வீதி உலா
கதையாசிரியர்: ஷைலஜா
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 4, 2026
பார்வையிட்டோர்: 135

ரவிக்குக் கோபம் கோபமாய் வந்தது.
ஆடி மாதமாம் அம்மன் திருவிழாவாம்! அதற்காக அம்மன் வீதி உலாவாம்!
அடுத்த தெருவிலிருக்கும் அம்மன் கோவிலிலிருந்து ஒலிபெருக்கியில் பாடல்கள் கேட்டவண்ணம் இருந்தன.
ரவி காதைப் பொத்திக் கொண்டான்.
கொடைக்கானல் பள்ளியில் பத்தாவது படிக்கும் ரவி விடுமுறைக்கு அக்கா வீடு வந்தபோது இதையெல்லாம் கண்கூடாகக் கண்டு கோபத்தில் கத்தினான்.
“இதென்னக்கா சில்லியா இருக்கு? அம்மன் ஆடிமாசத்துல ஒருநாள் வீதி உலா வர்ரதுக்காக மீதநாள் எல்லாம் கோவிலில் அம்மன் பாட்டுக்களா போட்டு இப்படித்தாக்கணுமா? சுத்த நியூசென்ஸா இருக்கே?’
“ரவி! நாளைக்கு பௌர்ணமி. அம்மன் வீதி உலா முடிஞ்சதுன்னா இந்த அமக்களம் குறைஞ்சிடும்ப்பா” என்றாள் அவன் அக்கா நீரஜா..
“அக்கா! சாமி எதுக்கு கோயிலைவிட்டு வீதி உலா வரணும்? உண்மையான பக்தர்கள் என்றால் ஒழுங்கா கோயில் போய் அம்மனை தரிசிக்க வேண்டியத்தானே?”
“அப்படியெல்லாம் கேள்வி கேட்க்ககூடாது ரவி இதெல்லாம் இந்த ஊரில் காலம்காலமாய் வழக்கம். நீ ஹாஸ்டலிலேயே தங்கிப்படிப்பதால் இந்த மாதிரி சின்ன ஊர்களுக்கு அதிகம் வந்திராததால் இதைப்பற்றி இதுவரை தெரிந்து கொள்ளவில்லை.”
“ஹ்ம்ம்…என்ன வழக்கமோ? தெய்வம் தன் இடத்தை விட்டு இப்படி வெளியே ஊர்வலம் வருவது என்பது விசித்திரமாய் இருக்கு அக்கா”
வெறுப்பும் வியப்புமாய் ரவி சொல்லிவிட்டு நகர்ந்தான்.
மறு நாள் மாலை.
அம்மன், தன் பக்தர்கள் புடை சூழ, ஊர்வலம் செல்லத் தயாரானாள்.
மேளதாளசத்தங்கள் காதைப்பிளந்தது.
ரவி மாடி அறையில் படித்துக் கொண்டிருந்தவன் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வாசலுக்கு வந்தான்.
அவன் அக்காவும் அவள் கணவரும் ஒருதட்டில் தேங்காய் பழம் கற்பூரம் வைத்துக் கொண்டு தயாராக நின்றனர்.
“வா ரவி..இப்படி வந்து நில்லு…அம்மன் ஊர்வலம் பாக்கலாம்” என்று தம்பியை ஆசையாய் அழைத்தாள் நீரஜா.
“அக்கா! நான் ஊர்வந்த இந்த ஒரு வாரத்துல ஒரு டஜன் டைம் கோயிலுக்குப்போயி அம்மனை வணங்கி வந்திருக்கேன்…என்னவோ புதுசா நான் பாக்க போறேனாக்கும்? இப்படி சந்நிதான தெய்வத்தை சாலைக்குக் கொண்டு வருவது எனக்கு சுத்தமாய் பிடிக்கல”
அம்மன் வீட்டுவாசலுக்கு வந்தது.
அப்போது..எதிர்வீட்டில் திடீரென நான்கைந்து பேராய்ச் சேர்ந்து உள்ளே ஓடித்திரும்ப வந்தார்கள். “மெல்ல மெல்ல…ஆங்..அப்படித்தான்… எங்க சப்போர்ட்டுல நிதானமா அடி எடுத்து வைங்க.. வாங்க.. வாங்க..” என்று சொல்லியபடி கைத்தாங்கலாய் ஒரு வயதான பெரியவரை தூக்கிப்பிடித்தபடி வாசலுக்கு வந்தனர்.
ரவி அவரையே கவனித்தான். இரண்டு கால்களும் துவண்டு கிடக்க கைகளும் சுவாதீனமற்று ஏதோ பெயருக்குத் தொங்கிக் கொண்டு இருந்தது.
“போன வருஷம் வரை நல்லாத்தான் இருந்தார்.. திடீர்னு பக்கவாதம் வந்து கைகால் சுவாதீனமே இல்லாம போயிடிச்சி பாவம்.. ஒருநாளும் அம்மனைப்பார்க்கா பச்சைத்தண்ணீ குடிக்காதவர். அந்த சோகத்துலயே இளைச்சி துரும்பா போயிட்டார். இவரை மாதிரி உடம்பு முடியாதவங்களுக்காகத்தான் தெய்வமே தேடிகிட்டு தெருவுக்கு வருது! தாத்தா! நல்லா அம்மனைக் கும்பிட்டுக்குங்க…” யாரோ உரக்க சொன்னார்கள்.
ரவிக்கு இப்போது புரிந்தது.
தொடர்புள்ள சிறுகதைகள்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது…!
வளர்கவி
November 1, 2026
எது நிஜம்? எது மாயை?
இளையவேணி கிருஷ்ணா
November 1, 2026
கல்விக்கண்
நெல்லை அன்புடன் ஆனந்தி
October 29, 2026