சன்னல் வழியே..!
கதையாசிரியர்: பே.செல்வ கணேஷ்
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: January 10, 2026
பார்வையிட்டோர்: 9,785
அவள் அந்த சன்னலின் வழியே அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள், அவனோ அந்த கடையில் நின்று டீ குடித்துக்கொண்டிருந்தான், கூடவே அவனது நண்பர்கள் அடிக்கும் ஜோக்கிற்கு சிரித்துக்கொண்டிருந்தான்.
அவன் சிரிப்பதையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள், ம்ஹூம் பார்த்துக் கொண்டிருந்தாள் என்று சொல்வதை விட இரசித்துக் கொண்டிருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
மூன்று மாதங்களாக அவனைப் பார்க்கிறாள், இரசிக்கிறாள்,காதல் செய்கிறாள்! அதுவும் இந்த சன்னல் வழியே!
ஆனால் அவனுக்கோ இவளை யாரென்றே தெரியாதுதான்.
அத்தெருவில் இவள் பின்அலையாத ஆண்களே இல்லையென்று சொல்லலாம், ஆனால் இவளுக்கோ இவன் மீதுதான் காதல்!
கம்பெனிக்குச் செல்வதற்காக ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு சென்றாள், அவனைப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே அந்த டீக்கடையை கடந்துச் சென்றாள், என்றும் இல்லாத நாளாக அவன் இவளைப் பார்த்து புன்முறுவலித்தான், இவளுக்கு அந்நேரத்தில் எப்படி ரியாக்ட் பண்ணுவதென்று தெரியாமல் அவனைக் கண்டும் காணாததுப் போல் சாலையை கவனித்தாள்.
அவனை பார்ப்பதை தவிர்த்தாலும், அவனது புன்முறுவல் அவளது மனதை ஏதோ செய்தது, அதையே நினைத்து நினைத்துப் பார்த்தாள், சிரித்தாள், வெட்கமடைந்தாள்.
எல்லாம் காதல் செய்யும் மாயம்! அதனை நினைத்துக் கொண்டே அந்த வளைவில் திரும்பினாள் அப்போது எதிர்பாராவிதமாக எதிரில் அந்த லாரி வேகமாக வந்துக் கொண்டிருந்தது, இவளும் கடைசி நேரத்தில்தான் லாரி வருவதையே உணர்ந்தாள், உடனே பிரேக் போடுவதற்குள்….
பலத்த காயத்துடன் அந்த மருத்துவமனையில் படுத்திருந்தாள் அவள்.
அவளை பரிசோதித்த டாக்டரோ விபத்து நடந்த அதிர்ச்சியில் அவள் பேசும் சக்தி இழந்துவிட்டதாகவும், அவளால் இனி பேச முடியாது என்றும் அவளது ஸ்பைனல் கார்டு டேமேஜால் இனி அவளால் நடக்க முடியாதென்றும் அவளது வாழ்நாள் முழுதும் படுத்த படுக்கைதான், என்றும் கூறிவிட்டார்.
நான்கு மாத மருத்துவமனை வாசத்துக்கு பிறகு, அவளுக்கு வீட்டிலேயே சிகிச்சை கொடுக்கப்பட்டது.
சன்னலை அடைக்கப்போன தனது அம்மாவை நோக்கி, வேண்டாம் என மெதுவாக கையைத் தூக்கி அசைத்தாள்.
அந்நிலையிலும் அவனை இரசித்துக் கொண்டிருந்தாள் அந்த சன்னல் வழியே!
இப்படியே மூன்று மாதங்கள் அந்த சன்னலின் வழியே அவர்களது, இல்லை இல்லை அவளது காதலை வளர்த்துக்கொண்டாள்.
கடுமையான வலி, வேதனை எவ்வளவோ!ஆனாலும் அவனை இரசிப்பதை விடுவதேயில்லை.
அவளை மரணம் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவது தெரிந்தாலும், அவளது பார்வையானது சன்னலைவிட்டு அகலவில்லை…கடந்த இரண்டு வாரமாக அவனை மட்டும் காணவில்லை.
அவனுக்கு என்ன ஆனது? ஒன்றும் புரியவில்லை!
சில வாரங்கள் கழித்து அவன் மறுபடியும் அந்த டீக்கடைக்கு வந்தான், கூடவே ஒரு பெண்ணும். அப்பெண்ணின் கழுத்தில் தாழி தொங்கிக் கொண்டிருந்தது. பெஞ்சில் அமர்ந்திருந்த தனது நண்பர்களுக்கு அப்பெண்ணை அறிமுகம் செய்துக்கொண்டிருந்தான் போலும், அவள் புரிந்துக்கொண்டாள், அது அவனது மனைவிதான்!
மரணம் அவளை நெருங்கியது, விழியோரம் கண்ணீர் துளிர்த்தது.
“எங்கு இருந்தாலும் நீயும், உனது மனைவியும் நன்றாக வாழவேண்டும்” என்று மனதிற்குள்ளேயே அவனை மனப்பூர்வமாக ஆசீர்வதித்தாள், அவள் ஆசீர்வதித்த அடுத்த நொடி அவளது உயிர் அவளை விட்டு பிரிந்தது!
அவனுக்காகத்தான் அவளது உயிர் காத்திருந்ததோ?
சிறிதி நேரத்தில் அவளது உடலைச் சுற்றி உறவுகளின் அழுகை சூழ்ந்தது.
மரணம் தழுவிய போதும் அவளது திறந்தவிழி அந்த ஜன்னலைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது, அவளது காதலனை இரசித்தபடி.
தொடர்புள்ள சிறுகதைகள்
உன் கண்ணில் நீர் வழிந்தால்….
காரை ஆடலரசன்
April 18, 2026
கனவுகள் கரைந்து போன போது…
க.சட்டநாதன்
April 15, 2026
உன் கண்ணில் நீர் வழிந்தால்….
காரை ஆடலரசன்
April 15, 2026