சிவராத்திரிக் கதை
கதையாசிரியர்: ஆத்மஜோதி நா.முத்தையா
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: July 21, 2026
பார்வையிட்டோர்: 244
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிரமதேவர் தான் படைத்த உலகின் அழகை எங்கும் பார்த்து ரசித்துக் கொண்டு வந்தார். ஓர் இடத்தில் வந்ததும் அப்படியே நின்றுவிட்டார். காரணம் தன்னால் படைக்கப்படாத பொருள் ஒன்றைப் பார்த்துவிட்டார். இவர் பார்த்த பொருள் பாற்கடலில் அறிதுயில் கொண்டிருந்தது. பிரமா காலால் தட்டி எழுப்பினார். “நீ யார்? என்னால் படைக்கப்படாத ஒன்றை இன்று தான் பார்த்தேன்” என்றார்.
“நீ எப்படி என்னைப் படைத்திருக்க முடியும்? நான் தானே உன்னைப் படைத்தவன்”.
“உலகம் முழுவதையும் படைத்தவன் நானிருக்க நீ என்னைப் படைத்தவன் என்று சொல்ல உ னக்கு வெட்கமில்லையா?” என்று கூறினார் பிரமதேவர்.
வாய்ச்சண்டை, ஆயுதச் சண்டையாகி முடிவு காணாத சண்டையாகி விட்டது. காலம் நீண்டு கொண்டே போனது. சிவபெருமான் இவர்கள் இருவருக்கும் அறிவுச்சுடர் கொளுத்த விரும்பினார். இருவருக்கும் மத்தியில் சோதியாக நின்றார் சிவபெருமான்.
சோதியைப் பார்த்து இருவரும் நீ யார் என்று கேட்டனர். நான் பிரம்மம் என்றது சுடர். அப்படியானால் எங்கள் இருவரில் யார் பெரியவர் என்று நீ சொல்ல வேண்டும் என்று கேட்டனர்.
இந்தச் சோதியின் அடியையோ முடியையோ யார் காண்கின்றனரோ அவர்கள்தான் பெரியவர்கள் என்று பதில் இறுத்தது சோதிப்பிரம்மம்.
உடனே பிரம்மா அன்னப் பறவையாகி சோதியின் முடியைத் தேடிப் புறப்பட்டார். திருமால் பன்றியுருக் கொண்டு அடியைத் தேடிப் புறப்பட்டார். திருமால் அயர்ச்சி கொண்டு தன்னால் சோதியின் அடியைக் காண முடியாது என்று தனது தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார்.
பிரம்மா சோதியின் முடியைத் தேடிப் பறந்து கொண்டே சென்றது. நன்றாய்க் களைத்து விட்டது. தோல்வியை ஒப்புக்கொள்ள அகங்காரம் விடவில்லை. நீரில் ஆழ்ந்து கொண்டு செல்பவனுக்கு துரும்பும் தூணாய்த் தெரியுமாம். அதுபோல தோல்வியைத் தழுவுகின்ற அன்னப்பறவைக்கு ஓர் ஆதாரம் தென்பட்டது. அன்னம் ஒரு தாழம்பூவைக் கண்டது. அன்னம்: நீ எங்கிருந்து வருகிறாய்?
தாழம்பூ: நான் சிவனுடைய முடியில் இருந்து வருகிறேன்.
அன்னம்: சிவனுடைய முடி எவ்வளவு தூரத்தில் உள்ளது?
தாழம்பூ: நான் எத்தனையோ யுகங்களாக விழுந்து கொண்டிருக்கிறேன். இன்னும் விழுந்த பாடில்லையே.
அன்னத்திற்கு தன்னம்பிக்கையில் ஈடாட்டம் வந்துவிட்டது. குறுக்கு மூளை வேலை செய்தது.
அன்னம்: தாழம்பூவே எனக்கொரு உதவி செய்வாயா?
தாழம்பூ: என்ன உதவி?
அன்னம்: அது ஒரு சிறு உதவி தான்
தாழம்பூ: அது என்ன என்பதைச் சொல்லுங்களேன்.
அன்னம்: ஒரு சிறு பொய்
தாழம்பூ: எதற்காகப் பொய்?
அன்னம: நானோ சிவனின் முடியைத் தேடிச் செல்கின்றேன். நீயோ முடியிலிருந்து வருகின்றாய். நானும் முடியைக் கண்டேன். முடியிலிருந்து உன்னோடுதான் வருகின்றேன் என்று சொல்வது தான் அந்த உதவி. இது ஒருவருக்கும் பாதகம் இல்லாத பொய்தானே.
பொய் சொல்வதற்குத் தயங்கிய தாழம்பூ அன்னத்தின் பேச்சில் மயங்கி பொய் பேசச் சம்மதித்துவிட்டது.
தாழம்பூ பொய் பேசினபடியால் அப்பூவைச் சிவனுடைய அர்ச்சனைக்கு எடுப்பதில்லை. திருமாலுக்கு உலகமெல்லாம் கோயில் இந்தியாவில் மாத்திரம் பத்தாயிரத்துக்கும் மேலான கோயில்கள் இருக்கின்றன. பிரம்மதேவருக்கு ஒரு கோயில்தானும் இல்லை. இதனால்தான் சத்தியமே கடவுள் என்பார்கள். உள்ளத்தின் இயல்பு உண்மை. மெய்யின் இயல்பு மெய்ம்மை. வாயின் இயல்பு வாய்மை.
அப்பர் சுவாமிகள் இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையில் பிரம விஷ்ணுக்கள் அடிமுடிதேடிய செய்தியையே அடிப்படையாக வைத்து ஒரு பதிகமே செய்துள்ளார். அதில் கடைசிப்பாடல் பின்வருமாறு:
செங்க ணானும் பிரமனுந் தம்முளே
எங்குந் தேடித் திரிந்துங் காண்கிலார்
இங்குற்றே னென்றிலிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே.
சிவன் இலிங்கத்தே தோன்றிய தினம்தான் சிவராத்திரி என்று சொல்லப்படுகின்றது.
சிவராத்திரி என்ற சொல், சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனை அர்ச்சிக்கும் ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பலவகையான பொருளைத் தரும். சிவமான ராத்திரி என்பதே இவைகளில் மிகப் பொருத்தமானது.
மாசிமாத கிருஷ்ண சதுர்த்தசியில் நள்ளிரவில் சிவபெருமான் இலிங்கத்தில் தோன்றினார். இந்த நேரம் இரவு பன்னிரண்டு மணிதொடங்கி ஒன்றரை மணிவரையுள்ள காலமாகும். இக்காலம் இலிங்கோற்பவகாலம் என்று அழைக்கப்படும். ஆதலால் இப் பொழுதும் அந்த இரவில் உலகிலுள்ள எல்லா இலிங்கங்களிலும் சிவன் தோன்றுகிறார்.
அன்று சிவபூசை எல்லோருக்கும் விருப்பத்தைக் கொடுக்கக்கூடியது. அன்று காலை குளித்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு சிவாலயம் சென்று பஞ்சாட்சரம் அல்லது சிவநாமத்தை ஜபிக்க வேண்டும்.
கருணை வடிவான தேவி நமக்காகச் சிவபூசை செய்த நாள் சிவராத்திரியாகும். “சிவம்” என்ற சொல்லுக்கே துன்பத்தைத் துடைக்க வல்லது என்று அர்த்தம்.
ஒரு சமயம் உமாதேவி விளையாட்டாக சிவபெருமானுடைய கண்களை அவருக்குப் பின்புறம் வந்து பொத்தி விடுகிறாள். எங்கும் பேரிருள் பரவுகிறது. இந்நிலையில் தேவர்கள் சிவபூசை செய்த இரவே சிவராத்திரி என்றும் கூறப்படுகின்றது.
பிரமாவும் விஷ்ணுவும் தோல்வியுற்று தம்செருக்கெல்லாம் ஒழிந்து சிவனைச் சரண்புகுந்து வழிபட்டு உய்வு தேடினர். ஆதலினால் திருவண்ணாமலையில் சிவராத்திரி வழிபாடும் சிறப்புறுவதாயிற்று.
அந்தக்காலத்தில் சைவர் மாத்திரம் அன்றி சிவலிங்கத்தை எல்லோருமே வழிபட்டனர். அதில் சிவம் இருக்கிறது. விஷ்ணு இருக்கிறார். பிரம்மன் இருக்கிறார். எல்லாக் கடவுளையும் ஒன்று சேர்த்தே லிங்கம் விளங்குகிறது. தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்குமான இடமே லிங்கம் எனப்படும். லிங்கத்தின் பீடம் ஆவுடையார் எனப்படுகிறது. ஆவுடையார் சக்திரூபம். பாணம் சிவரூபம். பீடம் கிரியா சக்தி வடிவம். பீடத்தின் அடிப்பாகம் பிரம்ம ரூபம். நடுப்பாகம் விஷ்ணுரூபம். இதைத்தான் திருமூலர்:
மலர்ந்த அயன் மாலுருத்திரன் மகேசன்
பலந்தரு ஐம்முகன் பரவிந்து நாதம்
நலந்தரு சக்தி சிவன் வடிவாகிய
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே
என்று அருளியுள்ளார்.
– திருமுறைக் கதைகள், முதற்பதிப்பு: ஆவணி 1999, இந்து சமயப் பேரவை, கனடா.
தொடர்புள்ள சிறுகதைகள்
ஆமைக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
நரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
என்னிலும் இனியவன் ஒருவன்
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026