வெடிக்காரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 8, 2026
பார்வையிட்டோர்: 80 
வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

துவக்கை நன்றாக எண்ணெய் பூசித் துடைத்து, வாடியி னுள் வைத்துவிட்டு இதுவரை தன்னருகே உற்றுக் கவனித்து நின்ற வீமனைப் பார்த்து, “வாடா வீமா, சோளஞ் செடிக் குள்ளை ஏதவோ சரசரக்குது பார்த்து வருவம்” என்றான் கந்தையா. கறுத்து உயர்ந்து முறுக்கிவிட்ட மீசையோடு நிற்கும் கந்தையா, தன் உற்ற நண்பனான வீரன் என்ற நாய் பின்தொடர காவற் கொட்டிலை நோக்கி வேகமாக நடந் தான். கந்தையாவுக்கு இப்போது நாற்பத்தைந்து வயதான போதிலும் அந்த நடையின் மிடுக்கு வாலிபத்தின் கம்பீர மாகப் பொலிந்தது. 

கிட்டத்தட்ட பத்து ஏக்கர் அளவிலான அந்தப் பெரிய காணியெங்கும் சோளச்செடிகள் குலைதள்ளி, மஞ்சளும் பச்சையுமாய்க் கலந்து சரிந்த இலைகளோடு பொலிந்து பார்வைக்கு மகிழ்ச்சியை நிறைத்து நின்றன. இந்த நாட் களிலே குருவிகள் கொடுக்கும் தொல்லையை விடக் காட்டு மிருகங்களால்தான் அதிக தொந்தரவுகள். இரவிலே சிறிது கண்ணயர்ந்து விட்டாலோ அல்லது கவனத்தை வேறெங் காவது செலுத்தியிருந்தாலோ போதும் காட்டுப் பன்றிகள் சோளஞ் சேனையைத் துவம்சம் செய்துவிடும். 

போன வருஷம் இதை அடுத்த சேனையிலே யானைகள் செய்த அட்டகாசம் கொஞ்சநஞ்சமல்ல. இந்த முறையும் நான்கு தடவைகள் விடியற்புற நேரமாக வந்து எல்லையிலே நின்று சினக்குரலிலே பிளிறி முன்வரிசையிலே நின்ற இரண்டுவரிச் சோளச் சேனைகளை அப்படியே மிதித்துப் பிடுங்கித் தின்று விட்டன யானைகள். அரைவாசிப் பங்குக்கு மேல் நாசமாகியிருக்கும்! அந்த நிலையினைத் தவிர்த்தது கந்தையாதான். கந்தையா வெறும் சேனைக் காவற்காரன் மட்டுமல்ல, அவன் கைதேர்ந்த வெடிக்காரன். எந்தத் துவக்கையும் கையிலெடுத்து அதன் வில்லினை ஒருமுறை தட்டிப் பார்த்துவிட்டு அந்தத் துவக்கின் சுடுகின்ற இயல்பினை ஒரு தவறுமின்றிச் சொல்கின்ற அனுபவஸ்தன் அவன். துவக்கை இலக்குத் தவறாமல், தோட்டாவை வீண டிக்காமல் கையாளுவதிலே அவனுக்கு நிகர் அவன் தான். அதனாலேதான் அங்கு பலர் துவக்கை வைத்திருந்தாலும், சுடுவதிலே பல வருட அனுபவம் பெற்றிருந்தாலும், கந் தையா ஒருவனுக்கு மட்டுமே ‘வெடிக்காரன்’ என்ற சிறப்புப் பெயர் வந்து நிலைபெற்று விட்டது. 

அந்தப் பின்தங்கிய கிராமத்திற்கு வரும் வெளியார்கள் குறிப்பாகப் பணவசதி படைத்த உல்லாசிகள், அரசாங்க உத்தியோகஸ்தர்கள் ஆகியோருக்கு அந்தக் கிராமத்திலே முதன் முதலில் அறிமுகமாகும் நபர் கந்தையாதான். அந்தக் கிராமம், பெருமளவு அடர்ந்த காட்டினையே தனக்குப் பின்னணியாகக் கொண்டிருந்ததால் வேட்டைக்காரர்களால் ஒரு இலட்சியமான வேட்டைப் பகுதியாக விரும்பப் பட்டு வந்தது. எல்லாவிதத்திலும் பின்தங்கிய அந்தக் கிராம மக்கள் விவசாயத்தையே தங்கள் தொழிலாகக் கொண்டிருந்தனர். விவசாயமென்றால் பெரிய அளவில் அவர்கள்மேற்கொள்வதில்லை. தங்கள் தேவைக்குப் போதிய அளவுதான் அவர்கள் பயிரிட்டனர். 

கந்தையாவின் வாழ்க்கை இளவயதிலிருந்தே காடுக ளோடும் துவக்குகளோடும் மிருகங்களோடும் பின்னிப்பிணைந் திருந்தது. சிறுவயதிலேயே பழக்கத்தில் அவனுக்கு வந்து விட்டது வேட்டைத்தொழில். அந்த மரங்களடர்ந்த பெருங்காட்டினிலே அவன் அறியாத அந்தரங்கங்கள் இல்லை. காட்டுப்பூக்கள், பழங்கள், மூலிகைகள், பாழ டைந்த குளங்கள், மிருகங்கள், குருவிகள் பற்றி ஏதாவது அறியவேண்டுமானால் அவனிடம் கேட்டால் போதும். கடுக்கன் பூட்டிய காதினைத் தடவிக்கொண்டே கதை கதை யாகச் சொல்ல ஆரம்பித்து விடுவான். சதைப்பிடிப்பான அவனது முகத்தின் இடதுபுறத்திலும், விரிந்த மார்பிலும் ஆழமான, இரண்டு காயங்கள் உள்ளன. அவை அவனது வீரத்திற்கும் துணிவிற்கும் சாட்சியங் கூறி நிற்கின்றன. 

திருமணமான புதிதிலே அவனது மனைவிக்குத் தேன் எடுப்பதற்காக அடர்ந்த காட்டினுள்ளே சென்றிருந்தான் கந்தையா. இருள்மண்டிய முதிர்மரக்காடு. தேன் எடுப்பதற் கான சகல சாத்தியப்பாடுகளும் அன்று வசப்பட்டிருந்தன. தேனீயொன்று பறந்த திக்கினை அடியொற்றி காட்டுச் செடிகளை விலக்கி முன்னேறிக் கொண்டிருந்தான் கந் தையா. அவன் கண்கள் திடீரென்று தீட்சண்யமாயின. அந்த உயர்ந்த முரட்டுக் கிளையிலே தொங்கிக் கொண்டி ருந்தது கொழுத்ததோர் தேன்கூடு. அப்படியே பாய்ந்து அதைப் பறிக்கவேண்டும் போலிருந்தது கந்தையாவுக்கு. 

இதுவரை காலமும் அவன் இவ்வளவு பெரிய தேன்கூட்டைக் கண்டதேயில்லை. முதுகிலே கொழுவியிருந்த தேன் சேகரிக்கும் குடுவையைக் கழற்றிவிட்டு கோணிச் சாக்கொன்றை எடுத்தவண்ணம் தேன்கூட்டினை அணுக ஆயத்த மானான் கந்தையா. அந்த வினாடிதான். சொர் சார்ரென்று உறுமியவாறே அவன் முன்னாலே விழுந்தது பருமனான கரடி சினங் கொண்டுஎக்கி எகிறிய அக்கரடி இந்தத் திடீர்க் குறுக் கீட்டினை எதிர்பார்க்கவே இல்லை. கந்தையா அதே கணத்தில் சிறிது பின்னெடுத்தான் கால்களை மூர்க்கங்கொண்ட வேகத்திலே கத்தியினை ஓங்கிக்கொண்டு கந்தையா முன்னேறினான். கரடிக்கு இலக்கு வைத்துப் பிடித்து அதனோடு கட்டிப் புரண்டு, மாறிமாறி அதன் உடலினுள்ளே கத்தியைப் பாய்ச்சி சளசளத்து ரத்தமும் சதையும் சீறிச் சிதைய வெட்டிக்கொண்டே அதன் முரட்டுப் பிடி தளர்ந்து பின்னரே ஓய்ந்தான் கந்தையா. மரண மூச்சினைப் பொருமிக் கொண்டு கடைசி உறுமலுடன் தேகத்தை உலுப்பி ஓய்ந்து இறந்தது கரடி. முகமெங்கும் உடலெங்கும் வடிந்துகொண் டிருந்த தன்னுடைய இரத்தத்தையும் கரடியின் இரத்தத் தையும் வழித்து எறிந்துகொண்டே வீடு திரும்பினான் கந்தையா.

அந்தக் கரடித் தோலும் நகங்களும் கிராமத்தின் எல்லா ராலும் வியப்போடு பார்வையிடப்பட்டன. கரடி தாக்கிய காயங்கள் அவனுடைய உடலிலே ஆழப் பதிந்துவிட்டன. அவன் பிறந்த கிராமத்திலே பெருமையோடு பேசப்பட்டு பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது அவனது வீரஞ் செறிந்த கதை. அவனோடு அவனது மனைவி கெம்பி மூன்று வருஷங்கள் மட்டுமே வாழ்ந்தாள். அவள் தன் னுடைய நினைவாக தங்கமுத்து என்ற பெயரிடப்பட்ட பெண் குழந்தையை மட்டுமே அவனுக்காக விட்டுச்சென் றாள். இது பதினாறு வருஷங்களுக்கு முந்திய கதை. ஊரின் ஒரு தலைமுறை மறந்துபோன வரலாறு. 

தங்கமுத்துவை கந்தையாவின் தங்கச்சியான கனகி வளர்த்து வருகின்றாள். கனகி வாழுகின்ற கிராமம் முற்று முழுதாகவே சேனைப்பயிர் செய்து பிழைக்கின்ற கிராமம். அங்கேயுள்ள சேனையொன் றில் மிகவும் வல்லமையாக வாழ்க்கை நடத்தி வருகின்றாள் கனகி. அந்தக் கிராமத்தில் ஏதாவது சடங்கு நடை பெறுகின்றபோதோ, சோளங் குலை முறிகின்ற வேளையிலேயோதான் கந்தையா அந்தக் கிராமத்துக்குப் போவது வழக்கம். கந்தையா நிலை யாக எந்தத் தொழிலிலும் இருக்க விரும்பியதில்லை. மனைவி இறந்தது அவனுடைய இயல்பான குணத்தினை மேலும் உறுதிப்படுத்தி விட்டது. காட்டிலே வன சஞ் சாரியாகத் திரிகின்ற அவனை எப்படியாவது மடக்கி தங்கள் பாதுகாவலனாகப் பிணைத்துவிட்டால் நல்ல ஆதாயம் சம் பாதிக்க முடியும் என்பதை அறிந்திருந்த பலர் அவனை மிகவும் நயமாக அணுகிய போதிலும் ஆரம்ப நாட்களிலே அதனை அவன் மறுத்துவந்திருக்கிறான். இப்போதோ அப் படியில்லை. தங்கமுத்து வாழைக்குட்டி போல கிசுகிசு வென்று வளர்ந்து வருகின்றாள். எப்படியாயினும் அவன் பணம் சம்பாதிக்க வேண்டும். தங்கமுத்துவுக்கு ஒரு குறை யும் வைக்கக்கூடாது. அவளுக்கு வெகு விரைவில் ஒரு வழி செய்தாக வேண்டும் என்று கனகி அடிக்கடி கூறிக் கொண்டேயிருக்கிறாள். அவளின் வற்புறுத்தலால்தான் சென்ற ஒன்றரை வருஷமாகக் காளிமுத்துவின் அந்தத் தோட்டத்தினிலே கந்தையா காவற்காரனாக மாட்டிக் கொண்டிருக்கிறான். 

3

காளிமுத்து அந்த ஊரிலே நிறைய நிலபுலங்கள் உள்ள வர். ஆசிரியராகப் பல்வேறு இடங்களிலும் கடமையாற்றி விட்டு இப்போது பென்ஷனாகி சொந்த ஊரிலேயே நிரந்தர மாக வாழ்கிறார். ஊரிலே பணமின்றிக் கஷ்டப்படுகின்ற ஏழை மக்களது நிலங்களை மிகவும் சாமர்த்தியமாக குறைந்த பணத்தோடோ, பணமில்லாமலோ பெற்றுக் கொண்டு சேர்த்ததுதான் அவருக்குரியதான இன்றுள்ள நிலங்கள் எல்லாம். அதைத் தவிர அவரதுகாணி பூமிகளை அடுத்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான பூமிகளையும் மிகப் புத்தி நுட்பமாக அவர் தனது பங்கோடு சேர்த்து அடைத்துக் கொண்டு விடுவார். அவரது பனையடித் தோட்டத்தை அடுத் துள்ள பத்து ஏக்கர் காணியினை அவர் அப்படித்தான் பெற்றுக் கொண்டார். அந்தக் காணியிலே நின்ற முரட்டு மரங்களையும் முட்பற்றைகளையும் வெட்டி வெளியாக்கி சோளன் விதை போடுவதற்கு தயாராக்கியது கந்தையா தான் நாலரை மாத காலமாக அந்தச் சோளன் செடிகளை கண்ணின் இமை போலக் காவல் செய்து வருகின்றான் கந்தையா. “சென்ற முறை சோளன் நல்லாக விலை போன தால் இந்த முறை பத்து ஏக்கர் நிலத்துக்கும் சோளன் போட்டிருக்கிறார் காளிமுத்து. இம்முறை அவருக்கு நல்ல பணம் கிடைக்கும்” என்று ஊர் முழுவதும் பேசிக் கொண் டது. 

தற்செயலாகத்தான் காளிமுத்துவை சந்தித்தான் கந்தையா. மாநிறமான, உழைப்பின்றிப் பொசு பொசுத்த வரான காளிமுத்து நரைத்த தலைமயிரைக் கன்ன உச்சி பிரித்து இழுத்திருந்தார். கழுத்திலே புரள்கின்ற இரட் டைப் பட்டுச் சங்கலியை பிறர் காணுமாறு விட்டுக் கொண் டிருந்த அவர் கந்தையாவை பார்த்த முதற் பார்வையி லேயே லேசாகப் புன்னகை செய்து விட்டு ஒன்றுமே பேசா மல் மறுபக்கம் நோக்கியவாறு விறுவிறென்று நடந்து சென் றார். அந்த நாட்களிலேதான் கந்தையா தன் மகள் தங்க முத்துவுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு பணஞ் சேகரிப்பது எப்படி என்ற யோசனையோடு அலைந்து திரிந்து கொண்டிருந்தான். வீட்டிலே கனகு ஓயாமல் அவனைத் தங்கமுத்துவின் வளர்ச்சி பற்றி நச்சரித்துக் கொண்டிருந்தாள். முதன் முறை எதேச்சையாக மரங்களடர்ந்த சேனை யின் பக்கமாக காளிமுத்துவைக் கண்டதும் அவரிடம், அவருடைய தோட்டத்துக்கு காவற்காரன் தேவையா என்று கேட்க அவனது மனம் உன்னியது. ஆயினும் ஏனோ கேட்கவில்லை. யாரோடாவது இதைப்பற்றி பேசவேண்டு மென்ற நினைப்போடு தரகர் முத்தையாவோடு லேசாகக் கதையினைத் தொடங்கினான். முத்தையாவை ஏற்கனவே மலிவானதொரு காவற்காரனை பிடித்துத் தரும்படி சொல்யிலிருந்தார் காளிமுத்து. இப்போது விஷயம் மிகவும் இலேசாகி விட்டது. கந்தையாவின் நிலைமைக்காக இரங்கி அவனை வேலைக்குச் சேர்த்துக் கொண்டதாக காளிமுத்து வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருந்தார். கந்தையா வுக்கு இது மிகவும் எரிச்சலையூட்டிய செய்தியாயினும் ஒன்றுமே பேசாது மௌனமாக அடங்கியிருந்தான். 

சம்பளத்தை கணக்காகப் பேசி முடிக்க வேண்டுமென்று வற்புறுத்தினார் காளிமுத்து. கந்தையா யோசித்தான். கந்தையாவுக்கு வெற்றிலை, சுருட்டு வாங்கத்தான் கையிலே கொஞ்சம் சில்லறை வேண்டும். மாதாமாதம் அவைகளை வாங்குவதற்காக மட்டும் காளிமுத்துவிடம் ஐந்து ரூபாவைப் பெற்றுக்கொண்டான். மிகுதிப் பணத்தை அவரே வைத்திருக்க வேண்டுமென்றும் தான் கேட்கும் நாளிலே அதைத் திருப்பித் தந்தால் சரி என்றும் கந்தையா சொன்னபோது விருப்பமில்லாதவர் போல காளிமுத்து அதற்கு ஒப்புக் கொண்டார். ஒன்றரை வருஷ காலத்திற் குள் கந்தையாவுக்கு இரண்டு நான்கு முழ வேட்டிகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார் காளிமுத்து. அதுபோக இருமுறை சாராயப் போத்தல்கள் வாங்கி அவனிற்குக் கொடுத்திருக்கிறார். ஒருமுறை காடு வெட்டியபோது மறு முறை தானும் குடிக்க விரும்பியதால் அவனுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டு அவனோடேயே இருந்து தானும் குடித் தார். அவர், தம்முடைய அந்தச் சேனைக்கு அடிக்கடி வருவதில்லை. தோட்டாக்கள் கொடுக்க வரும்போது, அவன் அவருக்காக இறைச்சி சுட்டு வற்றலாகக் காய வைத்திருப் பான். இறைச்சி வற்றலை வாங்கிக் கொண்டு திரும்பும் போது அவர் அழுத்தி அழுத்தி ஒரே விஷயத்தைத்தான். சொல்லுவார். “கண்டபடி தோட்டாக்களைச் சுட்டுப் பழுதாக்க வேண்டாம். தோட்டாக்கள் மிகவும் விலை. ஆற்றிலை போட்டாலும் அளவறிந்து போடவேண்டும்.” 

கந்தையா அதற்குப் பதில் கூற நினைப்பான்: “யானை வந்தால் சுட வேண்டியதுதானே. அதுவும் பன்றிகள் கூட்ட மாய் வந்து சுட்டுத் தள்ளாமலிருந்தால் முழுச் சோளன் சேனையையும் அழித்துத் தள்ளிவிடும்!” 

அடுத்த கிழமை சோளஞ் செடிகளில் குலைகள் முறித்து விடலாம். கந்தையா மிகவும் சுறுசுறுப்பாக நின்றான் வீமன் வெளிப்புறத்து வேலியை தாண்டி உள்ளே யாரையும் வரவிடவில்லை. காவல் கொட்டிலில் துவக்கை வைத்துக் கொண்டே நித்திரையின்றிக் காவலிருந்தான் கந்தையா. வாடிக்குள்ளே காளிமுத்தரும் இருக்கிறார். அன்றிரவு கந்தையா கொழுத்துத் திரண்ட மூன்று காட்டுப் பன்றிகளை இலக்குத் தவறாமல் சுட்டுக் கொன்டுன். அவனது துவக்கு வெடிச்சத்தத்தை கேட்டு விதிர் விதித்தெழுந்தார் காளி முத்து. கந்தையா உறுக்கிய குரலில் வீமன அடக்கிக் கொண்டு காவற்கொட்டில் பக்கத்திலிருந்து வெற்றி நடை யோடு வாடியடிக்கு வந்தான். அவன் எதிர்பார்த்திருந்தது போல காளிமுத்து அவனை விருப்பத்தோடு எதிர்கொள்ள வில்லை.கந்தையனுக்கு மனதினுள் சுருக்கென்றது எனினும் ஒருவாறாக தன்னைச் சமாளித்துக் கொண்டு முணுமுணுத்தான். 

“மூன்று உருப்படிகளையும் கிட்டத்தட்ட நூறு ரூபா வரைக்கும் விற்கலாம். பன்றி இறைச்சியென்றால் நல்லாக விலைபோகும்.” 

காளிமுத்து அலட்சியமாகச் சிரித்தார். 

“இப்படித்தான் தோட்டாக்களை வீணாக்குகிறியா?” 

கந்தையாவுக்கு அந்த வார்த்தைகளின் தொனியே பிடிக்கவில்லை. காளிமுத்துவைக் குத்தி கேட்பதற்கு நாக்கு நுனி வரை சொற்கள் வந்து அடங்கின. 

“இதுவரை உனக்கு நாற்பத்தெட்டு தோட்டாக்கள் தந்திருக்கின்றேன்…” 

“ஓம்…” 

“அதுவும் இப்படித்தானே போனது?” 

கந்தையா குரலை அடக்கிக் கொண்டு பதில் சொன்னான்! “அப்படித் தோட்டாக்கள் தந்திரா விட்டால் நானும் இதுவரை உயிரோட இருந்திருக்க மாட்டன். இந்தச் சேனை யிலை இவ்வளவு சோளஞ் செடிகளும் மிஞ்சி நிற்கவும் மாட்டுது.” 

கந்தையா ஆணவம் சிதறச் சிரித்தார். 

“சரி, ஏன் வீண் கதை? பன்றியை உரித்து பதம் பண்ணு… நேரத்தோடை கொண்டு போனால் நல்ல விலைக்கு சந்தையிலை விற்கலாம்.” 

கந்தையா மனதினுள்ளே சினந்து கொண்டான். 

பன்றி இறைச்சி விற்ற பணம் தொண்ணூற்றாறு ரூபாவையும் காளிமுத்துவே வாங்கித் தன்னுடைய கைப் பைக்குள் வைத்தபோது, மனதினுள்ளே புழுங்கிக் குமைந்து கொண்டான் கந்தையா. 

சேனைக்காவல் காரணமாக மட்டும் இரவு முழுவதும் நித்திரையின்றி இருக்கவில்லை கந்தையா. காளிமுத்து நடந்து கொண்ட முறை கந்தையாவுக்கு கொஞ்சமும் பிடிக் காமல் மனதினைப் புழுவாகக் குடைந்து கொண்டிருந்தது. 

இனி இந்த இடத்தை விட்டு முற்றாக விலகிப்போய் விட வேண்டுமென்று நெஞ்சினுள் உறுதி அரும்பியது. சோளன் குலைகளை உடைத்துப் புரையினுள் ஏற்றியதும் காளிமுத்து வோடுள்ள கணக்குகளை தீர்த்திட வேண்டுமென்றும், பின்பு மகளோடேயே சென்று வாழ்வதென்றும் முடிவாயிற்று. 

மறுநாட் காலை, வழமைபோலவே சோளன் குலைகள் இரண்டை எடுத்து அவித்துத் தின்றுவிட்டு வாடியில் ஆறியிருந்தான் கந்தையா. அவசர அவசரமாக விடியு முன்னரே எழுந்து வீட்டிற்குப் போய்விட்டு வெகு விரை வாக வந்து கொண்டிருந்தார் காளிமுத்து. வீமன் ஆள றிந்து பேசாமல் நின்றது. 

கந்தையாவின் முகவாட்டத்தைப் பார்த்துக் குரலைக் கனிவாக்கியவராகக் கேட்டார் காளிமுத்து. 

“கந்தையா என்ன பேசாமல் இருக்கிறாய்?”

“ஒன்றுமில்லை.” 

அவனது குரல் சலித்தது. 

“இல்லை, மனதுக்குள்ளே உனக்கு ஏதோ குறையிருக்குது.”  

“….”

“கூசாமல் சொல்லு” 

கடகடவென்று சொல்லத் தொடங்கினான் கந்தையா.

“ஐயா, எனக்கு இனி இங்கை வேலைக்கிருக்க மனமில்லை …….. சோளன் குலை முறிச்சு முடிஞ்சதும் நான் இங்கையி ருந்து போய்விடப் போகிறேன்.” 

அதிர்ந்து போனார் காளிமுத்து. உடம்பும், உணர்வு களும் அதிர்ச்சியினுள் சிக்கி அவர் முகத்தில் கடுமை காட்டின. சில கணங்களே மீண்டும் தன்னைச் சமாளித்துக் கொண்டார் அவர்.

“ஏன் உனக்கு என்ன குறை?’ 

மௌனமாக நின்றான் கந்தையா. 

“ஏன் பேசாமல் நிற்கிறாய்? குறை நிறை ஏதும் இருந் தால் என்னிடம் சொல்லு. நான் உனக்குத் தகப்பனைப் போல.” பிறகும் மௌனம். 

காளிமுத்து யோசிக்கும் பாவனையில் சொன்னார்: 

“சரி, இதுக்கு மேலை நீ உன்னுடைய விருப்பப்படியே நடக்கலாம்.” 

கறுத்து, ஆத்திரத்தினால் துடிக்கின்ற முகத்தோடு குறுக்கும் மறுக்குமாக காளிமுத்து நடந்தார். அவனைப் போக விடாது எப்படியும் தடுத்து நிறுத்திவிடலாம் என்ற நம்பிக்கை நூலிழையில் நின்றே ஆடியது. 

“கணக்கைப் பார்க்க வேண்டும்…” 

உறுதி திரண்டிருந்தது கந்தையாவின் வார்த்தைகளில், அவனது அந்த வார்த்தைகளுக்குப் பிறகும் அவனோடு கதைத்து எவ்விதமான லாபமுமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் காளிமுத்து. இனி அவனது தேவையும் அந்தச் சேனைக்கு வேண்டியதில்லைதானே என்றது அந்த ராத்மா. 

“கணக்கு?” 

கேள்வியோடு எக்காளமிட்டது காளிமுத்துவின் குரல்.

“கணக்குப் பார்ப்பம்…உனக்கும் தெரியுந்தானே.” 

கந்தையா இன்று அதிகாலையிலெழுந்து மண்ணிலே விர லால் எழுதிக் கணக்குப் பார்த்துவிட்டான். பதினெட்டு மாதமும் ஐம்பது ரூபாப்படி சம்பளம் தொளாயிரம் ரூபா. எனக்கு கையிலே ஐந்து ரூபாப்படி தந்தது பதினெட்டு மாதமும் தொண்ணூறு ரூபா…ஆக மிகுதி. எண்ணூற்றிப் பத்து ரூபா…. 

“நீங்கள் எனக்கு எண்ணூற்றிப் பத்து ரூபா தர வேணும்…” கந்தையா மிரட்சியோடு அவரைப் பார்த்தான். அவர் பெரிய வேடிக்கையை ரசித்துச் சிரிப்பவர்போல கண் களில் கண்ணீர் துளும்பச் சிரித்தார். 

“கந்தையா, நீயென்ன என்ரைகாணிக்கு உள்ளை மந்திரி வேலை பார்த்தனி என்றா இவ்வளவு சம்பளம் கேட்கிறாய்” கந்தையாவுக்கு முகம் சிவந்தது. 

‘இல்லை ஐயா. கணக்கைப் பாருங்க. பதினெட்டு மாசமாக நான் இங்கை வேலை செய்திருக்கிறன்.” 

அவன் கதைத்து முடியுமுன் கந்தையரின் குரல் இடை மறித்தது. 

“அப்பிடியென்றால் நான் தந்ததொன்றும் கணக்கிலே இல்லையோ? ரெண்டு வேட்டி, ரெண்டு சாராயப் போத்தல், நாற்பத்தெட்டு தோட்டாக்கள்.” 

“என்ன?” 

சேனைக்காடே கந்தையனின் முன்பு ஆடினாற் போலிருந்தது. 

“என்ன கந்தையா, நான் சொன்னது பிழையோ?”

கந்தையா வன்மத்தோடு காளிமுத்துவை ஏறிட்டான்.

“வேட்டியும் சாராயமும் நீங்க தந்தது சரி…தோட்டா வுக்குமா கணக்கு? தோட்டா என்ன இரும்புப் பெட்டிக்குள்ளை பூட்டி வைத்திருக்கவா தந்தினீங்கள்? நீங்க தந்த அவ்வளவு தோட்டாவும் இந்தச் சேனையைப் பாதுகாக்கத் தானே பாவித்தனான்.” 

“ஓம், கந்தையா எல்லாமே எனக்கு விளங்கும். இந்தக் தோட்டாவை நான் சேனையைப் பாதுகாக்கத் தந்தேனே தவிர பன்றி சுட்டு இறைச்சி விற்பனை செய்கிறதுக்குத் தரலே” 

இப்போது கந்தையாவிற்கு எல்லாமே புரிந்துவிட்டது. 

“ஐயா…அநியாயம் சொல்லாதையுங்கோ…நேற்றுத் தான் முதல் முறையாக மூன்று பன்றிகளை சுட்டு விற்றிருக்கிறேன். என்னை அப்படியானதொரு எத்தனாக நீங்கள் நினைக்காதையுங்க…” 

கந்தையா கடுக்கண் அணிந்த தன் இடது காதினைத் தடவினான். குரல் குழைந்து பணிந்து கெஞ்சிற்று. 

காளிமுத்துவுக்குகந்தையாவின் நேர்மை நன்கு தெரியும். ஆனால் கிடைத்த சந்தர்ப்பமோ அரியது. அதை கை நழுவ விடலாமா? 

“கந்தையா நான் ஊர் அடிபட்டு உலகம் அறிஞ்சனான்” 

“ஐயா இந்தத் துவக்கிலை ஆணையாகச் சொல்கிறன்… நான் அப்பிடியான ஆளில்லை அப்படிச் சொல்லாதையுங்க. கடவுளுக்குப் பொறுக்காது.” 

செயற்கையாக ஓங்கிற்று காளிமுத்துவின் குரல், 

“கந்தையா. நீ எனக்கா புத்தி சொல்கிறாய்? நான் ஒரு ஆசிரியனடா. முப்பது வருஷங்களாக படிப்பித்து அனுபவமுள்ளவன். எனக்கு, ஒரு குழி காணிக்கு வழியில்லாத காட்டு வேடன் நீயா புத்தி சொல்லுகிறாய்?” 

அந்த வேளையிலும் கந்தையாவின் குரல் தாழ்ந்தது. 

“நான் உங்களுக்கு புத்தி சொல்ல இல்லை ஐயா. ஆனால் விசுவாசமாக ஒன்றரை வருஷமாக உங்களுக்கு நான் இருக்கிறன்… இந்த நாலு மாதமும் படாதபாடு பட்டு இந்தச் செல்வத்தையே உங்களுக்கு நான் பயிரிட்டுத் தந்திருக்கிறன். என்னை வஞ்சிக்காதையுங்க ஐயா. என்ரை மகளுக்கு கல்யாணம் முடிச்சு வைக்க உங்களிட்டை நான் விட்டு வைத்துள்ள காசைத்தான் நம்பியிருக்கிறன் ஐயா…” 

காளிமுத்து கடுங்குரலில் சொன்னார்: 

“கந்தையா அதிகம் கதைக்காதை. இந்தத் தோட்டம், சேனை சோளம் எல்லாமே என்னுடையது…ஏன் நீ வைத்திருக்கிற துவக்குக்கூட என்னுடையதுதான்” 

கந்தையா பெருமூச்செறிந்தான். 

“ஐயா…அதெல்லாம் உண்மைதான். ஆனால் அநியாயம் செய்யாதையுங்கோ ஏழை நான்…” 

கந்தையாவை காளிமுத்து ஆத்திரத்தோடு எதிர் கொண்டார். 

“நீ அப்ப உண்மையான மனிதன் தானோ?” 

ஆவேசமாகப் பதில் சொன்னான் கந்தையா: 

“சத்தியமாக ஐயா. நான் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டேன்.” 

“நீ அப்ப இந்த துவக்காலை மிருகங்களைச் சுட்டு இறைச்சி விற்கவில்லையா?” 

கந்தையா தழும்பினான். 

“ஐயோ…ஐயோ…” 

சிறிது நேரம் கந்தையா யோசித்தான். பிறகு அசாத்திய மான திடத்தோடு உறுதியான குரலிற் கூறினான்: 

“ஐயா இனி நான் இந்தத் துவக்கை எடுக்கவே மாட்டன்”  

காளிமுத்து ஏளனமாக உரத்துச் சிரித்தார். 

“டே கந்தையா…எனக்கு சுடத் தெரியாதென்றா பயமுறுத்துகின்றாய்? நீயில்லாவிடில் வேறொருத்தன் எனக்கு வேலை செய்ய வராமலா போகப்போகிறான்?” 

அவர் சொன்ன வார்த்தைகளைக் கவனியாது எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டு மௌனமாகவே நின்றான் கந்தையா. 

காளிமுத்து கணக்குப் பார்க்கிறார்-இரண்டு வேட்டிக்கும் ஐம்பது ரூபா, சாராயத்துக்கு நாற்பது ரூபா கணக்குப் போடலாம். நாற்பத்தியெட்டுத் தோட்டாவுக்கும் ஒன்றுக்கு பத்து ரூபாய்ப்படி நானூற்றி எண்பது ரூபா. அத்தோடு கந்தையா இங்கேயுள்ள சோளன்குலைகளை முறித்து அவித்துத் தின்கிறான். அதற்கு 20 ரூபா. எல்லாமாக அறு நூறு ரூபா மொத்தத்தில் வரும். கந்தையாவினது கணக்கு எண்ணூற்றிப் பத்தையும் ஒப்புக்கொண்டு ஆளுக்கு இரு நூறு ரூபா கொடுத்துச் சமாளிக்கலாம். அவர் மனம் சந்தோஷத்தினால் பூரித்துக் கெக்ககலிகொட்டிச் சிரிக்கின்றது. காளிமுத்து தனது வரும் அறுவடையையும் மானசீகமாக நினைத்துக் கொண்டார் இரு ஏக்கரில் கட்டாயமாக நான்கு அவணம் சோளன் விளையும். பத்து ஏக்கருக்கும் நாற்பது அவணம் சோளன் கிடைக்கும். ஒரு அவணம் சோழன் ஐந்நூறு ரூபா விலைக்கு விற்க முடியும். நாற்பது அவணம் சோளனுக்கும் கணக்கிட்டால்… இருபதினாயிரம் ரூபா. காளிமுத்துவின் மனம் விம்முகின்றது. 

நினைவில் லயித்திருந்த காளிமுத்து கந்தையாவைப் பார்த்து ஆறுதலான குரலிற் சொன்னார்: 

“கந்தையா, கணக்கிலை நான் பிழைவிட மாட்டேன். அதையெல்லாம் ஆறுதலாகப் பார்க்கலாம். முதலிலை சோளன் குலைமுறித்துப் புரையிலை ஏற்ற வேணும்…” 

கந்தையாவின் மனக்குமுறல் ஓயவில்லை. மனதில் முடி வான தீர்மானத்தோடு மெளனமாகக் காவற் கொட்டிலை நோக்கி நடந்தான், 

இரவு. குளிர் காற்று உடம்பை உலுப்பிக்கொண்டி ருந்தது. காவற்கொட்டிலில் மனம் ஆத்திரத்தில் கொப் புளிக்க விழித்திருந்தான் கந்தையா. கைகளைப் பிசைந்து கொண்டிருந்த அவன் வீமனின் குரைப்பினைக் கேட்டதும் உணர்வு சிலிர்க்கநிமிர்ந்தான். காய்ந்த சருகுகளின் சரசரப்பி லேயே வருகின்ற மிருகம் என்ன என்பது அவனுக்குத் தெரிந்துவிட்டது. யானைக்கூட்டம்! வீமன் உரத்து அலைந்து குரைத்தது. 

“டே…வீமா” 

கந்தையா உரத்து கூவினான். 

“சத்தம் ஒன்றும் போடாமல் இங்கை வாடா” வீமனின் குரல் பொசுக்கென அடங்கிற்று. 

தென்புறமிருந்து மீண்டும் சரசரப்பு. காதுகள் சத்தத் தைக் கவனமாக அளக்கின்றன-காட்டுப் பன்றிகள்! 

துப்பாக்கியைக் கையில் வைத்துக்கொண்டு மெல்ல மனதினுள் சிரிக்கின்றான் கந்தையா. 

திடீரென்று ஒரு குரல்-காளிமுத்துவின் குரல் வீறிட்டது. 

“கந்தையா! யானைக் கூட்டம் வந்திட்டுதடா!” 

காளிமுத்துவின் குரல் அந்தப் பிராந்தியத்தையே  அதிர்த்தியது. 

“கந்தையா…ய்யா” 

கந்தையா புன்னகை செய்தான். 

“கந்தையா ஓடி வா…யானை யானை…கந்தையா” பீதிப்பிடித்த காளிமுத்துவின் குரல் தளதளத்தது. யானைகள் பிளிறின. 

“ஐயா, காவல் கொட்டில் பக்கமாக வாருங்க…” 

ஏளனமாகக் கூவினான் கந்தையா. 

“கந்தையா, பயமாயிருக்குது. யானை – என்ரை தெய்வமே” 

“காவல் கொட்டிலுக்கு வாருங்கோ…” 

சோளன் குலைகள் யானையின் பிளிறல் ஒலியினூடாகச் சளசளத்தன. சோளன் செடிகள் சறபுறவெனக் கசங்கி முறிந்து நிரைகள் தரைமட்டமாகி அழிந்து கொண்டிருந்தன… 

“இந்தத் தோட்டம், சேனை, சோளம் எல்லாமே என்னுடையவை” 

இவை, காலையிலே காளிமுத்து அகங்காரமாகக் கூறிய வார்த்தைகள்! அந்த வார்த்தைகள் இன்னமும் கந்தையாவின் காதுகளோடு கேட்ட வண்ணமேயிருக்கின்றன. 

கந்தையா பற்களை நரும்பினான். 

காவற் கொட்டிலின் கீழே சரசரப்பு. 

கந்தையா கீழே குனிந்தான். கீழே ஊளையிடும் வீமனுக்கு அருகே நடுநடுங்கிக்கொண்டு நிற்கும் காளிமுத்து! 

“கந்தையா—என்ன தம்பி இது… சுடு… யானைகளைச் சுட்டுக் கலை” 

கெஞ்சிப் பணிந்து அவனது கால்களில் விழுந்தன காளி முத்துவின் தீனமான வார்த்தைகள். 

கந்தையா திடமான குரலிற் சொன்னான். 

“ஐயா நீங்கள் சொன்ன மாதிரி நான் ஏழை. நாட்டு வேடன். கணக்குத் தெரியாதவன். உங்களுக்கு உதவிக்கு வரத்தானே ஏராளம் பேர் இருக்கிறார்கள்- அவங்களிலை யாரையாவது கூப்பிடுங்கோ…” 

“கந்தையா, அது நான் சும்மா சொன்னனான் தம்பி… அதை மறந்திடு…” 

யானைகள் பிளிறின. 

பன்றிகள் சரசரத்தன; கந்தையா அசையாமல் நின்றான்.

“எல்லாம் போகுது…ராசா-யானைகளைச் சுட்டுக் கலை ஐயோ கந்தையா” 

“தம்பீ, வெடிக்காரக் கந்தையா” 

யானைகளின் பாதவேகத்தில் பயிர்கள் சிக்கித் துவம்சமாகிக் கொண்டிருந்தன. 

“உன்ரை காலிலை விழுகிறன்…என்ரை பயிர்களைக் காப்பாற்று. நான் சொன்ன எல்லாவற்றையும் மறந்து விடு. நீ எவ்வளவு சம்பளமாகக் கேட்டாலும் நான் தருகிறேன்…” 

கந்தையா சிரித்தான்; உரக்கச் சிரித்தான். 

“என்னுடைய காலிலையா விழப்போகிறாய்? நீ விழுவாய் நன்றாக விழுவாய். இப்ப விழுந்து கும்பிட்டுவிட்டு, யானை போனதின் பிறகு என்னுடைய காலைப் பிடித்து இழுத்து விழுத்துவாய்… எனக்கு மேலையும் ஏறியிருப்பாய்…” 

“தம்பீ; உன்னைக் கடவுளாக நினைக்கிறேன். துவக்கை எடுத்துச் சுட்டு யானையைக் கலை ஐய்யா ஐயா…” 

கந்தையா துவக்கை கையில் எடுத்தான். பிறகு யோசித்தான். அழுத்தமான முடிவோடு துவக்கை சோளப் பயிர்களிடையே வீசி எறிந்தவாறு காவற்கொட்டிலிலிருந்து கீழே குதித்தான். 

“வீமா, இங்கை நிற்காதை. வாடா, எங்கையாவது போகலாம்” 

– 1975

– தேடுதல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.

joganathan ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன் - எழுதியவர்: முல்லை அமுதன் - 05 February 2008 1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் இறக்கும் வரை நிறையவே எழுதிக்குவித்தவர். 1962ல் தன் முதல் சிறுகதையான ‘மனக்கோலத்தை’ எழுதியது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுநாவல், சிறுவர் இலக்கியம், திரைப்படம், விமர்சனங்கள் என எழுத்தை விரிவுபடுத்தியவர். ஜெயகாந்தனின் ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலை ‘அக்கினிப் பிரவேசம்’ எனும் சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வலைகள் எனக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *