ஊசலாடும் உறவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2026
பார்வையிட்டோர்: 120 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதவில் பொருத்தப்பட்டிருந்த அழைப்பு மணி ஒலித்தது. தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் சங்கீதா. அதனால், அழைப்பு மணி ஒலித்தவுடனேயே ஓடிப்போய் கதவைத் திறக்க அவளால் முடியவில்லை. ஆனால், மணியோ தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. ஒருவாறு அலங்காரத்தை முடித்துக் கொண்டு வந்தாள் சங்கீதா. கதவில் பொருத்தியிருந்த உருப்பெருக்கிக் கண்ணாடியின் வழியாக வந்திருப்பவர் யாரென்று பார்த்தாள். அவளால் நம்பவே முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. கதவைத் திறப்போமா இல்லை. திறக்காமல் இருந்துவிடுமோமா? மனதிற்குள் ஒரு பெரிய போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

ஆயிரம் தான் நடந்திருந்தாலும் வீடு தேடி வந்தவர்களை வாங்கன்னு ஒரு வார்த்தைக் கூப்பிடுவதுதானே பண்பு என்று நினைத்தாள். அடுத்த நிமிடம் வந்திருப்பவர் என் முகத்தில் ஏதேனும் அக்கினித் திரவத்தை ஊத்திவிட்டு ஓடிவிட்டா? கதவில் இருந்த கை தானே கீழே நழுவியது.

உள்ளே ஆளிருப்பது வெளியே இருந்தவருக்கு நல்லா தெரிந்தது. அதனால் தொடர்ந்து கதவைத் தட்டிக் கொண்டே இருந்தார்.

இந்த நிலை எவ்வளவு நேரத்துக்குத்தான் நீடிப்பது? சுவரில் இருந்த கடிகாரம் சங்கீதா வேலைக்குப் போக வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதைக் காட்டிக் கொண்டிருந்தது.

இந்த நிலை இனிமேலும் நீடிக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தாள் சங்கீதா. வெளியில் இருப்பவர் யாரென்று தெரிந்தும் தெரியாதது போல, “யாரது?” என்று கேட்டபடி கதவைத் திறந்தாள். வெளியில் நின்றவர், “சங்கீதா” என்றார்.

“வாங்க அத்தை” என்ற அழைக்க நினைத்தாள் சங்கீதா. ஆனா! வாய் அதற்கு ஒத்துழைக்க மறுத்தது.

வந்திருந்தவரை முறைத்துப் பார்த்துவிட்டு. கதவை மூட போனாள்.

கதவில் கையை வைத்தபோது, ‘என் மகன் கடைசியா உன்னையும் பிள்ளைகளையும் பார்க்க வேணும் என துடிக்கிறான். வர்றீயா?” என்று நா தழுதழுக்கக் கேட்டாள் வந்திருந்தவர்.

சங்கீதா பதில் ஏதும் சொல்லவில்லை. அப்படியே நின்றாள்.

“உன் புருசன் ஆஸ்பத்திரியிலே உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறான். ஒரே ஒரு முறை அவனை வந்து பார்த்துவிடு சங்கீதா” என்ற சொல்லிவிட்டு, கிளம்பிவிட்டார் அந்த அம்மா.

சங்கீதா, அருகில் இருந்த சோபாவில் போய் உட்கார்ந்தாள். அவளது நினைவலைகள் பின்னோக்கி சென்றன.

சங்கீதாவின் வீட்டு வாசலில் கார் ஒன்று வந்து நின்றது. காரிலிருந்து சங்கீதாவின் அப்பா ஆறுமுகமும் அவருடைய தூரத்து உறவு அக்காவும் இறங்கினாங்க.

சங்கீதாவும் அவருடைய தாயும் அந்த அம்மாவை வாய் நிறைய “வாங்க” என்று சொல்லி வரவேற்றாங்க.

கார் வந்ததும், சங்கீதாவின் அக்கம் பக்கத்து வீட்டக்காரங்க எல்லாம் வந்துட்டாங்க. அங்கே ஒரு பெரும் கூட்டமே கூடிவிட்டது.

ஆறுமுகம், வந்திருந்தவங்களுக்குத் தன் அக்கா அஞ்சலை சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கிறாங்க” என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

ஆறுமுகத்தின் அக்கா அஞ்சலையை அங்கே யாருக்கும் அவ்வளவாக தெரியாது. அதனாலே அந்த அம்மாளிடம் யாரும் எதுவும் பேசலே. அவங்களை வேடிக்கை பார்த்துவிட்டு எல்லோரும் எழுந்து போய்விட்டார்கள்.

அஞ்சலையும் பயணக் களைப்பு தீர கொஞ்ச நேரம் படுத்துத் தூங்க வேணும் என்று சொல்லிவிட்டு, படுத்துட்டாங்க.

ஆறுமுகம் அக்காளுக்குச் சமைப்பதற்கு வேண்டியவற்றை வாங்க புறப்பட்டுப் போய்விட்டார்.

அஞ்சலை தூங்கி எழுந்தவுடன் தயாராக சமைத்திருந்த சாப்பாட்டை எடுத்து சங்கீதாவின் தாயார் பரிமாறினார்.

சாப்பாடு ஆச்சு. அஞ்சலை தன்னுடைய குடும்பத்தைப் பற்றி ஆறுமுகத்திடம் விளக்கமாகச் சொல்லிக் சொல்லிக் கொண்டிருக்க, ஆறுமுகமும் அவர் மனைவியும் மகளும் பக்கத்தில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டு இருந்தாங்க.

தனக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவனுக்கு ஊரிலேதான். கல்யாணம் செய்து வைக்க வேணும் என்றும் அதற்காகத்தான் தான் வந்திருப்பதாகவும் அஞ்சலைச் சுருக்கமாகச் சொன்னார்.

”இந்த ஊரிலே எனக்கு உன்னைத் தவிர வேறு யாரையும் தெரியாது தம்பி. அதனாலே ஒரு நல்ல இடமா பார்த்து முடிவு செய்திட்டா, நான் புறப்பட்டுப் போய், பையனை அழைச்சுகிட்டு வந்திடுவேன்” என்றார் அஞ்சலை.

“அதற்கு என்னக்கா? செஞ்சிட்டா போச்சு” என்றார் ஆறுமுகம்.

அன்றிரவு ஆறுமுகத்தின் மனைவி, “என்னங்க, கையிலே வெண்ணெயை வச்சுக்கிட்டு நெய்க்கு அலைறீங்க?” என்று கேட்டாள்.

“நீ என்ன சொல்றே? எனக்குப் புரியலேயே” என்றார் ஆறுமுகம்.

“நம்ம மக சங்கீதா இருக்கிறப்போ. நீங்க ஏன் ஊரிலே பொண்ணு பாக்கப் போறீங்க?” என்றாள் அவருடைய மனைவி.

“எல்லாம் காரணமாத்தான்” என்றார் ஆறுமுகம்.

“என்ன காரணம் என்கிறீங்க?” என்று கேட்டாள் மனைவி.

“நமக்கு இருப்பது கறிவேப்பிலை கொத்தாட்டம் ஒரே ஒரு பொண்ணு. அவளை நம்ம கண்ணுக்குத் தெரியாத ஊருக்கு அனுப்பிவிட்டு, நம்மாலே நிம்மதியா இருக்க முடியுமா?” என்று மனைவியைப் பார்த்துக் கேட்டார் ஆறுமுகம்.

“என்னங்க புரியாமல் பேசுறீங்க? இப்போ நம்முடைய நிம்மதிதான் முக்கியமா? நம்முடைய பிள்ளை நிம்மதியா? சந்தோஷமா இருக்கிறதுதானே முக்கியம்” என்று கூறினாள். மனைவி.

“என்ன இருந்தாலும் கோழி தன் குஞ்சுகளைச் சிறகுக்குள்ளே வைத்துக்கிட்டு இருக்கிற மாதிரி, நாம் நம் மகளை வைத்துக்கிட்டிருக்கிறோம்” என்றார் ஆறுமுகம்.

“எவ்வளவு நாளைக்குத்தான் வைத்திருக்கப் போகிறோம்? என்றைக்காவது ஒரு நாள் பறவை கூட்டை விட்டுவிட்டு போவது மாதிரி, பெண்ணானவ பிறந்த வீட்டை விட்டு வேறொரு வீட்டுக்குப் போய்தானே ஆகணும்’ என்று கூறினாள் ஆறுமுகத்தின் மனைவி.

“நீ சொல்வது உண்மைதான். ஆனால் நம்முடைய கண்ணுக்குத் தெரியாத தூரத்துக்கு அனுப்ப வேண்டுமா? என்று தான் யோசிக்கிறேன்” என்றார் ஆறுமுகம்.

“இன்றைக்கு ஊரைவிட்டு ஊர் போவதும், நாடு விட்டு நாடு போவதும் சாதாரணங்க. இன்றைக்கு இங்கே இருக்கிறவங்க. நாளைக்கு இன்னொரு ஊருலே இருக்கிறாங்க. இப்போ உங்கள் அக்கா இங்கே இருக்கிறாங்க. நாளைக்குச் சிங்கப்பூருக்குப் போய் விடுவாங்க. அதனாலே, நாம் நினைச்சப்போ, நம் மகளை இங்கே அனுப்பச் சொன்னா உங்க அக்கா அனுப்பி வைக்கவா மாட்டாங்க?” என்று ஆறுமுகத்தின் மனைவி கூறினாள்.

“அப்படி என்றா சொல்றே?” என்று ஆறுமுகம் கேட்டார்.

“ஆமாங்க! இதிலே யோசிச்க ஒன்னுமில்லேங்க. நீங்க சரியின்னு சொல்லுங்க. காலையிலே நானே உங்க அக்காவிடம் இதைப் பத்தி பேசுறேன்” என்றாள் ஆறுமுகத்தின் மனைவி.

“இருந்தாலும் மக சங்கீதாவிடம் ஒரு வார்த்தைக் கேட்டுவிட்டு சொல்லு” என்றார் ஆறுமுகம்.

“மகள் என்ன கரும்பு தின்ன கூலியா கேட்பாள்?” நாம சொல்றதை அவள் எப்போது தட்டியிருக்கிறாள்? என்று அவரின் மனைவி கேட்டாள்.

”உண்மைதான். ‘ஆனால் இது அவளுடைய எதிர்கால வாழ்க்கை பாரு. நாளைக்கு நம்ம மேலே… ஒரு பேச்சு வந்திடப்படாது பாரு” என்றார் ஆறுமுகம்.

“காலையிலே கேட்டுட்டாப் போகுது” என்றாள் மனைவி. சங்கீதா, அப்பா – அம்மா பேசியதை எல்லாம் அவர்களுக்குத் தெரியாமல் கேட்டுக் கொண்டுதான் படுத்திருந்தாள்.

மறுநாள் ஆறுமுகம் கேட்டபோது “இதிலே நான் சொல்வதற்கு என்னப்பா இருக்கு? உங்களுக்கும் அம்மாவுக்கும் தெரியாததா எனக்குத் தெரிந்துவிடப் போகுது?” என்றாள் சங்கீதா.

“எனக்கென்று ஒரு அபிப்பியமும் இல்லை அப்பா. எனக்கு எது நல்லதென்று என்னை விட உங்க இருவருக்கும் தான் நன்றாகத் தெரியும். எனக்காகக் கவலைப்பட நீங்க இருக்கும்போது நான் வேறு ஏன் கவலைபட வேணும்?” என்றாள் சங்கீதா.

சங்கீதா எப்போதுமே அப்படித்தான். பாவாடையோ, பொம்மையோ இதுதான் வேண்டும் என்று அவள் கேட்டதில்லை. பெற்றவங்க பார்த்துக் கொடுப்பதைப் பிரியமாக வாங்கிக் கொள்வாள். அவள் வளர்ந்த விதம் அப்படி.

அதன் பிறகு அஞ்சலை அங்கிருந்தபடியே மகனை ஊருக்கு வரவழைத்தாள்.

பையன் கண்ணுக்கு ரொம்ப லட்சணமாக இருந்தான். ஜம்முன்னு கமலஹாசன் மாதிரி இருந்தான். நல்லா படிச்சிட்டு நல்ல வேலையிலும் இருந்தான்.

சங்கீதாவுக்கு மிகவும் பொருத்தமானவனாகவும் இருந்தான்.

மாப்பிள்ளையை எல்லாருக்கும் பிடிச்சுப் போய்ட்டு.

ஊரே பாராட்டுகிற அளவுக்கு ஆறுமுகம் தன் மகளுக்குக் கல்யாணத்தைச் செய்து முடித்தார்.

மாப்பிள்ளை ரொம்ப நாளைக்கு அங்கே தங்க முடியாத நிலை. அதனாலே ஆக வேண்டிய காரியங்களைக் கொஞ்சம் அவசரமாகவே செய்து முடித்துக் கொண்டு சங்கீதாவோடும் தாயோடும் ஊரைவிட்டு கிளம்பிவிட்டான் வேணு.

பிறந்த வீடு பின்னுக்கு இழுக்க, புகுந்த வீடு முன்னுக்கு இழுக்க இடையில் சிக்கி தவித்து போனாள் சங்கீதா. ஆறுமுகமும் அவருடைய மனைவியும் அழுகையை அடக்கிக் கொண்டு அவளுக்கு விடை கொடுத்தார்கள். உற்றார் உறவினர், தோழியர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு கைபிடித்தவனுடன் சிங்கப்பூர் வந்து சேர்ந்தாள் சங்கீதா.

அந்த வீட்டில் அத்தை அஞ்சலையையும் அத்தான் வேணுவையும் தவிர வேறு யாருமே இல்லை. அதனால் சங்கீதா அத்தை மீதும் அத்தான் மீதும் அளவுக்கு அதிகமாகவே அன்பு கொண்டிருந்தாள். அவங்களும் அப்படிதான் இருந்தாங்க.

காலச்சக்கரம் சுழன்றோடியது. ‘ஆசை அறுபது நாளு. மோகம் முப்பது நாளு’ என்ற சொல்றபடி சங்கீதா வாழ்க்கை மாறத் தொடங்கியது.

வேண்டாதவர் கைப்பட்டாலும் குற்றம்; கால் பட்டாலும் குற்றம் என்பதுபோல, சங்கீதா எதைச் செய்தாலும் அதிலே குற்றம் கண்டுபிடிக்கவும், அதைச் சாக்காக் கொண்டு அவளைத் திட்டவும் ஆரம்பித்தார் அஞ்சலை.

வேலையிலிருந்து களைத்துச் சோர்ந்து வரும் மகனிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்ல, வேணு முதலிலே வாயாலே கண்டித்தான்; பிறகு கையாலே தண்டிக்க ஆரம்பித்தான்.

தாரத்தோடு சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தவன் அவளைத் தனியே விட்டுவிட்டு தாயோடு சேர்ந்து சாப்பிடத் தொடங்கினான்.

கொஞ்ச நாளில் மது குடித்துவிட்டு வர ஆரம்பித்தான். பேசக்கூடாத வார்த்தைகளைப் பேசி சங்கீதாவை வாட்டி எடுத்தான். ஆனால் வாரிசுக்கு ரெண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டான்.

வேணு வீட்டிற்கு வரும்போது எல்லாம் சங்கீதா நெருப்பில் உட்கார்ந்திருப்பதுபோல் இருந்தாள்.

எந்த நேரத்தில் என்ன செய்வான் என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள். அழுகின்ற குழந்தையை அப்படியே விட்டுவிட்டு அவன் அழைச்சவுடனே அவன் கிட்டே போய் நிக்கணும்.

தன் துக்கத்தைச் சொல்லவும் அவளுக்கு யாருமில்லே. சில நேரங்களில் தான் இருக்கின்ற நரகத்திலிருந்து மீள தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைப்பாள். அடுத்த நிமிடம் ‘”அம்மா” என்று அழைத்துக் கொண்டு வரும் தன் அன்புச் செல்வங்களைக் கண்டதும் அவளிடமிருந்து அந்த எண்ணம் எங்கோ ஓடி மறைந்துவிடும்.

கொண்டவளை விட்டுவிட்டு, கண்டவளோடு சுற்றத் தொடங்கிவிட்டான் வேணு. ஆனால், ஒரு நாள் சிங்கப்பூருக்கு வந்திருக்கும் சங்கீதாவன் பக்கத்து வீட்டுக்காரன், போன் செய்து அவளிடம் பேசியதைக் கேட்ட அஞ்சலை, அதற்கு கண்ணு, காது, மூக்குன்னு வைத்து பெரிதாக்கிவிட்டாள். அதைக் கேட்ட வேணு, சங்கீதா மீது நடத்தைக் கெட்டவள், தனக்குத் துரோகம் செய்திட்டாள் என குற்றப்பத்திரிகை வாசிக்கத் தொடங்கிவிட்டான்.

அதன் பிறகு. இனிமேலும் இந்த வீட்டில் தன்னால் வாழ முடியாது. தன் குழந்தைகளின் எதிர் காலமும் பாதிக்கும். அதனால் அந்த வீட்டிலிருந்து வெளியேறி விட வேண்டும் என்று எண்ணினாள். தன்னைப் போன்றவர்களுக்கு உதவ பல அமைப்புகள் உள்ளன என்பதைத் தெரிந்து கொண்டு, அவற்றின் உதவியை நாடிச் சென்றாள் சங்கீதா.

அந்த அமைப்புகளின் உதவியால் அவளுக்கு இருக்க ஓர் இடமும் வேலையும் கிடைத்தன.

தன் பிள்ளைகளைக் குழந்தை பராமரிப்பு நிலையத்தில் விட்டுவிட்டு, வேலை செய்து கொண்டு, தன் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்காக வாழ்ந்து வருகிறாள்.

மதுவுக்கும் மாதுக்கும் அடிமையான வேணு இன்று. எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறான். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?

மரணத்தின் மடியில் தவழும் அவனுள்ளத்தில் எழுந்த ஆசைதான் கடைசியாகத் தன் மனைவியையும் பிள்ளைகளையும் பார்க்க வேணும் என்பதாகும். வேணு தாலி கட்டிய மனைவியை ஒழுங்காக வைத்திருந்தானா? தன் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையாவது செய்தானா? இல்லையே. இருந்தாலும், தூக்குத் தண்டனை கைதியைத் தூக்கிலிடுவதற்கு முன்பு அவனது கடைசி ஆசையை நிறைவேற்றி வைப்பதுபோல, வேணுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற, இதோ சங்கீதா புறப்பட்டுவிட்டாள். அதற்கு இன்னொரு காரணமும் உ உண்டு. அவள் கழுத்தில் இன்னும் தொங்கும் தாலிதான். கணவனை விட்டு பிரிந்தாலும் அவன் கட்டிய தாலியை அவள் எடுக்கவில்லையே. பொட்டையும் பூவையும் வைக்காமல் இல்லையே.

மனைவியையும் பிள்ளைகளையும் பார்த்த வேணுவின் கண்கள் கண்ணீர்த் தொட்டியில் மிதந்தன. எந்தக் கைகளால் அடித்து துன்புறுத்தினானோ அந்தக் கைகளால் அவளைக் கும்பிட்டான். அது, அவன் தன் மனைவியின் பெருமையை உணர்ந்து விட்டான் என்பதைக் காட்டுவது போல் இருந்தது.

– எல்லைக்கோடு (சிறுகதைகள்), பதிப்பாண்டு: 2006, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

இரா.துரைமாணிக்கம்2 இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *