அந்தஸ்து ஒத்துவராது
கதையாசிரியர்: நா.க.தங்கரத்தினம்
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 11, 2026
பார்வையிட்டோர்: 654
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“அம்மா! அம்மோ!!” என்று கூப்பிட்டுக் கொண்டு அவசர அவசரமாகக் கதவைத் தட்டினான் வரதர். தலை மாட்டில் தணித்து வைத்திருந்த ‘லாம்பைத் தூண்டி விட்டு “என்னடா வரதர் பத்துமணி யாழ்தேவியிலைவாற மெண்டு எழுதினாய். பேந்தேன்ரா நேரஞ்செண்டது.”
“அவள் ஒருத்தி ‘ரெயில்’ தண்டவாளத்துக்கை தலை யைக் குடுத்துவிட்டாள்.”
“ஏனாம் தலையைக் குடுத்தவள்?”
“ஏதோ புருசனுக்கும் பெண்சாதிக்குமிடையில் சச்சரவாம்.”
“அதுதான் சொல்லுறது ஒரு கலியாணத்தைச் செய்யயுக்கை குலம், கோத்திரத்தை அறிந்து செய்ய வேணுமெண்டு” என்று கூறிக்கொண்டே கதவைத் திறந்தாள் அன்னமுத்து.
“அம்மா! எங்கையம்மா அவவைக் காணவில்லை”.
“அது பாவம் இவ்வளவு நேரமும் முழிச்சுக் கொண்டு இருந்தது. மணி அழுதாப்போலை அவனைக் கொண்டு போய் நித்திரையாக்கிச்சிது அதுக்கும் நித்திரை வந்து விட்டுது.”
“ரவி எங்கே?”
“படுத்திட்டான்; அவன் சரியான குறும்புக்காரனடா.”
“தம்பி நாவேந்தன் ஏதாவது வேலைக்குக் கீலைக்கு எழுதிப் போட்டவனே?”
:அவனுக்கேன்ராப்பா வேலை. அவனுக்குத்தானே ஓயாத வேலையாக் கிடக்கு. ஒருநாளைக்கு அந்தக் கூட்டத்துக்குப் போறன், ஒரு நாளைக்கு இந்தக் கூட்டத் துக்குப் போறன் என்று. சதா கூட்டங்களிலே பேசிக் கொண்டு திரிவது தான் வேலையாக்கிடக்கு.”
“உனக்கென்னம்மா தெரியும். அவன் ஒரு பேச்சாளனாக இருக்கிறது, எங்களுக்கெல்லாம் எவ்வளவு பெருமை தெரியுமே?”
“நீயும் பின்னை அதை வரவேற்கிறாய் என்று சொல்லு.”
“சரி சரி . அதிருக்கட்டும் அம்மா; மருமேள் ஒற்றுமையாக இருக்கிறாவே?”
“என்னடா ஒரு மாதிரிக் கேக்கிறாய், எப்பவடா அது எங்களோடை சண்டை பிடிச்சுது. அதைப் போல ஒரு பிள்ளையைத் தேடினாலும் கிடைக்குமே?”
“அடேயப்பா மருமேளைப் பற்றிப் புளுகிறதைப் பார்.”
“உண்மையைத் தான்ரா சொல்லுறன். நான் மாத்தி ரம் சொல்லேல்லையடா; எங்கடை ஒற்றுமையைக் கண்டு இந்த ஊரே பொறாமைப்படுகிறதடா.”
“சரி சரி சாப்பாட்டைப் போடம்மா நான் அவவை எழுப்பிக்கொண்டு வாறன்.”
“தங்கம்! தங்கம்!! என்ன ஒரேயடியாக நித்திரையா கக்கிடக்கிறாய். ‘எழும்பு எழும்பு”என்று கூறிக் கொண்டே தட்டினான் வரதர். வரதர் தட்டியதும் திடுக்கிட்டு எழும் பிய தங்கரத்தினம் ‘ஏனத்தான் இவ்வளவு நேரஞ் செண்டது’ என்று கூறிக்கொண்டே குசினிப் பக்கம் போனாள். அங்கே அன்னமுத்து கோப்பையில் சோறு போட்டுக்கொண்டிருந்தாள்.
“அத்தை!ஏனத்தைஉங்களுக்கிந்தக் கஷ்டம்; என்னை எழுப்பி விட்டால் நான் போட்டுக் கொடுக்கமாட்டேனா?” என்றாள் தங்கரத்தினம்.
“எடே வரதர்; ஏண்டா பிள்ளையை, எழுப்பினனி; அது பாவம் காலையிலை இருந்து மாலைவரைக்கும் மாடு மாதிரி வேலை செய்து போட்டுக் கிடந்ததை நீ போய் எழுப்பின்னியே” என்று மகனை ஏசிவிட்டு எழும்பிப் போனாள் அன்னமுத்து.
“அட உன்ரைமாமி உன்னிலை நல்ல பாசம் போல கிடக்கு.”
“அவவைப்போல ஒரு குணமான, மாமியை எங்கு தேடினாலும் கிடைக்காதத்தான். அவ எனக்கு மாமி யாக்கிடைச்சது சீரணி நாகம்மாளின்ரை அருள்தான்” என்றாள் தங்கரத்தினம். இப்படியே இருவரும் சிரித்துக் கதைத்துச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு அன்னமுத் துவுக்கு அருகில் போய் இருந்தனர்.
”அம்மா! நான் இண்டைக்கு ‘ரெயினு’க்கை மாமா வைக் கண்டனானம்மா.”
“உன்னோடை கதைச்சவையே?”
“ஓமோம் ஒருநாளுமில்லாத மாதிரி, இண்டைக்கு நல்லாக் கதைச்சாரம்மா.”
“நான் நினைச்சன் அவை பெரிய அந்தஸ்துக் காரர்; உன்னோடை கதைக்கமாட்டினமெண்டு.”
“……”
“என்ன கதைச்சவை?”
“மாமாவை வேலையிலை இருந்து நிப்பாட்டிப் போட்டாங்களாம்.”
“ஏன்?”
“அவர் ஏதோ கள்ளத்தோணியள் வருவதற்கு உடந்தையாக இருந்தவராமெண்டு”.
”பிறகு?”
”அவர் வீடு வாசலெல்லாம் வித்து வழக்காடியும் வழக்கிலை தோத்துப்போனாராம்.”
“பிறகு?”
“பிற்கு என்ன; ரேணுகாவுக்கு ‘றிசிற்றர்’ பண்ணி யிருந்து ‘ரகுநாதனும் ரேணுகாவை விட்டு விட்டு ஓடிப் போய் ஆரோ ஒருத்தியைக் கலியாணம் கட்டிப்போட் டானாம்” என்று அவர்களைப் பற்றிய கதைகளைக் கூறி னான் வரதர். பின்னர் மகனும் மருமகளும் படுக்கைக்குச் சென்றுவிட்டனர்.
அவர்கள் இருவரும் போனபின் அன்னமுத்து, மாத்திரம் தனியாக இருந்தாள். அவள் தனிமையாக இருந்ததனாலோ என்னவோ “பிறகு என்ன, ரேணுகா வுக்கு ‘றிசிற்றர்’ பண்ணியிருந்த ரகுநாதனும் ரேணு காவை விட்டு விட்டு ஓடிப்போய் ஆரோ ஒருத்தியைக் கலியாணம் கட்டிப்போட்டானாம்” என்று வரதர் கூறி யது மீண்டும் அன்னமுத்துவின், ஞாபகத்திற்கு வந்தது. அதை நினைத்ததும் தங்கள் அந்தஸ்தைப்பற்றி ரேணுகா அவளுக்கு எழுதிய கடிதமும் ஞாபகத்திற்கு வந்து கடந்த காலத்தைச் சங்கிலிக் கோவைபோல் நினைவு படுத்தியது.
***
“என்ன மச்சாள் ஏதோ எழுதிறா கிழிக்கிறா என்ன விஷயம்? பைத்தியம் கியித்தியம் பிடிச்சுப் போட்டுதே?” என்று கேட்டுக்கொண்டே அடுத்த வீட்டுப் பொன் னம்மா வந்தாள்.
“ஒன்றுமில்லையடி மச்சாள் என்ரை மகன்ரை விஷ யம்தான். உதிலை இரு கொஞ்ச நேரம் கதைப்பம்” என்றாள் அன்னமுத்து.
“கலியாண விஷயமே?”
“ஓ……!”
“அதுதானே ஊரெல்லாம் கதைக்கிது. வயது வந் தும் இன்னும் கல்யாணம் செய்யாமல் மகனைக்கொண்டு உழைப்பிச்சுத் தின்னிறாயெண்டு.”
“நான் என்ன செய்யிறது? மாப்பிளை வீட்டாரும் பெம்பிளை வீட்டாரைப் போய்க்கேக்கிறதே.”
“ஏன்? உன்ரை கொண்ணையின்ரை மேளைத்தானே செய்யிறதெண்டு ஊரெல்லாம் கதைக்கினம்.”
“அது என்ரை அண்ணையின்ரை பெண்சாதிக்கு விருப்பமில்லையாம். அவவுக்கு நான் கடிதமெழுதிப் பார்த்தனான். அவ தாறுமாறாக எழுதியிருக்கிறா” என் றாள் அன்னமுத்து. அன்னமுத்து கதைக்கும் போது குரல் கரகரத்தது. கண்களும் குளமாயின.
“விருப்பமில்லாவிட்டால் உனக்கென்ன ; ஊர் முழுக்கப் பொம்பிளையளாக் கிடக்கு. அழகு வேணுமா ? பணம் வேணுமா ? குணம் வேணுமா? எது வேணு மெண்டு சொல்லு இப்பவேகொண்டு வந்துவிடுகிறேன்.”
“ஒண்டைக் கொண்டுவரச் சொன்னா ஒன்பதைக் கொண்டுவந்து விடுவாயெண்டு எனக்குத் தெரியும். ஆனால் என்ரை அண்ணையின்ரை பிள்ளையையும் ஒருக்கா எழுதிக் கேட்டுப் போட்டுச் சொல்லுறன்” என்று அருகி லிருந்த பொன்னம்மாவுக்குச் சொல்லிவிட்டு மீண்டும் தன் மருமகளுக்குக் கடிதம் எழுதத் தொடங்கினாள் அன்னமுத்து. கடிதம் ரேணுகாவுக்குப் பறந்தது.
***
ரேணுகாவின் கடிதம் எப்பொழுது வரும்; என்ன மாதிரி வரும் என்று யோசித்துக் கொண்டிருந்தாள் அன்னமுத்து. கடிதத்தின் வரவை எதிர்பார்த்துக்கொண் டிருந்த அன்னமுத்து சைக்கிள் சப்தம் கேட்டு ஓடிப் வாங்கியவள், போனாள் படலையடிக்கு. கடிதத்தை “தம்பி! இந்தக் கடிதத்தை ஆர் அனுப்பியிருக்கெண்டு பார்த்துச் சொல்லு தம்பி.”
“இது கொழும்பிலிருந்து ரேணுகா அனுப்பியிருக்கு” என்றான் தபாற்காரன்.
அன்னமுத்துவின் படலையில் தபாற்காரன் நிற்ப பொன்னம்மா, ‘அன்ன தைக்கண்ட அடுத்தவீட்டுப் முத்து மச்சாள் உன்ரை மருமேளிட்டை இருந்து வந்ததாமே?’
“ஓமாம், என்ரை மருமேள் தானாம் போட்டிருக்கிறாள். வாவன் என்ன எழுதியிருக்கிறா என்று வாசித்துப் பாப்பம்” என்றவள் மிக்க சந்தோஷத்துடன் சுருட்டியிருந்த பாயை விரித்துவிட்டு ‘உதிலை இரு’ என்று பொன்னம்மாவையும் இருத்தி விட்டு தானும் இருந்தாள்.
தபால் உறையைக் இருந்தவள் கையிலிருந்த கிழித்துக் கடிதத்தை எடுத்தாள். அவசர அவசரமாக வாசிக்கத் தொடங்கினாள். அதில் “உங்களுக்கும் எங்க ளுக்கும் உள்ள அந்தஸ்து ஒத்துவராது. நீங்கள்வேறு யாரையும் பார்த்து உங்கள் மகனுக்குத் திருமணம் செய்து கொடுங்கள். என்னை நம்பியிருக்க வேண்டாம்,” என்ற சொற்கள் தடிப்பாக இருப்பதைக் கண்டு அன்ன முத்துவின் முகம் கறுத்துக் கண்கள் குளமாயின.
“அன்னமுத்து மச்சாள்! நீ கவலைப்படாதை. ஆம் பிளைக்கும் எங்கேயாலும் பெம்பிளை இல்லாமைப் போகுமே. அதுவும் இந்த ஊரிலை” என்றாள் பொன்னம்மா.
“சரி சரி, நானும் என்ரை அண்ணையின்ரை பிள்ளை யைச் செய்ய வேணுமெண்டு தான் என்ரை மகனை வைச்சுக் காத்துக் கொண்டிருந்தனான். அதுவும் இண் டையோடு போச்சுது, இனி எங்கேயாவது. பாத்து நல்ல குணமான பொம்பிளை ஒண்டைச் செய்யவேணும்” என்றாள் அன்னமுத்து.
“மச்சாள்! படலையிலை கார்ச் சத்தம் கேக்குது ஆரெண்டு பார்.”
“ஆரோ வருகினம் போலை. பார்த்துக் கொண்டு வாறன் இருந்துகொள்” என்று கூறிக்கொண்டே போனாள் அன்னமுத்து.
“இஞ்சாருங்கோ அன்னமுத்துவின்ரை வீடு இது தானே-” காரில் வந்தவர்களுள் ஒருவரான கோவிந்த பிள்ளை கேட்டார்.
“ஓமோம்! நான்தான் அன்னமுத்து. வாருங்கோவன் உள்ளுக்கு” என்று வந்தவர்கள் எல்லோரையும் கூட்டிக். கொண்டு போய் இருத்தினாள் அன்னமுத்து.
அன்னமுத்து வறியவள்தான். வீடும் ஓலை வீடு. ஆனால் அவளின் பிள்ளைக்கு மாத்திரம் அவ்வூரில் நல்ல மதிப்பு. காரணம் அவ்வூரிலே பெண்பிள்ளைகள் அதிகம் இருப்பதுதான். அதனாலே மாதந்தோறும் அவள் வீட்டுக் குவந்து கலியாணம் பேசுவோர் எண்ணில் அடங்காது. அப்படிக் கலியாணம் பேசுவதற்காகத்தான் கோவிந்த பிள்ளையின் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.
“என்ன! அவையும் வந்திருக்கினம் நீயும் ஒண்டும் பேசாமையிருக்கிறாய்” என்றுபேச்சுவார்த்தையை ஆரம் பித்து வைத்தாள் பொன்னம்மா.
“ஏன்? அவசரப்படுகிறாய். அவை என்னத்துக்கு வந்ததெண்டு சொல்லுவினம்தானே?”
“உங்களையெல்லே, உங்கள் மகனுக்கு, எங்கடை பிள் ளையைச் செய்யலாமெண்டு நினைக்கிறோம்.உங்கள் விருப்பத்தைச் சொல்லுகிறியளே? நீங்கள் கேக்கிற சீதனத்தை நாங்கள் தாறோம்” என்றார் கோவிந்தபிள்ளை.
“நான் சீதனத்துக்காக என்ரை மகனை விக்க இருக் கவில்லை, அவள் நல்ல குணமான பிள்ளை ஒண்டைக் கலி யாணம் செய்து சந்தோஷமாக இருக்க வேண்டுமென் பதுதான் என் விருப்பம்”
“எங்கள் மகளுந்தை குணத்தைப் பற்றிப் பொன்னம்மாவைக் கேட்டாலேசொல்லுவா. கேட்டுப் பாருங்கோ எப்பிடியெண்டு”.
“ஏன்? பொன்னம்மாவைக் கேட்கவேணும். ‘ஊரிலை ஒரு மாதிரி உங்கடை மகளைப்பற்றிக் கதைக்கி னம்… ஆருக்கோ காயிதம் போட்டதாமெண்டு.”
