற்றிலும் அவள்தான் முன் உதாரண மாக இருந்தாள். அவள் இப்படியா இருப்பாள்? சுப் பிரமணி யத்திற்கு அவளை அந்நிலைக்குக் கொண்டு வந்த சகலரையும் நசித்துக் கொல்லும் ஆவேசம் உடலெங்கும் சினத்துடன் பொங்கிற்று. 

“அருந்ததி நீர் வரப்போகிறீரா இல்லையா?” 

அவன் தன்னை மறந்து அசுரபலத்துடன் கம்பிகளில் தலையைமோதினான். அந்த நிமிஷம் உள்ளே இருந்தவள் ஓடி வந்து அவன் தலையை கம்பிகளுக்கூடாக வெளியே தள்ளினாள். அவள் அவன் கைகளை பிடித்துக் கொண்டாள். அவன் அசையவில்லை. 

“நான் அருந்ததியில்லை. அருந்ததியில்லை. நீங்க வேறை ஆளை அருந்ததி என்று கூப்பிட்டுப் பிரயோசனமில்லை.” 

அவன் அவளையே பார்த்தான். அதே கண்கள்; அதே முகம்; அதே குரல். இவளா அருந்ததியில்லை? 

“அருந்ததி என்னோடை வந்திடும். நான் பிணை எடுக்கிறன்.” 

அவள் விரக்தியோடு சிரித்தாள். 

“நான் துர்நடத்தைக்காரி. என்னை அருந்ததி என்று நினைச்சு நீங்க கூப்பிடுறீங்க. எனக்கு உங்களைத் தெரியாது. போங்க…போங்க நீங்க ஆரோ நான் ஆரோ… நான் ஒரு தேவடியாள்” அவள் திமிறிக்கொண்டு பிடித்திருந்த கைகளைப் பறித்தபடி கூக்குரலிட்டாள். 

அவன் உயிரைவிட்டது போல அவள் கைகளை விட்டு விட்டு அவளைத் திரும்பி பாராது நடந்தான். வானத்தைப் பார்க்க அவனுக்கு விருப்பமில்லை. அங்கேயும் ஓர் அருந்ததி. மண்ணில் வாழும் அருந்ததியை மதிக்காது விபச்சாரி யாக்கும் இந்த அமைப்புக்கு வானத்திலும் ஒரு அருந்ததியா? 

அவன் போன போன திக்கையே பார்த்துக்கொண்டிருந்த அருந்ததி அவன் உருவம் மறைந்ததும் விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். 

– 1968

– தேடுதல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.

joganathan ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன் - எழுதியவர்: முல்லை அமுதன் - 05 February 2008 1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் இறக்கும் வரை நிறையவே எழுதிக்குவித்தவர். 1962ல் தன் முதல் சிறுகதையான ‘மனக்கோலத்தை’ எழுதியது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுநாவல், சிறுவர் இலக்கியம், திரைப்படம், விமர்சனங்கள் என எழுத்தை விரிவுபடுத்தியவர். ஜெயகாந்தனின் ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலை ‘அக்கினிப் பிரவேசம்’ எனும் சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வலைகள் எனக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *