‘அப்’பாவி
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: இதயம் பேசுகிறது
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: September 7, 2026
பார்வையிட்டோர்: 28
(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கல்யாண வீடு போல களைகட்டியிருந்தது, அந்த இழவு வீடு. இளவட்டங்கள் கிண்டல் சிரிப்பும் கேலிப் பேச்சுமாய் வேலை பார்த்தனர். கலகலப்பான சூழல். பரஸ்பரம் எகத்தாளப் பேச்சுகள்.
நாலு குழி தோண்டி கம்புகளை ஊன்றினர், வீட்டு முற்றத்தில். அகத்திக் குச்சிகளை குறுக்காகப் போட்டு சணல் கட்டு கட்டினர். மேலே ரெண்டு கிடுகுகளைப் போட்டு விரித்துப் போட… ஒரு நொடியில் பந்தல்.
‘அப்படிப் போடு ‘இப்படிக் கட்டு’ என்று பக்கத்திலிருந்து ஊர்ப்பெரிசு, இளவட்டங்களுக்கு ‘தார்’ வைத்துக் கொண்டிருந்தார்.
பந்தல் ரெடியானவுடன் ஏகாலி வந்தான். வெள்ளை வேட்டியை விரித்து, மாத்து கட்டினான். பூமாலையும் பூச்சரப் பந்துமாய் வந்து பூசாரி, அவற்றை ‘மாத்து’க்குள் எக்கிப் போட்டான்.
“யப்பா… கெழவி நல்ல மனசுக்காரி. மணக்குற மாலையாப் பாத்துப் போடப்பா…”
“ஆமா, நீங்க குடுக்குற அஞ்சு ரூவாய்க்கு ரோசாப்பூ மாலையா கட்டியாந்து போட முடியும்? கேந்திப்பூதான். போதும் போதும்.”
“கெழவி பெரிய உசுர். போக மனசில்லாம பெறப்பட்டு போகுது. நல்ல மாலையா போட்டு அனுப்புவீயா… நயா பைசா கணக்குப் பாக்கிரியே…?”
“இருக்கிற உசுருக வவுறு நனையனும்லே? கணக்குப் பாக்காம என்ன செய்ய? கெழவியோடு போய் நாங்க குழியிலே விழவா?”
ஜாலிக்கான பேச்சுகள். வாதாட்டம் போல தோற்றம் காட்டுகிற வாய்ச்சரசம். வெடித்தெழுகிற சிரிப்ப(n)ணிச் சத்தங்கள்.
வீட்டுக்கு முன்னால்…
கூரை நிழல்களில் ‘குத்த’ வைத்திருக்கும் ஊர்ஜனம், சம்சாரிகள். எல்லார் முகங்களிலும் ஒரு மலர்ச்சி. பொங்கல் திருவிழா மாதிரி மகிழ்ச்சி.
“காடுகரைகளுக்குப் போற ஜோலி, இன்னிக்குத்தான் இல்லே.”
“பாடு, ஜோலின்னு ரவ்வும்- பகலுமா பாடுபட்டு பாடு பட்டு நாம என்னத்தைக் கண்டோம்? பாடும் தும்பமும்தா மிச்சம்.”
“நல்லவேளை… ஒரு எடத்துலே உக்காந்து, ஒருத்தரு முகத்தை ஒருத்தரு பார்த்துப் பேச முடிஞ்சதே…”
“எல்லாம்… கெழவி புண்ணியம். அவ மண்டையைப் போட்டு நமக்கு ரெஸ்ட் குடுத்துட்டா…”
“அதைச் சொல்லு” என்று ஒரு சம்சாரி கைதட்டி ஆமோதித்துச் சிரிக்க, ஒரே சிரிப்பலைகள்.
“தந்தியெல்லாம் குடுத்தாச்சா?”
“அததுக்கான பயக சைக்கிள்ளே போய்ட்டாக.”
“துட்டி சொல்லி ஆள் அனுப்பவேண்டிய ஊர்களுக் கெல்லாம் அனுப்பியாச்சா?”
“ம். எல்லாம் ஆச்சு.”
“மேளத்துக்கு யார் போயிருக்குறது?”
“நம்ம கணேசன்- கன்னையா மகன்.”
“எந்த ஊரு மேளம்?”
“காளிசாத்தான் டங்காமேளம்.”
“அடிசக்கை! டங்காமேளமா? அப்ப… ஆட்டம் தூள் கெளம்பிரும்.’
“ஆமா. ஆட்ட பாட்டத்தோட கெழவியை மணக்க மணக்க கொண்டு போய்ச் சேர்க்கணும்லே?”
“ஆமாமா. அது நெசந்தான். பாவம் கெழவி. வாழ்க்கை யிலே ஒன்னும் அனுபவிச்சுப் பாக்காதவ. சாவுலேயாச்சும் சந்தோஷமா போய்ச்சேரட்டும்.”
சாங்கோ பாங்கமாய் நடக்கிற பேச்சுகள். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவிதப் பேச்சுகள்.
அக்னி மூலையில் நாட்டாண்மை குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருக்கிறார். வாய் நிறைய வெற்றிலைக்குதப்பல். முதுகை மூடிக் கிடக்கிற கபிலநிறத் கதர்த் துண்டு. அவர் முன்பு, நார்ப்பெட்டி. அதில் கட்டவிழ்ந்த வெற்றிலைக்கட்டும் பாக்கும்.
வெற்றிலையைச் சுருட்டி மூன்று பாக்கு வைத்து நாட்டாண்மை நீட்ட, பவ்யமாய் நாவிதன் உட்கார்ந்திருந்த சம்சாரிகளிடம் விநியோகிக்க…
கோலாகலமாய் நடக்கிற வெற்றிலைச்செலவு. வெற்றிலைச்சிவப்பும் வெடிச்சிரிப்புமாய் விதவிதமாய் பேச்சுகள், அனுமார் வாலாய்.
கிழவி செல்லம்மா வலுத்த பழங்கட்டை. நாள்பட்ட உயிர். இந்த ஆறு மாதமாய்த்தான் சட்டடியாய்ப் படுக்கை. எழுந்திருக்க வழியில்லை. நார்க்கட்டிலில் நனைந்த சேலைத் துணியாய் சப்பிப்போய்க் கிடந்தாள்.
முதுமையோடு நோயும் கூடிக் கொண்ட பேயாட்டம். ரத்தமும் சதையும் கரைந்து வற்றி வரண்டு போக… தோல் மூடிய முள் எலும்பாய்க் கிடந்தாள். ஆயுள் நாட்களாய் சுருக்கங்கள் நிறைந்த சிவந்த உடம்பு, நாள்பட்ட நிழல் வாட்டத்தில் அசிங்கமாய் வெளுத்துக் கிடந்தது.
சோறு சுத்தமாய் இறங்கவில்லை. இந்த ஒரு மாசமாய் பாலும் தண்ணீரும் தான் தொண்டைக் குழியை நனைக்கிறது. அதில்தான் உயிர் ஒட்டிக்கொண்டு நின்றது. நெஞ்சுக்குழி, ‘கொர்ரட், கொர்ரட்’ என்ற சத்தத்துடன் ஏறியிறங்க, ‘இருக்கட்டா, பறக்கட்டா’ என்று நூலிழை யில் நின்றாடுகிறது உயிர், ரொம்ப நாளாய்.
மகன்வழிப்பேத்திதான் ஆதாரம். அவள்தான் கெழவிக்கு நல்லது கெட்டதுக்குத் துணையாக. பேத்தியின் புருஷனுக்கு எரிச்சலும் ஏகக் கடுப்பும், ‘இப்படி கெழடு கெடந்து உசுரை வாங்குதே’ என்று.
வீட்டில் தங்குவதேயில்லை. சாப்பிட வருகிறபோது கூட பல்வலிக்காரனுக்கு மாதிரி, முகம் ஏழு கோணலாகி யிருக்கும். அவன்மேலும் வஞ்சகமில்லை. வீட்டுக்குள் நிரந்தரமாய் ஒரு கொச்சை வாடை. குடலைப் புரட்டிப் பிடுங்குகிற நாற்றம்.
பேத்தி புருஷனின் மனஓட்டத்தைப் புரிந்துகொண்டு செல்லம்மாக் கிழவி முன்பெல்லாம் வாய்க்கும் கைக்குமாய் புலம்புவாள். “யார் யார் ஓலையெல்லாம் கிழிச்சுப் போடுற கூத்துவனுக்கு என்னோட ஓலை மட்டும் கெடைக்க மாட்டேங்குது. நா என்ன செய்ய? இப்படிச் சாவு வராம கெடந்து சீப்பட்டுச் சீரழியுதேனே… அடக்கூத்துவனே, ஒனக்குமா கண்ணவிஞ்சு போச்சு?”
வாய் ஓயாமல் புலம்புவாள். போலித்தனமில்லாத நிஜம்புலம்பல்.
உயிர் அவளுக்கே தாங்கமாட்டாத தண்டனையாக அழுத்திக் கொல்கிறது. அவளது இருப்பு, மற்றவர்களுக்கும் பெரும் பாரமாய் கனத்து மூச்சுத் திணற வைத்தது. ‘எப்படா… இந்தக் கெழவி செத்துத் தொலையும்’ என்று ஏங்க வைத்து விட்டது.
முற்றிக் காய்ந்துவிட்ட நெற்று, உதிராமல் ஒட்டியிருப் பது செடிக்கு இடைஞ்சல்தான். என்ன செய்வது? சாவு வரணுமே.
அமாவாசை கனத்த நாள். கிழடு கட்டைகளை வாரிக் கொண்டு போய் விடும் என்று நம்பிக் கிடந்தாள் பேத்தி. நாலைந்து அமாவாசை வந்து போனதுதான் மிச்சம்.
பாதம் வீங்கியது. புறங்கையும் வீங்கிவிட்டால் சாவு நெருங்கி விட்டது என்று அர்த்தம். அதுவும் அர்த்தமிழந்து போய்விட்டது.
குரைக்க வேண்டிய நாய்கள் ராவ்வெல்லாம் ஓடி ஓடி ஊளையிட்டது. வீட்டைச் சுற்றிச் சுற்றி ஆந்தை அடித்தது. பேத்தி சந்தோஷப்படுவாள்.
ஆர்வமாய் எதிர்பார்த்து ஏமாந்து போவாள். மரணத்தின் அறிகுறியெல்லாம் பலிக்கவேயில்லை.
“இதேதுடா… பெரிய வம்பாய்ப் போச்சு” என்று தவித்தாள். ஊர்ப் பெரிசுகளிடம் கிசுகிசுத்து, காதைக் கடித்து யோசனை கேட்டாள். விளக்கெண்ணெயை குளிரத் தேய்த்து, பச்சைத் தண்ணீரில் குளிப்பாட்டும்படி யோசனை சொன்னார்கள். அதிலும் பருப்பு வேகவில்லை.
“இம்புட்டுக்கும் சாகலேன்னை… எதுக்கோ ஆசைப்பட்டு ஏங்கிக் கிடக்குதுன்னு அர்த்தம். அந்த ஏக்கத்துலே தான் உயிர் ஒட்டிக் கிடக்கு” என்று அனுபவப்பட்ட பெரிசுகள் சொல்ல- கிழவிக்குப் பிரியமான பண்டமெல்லாம் செய்து ஊட்டி விட்டுப் பார்த்தாள். ஊஹும், கதையாகவில்லை.
கொரட் கொரட்டென்ற இழுப்புக்கிடையில் எப்போ தாவது ஒரு தடவை தொண்டைக்குள் சத்தமாய் ஹீனமாய்ப் புலம்புவாள், கிழவி.
“சாகக்கிடக்கிற இந்தப் பாதகத்தியை ஒரு பாவியும் வந்து பாக்கலியே…”
‘இதுதான் கிழவியின் ஏக்கமாக்கும்’ என்று நினைத்த அப்புராணிபேத்தி, சுத்துபட்டி பத்துஊர் சொந்தச் சாதிசனத்துக்கெல்லாம் தாக்கல் அனுப்பினாள்.
தொட்ட சொந்தம், விட்ட சொந்தம் எல்லாம் வந்து வந்து கிழவியைப் பார்த்துவிட்டு, ஆக்கி அவித்து தின்று தீர்த்துவிட்டுப் போனதுதான்மிச்சம்.
எல்லார் முகங்களையும் உற்றுப்பார்த்து விட்டும் கிழவி உதட்டில் அதே புலம்பல். ஆத்மாவின் குருட்டுப் புலம்பல் மாதிரி அதே வாக்கியம்தான். “சாகக்கெடக்குற இந்தப் பாதகத்தியை ஒரு பாவியும் வந்து பாக்கலியே…’
தேனி, மதுரை, செங்கல்பட்டு என்று தூரந்தொலைவு பந்துக்களெல்லாம் வந்து பார்த்து விட்டுப் போய் விட்ட னர். கட்டிலை நெருங்கிக் குனிந்து பார்க்கிற ஒவ்வொரு முகத்தையும் கிழவியும் ஆவலாய்ப் பார்ப்பாள். கண்ணில் உயிர் வந்து நிற்கும். சட்டென்று ஓர் ஏமாற்ற நிழல் வந்து கவிந்து கொள்ளும்.
மீண்டும் அதே புலம்பல்தான்.
ஆக… கிழவி சாகிற மாதிரி தெரியவில்லை. பேத்தி ரொம்ப அசந்து போனாள். புருஷன்காரன் நச்சரிப்பு வேறு.
“கெழடு சாகப்போவுதா… இல்லியா?” சண்டைக்காரன் மாதிரி கேட்பான்.
“நா என்ன செய்ய? சாக வேண்டாம்னு தடுத்துக்கிட்டா இருக்கேன்?”
“வீட்லே மனுசன் குடியிருக்க வேண்டாமா?”
“அதுக்கு நா என்ன பண்ண? நீங்க வேணும்னா… கெழடி கழுத்தை நெரிச்சுக் கொன்னு போடுங்க.”
“என்ன பாவம் செஞ்சேனோ… இந்த நாத்தத்துலே கெடந்து சோறு திங்கேன். இன்னும் இந்தப் பாவத்தையும் செய்ஞ்சா… என்னென்ன நரகம் வந்து சேருமோ?”
இப்படிப் புருஷன் பொஞ்சாதிக்குள் அனுதினமும் சண்டைச் சத்தம். வார்த்தைக் கீறல்கள். மனக்காயங்கள். வீடே நரகமாகி மூச்சுத் திணற… கிழவி மட்டும் கவலை யற்றுப் போய் கொரட், கொரட்டென்று கிடந்தது.
பதினாறு வயசுச் சிறுமி செல்லம்மா சடங்காகி விட்டாள். பதினாறு நாள் மூலையில் உட்கார்ந்து, மஞ்சள்ப்பழமாய் வெளி வந்த மூன்றாவது மாசமே கல் யாணம். தாய்மாமன்தான் மாப்பிள்ளை. கடமை முடிந்த மனநிம்மதியில் ஆத்தா கண்ணை மூட, தாய்மாமன் ஊருக்கு வண்டியேறினாள், செல்லம்மா.
தாய்மாமன் ஊரில்- வீட்டில்- பயந்து கிடந்தாள், சிறுமி செல்லம்மா. நாதியற்ற தனிமை. பிடிபட்ட குருவிக் குஞ்சாய் நடுங்கி நடுங்கி முழித்தாள்.
சின்னப்பூவின் மெல்லிய உள்மன உணர்வுகளை – அதன் பூந்துடிப்பைப் பற்றி- அக்கறைப்படாத முழுத்த ஆம்பளையாக தாய்மாமப் புருஷன். தாயின் அரவணைப்புக்கு- அதன் கதகதப்புக்கு- ஏங்குகிற சிறுமியை – தாலி கட்டிய மனைவியாக மட்டும் கருதி காமமூர்க்கத்தோடு ஆக்ரமித்துத் திங்கிற புருஷன்.
அரண்டு போய் ஒடுங்கிய செல்லம்மாவின் பட படப்பை, நாணமெனக் கருதிக்கொண்டு ஆவேசமாய் அள்ளிக் கிழித்த கிராமத்து ஆண் மூர்த்தண்யம்.
பாவாடைப் பருவத்தில் ‘புல்லரிப்பூட்டக்கூடிய தேவ லோகப் பரவசம்’ என்று செல்லம்மா கனாக்கண்டிருந்த ஒரு விஷயம், அசுரப் பயங்கர நனவாகி அவளை கருக்கியே விட்டது.
ஆத்மா கருகிப் போனாலும், கர்ப்பப்பை கருகவில்லை.
மூன்றாவது மாசமே காறிக்காறித்துப்பினாள். கஞ்சி தண்ணீர் ஒவ்வாமல், ஈரத்துணியாய் துவண்டு சரிந்தாள்.
ஆண்பிள்ளையைப் பெற்றெடுக்கிறபோது, விதவைச் சிறுமியாய்… செல்லம்மா. கிணறு வெட்டப்போன தாய் மாமப்புருஷன்,வெடி விபத்தில் கருங்கல்லாய் சிதறி சதைப் பின்டங்களாகி
பாலைத் தனிமையில் நாதியற்ற அனாதையாய்… சபிக்கப்பட்ட அரும்பாய்… செல்லம்மா சிறுமி. அவளது பிஞ்சுக் காலில் சமூகப் பழமையின் இரும்புக் குண்டும், மரபுச் சங்கிலிகளும்…
அறுத்துக் கட்டிக்கொள்கிற சாதியுமில்லை. வாழா வெட்டியா, விதவையா? அவ்வளவுதான். கரும்புள்ளிதான். காலம் முழுக்க வெறுமையில் வெந்து சாக வேண் டியதுதான். மறுமணச் சிந்தனையே பயங்கரச் சிந்தனையாய் நினைக்கிற சூழல்.
காடுகரையை கவனித்துக்கொண்டு, மழலையையும் வளர்த்துக் கொண்டு, நாலைந்து வருஷங்கள் கண்ணீராய் வழிந்து கழிய…
உணர்வு ரீதியாக முழுமை பெற்ற பெண்ணாக மலர்ந்து உலகைப் பார்க்கிற போது- சுற்றிலும் பற்றிப் பரவிக்கிடந்த சூன்ய வெக்கை.
அப்போது செல்லம்மா மகனுக்கு ஒன்பது வயசு. ‘நாலாப்பு’ படித்தான். அன்றாட வாழ்க்கையின் சூறாவளிச் சுழற்சியில் காய்ந்த சருகாய் இயங்கப் பழகி விட்டாள்.
ஏறுபொழுது, இளமதியத்திற்கும் மேலாகிவிட்டது. புஞ்சைப் பொழியில் மாட்டுக்குப் புல்லறுத்துக் கொண்டிருந்தாள். ‘சரக், சரக்’கென்று அருகம்புல் அறுபடுகிற சத்தம். கழுத்தடியில் வியர்வைக் கசிவு. வெயில், முதுகில் சுள்ளென்று அறைகிறது. குனிந்து அறுக்க அறுக்க… குறுக்கெல்லாம் வலி.
பெருமூச்சோடு நிமிர்ந்தாள். பருத்திச் செடிக்குள் செம்மறியாடுகள். கள்ளப் பாய்ச்சலில் வேக வேகமாய் செடிகளை மேய்கிற ஆடுகள். அவளுக்குக் குலை கொதித்தது. நெஞ்சுக்குள்ளிருந்து தீச்சொற்கள் சீறிப் பாய்ந்தன. கத்தினாள்.
“எந்தப் பாவிடா… ஆடு மேய்க்கிற பய? வெள்ளாமை யிலே ஆட்டை விட்டுட்டு… அங்க என்னடா செய்கிறீக?”
அதோடு ஆத்திரச் சொற்களாய் சில வசவுகள். ஓடி வந்து ஆட்டை மடக்கிய ஆட்டுக்காரன், இவளது வசவுக்கு எதிர்வசவுகளாய் சீறினான்.
‘முண்டை தண்டை’ என்று அவன் பேச, இவள் அடி பட்ட பாம்பாய் அரிவாளோடு வசவோடு முன்னேற- ஆட்டுக் கம்போடு, சீறல் சொற்களுமாய் அவனும் முன்னேற –
அவள் திகைத்துப் போனாள். அநீதிக்காளான ஆத்திரம், அவளுள். போக்கிடமற்ற கோபம். கையாலாகத்தனமான வெறி. தனிமைப்பட்ட பலவீனம்…
அப்போது-
“எவண்டா அது? ஆடு மேச்சதுமில்லாம… வசவு வேறயா? ராஸ்கல்… பல்லை கில்லை ஒடைச்சுப் போடுவேன், படுவா.”
மம்மட்டியோடு திகுதிகுவென்று வந்தான் முத்து, பீமன் மாதிரி. கறுத்த இளவட்டம். வைரம் பாய்ந்த திரேகம். மம்மட்டியை ஓங்கிக் கொண்டு முத்து வர,
ஆட்டுக்காரன் வாலை மடக்கிய நாயாக முணங்கிக் கொண்டே ஓடைக்குள் இறங்கினான்.
செல்லம்மாவுக்கு அப்பத்தான் உயிர் வந்த மாதிரியி ருந்தது. மனிதத்தோழமை எனும் சுனையின் அருமையை மனசால் தொட்டுணர்ந்த முதல் புரிதலில், குளிர்ச்சி யோடு முத்துவைப் பார்த்தாள்.
இவளை விட நாலு வயசு குறைவு. இவன் புஞ்சையை கவனித்துக்கொள்கிற சம்பளக்காரன். தண்ணீர் பாய்ச்ச, உழவுக்கு ஆள் கூப்பிட, பாத்திகட்ட என்று காடுகரை வேலைகளைச் செய்கிற வாடிக்கைக் கூலிக்காரன்.
“பாத்தீயா… முத்து, அந்தச் சின்னப்பய பேசுன பேச்சை? இப்ப நீ இல்லேன்னா… எம்பாடு ரொம்பக் கேவலமாய்ப் போயிருக்கும்.’
“வரட்டும், தடிப்பய. நாதியில்லேன்னு நெனைச்சிட் டாங்க போலிருக்கு.”
திண்மை மிக்க அவனது குரல். அதிலிருந்த கவசபலம். இவளுக்குள் ஈர நெகிழ்வு. சம்பளக்காரனாக மட்டும் இருந்து வந்த முத்து, புதிய பரிமாணமாய் புதுவகைப் பிம்பமாய் – அவளுக்குள் வேர்களின் புதிய நகர்வு.
பௌர்ணமிக்கு முதல் நாள். மதியக் கரண்டு. பொழு தடைகிற வரைக்கும் த்ரீபேஸ் கரண்டு. பம்பு ஷெட் ஓடிக் கொண்டிருந்தது. பருத்திக்கு தூரத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான், முத்து.
வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, துணிமணிகளை அள்ளிக்கொண்டு வந்தாள், செல்லம்மா. வெள்ளிக் கற்றையாய் பாய்கிற மோட்டார்த்தண்ணீர். துணிகளை அலசிப் பிழிந்து மஞ்சணத்தி மரத்துக் கொம்பில் பொட்ட லமாய் தூக்கி வைத்து விட்டு… நீர்க் கற்றையில் தலையைக் கொடுத்தாள். அழுக்கும் எண்ணெயும் நுரை நுரையாய் தொட்டிக்குள் பொங்கிக் கரைய… அவளுக்குள் பரவசம். மோட்டார்த் தண்ணீரின் கற்றை வேகம் தடதடவென்று அறைந்தது. உடம்பும் மனசும் பாரம் விலகி… லேசாகி… குளிப்புச் சுகத்தில் சொக்கி நிற்க-
டடக்!
கரண்டு நின்று போயிற்று. மாற்றுத் துணிமணியை எடுத்துக் கொண்டு பம்பு ஷெட் ரூமிற்குள் போனாள், செல்லம்மா.
இவள் வந்ததையோ- குளித்ததையோ- கவனிக்காத முத்து, வழக்கம் போல் தன்னியல்பாய் மம்மட்டியோடு ரூமிற்குள் நுழைய, அங்கே, ஜாக்கட் ஊக்கை மாட்டிக் கொண்டு செல்லம்மா.
பாம்பை மிதித்தவனைப் போலத் துள்ளிப் பதறி வெளியேறினான்.
“முத்து போயிராதே, வெளியிலே சித்தே இரு.” செல்லம் மாவின் கல்மிஷமற்ற குரல். முழுசாக சேலையை உடுத்திக் கொண்டு, ஈரக் கூந்தலை, ‘சட், சட்’டென்று அடித்து உதறிய நிலையில் வெளியில் வந்தாள். அந்தி வெளிச்சத்தில் ஈரக் குளுமையாய் தேவதை போலத் தோன்றினாள்.
தூக்குச் சட்டியை எடுத்துத் தந்தாள்.
“என்னது?”
“பொங்கச் சோறு.”
”யாருக்கு?”
“ஒனக்குத்தான்.”
“எதுக்கு? பய ஆசைப்பட்டான். கிண்டினேன்… ஒனக்கும் கொண்டு வந்தேன், சாப்பிடு.”
“இதெல்லாம் எதுக்கு?”
“முத்து, நீ எங்க வீட்டுலே ஒரு ஆள்போல. அந்நியமா நினைக்காதே. சம்பளக்காரன்னு மட்டும் என்னாலே நினைக்க முடியலே.”
புரியாமல் தவித்தான். அவனது புரியாமையையும் அள்ளி விழுங்குகிற மாதிரி ஒரு முறுவல், அவள் உதடு களில். கனவைக் குழைத்துப் பூசிய மாதிரி ஒரு வினோத ஒளி. ஆயிரமாயிரம் உணர்வுகளை உணர்த்தும் மவுனமின்னல். அவனுள் ஒரு மயக்கம். குழைவு, நெஞ்சு துடிக்க, நா வறண்டது.
உடம்போடு கலந்த மனசின் வாழ்க்கையாக ஆறு வருடம். அவளது உணர்வுலகத்தில் முதற் காதல் பரிச்சயமும், மனம் ததும்பும் தாம்பத்தியமும் இதுதான். சமூக மரபுகள் கடுகடுத்து, மொறுமொறுத்து முறைக்க- இயற்கைக்கு இயைந்த- வாழ்க்கை.
ஊர்முகம் பார்த்து குற்ற உணர்வு கொள்கிற அறிவைக் கடந்து, மனசு விரும்பி ஏற்றுக்கொண்ட மையல் வாழ்க்கை.
ஆத்ம சிதைவுகளின் கண்ணீரைத் துடைத்து இதயமாய் – பரிவாய்- வருடிக் குளிரவைத்த இனிமை நிறைவு. மனப்பின்னங்களெல்லாம் ஒட்டிக்கொள்ள, அவளை முழுமைபடுத்திய நிறைகுட வாழ்க்கை.
அவனைப் பொறுத்தவரை இந்த உறவின் அர்த்தமே வேறு. வெறும் வாலிப காலச்சலுகை. கல்யாணம் வரைக்கும் இளைப்பாற இடம் கிடைத்த கள்ள நிழல். அவ்வளவு தான்.
முத்துவுக்குக் கல்யாண ஏற்பாடு என்று கேள்விப்பட்ட போது, செல்லம்மா துடித்துப் போனாள். கட்டிய புருஷன் துரோகம் செய்தால் வருகிற அதே துடிப்பு. மனக்கொதிப்பு. கல்யாண ஏற்பாட்டைத் தடுத்து நிறுத்திவிட உயிரின் ஆழத்திலிருந்து பிரயத்தனம் செய்தாள்.
இந்தக் கல்யாணத்தைத் தடுப்பதற்கு தனக்கு உரிமை யில்லை என்று அறிவும், உலக ஞானமும் உணர்த்தினாலும், அவள் ஆத்மா கேட்கவில்லை. இந்த இழப்பை- முதற் காதலை இழந்த வெறுமையை- சந்திக்க முடியாமல் நடுங்கினாள்.
அன்றைக்கு-
நடுஜாமம், கதவைத் திறந்து கொண்டு முத்து உள்ளே வந்தான். பழகிய இருட்டு. ஆறு வருடப்பரிச்சயம். தடுமாறாமல் பூனை போல வந்து, படுத்திருந்த செல்லம்மா பக்கத்தில் உட்கார்ந்தான்.
சுவாசலயத்தில் முத்து என்று உணர்ந்து கொண்ட செல்லம்மா, விருட்டென்று எழுந்த வேகத்தில் அவனது நெஞ்சுப் பனியனைக் கொத்தாகப் பற்றி உலுக்கினாள். வெறி பிடித்தவளைப்போலக் கேட்டாள்.
“சொல்லு, கல்யாணம் பண்ணப் போறீயா?” “ஏன்? பண்ணக் கூடாதா?”
“அடப்பாவி! ஏன் இந்தப் பாவத்தைச் செய்றே?”
“இதா பாவம்? எனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா?”
“அப்படீன்னா… இப்ப நாம் வாழ்ற வாழ்க்கை?”
“இது எப்படிப் பொருந்தும்? ஊர் ஒத்துக்கிடுமா? ஒறவு முறை ஒத்துக்கிடுமா?”
“இருந்து இருந்து… ஆம்பளைப் புத்தியை காட்டிட்டே, இல்லே? ஒடம்புக்கு ஒரு ஒறவு, ஊர் மொறைக்கு ஒரு கல்யாணம். இதுக்குப் பலியாகுறது ரெண்டு பொம்பளைக, இல்லே?”
அவள் கேள்வியின் வீச்சை- உணர்வின் தர்ம வெக்கையை – தாங்கமுடியாமல் தவித்தான். பிடிபட்ட கள்ளனாய் தவித்தான். நழுவ முயன்றவனை இறுகப்பற்றினாள். குலுக்கினாள்.
“இப்பச் சொல்லுறேன், கேட்டுக்க. கொதிச்ச மனசோட சொல்லுறேன். நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா… அந்த நேரத்துலேயே நாண்டுக்கிட்டுச் செத்துபோவேன்… அந்தப் பாவம் ஒன்னைச் சும்மாவிடாது.’
ஆத்திரத்தின் விளிம்பு அழுகை தானா? உடைந்து அழுது அவள் குலுங்க… பனியன் அந்த அதிர்வில் கிழிந்துதொங்க…. அவன் நழுவிப் போய் விட்டான். அவள் ஊமைக் கரைசலாய் அழுது தேம்பினாள்.
கூரை முகட்டில் வாளிக்கயிறைப் போட்டு ஸ்டூலில் ஏறிவிடவும் செய்து விட்டாள். எதிர்காலமாய் வந்து கதவைத் தட்டிய மகனின் சத்தம். “யம்மா… யம்மா… கதவைத் திற!”
அதற்குப் பிறகு முத்து கண்ணிலேயே தட்டுப்பட வில்லை. எங்கே போனான், என்ன ஆனான் என்று ஒரு இழவும் தெரியவில்லை. அதைப்பற்றி அவள் கவலைப்படவுமில்லை. முத்துவும், அந்த உறவும், அதன் நிறைவும் அவள் ஆத்மாவில் நிஜமாய்- நிரந்தரமாய்- உயிர்கொண்டு இயங்கியது.
வாழ்வின் அசுரச் சுழற்சி வாரியள்ளிப் போட்டுக் கொண்டு முன்னேற… செல்லம்மா மகனை வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்து, பிறந்த பேத்தியை கொஞ்சி மகிழ, பத்து வயசுப் பேத்தியை மடியில் போட்டு விட்டு மாயமாய் சாவில் மறைத்தனர் மகனும், மருமகளும்.
பேத்திக்கான வாழ்க்கை, சமூக மல்லுக்கட்டு. இப்படி மவுனமான காயங்களோடு நாட்கள் நகர்ந்தன. சோகம் சுமந்த பாலை வாழ்வாய்க் கழிந்த மொத்த ஆயுள்.
சாவை எதிர்பார்த்து சலித்தே போய் விட்டாள், பேத்தி. செல்லம்மாகிழவிக்கு தொண்டைக்குள் ஜீவனாய் இழுத்துக் கொண்டு கிடந்தது. கண்ணில் மட்டும் உயிரொளி.
வீட்டுவாசலில் தள்ளாட்டமும் நடுக்கமுமாய் ஒரு பெரியவர் திகைத்துத் தயங்கி நின்றார். வயசு எண்பது இருக்கும். தளர்ந்து போன கறுத்த உடம்பு. வாழ்வின் கடமைகளைச் சுமந்து கடந்த அடையாளமாய் வளைந்த முதுகு. ஒரு ரோமம் கூட கறுப்பு இல்லை.
“ஐயா… யாரு நீங்க?” பேத்திதான் வாசலில் நின்றாள்.
“செல்லம்மா பேத்தியா…நீ?”
“ஆமய்யா… நீங்க?”
“நா ரொம்பப் பழைய ஆளு. யாருன்னு சொன்னா… ஒனக்குப் புரியாது. இப்ப… எப்படி இருக்கு?”-
என்று உள்ளே கையை நீட்டினார். அவளுக்கு ஏகச் சலிப்பு. விரக்தி. “இருக்கு. ஆறு மாசமா அப்படியேதா இருக்கு.”
“ஹும்… பொம்பளைகளே அதிர்ஷ்டங்கெட்ட ஜென் மங்கதான். அதிலேயும் செல்லம்மா… ரொம்ப யோகங்கெட் டவ… வாழ்ற காலத்துலேதான் நொம்பலப் பட்டாள்னா… சாவுலேயாச்சும் நொம்பலமில்லாம, பொசுக்குன்னு போகக் கூடாதா? கொடுப்பினை இல்லே. யாரை நொந்துக் கிட?”
மனசின் உள்ளிருந்து பீறிட்ட ஈரப் பெருமூச்சோடு மெல்ல வீட்டுக்குள் நுழைந்தார். அவருள் ஒரு நெகிழ்வு. தேக நடுக்கம்.
கட்டிலில் துவண்டு கிடந்த கிழவி. நனைந்து கிழிந்த காகித ஓவியமாய், மங்கலாய்க் குழம்பிக் கிடந்தாள். கொரட் கொரட்டென்று ஒரே இழுவை. குனிந்து பார்த்தார். அவர் உடம்பில் ஒரு புதிய நடுக்கம்.
பேத்தி கிழவி காதுக்குள் குனிந்து கத்தினாள்.
“ஒன்னைப் பாக்க யாரோ வந்திருக்கா?”
கிழவியின் நரைத்த இமைகள் மெல்லப் பிரிந்தன… பஞ்சடைத்த இடுங்கிய கண்களில் நடுக்கமான சலனம்.
பக்கமாய் அந்த முகம், கறுத்த முகம். தளர்ந்து போய்- அடையாளம் தெரியாத- சுருக்கங்கள் படிந்த முகம்.
கிழவியின் நெஞ்சு துடித்தது.
முகம்… அதே முகம்… ஆத்மாவிற்குள் அச்சு குலையாமல் பதிவாகிப் போயிருக்கிற முகம். இருட்டுக்குள் கூட- கண்கள் மூடிய கணங்களில் கூட- உணர முடிந்த அதே முகம். உயிரில் தடம் பதித்த முகம்.
கிழவியின் கண்கள் ஆடாமல் அலுங்காமல் நின்று பார்த்தன. உயிரே வந்து கண்ணில் வந்து நிற்கிற மாதிரியான பார்வை உக்கிரம். ஆவல் பரபரப்பு. ஆத்ம துடிப்பு. கண்ணின் ஓரங்களில் ஈரக்கசிவு.
பேத்திக்கு ஒன்றும் புரியவில்லை.
“சாகக்கிடக்குற இந்தப் பாதகத்தியை ஒரு பாவியும் வந்து எட்டி பாக்கலியே…” என்று கிழவி புலம்புவாளே… அந்தப் பாவி, இந்தப் பெரியவர்தானா?
அதற்குப் பிறகு, செல்லம்மா கிழவி கண்ணைத் திறக்க வேயில்லை. சாந்தமாகிப் போன அமைதியோடு மண்டை யைப் போட்டு விட்டாள், வாழ்வின் முழுமையை தரிசித்த திருப்தியில்.
டங்காமேளம் ஊரைக் கூட்ட, பெரும் ஜனக்கூட்டம் பின் தொடர, அலங்கரிக்கப்பட்ட தேரில் செல்லம்மாக் கிழவி ‘ஜே, ஜே’ என்று பயணமானாள், மயானக்கரைக்கு. கல்யாண ஊர்வலம் போல கலகலப்பாயிருந்தது, அந்த இறுதி ஊர்வலம்.
– நவம்பர் 1993, இதயம் பேசுகிறது.
– கணக்கு (சிறுகதைகள்), முதற்பதிப்பு: மார்ச் 1994, திருவரசு புத்தக நிலையம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
முள்
ஜே.எம்.சாலி
August 1, 2026
குர்பானி
ஜே.எம்.சாலி
July 26, 2026
விரல்
மேலாண்மை பொன்னுச்சாமி
January 31, 2026
