அட, என்னடா பொல்லாத வாழ்க்கை?

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2026
பார்வையிட்டோர்: 120 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

உறவுக்கு வந்திருந்த உமாபதி பிள்ளைகள் படக்கென ஜன்னலைத் திறந்து எதிர்வீட்டை வேடிக்கை பார்ப்பதைப் பார்த்தார் வீட்டுக்கார வேல்முருகன்.

‘தம்பிகளா என்ன வெளியில் வேடிக்கை பார்க்கறீங்க?’ என்றார் எதுவுமே தெரியாதவர் போல.

காரணம் அவருக்கு நன்றாகத்தெரியும் எதிர்வீட்டில் குடியிருக்கும் கணவனுக்கும் மனைவிக்குமிடையே எப்போதுமே குடுமிப்பிடி சண்டைதான். ‘குடும்பம்னா சண்டை சச்சரவு வரத்தான் செய்யும். ஆனா வெளியாளுக வந்து வேடிக்கை பார்க்கிறா மாதிரியா சண்டை போடுவார்கள்!?’

குழந்தைகள் வாயை இறுக மூடிக்கொண்டு கைமட்டும் காட்டி அவரை அழைத்து எதிர்வீட்டைப் பார்க்கச் சொல்ல, அவருக்குப் புரிந்தது விஷயம் என்னவென்று.

பிள்ளைகளை ‘வேடிக்கை பார்க்காதே!’ என்று தான் சொல்ல முடியாது. இரண்டு காரணங்கள். ஒன்று அவை உறவுக்கு வந்திருப்பவரின் குழந்தைகள். இன்னொன்று இதுமாதிரி பார்ப்பது அவர்களுக்கு அதிசயமாக இருக்கலாம். எதிர் வீட்டுக்குப் போயும் எதுவும் சொல்ல முடியாது. அடுத்தவன் வீட்டு விஷயத்தில் தலையிடத் தான் யார்? என்ன செய்வது என்று யோசித்தார். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தார். எல்லாருக்கும் பயன்படறா மாதிரி எதாவது செய்யணும்னு நினைத்து, எதிர்வீட்டுக் கணவன் மனைவியைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து குழந்தைகள் முன் உட்காரவைத்தார். வைத்துவிட்டு

‘ஒருநிமிஷம் உங்களுக்கு ஒரு கதை சொல்றேன்’ என்றார். எதிர்வீட்டுக் காரர்கள் ஆச்சரியமாய்ப் பார்க்க, குழந்தைகள் ஆவலாய்க் காத்திருந்தன.

‘ஒரு குளக்கரையில் கொழுத்த காட்டு எருமையும் சிங்கமும் தண்ணீர் குடிக்கப் போயின போன இடத்தில் இரண்டுக்கும் சண்டை வந்தது. நான் முதல் நீ முதல் என்று! சண்டை வலுக்க, காட்டு எருமையும், சிங்கமும் மோத நினைத்து தயாரான வேளையில், அவை ‘டபகு’ன்னு தாற்செயலாய்த் தலை நிமிர்ந்து பார்க்க, குளக்கரையில் இருந்த மரத்தில் பல பறவைகளும் அடியில் வேறு சில விலங்குகளும் திரண்டன. அவை இவற்றின் சண்டையை விலக்கும் நோக்கில் கூடவில்லை, இரண்டில் எது இறந்தாலும் நமக்கு நல்ல இரை கிடைக்கும் என்ற எண்ணத்தில் திரண்டன. அதைக் உணர்ந்ததும் சிங்கமும் எருமையும் தங்கள் சண்டையை விட்டுவிட்டு சமாதானமாய் விலகிப்போயின.

“நீங்கள் சண்டை போட்டால், ஊர் உலகம் அதில் ஆதாயம் தேடுமே ஒழிய, சண்டையை விலக்க வழி தேடாது. உங்கள் செயல்கள் அடுத்த தலைமுறைக்கு அறிவு புகட்ட வேண்டுமே ஒழிய, சண்டை வழி சொல்லிக் கொடுக்கக் கூடாது! இந்த உறவுக்காரப் பிள்ளைகளுக்கு முடிந்தால் சமாதானமாய் போவது எப்படி எனக் கற்றுக் கொடுங்கள். சண்டை போட அல்ல” என்றதும் அவர்கள் அமைதியாய் அதிர்ந்து நிமிர வந்திருந்த விருந்தினர்களும் தங்கள் பிள்ளைகளைக் தனியே கூட்டிக் கொண்டு போய் எதோ அறிவுரை சொல்லத் தொடங்கினர்.

எதிர்வீட்டுத் தம்பதியர் தலை குனிந்து வெளியேறினார்கள்.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *