கபாலம் சிரித்தது
கதையாசிரியர்: ஆத்மஜோதி நா.முத்தையா
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: July 21, 2026
பார்வையிட்டோர்: 234
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிவபெருமானுடைய கையில் கபாலம் ஒன்றிருப்பதை நாம் எல்லாரும் அறிவோம். அது எந்த நேரமும் சிரித்த வண்ணமாகவே இருக்குமாம். காரணம் இன்றிச் சிரிப்பு வராதாம். காரணம் இன்றி சிரிப்பு நிகழ்ந்தால் அதனால் ஆபத்தும் நேர்ந்து விடுவதுண்டு. அதுவும் பெண்கள் சிரித்தால் ஆபத்து பெரிதாக வந்து சேர்ந்து விடும். ‘புகையிலை விரித்தால் போச்சு, பெண்கள் சிரித்தால் போச்சு’ என்பது நாடோடிப் பழமொழி.
பஞ்சபாண்டவர் பளிங்குமண்டபம் கட்டினர். அதில் குடிபுகுவிழா கோலாகலமாகக் கொண்டாடினர். பளிங்கு என்றால் கண்ணாடி. அம்மண்டபம் முழுவதுமே கண்ணாடியாலானது. தூண் நிற்கிறது என்று நடந்தால் அந்த இடத்திலே தூண் நில்லாது. இல்லை என்று கடந்தால் நாமாகப்போய் தூணில் மோதிக் கொள்வோம். தருமரும் திரௌபதியும் மேல்மாடியிலிருந்து கீழே வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
கீழே உள்ள நிலம் பச்சைக் கண்ணாடியால் அமைந்தது. பார்வைக்குத் தண்ணீர் நிரம்பிய குளம் போல இருக்கும். துரியோதனன் தூரத்தே வரும்போதே உடை தண்ணீரில் நனைந்துவிடும் என்று உடையைச் சுருக்கிக் கொண்டே மெதுமையாகக் காலை வைத்தான்.
இதனைக் கண்ணுற்றாள் திரௌபதி. துரியோதனன் ஏமாந்து விட்டான் என்பதைக் கண்ணுற்ற திரௌபதி பெரிதாகச் சிரித்து விட்டாள். தன்னை ஏளனம் பண்ணிய சிரிப்பாக துரியோதனன் கருதிக் கொண்டான். திரௌபதியைப் பழிக்குப்பழி வாங்க அவளுடைய துகிலுரிதலுக்குக் காரணமாக இருந்தது இந்தச் சிரிப்புத்தான். பெண்கள் சிரித்தால் போச்சு என்பது எவ்வளவு பொருத்தமாக அமைந்துவிட்டது.
சிவபெருமானுடைய கையிலுள்ள கபாலம் சிரித்ததற்குக் காரணத்தைப் பார்ப்போம். கபாலத்தின் தோற்றமே எந்த நேரமும் சிரிப்பது போன்றதுதான். கபாலத்தின் பல்லு வெளியே தெரிவது சிரிப்பது போன்றதொரு தோற்றம். எந்த நேரமும் காரணமின்றி சிரிப்பவர்களைப் பார்த்து ‘பல்லைக் காட்டாதே’ என்று கண்டிப்பதுண்டு.
சிவபெருமானுடைய உடலிலே பாம்பு இருக்கிறது. உமாதேவியார் இறைவனுடைய உடம்பில் பாதியாக இருக்கிறார். சடையிலே கங்கையும் இருக்கிறது. பிறையும் இருக்கிறது.
நாங்கள் கடவுள் சந்நிதியில்தான் வாழுகிறோம். அப்படி வாழ்ந்தும் கடவுளை அடிக்கடி மறந்து விடுகிறோம். மேலே கூறிய பொருட்கள் இறைவனுடன் கூடஇருந்தும் தாம் இறைவனுடன் கூட இருப்பதை மறந்து விடுகின்றன.
ஒருநாள் இறைவரது திருமேனியில் கிடந்த பாம்பு அசைந்தது. அது அசைந்ததைப் பார்த்து உமாதேவியார் பாம்புக்குப் பயந்து உடல் கலங்கினார். உமாதேவியாருடைய பயத்தினால் நடுங்கியதைப் பாம்பு பார்த்தது. உமாதேவியாரை மயில் என்று நினைத்த பாம்பு இது மயிலாயிருக்குமோ என்று ஐயுற்றதாம். பாம்பின் அசைவைக் கண்ட பிறைச்சந்திரனும் ஏங்கியது. மயிலுக்கும் பாம்புக்கும் பகை. மயில் பாம்பைக் கண்டால் கொன்றுவிடும். ஆதலால் உமாதேவியாரை மயில் என்று கண்ட பாம்பு அம்மயிலாகிய உமாதேவியாரைப் பார்த்ததும் பயந்தது.
தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்த காலத்தில் அமிர்தம் திரண்டு வந்தது. அமிர்தத்தை எப்படியும் முழுமையாகத் தேவரே சாப்பிட்டுவிடவேண்டுமென்று விரும்பினார்கள். கண்ணனிடம் இச்செய்தியைக் கூறினார்கள். கண்ணன் மோகினி உருவம் எடுத்துக் கொண்டார். இரு பகுதியாரையும் கண்ணன் பார்த்தார். திருப்பாற்கடலிலிருந்து இருபொருட்கள் தோன்றின. ஒன்று மோகினி; அடுத்தது அமிர்தம். யார் யாருக்கு ஏதேது வேண்டுமோ அதுவதனை அவரவரே பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.
அசுரபுத்தி மோகினியை நாடியது. ஒரு மோகினியை அத்தனை பேரும் எப்படி அனுபவிக்க முடியும்? அசுரர்கள் மோகினி தனக்குத்தனக்கு என்று தனித்தனியே அனுபவிக்க விரும்பினார்கள். அசுரர்கள் தமக்குள் தாமே சண்டையிட்டுக் கொண்டு இருவரைத் தவிர மற்றையோர் அத்தனை பேரும் இறந்தொழிந்தார்கள்.
தேவர்கள் தமது தேவகுணம் மேலிட அமிர்தத்தை நாடினார்கள். கிருஷ்ணபரமாத்மா தேவரை வரிசையாக இருத்தி அமிர்தத்தைப் பங்கீடு செய்து கொண்டிருந்தார். உயிர் தப்பிய இரு அசுரர்களும் தேவர் கூட்டத்துடனேயே சேர்ந்து கொண்டு அமிர்தம் உண்ண விரும்பினார்கள். சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையிலே இரு அசுரர்களும் இருந்து கொண்டார்கள்.
அமிர்தம் படைக்கப்பட்டதும் தேவர்கள் இறைவனுக்கு அர்ப்பணிக்கிற மந்திரத்தைச் சொன்னார்கள். அசுரர்களுக்கு இப்பழக்கம் இல்லையே. தேவர்கள் தண்ணீரை எடுத்து இறைவனுக்கு அர்ப்பணம் செய்யும்போது அசுரர் இருவரும் மேலுங் கீழுமாக பார்த்து விழித்தார்கள். சூரியனும் சந்திரனும் இவர்களிருவரும் சாப்பிடும் விதத்தில் அசுரர்கள் என்று கண்டு கொண்டார்கள். கிருஷ்ணருக்கு கண்ணைக் காட்டினார்கள். கண்ணன் அமிர்தம் பங்கீடு செய்த சட்டுவத்தால் இருவரது தலைகளையும் கொய்து விட்டார். அவர்கள் சாப்பிட்ட அமிர்தம் தொண்டை அளவில் தான் சென்றது. அமிர்தம் சாப்பிட்ட தலைகள் இரண்டும் மேல் எழுந்து ராகுவும் கேதுவுமாக மாறி அடிக்கடி சூரியனையும் சந்திரனையும் மறைத்துக் கொண்டிருந்தன. பிறைச்சந்திரனுக்கு அப்பாம்பைக் கண்ட உடனே பழைய நினைவு தலை எடுத்து நின்றது. ஆகவே பிறையும் பயந்துவிட்டது.
இத்தனைபேரும் தாம் இறைவன் சந்நிதியில் இருக்கிறோம் என்பதை மறந்து விட்டனர். நாம் எப்பொழுதும் இறைவன் சந்நிதியிலே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனை மறக்கும்போதுதான் அச்சம் உண்டாகிறது. காமம், கோபம், மோகம், லோபம், மதம், மார்ச்சரியம் ஆகிய தீய குணங்கள் எல்லாம் தலைஎடுத்து விடுகின்றன. இப்போது அப்பரின் தேவாரத்தைப் பார்ப்போம்:
கிடந்தபாம் பருகேகண் டரிவை பேதுறக்
கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்
கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே
கிடந்துதான் நகுதலைக் கெடில் வாணரே.
இவர்கள் எல்லோரும் தாம் இருக்கும் இடத்தை மறந்து பயப்படுகிறார்களே என்றுதான் வெண்டலை சிரித்தது. வெண்டலை எப்போதும் பல்லைக் காட்டிக் கொண்டேதான் இருக்கிறது. அப்பர் சுவாமிகள் தன்னுடைய குறிப்பை இவற்றிலேற்றிச் சொன்னபடியால் அது தற்குறிப்பேற்ற அணியாகிறது.
– திருமுறைக் கதைகள், முதற்பதிப்பு: ஆவணி 1999, இந்து சமயப் பேரவை, கனடா.
தொடர்புள்ள சிறுகதைகள்
ஆமைக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
நரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
சிவராத்திரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026