வாணிகஞ் செய்த வல்லாளன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 14 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பூண்டி என்னும் ஓர் ஊரிலே வல்லாளன் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவன் பொருளை மிகுதியாகத் தேடவேண்டும், அதற்கு வழி யாது என்று எண்ணமிட்டான். வாணிகஞ் செய்வதுதான் பொருள் தேடுவதற்கு வழி என்று முடிவு செய்தான். தன்னுடைய நிலங்கள் சிலவற்றை விற்று ஆயிரம் ரூபா பணத்தைத் தேடினான். அப்பணத்தை முதற் பொருளாக வைத்துக்கொண்டு வாணிகஞ் செய்யத் தொடங்கினான். அவன் கடைக்குப் பக்கத்துக் கடைக் காரர்களுக்கெல்லாம் நல்ல ஊதியங் கிடைத்துப் பெரும் பணக்காரர்களாகிக் கொண்டிருந்தார்கள். ஆனால், வல்லாளனுக்கு ஊதியஞ் சிறிதுங் கிடைக்கவில்லை. அடிக்கடி மிகுந்த பொருளிழப்பு ஏற்பட்டது. நாளடை வில் முதற்பொருளே தேறாமல் ஆயிர ரூபாயும் அழிந்து போய்விட்டது. 

வல்லாளனுக்கு மிகுந்த மன வருத்தம் உண்டா யீற்று. “அந்தோ நாம் நமக்கு இருந்த நிலத்தைக்கூட விற்றுவிட்டோமே. நாம் மற்றவர்களை விட அறிவிலோ ஆற்றலிலோ குறைந்திருக்கவில்லையே. அவ்வாறாகப் பொருள் தேடி ஏன் முன்னுக்கு வர முடியவில்லை? இதற்குக் காரணம் யாது?” என்று எண்ணமிட்டான். அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஊரில் இருந்த ஒரு பெரியவரிடம் தனது கருத்தைக் கூறினான். அவர் நல்ல அறிவாளி. அவர் வல்லாளனைப் பார்த்து, “அன்பனே! அறிவும் ஆற்றலும் இருந்தால் போதாது, முன்பிறப்பில் நல்வினை செய்திருக்க வேண்டும். அவ்வாறு நல்வினை செய்யாமல் தீவினை செய் திருந்தால் இப் பிறப்பில் முன்னுக்கு வர முடியாது. அழிவு தான் கேரிடும். இதற்குச் சிறிதும் ஐயமே இல்லை. நீ முன் பிறப்பில் நல்வினை செய்யாமல் தீவினை செய்திருக்கிறாய் போலும்,” என்று கூறி மேலுஞ் சில அறிவுரைகளைக் கூறியனுப்பினார். 

“புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாள் செய்த அவை 
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் – எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.” 

(உரை.) புண்ணியம் ஆம் – நல்வினையானது வளர்ச்சியைச் செய்யும், பாவம்போம் -தீவினையானது அழிவினைச் செய்யும், போனநாள் செய்த அவை முற்பிறப்பில் செய்த அந்த. நல்வினை தீவினைகளே, மண்ணில் பிறந்தார்க்கு – உலகத்தில் பிறந்தவர்கட்கு, வைத்த பொருள் – தேடிவைத்த பொருளாகும், எண்ணுங்கால் – எண்ணிப் பார்க்கும்போது, எச் சயமயத்தோர் சொல்லும் – எந்த மதத்தினர் கூறுவதும், ஈது ஒழிய வேறு இல்லை – இதைத்தவிர வேறொன்றும் இல்லை, (ஆகையால்) தீது ஒழிய நன்மை செயல் – தீமைகளைச் செய்யாமல் நன்மை களைச் செய்தல் வேண்டும். 

(கருத்து.) தீமைகளை அகற்றி நன்மைகளையே நாம் செய்தல் வேண்டும். 

– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *