புத்தகம் சுமக்க வேண்டிய கைகள்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: September 9, 2026
பார்வையிட்டோர்: 110
முதற் காட்சி

(திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன)
மேடையில் பின்னணியில் ஒரு பணக்காரரின் மாளிகை வீட்டின் முகப்பு போன்ற அமைப்பு. காலை நேரம் . பெரிய ஒற்றை பிரம்பு நாற்காலியில் சிவப்பு சேலை ரவிக்கை அணிந்த கனமான சரீரம் கொண்ட நடுத்தர வயது பெண்மணி கையில் செய்தித்தாளுடன் அமர்ந்து இருக்கிறார். மேடையின் வலப் பக்கத்திலிருந்து வாட்டசாட்டமான உருவம் , நரைத்த தலை கொண்ட வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்த நபர் வருகிறார்.
வந்தவர்: காலை வணக்கம் மேம்
பெண்மணி : வணக்கம் யார் நீங்க இங்க எதுக்கு வந்து இருக்கீங்க .. ?
வந்தவர்: என் பேரு ரங்கா ராவ்.. சோசியல் ஒர்க்கர். வி.வி. நாதன் சாரைப் பார்க்கணும்.
பெண்மணி : நான் அவரோட அக்கா சுகுணா தேவி. அவரு இவ்வளவு சீக்கிரம் எழுந்துக்க மாட்டாரு. என்ன விஷயம்ன்னு என் கிட்ட சொல்லுங்க… அது என்ன ரங்கா ராவ்ன்னு பேரு…
ரங்கா : நான் தமிழ் தான் .. எங்க தாத்தா அவருக்கு பிடிச்ச நடிகரோட பேருன்னு இந்த பேரை எனக்கு வெச்சாரு…
சுகுணா : அட
ரங்கா : மேம்.. நம்ம ஏரியால வரப்போற ஒங்க தம்பியோட பேக்ட்டரில அன்ஸ்கில்டு லேபரா சிறுவர் சிறுமிகளை ரெக்ரூட் பண்ண பேரன்ட்சுக்கு லேபர் கான்ட்ராக்ட்டர் நாகரத்தினம், அட்வான்ஸ் தொகை கொடுத்து இருக்காரு, அதனால, இந்த ஏரியா பேரன்ட்ஸ், இந்த கல்வி ஆண்டுல பசங்கள ஸ்கூலுக்கு அனுப்பல… நான் பேரன்ட்ஸ் கிட்ட பசங்கள ஸ்கூல்ல சேர்த்து விடுங்கன்னு பேசப் போனா, நாகரத்தினத்தோட ஆளுங்க என்னை அச்சுறுத்தறாங்க.. விரட்டறாங்க… அதான் முதலாளி கிட்டயே பேசிடலாம்ன்னு இங்க வந்தேன்.
சுகுணா : ஒங்க சமூக அக்கரை புரியுது. என் தம்பி வெளியே வந்தாலும் அவன் கூட இருக்கிற ஆளுங்க அவர் கிட்ட ஒங்கள பேச விட மாட்டாங்க… இங்க முட்டி மோதி ஒண்ணும் ஆகாது… நீங்க விரும்புவது கை கூடாது… நீங்க மறுபடியும் ஜனங்க கிட்ட போய் ஊதற சங்கை ஊதுங்க… அதுக்கு மேல கடவுள் விட்ட வழி…
ரங்கா ராவ், “அவரோட உடன்பிறப்பு நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்… நான் வரேன் மேம்’ என்று கூறி விட்டு மேடையின் வலப் பக்கத்தை நோக்கி செல்கிறார்.
(திரை)
இரண்டாம் காட்சி
(திரை எழுகிறது. மேடையில் மங்கலான வெளிச்சம். ஒரு வீட்டின் மொட்டை மாடி போன்ற அமைப்பு. வாட்ட சாட்டமான உருவம் கொண்ட, வேட்டி சட்டை அணிந்த இரண்டு நபர்கள் , இரண்டு சிறிய நாற்காலிகளில் அமர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் – ஒப்பந்தக்காரர் – நாகரத்தினம், அவருடைய உதவியாளர் ரத்தினம்)
ரத்தினம் : என்ன அண்ணே .. அண்ணியும் பிள்ளைங்களும் ஊருக்கு போய்ட்டாங்கன்னு வீட்லேயே சரக்கு அடிக்க முடிவு பண்ணிட்டிங்க …
நாகரத்தினம் : ஆமாம் அதனால என்ன? எல்லாம் தயார் பண்ணிட்ட இல்ல…
(அவர்கள் அருகில் ஒரு பெண் உருவம் நிழலாடுகிறது)
நாகரத்தினம் : யோவ் யாரு இந்த பொம்பள? நம்ம வீட்டு மாடிக்கு எப்படி வந்துச்சு..?
ரத்தினம் : தெரியலையே அண்ணே… யாரு நீ எங்க வீட்ல எப்படி வந்தே?
(இப்பொழுது மேடையில் முழுவதுமாக ஒளி காட்டப்படுகிறது. அங்கே சுகுணா நின்று கொண்டிருக்கிறார்)
சுகுணா : நான் இந்த ஏரியா தொழிலதிபர் வி.வி. நாதனோட அக்கா…
(இருவரும் எழுந்து நிற்கின்றனர்.)
நாகரத்தினம் : வணக்கம் அம்மா… சொல்லி அனுப்பி இருந்தா நானே வந்து இருப்பேனே… முதலாளி வீட்ல நான் ஒங்கள பார்த்தது இல்லயே இது வரைக்கும்… உட்காருங்க மேம்…
(சுகுணா நின்று கொண்டே பேசுகிறார்)
சுகுணா : ஆரம்பிக்கப் போற பேக்ட்டரில அன்ஸ்கில்டு லேபருக்காக சின்ன பசங்கள சேர்த்துக்கலாம்ன்னு யோசனை சொன்னது நீதானா?
நாகரத்தினம் : நான் சொன்னேன் தான்… நம்ம ஏரியா ரிமோட் ப்ளேஸ்ங்றதால… இன்ஸ்பெக்சன் எல்லாம் இருக்காது… அதனால
சுகுணா : ஊரார் பசங்களோட படிப்புல மண்ணை அள்ளிப் போடலாம் அதானே
நாகரத்தினம் : என்ன மேம் இதுல… படிச்சு முடிச்சு சம்பாதிக்க போகப் போறாங்க… நாங்க இப்பவே அவங்கள சம்பாதிக்க வைக்கிறோம் இல்ல…
(சிரிக்கிறார்)
(ஒளி மங்கலாகிறது. சுகுணா, நாகரத்தினத்தை மொத்து மொத்து என்று மொத்துகிறார்)
நாகரத்தினம் : என்னங்க… தொழிற்சாலை நடத்த போறது… ஒங்க தம்பி என்னை எதுக்கு மொத்தறீங்க… அவரை வெளுத்து வாங்குங்க… போங்க…
(சுகுணா, மீண்டும் நாகரத்தினத்தை தாக்குகிறார்)
ரத்தினம் : அண்ணே… அவங்க ஒரு முடிவோட புல் பார்மல் இருக்காங்க… நான் இதுலேந்து விலகிக்கறேன்… என்னை விட்டுடுங்கன்னு சொல்லுங்க…
நாகரத்தினம் : மேம்… நான் இந்த லேபர் கான்ட்ராக்ட்டர் தொழிலையே விட்டுவிட்டு வேற ஏதாவது தொழில் செஞ்சு பொழச்சுக்கறேன். ஒங்க பேக்ட்டரிக்காக மட்டும் இல்ல வேற யாருக்காகவும் சைல்ட் லேபர் பத்தி நான் நெனச்சு கூட பார்க்க மாட்டேன்…
சுகுணா : அப்படி வா வழிக்கு… நாளைக்கு நீ ரங்கா ராவ் அண்ணனோட ஜனங்கள வீடு வீடா போய் பார்த்து அவங்க பசங்கள ஸ்கூலுக்கு அனுப்ப சொல்லணும்… கொடுத்த அட்வான்சை திருப்பிக் கேட்க கூடாது… புரியுதா?
நாகரத்தினம் : சரிங்க மேம்
(சில நிமிடங்கள் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. விளக்குகள் மீண்டும் ஒளிரும் போது அதே காட்சி அமைப்பு)
நாகரத்தினம் : ரத்தினம் யோவ் எழுந்துருய்யா… சேர்ல உட்கார்ந்துகிட்டே தூங்கறே விடிஞ்சு ரொம்ப நேரம் ஆயிடுச்சு போல வெய்யில் சுள்ளுன்னு அடிக்குதே…
ரத்தினம் : நீங்களும் தான் உட்கார்ந்துகிட்டே தூங்கி இருக்கீங்க…
நாகரத்தினம் : அடிச்சு போட்டா மாதிரி தூங்கிட்டேன்யா…
ரத்தினம் : அடிச்சு போட்டா மாதிரி என்ன… நேத்து ராத்திரி அடிச்சு தான் போட்டுச்சே ஒங்க முதலாளியோட அக்கா… பொழுது விடிஞ்சதும் மறந்திடுச்சா..?
நாகரத்தினம் : ஆமாம்யா என்ன அடி… முதுகு வீங்கி போச்சு மூஞ்சி மாறிப் போச்சு.
(கைபேசி ஒலிக்கிறது)
நாகரத்தினம் : என்ன முதலாளி குட் மார்னிங்… சொல்லுங்க… ரொம்ப நேரமா நம்பர் ட்ரை பண்றீங்களா… இப்ப தான் எழுந்தேன் நேத்து நைட்… ஒங்க அக்கா எங்க வீடு தேடி வந்து குழந்தை தொழிலாளர் பயன்படுத்தக்கூடாதுன்னு அடிச்சு அடிச்சு பாடம் சொல்லிட்டுப் போனாங்க… அவங்க முதல்ல ஒங்கள தான் அடிச்சு இருக்கணும் திருத்தி இருக்கணும்… உடன் பிறந்த பாசம் தடுச்சுடுச்சு போல… கையில கிடைச்சவனை அடிச்சு பின்னிட்டாங்க போங்க…
குரல் : யோவ்… ஹேங் ஓவரா… என்ன உளர்றே?
நாகரத்தினம் : வாங்கி வெச்ச சரக்கை அடிக்க விடலயே ஒங்க அக்கா… இதில ஹேங் ஓவர் எங்கே? … ஊராருக்கு நல்லது சொல்றது சரிதான்… வன்முறை பிரயோகிக்காம புத்திமதி சொல்லுன்னு ஒங்க அக்கா கிட்ட சொல்லி வைங்க…
குரல் : கல்யாணம் காட்சி இல்லாம இருந்த என்னோட சுகுணா அக்கா மர்ம காய்ச்சலால போய் சேர்ந்து ரெண்டு வருசம் ஆவுதுய்யா… இன்னிக்கு தான் அவளோட நினைவு நாள்… போய்ட்ட அக்கா, எப்படிய்யா உன் வீடு தேடி வருவா… போய் நல்லா ஒரு குளியல் போட்டு தெளிவாய்ட்டு கூப்பிடு…
நாகரத்தினம் : ஐயா… அப்ப சினிமால எல்லாம் காட்றா மாதிரி ஒங்க அக்காவோட ஆவிதான் என்னை நேத்து ராத்திரி மொத்து மொத்துன்னு மொத்தி இருக்கு… அதுலயும் ஒரு நன்மை தான் கிடைச்சு இருக்கு எனக்கும் இந்த ஊருக்கும்… சின்ன பசங்கள வேலைக்கு சேர்க்க கூடாதுன்னு ஒங்க அக்கா ஆவி சொல்லிட்டாங்க… அதனால நீங்க லோக்கல் எடிசன் பேப்பர்ல ஆட் போட்டு சேர்த்துக்கங்க… என்னை ஆள விடுங்க…
குரல் : நீ சொல்றது உண்மைதான் போலய்யா இங்க நான் இருக்கிற ரூம்ல எங்க அக்கா சேர்ல உட்கார்ந்துகிட்டு இருக்காய்யா…
நாகரத்தினம் : அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவாதுங்கறதை அடிச்சு ஒங்க உடன்பிறப்பு புரிய வைப்பாங்க… கத்துக்கங்க… நான் வைக்கிறேன்…
(இணைப்பைத் துண்டிக்கிறார்)
யோவ் ரத்தினம் கீழ போகலாம்… வாய்யா… பால் இருக்காது… பிளாக் டீ போட்டு சாப்பிடுவோம்… அந்த மேடம் ஆவி அவங்க தம்பியை கவனிச்சுகிட்டு இருக்காங்களாம்… இனிமேல் இங்க வர மாட்டாங்கன்னு நெனக்கறேன்…
(இருவரும் மேடையின் வலப் பக்கம் நோக்கிச் செல்கிறார்கள்.)
(திரை)
(நிறைந்தது)
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பிடிவாதம்
இரா.கலைச்செல்வி
September 9, 2026
கள்வர் தலைவன்
பம்மல் சம்பந்த முதலியார்
September 9, 2026
நடுவில் இருந்தது
சு.அப்துல் கரீம்
September 6, 2026
