நிழலாடும் நினைவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 18, 2026
பார்வையிட்டோர்: 79 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

வேனிலிருந்த யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை!

மயான அமைதிக்கு முந்தைய நிலையில்!

ஏதொன்றையோ அவதானித்தவறாய் வேன் ஓட்டுனர் மென்மையான காதல் பாடல்களை ஒலிக்க விட்டிருந்தார்!

பொதுவாகவே அனைவரும் வேனில் கூடியிருக்கிற, பயணிக்கிற நேரங்களில் காதல் பாடல்களுக்கு மிக கறாராக “நோ” சொல்லி விடுகிற நான் இப்பொழுது காதல் பாட்டு கேட்டது குழு உறுப்பினர் அனைவருக்கும் ஆச்சரியமாய் இருந்தது!

கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார பயணமது!

கற்றறிந்த பெருமக்கள் அனைவரும்!

பதினைந்து பேரில் பெரும்பாலும் கல்லூரியின் இளங்கலை, முதுகலை பயின்றவர்களாய்!

ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள், கொள்கையாளர்கள் என கை கோர்த்திருந்தார்கள்!

அவர்கள் அமர்ந்திருந்த ஆசிரியப் பணி அவர்களை இன்னும் உயர்த்தி காட்டியது!

அவர்களது உயரத்திலும் இவன் மிக குறைச்சல் என்பதை குழுவாக அறிமுகப்பட்ட அன்றே சொல்லி விட்டான்!

அருகில் வந்து குழுவாக அமர்ந்து கொண்ட அவர்கள்”உங்களது செயலுக்கும் அர்பணிப்பிற்கும் முன்னே நாங்கள் இன்னும் தரை விட்டு எழும்பக்கூட இல்லை” என்பார்கள்!

இதில் பி.காம் படிக்கிற மணி வழக்கம் போல் கட்டையை கொடுப்பான்!

எப்பொழுதும் கட்டை அவனுடன் இருக்குமா, இல்லை தேவைக்கு மாயத்திலிருந்து வரவழைத்துக் கொள்வானா?தெரியவில்லை. கேட்டால் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித”…என்பான்!

அந்த வார்த்தையின் வசீகரத்திற்குள் வசப்பட்டுப் போயிருந்தவனாயும் மனதை அடகு வைத்திருந்தவனாயும்!

அவனும் இன்னொருவனும் மட்டுமே மாணவர்கள்!

ஒரே கல்லூரி,ஒரே இருக்கை,ஒரே படிப்பு என்கிற வசதியும் நெருக்கமும் கொண்ட 

இள மனதின் பிணைப்பும் வசதிப்படுகிறது அவர்களுக்குள்!

இயக்கத்துக்காரன் நான், ஓரிழையில் பிணையிட்டு  எல்லோருமாய் மனமிணைந்து ஓடிய நாட்களின் ஈரங்கள் அவை!

அச்சுவடுகளின் தடத்தில் ஏனோ ஒரு அடர் மௌனம்!

இயல்பிற்கு நேர்மாறானதாகவே தோன்றியது!

வழக்கமான நாட்கள் என்றால் இந்நேரம் வேன் இரண்டாக பிளந்து பின் ஒட்டிக் கொண்டு இருக்கும்!

மிகை மீறாத பேச்சும் சிரிப்புமாய் அதகளப்படும் வேன், ஓட்டுனர் வேனை விட்டு இறங்கி ஒரு தம் போட்டு சிரித்து அடங்கி விட்டு ஓடிக் கொண்டிருக்கிற வேனில் வந்து ஏறிக்கொள்வார், இதுதான் நாடகம் நடத்தி முடித்து உறைவிடம் செல்கிற அன்றாடங்களில் நடக்கிற கதை!

மல்லாந்து படுத்துப்பார்க்கிறான், குப்புறப் படுத்துப்பார்க்கிறான், இடது புறம்,வலது என திரும்பிப் படுத்தும் பலனில்லை. கையைக் காலை உதைத்துகொண்டு ஓவென கத்தி அழவேண்டும்போல் உள்ளது.தாடி மீசை வைத்த இம்முதிர்வில் அழுவது அழுகையின் இலக்கணத்திற்கு அழகாகாது என விட்டு விடுகிறான்!

நெகிழ்தலும் அவிழ்தலுமான நீந்துதலில் இருக்கிற யாருக்குத்தான் அவ்வளவு எளிதாய் தூக்கம் பிடித்திருக்கிறதிங்கு?

வழக்கத்தை விட அன்று நாடகம் நன்றாகவும் யதார்த்தமாகவும் இருந்ததாய்ச் சொன்னார்கள் குழுவினரும், பார்வையாளர்களும்!

சாத்தூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் உள் வாங்கிய கிராமம்!

ஓங்கி மிதித்து ஓடிவந்தால் இரண்டு மடக்கில் சாத்தூர் ரயில்வே வந்து விடும்!

தலை பிளக்கிற வெயிலும்,இருக்க ன்குடி செல்கிற ஜனங்களும் சாத்தூரின் வெள்ளரிக்காயும் சண்முக நாடார் கடையின் சேவு வாசமும் தவிர்த்து வேறென்ன அந்நேரத்தில்,கூடவே ரயில் நிலையத்தின் மனிதர்களும் ரயிலும்!

“என்ன மருமகனே,வெக்கு, வெக்குன்னு திரியிறீங்களாக்கும்?சொன்னாங்க,பாத்து ஒண்ணு கெடக்க ஒண்ணுஆயிபோச்சுன்னா சங்கடம்தான எல்லாருக்கும்?”என அர்த்தமாய் சிரிப்பார்!

அவ்வளவு அர்த்தமான சிரிப்பிற்கு பின்னால் அவன் எப்படி இவருக்கு மாப்பிள்ளை ஆனான்.இவர் எப்படி அவனுக்கு மாமாவானார் என்பது முரண் இனிமையே!

இவரது மகள் மேலிருந்த மையல் எனச்சொல்லிக்கொள்ளலாம்.பெரிதான வர்ணனைகள் எதற்குள்ளும் அடைபட்டுத் தெரியாத சாதாரண உருவினள்!

காற்றில் கலந்து கொண்ட இருவர் பார்வைகளும் ஒன்றினிழைவில் ஒன்று கலந்து!

நண்பன்தான் சொன்னான் “ஏண்டாடேய்” என!

“இருக்கட்டும்டா,ஓடுற வரைக்கும் ஓடட்டும், நாமளா போயி எதுக்கு நிறுத்தணும்”?என்ற அவனின் சொல் அவள் திருமணமாகிப் போன தினத்திலிருந்து காணாமல் போயிருந்தது அவனது காதலும் வெக் வெக் நடையும்!

தோழறொருவரின் அழைப்பு,அவர் சார்ந்து இருந்த அரசியல் கட்சியின் பொறுப்பில் இருக்கிறார் போலும், அவரது பேச்சும் நடத்தையும் சொல்லிச்செல்லும் அதை!

மிகவும் குறைவான சமயோஜித பேச்சு, சமயோஜித நடத்தை, யாரையும் எதையும் விட்டுக் கொடுக்காத நடவடிக்கை இவைதான் அவர்!

வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட குடும்பம்!

கத்தரித்துத் தைக்கப்பட்டிருந்தது போல் வீடு!

அப்பொழுதெல்லாம் அப்படித்ஒ தானே?அதிலும் தோழர்களின் வாடகை வீடென்றால் பொண்வண்டு அடைபட்டிருக்கும்  தீப்பெட்டிதானே?

ஆணொன்றும் பெண்னொன்றுமாய் படித்து கொண்டிருந்தார்கள்!

சின்னவள் படிப்பை மனமொட்டி வைத்திருந்தாள்,”பெரியவன் பாத்துக்கலாம், ஓவர் ரிஸ்க் ஒடம்புக்குக் கேடு” டைப்பில் இருந்தான்!

சாத்தூர் பஜாரில் பார்த்த ஓர் நாளிரவில் நாடகம் போட வேண்டிய விஷயம் பகிர்ந்தார்!

சரி என்றிருந்தேன். சென்றுமிருந்தேன்!

நாடக மேடையென பெரிதாய் ஒன்றும் இல்லை.வீதியேமேடை இலக்கணத்தின் விரிவில்!

வீதிகள் கற்றுக்கொடுத்த உயிர்ப்பு இன்னமும் விழி நிறைந்து!

நடந்து கொண்டிருந்த நாடகத்தின் காட்சியிறுதி!

எழுதப்படிக்கத்தெரியாத தந்தைக்கு ராணுவத்திலிருக்கிற மகன் இறந்து விட்டான் என வந்த தந்தியை ஒருவர் படித்துக் காட்டியதும்  தந்தை உடைந்தழுகிற காட்சி!

பொதுவாக இக்காட்சியில் வாயில் துண்டை வைத்துக்கொண்டு முழங்காலிட்ட படி அழுது அப்படியே உறைந்து விடுவேன்,காட்சியும் அப்படியே பிரீஸாகிப் போகும்!

வாயில் துண்டை வைத்துக் கொண்டு பிரீஸாகிப்போவது, இல்லை கைகள் இரண்டையும் அகல விரித்த நிலையில், இல்லை தரையில் முகம் முட்ட விழுந்த நிலையில்!

இவை மூன்றைத்தான் மாறி மாறி  போய் நாடகம் நடத்துகிற எல்லா ஊர்களிலும் செய்து வந்தேன்!

இன்று அழுதவாறே முகம் முட்ட விழுந்தவன் நீண்ட நேரமாக எழுந்திருக்கவில்லை!

நாடகம் நன்றாக இருந்ததாக எல்லோரும் செய்த ஆரவாரத்திற்குக் கூட இவன் எவ்வித பிரக்ஞையுமற் று!

ஆனாலும் எழுந்திருக்கவில்லை, கூட்டம், ஆரவாரம்,கை தட்டல்,,,

தனுஷ்கோடி சார் யூகித்து விட்டார், அவர் என்னருகே வரவும் மணியும் மொத்த குழுவும் வந்து விட்டது!

பின்னே சாப்பிட்டு விட்டு வேனில் ஏறினோம்!

சாப்புடுகிற இடத்திலிருந்து வேன் ஏறுகிற வரைக்கும் உடன் வந்த”நல்லா நடிச்சீங்க சார் என்கிற சொல்லுக்கும் தலை வணங்கி விட்டு வேனில் ஏறினோம் கிராமத்தார் அனைவரையும் கை கூப்பி வணங்கியவர்க ளாய்!

இருப்பிடம் வந்ததும் மேடையில் அண்ணனாய் தங்கையாய் அக்காவாய் அம்மாவாய் இன்னும் பல வேடங்களில் நடித்தவர்கள் இவன் முன்னமர்ந்தார்கள் இவன் பதிலை எதிர்பார்த்து!

என்ன சொல்வேன் பதிலாக, அல்லது என்ன சொல்லி விடமுடியும் உண்மை தவிர்த்து?

என்ன சார் என்னாச்சு ,ஏன் இப்பிடி அப்நார்மலா?என்றாள் டீச்சர்!

சார் என்னன்னு சொல்லுங்க, இல்லைன்னா,நாளைக்கு நாங்க டீமா சேரமாட்டோம் எனக்கூறிய மணியை கூப்பிட்டு அருகில் அமர்த்திக்கொண்டான்!

அதிகம் பேசாத சுப்ரமணியன் சார் 

இத்தன பேர் கேக்குறமில்ல சார் என்றார்!

குணா ஏதும் பேசாமல் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்!

பின் முருகேசன்,நாகராஜ், துரைக்கண்ணு முத்துப்பாண்டி, ராம்குமார்,, அனைவரும் கேள்வியின் இறுக்கத்தில்!

அனைவரின் முன்பும் தலைகுனிந்து அமர்ந்திருந்த என் முகம் தேற்றியவராய்ச் சொல்கிறார் தனுஷ்கோடி சார்!

“அவருக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம் அவருஇன்னைக்கி மேடையில நடிச்சது நடிப்பில்ல, உண்மையிலேயே அவரு மனசொடிஞ்சி சிந்துன கண்ணீரு!

“கையறுநெலையில இருக்குறவன் கண்ணீர் சிந்துரத தவிர்த்து வேற என்ன பண்ணீற முடியும்?அதுதான் இன்னைக்கி சாரோட நெலையும்” என்றார்!

“லீவு கேட்டுருக்கலாம்ல,முன்னமே பெர்மிஷன் வாங்கி வச்சிருக்கலாம்ல, ஆபீஸீக்கு தெரிவிச்சிருக்கலாம்ல,இல்ல 

ஒரு நா புரோகிராம நிறுத்தி வைச்சிட்டு கெளம்பீருக்கலாம்ல, இப்பக்கூட தாமதம் இல்ல,வாங்க இப்பிடியே போயிட்டு வந்துருவம் வேன்ல எல்லாருமா சேந்து,,,!” என்கிற அனைவரின் பேச்சிற்கும் “இல்ல, அதுக்கெல்லாம் எனக்கு அனுமதியில்ல” என்கிற ஒற்றைச் சொல்லை பதிலாய் அளித்து விட்டும்,அனைவரையும் தூங்கச் செல்லுமாறு பணித்து விட்டும் தூர நின்ற முருகதாஸை பார்க்கிறேன்!

ஓடோடி வந்துஅள்ளிக் கொள்கிறான்.”ஏங்கிட்டகூட ஒரு வார்த்தை சொல்லாம விட்டுட்டயே,போடா கிறுக்கா” என வயிற்றில் குத்துகிறான்!

“கிறுக்கந்தான்,கிறுக்கந்தான்,

கிறுக்கந்தான் என்றவனாய் முருகதாஸின் தோளில் அவிழ்ந்து சாய்ந்து விடுகிறேன்!

மௌனித்துக்கடந்த நிமிடங்களின் கனங்கள்!

சில்லென்ற மண்பானைத் தண்ணீரில் முகம் கழுவி விட்டு செய்வதேதுமில்லாது நின்ற

வேன் டிரைவர் அருகில் செல்கிறேன்,!

அனிச்சையாக தலை குனிந்து கொள்கிறார் அவர்!

“டிரைவர்ண்ணே எனக்காக ஒரு சின்ன உதவி செய்யலாமா”? என்கிறேன்.

சார் சொல்லுங்க சார், நிச்சயதார்த்த வீட்டுக்குப் போகணுமா சார் என்றவரை இடை நிறுத்தி அதெல்லாம் வேணாம் கொஞ்சம்  டீ வாங்கீட்டு வரலாமா என தளுதளுக்கிறேன்  மெல்லிய குரலில்!

சரி என திரும்பியவரிடம் கூடவே ஒரு பாக்கெட் கோல்ட் பிளேக் பில்டர் என்கிறேன்!

                                                           

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *