கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 7, 2026
பார்வையிட்டோர்: 91 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வண்டிக்காரத் தேவருக்கு வழக்கம் போலில்லை மனசு. இண்ட முள் செடியில் கால் வைத்த மாதிரி ஒரு காந்தல். பூ முட்கள் குத்தின வலி. தாங்க முடியாத வலி ஒன்றும் கிடையாது. ஆனால், மனநிம்மதியைக் கிழித்து நாசம் பண்ணுகிற வேதனை. 

‘இப்படியும் ஒரு பயலுக்குப் புத்தி போகுமா? இம்புட்டு அற்பத்தனம் இந்தப் பயகிட்டே இருந்துருக்கா…? ச்சே…’ 

குடிகாரன் வார்த்தை மாதிரி இந்த நினைப்புத் திரும்ப, திரும்ப அவருள். புண்ணைச் சுற்றுகிற ஈ மாதிரி, சள்ளை பிடித்த இந்த நினைப்பிலிருந்து தப்பிக்கவும் முடியவில்லை வண்டிக்காரத் தேவருக்கு. 

இந்நேரத்துக்கு ஒரு உறக்கம் போட்டு முழித்திருப்பார். இன்றைக்கு என்னடாவென்றால்… பொட்டென்று இமை மூடவில்லை. உறக்கம் கிட்டத்தில் அண்டவே மாட்டே னென்கிறது. 

மாடுகள் தன்னடையாய் நடக்க, வண்டிப் பைதாவின் ‘டொடக், டொடக்’ என்கிற ஒரு சத்தம். வண்டிச் சட்டத் தில் பருத்தி விதை மூட்டை. அதன் மேல் வைக்கோல் திணித்த சாக்கு மெத்துமெத்தென்று. அதில் படுத்திருக்கிற தேவருக்கு மேல் விரிந்து கிடக்கிற இருட்டு வானம். சிதறிக் கிடக்கிற நட்சத்திரப் பருக்கைகள். புகலிடமற்ற தூசி மேகங்கள் கிழிந்து கிடக்கிற ஒளித் துணிகளாக திட்டுத் திட்டாய்… 

எப்போதாவது கீச்சென்று அலறிக் கொண்டு பறக்கிற ராக்குருவி. சத்தமில்லாமல் கிட்டத்தில் வந்து விட்டு, பதற்றத்தோடு விர்ரென்று பறக்கிற குருட்டு வௌவால். 

பாரவண்டி. நீளவாக்கில் ரெண்டு தேக்குவாரிகள். அதன் குறுக்காக மூட்டைகள். அரிசி மூட்டை, புண்ணாக்கு மூட்டை, பலசரக்கு மூட்டைகள் எல்லாம் கீழ் வரிசையில். வெல்ல மூட்டைகள், பருத்தி விதை மூட்டை கள், தேங்காய் மூட்டைகள் எல்லாம் மேல் வரிசையில், போட்டு இறுக்கிக் கட்டப்பட்டிருந்த பாரக்கயிற்று இடைவெளியில் எண்ணெய் டின்கள், கூடைகள், பழத்தார், இன்னும் பொடி பொட்டுச் சாமான்கள். 

எல்லாச் சாமான்களையும் பாரமேற்றி, கட்டிமுடித்து, அரிக்கேன் லைட்டை அடியில் கட்டி உண்டு முடித்து விட்டு ராசபாளையத்தில் மாட்டைப் பூட்டினால்…வண்டி தன் போக்கில் நகரும். இவர் பாட்டுக்கு நீட்டி நிமிர்ந்து படுத்து விடுவார். ஹெட்லைட் வெளிச்சத்துக்கு விலகி விலகி ரோடேறிக் கொள்கிற பழக்கம், மாடுகளுக்கு. தார் ரோட்டில் பைதா பதிகிற சத்தமும், ‘டொடக், டொடக்’ என்கிற குடத்தின் சத்தமும், மாட்டுச் சலங்கைகளின் ஒரு சீரான சிரிப்பும், தார்ரோட்டில் மோதி எழுகிற மாட்டுக் குளம்புகளின் ஓசையும் ஒன்று கலந்து, பின்னிப்பிணைந்து சங்கீதமாய்க் கலவை பெற… அதன் மயக்கத்திலேயே மனுஷர் அம்சமாய்க் கண்ணயர்ந்து விடுவார். ரோடுகளில் ஓடியலைந்து மூட்டை சுமந்த அலுப்பு. 

சந்திரப்பட்டிக்கு வந்து சேரவும், அவருக்கு விழிப்புத் தட்டிவிடும். வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு இறங்குவார். ராவுத்தர் கடையில் டீ சொல்வார். அதற்குள் ஒரு இனிப்புப் போண்டாவையும், முறுக்கையும் நொறுக்கி உள்ளே தள்ளிக் கொள்வார். வெத்தலை பாக்கு வாங்கிக் கொண்டு வண்டிச் சட்டத்தில் ஏறிக் கொள்வார். அவர் ‘தம்ம்’ பிடித்து ஏறுகிற சத்தத்திலேயே மாடுகள் கிளம்பி விடும். 

சங்கம்பட்டியைத் தாண்டுவதற்குள் உறங்கி விடுவார். அப்புறம் கரிசல் குளம் வந்துதான் விழிப்பு. கண்மாய்ப் பட்டி வரைக்கும் பாதை மோசம். கிடங்குகளும் நொடிகளு மாய்க் கிடக்கும். கைக்குள் கயிறை வைத்துக் கொண்டு கண் விழிப்பாய் ஓட்டணும். கொஞ்சம் அசந்து விட்டால் கூட ‘குடை வண்டி’ தூக்கிப் போட்டு விடும். கதை கந்தலாகிப் போகும். 

கண்மாய்ப்பட்டி கடந்து விட்டால் ஊர் வரைக்கும் ஒரே தூக்கம் தான். 

அப்படித் தூங்குகிற தேவர்தான், இன்றைக்குக் கண்ணை மூடாமல் வண்டியில் கிடக்கிறார். பின்னோக்கி நகரும் நட்சத்திரங்களின் சிமிட்டல்களைக் கூட கவனிக்க முடியாமல், மனம் முழுக்க அந்தச் சனியன் பிடித்த நினைப்பு. 

சின்னையாத்தேவர் நல்ல பாட்டாளி. மாடு வண்டி வைத்துச் சம்சாரித்தனம் செய்கிறவர். ராவ்வும் பகலுமாய் முரட்டுப்பாடாய்ப் பாடுபடுகிறவர். வஞ்சனையில்லாமல் சாப்பிடுவார். கும்பா நிறைய கட்டிக் கம்பஞ்சோற்றை வைத்துக் கொண்டு பிய்த்து உருட்டி விழுங்குவார். அப்புறம் ஒரு கும்பா கரைசலாய்க் கரைத்துக் குடிப்பார். நல்ல விரிந்த தேகக்கட்டு. அகலமுதுகு. எலும்பு தெரியாத சதைத்திரட்சி. சதையும் வைரம் பாய்ந்து உருளைக் கட்டையாய் நகர்ந்தலையும். 

காடுகரை உண்டு, பாடு ஜோலி உண்டு என்று கிடந்த சின்னையாத்தேவர் வேறு எங்கும் போனதேயில்லை. வருஷத்துக்கொரு தடவை மிளகாய் வத்தல் விற்கப் போய் வருகிற சங்கரன் கோவில், அவரைப் பொறுத்தமட்டில் வேறோர் உலகம். 

அப்படி… குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண் டிருந்த சின்னையாத்தேவரை உள்ளூர்க் கடைக்காரன் ராமசாமிதான் மெள்ளச் சிம்பி விட்டான்… 

“அண்ணாச்சி… ராசபாளையத்துக்கு வண்டி போடுதீகளா?” 

“எதுக்கு?” 

“கடைப்பாரத்துக்கு…” 

“வேண்டாமய்யா. உண்டான பாடு சோலிகளைப் பார்த்துக்கிட்டுக் காட்டைக் காத்துக்கிடந்தா… போதும்.” 

“உண்டான பாடுசோலிகளை யாருவிடச் சொன்னது? பாருங்க… வாரத்துக்கு ஒரு நா மட்டும் வண்டியைப் போடுங்க. வர்ற வாடகை வெவசாயச் செலவுக்கு ஆகும்லே?” 

“அம்புட்டு வாடகைக்கு… பாரம் கெடைக்காதுப்பா…” 

“என்னண்ணாச்சி அப்படிச் சொல்லிட்டீக? நம் மூர்லே ஆறு கடைக்காரங்க இருக்காங்க. ராசபாளையம் சந்தைக்கு வருவாக. பாரம் போடாம எப்படிக் கொண்டாந்துர முடியும்?” 

“அவுகளைத் தொண்ணாந்துக்கிட்டுத் தானே திரியணும்? அந்தப் பொழைப்பு நமக்கு வேண்டாமப்பா…” 

“அதென்ன அப்படிச் சொல்லுதீக? கடைக்காரங்க வாங்குன சரக்கை ஊரு கொண்டுவந்து சேக்க வழியில்லாம முழிச்சிக்கிட்டிருக்காங்க. அவங்கதான் உங்களை தொண்ணாந்துக்கிட்டு அலையணும்…” 

“அப்படியா சொல்றே? வண்டியடிக்கலாம்ங்குறீயா?” 

“நானாச்சு. என்ன நம்பி வண்டி போடுங்க. மத்ததை நா பாத்துக்கிடுதேன்…” 

அப்படி வண்டி போட்டவர் தான் சின்னையாத்தேவர். மழைக் காலம், பனிக்காலம் எதுவானாலும் சரி… தவறாமல் பதிவாய் வண்டியடித்தார். வாராவாரம் வியாழக்கிழமை வரத் தவறினாலும் தவறிப் போய் விடும். இவரது வண்டி ராசபாளையம் சந்தைக்கு வருவது தவறுவதேயில்லை. 

நாளாவட்டத்தில் சின்னையாத்தேவர் என்கிற அம்மா அய்யா வைத்த பெயர் மறந்து போய்… அவரே உண்டாக்கிக் கொண்ட ‘வண்டிக்காரத்தேவர்’ என்கிற பெயரே நிலைத்துப் போய் விட்டது. 

எல்லாக் கடைக்காரர்களும் சரக்குகளை வாங்கி வண்டிக்கருகில் கொண்டு வந்து சேர்த்து விடவேண்டும். ராமசாமிக்கு மட்டும் தனிச் சலுகை. பாதை போட்டுக் காட்டியவனல்லவா! 

ராமசாமி என்றால் இவருக்குத் தனிப்பாசம். வயசில் சின்னவன்தான். முப்பது முப்பத்தொன்று தான் இருக்கும். நல்ல விவரக்காரன். நல்ல மனசுக்காரன். ஏவாரிக்குரிய கள்ளத்தனம், கபடுசூது இருக்காது. 

ஊரிலிருந்து கலிங்கப்பட்டி ரெண்டரை மைல். சைக்கிளை அங்கே நம்பிக்கையாக ஓரிடத்தில் போட்டு விட்டு பஸ் ஏறி ராசபாளையம் வரணும். வந்து சேர்ந்து விட்டால் போதும், சாக்குக் கட்டும் டின்னுமாய் அவன் பின்னாலேயே ‘லொக் லொக்’ என்று அலைவார். 

வெல்லக்கடையில் விலை ‘திகைந்த’வுடன் அவர் தான் சாக்குப் பிடிப்பார். பலசரக்குக் கடையில் இவன் சிட்டை சொல்லி விட்டு போய் விட வேண்டியது. அவர்தான் கடுகு, சீரகம், பருப்பு அயிட்டம் எல்லாத்துக்கும் பை பிடித்து, கழுத்துக்கட்டு கட்டி, மூட்டையாக்கி தைத்துப் போடுவார். எல்லா மூட்டைகளையும் இவரே தூக்கிக் கொண்டு வந்து வண்டியில் சேர்த்து விடுவார். தூக்குக் கூலி என்று அஞ்சுபைசா செலவுக்குக் கூட வழி வைக்க மாட்டார். 

அவன் வந்து விட்டால்… இவருக்கும் சல்லிக்காசு செலவிருக்காது. டீ, வெத்தலை பாக்கு எல்லாம் அவனே வாங்கிக் கொடுத்து விடுவான். மதியச் சாப்பாடு ‘சிங்க விலாஸ்’ கிளப்கடையில். முட்டை, மீனோடு சாப்பாடு வயிறுமுட்ட. ரெண்டு கும்பா கம்பஞ்சோற்றை விழுங்குகிற தேவருக்கு இந்த சிங்கவிலாஸ் சாப்பாடும், பொரிக்கறி வகைகளும், மீன் ருசியும் தேவாம்ருதமாயிருக்கும். சோற்றை கொண்டா கொண்டா’ என்று இழுக்கும். எல்லாம் அவன் செலவுதான். 

‘அவன் துட்டு விஷயத்துலே கணக்கு வழக்கே பாக்க மாட்டான். செலவழிக்கிறப்பவும் ‘இம்புட்டுக் காசு பணம் கரையுதே’ன்னு நினைக்க மாட்டான். மனுசத் தரத்தை மட்டும்தான் மதிப்பான்.’ 

இதுதான் வண்டிக்காரத் தேவரின் மனசுக்குள் உட் கார்ந்திருக்கிற மதிப்பு. ராமசாமி மீது இவருக்குத் தனிப் பாசம் வருவதே இதனால்தான். 

“இந்த உலகத்துலே மனுசனை மனுஷனா எவன் மதிக்கான்? அணா பைசாவா கூலிக்காரனா கால்லே ஒட்டுன தூசி துரும்பாத்தானே நெனைக்கான்? அம்புட்டுத் தூரத்துக்கு எல்லாப் பயலுக மனசும் காய்ஞ்சு கனல் பறந்து போய்த்தானே கெடக்கு! மனுஷனை மனுஷத் தரத்தோட மதிக்கிறதுக்கு மனசிலே ஈரம் இருக்கணும்லே? ஏவாரியாயிருந் தாலும் ராமசாமிகிட்டே அந்த ஈரம் இருக்குல்லே…” என்று தேவர் சத்தம் உயர்த்திக் கேட்கிற போது, அவரது நெஞ்சு உடைந்து, சத்தம் நெகிழ்ந்து கரகரத்து விடும். கண்ணோரங் களில் மனநெகிழ்வு நீர்த் துளியாய் முகம் காட்டும். தார்ப்பாய்ச்சி வேட்டி கட்டிய வெற்றுடம்பில் ரோமங்கள் சிலிர்த்து அடங்குகிற உணர்ச்சிப் பரவசம் மின்னி மறையும். 

மற்ற கடைகளில் மூட்டைகளை இறக்கிப் போட்ட கையோடு வாடகையைக் கணக்குப் பார்ப்பார். கசறுவார். ‘அம்புட்டு இம்புட்டு’ என்று அழிச்சாட்டியம் பண்ணுவார். 

“இப்படித்தான் ராமசாமி கடையிலேயும் செய்வீரா?” 

“அது கதையே வேற. நீ ஓங்கணக்கைப் பாரு” என்பார் கட்டன்ரைட்டாக. 

ராமசாமி கடைக்குப் போனால்… நிஜமாகவே கதை வேறுதான். மூட்டைகளை இறக்குவார். பாரக்கயிற்றைச் சுருட்டுவார். அப்போதே ராமசாமி கலர் உடைத்துக் கொடுப்பான். 

“குடிங்க அண்ணாச்சி…” 

“ம்…” 

“இந்தாங்க, வாடகை ரூவா.” 

“சரி.” 

அப்படியே சுருட்டிய நிலையில் மடிக்குள் சொருகுவார். 

“எம்புட்டுன்னு எண்ணிப் பாருங்க.” 

“என்னத்துக்கு அதெல்லாம்?” 

கணக்கே பார்க்கமாட்டார். கணக்குப் பார்ப்பது அவன் மனசை இழிவுபடுத்துவது போல். அந்த உறவைக் காறித்துப்புவது போல. அப்படித்தான் தேவர் நினைப்பார். 

அது மட்டுமல்ல… அந்தக் கடையே தன் கடை போல நினைப்பார். ஊருக்குச் சாமி கும்பிட வெளியூர்க் கூட்டம் வரும். அதை நைஸ் பண்ணிப் பேசி, ராமசாமி கடைக்கு கொண்டு வந்து விடுவார், சாமான்கள் வாங்க. 

கல்யாணம், சடங்கு போன்ற நல்லது நடத்துகிற குடும்பத் தாட்களிடமும் ராமசாமி பெருமை பேசி, குழை யடித்து… ராமசாமி கடையிலேயே சரங்கு வாங்கி விடச் செய்வார். மூட்டைகளைத் தூக்கிப் போடுவது போன்ற முரட்டு வேலைகளில் கணக்கு வழக்கில்லாமல் உதவி செய்வார். 

இவரது சொந்தக்காரர்கள் தேவரை ரொம்ப இளப்ப மாய் நினைத்துக் கேலி பண்ணுவார்கள். 

“இந்தா, ஒனக்கென்ன கோட்டியா? இப்படி ராமசாமி கிறுக்குப் பிடிச்சுப் போய் திரியுரியே, என்ன சோலிக்கு? கடைவெச்சுக் கொள்ளையடிக்கிற ஏவாரி. அவனுக்கு நீயென்ன சப்போர்ட்டு?” 

அவர்களை அலட்சியமாய்ப் பார்ப்பார். ‘கிணற்றுத் தவளைகளாய்க் 

கிடந்து பழமையில் ஊறிக் கிடக்கிறீர்களே…’ என்கிற பரிகாசத் தொனியில் பார்ப்பார். அதே பரிகாசத்தோடு ஒரு சிரிப்பு வேறு. 

“அண்ணன் தம்பிகளுக்குள்ளேயே ஆயிரம் சண்டைச் சத்தம், பங்காளிக் காய்ச்சல், வெட்டுக்குத்து வெவகாரங்க. இப்பேர்ப்பட்ட ஒலகத்துலே ஒத்துமையும் பாசமும் எங்கிட்டு இருந்து வந்துரும்? சொல்லுங்க” என்று ஆவேசமாய் கேள்வி கேட்கிற தேவர், சட்டென்று குரலை மிருதுவாக்கித் தணிந்த கனிவோடு சொல்வார்: 

“அவன் ஏவாரிதான். ஆனா, கணக்குப் பாக்காத பாசக் காரன். மனுசனை மனுசனா மதிக்கிற மனுசன். அது தானய்யா முக்கியம். பெருசா பேச வந்துட்டாக…போங் கய்யா” என்று பரிகாச உச்சமான சிரிப்போடு முடிப்பார். 

அப்படிச் சொல்கிற போது அவரது நெஞ்சு ரொம்பக் கம்பீரமாய் நிமிரும். வெற்றிலைக் காவியேறிய உதடுகளில் பெருமிதப் புன்னகை ஒளி வீசும். கண்களில் ஒரு புதிய உலகை- உறவைக் கண்டுவிட்ட பூரிப்பு… 

எல்லாவற்றையும் பொய்யாக்கி விட்டானே பாவி ராம சாமி… இதை நினைக்க நினைக்க வண்டிக்காரத் தேவருக்குள் பூ முள்ளின் நறுக், நறுக். 

வண்டி சத்திரப்பட்டிக்கு வந்தது. வழக்கம் போல மாடுகளே ஓரங்கட்டி நின்றன. தேவருக்கு மனநிலை சரியில்லை. டீ குடிக்க விருப்பமில்லை. 

வலத்து மாட்டை சுண்டிப் பிடித்து இடத்து மாட்டைப் பத்தினார். மாடுகள் புரியா தன்மையோடு வாலைச் சுழற்றிக் கொண்டு அரை மனசாய் தார் ரோட்டில் கால் வைத்து நடந்தன. ராவுத்தர் கடையைத் தாண்டி வண்டிப் பைதாக்கள் நெறுநெறுப்பாய் உருண்டன. 

சரக்குகளையெல்லாம் வாங்கி முடித்து, கணக்கு வழக்குகளைக் கண்டு கழித்து, கச்சாத்துச் சிட்டைகளைத் தேவரிடம் ஒப்படைத்து விட்டு ராமசாமி பஸ் ஸ்டாண் டுக்குப் போய் விட்டான்… நாலு மணி பஸ்ஸுக்கு 

ராமசாமி போன பிறகு கொஞ்ச நேரம் கழித்துத்தான் தேவர் தேடிப் பார்த்தார். பருத்தி விதை மூட்டைகளுக்கான கச்சாத்துச் சிட்டை இல்லை. பச்சை மையில் அச்சடித்த பில்தான் விதைக்கடை பில். 

“அட இழவே, சிட்டை இல்லாம வெதை மூட்டை களைத் தூக்க விடமாட்டானே வெதைக் கடைக்காரன். இப்ப என்ன செய்ய?” என்று ஒரேயடியாகப் பரபரத்தார். வேறு வழியில்லை. லொக் லொக்கென்று ஓட்டமும் நடை யுமாய் பஸ் ஸ்டாண்டை நோக்கிப் பாய்த்தார். சந்தைக் கூட்டம். கூடுதலான ஜனசந்தடி. கடந்து போவதே பெரும்பாடு. 

பஸ் புறப்படுவதற்குள் போய் ராமசாமியைப் பிடிச்சா கணுமே. நடையை எட்டிப் போட்டார். தார்ப் பாய்ச்சிய வேட்டி. தலையில் வட்டக் கட்டாகத் துண்டு. வெற்றுடம் பில் வியர்வை வரிகள். தோளிலும் முதுகிலும் அப்பிக் கிடக்கிற சாக்குத் தூசிகளான மெல்லிய சணல் புள்ளிகள். 

நல்லவேளை… அந்த பஸ் நிற்கிறது. உள்ளே நிறைய ஆட்கள். கண்டக்டர் டிக்கெட் அடித்துக் கொண்டிருந்தார். பஸ்ஸுக்குள் ஏறிப் பார்த்தார். ராமசாமி மண்டையைக் காணோம். 

பஸ்ஸுக்கு வலதுபுறம் ராமசாமி பேசுகிற சத்தம். இறங்கி பஸ்ஸைச் சுற்றிப் போனபோது… 

வண்டிக்காரத் தேவரைப் பற்றிய பேச்சு. சட்டென்று இவருள் ஒரு நிதானம். உள்ளுக்குள் ஆர்வக் குறுகுறுப்பு… நின்று உன்னிப்பானார். 

“வண்டிக்காரத் தேவருக்கு நீ பாட்டுக்குச் செலவு பண்ணுதே… காபி, வெத்தலை, மீனோட சாப்பாடுன்னு திகிடு முகிடா செலவு பண்ணுதே… நாம பண்ற சில்லறை ஏவாரத்துக்கு இந்தச் செலவெல்லாம் கட்டுப்படியாகுமா? ரொம்ப இளிச்சவாய்த்தனமா இருக்கீயோன்னு நெனைக்கேன்…” 

இது மேலத்தெரு கடைக்காரன். அவருக்குள் ‘பக்… பக்’கென்கிற ஆவல் பரபரப்பு. என்ன பதில் சொல்வானோ என்கிற பதைப்பு… 

“யாருக்கு எப்படியோ… தேவரு என்னைப் பொறுத்த வரைக்கும் தங்கமான மனுசரு. அவரு வண்டி போடலேன்னா… நாம சரக்குகளைக் கடைக்குக் கொண்டு போக முடியுமா? ரொம்பச் சீரழிவாப் போயிருமே.” 

“அதுக்காக… இம்புட்டுச் செலவா? கட்டுப்படி யாகுமா?” 

“கட்டுப்படியாகாம் போவாது. நானும் நீ நெனைக்கிற மாதிரி இளிச்சவாயன் கிடையாது. காரியத்தோட தான் நா பழக்க வழக்கம் வெச்சிருக்கேன்.” 

“என்ன காரியம்? என்ன கணக்கு?” 

“நா போடுற மூட்டை முடிச்சுகளுக்குத் தூக்குக் கூலி கொடுத்து வண்டிக்குக் கொண்ணாந்தா எம்புட்டுச் செலவாகும்? தேவருக்குச் செலவழிக்கிறதை விட கூலி ரொம்பப் போயிரும்லே?” 

“அப்போ…ஓங்குடுமி ஆடுதுன்னா சும்மா ஆடலை? பாசத்துலே ஆடலே? காரியத்தோட, கணக்கோடதான் ஆடுது?” 

‘நா ஒண்ணும் கூறுகெட்டவனில்லை… விவரமானவன் தான்’ என்கிற சுயதம்பட்டமாய் ராமசாமி சொன்ன சொற்கள்… தேவருக்குள் நறுக் நறுக்கென்று இறங்கின. இண்ட முள் செடியில் கால் வைத்துவிட்ட மாதிரி திடுக் கிடலாய் வலியை உணர்ந்தார். 

பாசமும் உறவுமாய், குழைந்து கனிந்து அவருள் பிரமாண்டமாய்க் கொலுவிருந்த ஒரு மாய் பிம்பம் உடைந்து… நொறுங்கி… தூசிக்காடாய்… 

மனுசப் பயலோட மறுபக்கம் இம்புட்டு இருட்டா? இருண்ட வனமா? நரிகளும் ஓநாகம் காகங்களும் ஓலமிடுகிற தந்திர பூமியா? மனுசன் இம்புட்டு சூட்சுமமா? ச்சே! 

அவரது முட்டாள்தனமே அவரைப் பரிகசிக்கிற மாதிரி… அவரது அறியாமையே அவர் முன் நின்று கொண்டு திங்குபுங்கென்று ஆடுகிற மாதிரி… அவரே அவரை உணர்ந்த வேதனை உணர்ச்சி. 

‘ஒரு சின்னப் பயலைப் பத்திக் கூட எடை போடத் தெரியாத கோணத்தராசா இருந்துட்டோமே…’ என்கிற சுய பச்சாதாபம். 

எப்படித்தான் போய் ராமசாமியைப் பார்த்தாரோ… சிட்டையை வாங்கினாரோ… அவருக்கே தெரியாது. அவர் முகத்தில் ஒரு சவக்களை. 

கணக்குக்குள் பிடிபடாத மாய உறவு என்று நம்பி யிருந்தாரே… அவன் கணக்கோடுதான் இருந்திருக்கிறான். லாப நஷ்டம் கூட்டி பார்க்கிற தன்மைக்கேற்ற உறவாகத் தான் வைத்திருக்கிறான்… கணக்குப் பார்க்கிற இடத்தில் உறவுக்கு என்ன அர்த்தம்? 

நாம்தான் பேய்த்தனமா… இளிச்சவாய்தனமாய் இருந் திருக்கிறோம். கணக்கு வழக்குப் பார்க்காத பாசத்தோடு பாடுபட்டிருக்கிறோம். உறவு உறவு என்று ஏமாளித் தனமாய் உருகி வழிந்திருக்கிறோம்… அடச்சே! 

கீழராஜகுலராமனை வண்டி தாண்டிவிட்டது. அந்தஇருட்டிலும் தெரிகிற சிமிண்டாலைக் குழாய். பிரமாண்ட ராட்சஸ உலக்கையாய் வானைத் தொடுகிற குழாயில் புகைத் தொடர்கள். மேகச்சங்கிலிக் கோர்வை யாய்ப் புகைப்பயணம். நட்சத்திர வெளிச்சத்தில் கரும் பழுப்பாய் தெரிகிறது. கன்னி மூலைக்காற்று, புகையை வடகிழக்காய் தள்ளுகிறது. 

தேவர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டார். மனசின் ரணத்தை உரசி வந்த பெருமூச்சு. பூ முள்ளின் நமைச்சல். சள்ளை பிடித்த அதே நினைப்பு. 

‘சரி… விட்டுத் தள்ளு… இல்லைன்னு தெளிவாயிருச்சு. இனி உறவு, பாசம்னு நெனைக்குறதுலே என்ன அர்த்தம் இருக்கு? ரெண்டு கை தட்டுனாத்தானே சத்தம்? ஒரு கையிலே என்ன வரும்? அவன் கணக்கை பார்த்தான்னா… நாமளும் பாத்துட்டுப் போக வேண்டியதுதான். ‘தாயும் பிள்ளையும்னாலும் வாயும் வயிறும் வேற வேற’ன்னு சும்மாவா சொன்னாக? அனுபவிச்சுத்தான் சொலவடை சொல்லியிருக்காக… நாம அனுபவிச்சுத் தெரிஞ்சுக்கிட அம்பத்தஞ்சு வயசாயிருக்கு…’ 

அவரே அவருக்குள், ஆறுதலாய் நினைத்துக் கொண் டார். அதையும் மீறிக் கொண்டு முகம் காட்டுகிற கோபம். 

ரைட்… நாமளும் கணக்குப் பாத்துர வேண்டியதுதான். மனசுக்கு மனசு… 

மனசு… பாசத்துக்குப் பாசம்… கணக்குக்கு கணக்கு. அவன் விதைச்சதை அவனே அறுத்துக் கிடட்டும். 

மூட்டைகளை இறக்கி முடித்துவிட்டு, என்றைக்கு மில்லாத புதிசாய் “கணக்குப் பாரு” என்று சொன்னால் அவன் முகம் எப்படிப் போகும்? பேயறைஞ்ச முகமாய் எப்படி மாறும்? அதை நினைக்க நினைக்க அவருக்குள் திருப்தி. 

கணக்குப் பார்க்கிற அற்பத்தனத்தைப் பழிவாங்கி விட்ட நிம்மதி. மனிதன் போல வேஷம் போட்ட வியாபாரிக் குணத்தைக் குத்திக் காட்டிவிட்ட திருப்தி. 

டீ, காபி வாங்கித் தந்தால் வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டியது தான். சிங்கவிலாஸ் சாப்பாடும் வேண்டாம்… அவனும் தூக்குக் கூலி கொடுத்து மூட்டை களை வண்டிக்குக் கொண்டு வரட்டும். அவனுக்கென்ன தனிச்சலுகை? ஏவாரிக்கு என்னத்துக்குப் பாசம்? கணக்கைக் கட்டிக்கிட்டு அவனே மாரடிக்கட்டும்… 

கோபம் கோபமாகச் சீறுகிற நினைவுகள்… மாறி மாறி நினைத்து நினைத்து… மனசுக்குள்ளேயே பழி வாங்குவதில் ஒரு சந்தோஷம்… ஆறுதல். 

எல்லாக் கடைகளிலும் பாரம் இறக்கிப் போட்டு விட்டு ராமசாமி கடைக்கு வண்டி வந்து சேர்ந்தது. 

தேவரைப் பார்த்தவுடன் கடையை விட்டு வெளியே வந்த ராமசாமியிடம் வழக்கமான மலர்ச்சி இல்லை. “வண்டி வந்துருச்சா?” என்று கேட்கிற துள்ளல் இல்லை… அவன் முகம் வாடிக் கிடந்தது. 

அவன் பேசியதை இவர் கேட்டு விட்டார் என்பதை அவனும் உணர்ந்து கொண்டானோ…? வாடட்டும். உப்புத் தின்றவன் தண்ணீர் குடிச்சாகணும். மூட்டைகளை நிமிர்த்தி வண்டி நுனியில் நிறுத்தினார். முதுகைக் கொடுத்து ஏந்தி இழுந்தார். குவிண்டால் மூட்டையைத் திணுங்காமல் சுமந்து கொண்டு போய், உரிய இடத்தில் போட்டார். 

ஒன்றும் பேச்சில்லை. மன ஆழத்தின் உளைச்சல், மௌனமாய் அங்கே கால் நீட்டிப் படுத்திருந்தது. 

பாரம் இறக்கி முடிந்தவுடன் கலர் உடைத்துக் கொடுப் பான். மூஞ்சியில் அடித்த மாதிரி வேண்டாம் என்ற மறுத்துவிட வேண்டும். அதில் வைராக்கியமாய் இருந்தார். அந்த மாற்றத்திலேயே இவரது கோபத்தை அவன் புரிந்து கொள்ள வேண்டும். 

அரிசி மூட்டைகள் இறக்கிய பிறகு, வெல்ல மூட்டை கள். அப்புறம் விதை மூட்டைகள்… 

கடை வாசலில் ராமசாமி மகனின் சிணுங்கல். 

“ஸ்கூலுக்கு நேரமாச்சுப்பா… நோட்டு வேணும்பா.” 

“அம்மாகிட்டே வாங்கிக்கடா…’ 

“நீங்க சொன்னாத்தான் தருவாகளாம்பா.” 

“குடுத்துரம்மா… நோட்டைக் குடுத்துட்டு வீட்டுச் செலவு’ன்னு ஒரு லிஸ்ட் இருக்கே, அதுலே கணக்கை எழுதி வெச்சிரு…” 

தேவர் அதிர்ந்து போனார். பெற்ற பிள்ளைக்கு நோட்டு கொடுத்தால்… அதற்கும் கணக்கா? வீட்டுக்கு எடுக்கிற சாமான்களுக்கும் தனிக்கணக்கா? 

விதை மூட்டைக்கு முதுகைக் கொடுத்துக் கொண்டே ராமசாமியைப் பார்த்தார். 

இவன்… மனுசன்தான். ஏவாரி மனுசன். ஏவாரிக் கொணம் மட்டுமில்லே, அதோட சேர்ந்து மனுசக் கொணமும் உள்ளவன். வண்டிக்காரனை மனுசனா நெனைக்குற மனுசன். 

“யாருக்கு எப்படியோ…. தேவரு என்னைப் பொறுத்த வரைக்கும் தங்கமான மனுசரு…” அவன் சொன்ன குரல்… தங்கத்தின் அருமையை உணர்ந்திருக்கிறவன்தான். 

அவருள் நெருக்கடியான ஊசலாட்டம். சட்டென்று முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால், சட்டென்று முடிவுக்கு வந்தாக வேண்டிய நிலை. 

‘கணக்கை நம்பிப் பொழைக்குற ஏவாரிப் பொழைப்பு அவன் தொழில். அவன் இப்படித்தான் இருப்பான். இருக்க முடியும். அவனை மாதிரியே நாமும் இருந்தா எப்படி? உழைப்பை நம்பி வாழ்றவனும், கணக்கை நம்பிப் பொழைக்கிறவனும் சமமா? ஒண்ணா? உழைப்பு சூரியனைப் போல நிரந்தரமானது. கணக்கு நிலாவைப் போல தேயும்… மறையும்… 

வயசுலே மட்டுமில்லே… தொழில்லேயும் நாம அவனை விட ஒசந்துருக்கோம். அந்த ஒசத்தி, நடத்தையிலே தெரிய வேண்டாமா…?” 

அவருள் ஆழம் ஆழமாய் ஓடுகிற நினைவுகள். ஆணி வேரைப் போல் உள்பாய்ந்து வலிமை சேர்க்கிற நினைவுகள். 

மூட்டைகளை இறக்கி முடித்து விட்டு… பாரக் கயிற்றைச் சுருட்டினார் வண்டிக்காரத் தேவர். கலரை உடைத்துக் கொண்டு வந்தான் ராமசாமி. அவனுக்குள் சஞ்சலம்… வாடிக்கிடக்கிற முகம்… குற்ற உணர்வில் நிலையற்றுப் பாய்கிற பார்வை. 

வாங்கிக் கொண்டார் தேவர்… கலருக்குள் வளர்கிற வெண்ணுரை… நுரையைப் பார்த்த கண்ணோடு ஒரு குளிர்ச்சியின் மிருதுவோடு அவனைப் பார்த்தார். 

அவன் கண்களிலும் அதே குளிர்ச்சி. மனுசத்துவ உணர் வின் மலர்ச்சி. வானுக்கும் பூமிக்குமாய் விசுவபரூமாய் தெரிந்தார் வண்டிக்காரத் தேவர், உழைப்பைப் போல. அவன் பாச நெகிழ்வோடு தேவரைப் பார்த்தான். 

– அக்டோபர் 1993, ஆனந்த விகடன்.

– கணக்கு (சிறுகதைகள்), முதற்பதிப்பு: மார்ச் 1994, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *