கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 23, 2026
பார்வையிட்டோர்: 116 
வாசிப்பு நேரம்: 20 நிமிடங்கள்

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 10

அந்த ஆண்டு எனக்குத் துணையாக ஒருவரும் இல்லாவிட்டாலும், தனியாகவே எல்லாப் பாடங்களையும் நன்றாகப் படித்து வந்தேன். அரைத் தேர்வில் கணக்கில் முதன்மையான எண்களும், மற்றவற்றில் ஒவ்வொன்றிலும் ஏறக்குறைய ஐம்பது எண்களும் வாங்கினேன். கணக்கில் முதன்மையாக நின்றதற்குக் காரணமாக இருந்த சந்திரனுடைய உதவியை நினைத்துக் கொண்டேன். உடனே அவனுக்கு ஒரு நன்றிக் கடிதம் எழுதினேன். வழக்கத்துக்கு மாறாக அவன் உடனே மறுமொழி எழுதினான். ஊக்கம் ஊட்டி எழுதியிருந்தான். இந்த முறை எஸ். எஸ். எல். சி. யில் தேர்ச்சி பெற்று அடுத்த ஆனியில் தான் படிக்கும் கல்லூரியிலே வந்து சேர்ந்திடுமாறு எழுதியிருந்தான்.

அதற்கு முந்திய கடிதங்களைவிட அந்தக் கடிதத்தில் அவனுடைய மனநிலை நன்றாக இருந்தது. ஒருகால், நான் அவனுடைய உதவியைப் போற்றிப் புகழ்ந்து எழுதியிருந்த காரணத்தால், அவனுடைய நல்ல உள்ளம் வெளிப்பட்டு மகிழ்ச்சியோடு அவ்வாறு எழுதியிருக்கலாம். எப்படியோ அவனுடைய மனநிலையில் நல்ல மாறுதல் ஏற்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

வழக்கமாக வரும் சிரங்கு அந்த ஆண்டு வரவில்லை. அதற்குப் பிறகும் அது என்னைத் திரும்பப் பார்த்ததில்லை. விருந்தினரும் எங்கள் வீட்டுக்கு அந்த ஆண்டில் மிகுதியாக வரவில்லை. ஆகவே ஒருவகை இடையூறும் இல்லாமல் படிக்க முடிந்தது. மாலையில் ஒவ்வொரு நாளும் வடக்கு நோக்கி ஏறக்குறைய இரண்டு மைல் தனியாகவே நடந்து சென்று இலுப்பை மரங்களுக்கு இடையே கால்மணி அல்லது அரைமணி நேரம் உட்கார்ந்திருந்து, பிறகு வந்த வழியே அமைதியாகத் திரும்பி வருவேன். போகும்போதும் வரும் போதும் பாடங்களின் குறிப்புகளைச் சிந்தித்து நடப்பேன். சில நாட்களில் மட்டும் வானத்தின் அழகிய கோலங்களைச் சிறிது நேரம் பார்த்திருப்பேன். மேற்கு வானமும் என்னைப் போலவே நாள்தோறும் புதுப் புதுப் பாடங்களை எழுதிப் பார்த்து நினைவூட்டிக்கொள்வது போல் இருக்கும். முழுநிலா நாட்களிலும் அதற்கு முந்தி இரண்டொரு நாட்களிலும் மட்டும் கிழக்கு வானம் என் கண்ணைக் கவரும். பெருங்காஞ்சியிலும் அந்த இலுப்பைமரச் சாலையிலும் சந்திரனோடு இருந்து முழு நிலாவின் அழகைக் கண்டு மகிழ்ந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. நிலாவின் வாழ்வை ஒட்டி நாட்களும் மாதங்களும் நகர்ந்து செல்லச் செல்ல முடிவுத் தேர்வு வந்து விட்டது.

அம்மாவும் அப்பாவும் என்னை நன்றாகப் படிக்கும்படியாகவும் வற்புறுத்தவில்லை. படிக்காமல் உடம்பைக் காக்கும் படியாகவும் அறிவுறுத்தவில்லை. என் போக்கில் விட்டு விட்டார்கள். தங்கையையும் தம்பியையும் மட்டும் அடிக்கடி படிக்குமாறு வற்புறுத்தி வந்தார்கள்.

தேர்வில் நன்றாக எழுதினேன். தேர்வு எழுதி முடிந்தவுடன் அத்தையின் மகன் திருமந்திரம் வீட்டுக்கு வந்தான். “தேர்வு எழுதியானவுடன், ஊருக்கு அழைத்து வரும்படியாக அம்மா சொல்லியனுப்பினார்கள்” என்றான். அப்பாவும் போய்வருமாறு சொன்னார். இசைந்து புறப்பட்டேன். அங்கே அத்தையின் மகன் திருமந்திரம் தவிர வேறு யாருடனும் நான் அவ்வளவாகப் பழகவில்லை. அவன் நல்ல பையன்; நுட்பமான அறிவும் அமைதியான பண்பும் உடையவன். அவனோடு மாலையில் உலாவச் செல்வேன். காலையில் கிணற்றில் நீந்தி மகிழ்ந்தேன். பெருங்காஞ்சியில் கற்ற நீந்தல் கல்வியை அந்த ஊரில் பயன்படுத்தினேன். அத்தை மகள் கயற்கண்ணியைப் பற்றி நான் பொருட்படுத்தவே இல்லை. அவளைப் பார்த்த போதெல்லாம், எனக்குக் கற்பகத்தின் நினைவு வந்தது.

இரண்டு வாரம் கழித்து அங்கிருந்து திரும்பினேன். சந்திரன் பெருங்காஞ்சிக்கு வந்திருப்பான்; அங்குச் சென்று அவனைக் காணவேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு வந்தேன். ஆனால் நான் வந்து கண்ட காட்சி வேறு. அப்பா முதுகுக் கட்டியால் கடைக்குச் செல்ல முடியாமல் வருந்திக்கொண்டிருந்தார். கட்டி ஒன்று போய் மற்றொன்று வரலாயிற்று. கடைக்குக் காலையும் மாலையும் போய்ப் பணப்பெட்டியின் பக்கத்தில் உட்கார்ந்து வரவு செலவைக் கவனிக்குமாறு சொன்னார். இதுவரையில் என் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு நேரக் கூடாது என்று அவர் என்னைக் கடைக்கு வருமாறு சொன்னதே இல்லை; வேறு எந்த வேலையும் வைத்ததில்லை. அவராலும் முடியாமல் வீட்டோடு கிடக்க நேரிட்டபோதுதான் அவ்வாறு சொன்னார். அதனால் தட்டாமல் அவர் சொன்னபடி செய்தேன். கட்டிகளால் அவர் பட்ட துன்பம் நாளுக்குநாள் மிகுதியாயிற்று. டாக்டர் சர்க்கரை இருப்பதாகக் கூறி, அரிசியும் மற்ற மாவுப் பொருளும் இல்லாத உணவு கொள்ளுமாறு வற்புறுத்தினார். வேனிற்காலம் ஆகையால், கட்டி மிக்க துன்பம் கொடுப்பது இயற்கை என்றார். வாரக்கணக்காக அவர் துன்பம் வளர்ந்து வரலாயிற்று. அவருடைய மனம் எல்லாம் கடையிலேயே இருந்தது. கடையில் இருந்த கணக்கர் அடிக்கடி வந்து எல்லா நிலைகளையும் சொல்லி அவருடைய கட்டளைகளைக் கேட்டுக் கொண்டுபோய் அவற்றின்படி பொருள்களை வாங்குவதும் விற்பதும் செய்தார். அப்பா என்னையும் அடிக்கடி கேட்டுத் தக்க வழிகளைச் சொல்வார். சில வேளைகளில் வலி பொறுக்க முடியாமல், மூச்சு விட்டுக்கொண்டே சொல்வார். இப்படி ஏழு வாரங்கள் ஆகிவிட்டன. இந்த ஏழு வாரங்களில் மளிகைக் கடையின் நுட்பங்களை ஒருவாறு தெரிந்து கொண்டேன் என்று சொல்லலாம்.

என் தேர்வு முடிவும் அதற்குள் வந்துவிட்டது. நான் தேர்ச்சி பெற்றேன். தமிழ், கணக்கு இரண்டு பாடங்களிலும் முதன்மை பெற்றேன். அப்பாவுக்கு என்னுடைய தொண்டு முறையைக் கண்டும், கடை வேலையைக் கவனித்ததைக் கண்டும், என்மேல் அன்பு வளர்ந்திருந்தது. ஆகையால், கல்லூரியில் படிக்கவேண்டும் என்று என் வேட்கையைத் தெரிவித்தவுடன், “சரி, உன்விருப்பம் போல் செய். இப்போது ஒன்றும் அவசரம் இல்லையே! இன்னும் இரண்டு வாரம் நான் கடையை முன்போல் கவனிக்க முடியாது. மாலையில் வந்து திரும்பிவிடுவேன். இந்த இரண்டு வாரமும் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார். அவ்வாறே செய்தேன்.

தேர்வின் வெற்றியைச் சந்திரனுக்குத் தெரிவித்திருந்தேன். அவன் கல்லூரியில் சேர்வதற்கு உரிய வழிகளைக் காட்டிப் பதில் எழுதினான். தானும் இண்டர்மீடியட் இரண்டாம் வகுப்பில் தேறியுள்ளதாக எழுதியிருந்தான்.

இரண்டு வாரம் கழித்து என்னை அழைத்துச் செல்லச் சந்திரனே வந்திருந்தான். வந்த மறுநாளே புறப்பட்டோம். கல்லூரியில் சேர்ந்தவுடன், விடுதியில் அவனுடைய அறைக்குப் பக்கத்தில் ஒரு அறை ஏற்பாடு செய்தான்.

கல்லூரியின் புதுவாழ்வில் பழகுவதற்கு எனக்கு ஒரு மாத காலம் ஆயிற்று. சந்திரன் அவ்வப்போது எனக்குத் துணையாக வந்து உதவினான். ஆனால் அவன் வகுப்பு வேறு, என் வகுப்பு வேறு; பாடங்களும் வேறு வேறு; ஆகையால் வாலாசாவில் இணைபிரியாமல் இருந்ததுபோல் அங்கே இருக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளில் ஒருவரை ஒருவர் பார்க்காமலே இருந்ததும் உண்டு. உணவுக்கூடத்திற்குச் செல்லும் வேளையில் ஒவ்வொரு நாள் என் அறையில் நுழைந்து குரல் கொடுத்து அழைத்துச் செல்வான். பெரும்பாலான நாட்களில் என்னை அழைக்காமலே சென்று விடுவான். நான் உணவுக் கூடத்திற்குச் செல்லும்போது அவனை அங்கே காண்பேன். “வேறு வேலை இருந்தது. நேரே வந்துவிட்டேன்” என்பான். சில நாட்களில் அவனை அறையிலும் காண முடிவதில்லை; உணவுக் கூடத்திலும் காண முடிவதில்லை. “எங்கே, காணோமே” என்பேன், “வேறு வேலை இருந்தது” என்பான். சில முறை இப்படி நேர்ந்த பிறகு, நான் கேட்பதும் குறைந்தது; அவனாகச் சொல்வதும் குறைந்தது. இவ்வாறாக, ஒரே கல்லூரியில் படித்து ஒரே விடுதியில் தங்கியிருந்தும், நாளடைவில் எங்கள் தொடர்பு குறைந்து கொண்டே வந்தது. ஒரே வகுப்பில் பக்கத்தில் உட்கார்ந்து படிக்க வாய்ப்பு இல்லாத குறையால், நட்பும் தேய்ந்து போகிறதே என்று வருந்தினேன்.

எனக்கு அவன்மேல் அன்பு குறையவில்லை; அடிக்கடி எண்ணினேன்; அடிக்கடி காண முயன்றேன்; அடுத்தடுத்துப் பழக முயன்றேன்; வாய்ப்பு இல்லாதபோது நான் என்ன செய்வேன்!

சென்னைக்கு வந்த முதல் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று சந்திரன் என்னைக் கடற்கரைக்கு அழைத்துக் கொண்டு போனான். கடற்கரை எனக்கு விருப்பமாக இருந்தது. பெருங்காஞ்சி ஏரி முதலியவை கடலின் இயற்கைப் பெருமிதத்துக்கு முன் நிற்க முடியாதவை என்பதை நன்கு உணர்ந்தேன். தவிர, அங்குக் கண்ட மக்களின் கூட்டமும் என்னைக் கவர்ந்தது. என்ன காரணமோ தெரியவில்லை; சில நாட்களில் சில வேலைகளில் என் உள்ளம் தனிமையை நாடினாலும், பெரிய திரளான மக்களுக்கு இடையில் இருக்கும்போது நான் ஒருவகைக் கிளர்ச்சியை பெற்று மகிழ்கிறேன். திருவிழாக்களும் இப்படிப்பட்ட ஒரு கிளர்ச்சியை அளிப்பதனால்தான் மக்கள் மேலும் மேலும் அவற்றை விரும்புகிறார்கள் எனத் தெரிகிறது. மக்கள் கூட்டத்தை மறந்து கடல் அலைகளின் அருகே சென்று நிற்கும்போது என் மனம் அந்த அலைகளின் எழுச்சியிலும் ஈடுபட்டுத் துள்ளும். இப்படிப் பலவகையிலும் என் உள்ளத்தைக் கவர்ந்த கடற்கரைக்கு வாரந்தோறும் சென்று வர விரும்பினேன். ஆனால், சந்திரனோ முதல் வாரத்தோடு என்னைக் கைவிட்டான். வேறு வேலை, வேறு வேலை என்று சொல்லி வந்தபடியால், கடற்கரைக்கு அழைத்துச் செல்லுமாறு நான் அவனைக் கேட்கவில்லை. அவ்வாறு கேட்பதும் சிறுபிள்ளைத் தன்மைபோல் எனக்குத் தோன்றியது. ஒன்றும் தெரியாத சிறு பையன் என்று மற்றவர்கள் எள்ளி நகையாடுவார்களோ என்று அஞ்சினேன்.

அதனால் என் வகுப்பு மாணவர்கள் யாரேனும் அழைத்தபோது அந்த அழைப்பை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு கடற்கரைக்குச் சென்றுவந்தேன். சில வாரங்கள் கழிந்த பிறகு அவர்களோடு செல்வதற்கும் தயங்கினேன். காரணம், முதலில் நான் யாரோடு சேர்ந்து சென்றேனோ அவர்களிடம் தீய பழக்கங்கள் இருப்பதைக் கண்டுகொண்டேன். அவர்கள் பெண்களைப் பார்த்துக் காமக்கிளர்ச்சியான பேச்சில் ஈடுபடுவதும், ஆசிரியர்களைப் பற்றி மதிப்புக் குறைவாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்கவில்லை. உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் சொன்ன அறிவுரை என் மனத்தில் ஊறிப்போயிருந்தபடியால் புகைக்குடியை நான் மிக வெறுத்தேன். அந்தச் சில மாணவர்கள் தாங்கள் புகைத்துக் கெட்டதோடு நிற்காமல், மற்றவர்களையும் கெடும்படியாகத் தூண்டி வற்புறுத்தினார்கள். அதில் அவர்களுக்கு ஒரு தனி ஆர்வம் இருந்தது. நான் தடுத்தும் மறுத்தும் நடந்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே பகையாக முற்றுவதற்கு முன்பே, அளவோடு நின்று பழக்கத்தை வரையறை செய்துகொள்வது நல்லது என்று மெல்ல ஒதுங்கினாற்போல் நடந்தேன்.

சந்திரன் என்னை அழைத்துச் செல்ல முடியாதபடி கடமைகளில் ஈடுபட்டிருந்தால், நான் சிறிதும் வருந்தியிருக்க மாட்டேன். ஒருநாள் அவனுடைய அறையை நெருங்கிச் சென்றபோது, “எங்கே சந்திரா போயிருந்தாய்?” என்று கேட்ட ஒருவனிடம், “வேறு எங்கே! மெரினாவுக்குத்தான்” என்று சந்திரனே சொன்னான். அதைக் கேட்டபோது எனக்கு எப்படி இருக்கும்? என்னை விட்டுத் தனியே கடற்கரைக்குச் செல்லும் அளவிற்கு நட்பு மாறிவிட்டதே என்று வருந்தினேன்.

வாலாசாவில் இருந்தபோது எல்லா வகையிலும் என்னைப் போலவே நடந்து, எனக்கு உற்ற தோழனாக இருந்த சந்திரனிடத்தில் ஏற்பட்ட மாறுதல்களைக் கண்டு என் உள்ளம் நொந்தது. சிலவற்றைக் கடிந்து திருத்த வேண்டும் என்றும் என்மனம் தூண்டியது. ஆனால், சொல்லிப் பயன்படாதபோது ஏன் சொல்லவேண்டும் என்று எண்ணினேன். பெருங்காஞ்சியில் அவனுடைய தந்தை சாமண்ணா, “நீ அடுத்த ஆண்டில் கல்லூரியில் படிப்பதாக இருந்தால்தான் சந்திரனையும் அனுப்புவேன். இல்லையானால் நிறுத்திவிடுவேன்” என்று என்னிடம் சொல்லியது நினைவுக்கு வந்தது. அவனுடைய தந்தை என்னைப் பற்றி இவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தபோது நான் ஒன்றும் கூறித் திருத்தாமல் என்னளவில் அமைதியாக நடப்பது தகாது என்று என் மனச்சான்று சுட்டிக்காட்டியது. அவ்வாறே சொல்லிப் பார்ப்போம் என்று ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன்.

ஒருநாள் நான் படுக்கையை விட்டு எழுந்ததும் அவனுடைய அறைக்குச் சென்று எட்டிப் பார்த்தேன். அவன் கண் விழித்தபடி படுத்திருந்தான். சன்னல் வழியாக என் தலையைக் கண்டதும், “வேலு! என்ன? ஏன் பார்க்கிறாய்?” என்றான். சிறிது அச்சத்தோடு நின்றேன். எழுந்து கதவைத் திறந்து, “வா” என்றான். உள்ளே சென்று உட்கார்ந்தேன். “என்ன! படிப்பு எல்லாம் எப்படி இருக்கிறது?” என்று நல்ல மனநிலையோடு கேட்டான்.

“ஒரு வகையாக இருக்கிறது. நீதான் சொல்லித் தருவதில்லயே, உன்னை இங்கே பார்ப்பதே அரிதாக இருக்கிறதே” என்றேன்.

“எனக்கு எத்தனையோ வேலை!” என்று நேரே என் முகத்தைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துச் சொன்னான்.

“நாம் இங்கே வந்தது படிப்புக்காகத் தானே? வேறு கடமைகள் எதற்காக?”

“கல்லூரி என்றால் படிப்பு மட்டுமா?”

“அதுதான் முக்கியம். அது நல்லபடி முடிந்தால், ஓய்வு இருந்தால் மற்றவற்றை அளவாகக் கவனிக்கலாம்.”

“ஓ! எனக்கு அறிவுரை சொல்ல வந்துவிட்டாயா?”

“உன் நன்மைக்காகத்தானே சொல்கிறேன்?”

“என் நன்மையை நான் கவனித்துக் கொள்வேன், நீ உன் வேலையைப் பார்.”

“மார்க்குக் குறைவாக வாங்கினாய் என்று சென்ற ஆண்டில் அப்பா வருத்தப்பட்டார்.”

சந்திரன் பேசவில்லை. முகம் ஒரு வகையாகக் கலக்கம் உற்றது.

அவன் மனம் வருந்தியதை உணர்ந்தேன். அதற்குமேல் பேச என்னாலும் முடியவில்லை. அப்போது நிலவிய அந்த அமைதியை, “என்ன சந்திரன்! நாடகத்தில் பெண்ணாக நடிக்கப் போகிறாயாமே!” என்ற குரல் கலைத்தது. புகைபிடித்து வெளியிட்டுக்கொண்டே ஒருவன் உள்ளே நுழைந்தான்.

“இப்போது இவ்வளவு காலையில் என்ன நாடகத்தைப் பற்றி?” என்றான் சந்திரன்.

“அதற்கு அல்ல அய்யா! பெண் வேடம் என்றால் பையன்களின் கிண்டல் மிகுதியாகுமே! அதற்காகச் சொன்னேன்” என்றான் வந்தவன்.

“ஏதோ ஒரு பகுதி நாடகத்தில் நடிக்கலாம் என்று போனேன். ஏதோ ஒன்று கொடுத்தார்கள். சரி என்றேன்.”

“நடத்து! உன் பாடு கொண்டாட்டம் தான்” என்று சொல்லியவாறே அவன் என்னைப் பார்த்து, “இவர் உங்கள் ஊர் அல்லவா? தம்பி இருக்கிற இடமே தெரியவில்லையே. இன்னும் கல்லூரி பழக்கம் ஆகவில்லைபோல் தெரிகிறது” என்றான்.

சந்திரன் ஒரு புன்முறுவல் செய்து, “இவன் எப்போதும் அப்படித்தான்” என்றான். “குளித்துவிட்டுப் போக வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே எழுந்து சட்டையைக் கழற்றினான்.

“உன் முகத்துக்குப் பெண் வேடம் பொருத்தம்தான். ஆனால் உயரமாக இருக்கிறாய். கொஞ்சம் குள்ளமாக இருந்தால் நன்றாக இருக்கும்” என்றான் வந்தவன்.

நான் சந்திரனுடைய முகத்தை நன்றாகக் கவனித்தேன். அவனுடைய முகத்தில் முன் இருந்த ஒளி இல்லை. வாலாசாவில் இருந்தபோது கற்பகத்தின் முகம் போலவே இருந்தது. இப்போது அவ்வளவு சொல்ல முடியாது. முகம் மாறி இருந்தது. வற்றினாற்போல் இருந்தது. மார்பில் எலும்புகள் தெரிந்தன. தசைப்பற்று உடையவன் என்று சொல்ல முடியாவிட்டாலும், எலும்பு தெரியாத மார்போடு அளவான வளர்ச்சியோடு இருந்தான் முன்பு. பெருங்காஞ்சியில் கிணற்றில் குளித்தபோது நன்றாகக் கவனித்திருக்கிறேன். என் மார்பில் எலும்பு தெரிவது உண்டு. அவன் மார்பிலும் முதுகிலும் தசைநார்கள் நன்றாக அமைந்து, எலும்புகள் மறைந்திருந்தன. அந்த நிலைமை எப்படி மாறியதோ தெரியவில்லை. என்ன கெட்ட பழக்கத்தால் உடம்பைக் கெடுத்துக் கொண்டானோ என்று வருந்தினேன். வேளைக்கு உணவு கொள்ளாமல் வீணான வேலைகளை மேற்கொண்டு அலைந்து உடம்பைக் கெடுத்துக் கொண்டானோ, தெரியவில்லை. புகைப் பழக்கம் மேற்கொண்டானோ என்றும் எண்ணினேன். அதற்கு இடம் கொடுக்கமாட்டான் என்று உறுதியாக நம்பினேன். அவனுடைய உதடுகள் வெந்து கறுத்திருக்கின்றனவா என்று கவனித்தேன். அவற்றில் வறட்சி மட்டும் இருந்தனவே தவிர, என்றும் போல் செந்நிறமாக அழகாக இருந்தன. ஆகையால் புகைப்பழக்கத்துக்கு ஆளாகவில்லை என்று மகிழ்ந்தேன்.

அவர்கள் இருவரையும் பேச விட்டுவிட்டு, நான் வெளியே வந்தேன். என் அறைக்கு வந்த பிறகு, படிப்பில் குறை இருக்கும்போது சந்திரன் நாடகத்திற்கு ஏன் இசைய வேண்டும் என்று எண்ணினேன். அவனைத் திருத்துவதற்கு வழி என்ன என்று கலங்கினேன்.

நாடகத்தின் ஒத்திகைகள் நாள்தோறும் மாலையில் நடைபெற்றன. உணவு விடுதியில் விழாவுக்கான நாடகம் அது. ஒத்திகைக்கு நானும் இரண்டு நாள் போயிருந்தேன். சந்திரன் என்னைப் பார்த்துப் புன்முறுவல் செய்தானே தவிர, பேசவில்லை. நாடகத்தில் வரும் பேச்சுப் பகுதிகளைக் கையில் வைத்துப் படித்துக்கொண்டிருந்தான். ஒத்திகையின் போது, நன்றாகவே நடித்தான். பெண்ணைப் போன்ற தோற்றம் அவனுக்கு இன்னும் சிறிது இருந்தது. ஆகவே, அவன் நடிக்கத் தொடங்கியபோது எல்லோரும் போற்றிச் சிரித்து ஆரவாரம் செய்தார்கள். நடக்கும் நடையிலும் குலுங்கும் அசைவிலும் முகத்தின் திருப்பங்களிலும் பெண்ணைப் போலவே நடித்தான். அவன் எப்படித்தான் வெட்கம் இல்லாமல் இவ்வாறு நடிக்கிறானோ என்று நான் வியந்தேன். வாலாசாவில் இருந்தபோது இதற்கு வேண்டிய அறிகுறிகளே அவனிடம் காணப்படவில்லை. சென்னைக்கு வந்தபிறகு இந்த ஒன்றரை ஆண்டில் இந்தக் கலையை எப்படிக் கற்றுக்கொண்டானோ, தெரியவில்லை. பெண்களை நன்றாகக் கவனித்துப் பார்த்துப் பழகினால் தவிர, அவர்களின் நடை உடை பாவனைகளை அவ்வளவு ஒன்றாகக் கற்றுக்கொள்ள முடியாது. ஒருகால், சினிமாவுக்கு அடிக்கடி சென்று பார்த்துப் பெண்களின் நடை முதலியவற்றைக் கற்றுக் கொண்டிருக்கலாம். கல்லூரிப் படிப்பை நன்கு கற்காமல், இதில் பெறும் தேர்ச்சியால் பயன் என்ன என்று எண்ணி வருந்தினேன்.

அத்தியாயம் – 11

வேறு பொழுது போக்குஇல்லாமல், மற்றொரு நாளும் ஒத்திகை பார்க்கப் போயிருந்தேன். முந்திய ஒத்திகையை விட அது நன்றாக அமைந்திருந்தது. சந்திரனுடைய பேச்சும் நடிப்பும் எல்லாருடைய உள்ளத்தையும் கவர்ந்தன. பெண் நடிப்பில் அவனுக்கு ஒரு தனித்திறமை இருந்ததை முன்பே கண்டேன். அன்றைய ஒத்திகையின் போது கதைத் தலைவனாக நடிக்கும் மாணவன் வரவில்லை. ஒத்திகை நிறைவேறுவதற்காக யாரேனும் அந்தப் பகுதியைப் படிக்க வேண்டியிருந்தது. சந்திரனையே படிக்கும் படியாகச் சிலர் கேட்டுக்கொண்டார்கள். சந்திரன் இசைந்து படித்தான். அவன் படிக்கவில்லை தலைவனாகவே நடித்தான். அதிலும் அவன் சிறந்து விளங்கினான். சந்திரனுக்கு அந்தப் பகுதியையே கொடுத்திருக்கலாம் என்றும் அதற்கு உரிய மாணவனைவிடச் சந்திரனே நன்றாக நடிக்கிறான் என்றும் எல்லாரும் பேசிக்கொண்டார்கள். கதைத் தலைவனாகவும் தலைவியாகவும் அவன் ஒருவனே மாறி மாறி நடிக்க நேர்ந்தபோது எல்லாரும் வியக்கும்படியாக இருவகை நடிப்பிலும் திறமையாக விளங்கினான். என்னையும் அறியாமல் நானும் ஒருமுறை கைதட்டிப் போற்றி ஆரவாரம் செய்தேன்.

ஒத்திகை முடிந்து வெளியே வந்தபோது ஒரு மாணவன் என்னைத் தொடர்ந்து வந்தான். “கல்லூரியில் சேர்ந்த பிறகு படிப்பைவிட இது போன்ற துறைகளில்தான் அக்கறை மிகுதியாகிறது” என்றான் அவன்.

“உண்மைதான்” என்றேன் நான். அந்த வகையில் எனக்கும் அவனுக்கும் இருந்த கருத்து ஒற்றுமை, எங்களை நெருங்கி வரச்செய்தது. தனித்தனியே முன்னும் பின்னுமாக வந்துகொண்டிருந்த நாங்கள் பக்கம் பக்கத்தில் சேர்ந்து நடக்கத்தொடங்கினோம்.

விடுதியின் கிழக்குப்பகுதியில் ஒரு சிமெண்டுத் திண்ணை இருந்தது. அங்கே அவன் உட்கார்ந்தான்; நானும் உட்கார்ந்தேன்.

“பெற்றோர்கள் எவ்வளவோ துன்பப்பட்டுப் பணம் அனுப்புகிறார்கள். நாம் பொறுப்போடு படிக்க வேண்டாவா?” என்றான்.

“ஆமாம்” என்றேன்.

“அதில் எவ்வளவு பணத்தை வீண் செலவு செய்கிறார்கள்? புகைக்குடிக்கு எவ்வளவு பணம் செலவாகிறது தெரியுமா?”

“அய்யோ! கணக்கே இல்லை. அது மேற்கு நாட்டுக்கு வேண்டுமானால் ஒரு வேளை பொருந்தலாம். அது குளிர்நாடு. அங்கும் பலர் அதை வெறுக்கிறார்களாம். இது வெப்பமானநாடு, இங்கே உடம்புக்குக் கெடுதி அல்லவா?”

“ஆமாம்”

“கவர்னர் மாளிகையில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு முறை தேநீர் தரப்பட்டதாம். சிற்றுண்டியும் தேநீரும் முடிந்த பிறகு சிகரெட்டுகளும் வழங்கப்பட்டனவாம்.”

“அப்படியா? உண்மையாகவா?”

“மேற்கு நாட்டுப் பழக்க வழக்கங்களில் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நம்மவர்கள் அப்படிச் சலித்து எடுப்பதே இல்லை. சலித்தாலும் மேலே நிற்கும் கப்பியை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள்.”

அப்போது என் கை கீழே அழகுக்காக வளர்க்கப்பட்டிருந்த ஒரு செடியிலிருந்து ஓர் இலையைக் கிள்ளி மூக்கின் அருகே கொண்டுவந்தது. அது நாற்றமாக இருக்கவே, “சே!” என்று கீழே எறிந்து, அது என்ன செடி என்று பார்த்தேன்.

என் செயலைக் கவனித்த அவன், “அய்யோ! அதையா முகர்ந்தாய்? கெட்டநாற்றமாக இருக்கும். சீமைச்செடி அது. ஜிரேனியம் என்று பெயர். பக்கத்தில் உள்ளது மெகர்த்தா. பூவைப் பறித்து முகர்ந்து பார் அதுவும் அப்படித்தான் இருக்கும்.

அப்படியே எடுத்து முகர்ந்தேன். அவன் சொன்னது சரியாக இருந்தது.

அந்த மாணவன் உடனே என்னை நோக்கி, “உலகம் இப்படித்தான்; தெரிந்துகொள். இங்கே இருப்பவர்கள் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள். இந்தப் பூக்களைப் போல் அழகான தோற்றத்தோடு வகை வகையான உடையலங்காரங்களோடு இருப்பார்கள். அவர்களைத் தொலைவில் இருந்து கண்ணால் பார்த்துத்தான் மகிழவேண்டும். இந்தப் பூக்களில் எத்தனை நிறம், எத்தனை அழகு! பாரய்யா. இப்படித்தான் அவர்களும் நெருங்கிப் பழகினால், பொறுக்கமுடியாது. உடனே வெறுப்புக் கொள்வாய்” என்றான்.

இதைக்கேட்ட எனக்குப் பெருங்காஞ்சி ஏரிக்கரையில் நான் ஆராய்ந்து உணர்ந்த அரளிப்பூவும் துளசிச் செடியும் நினைவுக்கு வந்தன. இவ்வளவு கருத்து ஒற்றுமை உடைய இந்த இளைஞனோடு பழக வேண்டும், நட்புக்கொள்ளவேண்டும் என்று விரும்பினேன்.

“பெயர் என்ன?” என்று கேட்டேன்.

“மாலன்”

“எந்த வகுப்பு”

“இண்டர்”

“நான் பார்த்ததில்லையே, நானும் அதே வகுப்பு. பெயர் வேலய்யன்.”

“நீயும் அதே வகுப்பா?”

“ஆமாம். ஏ பிரிவு. நீ எந்தப் பிரிவு?”

“சி.”

“அதனால்தான் பழக வாய்ப்பு இல்லை. பார்த்திருப்பதாக நினைவு வருகிறது. ஆனால் தெரிந்துகொள்ளவில்லை. ஊர்?”

“சோழசிங்கபுரத்துக்குப் பக்கத்தில்……..”

உணவுக்காக விடுதி மணி அடித்தது. உணவுக் கூடத்திற்கு நேரே சென்றோம். சென்றபோது நான் இருந்த அறையைச் சுட்டிக்காட்டிச் சென்றேன். மாலனும் தன் அறை வலப்பக்கக் கோடி என்று முதல் மாடியைச் சுட்டிக்காட்டினான்.

மறுநாள் காலையில் சிற்றுண்டி முடிந்தபிறகு இருந்த ஓய்வு நேரத்தில் மாலனுடைய அறைக்குப் போய்ப் பார்க்கலாம் என்று அந்தப் பக்கமாக நடந்தேன். மாலன் ஏதோ எழுதிக்கொண்டிருந்ததைக் கண்டேன். படிப்பில் மிகுந்த அக்கறை உடையவன் என்று எண்ணினேன். நான் வந்து சன்னல் பக்கம் நின்றதையும் கவனிக்காமல் அவன் எழுதிக்கொண்டிருந்தான். கதவை விரலால் மெல்லத் தட்டினேன். எழுந்து வந்து திறந்து வரவேற்றான். “என்ன பாடம் எழுதுகிறாய்? நான் பார்க்கலாமா?” என்றேன்.

“இது வேறு. இதை ஏன் நீ பார்க்கவேண்டும்?” என்று அதை மறைக்கத் தொடங்கினான்.

“நீ நன்மை கருதித்தானே செய்கிறாய்? நானும் பார்த்தால் நல்லது. கற்றுக்கொள்வேன் அல்லவா?”

“இது பாடம் அல்ல. பாடமாக இருந்தால் காட்டுவேன்.”

“சரி விருப்பம் இல்லாவிட்டால் வேண்டா சும்மா வந்தேன்” என்று உட்கார்ந்தேன்.

சிறிது நேரத்தில் மாலன் மனம் மாறி, “சரி பார். உனக்கு ஏன் வருத்தம்?” என்று காட்டினான்.

“எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லையே” என்று சொல்லிக்கொண்டே அதைப்பார்த்தேன். ஒரு ரிஷியின் பெயரைச் சொல்லி, அவருடைய பெயரைப் பதினேழு முறை வாழ்த்தியிருந்தது. அதன் கீழே இதைப் பார்ப்பவர்கள் இதைப் போல் ஐந்து எழுதித் தமக்குத் தெரிந்த ஐந்து பேருக்கு அனுப்பவேண்டும் என்றும், அவ்வாறு இருபத்துநான்கு மணிநேரத்தில் தபாலில் அனுப்பிவைத்தால் இந்த ரிஷிகுல வட்டத்துக்கு உதவிசெய்த புண்ணியம் உண்டாகும் என்றும், அதனால் எண்ணிய காரியம் கைகூடும் என்றும் குறித்திருந்தது. அவ்வாறு செய்யத் தவறுகிறவர்களை இந்த வட்டத்தை நிறுத்திய பாவம் சேரும் என்றும், அவர்களுக்கு இரண்டு நாட்களில், அல்லது இரண்டு வாரத்தில், அல்லது இரண்டு மாதத்தில் தீமை ஏற்படும் என்றும் தொடர்ந்து குறித்திருந்தது. இந்தக் குறிப்புக்களையும் வாழ்த்துக்களோடு சேர்த்து அனுப்பவேண்டும் என்றும் எழுதியிருந்தது. அதைப் படித்தவுடனே கிழித்துப்போடவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஆனாலும் அவ்வாறு செய்யாமல், “இதை உனக்கு அனுப்பியவர் யார்?” என்று கேட்டேன்.

“யாரோ தெரியாது. பெயர் எழுதத் தேவை இல்லை.”

“கவலைப்படாதே. கிழித்துப்போடு. உனக்கு ஏன் இந்த மூடநம்பிக்கை?”

“அய்யோ! அப்படிச் சொல்லாதே யார் கண்டார்கள்? எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?”

நான் சிரித்தேன் “இப்படி ரிஷி தன் பெயரால் ஒரு வட்டம் ஏற்படுத்த விரும்புவாரா? அதற்காக இப்படி அவாவும் அச்சமும் ஊட்டி மருட்டுவாரா? அப்படி மிரட்டி நம்மிடம் வேலை வாங்குகிறவர் உத்தமராக இருக்கமுடியுமா? அவர் சொன்னபடி சாபம் பலிக்குமா? வெறும் பித்தலாட்டம்.”

மாலன் உண்மையாகவே பயந்து போனான். “அப்படிப் பழிக்கவே கூடாது. பெரிய தவறு அது. உனக்குத் தெரியாது” என்றான்.

“எப்படியாவது போ. எனக்கு ஒன்றும் அனுப்பி விடாதே. ஒருவேளை அனுப்பினாலும் நான் கிழித்துத்தான் போடுவேன். அதற்கு மதிப்புக் கொடுக்கவேமாட்டேன்.”

மாலன் என் வாய்மேல் கைவைத்துத் தடுத்து, “பழிக்க வேண்டா” என்று கேட்டுக்கொண்டான்.

“இதனால் என்ன நன்மை எதிர்பார்க்கிறாய்?”

“நமக்கு இப்போது வேண்டியது என்ன? தேர்வில் வெற்றி, நல்ல எண்கள், அறிவுவளர்ச்சி; இவைகள்தான்.”

“இவைகளுக்காக இப்படிக் காலத்தை வீணாக்குவதைவிடப் பாடங்களையே படித்து எழுதுவது நல்லதல்லவா!” என்றேன்.

“உனக்கு தெரியாது. நான் எஸ். எஸ். எல். சி படிக்கும் போது இப்படி இரண்டு வந்தன. நான் தவறாமல் எழுதி அனுப்பினேன். என்னுடன் படித்தவன் ஒருவன் உன்னைப்போல் பழித்து பேசிக் கைவிட்டான். அவன் என்ன ஆனான் தெரியுமா? தேர்வில் வெற்றிபெறவில்லை.”

“படித்திருக்கமாட்டான்; அதனால் வெற்றி பெறவில்லை.”

“சரி. உன் விருப்பம். இந்தப் பேச்சை விட்டுவிடு” என்று வேறு பேச்சுத் தொடங்கினான். “நீ என்ன குறிப்புகள் படிக்கிறாய்? யாருடைய உரை வாங்கினாய்?” என்று கேட்டான்.

“இன்னும் வாங்கவில்லை.”

“அப்படியானால் பாடப் புத்தகங்களையா படித்துக்கொண்டிருக்கிறாய்?”

“ஆமாம்.”

“உனக்கு யாரும் சொல்லவில்லையா?”

“எதைப்பற்றி?”

“பாடப் புத்தகங்களை ஒரு மூலையில் வைத்துவிட்டு குறிப்புகள் வாங்கி படித்தால்தான் தேர்வில் வெற்றி பெற முடியுமாம்.”

“குறுக்குவழி இது.”

“ஓ ஓ! நாம் என்ன இப்போது நேர் வழியிலா படிக்கிறோம்! நமக்கு ஆசிரியர்கள் நேர் வழியிலா கற்றுக் கொடுக்கிறார்கள்? ஆங்கில நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆங்கில மாணவர்களுக்கு ஆங்கிலத்தின் வாயிலாகவே விஞ்ஞானம் வரலாறு முதலான பாடங்களைக் கற்பிக்கிறார்கள். அதை அப்படியே இங்கே கண்மூடிப் பின்பற்றுகிறார்கள். நம் மூளைக்கு நேர்வழி தமிழ். அதைவிட்டு ஆசிரியர்கள் ஆங்கிலத்தில்தானே கற்றுக் கொடுக்கிறார்கள்? இப்படிக் கற்பிக்கும் வழி தவறாக இருக்கும்போது, நாம் கற்கும் வழியும் தவறாகத்தான் இருக்கும். ஆகையால் குறுக்கு வழிப்பயிற்சி தான் வெற்றி பெறும்” என்று அலமாரியைத் திறந்து தன்னிடம் இருந்த குறிப்புக்களைக் காட்டினான்.

கால் தேர்வில் எனக்கு நிறைய எண்கள் வரவில்லை. பாடுபட்டுத்தான் படித்தேன். ஆயினும் எதிர்பார்த்த பயன் இல்லை. காரணம் அவன் சொன்னதாகவே இருக்கவேண்டும் என்று எண்ணினேன். இனிப் பாடப் புத்தகங்களோடு குறிப்புகளையும் சேர்த்துப் படிக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால் எதிர்பார்த்த பயனும் பிறகு கண்டேன்.

ஆனால் இப்படிக் குறுக்குவழி காண்பதில் மாலன் வல்லவனாக விளங்கினான். படிக்கும் முறையில் மட்டும் அல்லாமல், மற்ற வகைகளிலும் அவன் குறுக்கு வழியே நாடினான் என்பதை நாளடைவில் உணர்ந்தேன்.

ஒரு நாள் மாலையில் நானும் அவனுமாகச் சேர்ந்து கடற்கரைக்குச் சென்றபோது வழியில் சாலையோரமாக ஒருவன், “இஷ்ட சித்தி குளிகை” என்று கூவிக்கொண்டிருந்தான். உடனே மாலன் அவனிடம் பயபக்தியோடு சென்று அதைப் பற்றிய விளக்கம் எல்லாம் கேட்டான். மாதத்தின் கடை ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் புறப்படும் நேரத்தில் நன்றாகக் குளித்து விட்டுக் கிழக்குப் பார்த்து நின்றபடியே வலக்கையில் இந்தக் குளிகையைக் கட்டிக்கொண்டால் எண்ணிய காரியம் எல்லாம் கைகூடும் என்று அவன் இன்னும் என்னென்னவோ சேர்த்துச் சொன்னான். அதன் விலை பத்தணா பத்துப் பைசா என்றான். மாலன் அந்த விலை கொடுத்து உடனே வாங்கினான். தடுத்தும் பயன்படாது என்று உணர்ந்து நான் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

பல வகையில் கருத்து ஒற்றுமை உடைய நண்பன் ஒருவனைக் கண்டுபிடித்ததாக முதலில் மகிழ்ந்தேன். ஆனால் வரவர இவைபோன்ற சில வகைகளில் கருத்து வேறுபாடு மிகுந்து வருவது கண்டேன். அவனோ ஆழ்ந்த நம்பிக்கையோடு இந்தக் குறுக்கு வழிகளை நாடியதால், அவனைத் திருத்துவதும் எளிதாக இல்லை. உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது மாணவர்களிடையே இவ்வளவு வேறுபாடுகளைக் கண்டதில்லை. வளர்ந்து கல்லூரிக்கு வந்தபின், பலவகையில் வேறுபாடுகள் இருத்தலை உணர்ந்தேன். சந்திரனைத் திருத்த முடியவில்லை; மாலனைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லை. ஆகவே முழுதும் கருத்து ஒற்றுமை எதிர்பார்ப்பதில் பயன் இல்லை என்று கற்றுக்கொண்டேன். அதுவே வாழ்க்கையைப் பற்றிய முதல் பாடமாக இருந்தது எனலாம்.

சந்திரனுக்கும் மாலனுக்கும் ஒரு வகையில் வேறுபாடு கண்டேன். சந்திரன் புறம்பான வழிகளில் ஈடுபட்டுப் படிப்புக்கு உரிய கடமைகளைப் புறக்கணித்தான். மாலனோ படிப்புக்காகவே பலவகைக் குறுக்கு வழிகளை நாடினான். ஆகவே மாலனோடு பழகுவதால் படிப்புக் கெடாது என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

அத்தியாயம் – 12

நாடகம் சிறப்பாக நடைபெற்றது. சந்திரனுடைய நடிப்பு எல்லோரும் போற்றத்தக்க வகையில் இருந்தது. கதைத் தலைவியாகிய சிவகாமி ஆண் உடை உடுத்துவெளியே செல்லவேண்டி நேர்ந்தது. பெண் உடையில் பெண்ணாக நடித்த சந்திரன், அந்த ஆண் உடையிலும் அருமையாக நடித்தான். வெளிக் கல்லூரி மாணவரும் மாணவியரும் பலர் வந்திருந்தார்கள். அவர்கள் சந்திரனுடைய நடிப்பை மிகப் போற்றினார்கள். சந்திரனுடைய நடிப்பு முடிந்து ஒவ்வொரு காட்சியிலும் திரை விடப்பட்டபோதெல்லாம், கைத்தட்டு அரங்கு அதிரும்படியாக இருந்தது. நாடகத்தில் சிறந்த நடிகரைத் தேர்ந்தெடுப்பதற்கு மூவர் நடுவணராக இருந்தனர். அவர்கள் மூவரும் ஒரு முகமாகச் சந்திரனையே முதற் பரிசுக்கு உரியவனாகத் தேர்ந்தெடுத்தனர். பரிசு வழங்கிய தலைவர் சந்திரனை மிகப் பாராட்டி, அவன் கலையுலகத்துத் திங்களாக விளங்க வேண்டும் என்று வாழ்த்திப் பரிசு வழங்கினார். பரிசு வழங்கிய போதும் சந்திரனுக்காகவே, கைத்தட்டு அளவு கடந்திருந்தது.

விழா முடிந்தவுடன் கூட்டம் கலைந்து சென்றது. எல்லோரும் போகட்டும் என்று நான் பின் தங்கினேன். மாலன் என்பின் வந்து தோள்மேல் கைவைத்து, “என்ன வேலு! போகலாமே, இன்னும் என்ன?” என்றான்.

“பரிசு பெற்ற சந்திரன் எனக்கு வேண்டியவன். அவனைப் பார்த்து என் மகிழ்ச்சியைத் தெரிவிக்காமல் போவது நல்லதா?” என்றேன்.

“அவன் வெளியே வர இன்னும் சிறிது நேரம் ஆகுமே” என்றான்.

“ஆகாது, வந்துவிடுவான்” என்று நாடக அரங்கிலிருந்து வரும் வழியில் காத்துக்கொண்டிருந்தோம்.

அங்கே எங்களுக்கு வலப்புறத்தில் நாலைந்து பெண்கள் வெளிக் கல்லூரி மாணவியர் காத்திருக்கக் கண்டேன். அவர்களும், “நேரம் ஆகுமோ என்னவோ” என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் சந்திரன் விரைந்து வந்தான். வழியில் நின்ற என்னைப் பார்த்தான். ஆனால் அவனுடைய கண்கள் யாரையோ தேடின. என்னைக் கடந்து அந்தப் பெண்கள் இருந்த இடத்திற்குச் சென்று, “மிகவும் நன்றி! எவ்வளவு நேரம் இருந்தீர்கள்” என்றான். அவர்களுள் ஒருத்தி “மிக மிக நன்றாக இருந்தது உங்கள் நடிப்பு; பெரிய வெற்றி. எங்களுடைய பாராட்டுக்கள். அடுத்த வாரத்தில் எங்கள் நாடகத்திற்கு நீங்கள் தவறாமல் வரவேண்டும்” என்றாள். மற்றப்பெண்களின் முகத்திலும் புன்முறுவல் இருந்தது. அவர்கள் புறப்பட்டார்கள். சந்திரனும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.

“இன்னும் இருக்கவேண்டுமா?” என்று மாலன் கேட்டான்.

“சரி, போகலாம்” என்று ஒரு பெருமூச்சு விட்டு நகர்ந்தேன்.

“இதுதான் காதல்” என்றான் மாலன்.

என் மனம் அதை வேடிக்கையாகக் கொள்ளவில்லை. பெருங்காஞ்சி சாமண்ணா சொன்ன சொல் நினைவுக்கு வந்தது. நம் சந்திரனா இப்படி ஆனான்? என்னைப் பார்த்தும் பேசாமல் அந்தப் பெண்களின் பின் ஓடினானே என்று எண்ணிக் கொண்டே வந்தேன்.

உணவுக் கூடத்திற்குச் சென்று உண்ட பிறகு சந்திரனுடைய அறைப்பக்கம் சென்று எட்டிப் பார்த்தேன். சந்திரன் இருந்தான். பலர் அவனைச் சூழ்ந்து நின்று பாராட்டிக்கொண்டும் சிரித்து ஆரவாரம் செய்துகொண்டும் இருந்தார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து அவனெதிரில் நின்று புன்முறுவலால் பாராட்டிவிட்டுத் திரும்பினேன்.

நாடகம் முடிந்த பிறகு நாள்தோறும் சந்திரன் இரவில் உட்கார்ந்து படிக்கத் தொடங்கினான். ஆனால் அவனுடைய அறையில் யாரேனும் போய்ப் பேசிக்கொண்டிருந்ததையே பெரும்பாலும் கண்டேன். பகலில் சந்திரனை அவனுடைய அறையில் காண்பது அரிதாயிற்று. மாலையில் நானும் மாலனும் எறிபந்து, உதைபந்து முதலிய ஆட்டங்களில் ஈடுபட்டோம். சந்திரன் அங்கும் வருவதில்லை. இடையிடையே காண நேர்ந்தபோது, என்றேனும் ஒருநாள், “என்ன செய்தி? நன்றாகப் படிக்கிறாயா?” என்று கேட்பான். நானும், “உன் படிப்பு எப்படி இருக்கிறது?” என்று கேட்பேன். அந்த அளவில் எங்கள் உறவு நின்றது. நானாக வலிய அவனுடைய அறைக்குச் சென்றாலும் என்ன பேசுவது என்று தெரியாமல் சும்மா இருந்துவிட்டு வந்தேன். ஏதாவது தொடங்கிப் பேசினாலும், பேச்சில் அவன் அவ்வளவாக ஈடுபடாமல், புறக்கணித்தாற்போல் இருந்தான். இவ்வாறு எங்கள் உள்ளங்களுக்கு இடையே ஏதோ ஒரு திரை இருந்து வந்தது.

ஒரு நாள் காலையில் நான் படுக்கையை விட்டு எழுந்தவுடன் வெளியே மாணவர்கள் இங்கும் அங்கும் பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்ததைக் கண்டேன். என் அறைப்பக்கம் ஒருவன் தலைநீட்டி “இன்று கல்லூரிக்கு யாரும் போகக்கூடாது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டார்” என்று சொல்லிவிட்டு விரைந்து பக்கத்து அறைக்குச் சென்று அங்கும் அவ்வாறே சொல்லிவிட்டு விரைந்தான். என் மனம் அமைதி இழந்தது. “எவ்வளவு துன்பம்! காலம் எல்லாம் இப்படிச் சிறைக்குப் போய்க்கொண்டே இருந்தால், அவருடைய வாழ்க்கை என்ன ஆவது?” என்று அவருடைய வாழ்வுக்காக இரக்கப்படுவது போல் கலங்கினேன். என்னுடைய அனுபவமும் காந்தியடிகளைப் பற்றி அறிந்த அறிவும் அந்தக் காலத்தில் அவ்வளவுதான் இருந்தது. அடுத்த ஆண்டில் திரு.வி.க. எழுதிய “காந்தியடிகளும் மனிதவாழ்க்கையும்” என்ற புத்தகத்தைப் படித்த பிறகுதான், அவருடைய உண்மையான பெருமையையும் உயரிய குறிக்கோளையும் உணர்ந்தேன்.

அறையைப் பூட்டிவிட்டு வெளியே சுற்றி வந்து பார்த்தேன். சில மாணவர்கள் கண்கலங்கி உட்கார்ந்திருந்தார்கள். வேறு சிலர், “படிப்பும் வேண்டா, மண்ணாங்கட்டியும் வேண்டா. ஆங்கிலேயனைத் தொலைத்து விட்டுத்தான் மறுவேலை” என்று பேசிக்கொண்டிருந்தார்கள். இன்னும் சில மாணவர்கள், “இன்றைக்கு ஒரு விடுமுறை; நம்பாடு கொண்டாட்டம் தான். நல்ல சினிமாவுக்குப் போகலாம்” என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். மற்றும் சிலர், “நம் தலைமுறையில் ஒரு பெரிய உத்தமரைப் பெற்றிருக்கிறோம். திருவள்ளுவர், புத்தர், ஏசு, திருநாவுக்கரசர் காலத்தில் நாம் இருந்திருந்தால் அவருடைய அடியாராகி அவர் வழியில் நடக்கமாட்டோமா? காந்தியடிகள் காலத்தில் நாம் பிறந்து வாழ்ந்தும், இப்படிப் பயன் இல்லாத கல்லூரிப் பட்டத்துக்காக நல்ல வாய்ப்பை நெகிழவிடலாமா?” என்று வருந்திக் கொண்டிருந்தார்கள். மாணவர் இருவர், பெட்டி படுக்கை எல்லாம் சுருட்டிக்கொண்டு ஊர்க்குச் செல்ல ஆயத்தம் ஆனார்கள். “எங்கள் ஊருக்குப் போய் அங்கே சத்தியாக்கிரக இயக்கத்தில் சேர்ந்து சிறைக்குப் போகப்போகிறோம்” என்று சொன்னார்கள். ஒரு மாணவன் புத்தகம் முதலியவற்றைத் தன் நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு, சென்னையில் உள்ள சத்தியாக்கிரகக் குழுவை நாடிப் போய்விட்டதாகக் கேள்விப்பட்டேன். அந்த நிலையில் மாலன் வந்து என்னோடு கலந்து கொண்டான். அவனிடம் நான் சில செய்தி சொல்லுமுன்பே அவன் பல செய்திகளைச் சொல்லத் தொடங்கினான். “பெரும்பாலும், தேர்வுக்கு நன்றாகப் படிக்காத மாணவர்கள் தான் இதில் மிகுதியாக ஈடுபடுவார்கள். நீ பார். தேர்வுக்குப் போய்த் தவறிவிட்டுப் பெற்றோரிடம் கெட்ட பெயர் வாங்குவதைவிட இப்படி இயக்கத்தில் ஈடுபட்டுப் பத்திரிகையில் நல்லபெயர் வாங்கலாம் என்பது அவர்களுடைய திட்டம்” என்றான். நான் உடனே மறுத்தேன். அவன் ஆணித்தரமாகப் பேசினான். “பொய்,பொய்” என்று உறுதியாக மறுத்தேன்.

ஒன்பது மணிக்குள் விடுதி மாணவர்கள் கல்லூரியின் எதிரே திரண்டுவிட்டார்கள். இன்று கல்லூரிக்குள் யாரும் நுழையக்கூடாது என்று வெளியே இருந்து மாணவர்களுக்குச் சொல்லித் தடுத்தார்கள். என் வகுப்பில் கற்கும் மாணவர் சிலர் என்னிடம் வந்து, “என்ன செய்வது?” என்று கேட்டார்கள். “நம் நாட்டுப் பெரியவர் இப்படி அடக்குமுறை செய்து அவரைத் தண்டித்தபோது, நாம் வகுப்புக்குப் போய் இருப்பது நல்லது அல்ல. இன்று ஒரு நாளாவது நம்முடைய வருத்தத்தை தெரிவிக்கவேண்டும்” என்றேன்.

ஆனால் மாணவர் பலரிடையே வருத்தம் இருந்ததாகத் தெரியவில்லை. மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். தம் வேண்டுகோளை மீறிக் கல்லூரிக்குள் சென்றவர்களைப் பார்த்து, “கருங்காலிகள்” என்று கூச்சலிட்டு அவர்கள் திரும்பிப் பார்க்காதவாறு செய்தனர். பலர் முகத்தில் புன்முறுவல் இருந்தது. எள்ளி நகையாடும் மனநிலை அவர்களிடம் இருந்ததை உணர்ந்தேன். காந்தியடிகளுக்காகச் செய்வதைவிட, தங்கள் வாழ்க்கையில் ஒரு மாறுதல் காணவேண்டும் என்று செய்ததாகத் தெரிந்தது. அந்த மாறுதலைக் கட்டுப்பாடாக எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்றும், கட்டுப்பாட்டை மீறுகின்றவர்களை இகழ்ந்து பேசவேண்டும் என்றும் அவர்கள் கருதினார்கள். உண்மையான துயரத்தோடு காந்தியடிகள் துன்பத்தில் பங்கு கொண்டவர்கள் போல் முகம் வாடிச் சோர்ந்து நின்றவர்களும் சிலர் இருந்தார்கள். முதல் வகுப்புக்கு உரிய மணி அடித்தது. மாணவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வகுப்புக்குப் போவது தம் கடமை என்று ஆசிரியர்கள் சென்று உட்கார்ந்திருந்தார்கள். ஊர்வலம் போல் கூட்டமாகக் கல்லூரியைச் சுற்றிவர வேண்டும் என்று சிலர் விரும்பினார்கள். அவ்வாறே எல்லாரும் உடன்பட்டுக் கூடினார்கள். சுற்றி வந்தபோது வகுப்பறைகளில் சில மாணவர்களையும் ஆசிரியர்களையும் கண்டபோது கூட்டத்தில் பலர் ஆரவாரம் செய்தார்கள். குறும்புப் பெயர்களிட்டுக் கூவினார்கள். “கருங்காலிகள் ஒழிக” என்றார்கள். வெள்ளைக்காரர்களின் வால்கள் ஒழிக” என்றார்கள். “ஆங்கிலேயர்களின் அடிமைகள் ஒழிக” என்றார்கள். கூட்டம் சுற்றி வந்து ஒரு மரத்தடியில் நின்றது. உயரமான ஒரு மாணவன் – கதர் அணிந்தவன் – “காந்தியடிகள் வாழ்க” என்று மும்முறை முழங்கினான். “மாணவ நண்பர்களே!” என்று விளித்தான். கூட்டம் அமைதியடைந்தது. “இன்று எந்தப் பெரியவருக்காக – உத்தமருக்காக – தலைவர்க்காக – நாம் வருத்தம் தெரிவிக்கக் கூடியிருக்கிறோமோ, அவருடைய கொள்கைகளை உணராமல் வீண் ஆரவாரம் செய்கிறோம். ஆசிரியர்களையும் சில மாணவர்களையும் எள்ளி நகையாடுகிறோம். ஏதோ மகிழ்ச்சிக் கொண்டாட்டம் போல் முகம் மலர்ந்து முழங்குகிறோம். வெள்ளைக்காரர் அழியவேண்டும் என்று காந்தியடிகள் விரும்பவில்லை. ஆனால் நம்முடைய ஆசிரியர்களும் நம்முடன் படிக்கும் மாணவர்களும் அழியவேண்டும் என்று ஆரவாரம் செய்கிறோம். இந்த ஒரு நாளாவது அவருடைய தூய கொள்கைகளை உணர்ந்து, அமைதியாக இருந்து நம்முடைய வருத்தத்தைத் தெரிவிக்கும் படியாகக் கேட்டுக்கொள்கிறேன்” என்றான்.

சிறிது நேரம் அமைதி நிலவியது. பிறகு மற்றொரு மாணவன் தன் கைகளை உயர்த்தி, “காந்தியடிகள் வாழ்க” என்று சிலமுறை முழங்கியபிறகு, வீரமாகப் பேசினான். முடிவில், “இந்தக் கூட்டம் இப்படியே கடற்கரை வரைக்கும் ஊர்வலமாகச் செல்லவேண்டும்” என்று வற்புறுத்திக் கூறினான். “ஆமாம்”, “இப்பொழுதே புறப்படுவோம்” “தயார் தயார்” என்று பல குரல்கள் எழுந்தன.

கூட்டம் கல்லூரி எல்லையைக் கடந்து வெளியே செல்லப் புறப்பட்டது. சில மாணவர்கள் அதில் கலந்து கொள்ளாமல் விடுதியை நோக்கி வந்தனர். முதலில் பேசிய அந்த உயரமான மாணவரும் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல், வாடிய முகத்துடன் விடுதியை நோக்கி நடந்தார். மாலன் என்னைப் பார்த்து, “இதோ பார்த்தாயா? காந்தி பக்தர் போல் பேசினார். ஊர்வலத்தில் கலந்துகொள்ளாமல் விடுதிக்குப் போகிறார் இப்படித்தான் எல்லாம்” என்றான்.

“அதில் தவறு என்ன? அவர் ஊர்வலம் போகவேண்டும் என்று சொன்னாரா? பிறகு அதன்படி நடக்கவில்லையா? அவருக்கு ஊர்வலம் விருப்பம் இல்லை. அதனால் கலந்து கொள்ளவில்லை” என்றேன்.

“நீ ஊர்வலத்தில் கலந்துகொள்ளப் போகிறாயா, இல்லையா?”

“இல்லை?”

“அப்படியா? நான் கலந்துகொள்ளலாம் என்று எண்ணினேன்.”

“அப்படியானால் நீ மட்டும் போய்வா”

“இல்லை, நீ வராததால் நான் மட்டும் ஏன் போகவேண்டும்? நானும் விடுதிக்கு வருவேன்.”

“வேண்டுமானால், சிறிதுநேரம் சாலையிலிருந்து ஊர்வலத்தைப் பார்த்துவிட்டு வரலாம். அதற்கு வேண்டுமானால் வருவேன்.”

இவ்வாறு நான் சொன்னதும், “சரி, அதுதான் வேண்டும். சும்மா பார்த்து வருவதற்குத்தான் போகலாம் என்று இருந்தேன். இல்லையானால், நாம் போவதால் நாட்டுக்குச் சுதந்திரம் வந்துவிடப்போகிறதா?” என்றான்.

நானும் மாலனும் கூட்டத்தின் பின் மெல்லச் சென்று சாலைப்பக்கம் சேர்ந்தோம். அப்போது ஒருவன் சந்திரனைக் கைப்பிடித்து ஊர்வலத்தின் முன்னணிக்கு இழுத்துச் சென்றதைக் கண்டேன். ஒரு துறையில் முன்நின்ற மாணவனை மற்றத் துறையில் பின்தங்கும்படி இளைஞர்கள் விடுவதில்லை. ஆகையால், சந்திரன் கூட்டத்தின் இடையே ஒதுங்கியிருந்தும், மற்றவர்களின் கண்ணில் பட்டபிறகு அவ்வாறு இருக்க முடியவில்லை.

