ஆழ்மனதின் சிறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 26, 2026
பார்வையிட்டோர்: 97 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

கோலாலம்பூர் மாநகரமே தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால், புக்கிட் பிந்தாங் சாலை மட்டும் இன்னும் விழித்திருந்தது. நள்ளிரவு 2.17 மணி. வானம் பிளந்து கொண்டு ஊற்றியது போல் மழை. சாலையின் தார் மீது விழுந்த மழைத்துளிகள், தெருவிளக்கின் மஞ்சள் ஒளியில் நவரத்தினங்களாக ஜொலித்தன. ஆனால், அகிலனின் கண்களுக்கு அந்த ஒளி தெரியவில்லை. அவனது பார்வை முற்றிலும் மங்கிக் கிடந்தது.

அவன் கைகள் ‘BMW M4’ காரின் லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங்கில் நடுங்கிக் கொண்டிருந்தன. ‘கிலபில் பார்ட்டி’ முடிந்து திரும்பும் வழி. காரின் பின் இருக்கையில் அவனது ஆருயிர் நண்பர்கள் விக்கி, ஷான், வருன். மூவரும் அதீத போதையில் மிதந்து கொண்டிருந்தனர். காரின் அதிநவீன ஸ்பீக்கர்களில் பாடல் ‘பேஸ்’ அதிர அலறிக் கொண்டிருந்தது. அந்த இசைக்கு ஏற்ப காரும் சாலையில் அங்கும் இங்கும் அலசியது.

“டேய் அகில்! சிக்னல்டா… ரெட் சிக்னல்! காரை நிறுத்துடா!” என்று விக்கி பின்னால் இருந்து அலறினான்.

மதுவின் மயக்கம் அகிலனின் மூளையைச் செயலிழக்கச் செய்திருந்தது. மூளையின் எச்சரிக்கைக் குரலை விட, போதையின் வேகம் அவனுக்குள் அதிகமாக இருந்தது. பிரேக் மிதிக்க வேண்டிய அவனது வலது கால், பதற்றத்தில் ஆக்ஸிலேட்டரை பலமாக அழுத்தியது. காரின் எஞ்சின் சிங்கம் போல் கர்ஜித்துக்கொண்டு முன்னோக்கிப் பாய்ந்தது.

அடுத்த நொடி!

விளக்க முடியாத ஒரு பயங்கர சத்தம். உலகமே ஒரு கணம் உறைந்து நின்றதைப் போன்ற உணர்வு. ஒரு பெரிய லாரி வந்து மோதியதைப் போல காரின் முன் பகுதி சுக்குநூறானது. ‘ஏர்பேக்குகள்’ சட்டென்று பலூன்களைப் போல் உப்பி வந்தன. முன் கண்ணாடி சிலிர்த்து வெடித்து, சிறு சிறு படிகங்களாகச் சிதறியது. காரின் பானட்டில் பலமாக மோதியது ஒரு ‘Yamaha LC135’ மோட்டார் பைக். அந்த பைக்கும், அதில் பயணித்தவர்களும் காரின் வேகத்தில் தூக்கி வீசப்பட்டு, கிட்டத்தட்ட 20 மீட்டர் தள்ளி சாலையில் தேய்த்துக்கொண்டு போய் விழுந்தார்கள். காரின் இசை நின்றுபோயிருந்தது. விக்கியும் ஷானும் பயத்தில் உறைந்து போயிருந்தனர்.

அகிலன் கதவைத் திறந்து கொண்டு, தடுமாறியபடி கீழே இறங்கினான். குளிர்ந்த மழைநீர் அவன் முகத்தில் அடித்தது. போதை கொஞ்சம் கொஞ்சமாக இறங்கத் தொடங்கியது. கால்கள் பின்ன, அவன் விபத்து நடந்த இடத்தை நோக்கி நடந்தான். சாலையில் மழைத்தண்ணீர் வெள்ளமாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், அகிலனின் காலடியில் ஓடியது வெறும் தண்ணீர் மட்டுமல்ல சிவப்பான இரத்தமும் தான்.

“ரத்தம்!” என்று அகிலன் தன் மனதுக்குள் வினவினான்.

அவன் இன்னும் சில அடிகள் முன்னோக்கி வைத்தான். அங்கே மூன்று உடல்கள் கிடந்தது.

முதல் உடல் ராஜன். ஒரு ஏழை ‘கிரேப்’ ஓடுனர். பகல் முழுக்க உழைத்துவிட்டு, நள்ளிரவிலும் குடும்பத்தைக் காப்பாற்ற சவாரி போனவன். அவனது ஹெல்மெட் உடைந்து, சிதறி, மூளைப்பகுதி வெளியே தெரிந்திருந்தது.

அதற்கடுத்து கிடந்தது செல்வி. ‘லொத்தஸ்’ பேரங்காடியில் பணப் பொறுப்பாளராக வேலை பார்ப்பவள். மரணத்தின் கொடூரமான நொடிகள் நெருங்கிய போதும், அவளது கைகள் தன் கணவனின் கையை இறுக்கமாகப் பிடித்திருந்தது. அந்தப் பிடி இன்னும் தளரவில்லை.

ஆனால், அகிலனின் இதயத்தை அறுத்த காட்சி அதுவல்ல. அந்த தம்பதியருக்கு நடுவில் கிடந்த ஒரு பிஞ்சு உடல். அமுதா.

“ஐயோ, இந்தப் பிஞ்சு உடம்பு இப்போது எந்த அசைவும் இல்லாமல் மரணத்தின் மடியில் கிடக்கிறதே” என்று அகிலன் கைகள் வெட வெடுத்துப் போனது.

ஆனால், ஆச்சரியமாக அவளது கண்கள் மட்டும் இன்னும் மூடவில்லை. அகிலனைப் பார்த்து “ஏன் என்னைக் கொன்றாய்?” என்று கேட்பது போல், அந்த விழித்திருந்த கண்கள் அவனை உற்றுப் பார்த்தன.

“டேய்… ஆம்புலன்ஸ்… ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கடா! யாராவது காப்பாத்துங்கடா!” என்று அகிலன் சாலையில் முழங்காலிட்டு கத்தினான். அவனது போதை மொத்தமாக இறங்கி, நரகத்தின் பயம் தொற்றிக் கொண்டது.

ஷான் பின்னால் இருந்து ஓடிவந்து அகிலனின் தோளைப் பிடித்து பலமாக இழுத்தான். “டேய், லூசாடா நீ? போலீஸ் வந்தா நம்ம எல்லார் லைஃபும் காலி. ஜெயிலுக்குப் போகணும். உங்க அப்பா டத்தோ ஸ்ரீ ஆனந்தன் பேர் என்ன ஆகுறது? யோசிடா!”

“டேய்! அவங்க செத்துட்டாங்கடா… அந்த குழந்தையைப் பாருடா… இன்னும் கண்ணைத் திறந்திருக்குடா!” அகிலன் போராடினான்.

விக்கி சட்டென்று அகிலனின் வாயை அடைத்தான். “இங்க பாரு, யாருக்கும் ஒன்னும் ஆகல. நாம இங்க வரல, இந்த கார் இங்க இல்ல. அவ்வளவுதான். வாடா இங்கருந்து!”

மூன்று பேரும் சேர்ந்து, தங்களை யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தில், அகிலனைப் பலவந்தமாக இழுத்து காரின் முன் இருக்கையில் திணித்தான். சிதைந்த முகப்பு விளக்குகளுடன், அந்த BMW கார் பின்னால் பார்க்காமல், இருட்டுக்குள் மறைந்தது.

மழை விடாமல் பொழிந்து கொண்டிருந்த அந்தச் சாலையில், இப்போது மூன்று அசைவற்ற உயிர்களும், ஒரு நொறுங்கிய மோட்டார் வண்டியும், ஒரு பிஞ்சு செருப்பும் மட்டுமே அநாதையாகக் கிடந்தன.

கோலாலம்பூரின் மிக ஆடம்பரமானப் பகுதியான ‘டாமன்சாராவில்’ இருக்கும் ஆனந்தனின் மூன்று மாடி சொகுசு பங்களா, ‘ஆனந்தன் குரூப் ஆஃப் கம்பெனிஸ்’ என்ற பல்லாயிரம் கோடி சாம்ராஜ்யத்தின் அதிபதி. அவருக்கு ‘டத்தோ ஸ்ரீ’ பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்.

நடுராத்திரி 3.00 மணி. பங்களாவின் பிரம்மாண்ட வரவேற்பறையில் ஆனந்தன் காபி குடித்துக் கொண்டிருந்தார். கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவர், உள்ளே நுழைந்த அகிலனைப் பார்த்து அதிர்ந்தார். அகிலனின் ஆடைகள் நனைந்திருந்தன, கைகளில் ரத்தக்கறை, உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. தன் ஒரே மகனின் நிலையைப் பார்த்ததும், விபரம் என்னவென்பதை நொடியில் ஊகித்துக் கொண்டார்.

அகிலன் தன் அப்பாவின் காலடியில் விழுந்து கதறினான். “ப்பா… என்னை மன்னிச்சிடுங்கப்பா. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். கார்ல போதைல சிக்னல் பார்க்காம… மூணு பேரைக் கொன்னுட்டேன்ப்பா. அதுல ஒரு குட்டி பாப்பா… பிங்க் கலர் டிரஸ் போட்டிருந்தாப்பா…”

ஆனந்தன் மகனின் தலையை மெதுவாக நிமிர்த்தினார். ஆச்சரியமாக, அவரது கண்களில் மகனைப் பற்றிய கோபமோ, அதிர்ச்சியோ இல்லை. மாறாக, அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்ற கணக்கு மட்டுமே இருந்தது.

“ஷ்ஷ்… சத்தம் போடாதே கண்ணா. ஒன்னும் ஆகல. அப்பா இருக்கேன்ல, நான் பாத்துக்குறேன். நீ நேரா உன் ரூமுக்கு போய் குளிச்சிட்டு நிம்மதியா தூங்கு. இந்த விபத்தைப் பத்தி இனிமேல் இந்த வீட்டுக்குள்ளயோ, வெளியவோ ஒரு வார்த்தைக் கூட உன் வாயிலிருந்து வரக்கூடாது. புரியுதா?” என்றார் அதிகாரத் தொணியில்.

அகிலன் மாடிக்குச் சென்ற அடுத்த நிமிடம், ஆனந்தனின் பங்களா ஒரு கட்டுப்பாட்டு அறையாக மாறியது. நள்ளிரவு என்றும் பாராமல் அவரது வக்கீல், மற்றும் காவல்துறை உயர் மட்டத்தில் இருக்கும் அவரது ‘அரசியல் நண்பர்கள்’ அனைவருக்கும் அழைத்தார். அதிகாரமும் பணமும் தன் ஆட்டத்தைத் தொடங்கின.

மறுநாள் காலை, மலேசியாவின் முன்னணி நாளிதழான ‘தி ஸ்டார்’ பேப்பரின் முதன்மைப் பக்கத்தில் ஒரு செய்தி வெளியானது.

“புக்கிட் பிந்தாங் சாலையில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்ற வாகனம். போலீசார் விசாரணை” என்ற தலைப்பில் வெளியானது.

அன்றைய தினமே, அந்தச் சாலையில் இருந்த அனைத்து முக்கிய ‘சீ.சீ.டீ.வீ’ கேமராக்களின் பதிவுகளும், தொழில்நுட்பக் கோளாறு என்ற பெயரில் மாயமாய் மறைந்தன. விபத்து நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மாற்றப்பட்டன. டத்தோ ஸ்ரீ ஆனந்தனின் பண பலத்திற்கு முன்னால் சட்டம் தன் கண்களை மூடிக்கொண்டது. வழக்கு அதிகாரப்பூர்வமாக மூடி மறைக்கப்பட்டது.

ஆனால், அரசாங்கத்தின் வழக்கு வேண்டுமானால் மூடியிருக்கலாம், அகிலனுக்குள் இருந்த மனசாட்சியின் வழக்கு அப்போதுதான் தன் விசாரணையைத் தொடங்கியது.

நாட்கள் நகர்ந்தன. வெளி உலகிற்கு அகிலன் ஒரு சுதந்திர மனிதன். ஆனால், தன் சொந்த பங்களாவின் ஆடம்பர அறைக்குள் அவன் ஒரு கைதியாக வாழத் தொடங்கினான்.

அவனால் கண்ணை மூட முடியவில்லை. கண்கள் மூடினால், இருட்டுக்குள்ளிருந்து அமுதாவின் அந்த விழித்திருந்த கண்கள் தோன்றி அவனை உற்றுப் பார்த்தன. ‘டைனிங் டேபிளில்’ அமர்ந்து

தண்ணீர் குடித்தால், அவனுக்குத் தண்ணீரில் ரத்த வாடை அடித்தது. நடுராத்திரியில், பங்களாவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒரு சிறு குழந்தையின் அழுகுரல் அவன் காதுகளில் மட்டும் ஒலித்தது: “அப்பா… வலிக்குதுப்பா… காப்பாத்துப்பா…”

அகிலன் மெல்ல மெல்லப் பைத்தியம் பிடித்தவன் போல் மாறினான். சாப்பாடு இல்லை, சரியான தூக்கம் இல்லை. தலைமுடி கலைந்து, கண்கள் குழி விழுந்து, ஒரு பிச்சைக்காரனைப் போலத் தன் அறைக்குள் உலா வந்தான். அவனது இந்த நிலையைக் கண்டு பங்களாவின் வேலைக்காரர்கள் கூட அவனருகே செல்லப் பயந்தார்கள்.

விஷயம் அறிந்த ஆனந்தன், வேலைக்காரர்களுக்குக் கடுமையான உத்தரவிட்டார்.

“அவன்கிட்ட எல்லாரும் நார்மலா பேசுங்க. அப்படி ஒரு விபத்தே நடக்காத மாதிரி எல்லாரும் நடந்துக்கணும். அவன் மனசு மாற கொஞ்ச நாள் ஆகும், அவ்வளவுதான்”.

பணத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்ற ஆனந்தனின் எண்ணம், தன் மகனின் மனச்சிதைவுக்கு முன்னால் தோற்றுக்கொண்டிருந்தது. ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. அகிலன் வாழும் ஒரு நடைப்பிணமாக, வெறும் உடலாக மட்டுமே உலவிக் கொண்டிருந்தான்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, அகிலனின் அக்கா கவிதாவின் மகள் யாழினிக்குக் காதணி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டாமன்சாரா பங்களா முழுக்கத் தோரணங்கள், மின்விளக்குகள் எனத் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. வி.ஐ.பிக்கள், டத்தோக்கள், ஆனந்தனின் பிசினஸ் பார்ட்னர்கள் எனப் பெரும் கூட்டமே கூடியிருந்தது. பங்களா எங்கும் சிரிப்புச் சத்தமும், கொண்டாட்டமும் நிறைந்திருந்தது.

ஆனால், அகிலன் மட்டும் மாடி அறையில், கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு, இருட்டில் அமர்ந்திருந்தான்.

“தம்பி அகீ, கதவைத் தொறடா. கீழே எல்லாரும் வந்துட்டாங்க. யாழினி குட்டி மாமாவைத்தான் கூப்பிட்டுட்டே இருக்கா. சீக்கிரம் வாடா,” என்று கவிதா கதவைத் தட்டினாள்.

வேறு வழியின்றி, தன் நிலையை மறைத்துக் கொண்டு அகிலன் கீழே வந்தான். கூட்டத்தைப் பார்த்ததும் அவனுக்குத் தலை சுற்றியது. அப்போது அக்கா கவிதா தன் மகள் யாழினியைத் தூக்கிக் கொண்டு வந்தாள்.

அகிலனின் இதயம் சட்டென்று ஒரு துடிப்பைத் தவறவிட்டது. யாழினி உடுத்தியிருந்தது அதே பிங்க் கலர் பாவாடை சட்டை. அமுதா இறந்த அன்று அணிந்திருந்த அதே நிறம்.

காது குத்தும் முகூர்த்த நேரம் வந்தது. நாதஸ்வர இசை பின்னணியில் ஒலிக்க, பூசாரி ஊசியை எடுத்தார். கூட்டத்தைக் கண்டும், ஊசியைப் பார்த்தும் பயந்த யாழினி அழத் தொடங்கினாள். “எனக்கு பயமா இருக்குமா… மாமா வேணும்! மாமா மடியில தான் உட்காருவேன்!” என்று அடம் பிடித்தாள்.

கவிதா அவளை அகிலனின் மடியில் உட்கார வைத்தாள். “இருடா தங்கம், மாமா இருக்கார்ல. ஒன்னும் பண்ணாது,” என்று சமாதானப்படுத்தினாள். அகிலன் யாழினியை இறுக்கமாகக் கட்டிக்கொண்டான்.

பூசாரி குழந்தைக்குக் காது குத்தினார். ஊசி காதை ஊடுருவிய அந்த நொடி, யாழினி “ஆ!” என்று பயங்கரமாக அலறினாள்.

அந்த அலறல் சத்தம் கேட்ட அடுத்த நொடி!

அகிலனின் உலகம் தலைகீழாக மாறியது. பங்களாவின் விளக்குகள் அணைந்து, புக்கிட் பிந்தாங் சாலையின் மழை அவனுக்குத் தெரிந்தது. அவனது மடியில் இருப்பது யாழினி இல்லை; அது அமுதா! ரத்தம் தோய்ந்த பிஞ்சு முகம், சிதைந்த ஆடைகள், அவனைக் கொல்வது போல் பார்க்கும் அந்தப் பார்வை. காதில் கேட்டது யாழினியின் அழுகை அல்ல, அது அமுதாவின் மரண ஓலம்.

“அப்பா… வலிக்குதுப்பா… என்னை ஏன் கொன்னீங்க? காப்பாத்துப்பா…”

“ஏய்… பேய்! பேய் இங்க இருக்கு! அவ என்னை மன்னிக்கவே மாட்டா! என்னை விட்ரு… என்னை விட்ரு!” என்று அகிலன் வெறி பிடித்தவன் போல் கத்தினான். தன் மடியில் இருந்த யாழினியைத் தூக்கி கவிதாவிடம் கொடுத்துவிட்டு, கூட்டத்தை முட்டிக்கொண்டு, பங்களாவை விட்டு வெளியேறி, சாலையை நோக்கிப் பைத்தியம் போல் ஓடினான். வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். ஆனந்தனின் முகம் வெளுத்துப் போனது.

அகிலன் நேராக ஓடியது கோலாலம்பூரின் முக்கிய காவல் நிலையமான ‘டாங் வாங்கி’ போலீஸ் ஸ்டேஷனுக்கு. அப்போது நள்ளிரவு 12 மணி இருக்கும். உடல் முழுக்க வியர்க்க, மூச்சிரைக்க உள்ளே நுழைந்தவன், அங்கே டியூட்டியில் இருந்த இன்ஸ்பெக்டர் லிம் முன்னாடி போய் நின்றான்.

“சார்… நான்தான் குற்றவாளி! 6 மாசத்துக்கு முன்னாடி புக்கிட் பிந்தாங்ல மூணு பேரைக் கார் ஏத்திக் கொன்னேனே… அந்த BMW காரை ஓட்டுனது நான்தான் சார். என்னை அரெஸ்ட் பண்ணுங்க. ப்ளீஸ், எனக்கு விலங்கு மாட்டுங்க சார்!” என்று கைகளை நீட்டினான்.

இன்ஸ்பெக்டர் லிம் பேனாவை மூடிவிட்டு, அகிலனை மெதுவாக மேலும் கீழும் பார்த்தார். அவரது முகத்தில் எந்த அதிர்ச்சியும் இல்லை. மாறாக, ஒரு மெல்லிய கேலி புன்னகை தெரிந்தது. அவர் தன் மேஜை டிராயரைத் திறந்து, ஒரு தடிமனான ‘ஃபைலை’ எடுத்து அகிலன் முன்னாடி போட்டார்.

“அகிலன்… உங்களுக்காகத்தான் நான் கடந்த ஆறு மாசமா காத்துக்கிட்டு இருக்கேன்,” என்றார் லிம் அமைதியான குரலில்.

அதிர்ச்சியடைந்த அகிலன் அந்த ஃபைலைத் திறந்தான். உள்ளே விபத்தில் இறந்த ராஜன், செல்வி, மற்றும் அமுதாவின் பிரேதப் பரிசோதனைப் புகைப்படங்கள் இருந்தன. அமுதாவின் அந்தப் படம் அவனது இதயத்தைக் கிழித்தது.

இன்ஸ்பெக்டர் லிம் தொடர்ந்தார், “அந்த ஆக்ஸிடென்ட் நடந்த மறுநாளே எங்களுக்கு ‘சீ.சீ.டீ.வீ ஃபுட்டேஜ்’ கிடைச்சிடுச்சு. உங்க கார் நம்பர், கார்ல உங்க நண்பர்கள் இருந்தது, கார் ஓட்டுன உங்க முகம்… எல்லாமே எங்களோட ரகசிய சர்வர்ல தெளிவா இருக்கு. ஆனா, உங்க அப்பா ஆனந்தன் சும்மா இருப்பாரா? கேஸை அப்படியே மூடி மறைக்க சொல்லி, மேலதிகாரியிடம் இருந்து எங்களுக்குப் பயங்கர பிரஷர். பணம், பதவி, மிரட்டல்னு எங்களை வேலை செய்ய விடாம தடுத்தாங்க.”

அகிலன் உறைந்து போய் நின்றான். “அப்போ… எல்லாமே உங்களுக்குத் தெரிஞ்சும், ஏன் என்னை இவ்வளவு நாள் அரெஸ்ட் பண்ணாம விட்டீங்க?”

லிம் எழுந்து வந்து அகிலனின் தோளில் கை வைத்தார். “நாங்க சட்டப்படி காத்துக்கிட்டு இருந்தோம் தம்பி. உங்க அப்பாவுக்கு பயந்து, அவரோட அதிகாரத்தைப் பயன்படுத்தி நீங்க தப்பிச்சிருந்தா, இந்த நாட்டுல நீதி செத்துப் போயிருக்கும். நாங்களா வந்து உங்களை அரெஸ்ட் பண்ணியிருந்தா கூட, உங்க அப்பா பெரிய வக்கீல்களை வச்சு உங்களை வெளிய கூட்டிட்டு வந்திருப்பாரு. ஆனா, இன்னைக்கு நீங்களா, உங்க மனசாட்சிப்படி வந்து இங்க சரணடைஞ்சிருக்கீங்க பாத்தீங்களா… இப்போ நீதி ஜெயிச்சிருக்கு.”

லிம் ஒரு கணம் நிறுத்தி அகிலனின் கண்களைப் பார்த்தார். “உங்க அப்பா உங்களைச் சட்டத்துகிட்ட இருந்து காப்பாத்த நினைச்சாரு. ஆனா, அந்தப் பிராசஸ்ல உங்களுக்குள்ள இருக்கிற ஒரு நல்ல மனுஷனை அவர் கொன்னுட்டாரு. கடந்த 6 மாசமா நீங்க தூக்கமில்லாம, குற்ற உணர்ச்சியில அனுபவிச்சீங்களே ஒரு நரகம்… அதுதான் இயற்கை உங்களுக்குக் கொடுத்த முதல் தண்டனை.”

இன்ஸ்பெக்டர் லிம் தன்னிடம் இருந்த கைவிலங்கை எடுத்து அகிலனின் கைகளில் மாட்டினார். அந்த இரும்பு வளையங்கள் தன் கைகளில் பூட்டப்பட்ட போது, அகிலன் ஆறு மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக நிம்மதியாக மூச்சு விட்டான்.

“அகிலன் ஆனந்தன்… மூன்று பேரைக் கொலை செய்தது, குடித்துவிட்டு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, விபத்து நடந்த இடத்தை விட்டு தப்பியோடியது ஆகிய குற்றங்களுக்காக உங்களை நான் கைது செய்கிறேன்,” என்று சட்டத்தின் வார்த்தைகளை முறைப்படி கைது செய்தார் இன்ஸ்பெக்டர் லிம்.

ஒரு வருடம் கழிந்தது. கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

நீதிபதி தன் இருக்கையில் அமர்ந்து, வழக்கின் இறுதித் தீர்ப்பை வாசித்தார்.

“இந்த நீதிமன்றம் அனைத்து ஆதாரங்களையும், சாட்சிகளையும் ஆராய்ந்ததில், குற்றவாளி அகிலன் செய்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குற்றவாளி தப்பிக்க முயலாமல், தன் அதிகாரமிக்க பின்னணியைத் துறந்து, தானாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டதையும், அவரிடம் இருக்கும் ஆழ்ந்த குற்ற உணர்ச்சியையும் இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது.

குற்றவாளி அகிலனுக்கு 12 வருடக் கடுமையான சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட ராஜனின் குடும்பத்தினருக்கு, அவரது வயதான பெற்றோருக்கு நஷ்டஈடாக 50000

ரிங்கிட் தொகையைக் குற்றவாளியின் குடும்பம் வழங்க வேண்டும் என இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.”

நீதிமன்றத்தின் முதல் வரிசையில் டத்தோ ஸ்ரீ ஆனந்தன் அமர்ந்திருந்தார். அவரது தலை குனிந்திருந்தது. அவரிடம் இருந்த பல்லாயிரம் கோடி பணத்தாலோ, சமூக அந்தஸ்தாலோ தன் மகனின் மனசாட்சியை விலைக்கு வாங்க முடியவில்லை என்பதை அவர் உணர்ந்த கணம் அது.

இப்போது, சுங்கை பூலோ மத்திய சிறைச்சாலயில் அகிலன் இப்போது ஒரு சாதாரண கைதி எண். அவன் சிறை நூலகத்தில் வேலை செய்கிறான். அவனது ஆடம்பர உடைகள் இல்லை, சொகுசு கார் இல்லை. அவன் குடியை முற்றிலும் நிறுத்திவிட்டான். அவனது சிறை அறையின் சுவரில், இன்ஸ்பெக்டர் லிம்மிடம் கேட்டு வாங்கிய அமுதாவின் சிறிய புகைப்படம் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு முன்னால், அவன் அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்த்துக் கைகளைக் கூப்பி மன்னிப்பு கேட்கிறான்.

ஆச்சரியமாக, இப்போது அவனுக்கு அந்த அலறல் சத்தமோ, குழந்தையின் அழுகுரலோ கேட்பதில்லை.

காரணம், அவன் நீதியிடமிருந்தோ, தன் தவறிலிருந்தோ தப்பி ஓடவில்லை. தன் குற்றத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு, சட்டத்தின் முன் தலை குனிந்து நிற்கிறான்.

அன்று அவளது காதணி விழாவில் கேட்ட அந்தப் பிஞ்சு குழந்தையின் அழுகுரல், அவனை ஒரு குற்றவாளியாக மாற்றவில்லை; மாறாக அவனுக்குள் மடிந்து போயிருந்த மனிதனை உயிர்ப்பித்தது. பயமும் நரகமும் நிறைந்த அவனது இரவுகள், இப்போது பிராயச்சித்தம் தேடும் ஒரு புதிய விடியலாக மாறியிருந்தன. சில தண்டனைகள் இரும்புச் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பதில்லை; அவை மனிதனின் மனசாட்சிக்குள் இருக்கின்றன என்பதை அன்று உணர்ந்தான்.

– நவஶ்ரீ பரமகுரு , பேராசிரியர்: முனைவர் முனீஸ்வரன் குமார், சுலுத்தான் இதுரீசு பல்கலைக்கழகம், மலேஷியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *