வெத்தலை மடிச்சுக் கொடுக்க ஆசையா?

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 6, 2026
பார்வையிட்டோர்: 217 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

சுவரில் செங்கல்லால் கட்டப்பட்டிருந்த ஷெல்பிற்குக் கதவு கிடையாது. அதன் இரண்டாம் தட்டில் வலப்புற ஓரத்தில் இருந்தது அந்த உரல். அது சின்ன இரும்பு உரல் அம்மா வயதான காலத்தில் அதில்தான் வெற்றிலையைக் கிள்ளிப் போட்டு கொட்டைப் பாக்கு சுண்ணாம்பு அளவாய்க் கலந்து ‘டொக்கு! டொக்கு! என்று இடித்து உருண்டு, திரண்ட திரட்டை பல்லெல்லாம் போன காலத்தில் வாயில் போட்டுக் குதப்புவாள்.

‘பல்லுப் போனா சொல்லுப் போச்சு!’ண்னு ஒரு பழ மொழி உண்டு!. ஆனால் அவள் வகையில் அது சுத்த தப்பு!. அவள் கடைசி மூச்சு விடுகிறவரை உச்சரிப்பும், நினைவாற்றலும் அப்படி ஸ்பஷ்மாக இருக்கும்.

இப்ப அதெல்லாம் விட, பொங்கலுக்கென்று வீட்டைச் சுத்தம் பண்ணி, வெள்ளையடிக்க, வீட்டு ஷெல்ஃபை ஒதுங்க வைத்த போது கிடைத்தது அந்த உரல்.

உரல் மட்டுமா கிடைத்தது? அம்மா உதிர்த்துப்போன நியாபக மலரும் கூடவே கிடைத்தது!. உலகம்மாள் அந்த உரலை எடுத்து நாசியருகே வைத்து நுகர்ந்தாள். இறந்து போன அம்மாவின் வெற்றிலை குதப்பிய வாய் வாசம் மணந்தது! உலகம்மாவுக்கே இப்போ வயது எழுபது!

கண்ணீர் வழிய, கடந்த காலத்தை நினைத்தாள். அம்மா…, அவள் அதென்ன அப்படியொரு வெள்ளைக்காரி மாதிரி சிவப்பு?! எண்பது வயதிலும் சுருள் போகாத ஆனால் வெளிர் நிறக் கூந்தல்.

அவளுக்கு நல்ல கருத்த கேசம்! வயது மூப்பில் நரைக்கத் தொடங்கிய காலம் நன்றாக நினைவிருக்கிறது. மற்ற யாருக்கும் போலில்லை அவளுக்கு! கருங்கூந்தலில் ஊடே.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நிஜ தங்க நிறத்தில் முடிகள்! நாளாக நாளகத்தான் அந்த தங்க முடிகளே வெள்ளிக்கம்பியாக மாற ஆரம்பிக்கும் ஆர்வத்தோடு கேட்டிருக்கிறாள்.. வெள்ளியில் தங்க முலாம் பூசுவார்கள் கேள்விப்பட்டிருக்கேன். உனக்கென்னம்மா தங்கதில் வெள்ளி முலாம் பூசுகிறான் கடவுள்?! அவளிடம் பதிலிருக்காது. சிரிப்பு ஒன்றைச் சிந்துவாள்.

மாலையானால் பற்கள் நன்றாய் இருக்கையில்,… உலகம்மாளும் கைக்குழந்தையாய் இருக்கையில், அம்மா வெற்றிலையைக் வாயில் மென்று குதப்பி அழகாய் நாக்கு நுனியில் துளியூண்டு வைத்து எடுத்துக் கொள்ளச் செய்வாள்! இன்றைக்கு எந்த ஏ1ம் அதைச் செய்துவிட முடியாது. அந்த வெற்றிலைக் குதப்பலில் அம்மாவின் எச்சில்கலந்த அன்பு மணக்கும். பல் போனதும் அந்த பாக்கியம் எங்களுக்குப் போனது!. ஆனால், அதன் பிறகு, இரும்பு உரல் அதை ஈர்த்துக் கொண்டது!. என்ன எங்களுக்கு அன்று அம்மா குதப்பிக் கொடுத்தது போல, இப்போ.. இரும்பு உரல் தான் இடித்த வெற்றிலைக் கலவையை அம்மா வாய்க்குக் கொடுக்கிறது..!

தாய்க்குத் தாயான இரும்பு வெற்றிலை உரலை இப்போது பார்க்க முடிகிறது! அம்மாவைத்தான் பார்க்க முடியவில்லை! ‘வெற்றிலை மடிச்சுக் கொடுக்க ஆசையா?’ன்னு அம்மா கேட்பதாக அம்மாவின் போட்டோ பேசுகிறது! ‘தாயோடு அறுசுவை போம்!’ னு சும்மாவா சொன்னாங்க?

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *