வரப்பு பூக்கள்
கதையாசிரியர்: பிரேமா நரசிம்மன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 20, 2026
பார்வையிட்டோர்: 1,364
(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரத்த சிவப்பாய் ‘மே-ப்ளவர்’ தரையில் படுதாவை விரித் திருந்தது. அறைக்குள் பறந்து கொண்டிருந்த ஒரு குருவி தலையை அசைத்து, அசைத்து ‘உன் கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்’ என்கிற மாதிரி சுற்றி சுற்றி வந்தது.
‘ஷெல்லியில்’ ஆழ்ந்திருந்த புவனா நெட்டிமுறித்து நிமிர்ந்தாள்.
சமையலறையில் அக்கா அகிலா உச்ச ஸ்தாயியில் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“எங்க ஓர்ப்படிக்கு அவாத்திலே எத்தனை சாமான் வாங்கித் தந்திருக்கா தெரியுமா? அவ அண்ணா சிங்கப்பூரிலிருந்து வாங்கிண்டு வந்து கொட்டறான். எங்க நாத்தனார் நொடிக்கொரு தடவை சொல்லிக் காண்பிக்கறா.”
“உம்…” அம்மாவின் குரலில் சலிப்புத் தட்டிற்று. அகிலா பிறந்தகத்துக்கு வரும் போதெல்லாம் ஏதாவது ஒரு குறையை சுமந்து வருவது அவளுக்கு புதிதல்லவே?
“நா உன் கிட்டே சொல்ல மறந்துட்டேன். என் ஃப்ரெண்ட் தெத்துப் பல் ரமாவுக்கு நாளை கல்யாணம். பையன் திருச்சியிலே அக்கவுன்டென்டாம். கார், பங்களா எல்லாம் இருக்காம்.”
குரல் ஒரு பொருமலுடன் வெளிப்பட்டது. அகிலா நல்ல அழகு. அந்த அழகிற்கு ஏற்ற மாதிரி பொன்னிறம் வேறு. அந்த வாளிப் பிற்கும், நிறத்திற்கும் ஏற்ற மாதிரி ராஜகுமாரன் ஒருவன் வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால், அவள் வாழ்க்கைப் பட்டது சாதாரண வேலையில் இருந்த ஒரு கிளார்க்கிற்கு தான். அம்மா பூரிக்கு மாவு பிசையும் ஒலி கேட்டது.
“எங்காத்துக்கும் ஒரு இருபது பூரி பண்ணிக் கொடும்மா. உருளைக்கிழங்கு கொஞ்சம் நிறைய வெச்சுடு. ஆமா, நீ ஒரு சேப்புக் கல் நெக்லெஸ் வெச்சிண்டிருந்தியே, என்ன பண்ணினே?
“புவனாவுக்கு வைச்சிருக்கேன். கல்யாணம் கார்த்தின்னு வந்தா அவளுக்கு ஒரு குந்துமணி தங்கம் கூட கிடையாது”. அம்மாவின் குரலில் ஆதங்கம்.
“ஆமா, அவ அதுக்கெல்லாம் கவலைப்படறாளா என்ன? புன்னகையே பொன்னகை என்று சொல்லிண்டிருக்கா. அண்ணா அவ காலேஜூக்கு செலவழிக்கிறதுக்கு உருப்படியா ஏதேனும் செலவு செய்யலாம்”.
அகிலாவின் கணக்குப்படி ‘உருப்படியான செலவுகள்’ அவளை சார்ந்தவை மட்டுமே. அவள் அண்ணன் வீட்டுக்கு வந்து விட்டு போகும் போதெல்லாம் இருக்கிற இரண்டொரு பொருளும் போயிருக்கும். அம்மாவுக்கு இப்போது சலிப்பு போய் வெறுப்பு வந்தது.
”என்ன நீ – அவனை எப்பவும் குறை சொல்லிண்டு இருக்கே? இந்த குடும்பத்துக்கு – உழைச்சு ஓடாக தேஞ்சு போயிருக்கான். சன்யாசி மாதிரி அவன் வளைய வர்றதைப் பார்த்தா என் மனசு அடிச்சிக்கிறது.”
“நா என்ன குறை சொல்லிட்டேன்னு இப்படி புலம்பறே? உனக்கு எப்பவும் அண்ணா, புவனா, ஹரி இவா மேலே தான் ஆசை. என்னைக் கண்டா எப்பவும் ஆகாது. அண்ணாவுக்கும் புவனா மேல்தான் ஆசை. எங்க புக்ககம் மட்டும் சரியா இருந்தா நான் ஏன் இங்கே வர்றேன்?”
ஒரு பாட்டம் கத்தித் தீர்த்து விட்டு அகிலா பக்கத்து குடித்தனக்கார பெண்ணுடன் அரட்டை அடிக்க சென்று விட்டாள். அப்பாடா! புவனாவுக்கு நிம்மதியாக இருந்தது. சினிமா உலக ஹீரோ ஹீரோயின்களில் ஆழ்ந்து விட்டால் அகிலாவிற்கு நேரம் போவதே தெரியாது.
“புவனா! புவனா!” அம்மாவின் குரல் கேட்டு புத்தகத்தை மூடி வைத்து விட்டு சமையலறைக்குள் நுழைந்தாள் புவனா.
“அண்ணா வர நேரமாச்சு. எல்லோருக்கும் டிபனுக்கு தட்டு போடு. உங்க அக்காவுக்கு டப்பாவில் பூரியை போட்டு வை”. பிசுக்கேறிய கைகளை துணியில் அழுந்தத் துடைத்தாள். அண்ணா மட்டுமா ஓடாகி தேய்ந்து போயிருந்தான்? இதோ இந்த அம்மாவுந்தான் – துடைத்து விட்ட மாதிரி வெறுமை நிறைந்த கையும், கழுத்தும், வாட்டம் நிறைந்த முகம். அப்பா இருந்த வரை களை சிந்தும் முகத்துடன் கலகலப்பாய் வளைய வந்தவள் இப்போது ஒடுங்கிப் போயிருந்தாள்.
தட்டுக்களை வரிசையாக வைத்து தண்ணீரை, டம்ளர்களில் நிரப்பி வைத்தாள் புவனா. வாசலில் செருப்பு ஒலி கேட்டு நிமிர்ந்தவள் நெடிய அந்த உருவத்தைக் கண்டதும் “பின் கட்டுலே தண்ணி வெச்சிருக்கேன். கால் அலம்பிக்கலாம்”, என்றாள்.
கால் கழுவிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்த மாதவன், சுவாமி மாடத்திலிருந்து சம்புடத்திலிருந்து விபூதியை நெற்றியில் அழுத்தித் தேய்த்து கொண்டார். மாது அப்பாவைப் போல் நல்ல உயரம்; மாநிறமாயிருந்தாலும் அவர் கண்களின் தீட்சண்யத்தைக் கண்டாலே பார்ப்பவருக்கு ஒரு மரியாதை ஏற்படும். பேச்சில் எப்போதும் ஒரு அழுத்தம், ஆனால் நிதானமும், பொறுமையும் தவறாத பேச்சு. ஒரு ஆணுக்குக் கூட அப்படி ஒரு பொறுமை இருக்குமா என்பது சந்தேகந்தான். டிபன் சாப்பிட உட்கார்ந்த மாது “ஹரியை எங்கே காணோம்? அகிலா வந்திருப்பான்னு நினைச்சேனே?” என்றார்.
“ஹரி சினிமாவுக்குப் போயிருக்கான். அகிலா ஷீலாவோட வம்படிக்க போயாச்சு.” நொடித்தாள் அம்மா.
“என்ன புவன், ஷெல்லி பத்தி, ப்ராஜெக்ட் வொர்க் எப்படி நடந்திண்டிருக்கு?”
“நிறைய மேடீரியல் கிடைச்சிருக்கு, அண்ணா. இன்னொரு தடவை கன்னிமாரா லைப்ரரிக்குப் போகணும்.”
மாதுவுக்கு எப்போதும் புவனா மேல் தனிப்பட்டதொரு அன்பு. காரணம், புவனா ரொம்ப ரொம்ப வித்தியாசமானவள். வயதுக்கு மீறிய முதிர்ச்சி, எதையும் யதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் தன்மை. மில்ஸ் அண்டு பூன்ஸை கண்டாலே எவ்வளவு வெறுப்போ, அந்த அளவுக்கு சார்த்தரேயிலும், ஷெல்லியிலும் ஈடுபாடு. மாதுவுக்கு அவளைக் காணும் போதெல்லாம், வயிற்றில் ஒரு திகில் பரவுவதுண்டு. இந்த அறிவையும், தீட்சண்யத்தையும் பொக்கிஷமாக பாதுகாக்க ஒருவன் கிடைப்பானா?
மாதுவுக்கு ஏனோ சந்தரின் ஞாபகம் வந்தது. சந்தர் பெரியவர்கள் கணிப்புப்படி நல்லவன்; ஒரு கெட்ட பழக்கம் கிடையாது: ‘மிடில் க்ளாஸ்’ ஸ்டாண்டர்ட் படி நல்ல உத்தியோகம்; நல்ல சம்பளம் வேறு. ஆனால், இவளுக்கு ஏற்றவனா? சந்தேகந்தான். தலையைக் குனிந்து கொண்டு சாப்பிட முனைந்தார்.
“அம்மா! அவர் வந்தாச்சு. நாங்க கிளம்பணும்”, என்று பட படத்துக் கொண்டு உள்ளே வந்தாள் அகிலா. இப்போது அந்த கோபமும் தாபமும் எங்கோ பறந்து. விட்டது.
“குட் நியூஸோட வந்திருக்கார். சந்தர் ஆத்திலே சரின்னு சொல்லிட்டாளாம். சிம்பிளா – திருநீர் மலையிலே கல்யாணத்தை வெச்சிண்டா போறுமாம். பதினைந்து பவுனில் நகை பண்ண சொல்லியிருக்கா. புவன் ரொம்ப லக்கி கேர்ள்…”
அம்மாவின் முகத்தில் ஜன்ம சாபல்யம் அடைந்து விட்ட மாதிரி ஒரு பூரிப்பு. சலனமற்று சமைந்து உட்கார்ந்திருந்தாள் புவனா. மாது அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அகிலா சளசளவென்று அளந்து கொண்டிருந்தாள்.
“சந்தர் கம்பெனியில் நிறைய போனஸ் கொடுப்பாளாம். எல்.டி.ஏ. வேறு உண்டாம்”. சாப்பிட்டு விட்டு தட்டைக் கழுவி வைத்து விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள் புவனா. மாதுவின் பார்வை தன்னைத் தொடர்வதை உணர முடிந்தது.
மனசின் ஒரு மூலையில் நிதநித வென்று ஒரு ஏக்கம். அவளால் ஏன் அகிலாவை போல் இருக்க முடியவில்லை? வாழ்க்கை வெறும் அலவன்ஸிலும் போனஸிலும் மட்டும் தானா? சாதாரண மனிதனை விட ஒரு படி மேல் இருக்கிற ஒருவனை வரிக்க வேண்டுமென்ற ஆசை தவறா? அகிலா அவள் எதிரில் வந்து நின்றாள்.
“நான் போயிட்டு வரேன்டி புவன். நான் அம்மா கிட்டே சொல்லியாச்சு உன் கல்யாணத்துக்கு எனக்கு கெட்டிக்கரை போட்ட காஞ்சிவரம் புடவை தான் வேணும்.”
புவனாவுக்கு சிரிப்பு வந்தது ‘என்னை ரியாலிடிக்கு கொண்டு வருகிறவளே இவள்தான்’, என்று நினைத்துக் கொண்டாள்…
அம்மாவுக்கு ‘ஹெல்ப்’ செய்து விட்டு ஹரிக்கு பாடம் சொல்லிக் கொடுக்க முனைந்தாள். ‘ஷெல்லி யின்’ கவிதையை படிக்க உட்கார்ந்தவளுக்கு மனம் அதில் படிய மறுத்தது.
தேய்பிறை காலமானதால், மங்கலாக நிலாத்துண்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தது. அண்ணாவின் காலடியோசை கேட்டு திரும்பினாள் புவனா. அவள் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார். சிறிது நேரம் மெளனம்.
மனசும், உதடும் துடிக்க, ‘எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம், அண்ணா. நான் இப்படியே உங்களோட இருந்துடறேனே’, என்றாள்.
மாதுவின் குரல் அந்த இரவின் நிசப்தத்தில் கணீர் என்று ஒலித்தது.
“அது எப்படிம்மா சாத்தியம்? நானும் அம்மாவும் இருக்கிற வரை சரி. எங்கள் காலத்துக்கு அப்புறம் உன் நிலையை யோசிச்சு பார். உன் மனசையும், தகுதியையும் புரிஞ்சுண்டு உன்னை அருமையா வைச்சிக்கிறவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று எனக்கும் ஆசை தான். அது நம்ப அந்தஸ்துக்கு மீறின ஆசை இல்லையா? நம்ப மிடில் க்ளாஸ் ஸ்டான்டர்ட்படி இப்படித் தான் இருக்கணும் என்ற நியதியை நம்மால் மாற்றி அமைக்க முடியுமா?
எப்போதோ ஒரு முறை கிராமத்துக்கு போன போது வரப்பின் மீது நடந்து போனது இப்போது அவருக்கு ஞாபகம் வந்தது. அந்த வரப்பின் இரு மருங்கிலும் மஞ்சளும், நீலமுமாய் சின்ன சின்ன பூக்கள் எல்லோராலும் நசுக்கி உரு தெரியாமல் சிதைந்த அந்த பூக்கள் மாதிரிதான் இவளின் கனவுகளும்…
குரல் ஒரு அழுத்தத்துடன் வெளி வந்தது.
“எல்லோருக்கும் ஐடியல்ஸூம், கனவுகளும் இருப்பது நியாயம்தான். அதை விட கடமைன்னு ஒண்ணு இருக்கே? அந்த கனவுகளை ஒதுக்கிட்டு கடமையை நிறைவேத்தணும். பிலீவ் மி, இட் இஸ் நாட் டூ டிபிகல்ட்”.
அவள் தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார். அந்த உருக்கத்தில் கரைந்து போனாள் புவனா.
– ஆகஸ்ட் 1993, ராஜம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
பூசைக்குள் வரும் பூக்கள்
காரை ஆடலரசன்
July 20, 2026
ஏடிஎம் மகள்
தரணி யோகேஸ்வரன்
July 20, 2026
பிரிவிலும் ஓர் உறவு
ரா.நீலமேகம்
July 20, 2026