“உதெல்லாம் உந்த ஊரவங்கள் கட்டினகட்டுக் கதை”.
“எந்தக் கதையாக இருந்தாலும் எனக்கென்ன. நான் மாத்திரம் இதை விரும்பவில்லை” என்று அன்னமுத்து சொன்னதும் வந்தவர்கள் எல்லோரும் எழும்பிப் போய் விட்டார்கள்.
“ஏன் மாட்டவெண்டனி? நல்ல சீதனம் தருகினமா மெல்லே வாங்கிக் கொண்டு செய்யேன். குடும்பமும் நல்ல அந்தஸ்துக்காரர்.”
“சும்மா போமச்சாள். சீதனத்தை எடுத்து நாங்கள் சாப்பிடுகிறதே? பிள்ளையள் சண்டை சச்சரவு இல்லா மல் இருந்தால் போதும். அவனும் தகப்பன் இல்லாத பிள்ளை சண்டை சச்சரவு வந்தால் ஆர் போய் அவனுக் காகக் கதைக்கிறது? அந்தஸ்து இண்டைக்கு வரும் நாளைக்குப் போய்விடும். அதுக்காகப் பிள்ளையளை நாசமாக்கிறதே?”
“பின்னை நெடுக வச்சுக்கொண்டு இருக்கப் போறியே?”
‘நல்ல குணமான பொம்பிளை இருந்தால் பேசிக் கொண்டுவா. செய்யிறன்.”
“சரி சரி பொழுது படப் போகுது. ஆடுமாடுகளைப் பிடிச்சுக் கட்டவேணும். வீட்டுக்கு விளக்கும் வைக்க வேணும். எல்லாத்துக்கும் நாளைக்கு வாறன்” என்று கூறிக்கொண்டு போனாள் பொன்னம்மா.
***
“தம்பி நாவேந்தன்! உன்ரை கொம்மா இருக்கிறாவே?”
“இப்பதான் முழுகிவிட்டு சிவன் கோயிலுக்குப் போறா”
அப்பிடி யெண்டாக் கொம்மா வந்ததுக்குப் பிறகு கூப்பிட்டுச் சொல்லு தம்பி. நான் அவவோடை கதைக்க வேணும்.” என்று படலையில் நின்று சொல்லிப் போட்டுப் போனாள் பொன்னம்மா.
அவள் சொல்லி விட்டுப் போய் பத்து நிமிடங்களுக் குப் பிறகு படலையைத் திறந்து கொண்டு உள்ளே வந் தாள் அன்னமுத்து.
“அம்மா! உங்களைக் காணவேண்டுமெண்டு அடுத்த வீட்டுப் பொன்னம்மா மாமி சொல்லிப்போட்டுப்போறா. என்ன விஷயமெண்டு கேட்டுக் கொண்டு வாணை. ஏதோ அவசியமான காரியம் கதைக்க வேணுமாம்.”
நாவேந்தன் சொன்னதும் வேலிக்கருகில் நின்று ”மச்சாள்! மச்சாள்!!-‘” என்று உரத்துக் கூப்பிட்டாள் அன்னமுத்து.
“கொஞ்சம் பொறு மச்சாள்! அடுப்பிலை உலைவைச் சுப் போட்டு வாறன். நீபோய்ச் சாப்பிடு” பின்னர் பொன்னம்மா வந்து விஷயத்தை ஆரம்பித்தாள்.
“எல்லாம் சரியாக்கிப் போட்டன். நான் நினைச்சா முடியாத காரியமும் ஒண்டு இருக்குதே. ஆனால் ஒன்று கொஞ்சம் வறுமைப்பட்டதுகள் அவ்வளவுதான்.”
“அது தான் நல்லது. என்ரை மேனிலும் பார்க்க வறுமைப்பட்டவளாக இருந்தால்தான் கொஞ்சம் அடங் கிக் கிடங்கிநடப்பாள். அல்லது நான் பெரிசோ நீ பெரிசோ எண்டு வாழ்நாள் முழுக்கச் சண்டை டபிடிச்சுக் கொண்டு தான் இருக்கவேணும்.”
“நீ பின்னை வறுமைப்பட்ட மருமகளைத்தான் விரும்புகிறாய்!”
“குணம் எப்படி?”
“தங்கக் குணம். இப்படியான குணமுள்ள பிள்ளையை நீ தேடினாலும் கிடைக்காது.”
“எப்ப் பின்னைக் கலியாணப் பேச்சை போட்டிருக்கிறாய்.”
“இண்டைக்கு நாலு மணிக்கு வருவினம்.”
“நீ சரியான ஆளாத்தான் கிடக்குது.”
“சரியான ஆளென்ன, இந்த விஷயத்திலே நிறைந்த அநுபவசாலி எண்டுசொல்லு” என்று சொல்லிச் சிரித்தாள். பொன்னம்மா. அன்னமுத்துவும் பொன்னம்மாவுடன் சேர்ந்து சிரித்தாள்.
***
அந்த ஊரிலே கலியாணப் ‘புறோக்கர்’ என்றால் அது பொன்னம்மாவைத் தான் குறிக்கும். கலியாண விஷ யத்திலே பொன்னம்மாவுக்கு நல்ல மதிப்புண்டு. அநு பவமும் உண்டு. அவள் கண்டபடி ‘வேண்டா வெறுப் பாகக் கலியாணம் செய்து வைக்க மாட்டாள். தான் செய்து வைக்கும் கலியாணங்கள் எல்லாம் பிற்காலத்தில் சீரும் சிறப்புடனும் வாழ வேண்டும் என்ற பெருநோக்கைக் கொண்டே செய்து வைப்பாள் அவள்.
அவள் செய்துவைத்த கலியாணங்களை விரல்விட்டு எண்ண முடியாது. அவள் பெயரைச் சொல்லி இன்றும் எத்தனையோ குடும்பங்கள் ஒற்றுமையாக வாழ்வதைக் காணலாம்.
இருபகுதியினருக்குமிடையே கலியாணப் பேச்சு நடைபெற்று முடிந்து விட்டது. கலியாணப் பேச்சு முடி வுற்றது அன்னமுத்துவுக்கு ஒரு தலைச்சுமை நீங்கியது போல இருந்தது.
“எடே தம்பி! உன்ரை கொண்ணைக்கொரு காயிதம் எழுதிப்போடடா.”
“அவர் உந்தக் கலியாணத்துக்கு ஒத்துவரமாட்டார்.”
“ஏன்ரா ஒத்துவரமாட்டார். நீ எழுதிப்போடடா.”
“மற்றவங்களெல்லாம் இருபதினாயிரம் முப்பதினாயி ரம் எண்டு வாங்கிறாங்கள். அவருக்கு மாத்திரம் என்ன சீதனம் பேசியிருக்கிறியள்.”
“நான் பணத்துக்காகக் கலியாணம் பேசயில்லையடா ணத்துக்காகத்தான்ரா கலியாணம் பேசினனான். நீ கொஞ்சக் காலம் இருந்து பாரனடா பணமோ? குணமோ? பெரிசெண்டு.”
“சரி சரி,நானும் இருந்துதானே பார்க்கப்போறன்.”
“என்னத்தைப் பார்க்கப் போறாய். உன்ரை விசர்க் கதையை விட்டு விட்டு நீ எழுது.”
“என்னமாதிரி எழுதுகிறது?”
“காசு இரண்டாயிரம். நகை ஆயிரம். ஆக மொத் தம் மூவாயிரம் என்று எழுது.”
கடிதம் வரதரின் கைக்குக் கிடைத்தது. கடிதத்தை வாசித்தான்.
“காசு இரண்டாயிரம். நகை ஆயிரம். ஆக மொத் தம் மூவாயிரம்.”
“பெண்ணின் பெயர் தங்கரத்தினம்; தங்கமான குணம்”
‘நல்ல அழகி’ என்ற தடித்த எழுத்துக்கள் அவ னைத் திருப்பித் திருப்பி வாசிக்கச் செய்தன.
வரதர் தன் தகப்பனை இழந்த பின் தாய் கீறிய கோட்டுக்குள்ளே இருந்து வளர்ந்தவன். தன் தாய் தனக்கு விரோதமாக எதையும் செய்ய மாட்டாள் என் பது அவனுக்கு நன்றாகத் தெரியும். எந்தத் தாயும் தன் மகனுக்குத் துரோகம் செய்வதில்லை என்பது அவன் எண்ணம். தன் தாய் தனக்குப் பேசும் கலியாணம் ஏதோ ஒரு வகையில் நல்லதாகத் தான் அமையும் என்ற முடி வுக்கு வந்தான்.
“அம்மா! என்னைக் கேளாமலே எனக்குக் கலியாணம் பேசிவிட்டீர்கள். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் உன் மாமனின் மகள் ரேணுகா இருக்கிறாள். அவளைத் தான் உனக்கு கலியாணம் செய்யிறது’ என்று அடிக் கடி எனக்குக் கூறுவாயே அந்த எண்ணத்தை எப்படி அம்மா மறந்து இப்படி மாறிவிட்டீர்கள்? உங்களுக்குள் ஏதாவது மனக் கசப்புக்கள் ஏற்பட்டு விட்டதா? இப் படி எழுதிவிட்டேன் என்று வருந்தாதீர்கள். உங்கள் விருப்பப்படி கலியாணம் செய்வதற்கு வருகிறேன். வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுங்கள்.”
அவன் எழுதிய கடிதம் அன்னமுத்துவுக்குக் கிடைத் தது. அன்னமுத்துவின் ஆனந்தத்தை அளவிடவே முடி யாது. அழகான முறையிலே திருமண அழைப்பிதழ்கள் அச்சிட்டு உற்றார் உறவினர்களுக்கு அனுப்பப்பட்டன. கொழும்பில் உள்ள பெரியதம்பி தம்பதிகளுக்கும் அனுப்பப்பட்டது.
பெரியதம்பி அன்னமுத்துவின் ஒரே ஒரு அண் ணன். கொழும்பிலே சுங்கப் பகுதியில் உயர்தர உத்தி யோகம் வகிப்பவர். செல்வச் சீமான் என்று சொல்லக் கூடிய அளவுக்குப் பணம் நிறையவைத்திருக்கிறார். அத னால் தான் அவரது ஒரே ஒரு மகளான ரேணுகா தான். அந்தஸ்தில் கூடியவள் என்ற பெருமையுடன் நடந்து கொள்கிறாள். அவள் தன் உற்றார் உற வினருடன் கதைப்பதேயில்லை! அவ்வளவுக்கு அவள் அந்தஸ்து அவளை உயர்த்திக் கொண்டிருந்தது.
வரதருக்கும் தங்கரத்தினத்திற்கும் திருமணம் வெகு கோலாகலமாக நடந்தது. உற்றார் உறவினர் எல்லோ ரும் திருமணத்திற்குச் சமுகம் கொடுத்தனர். ஆனால் அன்னமுத்துவின் அண்ணன் பெரிய தம்பியின் குடும் பத்தினர் மாத்திரம் சமுகம் கொடுக்கவில்லை. இது எல்லோருக்கும் ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் கொடுத்தது.
“என்ன மச்சாள்! நீ இப்பிடிப் பெரியெடுப்பாச் செய் வாயெண்டு நான் கனவிலும் நினைக்கவில்லை” இப்படிக் கூறினாள் அன்னமுத்துவின் மைத்துனி செல்லமுத்து.
”எனக்கோ இரண்டேயிரண்டு பெடியள். அதுவும் முதல் மூத்தவன்ரை கலியாணத்தை செய்யயுக்கை நல் லாச் செய்ய வேணுமெண்டு எனக்கு ஆசை. ஆனால் வீண் செலவு ஒண்டுமில்லைத்தானே.”
“என்ன மச்சாள்! பெரிய தம்பி அத்தானை காணயில்லை.”
“அவை பெரிய அந்தஸ்துக்காரர். எங்களிட்டை வருகினமே?
“நானெல்லாம் கேள்விப்பட்டனான். ரேணுகாவும் தாயும் ஏதோ தாறுமாறாக உனக்கெழுதினவையாம். பெரிய தம்பி அத்தான்ரை பெண்டில் ஒரு மாதிரியான ஆளெண்டு எங்களுக்குத் தெரியும். ஆனால் மகளும்……”
“ஏன் மச்சாள்! அவையின்ரை கதை எங்களுக்கு. என்ரை மருமேளைப் பாத்தனியே. எப்பிடி?”
“அவளின்ரை முகத்தைப் பார்க்கச் சந்திரனைப் பாத்த மாதிரிக் கிடக்குது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்களெல்லே. முகத்தைப் பாத்தாலே குணத்தைச் சொல்லத் தேவையில்லை.”
“நானும் குணத்துக்காகத்தான் செய்தனான்.”
“எங்கையடியாத்தை தேடி எடுத்தனி?”
“சண்டிலிப்பாய்ச் சந்தியைத் தெரியாதே?”
“தெரியும்.”
“அதிலை நிண்டு பாத்தாச் சீரணி நாகம்மாள் கோயில் தெரியும். அந்தக் கோயிலுக்கு வடக்குப் பக்கத் திலை இருக்கிற கல்வீடு தான் மருமேளின்ரை வீடு.”
“அப்பிடிச் சொல்லேன் சங்கதியை. எனக்கு நேர மாச்சு; போய்விட்டுப் பிறகொரு நாளைக்கு வாறன். எங் களை மறந்து கிறந்து போகாதை. எங்களிட்டையும் பொம்பிளைப் பிள்ளையள் இருக்கு என்று கூறிக் கோண்டு நகர்ந்தாள் செல்லமுத்து.
***
அன்னமுத்துவுக்கு ரேணுகா எழுதிய கடிதம் பார தூரமானது தான். இருந்தாலும் அன்னமுத்துவின் மனம் இரங்கி விட்டது. எப்படி இருந்தாலும் அவள் தன்னுடைய அண்ணன் மகள் என்பதை மறக்கவில்லை. அண்ணனின் குடும்பம் பெரிய அந்தஸ்துள்ளதாக இருந்து தற்பொழுது சீரழிவதையும் அவளால் பொறுக்க முடியவில்லை. என்ன இருந்தாலும் சுகோதர பாச மல்லவா……?
மகன் மணியை நித்திரையாக்கி விட்டு வரதரும் தங்கரத்தினமும் அன்னமுத்து இருந்த அறைக்கு வந் தார்கள். அவர்கள் வந்ததும் திடுக்கிட்டுத் தன் கடந்த கால நினைவை நிறுத்திவிட்டுத் “தம்பி நான் ஒரு முடி வுக்கு வந்து விட்டேன்” என்றாள் அன்னமுத்து.
“என்ன முடிவுக்கம்மா வந்திருக்கிறீர்கள்?”
“அவள் ரேணுகாவுக்கு என்ரை நாவேந்தனைக் கலி யாணம் செய்ய முடிவு செய்து விட்டேன். எப்பிடியடா மேனை என்ரை முடிவு?”
“நல்ல முடிவம்மா” என்றான் வரதர்.
– 09-02-1964, வீரகேசரி.
– கன்னிப்பெண் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1965, நகுலன் வெளியீடு, கலையகம், கலைநகர், சித்தன்கேணி.
![]() |
சித்தன்கேணி கலைநகரைச் கேர்ந்த திரு. நா. க. தங்கரத்தினம் அவர்கள் அராலி வடக்குச் செட்டியார் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு நாகர் கந்தையாவுக்கும் திருமதி மனோன்மணி கந்தையாவுக்கும் 8-6-35ல் பிறந்தார். 'நகுலன்', 'அராலியூரான்', 'கலை நகரான்', 'கொழும்பு மாமா', 'இராசாக்குட்டி' என்னும் புனை பெயர்களுள் மறைந்திருந்து சிறுகதை, கட்டுரை, கவிதைகள் எழுதும் இவர், சமூகத்தொண்டனில் முதன் முதலாகக் கட்டுரை எழுதத் தொடங்கி, தினகரன், வீரகேசரி, ஈழநாடு. ஸ்ரீலங்கா, சுதந்திரன், விவேகி, கலைவாணி…மேலும் படிக்க... |
