பூசைக்குள் வரும் பூக்கள்
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 1, 2026
பார்வையிட்டோர்: 159
அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-13
அத்தியாயம் – 11

பாலுவிற்கு இன்று அலுவலகத்தில் கொஞ்சம் அதிகப்படியான வேலை. பொழுது சாயும் நேரத்தில்தான் வீடு வந்தான்.
‘ஸ்டேசனுக்குச் சென்றவர்களையும் காணோம். அவர்கள் புருசனையும் காணோம்!’ என்று தவித்துக் கொண்டிருந்த ஆயா முத்தம்மாளுக்கு ஆளைப் பார்த்ததும் உயிர் வந்தது.
ஒருவேளை சேதி தெரிந்து ஸ்டேசனுக்குப் போய் வருகிறானோ என்கிற நினைப்பில் “தம்பி! நீங்க எங்கே இருந்து வர்றீங்க?” முத்தம்மாள் ஓடிப் போய் வாசலில் வண்டியை நிறுத்தியவனிடம் கேட்டாள். பின்னால் ஆயா வந்தாள்.
“அலுவலகத்திலேர்ந்து”
“உனக்குச் சேதி தெரியாதா?”
“என்ன?”
“சாருவையும் வீட்டுக்கு வந்த நாலு ஆம்பளைங்களையும் போலீசு புடிச்சுப் போயிருக்கு”
“எதுக்கு?”
“தெரியலை. அவுங்களைப் பார்க்கப் போன மாலாவும் இன்னும் திரும்பலை. யோசனைப் பண்ணிப் பார்க்கும் போது இதுக்கெல்லாம் காரணம் அந்த ரகு பய மாதிரி தெரியுது.”
“எந்த ரகு?”
“அது ஒரு பொறுக்கி! இன்னைக்கு நீ போன பிறகு இங்கே நாலு தரம் சுத்திச்சு. அதுதான் போலீஸ்ல ஏதோ வத்தி வைச்சு வில்லங்கம் செய்ஞ்சிருக்குன்னு நெனைக்கிறேன்!”
“சிக்கல்!” இவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இவ்வளவு சீக்கிரம் வருமென்று இவன் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. மாலா இவனிடம் தன் முடிவைச் சொல்லி சம்மதம் கேட்டபோதே எல்லாவற்றையும் பொறுமையாய்க் கேட்டவன் கடைசியில் “உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு?” காய்ந்தான்.
“ஏன் என்ன?“ துணுக்குற்றாள்.
“புலிக்குப் பயந்து சிங்கத்திடம் மாட்டிய கதை. மக்கள் பேச்சை நாம குப்பைன்னு நினைச்சு ஒதுக்கினாலே கஷ்டமாய் இருந்தாலும் கொஞ்ச நாளையில காணாம போயிடும். இதுக்கு ரெண்டாம் கலியாணம் அதுவும் பலான பொண்ணு எல்லாம் தப்பு. பின்னால சிக்கல் வரும்.” என்றான்.
“ஒத்துமையா இருந்தா எந்த சிக்கலும் வராது, அதை விடுங்க. இந்த வழியிலேயாவது சமூகத்துல ஒரு கெட்ட பொண்ணுக்கு வாழ்வு தர்றலாம்ங்குறது என் யோசனை. உங்களுக்கு மனசுக்குள்ளே அருவருப்பு. மறுக்குறீங்க” முயக்கினாள்.
“என் மனசைப் பத்தி பேசாதே மாலா. நீ எவ்வளவு பெருந்தன்மையாய் என்னைக் கலியாணம் முடிச்சியோ அந்த பெருந்தன்மை எனக்கும் இருக்கு. ஒரு பலான பெண் வாழ்றதுல எனக்குச் சந்தோசம் மகிழ்ச்சி. ஆனால் இதுல நடை முறை சிக்கல்கள் அதிகம். வாடிக்கையாளன் பார்த்தான்னா வர்றீயான்னு கேட்பான். போலீஸ் கண்ணுல பட்டா இங்கே தொழில் பண்றீயாம்பான். அவுங்களைச் சொல்லி குத்தமில்லே. அவுங்க கண்ணோட்டம் அப்படி!” நிறுத்தினான்.
“கழுத்துல தாலி ஏறிட்டால் அவ தப்பானவளாய் இருந்தால்கூட எல்லா ஆம்பளைங்களும் தலைகுனிஞ்சு போவாங்க.” மடக்கினாள். பாலு அதற்கு மேல் மறுப்பு சொல்லவில்லை.
“உன் இஷ்டம்!” முடித்தான்.
இப்போது சிக்கல்! என்ன செய்ய? எப்படி விடுவிக்க..?
வண்டியைத் திருப்பினான்.
“நாங்களும் வர்றோம் கண்ணா!” ஆயாவும் முத்தம்மாளும் அவன் பின்னால் ஓடிவந்தார்கள்.
பாலு சைக்கிளை நிறுத்தி அருகில் வந்த ஆட்டோவை அழைத்தான். மூவரும் அதில் தொற்றினார்கள்.
சப்-இன்ஸ்பெக்டர் சாரதி ஸ்டேசனுக்கே போகாமல் வெளி வேலையெல்லாம் முடித்துக் கொண்டு மட்டன் பிரியாணியும் சிக்கன் 65யும் கட்டிக்கொண்டு இரவு எட்டு மணிக்கு கலகலப்பாக வீட்டில் நுழைந்தார். வரும் போதே காவலுக்கு இருந்தவனை வீட்டிற்குப் போகச் சொன்னார்.
கவனமாய் கதவு சாத்தி தாழ்போட்டு சீருடை கலைந்து லுங்கிக்கு மாறினார்.சீட்டி அடித்துக் கொண்டு குளிர்சாதனப்பெட்டியிலிருந்து விஸ்கி பாட்டிலை சோபாவிற்கு முன்னிருந்த டீபாயில் வைத்தார். தான் கட்டி வந்தவைகளை எல்லாம் விரித்து பரப்பி அமர்ந்தார்.
ஆற அமர விஸ்கியை கண்ணாடி டம்ளரில் ஊற்றி விழுங்கி சிக்கன் 65யைத் தொட்டுக் கொண்டார்.
ஒரு கிளாஸ் ஏறியதுமே….’குட்டி ஷோக்காத்தான் இருக்கா!‘ இதுவரை இருந்த சாருவின் உருவம் போய் மாலாவின் உருவம் வந்து மனசுக்குள் நிழலாடியது. போனைத் தொட்டார். ஓய்வாய் இல்லை. மணி அடிக்கவில்லை.
“நாத்தப்பய! எவன் எவனோடேயோ பேசிக்ட்டிருக்கான்!” திட்டிக்கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தார்.
வாசலில் அழைப்பு மணி அடித்தது. சன்னல் கதவைத் திறந்து பார்த்தார். சின்னப்பனும் ரகுவும் காம்பௌண்ட் கேட் ஓரம் நின்றார்கள்.
‘இவனுங்க எதுக்கு இங்கே சிவ பூ சையில கரடி?‘
யோசனையுடன் வந்து கதவைத் திறந்தார். அவர்கள் கேட்டைத் திறந்து கொண்டு வந்தார்கள்.
“வாங்க… வாங்க…” வரவேற்று கதைவை அடைத்தார்.
“என்ன விசயம்?” சோபாவில் அமர்ந்தார்.
டீபாயில் இருக்கும் பாட்டில் ஐட்டங்களைப் பார்த்ததும் சின்னப்பனுக்கு சப்-இன்ஸ்பெக்டர் தன் வழிக்கு வருவார் புரிந்தது. ரகுவுடன் இன்னொரு சோபாவில் அமர்ந்தார்.
“தம்பி! சாப்பிடுறீங்களா?“ சாரதி தன் கிளாசில் விஸ்கியை ஊற்றிக்கொண்டே ரகுவைக் கேட்டார்.
“பழக்கம் இல்லே சார்!“ அவன் மெல்ல சொல்லி மறுக்க…
“எனக்குப் பழக்கம் சார்!” சின்னப்பன் வழிந்தார்.
“இரு இரு வர்றேன்!” என்றவர் எழுந்து போய் இன்னொரு கிளாஸ் எடுத்து வந்து ஊற்றி, “இந்தா எடுத்துக்கோ” நீட்டினார். “தம்பி! ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க. ஐயாவும் நானும் சமயத்துல குடிக்கிறது.” என்று சொல்லி எடுத்துக் கொண்டு பாதி குடித்து வைத்த சின்னப்பன் சப்-இன்ஸ்பெக்டரைக் கேட்காமலேயே சிக்கன் 65யை எடுத்துக் கடித்தார்.
“என்ன சின்னப்பன்! எதுக்காக இந்த ராத்திரி நேரத்துல வந்தீங்க?“ சாரதி சாய்ந்து அமர்ந்து அவரைப் பார்த்தார்.
“வழியில கான்ஸ்டபுள் ஒருத்தரைப் பார்த்தோம். சாரு மாலா இன்னும் உள்ளே இருக்கிறதா சொன்னார்.” நிறுத்தி அவர் அடுத்த பாதி கிளாசை முடித்தார்.
“ஆமாம். அதுக்கென்ன?”
“ரகு தம்பிக்கு நீங்க அதுங்களை என்ன செய்யப் போறீங்கன்னு தெரிய ஆவல். அதான் கேட்டுத் தெரிஞ்சு போக வந்தோம்”
“ரகுக்கு இவுங்க மேல ரொம்ப அக்கரை!” மிடறு விழுங்கி அவனைப் பார்த்தார்.
“எல்லாம் பலான சமாச்சாரம்தான்! அந்த நொண்டி கட்டிக்கிட்டு வந்தபிறகு ரகு தம்பிக்கு சாருகிட்ட வாய்ப்பே இல்லாம போச்சு. முன்னாடி பழகின பழக்கத்தை வைச்சு சாருவை ஒரு நாள் வழியில ஓரம் கட்டி மடக்கி இருக்கு. அதுக்கு அவ இப்போ நான் அப்படி இல்லே திருந்திட்டேன்னு சொல்லி இருக்கலாம். இல்லே கலியாணம் கட்டி ஒழுங்கா இருக்கேன் தொந்தரவு செய்யாதேன்னு சொல்லி இருக்கலாம். எல்லாம் சொல்லியும் இருக்கா. இவரு கேட்காம நீ பத்தினி இல்லே வான்னு அழைச்சிருக்கார். போடா பொறுக்கின்னு கன்னா பின்னான்னு பேசினதோட நிறுத்தாமல் செருப்பையும் துாக்கி காட்டி இருக்காள். பையனுக்கு அவமானம்! அவளை ஏதாவது செய்யனும்ன்னு ஆர்வம். நமக்கு ஒத்தாசையா அலையுது.” கொடுத்த காசுக்கு குலைக்கும் நாயாய் ஏதோ நியாயவான் போல சப்-இன்ஸ்பெக்டர் நம்பும்படி சொன்னார்.
“ஓகே….!” புரிந்ததற்கடையாளமாய் தலையாட்டிக் கொண்ட சாரதி கண்ணடி டம்ளர் எடுத்து இன்னொரு மிடறு விழுங்கி “என்ன செய்யனும்?” ரகுவைப் பார்த்தார்.
“வ…வந்து…வந்து….” தடுமாறினான்.
“தைரியமா சொல்லு?” சப்-இன்ஸ்பெக்டர் சாரதி அவனை ஏறிட்டார்.
“…மா…லா சாருவை கேசெழுதி செய்து கோர்ட்டுல ஒப்படைக்கிறது வீண் சார். அபராதம் கட்டி ஜாமீன்ல வெளியே வந்துடுவாங்க. புஸ்வானம்! நமக்கு உபயோகமில்லாம முறுக்கிக்கிட்டுப் போவாங்க. ரெண்டு பேரையும் தொழிலுக்குக் கொண்டு வர்றாப்போல ஏதாவது செய்யனும்…” இழுத்தான்.
“நீ குரு நான் சிஷ்யன்டா!” கேட்ட சாரதி உற்சாகத்தின் எல்லைக்குப் போய் கூவினார்.
“சார்!” இவனுக்கு அதிர்ச்சி.
“ஒன்னுமில்லே. நான் மனசுக்குள்ளே என்ன நினைச்சுக்கிட்டிருக்கேனோ அதை நீ சொல்றே? மேலே சொல்லு?” உற்சாகப்படுத்தினார்.
விழித்தான்.
“பரவாயில்லே. நீ நெனைக்கிறதை நான் சொல்றேன். அதுக்குப் புள்ளையார் சுழி போட்டாச்சு.”
“எ…ன்ன ?” எச்சில் கூட்டி விழுங்கினான்.
“பொறுத்திருந்து பார்!” சொன்ன சாரதி கை போனை எடுத்து எண்களை அழுத்தினார்.
அத்தியாயம் – 12
“எஸ் சார்!” ஏட்டு எத்திராசுதான் எடுத்தான்.
சப்-இன்ஸ்பெக்டர் சொன்னதற்கெல்லாம் “இல்லே சார். யாரும் தேடி வரலை. எல்லாரும் இருக்காங்க. ஒன்னும் பிரச்சனை இல்லே சரி சரி சார்!” என்று நாலைந்து முறை மண்டையை மண்டையை ஆட்டி வைத்தான்.
சப்-இன்ஸ்பெக்டரின் மனசு புரிந்தது.
இருக்கையில் சாய்ந்து அமர்ந்து இப்படி அப்படி பார்த்து “சிவா!“ அழைத்தான்.
“எஸ் சார்!” ஷுக்கு லேஸ் கட்டிக் கொண்டிருந்த அந்த இருபத்தைந்து வயது கான்ஸ்டபுள் ஓடி வந்து அவன் எதிரில் நின்றான். தன் மேசை டிராயரைத் திறந்து சிறை சாவியை எடுத்து வெளியே போட்டு “அவனுங்களைத் தொறந்து விடு” உத்தரவிட்டான்.
கான்ஸ்டபுள் சாவியை எடுத்துச் சென்று திறந்து செல்வராசு ஆசாரி கொளுத்துக்காரனை வெளியே விட்டு வெறும் சிறையைப் பூட்டினான்.
நின்றார்கள்.
“இங்கே வாங்கப்பா!” எத்திராசு அவர்களை அழைத்தான். அவர்கள் பயத்துடன் ஏட்டு மேசை அருகில் வந்து நின்றார்கள்.
“சப்-இன்ஸ்பெக்டர் ஐயா போன் பண்ணி உங்களை கண்டிச்சு விடச் சொல்லி இருக்கார். ஒழுங்கு மரியாதையாய் இருந்து போய் வேலையைப் பாருங்க போங்க.” தலையசைத்தான்.
ஆசாரிக்கும் செல்வராசுக்கும் ஆச்சரியம். சிறையிலிருக்கும் மாலா சாருவைப் பார்த்தார்கள்.
“உன் ஜோலி முடிஞ்சுதா ஓடு.“ துரத்தினான்.
மூவரும் எத்திராசைக் கையெடுத்துக் கும்பிட்டு “நாங்க வர்றோம் சார்!” ஒரே குரலில் கூறி அரை மனதுடன் வெளியேறினார்கள்.
அவர்கள் சென்ற சிறிது நேரம் கழித்து “பொம்பளைங்களையும் தொறந்து விடு சிவா”.
திறந்து விட்டான்.
“இங்கே வாங்கம்மா”
இருவரும் அழைத்த ஏட்டு முன் பவ்வியமாய் வந்து
“டிரைவர்!”
அவன் தொப்பியைப் போட்டுக் கொண்டு வந்து அதே ஏட்டு எத்திராசு முன் நின்றான்.
“பாதுகாப்புக்கு ரெண்டு கான்ஸ்டபுள்களை கூட்டிக்கிட்டு இவுங்க ரெண்டு பேரையும் கொண்டு போய் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டுல விடு”
“சரி சார் !” அவன் தலையசைத்து விலக…
சாருவுக்கு சொரக்.
“ஏன் சார் அங்கே?” மாலா திடுக்கிட்டாள்.
“இதையெல்லாம் என்கிட்ட கேட்காதே ஐயாக்கிட்ட கேள்!”
“காரணம் தெரியாம நாங்க இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம்!”
“அப்படியா ?!…. ஐயா போன் பண்ணினார். ராத்திரி நேரத்துல பொம்பளைங்களை ஸ்டேசன்ல்ல வைச்சிருக்கக் கூடாதுன்னு சட்டம். அதனால உங்களைக் கொண்டு வந்து தன்கிட்ட ஒப்படைக்கச் சொன்னார். அவர் அப்படியே அழைச்சிக்கிட்டுப் போய் நீதிபதிகிட்ட உங்களை ஒப்படைக்கிறதா திட்டம்.” பக்குவமாக சொன்னான்.
சாருவிற்கு இது வடிகட்டிய பொய்! புரிந்தது. அங்கு சென்றால் நடக்கக்கூடிய விபரீதம் என்னவென்று தெரிய…
“நாங்க அங்கே போக முடியாது சார். அவர் எங்களை இங்கே வந்து அழைச்சுப் போய் நேராய் நீதிபதிகிட்ட விடட்டும்.!” தீர்மானமாக சொன்னாள்.
“என்னம்மா இது. நீங்க அங்கே போனாலும் அவர் இங்கே வந்து அழைச்சுப் போனாலும் ஒன்னுதானே!?” இவனுக்கு எப்படியாவது இவர்களை அங்கே அனுப்ப வேண்டிய கட்டாயம். தழைந்தான்.
“இல்லே சார்!” சாரு உறுதியாய் சொன்னாள்.
“ஆமாம் சார். நாங்க இந்த இடத்தைவிட்டு எங்கேயும் வெளியே நகர மாட்டோம். அப்படி அனுப்பறதா இருந்தால் எங்களை வீட்டுக்கு அனுப்புங்க. தேவைப்பட்டா நாங்க காலையில வர்றோம்!” மாலாவும் திடமாக சொன்னான்.
“எனக்கு மேல் அதிகாரி என்ன சொல்றாரோ அதைத்தான் கேட்கனும். நீங்க சொல்றதைக் கேட்க முடியாது” எத்திராசுக்குக் கோபம் வர சினந்தான்.
“நாங்களும் இந்த இடத்தை விட்டு நகர முடியாது!” சாரு கைகட்டி சிலையாய் நிற்க மாலாவும் அப்படியே செய்தாள்.
எத்திராசுவிற்கு இவர்கள் பிடிவாதம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
‘அடி போங்கடி!’ அறைவிட்டு அனுப்ப மனசும் கைகளும் துறுதுறுத்தது, ‘அது பின்னால் பிரச்சனை. கூடாது!’ அடக்கினான்.
அதே சமயம்…. முரண்டு பிடித்து நிற்பவர்களை இருங்கடி என்று இருத்தவும் துரத்தவும் வழி இல்லை. சட்டம், அதிகாரி சொல் மீறல். அனுப்பாவிட்டாலும் வம்பு.
“ரெண்டு பொட்டச்சிங்களைச் சமாளிச்சு அனுப்ப வழி தெரியலே. நீயெல்லாம் ஏட்டு!” சப்-இன்ஸ்பெக்டர் கோபிப்பார் ! குழம்பினான். இவர்களைப் பேசி அனுப்புவதைத் தவிற வேறு வழி இல்லை.
முடிவிற்கு வந்தான்.
“இதோ பாருங்கம்மா. நீங்க இங்கே இருக்கிறதைப் பத்தி எனக்கு ஒன்னும் ஆட்சேபணை இல்லே. நீங்க நாளைக்கு வெளியில போய் ஸ்டேசன்ல ராத்திரி எங்களைக் கெடுத்துட்டாங்கன்னு சொன்னா ஊர் நம்பும். இதுனால ஐயா உட்பட இங்கே இருக்கிற மொத்த பேருக்கும் கெட்ட பேர், ஆபத்து. இதை ஐயா விரும்பலை. உங்களைக் கூட்டி வந்த உடனேயே கோர்ட்டுக்குக் கொண்டு போய் விட்டிருக்கனும். வேலை முடியலை. இப்போ ஐயா அதைச் செய்ய விரும்பறார். நீதிபதி வீட்டுல கொண்டு ஒப்படைச்சு அவுங்க சொல்றபடி செய்வார். நம்பிப் போங்கம்மா. வேலியே எப்படி பயிரை மேயும்?!” கடைசியாக ஒரு முத்தாய்ப்பு வசனத்தையும் எடுத்து விட்டான்.
‘உண்மையாய் இருக்குமோ?!’ சாரு, மாலா குழம்பிவிட்டார்கள். இருந்தாலும் சாரு “எங்களையெல்லாம் இப்படி ராத்திரியில நீதிபதிகிட்ட ஆஜர் படுத்தினதா சரித்திரம் இல்லையே!” சொன்னாள்.
இதற்கும் எத்திராசு பதிலைத் தயாராக வைத்திருந்தான்
“அந்த சட்டமெல்லாம் மாறிப் போச்சு. ராத்திரியில நீதிபதி முன்னால நிறுத்துறது அரசியல்ல சகஜம். இப்போ பெண்கள் பாதுகாப்பு கருதி உங்களையும் அப்படி ஒப்படைக்கலாம்ன்னு சொல்லிட்டாங்க”. என்றான்.
இப்போதுதான் சாரு முகத்தில் தெளிவு வந்தது, மாலாவைப் பார்த்தாள். அவளும் திருப்தியாக இருந்தாள். அவர்கள் தெளிவைப் புரிந்துகொண்ட எத்திராசு அடுத்த வினாடியே….
“டிரைவர்! இவுங்களைக் கொண்டு ஐயாகிட்ட விட்டுட்டு அவர் சொல்படி கேளுங்க. சங்கர் சிவா நீங்க ரெண்டு பேரும் இவுங்களுக்குப் பாதுகாப்பா போங்க.” கண்டிப்பு, கறாராய்க் கட்டளையிட்டான்.
கான்ஸ்டபுள்கள் டிரைவருக்கு ஆள் சமாளித்துவிட்டார்! நிறைவாக இருந்தது, ‘இதுக்குத்தான் ஐயா இவனை எப்பவும் தன் கைளாய் வைத்திருக்கார்!’ நினைத்தார்கள்.
டிரைவர் முன்னே செல்ல…
“வாங்கம்மா….” சங்கர்… மாலா, சாருவை அழைத்து முன்னே சென்றான்.
அவர்கள் அவனைப் பின்தொடர… சிவா பெண்கள் பின்னால் சென்றான்.
ஜீப் அவர்களை அள்ளிக்கொண்டு புறப்பட்டு மறைந்தது.
‘அப்பாடி!’ எத்திராசு நிம்மதியாக சாய்ந்து பெருமூச்சு விட்டான். அதைக் கெடுப்பது போல் சிறிது நேரத்தில் வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது.
அதிலிருந்து பாலு இறங்கி மண்டிப் போட்டு நாலு கால் பாய்ச்சலில் காவல் நிலையத்திற்குள் புகுந்தான். அவனுக்குப் பின்னால் பரபரப்பும் படபபடப்புமாய் ஆயா, முத்தம்மாள் நுழைந்தார்கள்.
உள்ளே அவர்கள் எதிர்பார்த்து வந்த ஆட்கள் இல்லாததைப் பார்த்து திகைத்தார்கள்.
எத்திராசுவிற்கு பாலுவை யாரென்று தெரிந்து போயிற்று. இருந்தாலும்….”யார் நீங்க?” அதிகாரமாய்க் கேட்டான்.
“நாங்க பக்கத்து வீடு. இவர் காலையில கூட்டி வந்தவளோட புருசன்!“ ஆயா பதில் சொன்னாள்.
“காலையில அழைச்சு வந்த ஆம்பளை, பொம்பளை எங்கே?” முத்தம்மாள் திகிலாய்ச் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
‘உண்மையைச் சொன்னால் எல்லாருக்கும் ஆபத்து !’ உணர்ந்த ரொம்ப எதார்த்தமாக.
“ஏட்டு, அவுங்களை அனுப்பியாச்சும்மா!“ உண்மையைச் சொல்வது போல் சமாளித்தான்.
“எப்போ?”பாலு.
“மதியம் ஒரு மணிக்கெல்லாம் அவுங்க எல்லாரையும் மன்னிச்சு அனுப்பியாச்சு! இவுங்களைத் தேடி மாலாங்குறவங்களும் வந்தாங்க. அவுங்களையும் சேர்த்து அனுப்பியாச்சு!” சப்-இன்ஸ்பெக்டருக்குத் தொந்தரவில்லாமல் எங்கேயாவது போய் தேடி அலையட்டும்! என்கிற நினைப்பில் சொன்னான்.
“வீட்டுக்கு வரலையே..!” ஆயா இழுத்தாள்.
“வழியில எங்கேயாவது போயிருக்கலாம். எங்களுக்குத் தெரியாது!”
“எதுக்காக கூட்டி வந்தீங்க?” பாலு.
:விபச்சாரம் செய்யுறதா தகவல் வந்துது. அதான் உண்மையா பொய்யான்னு தெரிய அழைச்சு வந்தோம். இல்லேன்னு தெரிஞ்சதும் அனுப்பிட்டோம்.”
எங்கே சென்றிருப்பார்கள்? ஆயா முத்தம்மாள் குழம்பினார்கள். பாலு இன்னும் ஒரு படி மேலே போய் வழியில் இருவரையும் கடத்தி விட்டார்களா? யார் எதிரி? திகிலடித்தான்.
ஆசாரி செல்வராசு மனசுக்குள் தோன்ற….”வாங்க “அழைத்து வெளியேறினான். தன்னைத் தொடர்ந்து வந்த ஆயாவையும் முத்தம்மாளையும் ஏற்றிக் கொண்டு ஆட்டோக்காரனுக்குத் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தைச் சொன்னான்.
அவர்கள் தலை மறைந்ததும் எத்திராசு தொலைபேசி எண்களை அழுத்தினான். சாரதி எடுத்தார்.
“ஐயா! பொம்பளைங்க முரண்டு பிடிச்சு வர்றாங்க. நீங்க நீதிபதிகிட்ட ஒப்படைக்கப் போறதா சமாளிச்சு அனுப்பி இருக்கேன். நீங்களும் பக்குவமா நடந்துக்கோங்க. அடுத்து அவுங்களைத் தேடிக்கிட்டு புருசன் ரெண்டு கிழவிங்க வந்தாங்க. அனுப்பியாச்சுன்னு சொல்லி அனுப்பியிருக்கேன். யாரும் அங்கே வர வாய்ப்பில்லே. உங்க புத்திக்குத் தக்கப்படி நடந்துக்கோங்க.” விசயத்தைச் சொல்லி வைத்தான்.
அத்தியாயம் – 13
சாரதி விழித்துக் கொண்டார். மது வாடை வராமல் இருக்க வாயில் செண்ட் அடித்துக் கொண்டார். ரகு, சின்னப்பன் இருவரையும் உள்ளே இருக்கச் சொல்லி விட்டு வாசல் விளக்குகளைப் போட்டு நல்ல பிள்ளை போல் ஜீப் வருவதற்கு முன்பே வாசலுக்கு வந்தார்.
வந்து நின்றதும் இறங்கிய கான்ஸ்டபுள்களுடன் வந்த மாலா சாருவைப் பார்த்து “வாங்க வாங்க” வரவேற்றார்.
“கான்ஸ்டபுள்!” பின்னால் வந்த சங்கரன் சிவாவை அழைத்தார்.
“எஸ் சார்!” அவர்கள் இவருக்கு முன்னே வந்து சல்யூட் அடித்தார்கள்.
“நான் இப்போதான் நீதிபதி அம்மா வீட்டுக்குப் போன் பேசினேன். அவுங்க வீட்டுல இல்லே ஒரு உறவினர் விசேத்துக்குப் போயிருக்காங்கன்னு வேலைக்காரன் சொன்னான். நான் விசயத்தைச் சொன்னேன். அம்மா வந்ததும் போன் பண்றேன் கூட்டி வாங்கன்னு சொன்னான். அநேகமா அவன் அரை மணி நேரத்துல போன் பண்ணுவான். போன் பண்றவரைக்கும் இவுங்க இங்கே இருக்கட்டும். நான் கொண்டு விட்டுடுறேன். நமக்கு ஸ்டேசன்ல வண்டி அவசரத்துக்குத் தேவைப்படும். நீங்க போங்க.” சொல்லி மாலா, சாருவுக்குச் சந்தேகம் ஏற்படாதவாறு சொல்லி கான்ஸ்டபுள்களைப் பார்த்து கண்ணடித்தார்.
அவர்களுக்கு விசயம் விளங்கி விட்டது.
‘படவா!‘ மனசுக்குள் பல் கடித்து, “சரி சார்!” தலையாட்டிக்கொண்டு ஜீப்பில் ஏறினார்கள். விலகினார்கள்.
“வாங்கம்மா!” மாலா சாருவை ரொம்ப யோக்கியாம்சமாக அழைத்து முன்னே சென்றார்.
அவர்கள் உள்ளே நுழைய…… கதவை அடைத்து தாழ் போட்டார்.
சாரு, மாலா திடுக்கிட்டார்கள்.
“உள்ளே வாங்க. ஆட்கள் இருக்காங்க” முன்னே சென்றார்.
சாருவிற்குக் கோட்டையில் புகுந்து விட்டோம்! உள் மனது சொல்லியது. உள்ளே நுழைந்து ரகு, சின்னப்பன் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அது உறுதியாகி விட்டது. வெளிறினாள்.
“பயப்படாம உட்காருங்க.” நாற்காலிகளைக் காட்டினார்.
நடுங்கியபடி அமர்ந்தார்கள்.
சாரதி இன்னொரு நாற்காலியில் அமர்ந்து ஆசுவாசமாக கால் மேல் கால் போட்டு சிகரெட் பற்றவைத்தார். புகையைவிட்டு, “இப்போ புலிக் கூண்டுல அடைபட்டிருக்கீங்க புரியுதா?” கேட்டார்.
மாலா திடுக்கிட்டாள்.
சாருவிற்கு எல்லாம் புரிந்துவிட்டது. இனி பயந்து பயனில்லை. தெளிந்தாள்.
“நாங்க சத்தம் போட்டு ஊரைக் கூட்டிடுவோம்!” மாலா சொன்னாள்.
“ஒரு மயிரும் நடக்காது!” என்று சிரித்த அவர் “இங்கே யார் கத்தினாலும் வெளியில கேட்காது. அப்படியே கேட்டாலும் சப்- இன்ஸ்பெக்டர்காரன் வீடுன்னு ஒரு பயலும் கிட்ட நெருங்க மாட்டான். ஏன்டிம்மா சாரு இதெல்லாம் மாலாவுக்குத் தெரியாது சொல்லி சொல்லி வை” ன்னார்.
அவள் தலை குனிந்தாள்.
அடுத்து இருந்த மாலாவிற்கு திகிலில் என்ன பேசுவதென்று தெரியவில்லை.
”சரி. விசயத்துக்கு வர்றேன். நான் சொல்றதைக் கேட்டீங்கன்னா…நாம கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!”
பெண்கள் புரியாமல் பார்த்தார்கள்.
“கேட்கலைன்னாலும் பரவாயில்லே. நாங்க நெனைச்சது நடக்கும் நீங்க சின்னாபின்னமாகி வெளியே போவீங்க. அது வேற விசயம்!” சிகரெட்டை அணைத்தார்.
இறுகினார்கள்.
“சிக்கல் ஒன்னும் பெரிசில்லே. மாலா என்கிட்ட வந்து சாரு இந்த ரகுகிட்ட போய் அப்படியே பழையபடி தொழிலுக்குப் போனா எல்லாம் சரியாப் போயிடும்!”
“பொறுக்கி!” சாரு சம்மட்டி அடி பட்டவள் போல் சத்தமிட்டாள்.
மாலா விதிர்விதிர்த்தாள்.
“பொறுக்கிதான்டி. நேத்திவரைக்கும் உன்னைப் பொறுக்கினேன். இன்னைக்கு இவளைப் பொறுக்கப்போறேன்!” என்றவர் நிறுத்தி “என்ன லாபம்ன்னு நீங்க யோசிக்கலாம். எனக்கு ஒன்னுக்கு ரெண்டு இருந்தா உபயோகமா இருக்கும். சின்னப்பனுக்குப் போன வருமானம் திரும்பும். ரகு மாதிரி இளைஞர்களெல்லாம் ரொம்ப ஏக்கப்படாம இருப்பாங்க” சொன்னார்.
“என்னை எடுத்துக்கிட்டு என் அக்காவை விட்டுடுங்க சார். அவுங்க வாழ்க்கையைப் பாழாக்கிடாதீங்க“ சாரு கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சி கண்ணீர் விட்டாள்.
“எனக்கு அழுகை பிடிக்காது. நீ சாக்கடையாய் இருந்தாலும் பூக்கடை. அவ பூக்கடையிலும் புதுக்கடை. எனக்கு ரெண்டு பேரும் வேணும்”
“அது அநியாயம். அவுங்க யோக்கியம்!”
“இல்லேன்னு யார் சொன்னா? அதான் அவ மேல எனக்கு ஆசை! இது புருசனுக்குத் தெரிஞ்சும் வரலாம் தெரியாமலும் வரலாம். அது சாமார்த்தியம், சாதுர்யத்தைப் பொறுத்தது. மாலா எனக்கு மட்டும் வேணும் நான் இன்னொரு புருசனா இருக்கேன்!”
“பாலுவுக்குத் தெரிஞ்சா வெட்டிடுவார்!”
“யார் அந்த சப்பாணிக்கா ?! இன்ஸ்பெக்டர் வைச்சிருக்கிறார்ன்னு சொன்னாலே பயந்துடுவான். போய் வான்னு அனுப்புவான்.”
“நான் தூக்கு மாட்டி தொங்குவேன்!” மாலா சத்தமிட்டாள்.
“இந்த பொண்ணுங்களுக்கே ரொம்ப குறுகிய புத்திப்பா. மண்ணு தின்னுட்டுப் போறதை மனுசன் தின்னுட்டுப் போனா என்னன்னு நினைக்க மாட்டாங்க” சாரதி அலுத்துக் கொண்டார்.
“உங்களுக்கு இரக்கமே கெடையாதா? ஒட்டு மொத்த குடும்பமும் நீங்கதான் காரணம்ன்னு எழுதி வைச்சுட்டு சாவோம்!” சாரு கூவினாள்.
“இதோ பாருங்கம்மா. இந்த வீண் பேச்செல்லாம் வேணாம். நீங்க தடுக்குல நுழைஞ்சா நாங்க இடுக்குல நுழைவோம். இந்த காக்கி சட்டையெல்லாம் கதாநாயகனுக்குக் கதாநாயகன் வில்லனுக்கு வில்லன். புத்திசாலிக்குப் புத்திசாலி. வில்லங்கத்துக்கு வில்லங்கம். நீங்களெல்லாம் இன்னைக்குத்தான் புத்திசாலியாவும் கிரிமினலாவும் யோசிப்பீங்க. இருப்பீங்க. நாங்க அதுலேயே உழன்று வர்றதினால தினமும் அப்படி இருப்போம். இப்போ புத்திசாலித்தனத்துக்கு ஒரு உதாரணம் சொல்றேன். ஏட்டுக்கிட்ட நான் கோடு போட்டுதான் கொடுத்தேன். அவன் ரோடு போட்டு உங்களை அனுப்பிட்டான். எனக்கு அதிகம் பேச விருப்பமில்லே. இதையும் நான் ஏன் பேசுறேன்னா….எல்லாத்தையும் இந்த நாலு சுவத்துக்குள்ளேயே கம்முன்னு முடிச்சுக்கிலாம் ங்குறதுக்காகத்தான்.”
“இப்போ கற்பெல்லாம் மலிஞ்சு போச்சு சாரு மாலா. டேட்டிங் வர மாணவிகள் தயாராய் இருக்காங்க. இப்படிப்பட்ட காலக்கட்டத்துல நான் ஒருத்தருக்குத்தான் உத்தமியாய் இருப்பேன்ங்குறதெல்லாம் பைத்தியக்காரத்தனம்.. சமய சந்தர்ப்பங்கள் சரியாய் வாய்க்காதவங்களே ராமன் சீதைன்னு சொல்றதுதான் சரி. நான் ஏன் இவ்வளவு சொல்றேன்னா..தடியால அடிக்கிறதைவிட தானாய் வர்றதுலதான் எனக்கு விருப்பம்.”
“அடுத்து இதையும் சொல்றேன் கேட்டுக்கோங்க. நீங்க இன்னைக்கு என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது. தப்பிச்சு நீங்க எது செய்துகிட்டாலும் என்னால சமாளிக்க முடியும். சப்பாணியை ஒரு அறை விட்டேன்னா உங்களைக் கொண்டு வந்து விடுவான். இல்லே ஒரு லாரிக்காரன்கிட்ட கண்ணைக் காட்டிவிட்டேன்னா அவனைச் சப்பையாய் நசுக்கி உங்களை விதவையாக்கிட்டுப் போயிடுவான். இதெல்லாம் வேணாம்ங்குறதுதான் என் விருப்பம். சாதாரண உடல் சுகத்துக்காக உயிரெல்லாம் சாகடிக்கிறதுங்குறது எனக்குப் பிடிக்காது!“ நிறுத்தினார்.
சாரு மாலா சிலையாகிப் போனார்கள்.
“இன்னும் எதுக்கும்மா தயக்கம் ஐயா சொல்றபடி கேளுங்க” சின்னப்பன் ஒத்துப் பாடினார்.
சாரு அவரை எரித்து விடுவது போல் பார்த்தாள். மாலாவிற்கு ரகுவைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது.
“அவன் மேல கோபப்படாத மாலா. அவனுக்கும் உன் மேல ஆசை. பொம்பளைங்களைப் பார்க்கிற எல்லா ஆம்பளைங்களுக்கும் ஏற்படுற ஆசைதான் அவனுக்கும் வந்திருக்கு. தப்பில்லே. ஆனா உன்னை நான் தொட்டால் அவன் தொடமாட்டான். காலம் தொடமாட்டான். காலம் கடத்தாதீங்க. ரகு! இன்னைக்கு உனக்கு சாரு. எனக்கு மாலா!” எழுந்தவர். “கடைசியா இன்னொரு விசயத்தையும் சொல்லிடுறேன். சொத்து வீடு பணத்தையெல்லாம் முதியோர் இல்லம் அனாதை ஆசிரமத்துக்குத் தானம் செய்துட்டு நல்ல பிள்ளையாய் போன சாரு தனக்காக கஷ்டப்பட்ட சின்னப்பனுக்கும் கொஞ்சம் உதவி இருக்கலாம் வா மாலா!“ அழைத்தார்.
தொலைபேசி அடித்தது.
“எவன் இந்த நேரத்துல சிவ பூ சையில கரடி?” எரிச்சலடைந்து எடுத்தார்.
“நான் எத்திராசு பேசுறேன் சார்!” எதிர் முனையில் குரல்.
“சொல்லு?”
“ஆபத்து!”
“என்ன?”
“நாம வெளியே விட்ட செல்வராசு, ஆசாரி ரெண்டு பேரும் போய் தலைவி வாசுகியையும், அவள் புருசன் வக்கீலையும் தேடிப் புடிச்சு கொண்டு வந்துட்டானுங்க சார். இன்னொருத்தன் அலைஞ்சு செல்வராசு வீட்டாண்ட அகப்பட்ட பாலு கிழவிங்ககிட்ட சேதி சொல்லி அவுங்களையும் இழுத்து வந்துட்டான். மொதல்ல இவுங்க அடுத்தது அவுங்கன்னு ஸ்டேசனுக்கு எல்லாரும் படையெடுத்துட்டாங்க. வக்கீல் ஐயாவும், வாசுகி அம்மாவும்… விபச்சாரம்ன்னு பொய் கேசு போட்டு அழைச்சு வந்த பொம்பளைங்க எங்கே? எப்போ புடிச்சு வந்தீங்க? உடனே கோர்ட்டுல ஒப்படைக்காம இவ்வளவு நேரம் இங்கே தங்க வைக்க வேண்டிய காரணம் என்ன? ராத்திரி நேரம் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு ஏன் அனுப்புனீங்க? பொம்பளைங்களை ராத்திரி நேரத்துல சப்-இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு அனுப்ப எந்த சட்டத்துல இடம் இருக்கு? அப்படி இப்படின்னு புடி புடின்னு புடிச்சாங்க சார். என்னால உண்மையை ஒத்துக்கிறதைத் தவிர வேற வழி இல்லே. உங்களைச் சும்மா விடப்போறதில்லேன்னு சொல்லி கை போன்ல ரெண்டு பேரும் எஸ்.பி, டி.எஸ்.பின்னு நம்ம மேலதிரிகாரிங்ககிட்ட சகட்டுமேனிக்குப் பேசினாங்க சார். அப்புறம் எல்லாரும் கிளம்பி கோபமா அங்கே வர்றாங்க. என்ன நடவடிக்கை, எப்படி வர்றாங்கன்னு தெரியலை. நீங்க தப்பிக்க ஒரே வழி அந்த பொம்பளைங்களைத் தொடாம இருந்தா தொடாதீங்க. சீக்கிரம் வெளியில துரத்துங்க. தொட்டால் வம்பு மருத்துவ பரிசோதனை அது இதுன்னு போய் மாட்டிப்பீங்க. அவுங்க மேல சின்ன கீறல் விழுந்தாக்கூட ஆபத்து ஒரு நிமிசம்!. குப்பமே திரண்டு வர்றாப்போல இருக்கு வைச்சுடுறேன் சார்!“ குரலில் கலவரம். வைத்தான்.
சாரதி தொப்பரையாக நனைந்து போனார். மாலா சாருவைப் பார்க்கவே அவருக்குப் பயமாக இருந்தது.
“என்ன சார்?“ ரகு அவரைக் கலவரமாகப் பார்த்தான்.
“சி…க்கல்!” அவருக்கு வார்த்தை விக்கல் வந்தது போல் வந்தது.
வியர்வைத் துடைத்துக் கொண்டு சன்னலைத் திறந்தார். பின்னாலேயே வந்த சின்னப்பன், ரகுவும் வெளியே எட்டிப் பார்த்தார்கள்.
வாசலில் டி.ஐ.ஜி.பி., வக்கீல், வாசுகி, பாலு… இத்தியாதியாதிகளோடு மட்டுமில்லாமல் வீட்டைச் சுற்றி வேலியாய் இரும்புத் தொப்பி போலீஸ் தலைகள் கூட்டம்.
உறைந்தார்கள்.
அடுத்து நடந்தெல்லாம் அதிரடி நடவடிக்கைகள். கேட்டை உடைத்து போலீஸ் நுழைந்தது.
அவர் அதிகாரியாக இருந்த காவல்நிலையத்திலேயே சாரதி கைதியாக நின்றார். அவருக்குப் பக்கத்தில் ஏட்டு எத்திராசு மற்றும் கான்ஸ்டபுகள்.
அடுத்து வக்கீல் சண்முக சுந்தரம், அவர் மனைவி தலைவி வாசுகி, பாலு, மாலா, சாரு, ஆயா, முத்தம்மா, செல்வராசு, ஆசாரி மற்றும் குப்பத்து சனங்கள் அடைத்து நின்றார்கள்.
டி.ஐ.ஜி.பி குற்றவாளிகளுக்கு எதிரில் நின்று கோபமாகப் பார்த்தார்.
“உங்களுக்கு எத்தினி தடவை பட்டாலும் புத்தியே வராதா? அன்னைக்குத் திண்டிவனம் இன்னைக்கு இங்கேன்னு தினம் ஒரு இடத்துல அத்துமீறல். எப்படி தேடி கண்டு பிடிச்சு அழிச்சாலும் மொளைச்சுடுறீங்க? அப்படி என்னய்யா காமம், கருமாந்திரம்?! விரும்புறவளைவிட்டுட்டு விரும்பாதவளையும் விலகுறவளையும் ஏன் தொடுறீங்க துரத்துறீங்க? அவுங்களை நீ தொழில்லேயே இரு. எங்களுக்கும் உபயோகப்பட்டு பணம் காய்ச்சி மரமாய் இருன்னு கட்டாயப்படுத்துறது என்ன நியாயம்?”
“நாமெல்லாம் வேலி. பயிரைக் காக்கனும் மேயக் கூடாது.”
:இந்த மாலா, சாரு எப்படிப்பட்டவங்க தெரியுமா ?! வாசுகி சண்முக சுந்தரம் சொல்ல சொல்ல வாயைப் பிளந்துட்டேன். மாலா ஊனமாவனை விரும்பிக் கட்டிக்கிட்டாள். அவ மனசு புரியாம…. இருக்கிற அத்தனை ஆம்பளைங்களும் வக்கிரப் பார்வை பார்த்தாங்க. இதுக்கெல்லாம் பதிலடி கொடுக்கனும், தாம்பத்தியத்துல நீங்க நினைக்கிற போலெல்லாம் என் புருசனோட குறையா இல்லே நிறைவா இருக்கிறேன்னு காட்டுறதுக்காக அவள் எடுத்த ஆயுதம்தான் சாரு.”
“அதுக்கு ஏன் பலான பொண்ணைத் தேர்ந்தெடுத்தாள்? வாழ்க்கையைப் பகிர்ந்து கொடுக்க தீர்மானிச்ச பிறகு இப்படிப்பட்ட பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தாலென்னங்குற நல்ல எண்ணம். அதனால அவளைச் சந்திச்சா, கொண்டு வந்தாள்.”
“சாரு மட்டும் சாதாரணவளா? தான் உழைச்ச காசு முழுசையும் அனாதை ஆசிரமத்துக்கும், முதியோர் காப்பகத்துக்கும் கொடுத்துட்டு வந்தாள். யாருக்கு இந்த மனசு வரும்?!”
“சாரதி! உன்னை சப்-இன்ஸ்பெக்டர்ன்னு சொல்றதுக்கே அவமானமா இருக்கு. மனைவியை அடிச்சு துரத்திட்டு அடுத்தவளுக்காக அலையுறீயே நீயெல்லாம் என்னய்யா மனுசன்?! சமூகத்துல சின்னப்பன், ரகு போல சில கெட்டவங்க இருக்கத்தான் செய்வாங்க. தன் சுயநலத்துக்காக அவுங்களோட கூட்டு சேர்ந்து அநியாயம் செய்யுறது பயங்கரம்?”
“எத்திராசு, கான்ஸ்டபுள்ஸ்! தனக்கு மேலே உள்ள அதிகாரி சொல்ற சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது கீழே உள்ளவங்க கடமை. ஆனா அவுங்க தவறு தப்புக்கெல்லாம் தலையாட்டுறது, உடந்தையாய் இருக்கிறது பெரிய தப்பு. உங்க அக்காவோ தங்கச்சியோ இப்படி ஸ்டேசனுக்கு வந்து சப்-இன்ஸ்பெக்டர் அனுப்புன்னு சொன்னா அனுப்புவீங்களா, அழைச்சுப் போவீங்களா? குறை உள்ள இடத்தைச் சுட்டிக் காட்டனும். இல்லேன்னா மேலிடத்துக்குத் தெரியப்படுத்தனும். தவறினா இது போல எப்பவும் குற்றவாளியாய் நிப்பீங்க.”
“ஆக… இந்த ஸ்டேசன்ல உள்ள எல்லாரும் தப்பா இருக்கீங்க. உங்க தப்புக்குச் சரியாய் நடவடிக்கை எடுப்பேன். அதிக பட்ச தண்டனையாய் சாரதிக்கு ஏழெட்டு வருசம் கடுங்காவல் கிடைக்கும். எத்திராசுக்குக் குறையும். அடுத்து உள்ளவங்களுக்கு இன்னும் குறையும்.”
“ஒரு வகையில நீங்க அதிர்ட்டசாலிங்க. எனக்கு சரியான நேரத்துல தகவல் வந்து நான் சரியாய் நடவடிக்கை எடுத்ததினால பொழைச்சீங்க. இல்லேன்னா இந்த குப்பத்து மக்கள் ஸ்டேசன்குள்ளே புகுந்து அடிச்சு நொறுக்கி உங்களைத் தாறுமாறாக்கியிருப்பாங்க” என்றவர் மாலா, சாரு, பாலு, சண்முகசுந்தரம், வாசுகி….மக்கள் பக்கம் திரும்பி…
“ஒரு அதிகாரியாய் நடந்த தவறுக்கு இவுங்க சார்பா நான் உங்ககிட்டே மன்னிப்பு கேட்குறேன். அதே சமயம் மனுசனா உங்க எல்லாரையும் மதிக்கிறேன். எங்கே தவறு நடந்தாலும் சுட்டிக்காட்டுங்க. மக்கள் விழிப்பாய் இருந்தாத்தான் உங்களை அதிகாரம் பண்ணவங்களும் ஆள்றவங்களும் தப்பு செய்ய மாட்டாங்க. இதுதான் உண்மை. வாங்க” கைகூப்பினார்.
மாலா, சாரு, பாலுவுடன் இணைய… சண்முகசுந்தரம், வாசுகி, ஆயா, முத்தம்மாள், ஆசாரி சகாக்களுடன் குப்பத்து சனங்களும் திருப்தியாய் சேர்ந்து நடந்தார்.
(முற்றும்)
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
முள்
ஜே.எம்.சாலி
August 1, 2026
கடவுள் போட்ட முடிச்சு!
கல்பனா ராஜகோபால்
August 1, 2026
உயிர் உனதானதே!
லாவண்யா ஸ்ரீராம்
August 1, 2026
