எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!
கதையாசிரியர்: ஆர்.மணிமாலா
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2026
பார்வையிட்டோர்: 57
(2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
அத்தியாயம் – 13

தலையில் சம்மட்டியால் அடிப்பதுப்போல் பயங்கரமாய் வலித்தது. கொல்லைப்புறத்தில் கிணற்று மேட்டில் அமர்ந்திருந்த சிந்து தலையை அழுத்தி விட்டுக்கொண்டாள்.
சில்லென்று காற்று வீச… அருநெல்லி மரத்திலிருந்து பற்றியிருந்த காய்கள் சிதறின. ஒன்றிரண்டு இவள் தலையையும் பதம் பார்த்தன. காற்றில் அலைந்த அம்மரத்து இலைகள்… டிராபிக் கான்ஸ்டபிள் போல… கைவீசின. யதார்த்தமாய்… சிதறியிருந்த காய்களை எடுக்க வேண்டுமென்று கூட தோன்றாமல் அமர்ந்திருந்தவளுக்கு…மனசுக்குள் என்னவோ ஒன்று மேலேயும் வராமல், உள்ளேயும் இறங்காமல் நெருடலாய் இருந்தது. கை, கால் நரம்புக்குள் பூச்சி புகுந்து பிறாண்டுவதுப் போல் இம்சை!
“என்னாச்சு எனக்கு?”
“கமலி…கந்தசாமி வீடுவரைக்கு போய்விட்டு வர்றேன்!”
“சரிங்க.. சாப்பிட வந்துடுங்க…லேட் பண்ண வேண்டாம் மாத்திரைப் போடணும்…”
“சரி…சரி…ஞாபகமிருக்கு!”
செருப்பொலி சத்தம் தேய்ந்து. மறைந்த பின்… எழுந்து உள்ளே வந்தாள் சிந்து.
ஹாலில் டி.வி… வாய்மூடி அமர்ந்திருந்தது.
அப்பா இல்லாத தைரியத்தில் சுவிட்சைப் போட்டாள். டி.வி. சப்தம் கேட்டு… மதிய சமையல் மும்முரத்தில் இருந்த கமலி ஹாலுக்கு வந்தாள்.
“நீயா… அவர் தானோன்னு நினைச்சேன்” உள்ளே செல்ல முற்பட்டாள்.
“அம்மா…”
“ம்…” திரும்பினாள்.
“தலைபயங்கரமா வலிக்குதும்மா! கொஞ்சம் தைலம் தேய்ச்சு விடறியா?”
“அ..அது..வந்து… வேலையிருக்கு…தைல வாசத்தோடு சமைக்க முடியாது. அவர் வேற வர்ற நேரம்!” அவசரமாய் சொல்லிவிட்டு உள்ளேச் செல்ல…
சிந்து கண்ணீர் மல்க பார்த்தாள்.
“நான் உன் பொண்ணும்மா!”
வருத்தத்துடன் சேனலை மாற்றினாள்.
செய்திசேனலின் அடியில் ஸ்க்ரோலிங் ஒடிக் கொண்டிருந்தது.
“பிலிம் பெஸ்டிவலில் சிறந்த குறும்படமாக குறுநில மன்னர்கள்” தேர்ந்நெடுக்கப்பட்டது. அதன் இயக்குனர் தேவா… நிறைய விளம்பரப் படங்கள் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிந்துவின் உதடுகள் மகிழ்ச்சியில் நெளிந்தன. நேற்று மாலை ஹோட்டலில் இருந்த டி.வி.யில் தேவா பரிசு பெற்ற விபரத்தை அறிந்தவளுக்கு உள்ளம் முழுக்க பரவசமாய் இருந்தது.
ஒரு போன் பண்ணி வாழ்த்துச் சொல்லலாமா என்றுக் கூடத் தோன்றியது. ஆனால் அதை அவன் வேறு விதமாய் எடுத்துக் கொள்ளக் கூடும் என்ற பயம் தடுத்தது.
அன்று அவள் பேசியதோடு சரி! அதன் பிறகு அவன் கண்ணிலேயேப் படவில்லை. நாகரீகமாய் ஒதுங்கிவிட்டான். இன்னும் சொல்லப் போனால். இப்போது என்னை பற்றிய ஞாபகம் கூட இருக்காது. நான் தான் அவனை நினைக்கிறேனோ? மனசுக்குள் உண்டான இம்சைக்கும் அவன் நினைவுகள் தான் காரணமோ? என்ன அபத்தம் இது?
தலையை உதறிக் கொண்டு எழுந்தாள்.டிவியை அணைத்தாள். மற்ற வேலைகளில் தன்னை ஈடுபடுத்தினாள். ஆனாலும்….சுவற்றில் உமிழப்பட்ட வெற்றிலைக் கறையாய்… நினைவுகள் சிதறலாய் பதிந்திருந்தன.
மறுநாள் நல்ல காய்ச்சலால் அவதிப்பட்டாள் சிந்து. கமலி தன்னைக் கடந்துச் சென்ற சிந்துவை பார்த்தாள். தைல வாசம் மூக்கை நிரடியது. முகம் சோர்ந்துப் போயிருந்தது.
கிரைண்டரில் அரிசியைக் களைந்துப் போட்டிருந்தாள். மாவை அள்ளி அலுமினிய டப்பாவில் ரொப்பி விட்டு கிரைண்டரை கழுவ நகர்ந்தாள்.
“இந்தா!”
அம்மாவின் குரல் கேட்டுத் திரும்பினாள். கையில் காபி டம்ளர். ஹாலில் விஸ்வநாதன்.
”என்னம்மா?”
“காபி!”
“அப்பாவுக்குத் தரணுமா?”
வியப்பாய் கேட்டாள்.
“உனக்குத்தான்!”
”எனக்கா?” சோர்ந்த முகம் ஆச்சரியப்பட்டது.
“ம்!”
“வேணாம்மா…அப்பா பார்த்துடப் போறார்…!”
“…”
“அப்புறம்…எப்பவும் உன் கையால தரணும்னு ஆசை வந்துடும்… வேணாம்மா!” இதமான குரலில். ஆனால் வார்த்தைகள் வலியதாய் வந்தது.
சிந்து போய் விட்டாள்.
கமலிக்கு தன் தவறும், இயலாமையும் புரிந்தது. அவள் இதுவரை காபியோ, டீயோதன் கையால் சிந்துவிற்குத் தந்ததில்லை. போட்டு சமையல் மேடையில் வைத்து விடுவாள். அவளாய் வந்து எடுத்து குடிப்பாள்.
“அப்படியொரு மோசமான சூழ்நிலை தானே அந்தப் பெண்ணிற்கு இந்த வீட்டில் நடத்துக் கொண்டிருக்கிறது?” சற்று நேரம் கசப்பாய் தன்னையுணர்ந்தாள்.
சர்ப்ரைஸ் விசிட்டாக சொல்லாமல், கொள்ளாமல் பாஸ்கரும், சாமுத்ரிகாவும் வந்துவிட விஸ்வநாதனுக்கும், கமலிக்கும் தலைகால் புரியவில்லை.
சமைத்தவைகளை வேனில் ஏற்ற காத்திருந்த சிந்து வாய் நிறைய வரவேற்றாள்.
“கமலி..நான் மார்க்கெட் போய்விட்டு வந்திடறேன். மீனும், கறியும் சமைச்சுப்போடு!”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்ப்பா! டாக்டர்ஸ் மீட்டிங்க்காக வந்தோம். உடனே கிளம்பிப் போகணும். என்ன இருக்கோ… அதை மட் டும் சாப்பிடறோம்!” என்றான் பாஸ்கர்.
“ரொம்ப சிம்ப்பிளாதாம்பா சமைச்சிருக்கேன். ரசமும், கொத்தவரங்காய் பொரியலும்!” கமலி தயக்கமாய் சொன்னார்.
அவனுக்கு பிடிக்காத காய்! முகம் சுளித்தான்.
“ஓக்கே…ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறோம். வித்யா. எப்படியிருக்காளாம்? போன் பண்ணாளா?”
“தினமும் போன் பண்றா. ரொம்ப சந்தோஷமா இருக்கா!”
“அண்ணா…அண்ணி!” என்றபடி இரண்டு பெரிய தட்டுக்களை அவர்கள் முன் நீட்டினாள் சிந்து. அதில் அவள் சமைத்திருந்த அத்தனை பலகாரமும் இருந்தது.
“எ…என்னது?”
“சாப்பிடுங்க… பசியோடு போக வேண்டாமே!”
பாஸ்கர் தயக்கத்துடன் வாங்கி மவுனமாய் சாப்பிட.. சாமுத்ரிகாவின் முகமோவியப்பில் விரிந்தன.
சாப்பிட்டவள், “வாவ்…எக்ஸலண்ட்!” என்றபடி சிந்துவை இழுத்து அணைத்துக் கொள்ள… விஸ்வநாதன் முகம் சுளித்தார்.
அவளின் அணைப்பும், உறவு தந்த உரிமையும் சிந்துவிற்கு கண்ணன் வரவழைந்தன.
“சிந்துவுக்கு எப்ப கல்யாணம்?”
யதார்த்தமாய் தான் கேட்டாள் சாமுத்ரிகா. ஆனால் அதிர்வுடன் தலையை பாம்பு போல் உயர்த்தினால் கமலி.
அத்தியாயம் – 14
“தேவா தம்பி எங்கே அத்தை?” சுஜாதா ஆவலுடன் கேட்க, வியப்பாய் பார்த்தாள் வாசுகி.
நீ ஏன் தேடறே? முதல்ல இதைச் சொல்லு! அப்பாவுக்கு முடியலேன்னு பரமக்குடிக்கு போனியே…இப்ப அப்பாவுக்கு எப்படி இருக்கு?”
“பரவாயில்லை அத்தை…அவரோடகவலை யெல்லாம் தீபாவோட கல்யாணம் பத்திதான்.”
“ஏன்…அவளுக்கென்ன? நிறைய படிச்சிருக்கா. இப்ப டில்லியில வேலை பார்க்கிறாஇல்லே?”
“ஆமா… டி.வி நியூஸ் சேனல்ல எடிட்டரா இருக்கா!”
“அவளுக்குதான் நிறைய வரன் வந்ததா அப்பா சொன்னாரே! அப்பு றமென்ன?” சற்று நேரம் அமைதி காத்த சுஜாத அந்த குடும்பத்தின் இரண்டாவது மருமகள். மனோரஞ்சனின் மனைவி. படித்தவள்..வசீகரமானவள்.
“எல்லாமே சரியாதான் நடக்குது அத்தை! தீபாதான் தான் விரும்பிய ஆளையே கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஒத்தைக்கால்ல நிக்கறா!”
“நல்ல பையனா இருந்தாகட்டி வச்சிடலாமே! உங்கப்பாவும் இதுக்கு கெல்லாம் தடைபோடறவர் இல்லையே!”
“ரொம்ப நல்ல பையன்ங்கறதுதா விவகாரமே!”
“என்ன சொல்றே?”
“தீபா ரொம்ப மாடர்ன்! ஒன் சைட் லவ்! என் மச்சினருக்கு அவ ஒத்துப்போக மாட்டா!”
வாசுகி குழப்பமாய் பார்க்க… சுஜாதா வாய்விட்டே சிரித்து விட்டாள். “ஆமாத்தை! தீபா…நம்ம தேவாவைதான் கட்டிக்குவேன்னு ஆசைப் படறா. அதை தப்புன்னு நான் சொல்ல வரலே. ஏற்கனவே சுனந்தாவும் தேவா தவிர வேற யாரையும் கட்டிக்க மாட்டேன்னு வீம்பா இருக்கிறா. அவரோ பிடிகுடுக்காம இருக்கிறாரு. சுனந்தா வோட கம்பேர் பண்ணினா என் தங்கச்சி அல்ட்ரா மாடர்ன்! நம்ம வீட்டு சட்டதிட்டங்களுக்கு ஒத்து வரமாட்டா! தேவாவோட டேஸ்ட் ஓரளவு எனக்குத் தெரியும். இதெல்லாம் சரியா வராதுன்னு தீபாகிட்டே எடுத்து சொல்லிட்டுதான் வந்தேன் அத்தே!”
வாசுகி மருமகளை பெருமையாய் நோக்கினார்.
“இப்படித்தான்… தன்னை புகுந்த வீட்டுக்கு ஏத்தமாதிரி பொருத்திக்கணும் சுஜாதா! நீ தெளிவானவ. உன்னை நினைச்சு எனக்கு பெருமையா இருக்கு. தேவாவுக்கு உன்னை மாதிரி ஒரு மருமக அமையணும்மா”
“என்னைவிட நல்லப் பொண்ணாவே கிடைக்கும். கவலைப்படாதீங்க. அப்பா வீட்ல இருந்தப்ப டி.வி.யில பார்த்துதான் அவருக்கு ஷார்ட் பிலிம்ல பர்ஸ்ட் பிரைஸ் கிடைச்சது தெரியும். பேட்டில பேசலம்னா எல்லா லைனும் பிஸியாவே இருந்துச்சு. நேர்லயே வாழ்த்திடலாம்னு ரெண்டு நாள் முன்னாடியே கிளம்பிட்டேன். எங்கே அவரு?”
“ரஞ்சன் கூட மில்லுவரைக்கும் போயிருக்கான். இப்ப வர்ற நேரம் தான்.”
”அண்ணி வந்தாங்களா அத்தை?”
அவள் அண்ணி என்று குறிப்பிட்டது சாந்தினியை.
“இல்லம்மா… மூணாவதா உண்டாகியிருக்கால்ல? டிராவல் பண் ணக் கூடாதாம்.”
“ஆமாமா…அவங்க ஏற்கனவே கொஞ்சம் வீக்கா இருக்காங்க. பெட் ரெஸ்ட் ரொம்ப அவசியம்.”
வாசலில் கார் சத்தம் கேட்க… எட்டிப் பார்த்தவளின் முகம் மகிழ்ச்சி யில் விரிந்தது.
”உங்க சின்னப்பிள்ளை வந்துட்டார்…” என்றவள் தன் அறை நோக்கி வேகமாகச் சென்றாள்.
“எங்கே போறே…வா… தேவா! இவ்ளோ நேரம் உங்கண்ணி எங்கே எங்கேன்னு கேட்டு நச்சரிச்சுக்கிட்டிருந்தா. நீ வந்ததும். வேகமா போய்ட்டா…அதோ வர்றா!”
“என்னண்ணி…நல்லார்க்கீங்களா? மாமாவுக்கு இப்ப உடம்புக்கு…”
“அதெல்லாம் விடுங்க…பிரச்சினை எதுவுமில்லே! நீங்க பர்ஸ்ட் பிரைஸ் வாங்கினதுக்காக… அண்ணியோட சின்னப்பரிசு!” பெருமிதத் துடன் ஒரு பெரிய பார்சலை நீட்டினாள் சுஜாதா.
“என்னண்ணி இதெல்லாம்? வாழ்த்தினாலே போதுமே!”
“நான் ஒரு ஆம்பாளையா பொறந்திருந்தா உங்களை மாதிரி சினி பீல்டுலேதான் இருந்திருப்பேன். இப்ப நீங்க செஞ்ச சாதனை நான் செஞ்ச மாதிரி இருக்கு. உங்களை என்கரேஜ் பண்ண வாழ்த்து மட்டுமே போதாது தம்பி. வாங்கிக்குங்க!”
அண்ணியின் அன்பில் நெக்குருகிப் போனவன் அப்போதே அந்த பார்சலைப் பிரித்தான்.
விலையுயர்ந்த, அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் கூடிய ஹேண்டி காமிரா.
“மைகாட்…சூப்பர்ப் அண்ணி…தாங்க்யூ… தாங்க்யூ ஸோ மச்!” அதீத சந்தோஷத்தின் வெளிப்பாட்டில் சுஜாதாவின் கையைப் பற்றி இறுக்கினான்.
வாசுகி பூரித்துப் போனவளாய் மருமகளின் தலையை கோதி விட்டாள்.
குலசேகரன் மோவாலை தேய்த்து விட்டுக் கொண்டார். அருகில் வாசுகி அமர்ந்திருக்க, கேள்வியை தேக்கிய முகத்துடன் தேவா. அடுத்தடுத்து விஜயகுமாரும், மனோரஞ்சனும்.
“சுத்திவளைச்சு பேச வரும் பலே தேவா! ஓரளவு உன்னோட குறிக்கோள்ல நீ சாதிச் சிட்டே மேற்கொண்டு நீ படங்களை டைரக்ட் பண்றதா இருந்தாலும் சரி, நம்ம தொழில்களை பார்த்துக்கிட்டாலும் சரி…எனக்கு ஆட்சேபனை இல்லை!” என்றார் குலசேகரன்.
“இப்பல்லாம் தேவா எங்களோட ஆபீசுக்கு வந்திடறான்ப்பா” என்றான் விஜயகுமார்.
“தேவைப்பட்டா… இன்னும் படமெடுக்கணும்னு நினைச்சாலும் பண்ணுடா… பிஸினஸை நாங்க பார்த்துக்கறோம். ”
சொன்ன மனோரஞ்சனை நன்றியுடன் பார்த்தான் தேவா.
“இப்ப அது பிரச்சனையில்லை! எல்லாரும் உன் கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க. இதுபத்தி உன்கிட்ட பேசிட்டு ஒரு முடிவெடுக்கலாம்னு இருக்கோம்!”
“நிறைய வரனெல்லாம் வருது. சொந்தக்காரங்க வேற நச்சரிக்கி றாங்க.”
“சுனந்தாக் கூட நல்லப் பொண்ணுதான்! அவளை ஏன்…” என்று ஆரம்பித்த மனைவியை முறைந்தார் குலசேகரன்.
“அப்பா…சு..சுனந்தாவே… வேணாம்!”
“அவ அடிக்கடி நம்ம வீட்ல தங்கி வளர்ந்தப் பொண்ணு. அதனால்… அவமேல அந்த மாதிரி ஒரு ஈர்ப்பு வரலேப்பா”
“சரிப்பா..அவளை யாரும் வற்புறுத்தி உன் தலையில கட்டி வச்சிட மாட்டோம். இன்னும் சொல்லப் போனா…நீ யாரையாவது விரும்பினாக் கூட தைரியமாகச் சொல்லிடு. நல்லப் பொண்ணுங்கறதை தவிர எந்தத் தகுதியும் வேணாம். நம்ம மனுஷாளா இல்லேன்னாக் கூடப் பரவாயில்லை!”
அப்பா அப்படிச் சொன்னதும் குபீரென்று அழுகை புறப்பட்டது. அடக்கிக் கொண்டான்.
‘என் மனசுலே எதுவுமே இல்லை!’ என்றவளின் முகம் நெஞ்சை அழுத்திப் பிசைந்தது.
‘இல்லை… மனசில்லாதவளை நினைப்பதேதவறு. பாவம்… அவள் சூழ்நிலை வேறு. ஆனால் இப்படியோர் தந்தைக்காக… என்ன வேணும்’ னாலும் செய்யலாமே!
“இ… இல்லேப்பா! உங்களுக்கு பிடிச்சப் பொண்ணா பாருங்க… நான் பண்ணிக்கறேன்!”.
இறுக்கமான சூழல் இளகி… அனைவர் முகத்திலும் மகிழ்ச்சிப் பிரவாகம்.
அத்தியாயம் – 15
மூன்றாவது சப்பாத்தியை சுட்டு, ஸ்டவ்வை அணைத்து விட்டு… கணவரின் தட்டில் போட்டு விட்டு அருகில் அமர்ந்தாள் கமலி.
“போதும்… போதும்… இதை எடு!”
“அட… பேப்பர்மாதிரி மெல்லிசாதானே இருக்கு! ரெண்டு சப்பாத்தி எந்த மூலைக்கு? சாப்பிடுங்க”.
“உன்னோட இதே தொந்தரவு”
“ஆமா… சின்னக்குழந்தை மாதிரி பிடிவாதம் உங்களுக்கு!” செல்ல மாய் சலித்துக் கொண்டாள்.
“அக்கா… அக்கா…!”
வாசலில் ஓர் ஆணின் குரல்.
“எவன்டி அவன் ராத்திரி நேரத்திலே…!”
“அண்ணாச்சிக் கடையில வேலை பார்க்கிற பையன்ங்க, சிந்து… மளிகை சாமானுக்கு சொல்லி விட்டிருப்பா… அதான்!” கமலி எழ முற்பட அதற்குள் சிந்து வந்தாள்.
“அதுக்காக நேரங்காலம் தெரியாம… ஆம்பளைங்க வரணுமா?” முகத்தில் கோபம் கனன்றது.
“மதியமே சொல்லிட்டு வந்தேனே… சீக்கிரமே குடுத்துவிடக் கூடாதா?” சிந்து பயமும் பதற்றமுமாய் சொன்னாள்.
“இல்லேக்கா… இன்னைக்கு மொத தேதியாச்சே… டெலிவரி அதிகம்!”.
“சரி” என்று பெரிய அட்டைப்பெட்டியை தூக்க முடியாமல் தூக் கிக் கொண்டு சென்றாள்.
“சனியன்… சனியன்” சாப்பிடாமல் முணுமுணுத்தார்.
“சாப்பிடுங்க!”
“அது மூஞ்சியப் பார்த்தாலே வெறுப்பா இருக்குடி!”.
“நாளைக்கு வித்யாவை பார்த்துட்டு வரலாம்ங்க. உண்டாகி இருக்காள்ல?” கமலி பேச்சை மாற்றினாள்.
“ஆமாமா… என் பொண்ணு முகம் கண்லேயே நிக்குது. சம்மந்திக் கிட்டே கேட்டு அவளை இங்கே கொண்டு வந்து ஒரு மாசமாவது வச்சுக்கணும். புள்ளைக்கு வாய்க்கு ருசியா சமைச்சிப் போடணும்.”
“ஆமாங்க… ஆனா, நாம ஆசைப்பட்டா போதுமா? அவங்க ஒத்துக்கணுமே!”.
“கேட்டுப் பார்ப்போமே! பாஸ்கர் எப்ப என்னை தாத்தாவாக்கப் போறானாம்?” சந்தோஷ மூடுக்கு மாறியிருந்தார் விஸ்வநாதன்.
“சாமுத்ரிகாதான்… இப்போதைக்கு வேண்டாம்னு தள்ளிப் போட்டிருக்காளாம். சின்னஞ்சிறுசுங்க… வாழ்க்கையை அனுபவிக்கட்டும்.!”
“அதுவும் சரிதான்!”
“அப்புறம்…”
“என்ன?”
“எல்லாரும் என்னைக் கேக்கற கேள்விதான்! சாமுத்ரிகா கூட அன்னைக்கு கேட்டாளே!”.
“சிந்துவோடக் கல்யாணம் பத்தி…”
“என்னது?”
“இ.. இல்லைங்க வீடு தேடி வரன்வேற வருது!”
“இதோபார்! அவளைப்பத்தி என்கிட்டப் பேசாதே! உனக்கு பண்ணனும்னு நினைச்சா… என்ன வேணும்னாலும் பண்ணிக்க. எனக்கு தேவையில்லாத விஷயம். என்னை அழிச்சி ஒண்ணுமில்லாம உக்காரவச்சவளுக்கு கல்யாணம் ஒரு கேடா? கல்யாணத்துக்குன்னு இல்லே… அவளுக்கு கருமாதி பண்ணக்கூட பத்து பைசா செலவு பண்ண மாட்டேன்! எப்பிடியிருந்தவன் நான்? என் பணத்துக்கு முன்னாடி ஊரே கைகட்டி வளைஞ்சு நிக்குமே? இன்னைக்கு இதோ… தரையில உக்காந்து சாப்பிடற நிலமை! அந்த சனியனால வேதனையைத் தவிர வேற எனக்கு என்ன கிடைச்சது!” ஆவேசமாய் பேசி மூச்சு வாங்கினார்.
“சரிங்க… சரிங்க… கோபப் படாதீங்க… பிரஷர் ஏறுதுங்க!'”.
“தெரிஞ்சே ஏண்டி… அந்த நாயைப் பத்தி பேசறே?”
“மன்னிச்சிடுங்க!”
கிச்சனில்.. மளிகை சாமான்கள் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த சிந்துவின் முதுகு குலுங்கியது அழுகையில்!
கேட்காமல் கொள்ளாமல் தன்னறைக்குள் நுழைந்த சுனந்தாவை பார்த்து திகைப்புற்ற தேவா…சட்டென ஹாங்கரில் மாட்டியிருந்த சட்டையை எடுத்து போட்டுக் கொண்டான்.
“வா..வா.. சுனந்தா!”
“என்ன தேவா இப்படி பதறிப்போறீங்க?”
அடக்க மாட்டாமல் சிரித்த சுனந்தா வெகுவாய் அழகாய் இருந்தாள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லே…எப்ப வந்தே? நீ மட்டும் தனியாவா வந்தே?”
இயல்பாய் பேச முற்பட்டான்.
“ம்ஹூம்…அப்பா, அம்மா எல்லாரும் வந்திருக்காங்க.”
“….?!”
“ஏன்னு கேக்கலையே?”
“ஏன்?”
“கல்யாண விஷயம் பேசத்தான்!”என்றாள் குறும்புடன் அனைப் பார்த்து.
“…..?!”
“பேச்சே வராதே! நேரடியாவே கேக்கறேன். எனக்கு என்ன குறை தேவா? உங்களை கல்யாணம் பண்ணிக்கற தகுதி எனக்கில்லையா?”சட்டென குரல் தீவிரமானது.
சலிப்பாய் இருந்தது தேவாவுக்கு.
“சொல்லுங்க தேவா… பாருங்க…உங்க பீல்டுல ஜொலிக்கிற நடி கைங்களை விட நான் அழகாயில்லை?”
“…..?!”
“உங்க தொழில்ல நான் தலையிட மாட்டேன் தேவா. நீங்க எந்த லேடீஸ்கிட்டேப் பேசினாலும் நான் சந்தேகப்படமாட்டேன். இன்னும் என்னை நான் எப்படி மாத்திக்கணும் சொல்லுங்க!”
”உன் மனசை மாத்திக்க சுனந்தா…அது போதும்!”
“வ்வாட்?”
“உன்னை எனக்கு ரொம்பவே பிடிக்கும். உன்னை அண்ணியோட தங்கச்சியா பார்க்கலே சுனந்தா… என் தங்கச்சியாதான்…”
“ஸ்டாப்… ஸ்டாப்பிட் தேவா! வாட் நான்சென்ஸ் திஸ்? உங்க வாயால என்னை அப்படிச் சொல்லாதீங்க” கண்கள் கலங்கின.
“என்னைப் புரிய வைக்க… வேற என்னால் சொல்ல முடியாது!”
சற்று நேரம் மவுனம் சுற்றி வந்தது.
சுனந்தா தன்னை இயல்பாக்கிக் கொள்ள அறையில் பார்வையை ஓட விட்டாள்.
சுத்தமாய்…எளிமையாய் இருந்தது. டேபிளில் ஆங்கில புத்தகங்கள், சி.டி.க்கள். சுவற்றில் பலவித போட்டோக்கள் அழகாய் மாட்டியிருந்தன. அதில் ஒன்று ஒரு பெண் குழந்தைக்கு பாலூட்டும் காட்சி. அழகாய் சில் அவுட்டில் விரசமின்றி இருந்தது.
சற்று நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், “அருமையான. ஸ்டில் இது! இதை நீங்கதானே ஷுட் பண்ணினது?”
“…?!”
“இதை ஷுட் பண்ணும்போது உள்ள சூழ்நிலை எல்லாமே எனக்குப் புரியும் தேவா! நீங்க வேறப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா…இதை காரணம் காட்டியே அவ பிரச்சனைப் பண்ணுவா தெரியுமா?”
”பிரச்சனையா?”
“ஆமாம்…அந்தப் பொண்ணோட போஸைப் பாருங்க.பக்கத்தில் நிக்கற எந்த ஆணாவது சபலப்படாம இருப்பானா?”
“ஸ்டுப்பிட் மாதிரி பேசாதே சுனந்தா!”
“கடவுளே…புரிஞ்சுக்குங்க.. மத்தப் பொண்ணுங்களால தான் புரிஞ்சுக்க முடியாதுன்னு சொன்னேன்…என்னை இல்லை!”
“பிளீஸ் சுனந்தா…எனக்கு நிறைய வேலையிருக்கு. லீவ் மீ அலோன்!”
“இந்த ரூமை விட்டு மட்டுமில்லை…உன் மனசுல என்னைப் பத்திய எண்ணங்களையும் விட்டுதான்!” கனத்த உள்ளத்துடன் வெளியேறினாள் சுனந்தா.
– தொடரும்…
– எனக்கெனவே… நீ… கிடைத்தாய்! (நாவல்), தேவியின் கண்மணி, ஏப்ரல்-15, 2011.
தொடர்புள்ள சிறுகதைகள்
மாறாத எழுத்து
ரா.நீலமேகம்
August 28, 2026
பூவரசு பூத்திருக்கு
குரு அரவிந்தன்
August 28, 2026
கோபுர வாசல்
கி.சந்திரசேகரன்
August 28, 2026