பத்திரமா திரும்பி வா, கார்த்திக்
கதையாசிரியர்: நஞ்சப்பன் ஈரோடு
கதைத்தொகுப்பு:
அறிவியல் புனைவு
கதைப்பதிவு: November 4, 2026
பார்வையிட்டோர்: 110

2068 ஏப்ரல் 19 அன்று மாலை 5:23 மணிக்கு, கமாண்டர் கார்த்திக் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்கலத்தில் புறப்பட்டார். செவ்வாய் கிரகத்தில் சிக்கித் தவிக்கும் 2,000 பேருக்கு உணவும் மருந்துகளும் கொண்டு சேர்க்கும் முக்கியமான பணிக்காக. அடுத்த சில நாட்களில் அவருக்கும், புதிதாகத் திருமணமான அவருடைய மனைவி ப்ரியாவுக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட குறுஞ்செய்திகள் இவை.
நாள் 2 | காலை 6:45
குட் மார்னிங், கார்த்திக்.
நாள் 2 | காலை 7:03
குட் மார்னிங், ப்ரியா. இங்கிருந்து பார்த்தா பூமி ஒரு கோலிக்குண்டு மாதிரி தெரியுது. ரொம்ப அழகான, ரொம்ப தூரத்துல இருக்கற கோலிக்குண்டு.
நாள் 2 | காலை 7:21
கவிதை எல்லாம் இருக்கட்டும், கார்த்திக். ஏன் இவ்வளவு லேட்டா பதில் குட் மார்னிங் சொல்றே?
நாள் 2 | காலை 7:39
நான் தான் சொன்னனே? நான் இருப்பது 22 கோடி கிலோமீட்டர் தொலைவில். உன்னுடைய ஒவ்வொரு மெசேஜூம் எனக்கு வந்து சேர 18 நிமிஷம் பிடிக்கும். .
நாள் 2 | காலை 8:18
உன்னை ரொம்ப மிஸ் பண்றேன், கார்த்திக். பத்திரமா திரும்பி வா.
நாள் 2 | காலை 8:36
கண்டிப்பா. லவ் யூ.
. . .
நாள் 3 | காலை 10:20
என்ன பண்றே, கார்த்திக்? உன் விண்கலம் எப்படி இருக்கு?
நாள் 3 | காலை 10:39
அமைதியா இருக்கு. எல்லாத்தையும் ஆட்டோபைலட் பாத்துக்குது. இப்போதைக்கு என் முக்கிய வேலை, பிளாஸ்டிக் பாக்கெட்டிலிருக்கும் சாப்பாட்டைச் சாப்பிடறதும், உன் சமையலை மிஸ் பண்றதும் தான்.
நாள் 3 | காலை 10:57
நேத்து ராத்திரி ரசம் வெச்சேன். வீடு முழுக்க வாசனை.
. . .
நாள் 5 | மதியம் 2:15
நீ நல்லா இருக்கியா ப்ரியா? நேத்து பூரா மெசேஜே பண்ணலையே.
நாள் 5 | மதியம் 2:34
கொஞ்சம் சோர்வா இருந்தது. அம்மா ஒழுங்கா சாப்பிடுன்னு திட்டிக்க்கிட்டே இருக்காங்க.
நாள் 5 | மதியம் 2:52
ஒரு தடவையாவது உன் அம்மா சொல்றதைக் கேளு.
. . .
நாள் 6 | காலை 7:30
ப்ரியா, உடம்பு சோர்வெல்லாம் போயிடிச்சா?
நாள் 6 | காலை 7:49
இன்னைக்கு டாக்டர் கிட்ட போறேன். வந்து சொல்றேன்.
நாள் 6 | காலை 8:07
வெளியில வந்ததும் உடனே சொல்லு. நான் திரையையே பாத்துக்கிட்டு இருப்பேன்.
. . .
நாள் 8 | காலை 11:42
கார்த்திக், ஒரு செய்தி. நீ உட்கார்ந்து அமைதியா கேக்கணும். உட்கார்ந்திருக்கியா?
நாள் 8 | மதியம் 12:01
விண்கலத்தில் நான் எடையில்லாத நிலையில மிதந்துகிட்டு இருக்கேன். உட்காரல்லாம் முடியாது. சொல்லு.
நாள் 8 | மதியம் 12:19
நான் உண்டாகி இருக்கேன். எட்டு வாரம்.
நாள் 8 | மதியம் 12:38
சூப்பர்! ரொம்ப சந்தோஷமா இருக்கு. கொஞ்சம் அழுகையும் வருது.
நாள் 8 | மதியம் 12:56
நீ அப்பாவாகப் போற. டிசம்பர் கடைசில.
நாள் 8 | மதியம் 1:15
டிசம்பரா? ஹ்ம்ம்… அடுத்த ஏப்ரல்ல தானே நான் திரும்பி வருவேன். எல்லாத்தையும் தவற விடப் போறேன்.
நாள் 8 | மதியம் 1:33
கவலைப்படாதே. அவ முதல் அடி எடுத்து வைக்கறதுக்கு முன்னாடியே நீ வீட்டுக்கு வந்துடுவ.
நாள் 8 | மதியம் 1:51
அவளா? அதுக்குள்ள முடிவு பண்ணிட்டியா?
நாள் 8 | மதியம் 2:09
எனக்கு ஒரு உள்ளுணர்வு. என் உள்ளுணர்வு பொய்யானதே இல்லை.
நாள் 8 | மதியம் 2:28
அப்போ அவளுக்கும் உன் பிடிவாதம் இருக்கும். பிரபஞ்சம் தான் நமக்குத் துணை.
. . .
நாள் 9 | காலை 9:12
இன்னைக்குக் காலையில முதல் ஸ்கேன் செய்வதற்கு போயிட்டு வந்தேன். இப்போ ஒரு நாவல் பழம் சைஸ்ல இருக்கா உன் பொண்ணு.
நாள் 9 | காலை 9:31
படத்தை அனுப்பு. என் நாவல் பழத்தைப் பாக்கணும்.
நாள் 9 | காலை 9:49
அனுப்பிட்டேன். அப்புறம் டாக்டர் சொன்னாங்க, நான் கண்டிப்பா காலை உணவு சாப்பிடணும்னு.
நாள் 9 | காலை 10:08
நான் நாலு மாசமா இதைத்தானே சொல்லிக்கிட்டு இருக்கேன்.
. . .
நாள் 10 | இரவு 7:44
பேரைப் பத்தி யோசிச்சுக்கிட்டு இருந்தேன். அருள்மொழி. அருள்னா கருணை.
நாள் 10 | இரவு 8:03
அருள்மொழி கார்த்திக். சத்தமா சொல்லிப் பாரு.
நாள் 10 | இரவு 8:21
அவளோட ரூமைப் பத்தி நினைச்சுக்கிட்டிருந்தேன்… மனசுக்குள்ள மஞ்சள் நிறம் அடிச்சு வெச்சிருக்கேன்.
நாள் 10 | இரவு 8:40
மஞ்சள் தான் சரி. கதகதப்பா இருக்கும், கண்ணை உறுத்தாது. அவளுக்குப் பிடிக்கும்.
. . .
நாள் 13 | காலை 8:15
தூக்கமே வரல. நீ 22 கோடி கிலோமீட்டர் தூரத்துல இருக்கும்போது ஏதாவது தப்பாப் போயிட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.
நாள் 13 | காலை 8:34
எதுவும் தப்பாகாது ப்ரியா. எல்லாரோட வாழ்த்தும் நமக்கு இருக்கு.
. . .
நாள் 16 | மாலை 3:22
மயிலாப்பூர்ல பள்ளிக்கூடம் பக்கத்துல ஒரு ஃபிளாட் பாத்தேன். மூணு படுக்கையறை. ஒண்ணு அவளுக்கு, ஒண்ணு உன் புத்தகங்களுக்கு. அப்புறம் என்ன தெரியுமா?
நாள் 16 | மாலை 3:41
என்ன?
நாள் 16 | மாலை 3:59
அவளோட அறை ஏற்கனவே மஞ்சள் பெயிண்ட் அடிச்சு இருக்கு!
. . .
நாள் 18 | காலை 11:05
கார்த்திக், பெரியவளானதும் அவ விண்வெளி வீராங்கனை ஆகணும்னு சொன்னா என்ன பண்றது?
நாள் 18 | காலை 11:24
அப்போ நாம பெருமைப் படுவோம், பயமும் படுவோம். பெரும்பாலும் பயம்தான்.
நாள் 18 | காலை 11:42
நல்லது. இவ்ளோ நாளா நான் எப்படி உணர்ந்தேன்னு இப்பவாவது உனக்குப் புரியும்.
. . .
நாள் 20 | இரவு 9:50
இன்னைக்கு அவ முதல் தடவையா உதைச்சா. எதிர்பாக்கவே இல்ல. உண்மையாவே அழுதுட்டேன்.
நாள் 20 | இரவு 10:09
நீ அழுதியா?
நாள் 20 | இரவு 10:27
ஆச்சரியப்படற மாதிரி நடிக்காத. என்னாலயும் அழ முடியும்.
. . .
நாள் 22 | மதியம் 2:14
அம்மா வெண்பொங்கல் செஞ்சாங்க. இது குழந்தையை அமைதிப்படுத்தும்னு பிடிவாதமா சொல்றாங்க. உயிரியல் அப்படி வேலை செய்யாதுன்னு சொன்னேன்.
நாள் 22 | மதியம் 2:33
வெண்பொங்கல் விஷயத்துல அம்மா கூட சண்டை போடாத ப்ரியா. யாரும் ஜெயிக்கவே முடியாது.
. . .
நாள் 25 | காலை 8:07
எனக்குப் பயமா இருக்கு கார்த்திக். எல்லாம் நல்லபடியா நடக்கும்னு சொல்லு.
நாள் 25 | காலை 8:26
எல்லாம் நல்லபடியா நடக்கும். சத்தியமா. நீ எதிர்பாக்கறதுக்கு முன்னாடியே நான் வீட்டுக்கு வந்துடுவேன்.
. . .
இந்தக் கதையை முடிக்கு முன் நாம் இரண்டு வாரங்கள் பின் செல்ல வேண்டியிருக்கிறது. பணியின் 9-ஆம் நாளன்று, கமாண்டர் கார்த்திக் தன் திட்ட இயக்குநருக்கு இந்த அவசரச் செய்தியை அனுப்பினார்:
நாள் 9 | காலை 11:55
ஆக்சிஜன் ரிலேயில் கூலன்ட் கசிவு. ஆக்சிஜன் வேகமாக் குறையுது. எனக்கு மிஞ்சிப்போனா இருபது நிமிஷத்துக்குத் தான் காற்று இருக்கு.
விண்கலம் ஆட்டோபைலட்ல இருக்கு. அதுக்கு என் உதவி தேவையில்ல. திட்டமிட்ட நேரத்துக்குச் செவ்வாயை அடைஞ்சுடும். சரக்கு போய்ச் சேர்ந்துடும்.
உங்ககிட்ட நான் கேக்கறது ஒண்ணே ஒண்ணுதான்.
என் சார்பாக ப்ரியாவுக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்ப AI ஏஜென்ட் ஒன்றை தயார் செய்து விட்டேன். அவள் கர்ப்பமா இருக்கா. இந்தச் செய்தியை இப்போ அவளால தாங்கிக்க முடியாது. குழந்தை பிறக்கற வரைக்கும் தயவுசெஞ்சு அவகிட்ட சொல்லாதீங்க.
விடைபெறுகிறேன். எல்லாத்துக்கும் நன்றி.
![]() |
பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான். அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
The 361st Degree
வேங்கடேஷ் புருஷோத்தம்
August 19, 2026
மறக்கப்பட்ட போட்டிக்கு AI கொடுத்த உயிர்
நஞ்சப்பன் ஈரோடு
August 10, 2026
அந்த வீட்டின் கதவைத் திறக்காதீர்கள்
நஞ்சப்பன் ஈரோடு
March 15, 2026