திடீரென்று ஒரு பஸ் நிறைய இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் கைத்தடியும் துப்பாக்கியுமாக வந்து இறங்கினார்கள். தடிகளை இங்கும் அங்கும் சுழற்றினார்கள். சீழ்க்கை ஊதப்பட்டது, தடிகளைச் சுற்றுவதோடு நிற்காமல் மாணவர்களைத் தாக்கவும் தொடங்கினார்கள். “விடுதிக்கு போய்விடுவோம் வந்துவிடு” என்றான் மாலன். “இப்போது ஓடிப்போகக்கூடாது. இருந்து பார்த்துவிட்டுப் போவோம்” என்று மாலனுடைய கைகளை இறுகப் பற்றிக்கொண்டேன். கூட்டத்திலிருந்து சில மாணவர்கள் மட்டும் பரபரப்பாக நடந்து தொலைவில் போய்விட்டனர். மற்றவர்கள் இங்கும் அங்கும் போவதுபோல் நகர்ந்துகொண்டிருந்தார்களே தவிர கலையவில்லை. “வந்தே மாதரம்! வந்தே மாதரம்!” என்ற குரல்கள் வானளாவின. மற்றுமொரு சீழ்க்கை ஊதப்பட்டது. கண்ணீர்ப்புகை விடப்பட்டது. அப்போதுதான் கூட்டம் சிதறத் தொடங்கியது. நானும் மாலனும் விடுதியை நோக்கிச் சென்றோம். கண்ணீர்ப்புகையும் அதற்குள் எங்கள் கண்களைத் தாக்கியது. கண்ணீர் வழிய நகர்ந்து கொண்டிருந்த எங்கள் மேல் தடிகள் பட்டன. மாலனுடைய முழங்காலிலும் அடிப்பட்டது; என்னுடைய இடது தோளிலும் பட்டது. மாலன், “அப்பாடா” என்று அடிப்பட்ட என் தோளைப் பற்றினான். “அய்யோநோகுது! இந்தத் தோளைப் பற்றிக்கொள்” என்று இப்பக்கமாக வந்து வலது தோளைக் கொடுத்தேன். ஆனால் நன்றாக நடக்கமுடியவில்லை. நொண்டிக்கொண்டே வந்தான். விரைவில் கல்லூரி எல்லைக்குள் நாங்கள் வந்துவிட்டோம். திரும்பிப் பார்த்தோம். சந்திரன் நெற்றியில் பலமான அடிபட்டு இரத்தம் கசிய வந்துகொண்டிருந்தான். அவனிடம் சென்று “என்ன செய்தி” என்று கேட்டேன். கண்ணீர்ப் புகை விட்டபோது, இடர்ப்பட்டு விழுந்து விட்டதாகவும் போலிஸ்காரனுடைய தடி பட்டதாகவும் கூறினான். அவன் கையில் இருந்த கைக்குட்டை முழுவதும் இரத்தத்தால் நனைந்திருந்தது. உடனே என் கைக்குட்டையை எடுத்து வழிந்த இரத்தத்தை ஒற்றினேன். அவனைப் பற்றினேன். “பிடிக்க வேண்டா; கை காலில் ஒன்றும் அடி இல்லை. நன்றாக நடந்து வருவேன்” என்றான்.

சிறிது நேரத்திற்குள் ஆளுக்கு ஒரு வழியாக மாணவர்கள் விடுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களில் கண்ணீர்ப் புகைக்கு ஆளானவர் சிலர்; அடிப்பட்டவர் சிலர்; ஒன்றும் இல்லாமலே தப்பி வந்துவிட்டவர் பலர். ஊர்வலம் நடத்தித் தீரவேண்டும் என்று வீர முழக்கம் செய்தவன் முன்னே சென்ற காரணத்தால் போலீசாரிடத்தில் அகப்பட்டு கொண்டிருப்பான் என எண்ணினேன். ஆனால் அவன் சிலரோடு பேசிச் சிரித்தபடியே எங்கள் அறைப்பக்கம் போவதைக் கண்டேன். “போலிசு வண்டி வந்ததோ இல்லையோ, அவர்களை ஏமாற்றிவிட்டுக் கல்லூரி எல்லைக்குள் கால்வைத்துவிட்டேன்” என்று அவன் பெருமையடித்துக் கொண்டான். “எனக்கு அந்தப் பயல்களையும் ஏமாற்றத் தெரியும், அவர்களின் பாட்டனையும் ஏமாற்றத் தெரியும்” என்று சொல்லிக்கொண்டான்.

பிற்பகல் மாற்றுடை அணிந்து கொண்டு போலீசார் சிலர் துப்பறிவதாகக் கேள்விப்பட்டோம். விடுதிக்குள் புதியவர்களாக யார் நுழைந்தாலும், துப்பறியும் போலீசார் என்று ஐயுற்றோம். தங்கள் மகனையோ தம்பியையோ பார்க்க வந்தவர்களையும் அவ்வாறு ஐயுற்றுத் தொடர்ந்து சென்று, நாங்கள் அவர்களைத் துப்பறியத் தொடங்கினோம். விடுதியின் வாழ்வில் ஒருவகைச் சுறுசுறுப்பும் பரபரப்பும் எங்கும் காணப்பட்டன. ஆடலும் பாடலும் சினிமாவும் விருந்தும் விழாவும் இல்லாமலே விடுதி உணர்ச்சிமிக்க சூழ்நிலை பெற்றது.

அன்று மாலை ஐந்து மணிக்கு விடுதி எதிரே போலீசின் வண்டி ஒன்று வந்து நின்றது. நாங்கள் எல்லோரும் பரபரப்பு அடைந்தோம். நேராக ஒரு குறிப்பிட்ட அறையை நோக்கி வருவது போல் போலீசார் வந்தனர். பின்தொடராதபடி எங்களைத் தடுத்துவிட்டு, ஓர் அறைக்குள் நுழைந்தனர். ஒரு மாணவனைப் பற்றிக்கொண்டுவந்தனர். நேரே வண்டியில் ஏற்றிச் சென்றனர். பிறகு மாணவர் சிலர் மிக்க பரபரப்பு அடைந்து, போலீசு நிலையத்துக்குச் சென்று பார்த்தனர். அந்த மாணவன் சிறையில் வைக்கப்பட்டதாகச் செய்தி அறிந்து வந்தனர். அந்த மாணவன் வேறு யாரும் இல்லை; காலையில் கூட்டத்தின்போது ஆசிரியர்களையும் மற்றவர்களையும் இகழாமல் காந்தியடிகளின் கொள்கையை உணர்ந்து அன்பாக அமைதியாக நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லி ஊர்வலத்தில் கலந்து கொள்ள விருப்பமில்லாமல் விடுதிக்குச் சென்ற அதே மாணவன் தான். அவன் ஒரு குற்றமும் செய்யக் கூடியவனாகவோ, தீவிரமான நடவடிக்கையில் கலந்து கொள்ளக் கூடியவனாகவோ, இல்லை. அவனைப் போலீசார் பிடித்தது தவறு என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். மாலன் வந்த போது என்ன காரணம் என்று கேட்டேன். போலீசார் துப்பறிய வந்தபோது யாரோ அவனைப் பற்றிச் சொல்லி, அவன்தான் கூட்டத்தில் பேசியதாகவும் எல்லாவற்றிற்கும் காரணமாக இருந்ததாகவும் சொல்லிவிட்டார்களாம். அதனால் அவனைச் சிறைப் படுத்தியிருப்பதாகச் சொன்னான். சிறிது நேரத்தில் வேறொருவன் வாயிலாக ஒரு செய்தி வந்தது. காலையில் இரண்டாவதாகப் பேசி வீர முழக்கம் செய்து ஊர்வலம் வேண்டும் என்று தூண்டிய அந்த மாணவன் தான், போலீசாரிடம் அவனை அப்படிக் காட்டிக் கொடுத்து விட்டதாகச் செய்தி தெரிந்தது. எனக்கு வியப்பாக இருந்தது. அப்படி வீர முழக்கம் செய்தவன் தான் போலீசாரை ஏமாற்றிவிட்டதாகப் பெருமையடித்துக் கொண்டதோடு, இப்படி அடாதபொய் சொல்லி நல்லவனைக் காட்டிக் கொடுத்துச் சிறைப்படுத்திவிட்டானே என்று வருந்தினேன். அந்த மாணவன் வீர முழக்கம் செய்தபோது செடி முழுதும் மணம் கமழும் துளசிபோல் விரும்பத்தக்கவனாகத் தோன்றினான். போலீசாரை ஏய்த்துவிட்டு ஓடி வந்ததாகப் பெருமையடித்துக்கொண்டபோது, பூ மட்டும் மணம் கமழும் அரளிபோல் இருந்தான்; இப்படிக் காட்டிக் கொடுத்து நல்லவனுக்குத் தீமை செய்தான் என்று செய்தி கேட்டபோது, மணம் இல்லாத மலர்களைத் தாங்கும் குரோட்டன் செடியே நினைவுக்கு வந்தது.

இந்தச் செய்தி பரவிய பிறகு, மாணவர் ஒருவரை ஒருவர் கண்டாலும் ஐயுறத்தொடங்கினர். பேசினாலும் பிறர் கண்ணில் படாமல், பிறர் செவியிலும் கேளாமல் மெல்லப் பேசினர். மாலனும் பயந்து, “நாம் இருவர் அடிக்கடி பழகிப் பேசினாலும் வம்பு செய்துவிடுவார்கள். இன்னும் நான்கு நாள் தனித்தனியே இருந்து விடுவோம்” என்று சொல்லித் தன் அறைக்குப் போய்விட்டான்.

விடுதியில் முன்நாள் இருந்த உணர்ச்சியும் எழுச்சியும் மறுநாள் இல்லை. ஏதோ பேய் உலாவும் இடம் என்று சொல்லத்தக்கவாறு இருந்தது. எந்நேரமும் எக்களிப்பும் எள்ளி நகையாடலும் நிறைந்திருந்த உணவுக் கூடத்திலும் அமைதியும் அடக்கமுமே இருந்தன. எல்லோரும் நேரத்தோடு கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு வழக்கம் போல் இருந்துவிட்டு வந்தோம். அன்று மாலையும் விடுதி வெறிச்சென்றிருந்தது.

அடுத்தநாள் முதல் மெல்ல மெல்ல விடுதிக்கு உயிர் வந்தது எனலாம். எல்லோரும் கலகல என்று பேசும் குரல் கேட்டது. சீழ்க்கை அடித்தலும் சினிமா பாட்டுப் பாடலும் மெல்லமெல்லத் தொடங்கின. படிக்கும் பழக்கமும் ஏற்பட்டது. அந்த நல்ல மாணவன் மூன்று நாள் சிறையில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டான். என்ன நடந்தது என்று விரிவாகச் செய்தி வந்தது. கூட்டம் கூட்டியதாகவும் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்ததாகவும், பேசித் தூண்டியதாகவும் போலீசார் குற்றம் சாட்டினார்களாம். முன் சொன்ன இரண்டிற்கும் தன் தொடர்பு இல்லை என்றும், பேசியது மட்டும் உண்மை என்றும், அந்தப் பேச்சிலும் எந்தச் செயலுக்கும் மாணவரைத் தூண்டியதில்லை என்றும் சொன்னானாம். கல்லூரித் தலைவரின் நற்சான்று கேட்டறிந்து பிறகு விடுதலை செய்து விட்டார்களாம். ஆனால் அந்த நல்லவனைக் காட்டி கொடுத்த குற்றவாளியைப் பற்றிய பேச்சே இல்லை. அவனை எல்லோரும் மறந்துவிட்டார்கள் போலீசாரை ஏய்த்துவிட்டது போலவே அவன் விடுதியில் உள்ளவர்களையும் ஏய்த்துவிட்டுக் கவலை இல்லாமல் இருந்தான்.

அடுத்த வாரத்தில் குறிப்பிடத் தகுந்த ஒரு நிகழ்ச்சி நடந்தது. சிறுநீர் அறைக்குப் பக்கத்தில் ஆரவாரம் கேட்டு உடனே அறையை பூட்டிவிட்டு அங்குச் சென்றேன். அதற்குள் அங்கே ஐம்பது அறுபது மாணவர்கள் கூடிவிட்டிருந்தார்கள். சந்திரன் குரல் உரக்கக் கேட்டது. அவனுடைய குரலில் ஆத்திரமும் இருந்தது. அதனால் உடனே கூட்டத்தின் உள்ளே நுழைந்து சென்றேன். சந்திரனுக்கு எதிரே அந்த நல்லவன் – சிறை சென்ற மாணவன் – அமைதியாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டேன். விடுதிச் செயலாளரும் வளர்ந்த மாணவர்கள் சிலரும் குழப்பத்தில் தலையிட்டு, “இங்கே வேண்டா, போகவர இடையூறாகவும் இருக்கிறது. தயவு செய்து படிப்பகத்துக்கு வாருங்கள். குழப்பம் இல்லாமல் அமைதியாக அங்கே பேசி ஒரு முடிவுக்கு வருவோம். நமக்குள் இப்படிப் போரிட்டுக்கொண்டால் நல்லதா? விடுதியில் இருப்பவர்கள் ஒரு குடும்பம்போல் வாழ வேண்டாவா?” என்றார்கள்.

சந்திரன் “சரி” என்று அவர்களுக்கு இணங்கினான். அவனுக்கு ஒரு துணை உண்டு என்று காட்டுவதுபோல் நான் அவன் பக்கம்போய் நின்றேன்.

ஆனால் மற்றவன் வரமறுத்தான். “இதோடு விட்டுவிடுங்கள். வேண்டுமானால், நான் சொன்னது தப்பு என்று ஒப்புக்கொள்கிறேன். இனிமேல் அப்படி யாருக்கும் நல்லதும் சொல்வதில்லை. விட்டுவிடுங்கள்” என்றான்.

வளர்ந்த மற்ற மாணவர்கள் அவனை நோக்கி, “அப்படி அல்ல. இந்த அளவில் விட்டுவிட்டால், உங்கள் இருவர்க்கும் மனக்கசப்பு இருந்துவரும், ஒருவரை ஒருவர் பார்க்கும்போது நன்றாக இருக்காது. ஆகையால் தயவு செய்து நாங்கள் சொல்வதைக்கேட்டு, எங்களுக்காக, விடுதியின் நன்மைக்காக எங்களோடு வரவேண்டும்” என்றார்கள்.

அதன் பிறகுதான் அந்த மாணவன் வந்தான். அவன் தூய வெள்ளைக் கதர் உடுத்து, அமைதி பொலியும் முகத்தோடு விளங்கினான். அவனிடத்தில் குற்றம் ஒன்றும் இருக்கமுடியாதே என்று எண்ணினேன். ஆனாலும் என்னோடு உடன் படித்த காரணத்தாலும், எங்கள் ஊர்ப்பக்கத்திலிருந்து வந்தவன் ஆகையாலும், சந்திரன் சார்பாகவே இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஆகவே, சந்திரனுக்குப் பக்கத்தில் அவனுடைய வலக்கைபோல் பெருமித உணர்ச்சியோடு நடந்து சென்றேன். மாணவர்களும் கூட்டமாக வந்தார்கள்.

படிப்பகத்தில் உட்கார்ந்தவுடன், செயலாளர் சந்திரனைப் பார்த்து, “ஆத்திரம் இல்லாமல், கோபம் இல்லாமல், நடந்ததைச் சொல்லுங்கள்” என்றார். அந்தக் கதர் மாணவனைப் பார்த்து, “அதுவரையில் நீங்கள் கேட்டிருங்கள். ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால் பிறகு சொல்லுங்கள்” என்றார்.

உடனே, கதர் மாணவன், “சொல்லாமலே இருக்க முடியும்” என்றான்.

சந்திரன் சொல்லத் தொடங்கியதும் நான் ஆவலுடன் கேட்டேன். “நான் சிறுநீர் அறைக்குப் போயிருந்தேன். சிறுநீர் கழித்துவிட்டு வெளியே வந்தேன். இந்த ஆள் உள்ளே நுழைந்தார். உடனே வெளியே வந்து என்னைக் கூப்பிட்டார். ‘ஒன்றுக்குப்போனீர்களே, தண்ணீர் பிடித்துக் கொட்டினீர்களா?’ என்று என்னைக் கேட்டார். “நான் இல்லை என்றேன்” இவ்வாறு அவன் சொன்னதும் கதர் மாணவன் குறுக்கிட்டு “அல்ல, அப்படிச் சொல்லவில்லை. அது என் கடமை அல்ல என்று கோபத்தோடு கூறினார்” என்றார்.

உடனே செயலாளர், “நீங்கள் கடைசி வரையில் பொறுத்திருந்து பிறகு பேசுவதாக ஒப்புக்கொண்டு, இப்போது குறுக்கிட்டீர்களே” என்றார்.

“பிறகு மறந்துவிடுவேனோ என்று இப்போதே சொன்னேன்” என்றான் கதர் மாணவன்.

மாணவர்கள் மேலும் பலர் வந்து சேர்ந்து வழியெல்லாம் நெருங்கி நின்றனர்.

சந்திரன் தொடர்ந்து பேசினான். “நான் அப்படிக் கோபத்தோடு சொல்லவில்லை. அது என்னுடைய கடமை அல்ல என்று சொன்னது உண்மைதான். சிறுநீர் கழித்த பிறகு ஒவ்வொருவரும் தண்ணீர் பிடித்துக் கொட்டிக் கொண்டிருக்க முடியாது. அதனால் என் கடமை அல்ல என்றேன். அதற்கு இந்த ஆள் என்னைப் பார்த்து ஒரு பெரிய சொற்பொழிவு செய்யத் தொடங்கினார். நீங்கள் எல்லாம் பெரிய காந்தி பக்தர்களா? காந்தி சொன்ன வழியில் நடக்கத் தெரியாமல் வீண் ஆரவாரம் மட்டும் செய்கிறீர்கள்; சமுதாய வாழ்க்கையில் பிறர்க்கு எந்த வகையிலும் இடையூறு செய்யாமல் வாழ வேண்டுமானால், சிறுநீர் கழித்த பிறகு தண்ணீர் கொட்டவேண்டும். அது கடமை என்று உணராதவர்கள் கல்லூரியில் படித்துப் பயன் என்ன? நீங்கள்தான் படித்த பிறகு ஆங்கிலேயனுடைய ஆட்சிக்குத் தூணாக இருந்து நாட்டுமக்களைக் காட்டிக் கொடுப்பீர்கள்; நீங்கள்தான் மக்களிடம் லஞ்சம் வாங்கும் வன்னெஞ்சர் ஆவீர்கள்; அடிப்படையான ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளாமல் ஏன் படிக்கீறீர்கள்? உங்களால் கல்லூரிக்கும் கெட்டபெயர்; நாட்டுக்கும் கெட்ட பெயர்; உங்களைச் சேர்த்துப் பட்டதாரிகள் ஆக்கி நாட்டைக் கெடுப்பதைவிடக் கல்லூரியை மூடுவதே நல்லது என்று இப்படிப் பலவகையாக உளறினார். நான் உடனே,’ நான்சென்ஸ் வாயை மூடு என்றேன்.'”

இவ்வாறு சந்திரன் சொல்லி நிறுத்தியவுடன் கூட்டத்திலிருந்து பலவகையான குரல்கள் எழுந்தன.

“யாரடா அவன், பெரிய காந்தி பைத்தியம்!”

“பி.ஏ., நான்காம் வகுப்பில் படிக்கும் சாந்தலிங்கமடா.”

“அவன் எப்போதும் இப்படித்தான் இடக்குச் செய்வான்.”

“ஏன்? வார்தாவுக்குப் போய் வந்து விட்டானோ?”

“அப்படியானால், அந்த மலம் வாருகிறார்களே அப்படி அய்யா இங்கேயும் அந்த வேலையைச் செய்வதுதானே?”

“இவர் இங்கே படிக்க வந்தாரா? சிறுநீர் அறையை மேற்பார்வை பார்க்க வந்தாரா?”

இவ்வாறு பலர் பலவாறு பேசவும், செயலாளர் எழுந்து “அன்புகூர்ந்து அமைதியாக இருக்கும்படியாக வேண்டுகிறேன். இப்படிப் பலர் பலவாறு பேசினால், நாம் கூடிய கடமை ஆகுமா? பாராளுமன்றங்களின் தோற்றம், வளர்ச்சி, விதிகள், பயன்கள் எல்லாவற்றையும் விரிவாகப் படிக்கிறோம். பேசுகிறோம். ஆனால் நம் வாழ்க்கையில் அந்த முறைகளைப் போற்றிக் கையாளாவிட்டால் பயன் என்ன?” என்றார்.

ஆயினும் அவர் பேச்சால் பயன் விளையவில்லை. மறுபடியும் மாணவர்கள் பலவாறு குரல் எழுப்பத் தொடங்கினார்கள். விடுதிச் செயலாளரைப் பற்றியும் தாக்கிப் பேசினார்கள்.

“ஓஓ! செயலாளர் சாந்தலிங்கத்தின் நண்பரோ?”

“கல்லூரியின் பெயரை இவர்தான் காப்பாற்றப் போகிறாரோ?”

“சிறுநீர் அறையைக் காப்பாற்றினால்தான் கல்லூரியின் பெயரைக் காப்பாற்ற முடியுமா? சரிதான்.”

“இந்த ஆள் போன பிறவியில் தோட்டியாக இருந்திருப்பான்.”

“அய்யாவின் முகவரியை யாராவது முனிசிபாலிடிக்குத் தெரியப்படுத்தினால் ஒரு வேலை கொடுப்பார்களே!”

“வேலையில்லாத் திண்டாட்டம் கொஞ்சம் தீருமே”.

விடுதிச் செயலாளர் “அமைதி, அமைதி” என்று பலமுறை எழுந்து கேட்டுக்கொண்டார்.

மறுபடியும் சில குரல்கள் கேட்டன.

“நாங்கள் இனிமேல் தண்ணீர் பிடித்துக் கொட்டப் போவதில்லை, சாந்தலிங்கம்!”

“அவனுடைய அறையிலேயே போய் இனிமேல் சிறுநீர் கழிக்க வேண்டும். அதுதான் வழி”

“இங்கே என்ன பஞ்சாயத்து? வார்டனிடம் போங்கள்”.

“சந்திரா! உன்னைக் குற்றவாளியாக்கும் முயற்சி இது. இருக்காதே எழுந்து வா”

“இமாவதி சந்திரன் எழுந்து வா.”

அப்போது சிலர் கொல்லென்று சிரித்தனர். என் மனம் ஓர் அதிர்ச்சி உற்றது. இமாவதி என்ற பெயரைக் கேட்டதும், அன்று நாடகத்தின் முடிவில் நான் கண்ட அந்தக் காட்சி நினைவுக்கு வந்தது. சந்திரன் முகம் கவிழ்ந்தபடி இருந்தான்.

“எழுந்து வா? சந்திரன்! எழுந்து வா” என்று தொடர்ந்து சில குரல்கள் கேட்டன.

சந்திரனும் எழுந்தான். செயலாளர் அன்போடு கேட்டுக் கொள்ளவே அவன் மறுபடியும் உட்கார்ந்தான். என் மனம் சாந்தலிங்கம் சொன்னவை சரியென்றும், அவற்றில் தவறு ஒன்றுமே இல்லை என்றும், சந்திரன் தண்ணீர் கொட்டியிருக்கலாம் என்றும், இல்லை என்றாலும் அன்பாகத் தன் குற்றத்தை உடன்பட்டிருக்கலாம் என்றும் பலவாறு எண்ணியது. ஆனாலும், அவனுடைய பழைய தொடர்பையும் குடும்பத் தொடர்பையும் எண்ணிப் பேசாமல் இருந்தேன். இவ்வளவு கூட்டத்தில், மனச்சான்றும் நீதியுணர்ச்சியும் உள்ள மாணவர் சிலராவது இல்லையா? அவர்கள் ஏன் தங்கள் வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள்? அநியாயத்துக்கு ஆட்கள் முந்துகிறார்களே, நியாயத்துக்குத் தயங்குகிறார்களே என்று பலவாறு எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தேன். என் ஏக்கம் தீர ஒரு குரல் துணிவாகத் தெளிவாகக் கேட்டது.

“சாந்தலிங்கம் சொன்னதில் தப்பு என்ன?” என்று அந்தக் குரல் கேட்டதும், என் செவியில் தேன் வார்த்தது போல் இருந்தது.

“எப்படிக் கேட்கலாம்” என்று மற்றொரு குரல்.

மாணவர்கள் ஒரே கூட்டமாக நெருங்கி இருந்தபடியால், குரல் எழுப்பியவர்கள் யார் யார் என்று ஆட்களைக் காணமுடியவில்லை.

“சாலையில் எச்சில் துப்பினால் கேட்கலாம், சுகாதாரத்துக்குத் தீங்கு என்று.”

“பஸ்ஸில் சுருட்டுப் பிடித்தால் கேட்கலாம், பலருக்குத் தீங்கு என்று.”

“நடுத்தெருவில் காகிதம் கிழித்துப் போட்டால் கேட்கலாம், பொதுவாழ்வின் விதிகள் தெரியவில்லை என்று.”

“இது நடுத்தெரு அல்ல, கேட்கக்கூடாது.”

“இது பஸ் அல்ல, கேட்கக் கூடாது.”

“இது பொது இடம். கேட்கலாம்.”

“கேட்க உரிமை உண்டு.”

“சொந்த வீடு அல்ல.”

“மற்றவர்களோடு சேர்ந்து வாழ வந்திருக்கும்போது மற்றவர்களுடைய நன்மையைக் கவனித்தே நடக்க வேண்டும்.”

“சாந்தலிங்கம் தன் நன்மைக்காகக் கேட்கவில்லை.”

“சொந்த வீடாக இருந்தாலும், அண்ணன் தம்பி கேட்பதில்லையா?”

“வாழைப்பழத் தோலை நடுத்தெருவில் போடாதே என்று காந்தியடிகள் யங் இந்தியாவில் எழுதவில்லையா?”

“அது பைத்தியம்.”

“நீ பைத்தியம்.”

“நீதான் பைத்தியம்.”

இந்த நிலையில் சாந்தலிங்கம் எழுந்து, “நான் சிறிது நேரம் பேசலாமா?” என்றான். எல்லாரும் அமைதியானார்கள். “என்னால் இவ்வளவு தொல்லை, இவ்வளவு பெரிதாக முடியும் என்று எதிர்பார்த்திருந்தால் நான் வாயைத் திறந்திருக்க மாட்டேன். இன்னும் சில நாளில் பி.ஏ. தேர்வு எழுதி முடித்துவிட்டு நான் விடுதியை விட்டு வெளியேறப் போகிறேன். இரண்டு ஆண்டுகள் வாணியம்பாடியில் இருந்து படித்தேன். இரண்டு ஆண்டுகள் இங்கே இந்த விடுதியில் இருந்தேன். என்னுடைய அனுபவத்தால் – நல்லது செய்யவேண்டும் என்ற ஆர்வத்தால் – அவசரப்பட்டுச் சொல்லிவிட்டேன். மன்னிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தான்.

“மன்னிப்புக்கு இடமே இல்லை.”

“குற்றமே இல்லை.”

“மன்னிப்புக் கோரவேண்டிய ஆள் நடிகர் சந்திரன்தான்.”

“இல்லை.இல்லை.”

இந்தக் குரல்கள் மறுபடியும் வளருமோ என்று அஞ்சினேன். ஆனால் நியாயத்தின் குரல்கள் எழுந்தவுடன், மற்றக் குரல்கள் ஒருவாறு குறைந்தன.

செயலாளர், ஏன் அதைத் தொடங்கினோம் என்று திகைத்து வருந்திய நிலையிலிருந்து மாறிச் சிறிது ஊக்கம் பெற்றவராய்த் தோன்றினார். “போனது போகட்டும். நடந்ததை மறந்து விடுவோம். இனி என்ன செய்வோம் என்பதைப் பற்றிப் பேசுவோம்” என்றார். கூட்டத்தில் இருந்த சிலர் மெல்ல நகர்ந்து தம் தம் அறைக்குச் செல்லத் தொடங்கினர். கூட்டம் போதும் என்று செயலாளர் பேசினார். “மேற்கு நாடுகளில் எங்கேயும் இதைக் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்காது. இதை எல்லாம் அவர்கள் இளமையிலேயே கற்று வளர்ந்திருப்பார்கள். காரணம் அங்கெல்லாம் இது குடும்பக் கல்வியாக இருக்கிறது. இங்கே குடும்பங்களில் உள்ளவர்களுக்கே இன்னும் இதைக் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. ஒவ்வொருவரும் இரவில் எழுந்து எதிர் வீட்டு ஓரமாகச் சிறுநீர் கழித்து வருவது இங்கே வழக்கம். கண்ட இடமெல்லாம் துப்புவதும், பக்கத்து வீட்டு ஓரமாகக் குப்பையைக் கொட்டுவதும் நம் வீடுகளில் உள்ள பழக்கம். ஆகையால், சந்திரனையோ மற்றவர்களையோ குறை கூறிப் பயன் இல்லை. பொதுவாக நம் நாட்டுக்குறை என்று கருதித் திருத்தவேண்டும்” என்றார்.

அப்போது சாந்தலிங்கம் கொஞ்சம் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, “மேற்கு நாடுகளில் இந்த ஒழுக்கங்கள் இயல்பாக இருப்பதற்குக் காரணம் உண்டு. இங்கு இல்லாமைக்குக் காரணம் உண்டு. அங்கே பிறர்க்கு உதவி செய்வதே கடவுளுக்கு விருப்பமானது என்ற நம்பிக்கையின் மேல் சமயம் வளர்ந்திருக்கிறது. இங்கே இந்த உண்மை இலைமறை காய்போல் உள்ளதே தவிர, வெளிப்படையாக இல்லை. நேர்மாறாக, பிறர்க்குத் தீமை செய்தாவது பணம் சேர்த்து அருச்சனை, அபிசேகம் செய்வதைக் கடவுள் விரும்புவார் என்ற மூடநம்பிக்கை வளர்ந்திருக்கிறது. அங்கே பிறர்க்குத் தொண்டு செய்த சமயத் தலைவர்கள் பலர், இங்கே காட்டில் ஒதுங்கித் தவம் செய்தவர்களும், உலகம் பொய் என்று சொல்லித் தம்மளவில் மோட்சத்துக்குப் பாடுபட்ட பக்தர்களும் பலர். அங்குள்ள சமய அமைப்புகளில் மடங்களில் பல, பிறருடைய வாழ்வுக்கு உதவி செய்வதற்காக ஏற்பட்டவை. இங்கே விவேகானந்தரின் காலத்துக்குப் பிறகுதான் அப்படிப்பட்டவை சில ஏற்பட்டன. அதனால் இங்கே புண்ணியம் பாவம் என்று சொன்னால்தான் மதிப்பு உண்டு; சமுதாய நன்மை என்று சொன்னால் மதிப்பு இல்லை. சட்டம் என்று சொன்னால்தான் அடங்கி நடக்கிறார்கள்; நாகரிக வாழ்க்கை முறை என்று சொன்னால் கேட்டு நடப்பதில்லை. இதை மாற்றினால்தான் நமக்குச் சுதந்திரம் கேட்க உரிமை உண்டு; ஒருகால் அதற்குமுன் நம் தலைமுறையில் சுதந்திரம் கிடைத்துவிட்டாலும் அதைக் காப்பாற்ற வழி தெரியாமல் வருந்துவோம். இந்த ஆர்வத்தால் ஏதோ பேசினேன். நான் எந்த வகையிலாவது நண்பர் சந்திரனுடைய மனத்தைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கும்படியாக அவரை கேட்டுக்கொள்கிறேன். நீர் கொட்டவில்லை என்பதை மட்டும் கேட்டதாக நண்பர் சந்திரன் சொன்னார். அதுமட்டும் அல்ல. சுவரில் பெய்திருக்கக் கூடாது; பெய்தால் நீர் கொட்ட வேண்டும்” என்று சொன்னேன். சிறுநீர் கழிக்க அதற்கென்று பீங்கான் குழிவு வைக்கப்பட்டுள்ளது. அதில் சிறுநீர் கழிக்காமல், சுவரில் கழிக்கப்பட்டிருந்தது. சுவர் அந்தக் கெட்ட நாற்றத்தை நெடுநேரம் வைத்திருந்து பரப்பும் அல்லவா? எங்கே போனாலும் இந்தக் கொடுமையைக் காண்கின்றேன். இது தவறான பழக்கம் என்று உணர்த்துவதற்காகவே கேட்டேன். நண்பர் சந்திரன் என்னை மன்னிக்க வேண்டும்.” என்று சொல்லிச் சந்திரனுடைய கையைப் பற்றி அவனுடைய முகத்தைப் பார்த்தான்.

சந்திரனும் அவனுடைய கைகளைத் தன் கைகளால் ஏற்றுக்கொண்டு தன் பக்கத்தில் உட்காரச் செய்தான்.

“இவ்வளவு தொல்லை இல்லை. மேற்கு நாட்டார் கண்டுபிடித்து அமைத்த மேல் தொட்டி நன்றாக வேலை செய்து வந்தால் போதும். அதில் தொங்கும் சங்கிலியைப் பிடித்து இழுத்தால், தண்ணீர் வேகமாக வந்து சிறுநீரை அடித்துப் போய்விடும்” என்றான் மாணவன் ஒருவன்.

“செயலாளர் கேட்டுக் கொண்டிருக்கிறார். வார்டனுக்குச் சொல்லி, முதலில் அந்த மேல்தொட்டிகளைப் பழுது பார்க்கச் சொல்லுங்கள்” என்றான் மற்றொருவன்.

“அப்படியே செய்தாலும் பீங்கான் குழியை விட்டு விட்டு, சுவரில் பெய்துவிட்டு வருகிறவர்களை எப்படித்தான் திருத்துவது?”

“கடவுள்தான் திருத்தவேண்டும்”

“அது பாவம் என்று புராணங்களில், திருக்குறளில் எழுதி வைத்தால்தான் நடக்கும்.”

“அது மட்டும் போதாது. அப்படிச் சுவரில் பெய்தவர்களை மறுபிறவியில் நரகலோகத்தில் கொதிக்கும் இரும்புச் சுவரைத் தழுவுமாறு செய்து யமகிங்கரர் தண்டிப்பார்கள் என்று எழுதினால்தான் ஒழுங்காக நடப்பார்கள்.”

“அப்படி எழுதிவிட்டால் மட்டும் போதாது. அந்தப் புத்தகங்களைப் புராணங்களாக்கி, அவற்றைப் பற்றிக் கதாகாலட்சேபங்கள் நடக்குமாறு செய்ய வேண்டும்.”

“இப்போது கதா காலட்சேபத்தில் கேட்டறிந்த நல்வழிகளை மக்கள் வாழ்க்கையில் பின்பற்றுகிறார்களா? நாட்டில் பொய் போயிற்றா? விபசாரம் குறைந்ததா? பேராசை தொலைந்ததா? சூதாட்டம் ஒழிந்ததா? அரிச்சந்திர புராணம் முதல் பாரதம் வரையில் படிக்கக் கேட்டும் திருந்தினார்களா?”

“அதனால் புதுவழி காணவேண்டும். சாந்தலிங்கம் போன்றவர்கள் ஊர்தோறும் தெருவுதோறும் வீடுதோறும் பலர் ஏற்பட வேண்டும். அதுதான் வழி.”

“அதுமட்டும் போதாது. சாந்தலிங்கம் செய்வது சரி என்று குரல் எழுப்புவதற்கு ஆட்கள் தேவை. ஊர்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் தேவை. உண்மையின் சார்பில், நியாயத்தின் சார்பில் தயங்காமல் குரல் கொடுப்பவர்கள் தேவை.”

இப்படிப் பலர் பலவாறு பேசினார்கள். அத்தனைக்கும் செயலாளர் இடம் கொடுத்தார். முடிவில் எல்லோருக்கும் நன்றிகூறி, மேல்தொட்டிகளை விரைவில் பழுதுபார்க்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.

சந்திரனோடு தொடர்ந்து வந்தேன். “வீண் வம்பு” என்று இரண்டு சொல் சொல்லித் தன் அறையின் வாயிலில் நின்று எனக்கு விடை கொடுத்தான். நான் வந்துவிட்டேன். அவ்வளவு நடந்த பிறகும் அவனுடைய மனம் திருந்தியதாகவோ, மாறியதாகவோ எனக்குத் தோன்றவில்லை. அவன் நிலையில் நான் இருந்திருந்தால் சாந்தலிங்கத்திடம் மன்னிப்புக்கோரி வருந்தியிருப்பேன். அவனுக்கு அந்த எண்ணமே தோன்றியதாகத் தெரியவில்லை.

– தொடரும்…

– மு.வரதராசன் இந்நாவலை 1958-ல் எழுதினார். அவருடைய ‘தாயகம்’ பதிப்பகம் வெளியிட்டது. இந்நாவலுக்கு 1961-ல் சாகித்ய அகாதமி விருது அளிக்கப்பட்டது.

நன்றி: https://www.projectmadurai.org/

மு.வரதராசன் மு.வரதராசன் (மு.வ. என்று சுருக்கமாக அழைக்கப்படும் மு. வரதராசனார்) இருபதாம் நூற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற தமிழ் அறிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் ஏப்ரல் 25, 1912 இல் பிறந்து அக்டோபர் 10, 1974 இல் இயற்கை எய்தினார். எளிய தமிழ் நடையில் திருக்குறளுக்கு இவர் எழுதிய தெளிவுரை தமிழக மக்களிடையே இன்று வரை மிகவும் பிரபலமாக உள்ளது. டாக்டர் மு.வ. பற்றிய முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *